பாபர் மசூதி இடிப்பு Demolition of Babri Masjid

பாபர் மசூதி இடிப்பு – முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு… – சம்சுல் இஸ்லாம் | தமிழில்: தா.சந்திரகுரு

      தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக கிரிமினல் குற்றமிழைத்த ஹிந்துத்துவா குற்றவாளிகள் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறர்கள்!   சுமார் எண்பது சதவிகிதம் பேர் ஹிந்துக்களாக இருக்கின்ற 138 கோடி இந்தியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு, அமைதியான சூழலை…
Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுரு

நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் – தமிழில்: தா.சந்திரகுரு




காவல்துறைகூட சில சமயங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நேரடியாகச் செயல்படுகின்றது. கலவர நடவடிக்கைகளில் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்குப் பக்கபலமாக காவல்துறையும் இருக்கக்கூடும் என்பதை 2020ஆம் ஆண்டு நடந்த தில்லி கலவரம் காட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைமைதான் இருந்து வருகிறது. இப்போது ஒரு வகையான புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அரசின் ஆசீர்வாதம் மட்டுமல்லாது, அரசின் தீவிரப் பங்கேற்பையும் கொண்டுள்ளது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஹிந்து தேசியவாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி விளக்குவதற்காக இந்த வலையொலி நிகழ்வில் கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் இணைந்திருக்கிறார். இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியரான ஜாஃப்ரெலோட் இந்திய ஜனநாயகம் குறித்த முக்கியமான ஆய்வறிஞர்களில் ஒருவராக உள்ளார். ‘மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதம் மற்றும் இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சி’ என்ற புத்தகத்தை அவர் சமீபத்தில் எழுதியுள்ளார்.

ஹிந்துத்துவா / ஹிந்து தேசியவாதம் குறித்த விளக்கம், ஆர்எஸ்எஸ் பற்றிய சுருக்கமான விவரம், அயோத்தி கோவில் சர்ச்சை பற்றிய விவரங்கள், நரேந்திர மோடி எவ்வாறு ஆட்சிக்கு வந்தார் என்பது குறித்த விளக்கம், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் போன்றவை இந்த வலையொலி உரையாடலின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.

வலையொலி உரையாடலின் எழுத்தாக்கம்

போல்சனாரோ, ஆர்பன் அல்லது எர்டோகன் போன்ற மற்றுமொரு ஜனரஞ்சகத் தலைவராக நரேந்திர மோடியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் என்றாலும் அவரைப் பற்றி நம்மில் பலருக்கும் அதிகம் தெரிந்திருக்காது. மோடி என்பது பலருக்கும் ஜனரஞ்சகத்தின் சின்னம். அதுபோன்ற பொதுவான எண்ணங்களுக்கு உரிய சூழலையும், பொருளையும் இன்றைக்கு சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

உலகில் உள்ள மற்ற ஜனநாயக நாடுகளைப் போல இந்தியா இருக்கவில்லை. அது தனக்கென்று தனித்துவமான கலாச்சாரம், மரபுகள் மற்றும் சவால்களுடன் மிகப் பெரியதாக, வேறுபட்டு இருக்கிறது. பாஜக என்ற ஹிந்து தேசியவாத அரசியல் கட்சிக்கு நரேந்திர மோடி தலைமை தாங்கி வருகிறார். இனரீதியான ஜனநாயகம் என்று கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் விவரிக்கின்ற வகையிலே பாஜகவினர் இந்தியாவை மறுவடிவமைத்துள்ளனர்.

இந்திய ஜனநாயகம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள முன்னணி அறிஞர்களில் ஒருவரான கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் சைன்சஸ்போ நிறுவனத்தில் ஆய்வு இயக்குநராகவும், கிங்ஸ் கல்லூரியில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராகவும் உள்ளார். ‘மோடி இந்தியா: ஹிந்து தேசியவாதமும், இனரீதியான ஜனநாயகத்தின் எழுச்சியும்’ என்பது சமீபத்தில் அவர் எழுதி வெளியாகியுள்ள புத்தகமாகும்.

ஹிந்து தேசியவாதம், நரேந்திர மோடியின் எழுச்சி பற்றி, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய காரணங்களை கிறிஸ்டாஃப் இங்கே விவரிப்பார். ஏராளமான விஷயங்களைத் தொடுகின்ற போதிலும் நாங்கள் தவறிழைக்கப் போவதில்லை. இன்றைய உரையாடலின் நாயகனாக மோடி இருக்கிறார். மோடி இந்தியாவைப் பற்றி விவாதிக்கவே நாங்கள் வந்துள்ளோம். கிறிஸ்டாஃப் ‘ஒரு “கறுப்பு ஹீரோ” இன்னும் ஹீரோதான்’ என்று எழுதியிருப்பது என்னவென்று பாலிவுட் திரைப்பட பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்திய அரசியல் மற்றும் ஹிந்து தேசியம் என்ற தலைப்பு மிகப் பரந்த அளவிலானது. எனவே இந்த உரையாடலில் உங்களுடைய கருத்துகளை இணைப்பதற்குத் தயங்க வேண்டாம். உரையாடலின் முழு எழுத்தாக்கம் டெமாக்ரசி பாரடாக்ஸ் இணையதளத்தில் (democracyparadox.com) இருக்கிறது. அங்கே சென்று உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். Twitter @DemParadoxஇல் என்னைக் குறிப்பிட்டு பதிவு செய்யலாம். அல்லது [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இப்போது… கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்டுடனான உரையாடல் ஆரம்பிக்கிறது…Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருகிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட்! டெமாக்ரசி பாரடாக்சிற்கு (Democracy Paradox) உங்களை வரவேற்கிறோம்.

என்னை அழைத்தமைக்கு நன்றி.

