கடவுளின் தேசத்திலொரு பகல்பொழுது – வே. சங்கர்
எல்லா ஊரும் ஒரே மாதிரிதான். ஆனால், ஒன்றுபோல இல்லை. அன்று அதிகாலைச் சூரியனுக்கு நான் முகம்காட்டியது கடவுளின் தேசத்தில் இருந்துகொண்டுதான். அடர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் இன்று அதன் தழும்புகள் மட்டுமே நிரந்தரமாகியிருக்கின்றன. தூசி படர்ந்த இலைகள் வழிநெடுக விரவிக்கிடந்தன தரையிலும் மரங்களின் கிளைகளிலும்.
ஒரு சொட்டு மழை கூறையில் விழுந்தாலும் வழுக்கிச் சென்று தரையை முத்தமிடட்டும் என்று நான்கு புறமும் சரித்துக் கட்டப்பட்ட ஓட்டுவில்லை வீடுகள். சாலையின் விளிம்புகளை பிடிவாதமாகத் தொட்டபடி கடைகள். சமீபகாலமாய் ஓட்டுவீடுகளின் விலாஎலும்பில் துருத்திக்கொண்டு முளைத்திருக்கும் அதிநவீன தார்சு கட்டிடங்கள்.
ஆங்காங்கே மௌனித்துப் பறக்கும் ஆகாயப் பறவைகள். இருபுறக் கரைகளின் அழுக்கை வாரி அப்பிக்கொண்டு மௌனமாய்ப் பயணிக்கும் அதிகாலை ‘பாரதபுழ’ ஆறு. மேம்பாலத்தில் உடலைக்குறைக்க நடைபயிற்சி செய்யும் ஆண்களும் பெண்களும். ’வா’ என்று ஒற்றைச் சொல்லில் வரவேற்கும் அகண்ட தார்ரோடு. அத்தனையையும் வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்லும் நான்.
முதலில் மொழி அத்தனை இலகுவாக பேசத்தெரியாததால் கொஞ்சம் திணறத்தான் வேண்டியிருந்தது. அவசியம் ஏற்படும்போது ஓரிரு தெரிந்த வார்த்தைகளை பிரயோகித்து சமாளித்தாலும், சரளமாக அவர்கள் பேசும் இசை போன்றதொரு மொழி உடனடியாகப் புரியாமல் நழுவிசெல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சரளமாகப் பேசத்தெரியாவிட்டாலும், ஏதோ கொஞ்சம் புரிந்துகொள்ளும் அளவுக்கு இருந்தால் போதும் என்ற ரீதியில், மலையாளத் தொலைக்காட்சி ஷோக்களையும், மம்முட்டி மற்றும் மோகன்லால் நடித்த சினிமாப் படங்களின் உரையாடல்களையும் கொஞ்சம் தொடர்ந்து பார்த்தும் கேட்டும் வைத்திருந்தேன்.
காட்சிகளோடு கூடிய உரையாடல் என்பதால், முதல் காட்சியும் அடுத்த காட்சியின் நிகழ்வையும் பொருத்திப்பார்த்து, இதுவாகத்தான் இருக்கும் என்று தோராயமாகப் புரிந்துகொண்டு விடலாம்.. புரியாவிட்டாலும் அது பெரும் குற்றமொன்றுமில்லை. அவ்வாறு கற்றுக்கொண்ட ஓரிரு அவசியமான வார்த்தைகள் ஒருவிதத்தில் உதவிகரமாக இருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், ஒரு மொழியை சரளமாக அந்த ஊரின் நேட்டிவிட்டியோடு பேசுவது அவ்வளவு எளிதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது.
அந்தவூர் மண்ணின் மனிதர்கள் பேசும்போது இலக்கண சுத்தமில்லாமல் கொச்சைமொழியில் அவர்கள் மிக இயல்பாக பேசுவதுகூட ஏதோ அவசர அவசரமாகப் பேசுவதுபோல தோன்றுகிறது.
