உதயசங்கருக்கு சாகித்ய அகாடமி [பால புரஸ்கார்] விருது
ஏக்கம் சிறுகதை – சுபாஸ்ரீ. செ
நீங்கள் சிறந்த பேச்சாளராக விருது பெற்றதற்கு இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது, இதன் மூலம் நீங்கள் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? என்று சரமாரியாக கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் கவிதாவிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அந்தப் பெரும் கூட்டத்தின் இடையே அவள் பதில் சொல்ல தொடங்கும்போது கீங் கீங் என்ற அலாரம் அடிக்க தொடங்கியது நான்கு மணியை காட்டியது கடிகாரம். கனவா? கனவிலாவது என் ஏக்கம் நிறைவேறுகிறதே என்ற பெருமூச்சுடன் தன் அன்றாட பணிகளை செய்ய தொடங்கினால் கவிதா.
மனதினில் பள்ளிப் படிப்பின் போதே பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசிய பல பரிசுகளைப் பெற்ற போது தமிழாசிரியரும், நண்பர்களும் நீ ஒரு சிறந்த பேச்சாளராக வரப்போகிறாய் என்று சொன்னதை நினைத்து ஒரு சிறு புன்னகையுடன் அந்த பழைய நினைவுகளிலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள்.
அப்பாவின் உடல்நிலையை காரணம் காட்டி கல்லூரி முடித்தவுடன் ஒரே மாதத்தில் திருமணம், திருமணத்திற்குப் பிறகு ஏக்கங்களை தனக்குள்ளே புதைக்கும் படி ஆனதை நினைத்து அடிக்கடி வருந்துவதை தவிர கவிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
என்னங்க காபி என்று தன் கணவரை எழுப்பினால், காபியை குடித்துவிட்டு அவரும் இன்னிக்கு என் ஆபீஸ்- ல் மீட்டிங் அதனால் லஞ்ச் வேண்டாம் அவங்களை அரேஞ்ச் பண்ணிப்பாங்க என்று சொல்ல, நேற்றே சொல்லி இருக்கலாமே சொன்னால் அதற்கு ஏற்றார்போல் சாதம் வைத்து இருப்பேன் ல்ல என்று சொல்ல, உடனே அவள் கணவர் குமாரோ, ஏன் இந்த மகாராணி கிட்ட சொல்லிட்டு தான் நான் மீட்டிங் கூட அட்டென்ட் பண்ணனும் போல என்று சொல்லிக்கொண்டே குளியலறையில் நுழைந்தான். இதைக் கேட்ட கவிதாவிற்கு பெண்களின் அடிமைத்தனம் என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பில் பேசிய பேச்சு போட்டியில் தான் பேசி முதல் பரிசு பெற்றதை நினைத்து மனதிற்குள் அழுது கொண்டிருந்தால், என் ஏக்கங்களை நான் யாரிடம் சொல்வது என்ற சிந்தனையுடன் கவிதா தன் மகனின் அறைக்கு சென்று பிரணவ் சீக்கிரம் எழுந்திரு உன்னுடைய ஃபேவரைட் பூஸ்ட் பிரஷ் பண்ணிட்டு குடிச்சுக்கோ குளிச்சிட்டு கிளம்பு, அம்மா டிபன், லன்ச் எல்லாம் பண்ணிட்டேன் ரெடியா இருக்கு. அம்மா, இன்னைக்கு என் ஃபிரண்டு அசோக்கு பர்த்டே அதனால இன்னிக்கு அவனோட ட்ரீட் மா என்று சொல்ல, ஏன்டா இதை நேற்றே சொல்லக்கூடாதா என்று வாயை எடுத்த கவிதா ஏனோ சரிப்பா என்று நிறுத்திவிட்டாள்.
தனக்கு ஆதரவாய் தோன்றும் ஒரே உறவு தன் மகளிடம் சென்றால் அவள் பிளஸ்டூ படிக்கிறாள் நாலரை மணிக்கே எழுந்து படித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா, டீ தம்ளரை நீட்டிக்கொண்டே டைம் ஆகுதுமா என்று கவிதா சொல்ல அவளும் இதோ அஞ்சு நிமிஷத்தில் கிளம்புறேன் அம்மா என்று சொல்லிக்கொண்டே பையில் புத்தகங்களை வைத்து பள்ளி செல்ல ஆயத்தமானாள்.
எல்லோரும் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் சற்று அமைதியாக உட்கார்ந்த கவிதாவிற்கு அமைதி தன் பழைய நினைவுகளில் சென்றது.