கிறிஸ்டாஃப், உங்களுடைய சமீபத்திய புத்தகம் ‘மோடி இந்தியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியதாக மட்டுமே இல்லாமல், அது ஹிந்து தேசியவாதம் குறித்ததாகவும் இருக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால், ஹிந்து தேசியவாதம் அனைவரும் நன்கு அறிந்திருக்கும் ஒரு கருத்து. சற்றே குழப்பமானது என்று பலரும் உண்மையில் நம்பக்கூடிய ஹிந்து தேசியவாதம்m என்பது ஹிந்து மதம், தேசியவாதம் என்ற இரண்டு கருத்துகளை ஒருங்கிணைக்கிறது. எனவே அந்தக் கருத்தை ஆராய விரும்புகிறேன். ‘மற்றவர்களின் இழப்பில் ஹிந்து மதத்தின் சில அம்சங்களே ஹிந்துத்துவாவின் விழுமியங்கள்’ என்று நீங்கள் எழுதிய அழகான மேற்கோள் ஒன்று உள்ளது. ஹிந்து மதமும், தேசியவாதமும் ஒன்றாக இணையும் விதத்தை ஆரம்பத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்குகிறீர்கள். எனவே இன்றைக்கு இதிலிருந்து தொடங்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஹிந்துத்துவத்தின் எந்த அம்சங்களை ஹிந்து மதம் உயர்த்திப் பிடிக்கிறது, எந்த அம்சங்களை அது அடக்கி வைக்கிறது?Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஇது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில் ஹிந்து மதத்தை ஒரு நாகரிகம் என்ற வகையிலேயே நாம் காண வேண்டும். அது ஒரு மதத்தைக் காட்டிலும் மேலானதாக, முழு அளவிலான நாகரிகமாக அது இருக்கிறது. அந்த நாகரிகம் எந்த மரபுவழியையும் நம்பவில்லை என்றாலும் வலுவான, சரியான வழிபாட்டை நம்பியுள்ளது என்பது பாரம்பரியமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. சரியான வழிபாடு என்பது மிகவும் கடினமான, படிநிலை சமூக அமைப்பான சாதி அமைப்பிற்குள் பொதிந்துள்ளது. அது ஒரு பரிமாணம். ஹிந்து மதத்திற்கென்று புத்தகம், கோட்பாடு, மதகுருக்கள் இல்லை, அது மத சுதந்திரம் என்ற சிறந்த உணர்வுடன் உள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக இந்த மரபுவழியின்மை இருப்பது மற்றொரு பரிமாணமாகும். ஹிந்து மதத்தில் பலவிதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. மிகவும் ஆக்கப்பூர்வமானவர்களாக, கடவுளை அடைவதற்கான புதிய வழிகளைத் தொடர்ந்து கண்டறிந்தவர்களாக அதன் குருக்கள் இருந்தனர்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆன்மீகத்தைப் பொறுத்தவரை ஹிந்து மதம் அப்படித்தான் இருந்தது. அதைத்தான் ஹிந்துத்துவா அழிக்க முயன்றிருக்கிறது. இந்த ஆன்மீக பன்முகத்தன்மை உணர்வே ஹிந்துத்துவத்தின் எழுச்சியால் முதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை விளக்குகின்ற வகையில் ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். சூஃபிகள் மற்றும் இஸ்லாமியப் பிரமுகர்களை வழிபடுவதை ஹிந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கல்லறைகளுக்கு அதிக எண்ணிக்கையில் சென்று ஹிந்துக்கள் வழிபட்டு வந்தனர். இதைத்தான் நான் ‘தர்கா கலாச்சாரம்’ என்கிறேன். தர்கா என்பது சூஃபி துறவிகளின் சமாதிகளுக்கான பெயர். ஹிந்து சமூகத்தின் மீது பல்வேறு வழிகளில் தங்களுடைய செல்வாக்கைச் செலுத்தியுள்ள ஹிந்து தேசியவாதிகளோ இத்தகைய வழிபாட்டு முறைகள் இருக்கக் கூடாது என்று கருதுகின்றனர். ஹிந்து அடையாளம் என்பதை பெரும்பாலும் பிராமண வழிகளில் குறியீடாக்கியதுடன், ஹிந்து மதத்தின் பன்முகத்தன்மையைக் குறைத்திடவும் ஹிந்து தேசியவாதிகள் முனைந்துள்ளனர். ஹிந்து மதத்திற்கும் ஹிந்துத்துவாவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள விரும்பினால், அவை இவ்வாறான போக்குகளுக்குள்ளே பொதிந்திருப்பதை உங்களால் காண முடியும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆனால் இன்னும் தெளிவான வேறுபாடுகளும் உள்ளன. ஹிந்துத்துவா என்பது ஒரு சித்தாந்தம். அது கடந்த காலத்தில் அதிகம் அறியப்பட்டிராத ஹிந்து மதத்தின் பரிமாணத்தை வலியுறுத்துகின்ற இனரீதியான மத சித்தாந்தம். மக்களாக, சமூகமாக, அவர்கள் கூறுவதைப் போல வேத பிதாக்களின் வழித்தோன்றல்களாக ஹிந்துக்கள் இருக்கின்றனர். ஹிந்துக்கள் குறித்த இந்த வரையறை சியோனிசத்துடன் பலவிதத்திலும் தொடர்புகள் கொண்டுள்ளது. பல வழிகளில் நம்பிக்கையைக் காட்டிலும் இனரீதியான பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், யூத மதத்திற்கு சியோனிசம் என்றால் ஹிந்து மதத்திற்கு ஹிந்துத்துவம் என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். இவ்வாறான இனரீதியான குணாதிசயம் மற்றும் மொழி மூலம் வரையறுக்கப்படுகின்ற குடியுரிமை, தேசியம் போன்ற சிந்தனை இந்தியாவில் அடையாளம் குறித்த புதிய வரையறையாகி இருக்கிறது. அதுவும்கூட இந்த சித்தாந்தத்தின் தாக்கத்தாலேயே அவ்வாறு இருக்கிறது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருசிலர் ஹிந்து தேசியவாதத்தின் அமைப்பு ரீதியான உருவகமாக பாஜக இருக்கிறது என்று இப்போது நினைக்கலாம். ஆனால் குறிப்பாக உங்கள் ஆய்வுகளின் மூலமாகவும், நான் செய்திருக்கின்ற மற்ற ஆய்வுகளின் மூலமாகவும் பார்க்கும் பொழுது, ​​ஹிந்து தேசியம் என்ற கருத்தை உள்ளடக்கி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொள்வதாக ஆர்எஸ்எஸ் அமைப்பே இருப்பதாகத் தோன்றுகிறது. ஆர்எஸ்எஸ் குறித்த சுருக்கமான வரலாறு அல்லது விவரங்களைத் தர முடியுமா? அது யார், அதன் நோக்கம் என்ன என்பதை விளக்குங்களேன். ஏனென்றால் மோடி இந்தியா, இந்தியா மீதான அவரது தாக்கம், இந்தியாவை பாஜக மாற்றியமைக்கத் தொடங்கிய விதம் பற்றி பேசுகின்ற உரையாடல்களுக்குள் அந்த அமைப்பே மீண்டும் மீண்டும் வருகிறது.

