ஹிரோஷிமா, நாகசாகி தினம் (ஆற்ற இயலாத அவலத்தின் கண்ணீர்) – பேராசிரியர் ச.மாடசாமி
கல்வியாளர், பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் ‘வித்தியாசம்தான் அழகு’ புத்தகத்தில் அறிமுகம் செய்துள்ள HIROSHIMA NO PIKA (கொ.ம.கோ.இளங்கோ மொழியாக்கத்தில் ‘மாயி-சான்’ என்ற நூல் தமிழில் வெளியாகியுள்ளது) ஜப்பான் நூல் பற்றிய கட்டுரை.
கதைகள் மட்டும் போதுமா?
கதை கேட்டுப் பழகிய குழந்தை, ஒரு திடீர்த் திருப்பத்துக்காகக் காத்திருக்கிறது. கதை சொல்பவருக்கும் இது புரிந்திருக்கிறது. அதனால்தான், “அப்ப டுமீல்னு ஒரு சத்தம்” என்கிறார் கதை சொல்பவர். “பார்த்தா, கண்ணக் கூசுற மாதிரி வெளிச்சம்” என்கிறார். “ராஜா உக்காந்திருந்தார்ல… அந்த நாற்காலி திடீர்னு ஆட ஆரம்பிச்சுச்சு” என்கிறார். “எல்லோரும் டொம் டொம்னு விழுந்திட்டாங்க” என்கிறார்.
கதை சூடு பிடிக்கிறது. கதையில் ஒன்றிப் போய், குழந்தை உட்கார்ந்திருக்கிறது. கவனம் சிதறாமல் குழந்தையைக் கதையோடு கட்டிப் போட, ஒரு திடீர்த் திருப்பம் உதவுகிறது.
கதைகளில் மட்டும்தானா திருப்பங்கள்? வாழ்க்கையில், வரலாற்றில் திருப்பங்கள் குறைவாகவா இருக்கின்றன? இதோ வரலாற்றிலிருந்து ஒரு சம்பவம்….
‘காலை 8.15 மணி. வீட்டில் எல்லோரும் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென்று வெளிச்சம். ஆரஞ்சு நிற வெளிச்சம்! ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டி மின்னியது போன்ற வெளிச்சம். வெளிச்சத்தைத் தொடர்ந்து வீடுகள் கிடுகிடுவென்று ஆடிச் சரிந்தன. நொறுங்கிய வீடுகளின் இடிபாடுகளுக்குள் மனிதர்கள் சிக்கிக் கிடந்தார்கள் எங்கு பார்த்தாலும் தீ… புகை!
இது கற்பனைக் கதையா? இல்லை . 1945 ஆகஸ்ட் 6 காலை 8.15 மணிக ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நிகழ்ந்த கொடுமை. திருப்பம் துயரமும் நிறைந்த இந்தச் சம்பவத்தைச் சிறார்களுக்குச் சொல்லலாமா?
குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும் என்பது சரி; கதை மட்டுமே சொல்லவேண்டும் என்பது எப்படிச் சரி? இப்படி யோசித்தவர் ஜப்பான் எழுத்தாளரும் ஓவியருமான மாருகி தோசி. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அமெரிக்கா வீசிய அணு குண்டுகள் பல்லாயிரக்கணக்கானோர் உயிரைப் பறித்தன ; லட்சக்கணக்கானோரை நடைபிணங்களாக்கின.
இந்தக் கொடூரம் நிகழ்ந்து எட்டாண்டுகளுக்குப் பின் 1953-ல் ஓர் ஓவியக் கண்காட்சி ஜப்பானின் சிறிய நகரமொன்றில் நடந்தது. அணுகுண்டு விளைவித்த துயரங்களே கண்காட்சியின் கருப்பொருள். தோசியும் அவர் கணவரும் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கண்காட்சியில் தோசி, ஒரு பெண்ணைச் சந்தித்தார். அழுகையும் குமுறலுமாய் அந்தப் பெண் தன் வரலாற்றைச் சொன்னாள். நெஞ்சை உருக்கும் வரலாறு அது. அந்த வரலாற்றை வளரும் சிறார்களுக்குச் சொல்ல நினைத்தார் தோசி. பெரியவர்கள்தான் எல்லா அழிவுகளையும் அவல வரலாறுகளையும் சலனமின்றிக் கடந்து விடுகிறார்களே போரின் கொடுமையைக் குழந்தைகள் புரிந்து கொள்வதுதான் இந்தப் பூவுலகின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு கருதினார் தோசி.
Hiroshima No Pika என்ற புத்தகத்தைச் சிறுவன் எழுதினார். Pika என்பது தீப்பிழம்பு வெளிச்சத்தைக் குறிக்கும் சொல்.