என்னங்க நான் பேச்சுப்போட்டியில் கலந்து நிறைய பரிசு வாங்கியிருக்கிறேன் அதையெல்லாம் அம்மா வீட்டில் இருக்கு அதை இங்கே எடுத்து வரவா என்று கவிதா திருமணமான புதிதில் கேட்டதையும் அதற்கு குமார் அதெல்லாம் உனக்கு இனிமேல் எதுக்கு போதும் என்னையும் எங்க அம்மா, அப்பா, இன்னும் நமக்குன்னு குழந்தை குட்டி வரும் அதை கவனிச்சா போதும், போ போய் சூடா ஒரு காபி போட்டு தா தலை வலிக்குது என்று சொன்னது இன்று நினைக்கையிலும் அவள் கண்களில் கண்ணீர் வரத்தான் செய்தது.
ஏனோ அன்று அவள் கண் முன்னே எல்லாம் வந்து சென்றதை அவளால் தடுக்க முடியவில்லை. கனவு கனவாகவே போனதற்கு காரணம் பெண்ணினம் என்றால் சமையலறையும் வீட்டில் உள்ளவர்களை கவனிப்பது மட்டும் என்று நினைக்கும் சில ஆண்களினாலா? கடவுள் எழுதிய என் தலைவிதியா? திருமணத்திற்குப் பின் என் ஆசைகளை வாழ்ந்து காட்டாமல் என் மனதிற்குள் புதைத்த நான் தானா? என்ற கேள்விகளை சுமந்தபடி அன்றைய பகல் பொழுது கழிந்தது.
மாலையில் அவளது கணவர் வீட்டிற்கு வரும்போதே ஏதோ டென்ஷனாக இருப்பது போல் அவள் உணர்ந்தால் உடனே ஒரு கப் காபி எடுத்துக்கொண்டு அருகில் சென்றாள். ஏங்க ஏதாவது பிரச்சனையா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று கவிதா கேட்க, ஆமா பிரச்சனைதான் ஆனா உன்கிட்ட சொல்லி என்ன யூஸ் என்று சொல்ல இதை கவனித்துக் கொண்டிருந்த ப்ரீத்தா ஏம்பா என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே அதை தீர்க்க முடியுமா? முடியாதா? என்று சொல்ல முடியும் னு சொல்ல, ஏனோ தன் மகள் கேட்கும்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை, உடனே தன் பிரச்சனைகளை கூறினார். அதாவது இன்னிக்கி நடந்த மீட்டிங் அப்போ ஒரு ப்ரோக்ராம் ஒன்னு பண்ண சொன்னாங்க அது கொஞ்சம் டஃப் டாஸ்க்கா இருந்தது நாளைக்கு சப்மிட் பண்ணனும் என்று குமார் சொல்ல உடனே பிரீத்தா அம்மாவுக்கு ப்ரோக்ராமை பற்றி தெரியும் தான் அப்பா கொஞ்சம் அவங்ககிட்ட கேட்கலாமே என்று சொல்ல, நல்லா சொன்ன போ உங்க அம்மா வா அவளுக்கு என்ன தெரியும் எப்போ பார்த்தாலும் எதையோ பறிகொடுத்தவ மாதிரி எதோ யோசனையோட அமைதியா வே இருப்பா என்று குமார் சொல்ல, ஆமாம் பிரீத்தா அம்மா கு லாம் அந்த அளவுக்கு நாலெட்ஜ் இல்ல என்று பிரணவும் சேர்ந்துகொண்டான்.
உடனே ப்ரீத்தாவிற்கு கோபம் வந்தது அப்பா நீங்கள் அம்மாவை எங்க முன்னாடியே இப்படி பேசறது நால தான் பிரணவும் இப்படி பேசறான் என்று சொல்லிக்கொண்டே அம்மாவிடம் திரும்பி அம்மா இதை உங்களால் செய்ய முடியும் நீங்கதான் இத செய்யறீங்க, எத்தனை முறை நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் ல ப்ரோக்ராமிங் ப்ராஜெக்ட் கு எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அப்பாக்கும், பிரணவுக்கும் நீங்க தான் உங்கள் திறமையை ப்ரூஃப் பண்றீங்க ஓகேவா என்று சொல்லியவுடன் தன் கணவர் குமார் ரை பார்த்தால் அவரும் மகள் சொன்னதால் அதை பற்றி சொல்ல கவிதா கோ இது கனவா?இல்லை நிஜமா? என்று தோன்றினாலும் தன் கணவர் சொல்வதை நன்றாக கவனித்தாள்.
