நூல் அறிமுகம் : கே. நல்லதம்பியின் ’அத்தர்’ (புதிய சாத்தியங்களின் திசையில் கட்டுரை) – பாவண்ணன்
புதிய சாத்தியங்களின் திசையில்
பாவண்ணன்
கலைப்படைப்புகள் என்பவை, வாழ்வில் ஒரு சின்னஞ்சிறிய தருணத்தை காலமெல்லாம் ஆழ்மனத்தில் எண்ணற்ற திசைகளில் விரித்துவிரித்து, அந்த உணர்வில் என்றென்றும் திளைக்கவைக்கின்றன. மெல்ல மெல்ல அவை படிமங்களாக உருமாறி ஆழ்மனத்தில் புதைந்துவிடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பல சங்கப்பாடல்கள் அத்தகு தருணங்களால் நிறைந்தவை. இன்று அந்த இடத்தை கவிதைகளும் சிறுகதைகளும் நாவல்களும் உருவாகி நிரப்பிக்கொண்டிருக்கின்றன. கவிதையில் அத்தருணம் ஒற்றை வைரக்கல்லாக அமைந்திருக்கிறது. சிறுகதையில் அத்தருணம் ஓர் அணிகலனில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாக ஒளிவீசுகிறது. நாவலில் அதே தருணம் ஒரு பெரிய நகைப்பெட்டிக்குள் மின்னும் வைரநகையாக சுடர்விடுகிறது.
ஒரு தருணத்தின் பல்வேறு சாத்தியங்களை சிறுகதைகள் தொடர்ந்து முன்வைத்தபடி இருக்கின்றன. கருணையின் ஒரு முகத்தை கு.அழகிரிசாமியின் ’ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதை முன்வைக்கும்போது தி.ஜானகிராமனின் ’சிலிர்ப்பு’ மற்றொரு முகத்தை முன்வைக்கிறது. அதே கருணையை சுந்தர ராமசாமியின் ’கோவில் காலையும் உழவுமாடும்’ ஒரு விதமாகவும் ஜெயகாந்தனின் ’இது கருணையினால் அல்ல’ வேறொரு விதமாகவும் முன்வைக்கிறது. ஒரு சிறுகதையில் ஒரு தருணத்தைச் சுற்றி நம்பத்தகுந்த முறையில் விதவிதமான பின்னணியை உருவாக்கும்போது, அது உடனடியாக வாசகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அவ்விதத்தில் சமீபத்தில் வாசக கவனம் பெற்ற தொகுதி நல்லதம்பியின் அத்தர்.
இத்தொகுதியில் ஆறு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் ஒரு புதிய கோணத்தை உருவாக்குகிறார் நல்லதம்பி. கதைகூறும் முறைகளில் ஒரு புதிய சாத்தியத்தை சோதித்துப் பார்க்கிறார். அதன் விளைவு என்ன என்பதைப்பற்றி அவர் விவரிக்கவில்லை. மரபான வாழ்க்கைமுறை நகர்ந்து நகர்ந்து இன்றைய புதிய வாழ்க்கைமுறைக்கு வந்துவிட்டது. நகரும்தோறும் அதற்கே உரிய சிக்கல்களோடும் விரிவோடும் சவால்களோடும் சமரசங்களோடும் விரிவாகிக்கொண்டே போகிறது. வாழ்நாள் முழுதும் ஒரே தெருவுக்குள், ஒரே வீட்டுக்குள் என வாழ்ந்த கடந்த காலத் தலைமுறையினர் மறைந்துவிட்டனர். இன்றைய தலைமுறையினருக்கு உலகத்தின் பல்வேறு கண்டங்கள் பல்வேறு தெருக்களாக மாறி மானுட நடமாட்டத்துக்கு இசைவான களங்களாக மாறி நிற்கின்றன.
