ஆன்மீகத்திற்கான விளம்பர அறிவியல் கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்

ஆன்மீகத்திற்கான விளம்பர அறிவியல் கட்டுரை – பொ.இராஜமாணிக்கம்



ராமநவமி அன்று அயோத்தி ராமர் கோயில் சிலை மீது  சூரிய ஒளியை  விழ வைக்க அறிவியல் நிறுவனங்கள் மீது நிர்பந்தம்…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் உட்புறம் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையின் தலை மேல் 2024 வருட ராமநவமி அன்று சூரியக் கதிர்கள் விழும்படி செய்யக்கூடிய ஆடிகளின் தொகுப்பால் ஆன கருவி ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதன் வடிவமைப்புக்காக சி எஸ் ஐ ஆர் (CSIR) என்ற மத்திய ஆராய்ச்சி நிறுவனமும மத்திய கட்டிட ஆராய்ச்சி மையமும் (CBRI) இணைந்து செயல்பட ஆட்சியாளர்கள் நிற்பந்திதுள்ளனர். இதற்கான அறிவியல் தகவல்களை அளிப்பதற்காக ஐ ஐஏ (IIA) என்ற இந்திய வானியல் மையமும் ஐயுக்கா (IUCCA) என்ற வானியல் மையமும் ஈடுபட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதன்படி ராமநவமி அன்று சூரியக் கதிர்கள் விழுவதற்கான கண்ணாடி கொண்ட அமைப்பு, கம்ப்யூட்டர் இணைப்பு என அமோகமாய் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாய்த் தெரிகிறது. இதை அறிவியலார்கள். வானியல் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சூரிய ஒளி விழும் கோவில்கள், சிலைகள்:

நமது நாட்டின் பல்வேறு கோவில்களில் கோவிலுக்குள்ளேயோ அல்லது கருவறைக்குள்ளேயோ சூரிய ஒளி விழும்படி கட்டிக்கலை நிபுணத்துவத்துடன் பண்டைய காலத்தில் கட்டப்பட்டுள்ளது உண்மையில் பாராட்டுக்குரியதாகும். இது பக்தர்களை மேலும் பக்தி பரவசத்தை ஊக்கப்படுத்த உதவுகிறது.