அன்று கொஞ்சம் நேரம் ஆனாலும் அதை முடித்துவிட்டு தான் உறங்க சென்றாள் கவிதா. காலையில் எழுந்து எப்பொழுதும்போல் தன் கணவரை காபி கொடுத்து எழுப்பி விட்டாள். ஏன் கவிதா என்னை நான் சீக்கிரமா தானே எழுப்பிவிட சொன்னேன் எப்போதும் போல எழுப்பிவிட்டு இருக்க ப்ரோக்ராமிங் இன்னும் முழுசா முடிக்கவில்லை இன்றைக்கு கண்டிப்பாக சப்மிட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல, அவள் நான் அதை முடித்து விட்டேன் என்று சொன்னவுடன் குமார் ஆச்சரியமாக நம்பாமல் பார்த்தான்.
பிறகு ரிப்போர்ட்ஸ் பார்த்துவிட்டு அவனுக்கு மிகவும் சந்தோசம் முதன் முறையாக ரொம்ப நன்றி கவிதா. நீ எனக்குப் பெரிய ஹெல்ப் பண்ணி இருக்க தெரியுமா என்று சொன்னதை கேட்டவுடன் கவிதாவின் சந்தோஷத்திற்கும் அளவே இல்லை.
எல்லா மனிதர்களும் எதிர்பார்ப்பது இந்த சின்ன சின்ன ஆதரவும் பாராட்டுதலும் தானே!
அன்று மாலை மிகவும் சந்தோஷத்துடன் குமார் வீட்டிற்கு வந்து பிள்ளைகள் முன் என்ன மன்னிச்சிடு கவிதா நான் பண்ணது தப்புதான் ஆனா உன்ன பத்தி புரிஞ்சிக்காம உன்ன ரொம்ப மட்டமா பேசி இருக்கேன், இனிமே இப்படி பேசமாட்டேன். பிள்ளைங்க முன்னாடியே எத்தனையோ முறை உன்னை மட்டம் தட்டி பேசி இருக்கேன் அப்போது எல்லாம் ப்ரீத்தா தான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவா. உன்னோட திறமை எல்லாம் அவளுக்கு தான் புரிஞ்சிருக்கு, நான் காது கொடுத்துக் கூட கேட்காதது என் தப்பு தான் என்று சொல்ல, பிரணவும் சாரி மா நான் கூட உங்க மனச கஷ்ட படுறமாதிரி பேசிருக்கேன் என்று சொல்ல, உடனே குமார் நானும் நீ அப்படி நடந்துகிட்டது ஒரு காரணம் தானே உன் முன்னாடியே அம்மாவை புரிஞ்சிக்காம பேசியிருக்கேன், இனிமேல் நானும் என்னை மாத்திக்கணும் என்று சொல்லிவிட்டு சரி, இன்னிக்கு எல்லோரும் சேர்ந்து டின்னருக்கு வெளியே போகலாம் என்று குமார் முடிக்க எல்லோர் மனதிலும் சந்தோஷமும் நிம்மதியும் தவழ்ந்தது.
எல்லோரும் சேர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும்போது, அப்பா அம்மாக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு தெரியுமா என்று ப்ரீத்தா சொல்ல, தெரியலமா என்று குமார் சொல்லிக்கொண்டே கவிதாவின் பக்கம் திரும்பி நீயே சொல்லு உன்னுடைய ஆசை என்னவென்று என்று கேட்க கவிதாவும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் எனக்கு நல்ல பேச்சாளர் ஆகணும்னு ஆசை ங்க கல்யாணமான புதிதில் உங்க கிட்ட சொன்னேன் எங்க வீட்டுல நிறைய பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன் அதிலிருந்து பரிசு எல்லாம் எங்க வீட்டுல இருக்கு, எடுத்துட்டு வர வாங்க னு கேட்டேன். நீங்க அப்ப வேண்டாம்னு சொன்னீங்க, என்று கவிதா சொல்ல குமாரின் முகம் மாறியது நான் எவ்வளவு சுயநலத்துடன் இருந்திருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டே கவிதா உன் ஆசை என்னவோ அதற்கான முயற்சி எடு. நாங்கள் உனக்கு பக்கபலமாக இருப்போம் என்று சொல்ல தன் ஏக்கம் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன் வீட்டினுள் நுழைந்தாள் கவிதா.
– சுபாஸ்ரீ. செ
பால புரஸ்கார் விருதும் சாகித்ய அகாடமியும் – தசிஎகச கண்டனம்.