தோசி சொன்னார்: “எனக்கு 70 வயதாகிறது. எனக்குக் குழந்தைகளும் களும் கிடையாது; பேரக்குழந்தைகளும் கிடையாது. உலகெங்கும் உள்ள குழந்தைகளை என் பேரக் குழந்தைகளாக எண்ணி அவர்களுக்காக புத்தகத்தை எழுதி இருக்கிறேன். சிறிய பக்ககம் அனால் எழுதி முடிக்க நம் நாட்கள் ஆகிவிட்டன.”
குழந்தைகளுக்கான புத்தகங்களில் மிக அரிய புத்தகம் ‘Hiroshima No Pika’. மாயி-சான் என்ற பெயரில், கொ.மா.கோ.இளங்கோவின் அற்புதமான மொழிபெயர்ப்பில் இப்புத்தகத்தைத் தமிழில் தந்துள்ளது பாரதி புத்தகாலயம் புத்தகத்தின் சுருக்கம் இது:
ஜப்பானின் ஹிரோஷிமா, ஏழு நதிகள் பாயும் நகரம். இரண்டாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து, ஏதோ ஒரு அசம்பாவிதத்தை ஹிரோஷிமா மக்கள் எதிர்பார்த்தபடியே இருந்தார்கள். பழைய கட்டடங்களைத் தகர்த்து தெருக்களை அகலமாக்கினார்கள். வீடுகளில் போதுமான தண்ணீர் நிரப்பி வைத்தார்கள். எப்போதும் சிறு பையில் மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றார்கள். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் தாண்டி அவர்கள் தலையில் விழுந்தது அந்த அணுகுண்டு. அந்த அணுகுண்டின் பெயர் ‘குட்டிப் பையன்’ என்பது கொடூர முரண்!
துடிப்பான ஏழு வயதுச் சிறுமி ‘மீ. அவள் முழுப் பெயர் மீசான். ‘மீ’ என்பது ஜப்பானில் அழகுக்கு அடைமொழி. 1945 ஆகஸ்ட் 6 அன்று காலை 8.15 மணிக்கு அம்மா அப்பாவோடு அமர்ந்து இனிப்பு உருளைக்கிழங்கை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மீ. அப்போதுதான் முன்னர் விவரித்த அந்தச் சம்பவம் நடந்தது. ஆரஞ்சு நிற தீப்பிழம்பு வெளிச்சம்! தொடர்ந்து வீடுகள் குலுங்கி நொறுங்கின. என்ன நடக்கிறது என்பதறியாமல் மயங்கி விழுந்தாள் மீ. அவள் மயக்கம் தெளிந்து மெல்லக் கண் விழித்தபோது, ஒரே இருட்டு. இருளைத் துளைத்து அம்மாவின் சத்தம், “மீ… மீ… மீ..!”
தன்மேல் விழுந்து கிடந்த பலகைகளைத் தள்ளிவிட்டு எழுவது சிறுமிக்கு சிரமமாக இருந்தது. அம்மாவின் குரல் மீண்டும். “மீ! எழுந்திரு. இங்கிருந்து வேகமாகப் போகவேண்டும். அப்பா நெருப்புக்குள் சிக்கிக் கிடக்கிறார்.
சொல்லிவிட்டு அம்மா சும்மா நிற்கவில்லை. நெருப்புக்குள் பாய்ந்தார். கணவரை மீட்டெடுத்து வந்தார். தன் மேலாடையான கிமோனாவைக் கிழித்து அவர் காயங்களை மறைத்துக் கட்டினார். அப்புறம் அவர் செய்ததுதான் அற்புதம்!
காயம்பட்டு நினைவிழந்து கிடந்த கணவரைத் தம் முதுகில் தூக்கிக்கொண்டார். ஒரு கையில் மகள் மீயைப் பிடித்துக் கொண்டார். “வா! நான் ஆற்றை அடையவேண்டும்.”
மூவரும் ஆற்றங்கரையில் கரையில் போய் விழுந்தார்கள். தண்ணீரில் நனைந்தார்கள். ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் கூட்டம். உடை எரிந்து, கண்ணிமைகளும் கோரமான தோற்றத்தில் குழந்தைகள்; பலர் மூச்சற்றுக் கீழே பார்கள். அவர்கள் மீது மற்றவர்கள் தடுமாறி விழுந்தார்கள். எங்கு பார்த்தாலும் மனிதக் குவியல்! பிணக்குவியல்
அசைவற்றுக் கிடந்த மீயின் காலுக்குக் கீழே ஏதோ ஓர் அசைவு. மீ கவனித்தாள். இறகுகள் எரிந்து பறக்கமுடியாமல் தத்தி நடந்து கொண்டிருந்தது ஒரு சிறு பறவை. மீ ஆற்றைப் பார்த்தாள். ஆற்றில் ஒரு மனிதனின் பிணம்: தொடர்ந்து ஒரு பூனையின் பிணம்; தொடர்ந்து பிணங்கள்!
ஆகாயம் இருண்டு கிடந்தது. இடி இடித்தது. இது கோடைக் காலம்தான். அனால், இதுவரை அனுபவித்திராத கடுங்குளிர் நிலவியது. பெரும் மமை பெய்தது. இதுவரை பார்த்திராத கறுப்பு மழை!