இந்தச் சவால்களும் சமரசங்களும் மரபான கண்களுக்கு சிற்சில சமயங்களில் ஒவ்வாமையை அளிக்கலாம். வெறும் கற்பனையாகத் தோன்றலாம். உதறிவிட்டுச் செல்லவும் முற்படலாம். ஆனால் நாம் கண்களை மூடிக்கொள்வதாலேயே நம் முன் அவை இல்லை என மாறிவிடுவதில்லை. அவற்றை அறிந்துகொள்வது என்பது வாழ்வின் போக்கைப் புரிந்துகொள்ள உதவும். நல்லதம்பிக்கு அத்தகு ஆர்வம் இருப்பதை அவருடைய சிறுகதைகள் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
தமன் நெஹரா என்பது மலேசியப்பகுதியில் அமைந்திருக்கும் பழைமையான மழைக்காடு. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம். வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இளைப்பாறிச் செல்ல பொருத்தமான இடம். அந்தக் காட்டின் பெயரையே தலைப்பாகக் கொண்டு நல்லதம்பி ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். இருவேறு திசையிலிருந்து இருவேறு பின்னணியைக் கொண்டு நடுவயதையொட்டிய ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அங்கே சந்தித்துக்கொள்கிறார்கள். நெருக்கமாகப் பேசிக்கொள்கிறார்கள். ஒன்றாகவே மலையேற்றம் செல்கிறார்கள். காட்டில் சுற்றுகிறார்கள். ஒரே அறையில் தங்குகிறார்கள். எவ்விதக் குற்ற உணர்ச்சிக்கும் இடமில்லாத வகையில் உறவில் ஈடுபட்டுத் திளைத்து மகிழ்ச்சிகொள்கிறார்கள். ஒருவரைப்பற்றி இன்னொருவர் விசாரித்துத் தெரிந்துகொள்வது கூடாது என்னும் புரிதலோடு தழுவி விடைபெறுகிறார்கள்.
ஒரே ஒரு கணம். சில அடி தொலைவு நடந்து சென்ற பிறகுதான் இருவருக்குமே அந்தப் பிரிவின் எடை என்ன என்பது புரிகிறது. விடுதலறியா விருப்பொன்று தம் நெஞ்சில் உறங்குவதை அவர்கள் முதல்முதலாக உணர்ந்து தவிக்கிறார்கள். மறுகணமே ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்துக்கொள்கிறார்கள். ஓடிவந்து மீண்டும் தழுவிக்கொள்கிறார்கள். விடுவது யார், விடுவித்துக்கொள்வது யார் என்பதை முடிவு செய்யமுடியாமல் தழுவிய நிலையிலேயே உறைந்து நிற்கிறார்கள். சிறுகதையை அக்கணத்தில் முடித்துவிடுகிறார் நல்லதம்பி.
ஊசிமுனை அளவு மட்டுமே சாத்தியம் கொண்ட ஒரு கணத்தைத் திரட்டித்திரட்டி ஒரு காட்சியை உருவாக்கியிருக்கிறார் அவர். நவீன உலகைச் சேர்ந்த இருவரை பழைமை வாய்ந்த காடொன்று இணையென நிறுத்திவிடுகிறது. அத்தருணத்தின் சாத்தியம் சிலருக்கும் விசித்திரமாகத் தோன்றலாம். சுவாரசியத்துக்காக இட்டுக்கட்டிய புனைவாகவும் தோன்றலாம். ஆனால் காடு என்பதை குறிஞ்சித்திணை என்று வரையறுத்து, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என அந்நிலத்தின் ஒழுக்கத்தையும் வரையறுத்து வைத்திருக்கும் நம் இலக்கணம் தமன் நெஹராவின் சந்திப்பை இயல்பான ஒன்றே என்னும் புரிதலை நோக்கிச் செலுத்துகிறது.
தொகுதியின் மற்றொரு சிறந்த சிறுகதை பிங்க் அண்ட் ப்ளூ. நிறைவேறாத ஒரு காதலின் கதை. அதை மரபான வழியில் சொல்லாமல் புதுப்புது உத்திகள் வழியாக அந்தக் காதலை முன்வைக்கிறார் நல்லதம்பி. குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையைப்போல, ஆதியும் அனுராதாவும் சந்தித்ததையும் பழகியதையும் காதல் கொண்டதையும் கனவுகள் கண்டதையும் அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்ட காவிரிக்கரை சொல்கிறது. ஸ்ரீரங்கப்பட்டணமும் ஒலிம்பியா டாக்கீஸும் கரீஷ்மா ரெஸ்டாரண்டும் சர்வசுகந்திமரமும் லலிதா பேலஸ் ஓட்டலும் அடுத்தடுத்து சொல்கின்றன. அவர்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள ஏதோ ஒரு வகையில் காரணமான சரோஜாவும் சொல்கிறாள். இப்படி துண்டுதுண்டான வாக்குமூலங்கள் வழியாக விவரிக்கப்படும் காதல்கதை, இந்த உலகமே அறிந்த வழக்கமான கதைதான். அந்தக் காதலனும் காதலியும் பல ஆண்டுகள் கழித்து சந்தித்து உரையாடுவதிலும் அப்போது காதலி முன்வைக்கும் கோரிக்கையிலும்தான் ஒரு புதுமை அடங்கியிருக்கிறது. அப்படி ஒரு தருணத்தின் சாத்தியத்தை நல்லதம்பி கட்டமைக்கிறார்.