நிச்சயமாக… அது முக்கியமானது. ஆர்எஸ்எஸ்தான் தாய் அமைப்பு. அது ஹிந்து தேசியவாத இயக்கத்தின் சோதனைக்களம். இன்றைய இந்திய ஒன்றியத்தின் நடுவே அமைந்துள்ள நாக்பூரில் 1925ஆம் ஆண்டு முதன்முதலாக ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஹிந்துக்கள் பலரிடமும் முஸ்லீம்கள் பெரும்பான்மைச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றிருந்து வந்த உணர்வின் எதிர்வினையாகவே அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு கான்ஸ்டான்டிநோபிளில் கலிபாவை ஒழித்ததற்கு எதிர்வினையாக இந்திய முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட கலிபா இயக்கத்தின் பின்னணியில் முஸ்லீம்கள் மிகுந்த போர்க்குணம் கொண்டவர்களாக, மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவர்களாகத் தோன்றினர்.

அந்தச் சூழலில்தான் ஹெட்கேவார் 1925ஆம் ஆண்டில் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் துவக்கினார். ஹிந்துத்துவாவை வடிவமைத்த தலைமைக் கொள்கையாளரின் சீடராக ஹெட்கேவார் இருந்தார். இங்கே சாவர்க்கரை அவசியம் குறிப்பிட வேண்டும் – ஏனென்றால் அவர்தான் உண்மையில் ‘ஹிந்துத்துவா: யார் ஹிந்து?’ என்ற சாசனத்தை – ஹிந்துத்துவாவின் கருத்தியல் சாசனத்தை – எழுதியவர். நாம் சாவர்க்கரை சிந்தனையாளர் என்றும், ஹெட்கேவாரை அமைப்பாளராகவும் கொள்ளலாம். அதிக வலிமை கொண்டவர்களாக, அதிக உடல் தகுதி கொண்டவர்களாக, ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக, அறிவுப்பூர்வமாக விழிப்புடன் ஹிந்துக்கள் இருப்பதற்கு தனித்தன்மை வாய்ந்த அந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் உதவிடலாம் என்று அவர் முடிவு செய்தார்.

ஆர்எஸ்எஸ்சில் ஷாகா என்ற கிளையே பகுப்பாய்வு அலகு ஆகும். ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், ஒவ்வொரு மாலை அது மறைந்த பிறகும் என்று நடைபெறுகின்ற இரண்டு கருத்தியல் அமர்வுகளில் பெரும்பாலும் ஹிந்து இளைஞர்கள் சீருடையில் தங்கள் வரலாறு, கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்த இரண்டு விஷயங்களும் ஒன்றிணைந்து நடக்கின்றன. அந்த அமைப்பால் உந்துதல் பெறும் இளம் உறுப்பினர்கள் சிலர் பின்னர் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்கின்றனர். பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் அளிக்கின்ற பயிற்சிகளுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்சால் அவர்கள் பிரச்சாரக் என்றழைக்கப்படுகின்றனர். பிரச்சாரக் என்றால் முழு நேரமும் ஆர்எஸ்எஸ்சைக் கவனித்துக் கொள்பவர்கள் என்று பொருள். நாக்பூரிலிருந்து அந்தப் பிரச்சாரக்குகள் ஷாகா வலையமைப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்களுக்கு பயணிக்கிறார்கள். நாடு முழுவதும் பயணம் செய்து ஷாகாக்களின் பெரிய வலையமைப்பை அவர்கள் நிறுவுகின்றார்கள். 1947வாக்கில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஷாகாக்களில் ஆறு லட்சம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இருந்தனர்.

உண்மையில் நாடு முழுவதையும் ஆக்கிரமிப்பதுதான் ஆரம்பத்தில் அவர்களுடைய சிந்தனையாக இருந்தது. அப்போது அரசியல் அதிகாரத்தின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. அவர்கள் யாருடனும் தேர்தலில் போட்டியிடவில்லை. அடிமட்ட அளவில் ஹிந்து சமூகம் மிகவும் வலுவாக இருக்க உதவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு அவர்கள் அதை மட்டுமே செய்து வந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு நிலைமை மாறும் என்று கருதினார்கள்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருபின்னர் ஆர்எஸ்எஸ்காரர் ஒருவரால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுகிறார். கொலை செய்தவர் அமைப்பை விட்டு வெளியேறியவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கொலை செய்தவர் சாவர்க்கருடன் இன்னும் மிக நெருக்கமாகவே இருந்தார். நாதுராம் கோட்சே என்ற அந்த மனிதர் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததன் மூலம், ஆர்எஸ்எஸ்சைத் தடை செய்யவும், இருபதாயிரம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களைக் கைது செய்து பல மாதங்களுக்கு சிறையில் அடைக்கவும் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவிற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார். அதற்குப் பிறகே ஆர்எஸ்எஸ் அரசியல் களத்தில் தங்களைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்பதையும், அதனால் அரசியலுக்கு மாற வேண்டும் என்பதையும் உணர்ந்தது.