ஒவ்வொருவருக்கும் தனித்துவமான தொனி, உச்சரிப்பு லாவகம், தனித்ததொரு குரல்வளம். என்று ஆளுக்கு ஆள் வேறுபடுவது இயல்புதானே! ரோட்டோரக் கடைகளில் தேனீர் குடிப்பதிலும் காலை, மாலை உணவு உண்பதிலும் பெரிதளவில் எந்தவித சிக்கலும் இல்லை. சைகை போதும். கூடவே எந்த மொழியில் பேசினாலும் எதிரில் இருப்பவரால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் கேட்பதற்கேற்ப தலையை அசைத்தால் போதும்.
அந்நிய மொழிபேசும், புதிய இடத்தில், நம் தாய்மொழியில் யார் பேசினாலும் அவர்களோடு உடனடியாக நட்புகொள்ள நினைக்கிறது மனம். அவர்கள் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? என்றெல்லாம் ஆராய்ச்சியெல்லாம் அப்போது எழுவதில்லை. சொந்த ஊரில் பக்கத்து வீடு எதிர்வீட்டில் அதே மனிதன் இருக்கும்போதுதான் அத்தனையும் சாத்தியம்.
பாலக்காடு அடுத்துள்ள சொர்ணூருக்குதான் எனது எதிர்பாராத பயணம். அங்குள்ள செறுதுருத்தி என்னும் இடத்தில் இருக்கும் ”நேசனல் ஆயுர்வேத ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் பஞ்சகர்மா” என்னும் மருத்துவமனைக்கு என் உடல் சார்ந்த பிரச்சினைக்காகச் சென்றிருந்தேன். எல்லாவகையான நெடுநாள் உடல்சார் நோய்களுக்கும், ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை அது. புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கிறார்கள். கட்டணம் வெறும் பத்துரூபாய் தான்.
அதிகாலை ஏழு மணியிலிருந்தே டோக்கன் கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். நானும் ஒரு டோக்கனைப் பெற்றுக்கொண்டேன். எங்கு நோக்கிலும் சுத்தம். வெவ்வேறு ஊர்களில் இருந்து, ஏதேதோ நோய்க்கு மருத்துவம் பார்க்க நோயாளிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
வளாகத்திற்கு உள்ளேயே கேண்டின் இருந்ததால் காலை உணவிற்குக் கவலை இல்லை. வெள்ளப்பம் (நம்ம ஊர் ஆப்பத்தைதான் அப்படி அழைக்கிறார்கள்) நூலப்பம் (இடியாப்பம்) அதற்குத் தோதாக சட்னி சாம்பார், பூரி, இட்லி, தோசை, மெதுவடை என்று எல்லாம் கிடைக்கிறது. ருசிக்கு எல்லாவற்றிலும் கலந்துகட்டி அடிக்கவேண்டும் என்று ஆசை இருந்தது என்னவோ உண்மைதான்..
ஆனால், புதிய இடத்து பதார்த்தங்கள் சிக்கிச்சைக்கு சென்ற இடத்தில் வயிற்றைப் பதம்பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து அரைவயிற்றோடு எழுந்துகொள்ள வேண்டியதாயிற்று.
இதுவரை அந்த ஊருக்குச் சென்றதில்லை. இடம் புதிது, மொழி புதிது. வழி புதிது, மொத்தத்தில் எல்லாமே புதிது. மருத்துவரிடம் ஆங்கிலத்தில் பேசிச் சமாளிப்பது மிக எளிதாக இருந்தது. தமிழில் பேசினாலும் புரிந்துகொள்கிறார்கள். நண்பகலுக்குள் மருத்துவரைப் பார்த்து முடிந்துவிட்டது. மருந்தும் பெற்றாகிவிட்டது.
இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். மருத்துவமனைக்குச் செல்வதுதான் எனது பிரதான நோக்கம். பிறகு ஊர் திரும்பவேண்டியதுதான். நான் ஊர் திரும்பவேண்டிய ரயில் இரவு பத்துமணிக்குத்தான். அதுவரை என்ன செய்வது?