பெற்றோரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஆதியின் காதலைத் துறந்து திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட அனுராதாவுக்கு துரதிருஷ்டவசமாக குழந்தைப்பேறு இல்லை. சிறிது காலம் மனமுடைந்து சோர்வில் மூழ்கி, பிறகு வேறொரு பெண்ணுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய ஆதிக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருபது ஆண்டுகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலே ஓடிவிடுகின்றன. அப்போதுதான் இருவருக்கும் பொதுவான தோழி வழியாக செய்தியை அனுப்பி ஆதியைச் சந்திக்கிறாள் அனுராதா. அனு என்றும் அனுமா என்றும் கிளர்ச்சியோடு ஒரு காலத்தில் ஆதியால் கொஞ்சப்பட்ட அனுராதா. இயற்கையான வழியில் குழந்தைப்பேற்றுக்குச் சாத்தியமில்லை என்கிற நிலையில் மாற்றுவழிகளை நாடிச் செல்ல அவளுடைய கணவன் இசைவளிக்கிறான். ஆனால் மருத்துவரீதியான மாற்று வழிகளில் குழந்தைப்பேற்றை அடைய விருப்பமில்லாத அனுராதா, காதலிக்கும் காலத்திலேயே குழந்தைகளைப்பற்றிய கனவுகளை முதன்முதலாக விதைத்த ஆதி வழியாகவே அந்தப் பேற்றை அடைய விரும்புகிறாள். அவளுடைய சந்திப்பின் நோக்கமே அதுதான். அந்தக் கோரிக்கைதான் கதையின் புதிய சாத்தியத்தை உருவாக்குகிறது.
கதையின் தலைப்பான பிங்க் என்பதும் ப்ளூ என்பது நிறங்களின் பெயர்கள் மட்டுமல்ல. காதலர்கள் தம் காதல் வாழ்வில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்து சொல்லிச்சொல்லி மகிழ்ந்த பெயர்கள். அவர்கள் இணையாததால், அந்தப் பெயர்களைச் சூட்டுவதற்கான தேவையும் உருவாகவில்லை. இறுதிக்கணத்தில் அனுராதா ஆதியிடம் முன்வைக்கும் கோரிக்கை அந்தத் தேவை முற்றிலுமாகக் குலைந்துவிடவில்லை என்பதை உணர்த்துகிறது.
இரண்டு கதைகளும் பாத்திரங்கள் ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்ளும் கணத்தில் முடிவடைகின்றன. எவ்விதமான முடிவை நோக்கி அவர்கள் செல்லப்போகிறார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. அந்த விடைகள் ஒரு வாசகனுக்கு எவ்விதத்திலும் முக்கியமில்லை. அதே சமயத்தில் திருமண உறவு சார்ந்த பார்வையும் சிக்கலும் இன்றைய தலைமுறையிடம் மாறியிருப்பதை உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியம். அந்த சாத்தியத்தையே இக்கதைகள் நமக்கு வழங்குகின்றன.
மரபான கதைச்சட்டகத்துக்குள் அமைந்திருக்கும் ’அத்தர்’, ’ஆல்பர்ட் காமுவின் அவுட்சைடர்’ கதைகளும் வலிமையான சித்தரிப்புகளைக் கொண்டுள்ளன. ஆழ்மனத்தில் நிறைந்திருக்கும் காதலின் படிமமாக வாசனைத்திரவியமான அத்தர் இடம்பெறுகிறது. ஐதராபாத்தில் அத்தர் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியே வரும் இளைஞனொருவன் பாதையின் நடுவில் ஒரு கடித உறையைக் கண்டெடுப்பதில் அந்தக் கதை தொடங்குகிறது. முகவரி எழுதப்படாத உறை என்பதால் யாருக்கு யார் எழுதிய கடிதம் என்பதை அவனால் கண்டறிய முடியவில்லை. கடிதத்துக்குள் இருக்கக்கூடும் என நினைத்து, வேறு வழியில்லாமல் உறையைப் பிரித்து கடிதத்தைப் படிக்கிறான். டிட்டி மை டியர் என்று தொடங்கும் கடிதத்தின் அழைப்பு வரியில் ஒரு கணம் தயங்கி நிற்கிறான். மேற்கொண்டு கடிதத்தைப் படிக்காமல் கடிதத்தின் இறுதிப் பக்கத்துக்கு வருகிறான். அங்கும் பெயரின் முதலெழுத்து மட்டும் எழுதப்பட்டிருக்கிறதே தவிர, அவன் எதிர்பார்த்ததுபோல பெயரோ முகவரியோ இல்லை.