அப்போது ஜனசங்கம் என்ற பெயரில் சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள். ஜனசங்கம் என்ற கட்சி 1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பாக உருவானது. அந்தக் கட்சிதான் பாஜகவின் முன்னோடியாகும். அவர்களுடைய கட்சி அனைவரும் பார்க்கின்ற பனிப்பாறையின் முனையாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் அந்தப் பனிப்பாறை மிகப் பெரியது. இந்திய சமூகத்துடன் ஓரளவு அது நன்கு பிணைந்துள்ளது. ஆர்எஸ்எஸ்சின் நிறுவனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆர்எஸ்எஸ்சின் கிளையாக பழங்குடியினருக்காகச் செயல்படுகின்ற வனவாசி கல்யாண் ஆசிரமம் அவர்களிடம் உள்ளது. கல்வி, பள்ளிகளின் வலையமைப்பிற்கு பொறுப்பேற்றிருக்கும் வித்யா பாரதி என்ற கிளை ஆர்எஸ்எஸ்சிடம் உள்ளது. அவர்களுடைய மற்றொரு கிளை சேரிகளில் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆக நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆர்எஸ்எஸ்தான் உண்மையாக கவனத்தில் கொள்ள வேண்டிய அமைப்பு. நரேந்திரமோடியே ஆர்எஸ்எஸ்ஸின் தயாரிப்புதான்.

ஆர்எஸ்எஸ்சைப் பற்றி பேசுகின்ற போது, ஹிந்து தேசியம் என்ற வெளிப்படையாக அரசியலாக்கப்பட்டிருக்கும் கருத்தையும் சேர்த்தே பேசுகிறோம். அந்தக் கருத்தை உள்வாங்கிக் கொள்வதற்கான சிறந்த வழியாக, சிறந்த எடுத்துக்காட்டாக அயோத்தி கோவில் இயக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். கலாச்சாரம் குறித்ததாக தொடங்கிய அந்த இயக்கம், விரைவிலேயே அரசியல் ரீதியானதாக மாறியது. உங்கள் புத்தகத்தின் மையத்தில் இருக்கும் பல கருத்துகளை உள்ளடக்கியதாக அது இருந்தது. ஹிந்து தேசியம் பற்றிய கருத்துகளை, முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தலை எடுத்துக் காட்டுவதாக அது இருந்தது. அந்த இயக்கம் உண்மையில் எவ்வாறு இருந்தது, அதிலிருந்த சர்ச்சைகள் எவை என்பவற்றை நாம் பேசிக்கொண்டிருக்கும் சூழலுடன் தொடர்புபடுத்தி விளக்க முடியுமா?

அயோத்தி மிகவும் நுண்ணுணர்வுடன் கூடிய ஆற்றல்மிக்க சின்னமாகவே இருந்திருக்கிறது. ராமாயணத்தில் விஷ்ணுவின் மிகவும் பிரபலமான அவதாரமான, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமரின் தலைநகராக அது இருந்தது. ஆனால் ஹிந்து தேசியவாதிகளுக்கோ அவர் ஒரு வரலாற்றுப் பிரமுகராக, ஒரு மன்னராக இருந்தார். 1528ஆம் ஆண்டில் முகலாயப் படையெடுப்பாளர்களால் கட்டப்பட்ட மசூதி இருந்த இடமே மிகச் சரியாக அந்த மன்னர் பிறந்த இடம் என்று கருதிய அவர்கள், ஹிந்துக்களை அணிதிரட்டுவதற்கான இயக்கத்தைத் தொடங்கினார்கள். அந்தப் பிரச்சனையில் 1984ஆம் ஆண்டு வாக்காளர்களைத் துருவமுனைப்படுத்த விரும்பி தேர்தலுக்கு முன்பாக ஹிந்துக்களை அணிதிரட்டும் வேலையைச் செய்தார்கள். ஆனால் 1984ஆம் ஆண்டு சீக்கிய பாதுகாவலர்களால் திருமதி.காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டாக இருந்ததால் தேர்தல் நேரத்தில் ஹிந்துக்கள் – முஸ்லீம்கள் என்ற பிரச்சனையை எழுப்பவியலாத சூழல் இருந்தது. திருமதி.காந்தி படுகொலையால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர்களுடைய திட்டம் முழுமையாகத் தகர்ந்து போனது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஎனவே அவர்கள் 1989ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. அதே இயக்கத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து, அடுத்த தேர்தலின் போது மீண்டும் தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்த மிகப்பெரிய வலையமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாடு முழுவதும் ஐம்பதாயிரம் ஷாகாக்கள் இருந்தன. லட்சக்கணக்கான கிராமங்களுக்கு நன்கொடை கேட்டு ராமர் பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களுடன் சென்ற அவர்கள் ‘எங்களுக்கு வாக்களித்தால், கோவிலைக் கட்டுவோம்’ என்று சொல்லி வாக்கு கேட்டனர்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅதுவே பாஜகவின் எழுச்சிக்கான தொடக்கமாக இருந்தது. 1984ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமிருந்த 544 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தன. ஆனால் 1989ஆம் ஆண்டு தேர்தலில் எண்பத்தி ஐந்து இடங்கள் கிடைத்தன. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் கிடைத்தன. முக்கியமாக, அயோத்தி அமைந்துள்ள இந்திய ஒன்றியத்தின் உத்தரப்பிரதேச மாநிலத்தை அவர்களால் கைப்பற்ற முடிந்தது. மாநிலத்தை 1991ஆம் ஆண்டில் ஆளும் நிலைக்கு அவர்கள் வந்தனர்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅவர்கள் 1992ஆம் ஆண்டில் மசூதியைக் கைப்பற்றினர். அவர்களுடைய தொண்டர்கள் ஒரே நாளில் – 1992 டிசம்பர் ஆறாம் நாள் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். அவர்களைப் பொறுத்தவரை அது முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தங்களை, தங்களுடைய கருத்துகளைத் திணிப்பதற்கான வழியாக இருந்தது. வகுப்புவாத வன்முறைகள் அதற்கான மற்றொரு வழியாக இருந்தன. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகள் காலகட்டம் அதிக அளவில் ஹிந்து-முஸ்லீம் கலவரங்களைக் கண்டது. கலவரங்களைத் தூண்டி வாக்காளர்களைத் துருவமுனைப்படுத்துவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அதுபோன்ற கலவரங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது உச்சத்தை அடைந்தன.