எந்தவிதத் திட்டமிடலும் இல்லாததால், அருகில் ஏதேனும் பிரபலமான இடத்திற்கு சென்றுவந்தால் என்ன? என்ற எண்ணம் எழுந்தது என்பதைவிட அருகில் இருந்தவரிடம் அறைகுறை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கேட்டுத் தெரிந்துகொண்டேன் என்பதுதான் உண்மை.
30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு உயிரியல் பூங்கா இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்துநின்ற பேருந்தில் ஏறிக்கொண்டேன். சற்றேறக்குறைய 50 நிமிடப்பயணம்.
உடன் பயணிப்பவரிடம், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் என்று கலந்துகட்டிப் பேசுவது நமக்கும் சரி உடன் பயணிக்கும் மனிதர்களுக்கும் சரி விநோதமான(!) அனுபவம்தான். பேருந்து ஜன்னலின் வழியே ஊரையும், மக்களையும் உற்றுநோக்குவது அத்தனை பெரிய ஆனந்தம். ஏராளமான எண்ணச்சிறகுகள் சூழலுக்கேற்ப வளர்ந்து மேலேயும் கீழேயும் பறந்தவண்ணம் இருந்தது. கவிதை வரிகள் ஓரிரண்டு வந்து போனது. அதையெல்லாம் சொன்னால் சிரித்துவிடுவீர்கள் என்பதால் நாகரீகம் கருதி அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.
மனிதர்கள் புதியவர்களுக்கு எப்போதும் ஒத்தாசையாகத்தான் இருக்கிறார்கள் என்பதை ஒரு சிறுபயணம் உணர்த்திவிடுகிறது. திர்சூர் (தமிழில் திருச்சூர்) என்னை ஏராளமான வெய்யிலோடு வரவேற்றது. பேருந்து நிலையத்திற்கு முன்னதாகவே இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கச் சொன்னதோடு இல்லாமல் எப்படிச் செல்லவேண்டும் என்று வழியும் சொன்னார்கள்.
சொன்னபடியே, சற்று தொலைவில் பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் பூங்கா இருந்தன. சாலையின் இருபுறங்களிலும் வேடிக்கை பார்த்துகொண்டே நடந்து சேர்ந்தபோது நுழைவாயிலில் ’ஸ்டேட் மியூசியம் & ஜூ’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
திர்சூர் நகரத்தின் மையத்தில், நாட்டிலேயே மிகப்பழமையான மிருகக்காட்சி சாலை இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம். இரண்டு கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்டது. காலை பத்துமணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கிறது. வெறும் பத்து ரூபாய் நுழைவுக்கட்டணம். வாகன நிறுத்தத்திற்குக் கட்டணமில்லை. உடைமைகளை வைக்கும் இடத்திற்குக்கூட கட்டணமில்லை. சற்றே ஆச்சரியம்தான். நம்மூர் மனிதர்களை இன்னும் அவர்கள் காப்பியடிக்கவில்லை என்பது பெருத்த நிம்மதி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நரி, சிங்கம், புலி, சிறுத்தை, புனுகுப்பூனை, கரடி, மான்கள், எருமைகள், நீர் யானை, குரங்குகள் முதலை, பாம்பு, மற்றும் பலவகையான அரிய பறவைகள், உட்பட ஏராளமான உயிரினங்களை கூண்டுக்குள் வலம்வருவதைப் பார்க்க முடிந்தது.
மரங்களில் நாகலிங்க மரம் மற்றும் பீரங்கிக் குண்டு மரம் (கேனன் பால் ட்ரீ) பார்த்ததும் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அற்புதமான நினைவு.
இளம்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதன் பெயர்களைச் சொல்லி அவர்கள் திரும்பச் சொல்லுவதைக் கேட்டுப் பரவசப்பட்டுக்கொண்டார்கள். கூண்டுக்குள் இருந்த மிருகங்களையும் வேடிக்கை பார்த்த மனிதமுகங்களையும் முழுவதுமாகப் பார்க்கவே இரண்டுமணி நேரத்திற்கு மேல் பிடித்தது.
உயிரியல் பூங்கா முடிவுபெறும் இடத்தில் தொடங்குகிறது பாரம்பரிய அருங்காட்சியகம். (மியூசியம்) கொச்சின் மகாராஜாவின் அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள்.
திர்சூர் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் கட்டிடக்கலைக்குப் பிரசித்திபெற்ற இடம் என்பது அங்கு செல்லும் வரை எனக்குத் தெரியாது. எதுவும் தெரியாமல் இருப்பதும் ஒருவிதத்தில் நல்லதுதான். முதன்முறை காணும்போது, நமது வியப்பும் அதைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் விரிவடைந்துகொண்டே செல்கிறது.
ஒரு அருங்காட்சியகம் என்னைப் போன்ற சாமானியனின் மனதில் என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? என்ற இருமாப்பும், அலட்சியமும் ஒருகாலத்தில் எனக்குள்ளும் இருந்ததென்னவோ உண்மை. ஆனால், அருங்காட்சியகத்தில் நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒருகாலத்தில், ஒரு சமூகமே பயன்படுத்திருக்கிறது என்பதை எப்போது உணர்கிறோமோ அப்போதுதான் ஒரு அருங்காட்சியகத்தோடு ஒருவித நெருக்கம் உண்டாகும்.
மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பலபொருட்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கும், பாதுகாப்பிற்கும், சமூக அந்தஸ்திற்கும், அதிகாரத்திற்கும் பயன்படுத்தப்பட்ட ஒன்று காலமாறுதலால் பழையது என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத்தோன்றலாம்..
உண்மையில் பலங்காலப் பொருட்களில் சில மட்டுமே நாம் காண்பதற்குக் கிடைத்திருக்கின்றன. எத்தனையோ பொருட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள்ளே புதைந்துகொண்டிருக்கின்றன.
தற்போது மிகஎளிதாகக் கிடைக்கும் எந்தவித நவீனகருவிகளும், தொழில்நுட்பமும் இல்லாத ஒரு காலத்தில் அவர்கள் கையாண்ட நுட்பமான கலைத்திறன், பண்பாடு, பொழுதுப்போக்கு ஆகிய அனைத்து அந்தச்சூழலில் இருந்துகொண்டு ஒவ்வொரு பொருட்களையும் அணுகவேண்டும் என்ற அறிவைத் தந்தது அருங்காட்சியகங்கள்தான்.
வன்மம் தீர்க்கச் சத்தமிட்ட போர்வாள்கள், எத்தனையோ அப்பாவிகளின் ரத்தம் பார்த்த போர்க்கருவிகள், சுயநலம்கொண்டு தங்களைப் பாதுகாக்க அணிந்துகொண்ட இரும்புக்கவசங்கள், அதிகாரத்தையும் அந்தஸ்த்தையும் ஒருசேர காட்டிக்கொள்ள அணிந்துகொண்ட உடைகள் தாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பதிவு செய்துவைத்த கல்வெட்டுக்கள் வேட்டையாடிப் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் மாதிரிகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், இலைகள், நார்கள், சாமானியர்கள் சமையல் செய்யப்பயன்படுத்திய பாத்திரங்கள் என ஒரே இடத்தில் நேர்த்தியாக அணிவகுத்திருந்ததைப் பார்க்கும்போது ஒரு சரித்திர நாவலை ஆளில்லாத இடத்தில் அமர்ந்துகொண்டு ஆழ்ந்து வாசிப்பதற்குச் சமம். அவற்றை வார்த்தைகளால் வர்ணித்துவிடமுடியாது.
