தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
கல்லூரி விழாவிற்கு வீட்டில் உள்ளவர்களையெல்லாம் அழைத்துப் பார்த்தாள் தங்கச்சி. அவரவருக்கு ஒரு வேலையிருந்ததால் யாரும் வர ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டிலிருந்து விழாவிற்கு யாரையாவது கூட்டிவரவேண்டும் என்பது கல்லூரியின் வேண்டுகோள்.
அந்த வீட்டின் மூத்த அண்ணன் முருகேசன் அங்கே தான் இருக்கிறான் அதிலும் அவனுக்கு வேலைவெட்டி எதுவும் கூட இல்லை ஆனால் தங்கை அவனை விழாவிற்கு அழைக்கவில்லை. தங்கை தன்னை அழைக்கமாட்டாளா என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருந்த அண்ணன் அந்தச் சூழலில், “நா வர்றேம்மா” என்கிறார். அவளோ, “நீ யாரு வர்றேனர்னு சொல்ற” என வெறுப்பை உமிழ. “நா ஓ மூத்த அண்ணம்மா” என்று கண்கலங்கக் கூறுகிறான், “அண்ணன்னு சொன்னா போதுமா ஒரு அண்ணனா இந்த வீட்டுக்கோ எனக்கோ என்ன பண்ணிருக்க இதுவரைக்கும்” என அண்ணனின் இதயத்தை மண்குடம் போல் போட்டுடைத்தாள்.
தங்கையின் கேள்விக்கு பதிலற்று நிற்கும் அண்ணன் சிறுவயதிலேலே ஊரை விட்டோடி வசப்படாத பிழைப்பால் வாழ்வில் தோல்வியடைந்து திருமண வயதையும் தாண்டிப் போய் வந்திருப்பவன். உள் காயத்தை சொல்லும் ஒரு துண்டுப் பாடலுக்கான சூழல் இது. படம் வெயில். இயக்குநர் நண்பர் வசந்தபாலன். இசை ஜி.வி. பிரகாஷ்குமார். இது அவருக்கு முதல் படம் எனக்கு மூன்றாவது படம்.
“செத்தவடம் செத்துப்போனேன்
சொந்தம் சொன்ன வார்த்த
யாத்தே… பத்துத்தல நாகம்போல
கொத்துதடா இந்த வாழ்க்க
தெக்க போறதா நா வடக்க போறதா
தெச ஒன்னும் தெரியலியே
கொலகாரப் பயமக்கா – என்ன
கொன்னுதான் போடுங்களேன்”
இப்படியாக வெயில் படத்தில் தொடங்கிய எனக்கும் நண்பர் இசை இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்குமான நட்பு மிக மிக அலாதியானது. என் எழுத்தை அவர் பெரிதும் நேசிப்பவர் என்பதற்கு அவருடைய படங்களில் இப்போது வரை நான் பாடல் எழுதிக் கொண்டிருப்பதே சாட்சி. அதுபோக நானும் அவருடைய இசைக்கு விசிறி.
எனது பணியான் கிராமத்தில் சுடுதண்ணி ராசு மாமா மளிகைக் கடையில் எண்ணெய் வாங்க சீசாவைக் கொண்டு போனால் அதில் உழக்கு பொங்கி வழிய வழிய ஊற்றி நம் மனதை நிறைப்பார். ஐம்பது பைசாவுக்கு அவர் கொடுக்கும் புளி உருண்டை அந்த வயதில் என் கைக்கடங்காது. ஒரு தேங்காயில் கூட ஏழெட்டுச் சில்லுக்குமேல் போடமாட்டார். அவரின் தாராள குணத்தால் ஊருக்கே பிடித்திருந்தது அந்தக் கடை. ஆனால் எனக்குப் பிடித்ததற்கு அந்தக் கடையின் அடுத்த வாரிசாக பொறுப்பேற்ற அவரது மகன் ஜெயபாண்டி. அவர் எனக்கு நண்பர். அவரையும் நான் மாமா என்று தான் அழைப்பேன். அவர்தான் எனக்கு வைரமுத்து கவிதை பாடும் ஒலிப்பேழையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
பதின்மத்தின் இறுதியில் அவர் கடையில் நான் வைரமுத்து குரல் வழிக் கவிதையை அருந்தி அருந்தி அழகானேன். அவர் புதுக்கவிதையை பாடல் போல் வாசிப்பார் அல்லது அவர் கவிதையை பாடல் போல் யாரும் வாசிக்கலாம். நானும் அவர் கவிதையை அவரைப் போலவே காடுமேடெல்லாம் வாசித்துக் கிடந்திருக்கிறேன். இந்த அனுபவமும் நான் எதிர் காலத்தில் பாட்டுக்கட்டத் துணை புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தோடு எங்கள் ஊரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் அண்ணனின் நட்பும் அவருடனான பெரும் பயணமும் ஊக்குவிப்பும் எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. அவர் பஜனை பாடல்கள் எழுதுவார். அறிவொளி இயக்கம் பாடல்கள் எழுதுவார். அதே காலகட்டத்தில் என் சக பயணியான நண்பர் ரோஸ்முகிலனும் நானும் கருமாத்தூர் தாழைக் கோவிலிலும் அவரது பாட்டி வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு திரைப்பாடல்களின் கவித்துவத்தை பிரித்து பிரித்துப் பேசிக்கிடந்திருக்கிறோம். அவரும் அருமையான பாடலாசிரியர். அவர் பிற்காலத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார்.