அவர்களுடைய செயல்பாடு எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்து வந்தது. நகரம் ஒன்றில் தொழுகை நேரத்தில் முஸ்லீம்களின் சுற்றுப்புறத்தை ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஹிந்து தேசியவாதிகளின் ஊர்வலம் கடந்து செல்லும். ஊர்வலத்தில் வருபவர்கள் ஆசிட் குண்டுகள், பிற ஆயுதங்களை ஏந்தியிருப்பார்கள். முஸ்லீம்கள் கற்களை வீசித் தாக்கி எதிர்வினையாற்றுவர்கள். கலவரத்தை நிறுத்துவதற்காக காவல்துறை அல்லது சில சமயங்களில் ராணுவம் நிறுத்தப்படும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். ஆக அவர்களுடைய இயக்கத்தால் அப்போது மசூதி மட்டுமே அழிக்கப்படவில்லை. நாட்டின் பல இடங்களிலும் வகுப்புவாத வன்முறைகளை அவர்கள் தூண்டி விட்டிருந்தார்கள். .Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஇந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற பாத்திரத்தை வகித்து வருகின்ற நரேந்திர மோடியை இந்த உரையாடலுக்குள் கொண்டு வர விரும்புகிறேன். பாரம்பரியமாக ஆர்எஸ்எஸ், பாஜக இரண்டுமே உயர் சாதி அமைப்புகளாகவே பார்க்கப்படுகின்றன. பாஜக குறிப்பாக உயர்சாதியினருக்கான அரசியல் கட்சி என்றே பார்க்கப்படுகிறது. சாதியைப் பற்றி பேசவே இல்லை என்றாலும் இந்திய அரசியலில் சாதி மகத்தான பங்கை வகித்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தவர் என்பதால் நரேந்திர மோடி மிகவும் கவர்ச்சிகரமான நபராக இருந்தார். அவர் பாஜகவின் தலைவராக இயல்பாகப் பொருந்திப் போகவில்லை. ஆனாலும் அதே நேரத்தில் மோடி இல்லாத பாஜகவை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அப்படியானால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பக்கம் நரேந்திர மோடியை ஈர்த்தது எது என்பதையும், மோடியை தன்னுடைய தலைவராகப் பாஜகவை ஏற்றுக் கொள்ள வைத்தது எது என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்…

உறுதியாக பிராமணர்களைக் கொண்டு – வணிகர்கள், வியாபாரிகளான வைசியர்கள், போர்வீரர் சாதியான சத்திரியர்களையும் உள்ளடக்கி – ஆர்எஸ்எஸ் பல்லாண்டுகளாக ஓர் உயர்சாதி அமைப்பாகவே இருந்து வந்தது. அந்த அமைப்பிற்குள் இந்த மூன்று உயர்சாதியினரும் பல்லாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். வெகுகாலம் பாஜகவால் சாதாரண மக்களின் கட்சியாக மாற முடியாமல் போனதற்கு மேல்தட்டினருடன் – சிறிய அளவிலான மேல்தட்டினருடன் – அந்த அமைப்பு தன்னைச் சுருக்கிக் கொண்டிருந்ததும் ஒரு காரணமாகவே இருந்தது. அந்த மூன்று சாதிக் குழுக்களையும் ஒன்று சேர்த்தால், இந்திய சமூகத்தில் பதினைந்து சதவிகிதத்திற்கு மேல் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நேர்மறைப் பாகுபாட்டின் பின்னணியில் தொண்ணூறுகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேகம் பெறத் தொடங்கியபோது அவர்களிடமிருந்த இவ்வாறான துருவமுனைப்படுத்தல் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. மேல்சாதியினருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருந்த போதிலும், அவர்கள் அதை முடிவிற்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இதர பிற்படுத்தப்பட்டவர்களை அவர்கள் தங்களுடைய திட்டத்திற்குள் அணிதிரளச் செய்வதற்கான வழியைக் கண்டறிய வேண்டியதாயிற்று. இங்கேதான் நரேந்திர மோடி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளவராக இருந்தார்.

நரேந்திர மோடி பக்கம் ஆர்எஸ்எஸ் ஏன் திரும்பியது? அதற்கான சரியான காரணமாக அவர் சரியான பரம்பரையைக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம். சரியான பரம்பரை மட்டுமல்ல, சரியான சாதி, அணுகுமுறையும்கூட அவரிடம் இருந்தது. தனது ஏழாவது வயதில் – மிக இளம் வயதிலேயே குஜராத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தின் சிறிய நகரமான வாட்நகரில் மோடி ஆர்எஸ்எஸ்சில் சேர்ந்தார். உரிய வயதுக்கு வரும் முன்பே அவர் திருமணம் செய்து கொண்டார். அதுபோன்ற திருமணங்கள் குஜராத் மற்றும் பிற இடங்களில் வழக்கமாக அடிக்கடி நடக்கின்றவையாகும். பின்னர் குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறிய அவர் பேலூர் மடத்திற்கு வந்து அங்கே குடியேறினார். பின்னர் குஜராத்துக்கு திரும்பி தனது குடும்பத்தை ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நல்லபடியாக விட்டுவிட்டார். அதன்பிறகு அவரது வாழ்க்கை முழுக்க ஆர்எஸ்எஸ் அமைப்புடனேயே இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பே அவரது குடும்பமாக மாறிப் போனது.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருமிக இளம் வயதிலேயே மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஆனார். அப்போது அவருக்கு வயது இருபத்தியிரண்டு. பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த ஏபிவிபி என்ற மாணவர் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவரானார். வெளிமாணவராக இருந்து தனது பி.ஏ. பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். அந்த நிலையிலேயே 1975ஆம் ஆண்டில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் அவர் அப்போது மிக முக்கிய பங்கு வகித்தார். உடனடியாக 1978ஆம் ஆண்டில் அவர் விபாக் பிரச்சாரக் என்று அழைக்கப்படுகிற பதவிக்கு உயர்த்தப்பட்டார். குஜராத் மாநிலத்தின் ஒரு மாவட்டத்திற்கு மேல் இருந்த பிரிவின் பொறுப்பாளரானார். 1981இல் பிராந்திய பிரச்சாரக் ஆனார். குஜராத்தில் ஆர்எஸ்எஸ் தலைவராகவும் அவர் இருந்தார்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅமைப்பாளராக இருந்த அவர் மிகச் சிறந்து விளங்கினார். அப்போது பாஜகவின் தலைவராக இருந்த அத்வானி 1990இல் ரதயாத்திரை என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கினார். ரத யாத்திரை என்பது குஜராத்தில் இருந்து புறப்பட்டு அயோத்திக்குச் செல்லும் மிக நீண்ட பேரணி. கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கான கூட்டத்தை அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக அந்த யாத்திரை இருந்தது. அந்தப் பேரணிக்கு குஜராத் பகுதியில் மோடிதான் அமைப்பாளராக இருந்தார். அவர் பொறுப்பில் இருந்தார். 1997ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் பாஜக முதன்முறையாக வெற்றி பெற்றபோது சூப்பர் முதல்வர் என்று அறியப்படும் அளவிற்குப் பலம் பொருந்தியவராக மோடி இருந்தார்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருநடைமுறையில் மாநிலத்தை ஆட்சி செய்பவராக இருந்த போதிலும், சட்டமன்றத்திற்கு ஒருபோதும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2001இல் அத்வானியும், பிரதமர் வாஜ்பாயியும் அவரை முதலமைச்சராக குஜராத்தில் கொண்டு போய் இறக்கிய போது – 2003ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அரசியல்வாதியாக அவர் மாறினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் தேர்தல்கள் நடைபெறவிருந்தன. ஆனால் அதற்கு இடையில், முதலமைச்சராக அவர் இருந்தபோது, ​​2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகப் பெரிய படுகொலை குஜராத்தில் நடந்தது உங்களுக்குத் தெரியும். இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இறந்துவிட்ட அந்தப் பொழுதுதான் அவரது வருங்கால அரசியல் வாழ்விற்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது. அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அந்தக் கணம்தான் குஜராத்தின் பெரும்பான்மையான ஹிந்துக்களால் ‘ஹிந்து ஹிருதய் சாம்ராட்’ – ஹிந்து இதயங்களின் சக்கரவர்த்தி – என்று அவர் அங்கீகரிக்கப்பட்ட தருணமானது.

அனைவரையும் விஞ்சி விதிவிலக்கான நபராக அவர் மாறிய தருணம் அது. அவர்தான் அதை முன்னின்று நடத்தினார். அயோத்தியிலிருந்து ரயிலில் திரும்பி வந்த ஐம்பத்தியேழு ஹிந்துக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான முஸ்லீம்களை ஹிந்துக்கள் பழிவாங்குவதற்காக அந்த வன்முறைகள் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். அந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் எரிக்கப்பட்டிருந்த அந்தச் சூழலில் அவரிடம் மக்கள் இறந்து போன குற்றத்திற்கு படுகொலையே பதிலளிப்பதற்கான வழியாக இருந்தது. அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது.

தன்னுடைய பின்னணி, ஆளுமை காரணமாக மோடி பாஜகவை முற்றிலுமாக மாற்றி விட்டாரா?

கண்டிப்பாக. வாஜ்பாய், அத்வானியின் தலைமையில் 2000களில் இருந்த பாஜக மிகவும் வித்தியாசமானது. அந்த இரண்டு ஆளுமைகளின் காரணமாகவே அவ்வாறாக அந்தக் கட்சி இருந்தது. அவர்கள் இருவரும் அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து மாறி மாறி தலைமைப் பொறுப்பில் இருந்தனர். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அந்த இரு தலைவர்களும் இணைந்தே இருந்தனர். உண்மையில் அது விதிவிலக்கானது. உலகில் அதே இரண்டு தலைவர்களை நீண்ட காலத்திற்குத் தலைமையில் கொண்ட கட்சிகள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றனர். அது அவர்களிடமிருந்த கூட்டுணர்வை, சகோதரத்துவ உணர்வையே பிரதிபலிப்பதாக இருந்தது. சகோதரத்துவம் என்ற சொல்லை ஆர்எஸ்எஸ் மிகவும் விரும்புகிறது. அனைவரும் சமமானவர்கள் என்று சகோதரத்துவத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். விதிமுறைகளை விதித்து அவர்களுக்கு ஆணையிடுவதற்கு என்று யாரும் அங்கே இருக்கவில்லை.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆனால் அந்த நிலைமை 2014ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற பிறகு முற்றிலுமாக மாறிப் போனது. தன்னுடைய வலதுகரமாக இருந்த அமித்ஷாவை கட்சித் தலைவராக்குவது என்று உடனடியாக மோடி முடிவு செய்தார். ஆக அதுவும் இன்னுமொரு இணைந்திருத்தல் எனலாம். ஆனால் இது மிகவும் வித்தியாசமான இணைப்பு. மோடி, அமித்ஷா அவர்கள் இருவரும் சமமானவர்கள் இல்லை. அமித்ஷாவைக் காட்டிலும் மோடி உயர்ந்தவராகவே இருந்தார். அப்போது மாநில முதல்வராக அவர் உச்சத்தில் இருந்தார்.

இரண்டாவதாக, இந்த இரண்டு தலைவர்களும் பிராந்தியத் தலைவர்களை நம்பி தங்களுடைய கட்சி தொடர்ந்து இருக்க விடாமல், உயர்மட்டத்திலிருந்து தாங்களே பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களாக மாநில அளவில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நியமித்தார்கள். பாஜகவில் ஏற்பட்ட இந்த மாற்றம் இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றத்தை மிகவும் ஒத்திருந்தது. ஜவகர்லால் நேரு மாநிலத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் கூட்டு வழியைக் கடைப்பிடித்தார். ஆனால் மிகவும் பாதுகாப்பற்றவராகத் தன்னை உணர்ந்த இந்திரா காந்தி உயர்மட்டத்தில் இருந்து தனது ஆட்களைப் பதவிகளில் நியமித்துக் கொள்ளவே விரும்பினார்.

இப்போது அதே பாதையில் பாஜகவும் செல்கிறது. தன்னுடைய ஆன்மாவை அது இழந்து கொண்டிருக்கிறது. மாநில அளவில் உள்ளூர் சமூகங்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை இழந்து வருகிறது. ஆனாலும் அந்த இழப்பு காங்கிரஸால் மீண்டும் பெற முடியாத சமூகமட்டத்திலான தொடர்புகளைக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் மூலம் ஓரளவிற்கு ஈடுசெய்யப்படுகிறது.

உங்கள் புத்தகத்தில் உள்ள மேற்கோள் நரேந்திர மோடி உருவாக்கிய மாற்றம் பாஜகவில் மட்டுமல்லாது, இந்தியாவிற்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது என்ற முத்திரையைக் குத்தியிருக்கிறது. ‘ஆளும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசியல்வாதிகள் உட்பட மற்றவர்களுக்கும் எதிராக மோடி தன்னை ஒன்றிணைப்பவராக முன்னிறுத்திக் கொண்டார்’ என்று எழுதியுள்ளீர்கள். இன்னும் ஆழமாகச் சென்று பார்க்கும்போது, ​​இனரீதியான ஜனநாயகம் மட்டுமல்லாது, குறுகிய நோக்குடைய ஜனநாயகம் என்று பலராலும் விவரிக்கப்படுகின்ற வகையில் இந்தியா மாறி வருவதைக் காண்கிறோம். மற்ற இனச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதுவே அவர்களிடமுள்ள அந்த குறுகிய நோக்கத்தை காணக்கூடிய நேரடியான வழியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த குறுகிய நோக்கம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை விளக்கிட முடியுமா? நாட்டில் உள்ள முஸ்லீம்களை இந்தியா எவ்வாறு முறையாக ஓரம் கட்டியது?

ஹிந்து பெரும்பான்மையினரையே பாஜக பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதனால்தான் இனரீதியான ஜனநாயகமாக இந்தியா மாறிவிட்டது என்று நான் கருதுகிறேன். நடைமுறையில் இரண்டாம் தர குடிமக்களைக் கொண்ட ஜனநாயகமாக இருந்தாலும் சட்டப்படி அது அவ்வாறாக இருக்கவில்லை. சட்டப்படியாக சில சீர்திருத்தங்கள், சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தவையாக இரண்டு அல்லது மூன்று சட்டங்களே உள்ளன.

முதலாவது சட்டமான மாட்டிறைச்சியைத் தடை செய்யும் சட்டம் மாநில அளவிலானதாக இருக்கிறது. இரண்டாவது லவ் ஜிஹாத் எதிர்ப்புச் சட்டம். அதுவும் மாநில அளவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் – பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் உள்ள சட்டமே. அது கலப்புத் திருமணங்களை மிகவும் கடினமாக்குகிறது. ஹிந்துப் பெண்களை ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு முஸ்லீம் ஆண்கள் முயல்கிறார்கள் என்பதே அந்தச் சட்டத்தின் பின்னணியாகும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருமூன்றாவது சட்டம் – சட்டம் என்பதற்கான வரையறையையே மீறுவதாக உள்ளது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கின்ற முஸ்லீம் அல்லாத அகதிகள் வரவேற்கப்படுவார்கள், அவர்கள் இந்திய குடிமக்கள் ஆகலாம், ஆறு ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்ற விரைவான நடைமுறையுடன் குடியுரிமை பெறுவதற்கான தகுதியுடையவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தமே அந்த மூன்றாவது சட்டம். முஸ்லீம் நாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் அந்த முஸ்லீம் நாடுகளில் துன்புறுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் சட்டத் திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெறுவதற்கான அந்த வாய்ப்பு முஸ்லீம்களுக்குக் கிடைக்காது. நாட்டில் முதன்முறையாக குடியுரிமை பெறுவதற்கான இரண்டு வெவ்வேறு வழிமுறைகள் அந்தச் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. இவையே மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமாற்றங்கள்.

நடைமுறைகளில் இருந்து வருகின்ற மற்ற பிரச்சனைகளைக் காட்டிலும் சட்டங்கள் குறைவான பிரச்சனைகளுடனே இருக்கின்றன. சங்பரிவாரத்துடன் தொடர்புடைய கண்காணிப்புக் குழுக்கள் 2014க்குப் பிறகு சிறுபான்மையினருக்கு, முஸ்லீம்களுக்கு எதிராக – சில சமயங்களில் மிகவும் தளர்வாக கிறிஸ்தவர்களுக்கும் எதிராக – பிரச்சாரங்களைத் தொடர்ந்து வருவதைக் காண முடிகிறது. முஸ்லீம்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக முஸ்லீம்களின் லாரிகள் பசுக்களை இறைச்சிக் கூடங்களுக்கு கொண்டு செல்கின்றனவா என்பதைக் கண்காணிக்க கோ ரட்சகர்கள் எனும் பசு பாதுகாவலர்கள் நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்கின்றனர். லாரிகளில் மாடுகளைக் கொண்டு சென்ற முஸ்லீம் லாரி ஓட்டுநர்களை அடித்துக் கொன்ற சம்பவங்கள் போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅவர்கள் மேற்கொள்கின்ற மற்றொரு பிரச்சாரம் மதமாற்றத்திற்கு எதிரானது. திரும்பவும் ஹிந்து மதத்திற்கு மாற்றுவது என்பது அந்த கண்காணிப்புக் குழுக்கள் மேற்கொண்ட மற்றொரு இயக்கமாகும். அவர்களிடம் லவ் ஜிஹாத் எதிர்ப்பு இயக்கமும் உள்ளது. அதன் விளைவாக முஸ்லீம் ஆண்களைச் சந்திக்கின்ற ஹிந்துப் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். சில சமயங்களில் திருமணம் நடக்கின்ற இடத்திற்கே சென்று முற்றுகையிட்டு திருமணங்களை அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். இதுதான் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை மிரட்டி அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அப்பட்டமான இனரீதியான ஜனநாயகம்.