மகாராஜா பயன்படுத்திய குதிரைவண்டி, பலவகையான சிலைகள், பலதரப்பட்ட புராதான விளக்குகள், கற்சிற்பங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் பாத்திரங்கள், செம்பு மற்றும் வெண்கலப் பாத்திரங்கள், பணம் பாதுகாக்கும் பண்டாரப் பெட்டி, என எத்தனையோ அற்புதமான பொருட்களை இன்னும் பராமரித்து வருவதற்காவே அவர்களுக்கு மிகப் பெரிய நன்றியையும் வணக்கத்தையும் செலுத்தலாம்.
நல்ல பசி, என்பதால் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் உணவகத்திற்குச் சென்றபோது கொட்டை அரிசிச் சோறு எந்தக் குழம்பிற்கும் ஒட்டாமல் விரைத்துகொண்டு என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. ஒவ்வொரு கவளத்தையும் மென்று தின்பதே வாய்க்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிபோல் தோன்றியது. புதிதாக உண்ணும் உணவு வயிற்றைப் பதம்பார்த்துவிடுமே என்று பயந்து பயந்துதான் உண்ணவேண்டியிருந்தது.
மியூசியத்திற்கு வெளியே வந்து சுற்றுச் சுவரை ஒட்டியே நடந்தால் அடுத்தவரும் கட்டிடம் ஒரு அரண்மனை என்று சொன்னார்கள். பிறகென்ன? மீண்டும் நடைதான். மத்தியான வெய்யில் உச்சந்தலையை பதம்பார்த்தது. பயங்கர சூடு. எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம். ரோட்டோரக்கடை இளநீரும், எலுமிச்சை ஜுசும் ஏதோ கொஞ்சம் தாகம் தணித்தது.
சக்தன் தம்புரான் கொட்டாரம் என்று அனைவராலும் அழைக்கப்படும் அரண்மனை இந்திய-டச்சு கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கொட்டாரம் என்றால் அரண்மனை என்று பொருள். சக்தன் தம்புரான் என்று அனைவராலும் அறியப்பட்ட கொச்சி மகாராஜா ஸ்ரீ ராமவர்ம ராஜாவின் அரண்மனை இன்றளவும் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது. உயரமான கூறை, தடிமனான சுவர்கள் திர்சூரின் இதயத்தை அலங்கரிக்கும் இந்த அரண்மனை தற்போது கேரள தொல்பொருள் துறையினால் அற்புதமாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது.
இது தற்போது தொல்பொருள் சுவரோவியக் கலை அருங்காட்சியகமாகச் செயல்பட்டுவருகிறது. அரண்மனையின் உள்ளே நுழையும்போதே நமக்குள்ளே ஒரு கம்பீரமாய் ஒரு ராஜநடை போடவேண்டும் என்ற உணர்வு தன்னுள்ளே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உயிரியல் பூங்காவிற்கும் மியூசியத்திற்கும் மக்கள் கொடுத்த முக்கியத்துவம் இங்கே இல்லை. தனியொருவனாக அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றிப் பார்ப்பது அலாதியான இன்பம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எந்த அவசரமும் இல்லை. அரண்மனையில் பார்க்கும் இடமெல்லாம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன்கூடிய மரப்பலகைகள். மரப்படிக்கட்டுகள். மரத்தால் ஆன கைப்பிடிகள்.
முதல்மாடியில் முழுக்க முழுக்க ஓவியங்கள். மியூரல் பெயிண்டிங்ஸ் (சுவர் சித்திரம்) என்றார்கள். ஓவியத்தில் எனக்கு அத்தனை ஞானம் இல்லையென்றாலும் ஆழ்ந்து ரசிக்குமளவிற்கு அறிவு இருந்தது. பீகாரில் பிரசித்திபெற்ற மதுபானி-ஓவியக்கலையை பல ஓவியங்கள் நினைவூட்டியது.