கணவரை முதுகில் சுமந்தபடி, மகளைக் கையில் பிடித்தபடி, ஒவ்வோர் மாக ஏறி இறங்கினார் அந்தத் தாய். ஒரு ஆற்றங்கரையில் சோர்ந்து விழந்தார்கள். அசதியில் தூங்கினார்கள். ஆகஸ்ட் 6-ம் தேதி விழுந்தவர்கள், 9-ம் தேதி அன்றுதான் விழித்தார்கள். அவர்கள் விழித்துப் பார்த்த அந்த 9-ம் தேதியில்தான் நாகசாகியில் அணுகுண்டு விழுந்து ஏராளமானவர்கள் மடிந்தனர். ஆனால், எதையும் அறிந்துகொள்ள முடியாத சோர்விலும் களைப்பிலும் அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் விழித்தபோது அருகில் ஒரு பாட்டி இருந்தாள். அந்தப் பாட்டி மீயைப் பிரியத்தோடு பார்த்தாள். தன் கையிலிருந்த அரிசி உருண்டையை சிறுமி மீக்குக் கொடுத்தாள் பாட்டி. அடுத்த கணம் பாட்டி சரிந்து விழுந்து இறந்தாள்.
அந்த அரிசி உருண்டையை மீயால் உண்ண முடியவில்லை. விரல்கள் எரிந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருந்தன. குண்டு விழுந்த நேரத்தில், இனிப்பு உருளைக்கிழங்கை உண்பதற்காக அவள் தன் கையில் வைத்திருந்த குச்சிகளும் (Chopsticks) இன்னும் விரல்களுக்குள் சிக்கிக் கிடந்தன. மீ அழ அழ, அவள் விரல்களைப் பிரித்து, அக்குச்சிகளை அம்மா எடுத்தார்.
தீயணைப்பு வீரர்கள் வந்து காயம்பட்டவர்களை ஒரு பள்ளி வளாகத்தில் சாத்தனர். இடையில் ஒருநாள் மீயும் அம்மாவும் தங்கள் வீட்டைப் பார்க்க வந்தனர். அது அடையாளம் தெரியாமல் நொறுங்கிப் போயிருந்தது.
நாட்கள் நகர்ந்தன. மீயின் தந்தை உடலில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆறுவது போலிருக்கும். அடுத்த நாளே மீண்டும் புண்ணாகி, தாங்கமுடியாத வலி தரும். அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. அடிக்கடி ரத்த வாந்தி எடுத்தார்! உடம்பெல்லாம் கருஞ்சிவப்புப் புள்ளிகள். அவர் அதிக நாள் வாழவில்லை .
சிறுமி மீக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை. அவள் ஏழு வயதில் இருக்கும்போது இந்தத் துயரம் நிகழ்ந்தது. அதன்பிறகு பல ஆண்டுகள் மீ வாழ்ந்தாள். ஆனால்,
அவள் வளரவே இல்லை . ஏழு வயதுச் சிறுமியின் உயரத்திலேயே மிச்சமிருந்த ஆண்டுகளையும் அவள் வாழ்ந்து முடித்தாள். இது என்ன நோய்? அணுகுண்டு கொண்டு வந்த பல நோய்களுக்குப் பெயரில்லை. திடீர் திடீரென மீயின் மண்டையோட்டில் சிறு சிறு கண்ணாடிச் சில்லுகள் கிளம்பி வரும். கண்ணீரோடு அவற்றை எடுப்பார் அம்மா.
அணுகுண்டுக்குத் தப்பித்த ஜீவன்களும் ஒரு நாளும் நிம்மதியாக வாழவில்லை. உலகெங்கும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வகுப்பறையும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.
வளரும் சிறார்களுக்கு (7 வயது முதல் 12 வயது வரை) கதைகள் மட்டும் சொல்வது போதாது. இத்தகைய துயர வரலாறுகளையும் சொல்ல வேண்டும். (ஜாலியன்வாலா பாக், காந்தி கொலை என நமக்கும் சொல்லப் பல வரலாறுகள் உண்டு.) குழந்தைகள் இந்த வரலாறுகளை வறட்டுத்தனமான பாடப் புத்தக மொழியில் படித்து என்ன பயன்? ‘ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டின் பெயர் என்ன’ என்ற கேள்விக்கு விடையை மனப்பாடம் செய்வதோடு முடிந்து போகும் தொடர்பு அது!
பாடப் புத்தக மொழியில் அல்ல, சிறுவர் மொழியில் வரலாறுகள் வேண்டும். அதற்கு முன்னுதாரணம் Hiroshima No Pika.
மாயி-சான்
தோசி மாருகி (Toshi Maruki)
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ
வெளீயிடு: புக்ஸ் பார் சில்ரன், பாரதி புத்தகாலயம்.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/