வணக்கம்,
2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் பால சாகித்ய புரஸ்கர் திருமதி. ஜி.மீனாட்சி எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் என்பது சிறார் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ’மல்லிகாவின் வீடு’ நூல், பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதை ‘அப்பாவை ஏன் பிடிக்கும்?’. இதற்கு மிகச் சாதாரணமான பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கதையின் முடிவாக ஒரு மாணவர்,”எங்கப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! ஏன்னா, அவர் எங்கம்மாவைக் கல்யாணம் செய்துக்கிட்டாரே!” என்று சொல்கிறார். பட்டிமன்ற நகைச்சுவைத் துணுக்கு போன்ற இதை, சிறுவர் கதை என்கிற முடிவுக்கு தேர்வுக் குழுவினர் எப்படி வந்தனர்?
இப்படி இத்தொகுப்பில் உள்ள முக்கால்வாசி கதைகளில் கதைத்தன்மையே இல்லை. மொத்தத் தொகுப்பும் ஆரம்பகட்ட சிறார் கதைகள் எழுதுபவரின் முயற்சியைப் போலுள்ளது. 1980களில் வந்த புத்தகத்தினைப் போல எந்த வகையிலும் நவீனத்துவம் (இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவது நவீனத்துவம் ஆகி விடாது) சிறிதும் இல்லாத தொகுப்பாக இருக்கிறது. புதிய முயற்சியாகவோ, புதிய கதை சொல்லும் பாணியிலோ, இதுவரையில் யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல முற்பட்டதாகவோ தெரியவில்லை.
விருது என்பது தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டால்தான் அந்தத் துறை வளர்ச்சிபெறும். ஆனால், பால சாகித்ய புரஸ்கார் தேர்வுக் குழுவினரோ, தமிழில் நவீன சிறார் இலக்கியம் வளரக் கூடாது என நினைப்புடன் இந்நூலைத் தேர்ந்தெடுத்துள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.
விருது கொடுக்கப்பட்டுள்ள நூலாசிரியரின் கதைகள், நூல்கள் தமிழ் சிறார் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ, முன்னுதாரணப் படைப்பாக அடையாளம் பெற்றதுபோலவோ தெரியவில்லை. இந்த விருது வழங்கப்படுவதற்கு முன் எந்த வகையிலும் சிறார்களையோ, சிறார் இலக்கியப் படைப்பாளிகளையோ இந்தக் கதைகள் சென்றடைந்ததுபோலவும் தெரியவில்லை. பால சாகித்ய புரஸ்கார் என்பது சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழுவினர், தேர்வுக் குழுவினருக்கு நெருக்கமானவர்களுக்கே பெரும்பாலான நேரம் கொடுக்கப்பட்டுவருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனம் செய்யப்பட்டுவருவதை, உறுதிப்படுத்துவதுபோல் இந்த ஆண்டு விருதுத் தேர்வும் அமைந்திருக்கிறது.
இதை சாகித்ய அகாடமியின் தலைமை அலுவலகப் பார்வைக்கும் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கொண்டு செல்லும். இதற்குக் காரணமான தமிழ் பால சாகித்ய புரஸ்கார் தேர்வு குழுவுக்கு கடும் கண்டனங்களை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்வரும் காலத்தில் தகுதியான நூலுக்கு விருதுகளை அளிக்கும்படி சாகித்ய அகாடமி அமைப்பினரைக் கேட்டுக்கொள்கிறது.
எதிர்காலத்தில் சாகித்ய அகாடமியின் பால சாகித்ய விருதுத் தேர்வு மேம்பட்ட வகையில் அமைய கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறோம்:
1. சமகாலச் சிறார் இலக்கியத்தோடு நேரடித் தொடர்புடையவர்களை மட்டுமே விருதுத் தேர்வுக் குழுவுக்குத் தேர்வுசெய்ய வேண்டும்.
2. தற்போது இறுதிக் குறும்பட்டியல் மட்டும் வெளியிடப்படுகிறது. அதே நேரம், இறுதிப்பட்டியலுக்கான நூல் தேர்வு செய்யப்பட்ட முறை, அவற்றைப் பரிந்துரைத்த தேர்வாளர்கள் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிட வேண்டும்.
3. சாகித்ய அகாடமி அலுவலர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு சமகாலத்தில் என்ன மாதிரியான சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டும்.
4. விருதுத் தேர்வு முறை நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதை உத்திரவாதப்படுத்த, வெளிப்படைத்தன்மை வேண்டும்.