கீழ் தளத்தில் பழங்கால கோவில்களின் மாதிரிகள், நினைவுச் சின்னங்கள், ஓலைச்சுவடிகள், மண்பானைகள், முதுமக்கள்தாழி, சிந்து – ஹரப்பா நாகரீத்தைச் சேர்ந்தபொருட்கள், அவர்கள் பயன்படுத்திய அடுக்களைப் பொருட்கள். இலையால் செய்யப்பட்ட பீப்பீக்கள். (ஊதிகள்). இன்னும் ஏராளமான பொருட்கள் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் மேலெழும்பிக்கொண்டே இருந்தது. நேரம்தான் போதவில்லை. ஒரே நாளில் இத்தனையும் சாத்தியமா என்ற பிரம்மிப்பு எழுந்தாலும் எதுவும் சாத்தியம்தான் என்பதை இன்றைய பகல்பொழுது சுட்டிக்காட்டியது.
வரவேற்பறையில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அத்தனையும் கேரள தொல்லியல் துறையால் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள். அதிகளவில் மலையாளத்திலேயே இருந்தன. சில ஆங்கிலத்தில் இருந்தன. ”பத்மநாபபுரம் அரண்மனை” என்ற புத்தகம் ஒன்றே ஒன்று மட்டும் தமிழில் இருக்கவே அதை விலைகொடுத்து வாங்கிக்கொண்டேன்.
ஆனால், திர்சூர் அரண்மனையைப் பற்றிய தகவல்கள் தாங்கிய புத்தகம் எதுவும் தமிழில் இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். கேரள தொல்லியல் துறை கொஞ்சம் மெனக்கெட்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது. இதுபற்றி தொல்லியல் துறையிடம் முறையிடவேண்டும் என்பதற்காக இ-மெயில் ஐடியைப் பெற்றுக்கொண்டேன்.
அரண்மனையில் உட்புறச் சுற்றுச்சுவர் முழுவதிலும் ஐம்பது மியூரல் பெயிண்டிங்ஸை சுற்றிப்பார்க்க முடிந்தது வரப்பிரசாதம். ஆள் அரவமில்லாத அமைதி மேலும் மேலும் ஓவியங்களை ரசிக்கத் தோதாக இருந்தது. எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தது போதும் என்ற எண்ணம் தோன்றியபோது வெளியே வந்துவிட்டேன். இன்னும் சூரியன் பிரகாசமாகவே சுட்டெரித்துக்கொண்டிருந்தான். என்மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருப்பது போன்றதொரு பிரம்மை.
மீண்டும் நடை. ரோடெங்கும் மனிதர்கள். பெரியவர்களின் கரங்களைப் பற்றியபடி குழந்தைகள். இடதுபுறம் திரும்பி வலதுபுறம் திரும்பி என்று கேட்டுக்கேட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தாகிவிட்டது. மிகத்தூய்மையான கட்டணமில்லா வெஸ்டர்ன் கழிப்பறைகள். எல்லா பைப்புகளிலும் தண்ணீர் வந்தது. கூடவே பக்கெட்டும் மக்கும் இருந்தது உடையாமல் ஒழுகாமல் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
பள்ளி, கல்லூரிகள் விட்டுவிட்டார்கள் போலும். பார்க்கும் இடம்தோறும் சீருடையில் வளர்ந்த மாணவக்குழந்தைகள். பேருந்திற்காகக் கொத்துக் கொத்தாய் காத்திருந்தார்கள். கூட்டம்கூட்டமாகப் பள்ளிச் சிறுமிகள் கலகலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
இன்றையை வளர்ந்த குழந்தைகளுக்கு ஏன்தான் தங்கள் சிகையலங்காரத்தின்மேல் இத்தனை ஈர்ப்பு என்று தெரியவில்லை. பள்ளிசெல்லும் வளர்ந்த ஆண்குழந்தைகள் ஒருபக்க முடியை சுத்தமாக வழித்துவிட்டு மறுபக்கம் விரித்துபோட்ட சடைபோல் வளர்த்தியிருக்கிறார்கள். அவ்வப்போது தலையை சிலுப்பிக்கொள்வதும் கோதிக்கொள்வதும் பார்க்க ரசிக்கும்படிதான் இருக்கிறது. பெண்கள் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் முன்னுச்சியில் மேடிட்டுக் கொண்டை வைத்தபடி சிகையலங்காரம் செய்திருந்தார்கள்.