  1. திருச்சி சங்கரபாளயம் அருள்மிகு காசிவிசுவனாதர் கோவிலின் சிவலிஙகத்தில் ஆவணி 7,8,9 தேதிகளிலும் (ஆகஸ்ட்.-செப்) காலை 06-6.30 மணியளவில் சுமார் ரெண்டு அடி உயரமுள்ள  சிலையில் ஒளி விழுகிறது.
  2. வின்னம்பள்ளி கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கொவிலில் உள்ள மூன்றடி சிவலிங்கத்தில் பஙுனி மாதம் ஒரு வார காலம் தினமும் அரை மணி நேரம் ஒளி விழுகிறது
  3.  ஆந்திராவில் சிரிகாகுளம் அருகில் உள்ள அரசவள்ளி என்ற ஊரில் உள்ள சூரியநாராயண கோவிலில்  ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கருவறையில் கடவுளின் காலில் சூரிய ஒளி விழுவதை பக்தர்கள் பார்த்து பரவசமடைகின்றனர்.
  4. கோல்காபுர் மஹாலக்‌ஷ்மி கோவிலில் மாலை 6 மணி அளவில் உள்ளே நுழையும் சூரிய ஒளி 6.13க்கு கருவறைக்குள் சென்று மூன்றடி உயரமுள்ள சாமி சிலையில் விழுகிறது. இதன் ஒளி அளவு 48 லக்ஸ் எனவும் அளவிட்டு உள்ளனர். மீண்டும் நவம்பர் மாதம் இதே போன்று நிகழ்கிறது. 
  5. ஹைதரபாத் அருகில் உள்ள கல்பாகுர் கிராமத்தில் உள்ள அனந்த பத்ம சாமி கோவிலில் தினசரி காலை ஒளி கோவிலுக்குள் விழுகிறது. இது காக்கதீய அரசர்களால் கி.பி 7 நூற்றாண்டில் கட்டப்பட்டது 
  6. கர்னாடாகவில்பசவங்குடி கஙதேஸ்வர் ஆலயத்தில் சங்கராந்தி சமயத்தில் 20மீட்டர் ஆழத்தில் உள்ள தெற்கு நோக்கிய ஆலயத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் சூரிய ஒளி விழுகிறது.
  7. திருப்பதி அருகில் உள்ள நாகலாபுரம் வேதனாராயன்ண கோவிலில் மார்.25,26,27 தேதிகளில் மாலை 6 மணி முதல் 6.15 வரை சூரிய வெளிச்சம் விழுகிறது.
  8. உத்தர்காண்ட் மாநிலம் அல்மொர்ராவில் உள்ள இரண்டாவது சூரியக் கோவில் என்று கருதப்படும் கதர்மார் சூரியக் கோவிலில் சூரிய வெளிச்சம் கடவுள் சிலையில் அக்டோபர் 22 அன்றும் பிப்ரவரி 22 அன்றும் விழும் படி உள்ளது. அக்.22 உத்ராயணத்தில் இருந்து சூரியன் தக்க்ஷியணம் செல்லும் போதும் பிப்ரவரி 22 தக்‌ஷியாணத்தில் இருந்து உத்ரயணம் செல்லும் போதும் சூரிய ஒளி விழுவது போல் கட்டிக் கலையை அமைத்துள்ளனர் என்பது பாராட்டுக்குரியது.  
  9. சரியாக அக்டோபர் இரண்டு அன்று காந்தி சிலையில் சூரிய ஒளி படுமாறு குமரி முனை நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படியாக பல்வேறு கோவில்களில் சூரிய ஒளி விழும் நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தகாலத்தில் இத்தகு அமைப்பு கட்டுமான சவால் ஆகும். எனவே இவை கட்டிடக்கலையின் வரலாற்றில் சிறப்பம்சம் ஆகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி எந்தக் கோணத்தில் விழும் என்பதைக் கணக்கில் கொண்டு மேற்கூரையில் துளை செய்யவேண்டும். அப்படி செய்தால் அந்த நாளில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சிலையின் மீது சூரிய ஒளி விழும். இதில் எந்தவிதமான அபூர்வ சக்தி இருப்பதாகக் கூற முடியாது. சில கோயில்களில் ஆண்டில் ஒருநாள் மட்டும் என்று இல்லாமல் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் ஒளி பாய்வதும் நடைபெறுகிறது. இது உத்தராயணம் தட்சிணம் என்ற சூரிய உதயத்தின் இயற்கை நிகழ்வோடு சம்பந்தப்பட்டதாகும்.

எனவே அயோத்தி ராமர் கோவிலில் வருடாந்திரம் பிற கோயில்களில் விழுவது போல் ராம நவமி நாளன்று இயல்பாக ஒளி விழாது. கட்டிடக் கலை மூலம் இந்த அமைப்பை உருவாக்க முடியாது.எனவே ராம நவமியன்று சிலையில் செயற்கையாக ஒளி விழும்படியாக பல்வேறு ஆடிகளை இணைத்து கணினி மூலம் இயக்கி அந்தந்த ஆண்டு ராம நவமி ஏற்படும் அன்று ஒளி விழும்படி கருவி அமைப்பை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஏன்  ஒளி பிரதிபலிப்புக் கருவி தேவை?

ராம நவமி என்பது ஒரு திதி ஆகும். திதி என்பது நிலாக் காலண்டர் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ராம நவமி என்பது சுக்ல பட்சம் என்ற தேதியில் வருகிறது. சுக்ல பட்சம் என்பது அமாவாசையில் துவங்கி பெளர்ணமியில் முடியும். 15 நாட்கள் நிலா வளர்ந்து பௌர்ணமி அன்று நிறைவு பெறுகிறது. இதில் ராம நவமி ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் நாள் வருகிறது. அடுத்த 15 நாட்கள் கிருஷ்ணபட்சம் துவங்கி தேய்பிறை ஆகி அமாவாசை ஆகிறது. நிலா காலண்டர் 29.5 நாட்கள் என்பதால் சுக்கில பட்சம் அடுத்த ஆண்டு அதே தேதியில் வருவதில்லை. எடுத்துக்காட்டாக 2024 ஏப்ரல் 17 வரும் ராம நவமி 2025ல் ஏப்ரல் 6ல் வருகிறது.

