அழகு சிறுகதை – குமரகுரு
சதை மேல் கை வைத்தால் ஹார்மோன் துடிப்பதைப் போலொரு மாயம் இதுவரை மனிதனால் செய்யவே முடியவில்லை.
மனித உடலில் எங்கே அடித்தாலும் கண் கலங்குவதைப் போன்ற ஒன்றை இதுவரை எம்மனிதனாலும் உருவாக்க இயலவில்லை.
யாரோ எதற்காகவோ சொல்லும் நகைச்சுவையைக் கேட்டதும் வரும் சிரிப்பைப் போன்றொரு நிகழ்வை வடிவமைக்கவே முடியவில்லை!!
எதற்காக அழுகை? எதற்காக கோபம்? எதற்காக சிரிப்பு? எதற்காக உணர்வுகள்? யார் இப்படி மனிதனை வடிவமைத்தார்கள்? மற்றொவ்வொரு உயிரும் பார்த்து அஞ்சும்படியான அளவுக்கான அறிவைத் தந்தது யார்? இயற்கையை மீறி, இயற்கையை வளைத்து, இயற்கையை வெல்ல நினைக்கும் கொடுமையான புத்தியைத் தந்தது யார்?
நரை முடியில் கறுப்பு மையைத் தடவியபடி விசிலடித்து கொண்டிருக்கிற அங்கிளிடம் கண்ணாடி பொய் சொல்லி கொண்டிருந்தது.
அந்நேரம் அவருக்கு வந்த அழைப்பில், அவரின் நெருங்கிய நண்பர் அறிவு முக்கியமான சேதியொன்றைப் பகிர காத்திருந்தார். செல்பேசியின் ஒலியை விசிலடித்தபடி கேட்டு கொண்டே எடுத்தவரின் கை நழுவி, செல்பேசி வாஷ் பேசினுக்குள் விழவே, தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்நேரம் பார்த்து திறந்திருந்த வாஷ் பேசின் குழாயிலிருந்து பொழிந்தபடியிருந்த நீர் செல்பேசியினுள் சென்று அதை முடக்கியது.
நண்பர் இப்போது அங்கிளின் மனைவியின் எண்ணுக்குத் தொடர்பு கொள்கிறார். அவர் செல்பேசியை எடுத்துக் கொண்டு சென்று “ஏங்க உங்க நண்பர் அறிவு ஃபோன் பண்ணியிருக்கார், உங்க ஃபோனுக்கு அடித்தாராம் எதோ அவசரமா பேசணுமாம் வெளில வந்து பேசுறீங்களா?” என்றார்.
நனைந்து போன செல்பேசியைத் தட்டியெழுப்ப முயன்று கொண்டிருந்த அங்கிள் இப்போது ஃபோனை அப்படியே வைத்துவிட்டு பாதி மையடித்தத் தலையுடன் டவலைக் கட்டி கொண்டு வெளியே வருகிறார். முகமெல்லாம் ஆங்காங்கேத் திப்பித் திப்பியாக மை அப்பிக் கொண்டிருக்க கைகளின் ஈரம் துடைத்தபடி அவரின் மனைவியிடமிருந்து செல்ஃபோனை வாங்குகிறார்.
“ரமேசு! புகழேந்திக்கு காலையில மேஜர் அட்டாக் வந்து மருத்துவமனைக்குக் கொண்டு போற வழியிலேயேத் தவறிட்டானாம் டா!! அவன் பையன் இப்போதான் ஃபோன் பண்ணி சொன்னான். உடனே ‘லைஃப்’ மருத்துவமனைக்கு வந்துடுறியா?” என்றார்.
புகழேந்திக்கு அறுபத்தி நான்கு வயது. அங்கிளும் அவரும், போனில் பேசிய அறிவு அங்கிளும் பால்ய சிநேகிதர்கள். சிறு வயதிலிருந்து பிரியாத நட்பு. ஒரே ஊர். ஊரிலேயே வேலை என்று எப்போதும் சந்தித்து கொள்ளும் வாய்ப்புப் படைத்த நண்பர்கள்.
அங்கிளுக்கு ஒரு நிமிடம் தலைச் சுற்றியது, “என்னங்க ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்ற மனைவியிடம் எதுவுமே சொல்ல முடியாமல். “நான் வந்திடுறேன் டா. நீ அங்கே போயிடு. நான் உன்னை அங்கே வந்து பார்க்கிறேன்” என்றவர், மனைவியிடம் “புகழ் நம்மையெல்லாம் விட்டுட்டு போயிட்டானாம் மா.” என்று உடைந்து அழத் துவங்கினார்.
அவரின் மனைவி அவரின் அருகில் வந்து, ” என்னங்க சொல்லுறீங்க? நேத்து மாலை கூட பார்க்ல பேசிட்டு வந்தோமே நல்லாதானே இருந்தார்?”
“ஆமாம்மா! மார்னிங் மேஜர் அட்டாக் வந்ததாம். ஹாஸ்பிடல் போற வழியிலையேத் தவறிட்டானாம். ‘லைஃப்’ ஹாஸ்பிடலுக்கு வர சொல்லி அறிவு சொல்லுறான். உடனே கிளம்பணும்.” என்றபடி தன்னிச்சையாக வெளியேறிய கண்ணீரைத் துடைத்தவரின் கைகளில் மை ஈசிக் கொண்டது.
“அப்படியா!! சரி உடனே கிளம்புங்க நானும் கிளம்பறேன். புஷ்பாவுக்கு ஆறுதல் சொல்ல, உங்க கூட வரேன்” என்றார் ஆன்டி.
“சரிம்மா! இதோ கிளம்பிடுறேன்” என்றபடி பாத்ரூமுக்குள் சென்ற அங்கிளின் முன் கண்ணாடி நின்று கொண்டு ‘மீதி மையை இப்போ அடித்தே ஆகனுமா?’ என்று கேட்டது. அங்கிளின் மனித மனம், கண்களைத் துடைத்தபடி மையை அடிக்க வழி நடத்தியது.
எப்படி இப்படியொரு மனம் சாத்தியம்?
யார் இப்படி நம்மை வடிவமைத்தது?
விசும்பியபடி மீதி மையைத் தலையில் பூசிக் கொண்டிருந்த அங்கிளின் விசில் சத்தம் கேட்காத பாத்ரூமின் குழாயிலிருந்து பக்கெட்டுக்குள் “களுக்! களுக்!” என சொட்டி கொண்டிருந்தது தண்ணீர்.