கொரானா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பள்ளிக்கல்லூரி மாணவமாணவியர்களின் கைகளில் மொபைல் ஃபோன் அதிகம் புழங்குவதாக எனக்குப்பட்டது.
பொதுவெளியில் வளர்ந்த(?) பெண்குழந்தைகள் சக ஆண் மாணவர்களோடு கைகளைப் புதைத்துக்கொண்டு அடிக்கடி முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டும், உதடுகளைக் குவித்தபடியும் கைவிரல்கள் இரண்டை காட்டியபடியும் குரூப்ஃபி எடுத்தவண்ணமே இருந்தார்கள். (தனியாக எடுத்தால்தானே செல்ஃபி?, குரூப்பாக எடுத்தால் அது குரூப்ஃபி என்றுதானே சொல்லவேண்டும்)
எனக்கு சற்று பொறாமையாகக்கூட இருந்தது என் காலத்தில் இப்படியொரு சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொள்வதைத் தவிற வேறென்ன செய்யமுடியும்? நான் செல்லவேண்டிய பேருந்தில் ஏறிக்கொண்டேன். மீண்டும் சாலையோர கட்டிடங்களையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்தபடியே பயணம்.
திரும்பி வரும்போதுதான் கவனித்தேன், பாரதப்புழ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 117 வருடப் பழமையான கொச்சின் பாலம் 2009ல் சேதமாகி நட்டாற்றில் தொங்கிக்கொண்டிருந்ததை. இந்தப்பாலம்தான் சொர்ணூரிலிருந்து கொச்சிக்கு ஏராளமான ரயில் பயணிகளை கடந்துசெல்ல பயன்பட்டிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலம் நெடுநாட்களாக அகற்றப்படாமலேயே இருந்தது. ஒருவேளை என்னைப் போன்ற வெளியூர் பயணிகளுக்கு அதன் கட்டிடகலையின் மதிப்பையும், வரலாற்றுச் சிறப்பையும் சேர்த்து ஏதேனும் சேதிசொல்வதற்காகக் கூட இன்னும் அகற்றப்படாமல் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
ரயிலுக்கு இன்னும் நான்கரை மணிநேரம் இருக்கிறது. ஜங்சனுக்கு எதிரிலேயே மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலின் (லாலேட்டன் என்கிறார்கள் அந்தவூர்காரர்கள்). நவீன சினிமா தியேட்டர் இருப்பதை காலையில் கண்டபோது எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ஆனால், மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் (மம்முக்கா என்கிறார்கள் அதே ஊர்க்காரகள்) பீஸ்ம பர்வம் என்றொரு புதிய சினிமா ரிலீசாக மூன்றாவது வாரம் என்றார்கள்.
மனதிற்குள் நப்பாசை விருட்டென்று தலையைத் தூக்கி நமைச்சலைக் கொடுத்தது. சகல நிகழ்வுகளும் கூடிவரும்போது தவறவிடக் கூடாதல்லவா! இதுவரை எத்தனையோ ஊர்களுக்குச் சென்று பகல்பொழுதையும் இரவுப்பொழுதையும் வெட்டியாகக் கழித்திருந்தபோதும் சினிமாவிற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை எழுந்ததும் இல்லை, அதற்கான வாய்ப்பும் கிட்டியதில்லை. ஆனால் கடவுளின் தேசத்தில் கிட்டியிருக்கிறது.