ஜனவரி 14, அக்டோபர் 2 என்கிறது போன்ற சூரிய நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளில் துளை மூலம் நேரடியாக ஒளி விழச் செய்யமுடியும். ஆனால் பங்குனி உத்திரம், ராம நவமி போன்றவை நிலவின் ஓட்டத்தோடு தொடர்புடையவை. எனவே ஆண்டுதோறும் ஒரே நாளில் இந்த விழாக்கள் ஏற்படாது. எனவே குறிப்பிட்ட திசையில் மேற்கூரையில் துளை செய்து இந்த வியப்பு நிகழ்வை ஏற்படுத்த முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்ட தேதிகளில் ராம நவமி வருவதால் இயற்கையாக கட்டிடக்கலையில் கொண்டு வருவது சிரமம். இதே தேதியில் 19 வருடத்திற்குப் பின்னர் தான் ராமநவமி வரும்.அதை வேண்டுமென்றால் கட்டிடக் கலையில் கொண்டு வரலாம்.ஏனென்றால் பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு 3651/4 எடுத்துக் கொள்கிறது. நிலா பூமியை 29.5 நாட்களில் சுற்றி வருகிறது. இதைக் கணக்கிட்டால் சூரியன், பூமி,நிலா ஆகியன மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு 19 வருடங்கள் ஆகும். இதை மெடோனிக் சைக்கிள் (Metonic cycle) என்கின்றனர்.

எனவே ராமர் சிலையில் கட்டிடக் கலையின் மூலம் வெளிச்சத்தை விழ வைக்க வேண்டுமென்றால் 19 வருடத்திற்கு ஒருமுறை தான் வாய்ப்பு உள்ளது. எனவே தான் வருடந்தோறும் சூரிய ஒளியை ராமர் சிலை மேல் விழ வைக்க கணிணி, மின்னனு, எந்திரவியல், ஒளியியல் தொழில்நுட்பங்கள் மூலம் கருவியை உருவாக்க வேண்டியுள்ளது.

ஆன்மீகத்திற்கான விளம்பர அறிவியல்:

காந்தி நினைவிடத்தில் குறிப்பிட்ட நாள் அன்று ஒளி விழச் செய்வது என்பது பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். ஆனால் கோவிலில் வலிந்து இவ்வாறு ஏற்பாடு செய்வது எழுத்தறிவு பரவலாக இல்லாத வட இந்தியாவில் பொதுமக்களை இந்த வியப்பைக் காட்டி மயக்கும் நோக்கமோ என சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

இங்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ள ஒளி பிரதிபலிக்கும் கருவியை பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் அல்லது இளம்கலை வகுப்பு மாணவர்கள் வடிவமைக்க முடியும். வானவியல் கணக்கீடு, ஒளியியல் பிரதிபலிப்பு & ஒளி குவித்தல், எந்திரவியலில் கியர் சிஸ்டம், மின்னணுக் கணிணியியலில் ஆட்டொமேடிக் சிஸ்டம் இவைகளை ஒருங்கிணைத்து கல்லூரி மாணவர்களே செய்ய முடியும் என்கிறார் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் வானியல் அறிஞர் முனைவர் அனிகெட் சுலே.

ஆனால் சிஎஸ் ஐ ஆர், மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையும், இந்திய வானியல் நிறுவனம், ஐயுக்கா போன்ற அறிவியல் சார் பெரும் நிறுவனங்களின் மனித வளத்தை இதற்கு பயன் படுத்த வேண்டியதில்லை என்றும் இதற்கென ஆராய்ச்சி நிதியை வீணடிக்க வேண்டாம் எனவும் இந்தியாவில் உள்ள அறிவியலார்கள் இடித்துரைக்கின்றனர் . இது ராமர் கோவிலைப் பிரபலப்படுத்துவதற்கும் ஆன்மீகத்திற்கான செய்யப்படும் மாபெரும் அறிவியல் விளம்பரம் என அறிஞர்களும் செயல்பாட்டாளர்களும் கருதுகின்றனர்.

– பொ.இராஜமாணிக்கம்