Pavalar Karumalai Thamizhazhanin Poems பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்

பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதைகள்




என்று முடியும் இந்தக் கொடுமை
****************************************
கயர்லாஞ்சி மகாராட்டிர மாநிலத்தில்
கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்
வயலினிலே தினமுழைத்தே அந்த ஊரில்
வாழ்ந்திட்ட சுரேகாஓர் தலித்துப் பெண்ணாம்
உயர்தற்குக் கல்விநல்ல ஏணி என்றே
உணர்ந்ததனால் ஓரளவு கற்றி ருந்தாள்
தயக்கத்தைத் தகர்த்தெறிந்தே கணவ னோடு
தன்சாதிக் கீழ்மையினை எதிர்த்து நின்றாள் !

ஆதிக்கச் சாதிவெறி அரக்கர் தம்மின்
அடக்குமுறை கொடுமைக்குப் பதிலு ரைக்க
சாதிமாறி அம்பேத்கார் சென்ற தைப்போல்
சார்ந்திட்டாள் புத்தமத அரவ ணைப்பில்
வீதியிலே குடிசையாக இருந்த தன்னின்
வீட்டைக்கல் வீடாக்க முனைந்த போது
மோதியுயர் சாதியர்கள் தடைகள் செய்தே
மொத்தமாக வெளியேற்ற முனைந்து நின்றார் !

வீட்டிற்கு மின்சாரம் துண்டித் தார்கள்
வீட்டினிலே வளர்த்துவந்த ஆடு மாட்டை
கேட்காமல் பலர்சேர்ந்தே தடுத்த போதும்
கேள்விமுறை இல்லாமல் ஓட்டிச் சென்றார்
வீட்டோடு விவசாயம் செய்வ தற்கும்
விட்டிடாமல் கால்வாய்நீர் தடுத்து நின்றே
கூட்டாக வயலையுமே பொதுப்பா தைக்குக்
குறிவைத்தே வன்முறையால் பறித்துக் கொண்டார் !

எதிர்த்திட்ட சுரேகாவின் குடும்பந் தன்னை
எழுபதிற்கும் மேற்பட்ட கிராமத் தார்கள்
குதித்துவந்து குண்டுகட்டாய்த் தூக்கி வந்து
குரூரமாகத் தெருவினிலே நிற்க வைத்து
விதித்திட்டார் அவள்மகனைத் தங்கை யோடு
விலங்கைப்போல் உறவுகொள்ள துன்பு றுத்தி
மிதித்திட்டார் ! மறுத்ததனால் அவன்உயிர் நிலையை
மிருகம்போல் நசுக்கியுயிர்ப் பறித்துக் கொன்றார் !

இலங்கையிலே தமிழர்க்கு நடந்த போன்றே
இங்கேயும் சுரேகாவை பெற்றெ டுத்த
குலமகளைப் பகற்பொழுதில் பல்லோர் காணக்
குதறிட்டார் கூட்டாக உறவு கொண்டு
நலமாக சுயமானம் கொண்டு வாழ
நற்கனவு கண்டவளைக் குடும்பத் தோடு
நிலம்மீது பிணமாக வீழ்த்தி விட்டார்
நின்றெரியும் உயர்சாதி வெறித்தீ யாலே !

மதிகாண சந்திராயன் அனுப்பி யென்ன?
மங்கல்யான் செவ்வாய்க்கு விடுத்து மென்ன?
விதிமாற்றி வல்லரசாய் இந்தி யாவை
வியக்கின்ற படிஉயர்த்த முயன்று மென்ன?
மதிதன்னில் சாதியத்தை நீக்கி விட்டு
மனந்தன்னில் மனிதத்தைப் பதிய வைத்துப்
புதுமாற்றம் சாதியற்ற இந்தி யாவாய்ப்
புலராத வரையெந்த புகழும் வீணே !

( மகாராட்டிர மாநிலத்திலுள்ள கயர்லாஞ்சி ஊரினிலே நடந்த நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்ச்சி )

தூக்கிலிட்டால் சாமோ சாதி
************************************
பெரியாரின் அயராத உழைப்பி னாலே
பெரும்மாற்றம் தமிழ்நாட்டில் வந்த போதும்
விரியாத மனந்தன்னைக் கொண்டி ருப்போர்
விட்டிடாமல் பிடித்துள்ளார் சாதி தன்னை
நெரிக்கிறது கழுத்துதனைக் காதல் செய்தோர்
நிம்மதியாய் வாழ்வதற்குச் சேர்த்தி டாமல்
செரிக்காத உணவுடலைக் கெடுத்தல் போல
செய்கிறது சாதியிந்த சமுதா யத்தை !

நகரத்தில் இருகுவளை போன தென்று
நாம்பெருமை பேசினாலும் கிராமத் துள்ளே
நகராமல் தேநீரின் கடைக ளுக்குள்
நாட்டாமை செய்கிறது இன்னும் நின்றே
முகம்மழிக்கும் நிலையத்துள் தலித்க ளுக்கே
முடிவெட்டின் கடைதன்னை உடைப்போ மென்றே
அகவெறியில் கன்னடத்தின் ஊப்ளி ஊரில்
அறிவித்தே தடுக்கின்றார் சாதி யத்தால் !

தீண்டாமை பெருங்குற்றம் என்றே சட்டம்
தீட்டியிங்கே வைத்தென்ன நாளும் நாளும்
வேண்டாத மருமகளின் கைபட் டாலே
வெறுக்கின்ற மாமியாரின் முகத்தைப் போல
காண்கின்றோம் உயர்சாதி வெறியர் செய்யும்
கலகத்தை வன்முறையை நாட்டி லெங்கும்
தூண்டுவோரை துணையாக உடன்நிற் போரைத்
தூக்கிலிட்டால் தான் இந்த சாதி சாகும் !