மலையாள சினிமாக்கள் நான் அறிந்தவரை, கதை, கதைக்களம், இசை, நடிப்பு, சண்டைக்காட்சி என்று எப்போதும் ஒருவித இயல்புத்தன்மையோடு இருக்கும் என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்தப்படம். அப்படியில்லை என்பது என்னளவில் ஏமாற்றம்தான்.
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்ற பழமொழிக்கேற்ப வயதான மம்முட்டியின் கணீர்குரல் படம் முழுக்க எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை போடும்போதெல்லாம அவரது வெளிறிப்போன ஒல்லியான கால்கள் நம்மை நெளியவைக்கிறது.
கூட்டுக்குடும்பம். ஏராளமான நடிகர் நடிகைகள். சதித்திட்டம் தீட்டும் குடும்ப உறுப்பினர்கள், பழிவாங்கப் புறப்பட்டுவரும் இளவயது வில்லன் படுத்துக்கொண்டே திட்டம்போட்டு எதிரிகளைப் பந்தாடும் மம்முட்டி என்று வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று பார்க்கும்போதே புரிந்துவிடுகிறது. ஆண்குரலிலும் இல்லாமல் பெண்குரலிலும் இல்லாமல் ஐஸ் வாட்டரைக் குடித்துவிட்டு காதருகே கிசுகிசுக்கும் பாடல்கள் இப்போதெல்லாம் ட்ரெண்ட் போலும். நமக்கெதற்கு வம்பு என்று நம் பங்கிற்குக் கேட்டுவிட்டு ஆஹா அருமை என்று சொல்லிவிட வேண்டியதுதான்.
வில்லனையும் கதாநாயகனையும் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் எதற்காக அப்படியொரு காதைப் பதம்பார்க்கும் பின்னணி இசை என்று யாராவது சொன்னால் பரவாயில்லை. அடிதடி, ரத்தம், கொலை என்று தொடர்ச்சியாய் நடக்கும்போது காவல்துறை, சட்டம், ஒழுங்கெல்லாம் எங்கே ஓடி ஒளிந்துகொண்டிருக்கின்றன என்று தேடவேண்டியிருக்கிறது.
பழமைவேண்டாம் என்பவர்களுக்குப் புதுமையாவது சரியாகப் பொருந்திவர வேண்டுமல்லவா? கதாநாயகன் கையைத் தூக்கினாலே எதிராளி பறந்துபோய் விழுவதெல்லாம், தென்னிந்திய சினிமாவின் சாபக்கேட்டில் சேர்த்தி.
பழி, பழிக்குப் பழி, ரத்தம், பெண்களின் கண்ணீர், விரோதம், குரோதம், எல்லாமே சினிமாக் கதைகளில் பார்த்துப் பார்த்து அயர்ச்சியைத் தருகிறது என்றபோதும் எதுவும் மாறவில்லை. கடவுளின் தேசத்துச் சினிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது என்பதற்கு இப்படம் ஒரு சிறு பொறி அவ்வளவே.
எல்லாம் முடிந்து தியேட்டரைவிட்டு வெளியே வந்தபோது என்மேல் கோபம்கொண்ட சூரியன் சொல்லிக்கொள்ளாமலே சென்றிருந்தான். இரவுநேரக்கடைகளில் கூட்டம் நம்மூரைப்போலத்தான். வீடுகளில் சமையல் செய்வதை நிறுத்திக்கொண்டார்கள் போலும். அகண்ட தோசைக்கல்லில் மோதும் தோசைக்கரண்டியின் தாளலயம் தப்பாமல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இரவு பத்துமணிக்கு நான் செல்லவேண்டிய ரயில் ஐந்தாவது ப்ளாட்பாரத்தை வந்தடையவே நான் கடவுளின் தேசத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். என் நினைவுகளில் கடவுளின் தேசத்தைப் பற்றிய நினைவலைகள் ஏராளமாக இருப்பதைப்போல என்னைப் பற்றிய நினைவுப் பதிவுகள் யார் மனதிலேனும் இருக்கக்கூடும்.