கண்டெடுக்கப்பட்ட கடிதம் குறித்து ஒரு விளம்பரமும் செய்கிறான். ஆனால் ஒருவரும் கடிதத்துக்காக வரவில்லை. இரு ஆண்டுகள் கழித்து அவனுக்கு பெங்களூருக்கு மாற்றல் கிடைக்கிறது. நண்பர்கள் சந்திப்பின் விளைவாக அவன் ஓர் எழுத்தாளனாகவும் வளர்ந்துவிடுகிறான். பத்திரிகைகளில் அவனுடைய படைப்புகள் வெளிவரத் தொடங்குகின்றன. மேலும் சில ஆண்டுகள் கழித்து தற்செயலாக அலமாரியைத் திறந்தபோது அந்தக் கடித உறை அவனுடைய கவனத்தை ஈர்க்கிறது. ஆர்வத்தின் காரணமாக, அதை உடனே படிக்கத் தொடங்குகிறான். ஒருவரிடம் ஒருவர் மனத்தைப் பறிகொடுத்த இருவரின் காதல் கதை அது. அவள் வயிற்றில் வளரும் தன் கருவை கலைத்துவிடுமாறு அவன் அக்கடிதத்தில் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறான்.
கடிதத்தில் எழுதப்பட்ட நிகழ்ச்சிக்குறிப்புகளோடு கற்பனையான சில நிகழ்ச்சிகளை சேர்த்து அவன் ஒரு சிறுகதையை எழுதி முடித்து பத்திரிகைக்கு அனுப்பி வைக்கிறான். அக்கதையில் அவன் மணமானவன். அவள் மணமாகாதவள். எனினும் அந்த வேறுபாடு இருவருடைய காதலுக்கு எவ்விதத்திலும் தடையாக இல்லை. அவன் அவளுக்கு தன் காதலின் அடையாளமாக மல்லிகை அத்தரை வாங்கிக் கொடுக்கிறான். அந்த மணத்தில் அவள் ஒவ்வொரு நாளும் திளைக்கிறாள். ஒரு யுகாதி தினத்தில் அவளைத் தன் வீட்டுக்கு விருந்துக்காக அழைக்கிறான் அவன். அன்று இருவருமே ஒருவருக்கொருவர் விருந்தாகிப் போகிறார்கள். அதன் விளைவாக அவள் வயிற்றில் ஒரு கரு வளர்கிறது. அந்தச் செய்தியால் அஞ்சிய அவன் கருவைக் கலைத்துவிடும்படி அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறான்.
ஒரு கடிதம் போல எழுதப்பட்ட அக்கதைக்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்போது பத்திரிகை அலுவலகத்தில் அவனுடைய முகவரியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவனைச் சந்திக்க நேரில் வருகிறாள் ஒரு பெண். அந்த உரையாடல் நிகழும்போதே, பன்னிரண்டு ஆண்டுக்கு முன்னால் அவன் கண்டெடுத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் டிட்டி மை டியர் என்னும் அழைப்புக்குரியவள் அவளே என்னும் உண்மை அவனுக்குப் புரிந்துவிடுகிறது. அக்கடிதத்தைப் பெற்றுச் செல்லவே அவள் அங்கே வந்திருக்கிறாள் என்பதும் புரிந்துவிடுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளாக அத்தர் மணத்துடன் அலமாரித்தட்டில் ஒதுங்கியிருந்த கடித உறையை எடுத்துவந்து அவளிடம் கொடுத்துவிடுகிறான். ‘மகன் காத்திருப்பான்’ என்பதைக் குறிப்பாகச் சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து புறப்படுகிறாள். கடிதம் அவளுடைய கைக்குக் கிடைக்கவில்லை என்றபோதும் காதலனின் கோரிக்கைக்கு அவள் இணங்கவில்லை என்பதையும் தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கவில்லை என்பதையும் அவன் புரிந்துகொள்கிறான்.
ஒவ்வொரு சிறுகதையையும் வித்தியாசமான முறையில் எழுதிப் பார்த்திருக்கிறார் நல்லதம்பி. கடுகு வாங்கி வந்தவள், யாத்வஷேம், ஓடை, காச்சர் கோச்சர் உள்ளிட்ட நூல்கள் வழியாக இதுவரை நம் சூழலில் மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டு வந்த நல்லதம்பி, இத்தொகுதியின் வழியாக நல்ல சிறுகதை எழுத்தாளராக மலர்ந்திருக்கிறார். தமிழ் வாசக உலகம் அவருடைய கதைகளை உரிய கவனத்தைச் செலுத்திப் படிக்கவேண்டும்.
நூல் : அத்தர் (சிறுகதைகள்)
ஆசிரியர் : கே.நல்லதம்பி
விலை : ரூ.150
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு
பொள்ளாச்சி
642002.