ஓடு அல்லது சீகம்புல் வேய்ந்த வீடுகளின் திண்ணைகளில் ஆட்டுக்குட்டிகள் புழுக்கைகளை உதிர்த்துவிட்டு குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருக்குங்கள். ஊருக்கெல்லாம் புழுக்கைகளாக தெரிந்தவை எனக்கு எழுத்துக்களாகத் தெரிந்தன. என் அம்மத்தா சுளகில் கேழ்வரகு போட்டு மேவி புடைத்து கல் தூசி தும்பு பிரிக்கும் போது ஒண்ணரை அடி தூரம் வரை ஆகாயம் பார்த்து சுளகிறங்கும் கேழ்வரகில் ஒன்றுகூட தவறி தரையில் விழாது. அதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு கவிதையும் கதையும் கூட அதன் கருவிலிருந்து ஒரு எழுத்தைக்கூட சிந்தவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. புஷ்பம் சின்னம்மாவும் ரஞ்சிதம் சின்னம்மாவும் ஒரு உரலில் ஆளுக்கொரு உலக்கையை எடுத்துக்கொண்டு எப்படி மாற்றி மாற்றி தாளத்தில் நெல் குத்த முடியுமென ஆச்சரியப் பட்டதுண்டு, இதில் நெல்லைக் கொத்துவதற்கு எதற்கும் அஞ்சாமல் உரலுக்குள் தலையைவிடுவதற்காக வரும் சேவலையும் காலால் எட்டி உதைத்து தொரத்திவிட வேண்டும்.
என்னை என்றைக்கும் என் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. என்னால் உழைப்பாளர்களின் வாசமின்றி வாழ முடியாது. அப்படித்தான் ஒரு நாள் ஒரு பாடல் எழுதத் தோன்றியது. அதற்கு நண்பர் கரிசல் கருணாநிதி மெட்டமைத்தார். தமுஎகச மேடையின் நள்ளிரவுகளில் அந்தப் பாடலை அவர் பாடுகையில் கேட்பவர் கண் குளமாகிப் போவதைக் கணக்கற்ற முறை கண்டிருக்கிறேன். இப்படித்தான் தொடங்கும் அந்தப்பாடல்,
“ஒரு ஊருல
ஒரே ஒரு கிழவி
அவ உருவம்
ஒடஞ்ச பாதி வளவி
வெத்தல போட்ட வாயி
காவிய உடுத்தும் – அவ
துப்புன ஒடமெல்லாம்
ஓவியம் கிடக்கும்
கட்ட சாஞ்சிக்கிட
கையகல வீடு
வாழுதய்யா தனியா – ஒரு
வயசான கூடு”
“அவள் பெயர் தமிழரசி” திரைப்படம் விஜய் ஆண்டனி இசையில் நண்பர் இயக்குநர் மீரா கதிரவன் முதன் முதலாக இயக்கியது. என் நண்பர் தமிழரசன் மூலம் மீரா கதிரவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்தப் படத்தில் ஒரு பாடல் வாய்ப்புத் தருவதாச் சொல்லி பாடலுக்கான மெட்டை எனக்குத் தந்தார் இயக்குநர். ஒரு பாட்டுக்கு ஒன்பது பாடல் எழுதிச்சென்று காண்பித்தேன். என் எழுத்துக்களும் உழைப்பும் இயக்குநருக்கு மிகவும் பிடித்துப் போனது. இசை இயக்குனர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும் என் எழுத்துக்களைப் பிடித்துப்போக அந்தப் படத்தில் ஐந்து பாடல்களை எழுதினேன். அவள் பெயர் தமிழரசி படம் தான் என்னை ஒரு எழுத்தாளனாக தமிழ் சமூகம் அறிந்துகொள்வதற்கான இடத்தைத் தந்தது.
இயக்குநர் மீரா கதிரவன் ஒரு கவித்துவமான ஆள். அவர் என் பாடல்களில் மட்டும் அந்த கவித்துவத்தை ரசிக்கவில்லை. அவரோட ஸ்கிரிப்ட்டை நான் வாசிக்க நேர்ந்தபோது அந்த ஸ்கிரிப்ட்டின் ஒவ்வொரு அங்குலமும் கவித்துவமாகத்தான் இருந்தது. அந்த படத்தின் பாடல்கள் மிக நன்றாக வந்ததற்கு காரணம் அவரின நுட்பமான கதை நகர்த்தலும் அவர் எனக்குத் தந்த சுதந்திரமும் தான். காடு கரை தெரு திண்ணையென அலைந்து திரிந்து விளையாடும் சிறுவர் கூட்டத்தின் புழுதி மணக்கும் சூழல் தான் இயக்குநர் எனக்கு முதலில் தந்த மெட்டு அதற்குமுன் அதே படத்தில் காதலியைப் பிரிந்திருக்கும் காதலனின் கண்ணீர் மாலையில் உங்களுக்காக ஒரு சரணம்.
“நீ மொகம் பாக்கும் கண்ணாடில
ஓ நெத்திப் பொட்டு இருக்கு
நீ குளிச்ச எடத்திலதான்
மஞ்ச துண்டு கெடக்கு
விட்டத்தில செருகிவச்ச
கோழி றெக்க இருக்குதடி
நீ சிக்கெடுத்துப் போட்டமுடி
காலச்சுத்திக் கெடக்குதடி
ஒன்னச் சுத்தி எல்லாமே
உம்பேரத்தான் சொல்ல – என்ன
ஒத்தையில விட்டுப்புட்டா
நானெங்க சொல்ல”
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி