Azhagu ShortStory By Kumaraguru அழகு சிறுகதை - குமரகுரு

அழகு சிறுகதை – குமரகுரு
சிற்பங்களின் நடுவே உறங்கிய சிற்பியின் கனவில் வந்த அழகான உருவங்கள், சிற்பியின் உளியின் மூலம் தன்னைத்தாறே சிலைகளாய் வடித்து கொண்டன. அப்பேற்பட்ட சிற்பியின் கண்களில் நெடுநாட்களாக உறக்கமில்லை.

அவர் ஒரு போதும் இவ்வாறு இருந்ததும் இல்லை. இன்றொரு கனவு, நாளையொரு கனவு, நாளை மறுநாளென்றொரு கனவைக் கண்டு கொண்டேயிருந்தார்… கனவு காணாத நாட்களில் செய்த சிற்பங்களை அவர் மனம் ஏற்பதேயில்லை!! ஏதோவொரு குறையிருப்பதாகவே அன்றெல்லாம் மனம் பிறழ்ந்து திரியத் துவங்கினார்.

அப்போது, சிலைகளின் நடுவில் படுக்கச் சென்றார், உறங்கிப் பல நாட்களானதால் சிவந்திருந்த கண்களைப் பற்றி காலையிலேயே நதி கூறி அழுதிருந்தது நினைவுக்கு வந்தது. இறுகக் கண்களை மூடியபடி என்னவெல்லாமோ நினைத்துப் பார்த்தார்!!

தான் உளி பிடிக்கத் தொடங்கிய ஏழு வயதிலிருந்து இன்று வரை இல்லாத எந்தக் குறையும் இப்போதிந்த அனுபவம் மிக்க ஐம்பத்தெட்டாவது வயதில் ஏன் வந்தது என்று ஒரே குழப்பமாக இருந்தது அவருக்கு.

சின்ன வயதில் அவர் சிலை வடிப்பதற்கென துண்டு துண்டாய் உடைந்து போன, பயன்படாத சின்னஞ்சிறு கற்களை அவருடைய தந்தை அவரிடம் கொடுத்து, “எதாவது செய்?” என்று கூறிவிட்டுச் சிலை செய்யச் சென்றிடுவார். மாலை வரை எவ்வளவோ முயன்றும் முழுதாக ஒரு சிலை கூட செய்ய முடியாமல் ‘அப்படி இப்படி’ கொத்தி எந்த உருவமும் இல்லாததொரு கல்லாகவேத் தான் இருக்கும்.

இப்படி செய்து கொண்டே இருந்த ஓரு நாளில், சிலை செய்யத் தொடங்கி, எப்படியெப்படியோ செதுக்கி ஒரு உருவம் செதுக்கியிருந்தார்.

அன்று மாலை அவரைக் காண வந்த தந்தை, “அருமையாக வடித்திருக்கிறாய் மகனே!!” என்று கண் கலங்கி வாரியணைத்து முத்தமிட்டு, “என் கலை உன் கைகளின் மூலம் தொடர்ந்தினி வாழும்” என்று கூறியபடி அவரின் கண்களையே பார்த்தார். அப்போது, சிற்பிக்குள் மாபெரும் குழப்பம்-அந்த சிலையில் அப்படி அவர் என்ன கண்டார் என?.

நாளாக நாளாக அவர் வெகு நேர்த்தியான அழகான சிற்பங்களை வடித்துப் பழகினார். ஆண்டாண்டுகளாக அவரின் சொல் பேச்சையெல்லாம் கேட்ட விரல்கள் வடித்த சிலைகளின் மதிப்பு உயர்நத்படியே இருந்தது. கலைக்குத் தன் வாழ்வை அர்பணித்து கொண்டவர், திருமணம் செய்து கொள்ளாமல், தன் சிறந்த சீடன் ஒருவனை தனது வாரிசாக்கி கொண்டார். அவருக்குப் பின் அவனையே சிலைகள் செய்யும்படி கூறியுமிருந்தார்.

சிற்பி கற்றுத் தந்த நுட்பங்கள் அனைத்தையும் கற்று கை தேர்ந்த சிற்பியாகிவிட்ட சீடனும், தலைக்கனமற்ற நல்ல மனிதனாகவும் இருந்தான். பத்து பதினைந்து நாட்களாக குரு எதையோ பறிகொடுத்ததைப் போல் இருந்ததைப் பார்த்து சகியாதவன், ‘இன்று அவரிடம் பேசி விட வேண்டும்’ என்று முடிவெடுத்திருந்தான்.

ஆச்சர்யம் என்னவென்றால், அவன் உள்ளே நுழைந்ததும் சிற்பி அவனை அழைத்தார், ” சிஷ்யா!! பல வருடங்கள், பல சிற்பங்களை எப்படியெல்லாம் செதுக்கியிருப்பேன். கனவுகளில் வரும் உருவங்களையெல்லாம் சிலைகளாக்கிப் படைத்துக் கொண்டேயிருந்தேன். அவற்றை செய்து முடித்து அந்த நேர்த்தியைக் கண்டு வியந்து, அச்சிலைகளின் அழகில் வியந்து போய் எத்தனையோ நாள் ஆனந்தத்தின் கடலில் மிதந்திருக்கிறேன். ஆனால், கொஞ்ச நாட்களாக எனக்கு உறக்கம் வருவதில்லை.

ஏனென்று நானும் எவ்வளவோ யோசித்து விட்டேன். ஆனால், பதிலில்லை. உடல் உபாதைகள் ஒன்றுமில்லை. கனவுகள் வருவதை உறக்கமின்மை தடுத்து விட்டதால் எனக்கு சிலை வடிக்கும் எண்ணமே போய்விட்டது. எனக்குள்ளிருந்த நானும் என் கலையும் தோற்றுவிட்டதாக என் மனம் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது!” என்று அவன் கேட்கும் முன்னரே அவனிடம் பகிர்ந்துவிட்டார்.

சிறிது நேரம் யோசித்த சிஷ்யன், “ஐயா! நானே தங்களிடம் கேட்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தாங்களே இந்த மனவேதனை பற்றி என்னிடம் பகிர்ந்ததற்கு நன்றி! தங்களின் தந்தை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஊருக்குச் சென்று அவரிடம் இதைப் பற்றி கேட்டு வாருங்களேன், இதற்கான விடை அவரின் அனுபவங்களிலிருந்து கிடைக்கலாமே” என்றான்.

“குழப்பத்தில் எதுவுமே தோன்றவில்லை. அதுவும் சரிதான் அவரிடம் சென்று பேசி வருகிறேன்.” என்று சிற்பி கிளம்பினார்.

ஊருக்குச் செல்லும் வழியெல்லாம் மழைகாலத்து சாரலும் சில்லென்று காலில் ஈரத்தின் வலியேற்றும் புற்களும் மண்டி கிடந்தன. வீட்டை அடைந்ததும் அப்பாவிடம் சென்று அமர்ந்தவர், “தந்தையே! எனக்கு ஒரு பிரச்சனை அதற்கான தீர்வு தங்களிடம் இருக்குமோ என்று எண்ணியே இங்கு வந்தேன்?” என்றார்.

“சொல்லுப்பா என்ன ஆச்சு?” என்ற தந்தையிடம் பிரச்சனையைப் பற்றி விளக்கமாக கூறினார்.

கேட்டு முடித்த தந்தை, “மகனே! பூசையறையின் அலமாரியில் ஒரு மரப் பெட்டி இருக்கும் அதை எடுத்து வா!” என்றார். விறுவிறுவென எழுந்து சென்று அந்த பெட்டியைக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தார் சிற்பி.

அதைத் திருப்பி சிற்பியிடமே கொடுத்த தந்தை, “அதை நீயே திறந்து பார்!” என்றார்.

மரப்பெட்டியை மெல்ல உலுக்கித் தூசுத் தட்டியபின், தாழைத் திறந்தவருக்குக் காத்திருந்தது மிகப் பெரிய ஆச்சர்யம்,

“அப்பா!! இது நான் முதல் முதலில் செய்த உருவமல்லவா? இன்று வரை சொல்லாத உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அன்று நான் வேறொரு வடிவைத்தான் செய்ய நினைத்தேன்…” என்ற சிற்பியை இடைமறித்து பேசத் துவங்கினார் தந்தை “நீ அன்று எதை நினைத்து அந்த கல்லின் மீது முதல் செதுக்கலைத் துவங்கினாய் என்று எனக்குத் தெரியாது! நீ இன்று வரை ஐம்பது வருடங்களுக்கும் மேலாக சிலை செய்கிறாய் அல்லவா? இத்தனை ஆண்டுகளாய் நீ உன் கனவில் கண்டதையோ அல்லது கடவுளுருவங்களையோ அல்லது எதாவதொரு அழகிய உருவங்களையோதான் செதுக்கியிருப்பாய். ஆனால், இத்தனை வருட அனுபவத்தை சுமந்தபடி ‘அந்த சிலையை’ நீ வடிக்காத சிலையென்று நினைத்து கொண்டு இப்போது இன்னொரு முறை பார்.

உற்றுப் பார்!! அந்தச் சிலையில் இருப்பது அழகு இல்லை, உருவமில்லை உனது கற்பனையும் கலையும் மட்டுமே!! அழகை எப்போதும் சுமந்து கொண்டிருக்க முடியாது மகனே!! அழகைத் துறக்கும் காலம் வந்துவிட்டது. எல்லாமே அழகாயிருக்க வேண்டும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு மெனக்கெடுகிறோம்?

அதிலெல்லாம் அழகேயில்லை! அழகு என்பதொரு கண்ணோட்டம். அழகு என்பது நமக்குப் பிடித்தவற்றைப் பற்றிய குறிப்பை வைத்துத் தொடர்ந்து அதையே பார்த்துப் பழகுவது. இதுதான் அழகென்று மனதிலேற்றிவிட்டு அதையே தேடியலைவது, ஒரே வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு வெவ்வேறு முகங்களைப் பார்க்காமல், வெவ்வேறு வாழ்வுகளை வாழ்ந்து பார்க்காமல், இதுதான் உலகமென்றும் இதுதான் வாழ்வென்றும் நம்பி நம்பி, வேறெதையுமே அனுபவிக்காத வாழ்வை வாழ்ந்து மடிவது.

எப்படி ஒரு மனிதனிடம் குறையுமுண்டு நிறையுமுண்டோ, அதே போல் அழகாய் இருப்பதாக நாம் நினைக்கும் அனைத்தினுள்ளும் ஒரு கறையும் இருக்கும்! நீர் தெளிவாக இருப்பதும் கலங்கலுக்கு அப்புறம்தான். இதோ நீ வடித்த உன் முதல் உருவத்தின் சிலை இருக்கிறதே, இது நாள் வரை என்னால் இது போல் ஒரு சிலையைச் செய்யவே முடியவில்லை!! என் மனம் போன போக்கில் எதோ ஒரு சிலையை வடிக்க எனக்கு வாய்ப்பே கிட்டியதில்லை!! எப்போதும் அழகான ஏற்கனவே அழகென்று எதையெல்லாம் சொல்கிறார்களோ அதைப் போன்ற சிலைகளை மட்டுமே என் வாழ்நாள் முழுவதும் வடித்திருக்கிறேன்.

ஆனால், உன் முதல் சிலையே உனக்கு அந்த குறிப்புகளிலெல்லாமிருந்து விடுதலை கொடுத்துவிட்டது. ஆனாலும், நீயும் என் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறாய்… அதிலிருந்து விலகு!! கனவுகள் வேண்டாம், அழகென்ற மாயையைப் பின் தொடர்ந்து நேர்த்தியெனும் தெளிவை அடைந்துவிடாதே. நேற்றை உதறிவிட்டு இன்றைப் பிடி! உன் மனம் போல் சிலை வடி!! இப்போது உனதிந்த சிலையைப் பார், நான் கூறியது விளங்கும்!” என்று தந்தை பேசி முடித்த போது சிலையைப் பார்த்து கொண்டிருந்த சிற்பியின் கண்கள் கலங்கி, உறங்காநாட்களின் சிவப்பை வெளியேற்றத் துவங்கியிருந்தது…