5. விருதுக்குரிய நூல் இறுதிப் பட்டியலிலுள்ள மற்ற நூல்களைவிட எந்த வகையில் தகுதியானது என்பது குறித்து விருதுக் குழு நடுவர்களின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
நன்றி,
விழியன் | செயலாளர்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
+91 90940 09092 / +91 94438 81701
[email protected]
புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவில் சிறந்த நூல்களுக்கான விருது
நூல் விருதுகள் – இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு
ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022ஐ முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் அறிவிப்பு வந்துள்ளது
இதில் முக்கியமாக, உலக சமூக வலைதளக் காட்சிகளில் முதன்முறையாக(?) இணைய எழுத்தாளர்க்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வலைப் பக்க எழுத்தாளர்கள் வருக.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமிகு கவிதா ராமு இஆப அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5ஆவது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7, 2022 வரை பத்துநாட்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ளது.
இப்புத்தகத் திருவிழாவினையொட்டி மாணவர்க்கான கலை இலக்கியப் போட்டிகள், புத்தகப் பேரணிகள், புதுக்கோட்டை வாசிக்கிறது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 2020, 2021ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த நூல்கள் மற்றும்
இணையத்தில் வெளியான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு புத்தகவிழா மேடையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
கீழ்க்கண்டவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கவிதை பிரிவில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை ஆகிய மூன்று விருதுகள்
கட்டுரை – அரசியல், சமூகம், வரலாறு, அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், கலை இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்குமாக இரண்டு விருதுகள்
சிறுகதை நூல் விருது ஒன்று
நாவல் விருது ஒன்று
சிறார் இலக்கியம் விருது ஒன்று
இணையத்தில் மட்டுமே வெளியாகி நூலாக வெளிவராத, தமிழ்- புனைவு(கதை, கவிதை) படைப்பு ஒன்றிற்கும், அபுனைவுப் (கட்டுரை) படைப்பு ஒன்றிற்கும் என இரண்டு விருதுகள் என மொத்தம் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருதுக்கும் ரூ 5000 பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழுடன், விருதுப் பட்டயமும் 29-7-2022 – 07-8-2022 பத்துநாள் புதுக்கோட்டை புத்தகவிழாவில் விழா மேடையில் வழங்கப்படவுள்ளது.
மேற்படி விருதுகளுக்கான பரிசீலனைக்கு – பதிப்பகத்தார், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல்களையும், தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பி வைக்கலாம்.
நூல்களின் 3 பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி-
எழுத்தாளர் ராசி.பன்னீர் செல்வன்,
தலைவர் – விருதுக்குழு,
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்,
புதுக்கோட்டை-622001
என்ற முகவரிக்கு 12-7-2022 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
(அனுப்பிய நூல்கள் கிடைத்த விவரத்தைக் கேட்க –9486752525)
இணையப் படைப்புகளின் இணைப்பினை [email protected] என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கியமான குறிப்புகள்
படைப்புகள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி 12.07.2022 படைப்புகள் மேற்குறிப்பிட்ட காலத்தில் முதல்பதிப்பாக வெளிவந்ததை உறுதிசெய்ய வேண்டும்.
தேர்வு பெற்றோர் விவரம் ஊடகவழியும், விருது பெற்றோர்க்கு செல்பேசி, மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கப்படும். நூல்களை அனுப்பியபின், கிடைத்த விவரம் கேட்டுத் தெரிந்து கொள்வதன்றி, விருதுத் தேர்வு அறிவிப்புகள் வரை எந்தத் தொடர்பும் விரும்பத்தக்கதல்ல.
நன்றி: நா.முத்துநிலவன் வலைப்பக்கம்
2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற கவிஞர் மு.முருகேஷ் தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
இவர் 10 புதுக்கவிதை, 9 ஹைக்கூ கவிதை, 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் உட்பட 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.
மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேஷ், தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஒரு இயக்கம் போல் பரவலாக கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.
கவிஞர் மு.முருகேஷ் தனது படைப்புகளுக்காக 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்றவர். இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர். இவரது ஹைக்கூ கவிதைகள் எல்.பி.சாமி மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் ’நிலா முத்தம்’ எனும் நூலாகவும், தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுபெற்ற நூல் பள்ளி மாணவி வி.சைதன்யா மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ’The first story told by a daughter to her mother’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.
2009-இல் பெங்களூருவில் நடைபெற்ற 9-ஆவது உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில் பங்கேற்று, உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு வென்றதும், தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்ட நூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றதும், ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் ‘குறுங்கவிச் செல்வன்’ விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.
பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேஷ் கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
விருதாளர் செல்பேசி : 94443 60421