அது மிக முக்கியமான மற்றொரு பரிமாணத்தையும் விளைவித்திருக்கிறது. இனரீதியான ஜனநாயகம் சிலரை மட்டும் நகர்ப்புறப் பகுதிகளில் தனிப்பகுதிக்குள்ளே ஒதுக்கி வைத்துள்ளது. அனைவரும் கலந்து வசிக்கின்ற சுற்றுப்புறங்கள் மிகவும் அரிதாகி, விதிவிலக்கானவையாகிக் கொண்டே இருக்கின்றன. அதற்கான சட்டங்களும் சில சமயங்களில் இயற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக குஜராத்தில் இப்போது வீட்டை விற்கவோ அல்லது வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுக்கவோ இயலாது. அங்கே அஸான் எனும் தொழுகைக்கான அழைப்பு கூட சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிவு என்பதே இன்றைய நாளில் நிச்சயம் என்பதாக இருக்கிறது. சாதிகளுக்கிடையில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அனைவரும் சேர்ந்து வசிக்கின்ற கலப்பு பகுதிகள் இருக்கக்கூடாது என்று வற்புறுத்தி இரண்டாம் தர குடிமக்களை அவர்கள் உருவாக்குகிறார்கள். இனரீதியான ஜனநாயகம் இதுபோன்றும் வெளிப்பட்டுள்ளது – அதுதான் குறுகிய நோக்குடைய ஜனநாயகமாகப் பார்க்கப்படுகிறது.

முறையான விதிகள் மோசமான நிலைமையில் இருப்பது நமது கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் பல வழிகளில் முறைசாரா அடக்குமுறைகளும் நாட்டில் இருந்து வருகின்றன. ‘இந்த கண்காணிப்புக் குழுக்கள் அரசின் குறிப்பாக, அதன் ஆயுதப் பிரிவான காவல்துறையின் மறைமுகமான ஒப்புதல் இல்லாமல் உருவாகி வளர்ந்திருக்க முடியாது’ என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். முறைசாரா அடக்குமுறையாக இருந்தாலும் கூட, அது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன். அந்த அடக்குமுறைகள் மோசமானவர்கள் சிலரால் மட்டுமே நடைபெறுவதாக இருக்கவில்லை. காவல்துறையால், அரசால் அரவணைக்கப்பட்டு, அரசின் பல்வேறு அம்சங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுடைய பொதுக் கொள்கையின் நடைமுறைப் பகுதியாக மாறியுள்ள ஒன்றைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டில் இந்தியாவை சுதந்திரமான நாடு என்பதில் இருந்து ஓரளவிற்கு சுதந்திரமான நாடு என்று தன்னுடைய வகைப்பாட்டை ஃப்ரீடம் ஹவுஸ் நிறுவனம் குறைத்திருப்பதற்கு அதுவே மிகப்பெரிய காரணமாகும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஃப்ரீடம் ஹவுஸ் தன்னுடைய அறிக்கையில் இன்னொரு மேற்கோளையும் வைத்திருக்கிறது. இந்த அளவிற்கு இந்தியா எப்படி மாறிவிட்டது என்பதை அறிந்து கொள்வதற்கு அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். ‘உலகளாவிய ஜனநாயகத் தலைவராக பணியாற்றக்கூடிய திறனை மோடியின் தலைமையில் இந்தியா இழந்திருப்பதாகவே தோன்றுகிறது. அனைவரையும் உள்ளடக்குவது, அனைவருக்கும் சம உரிமைகளை வழங்குவது என்று தன்னுடைய அடிப்படை விழுமியங்களை இழந்து குறுகிய ஹிந்து தேசியவாத நலன்களை இந்தியா உயர்த்திப் பிடித்து வருகிறது’ என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்தியா அடைந்திருக்கும் மாற்றம் குறித்து மற்றொரு புள்ளிக்கு அது திரும்புகிறது. அதைப்போன்ற உணர்வுகள், உள்ளுணர்வுகள் எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றன என்றாலும் இப்போது அதுபோன்ற நடத்தைகளை அனுமதிக்கின்ற வகையிலே அரசிடமே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வன்முறைகலை நிகழ்த்துபவர்கள் அரசு சாராதவர்களாக இருந்தாலும் அவர்களைத் தழுவிக்கொள்வது, தவறாக நடந்துகொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்று அரசிடமிருந்தே இப்போது அனுமதி கிடைத்து வருகிறது.

ஆமாம். காவல்துறை உட்பட அரசின் ஆசீர்வாதத்துடனே இந்த கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுகின்றன. காவல்துறைகூட சில சமயங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நேரடியாகச் செயல்படுகின்றது. கலவர நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்குப் பக்கபலமாக காவல்துறையும் இருக்கக்கூடும் என்பதை 2020ஆம் ஆண்டு நடந்த தில்லி கலவரம் காட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைமைதான் இருந்து வருகிறது. இப்போது ஒரு வகையான புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அரசின் ஆசீர்வாதம் மட்டுமல்லாது, அரசின் தீவிரப் பங்கேற்பையும் கொண்டுள்ளது. காவல்துறை அல்லது துணை ராணுவப் படைகள் போன்ற பிற அரசு நிறுவனங்களும் அதில் அடங்கியிருக்கின்றன.

கிறிஸ்டாஃப்! ஏராளமான மோசமான விஷயங்களைச் செய்து வருவதால் பாஜகவை மோசமானது என்று இப்போது சொல்வது மிகவும் எளிது என்றாலும் நான் இப்போது கேட்க விரும்புவது – வாக்காளர்கள், தாராளவாத விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதிகள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான். பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால், நான் ஆதரிக்க வேண்டிய வேறொரு அரசியல் கட்சி இருக்க வேண்டும் என்பதே இயல்பான அனுமானமாக இருக்கும். அந்த மாற்று கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் என்பதுவும் இயல்பான அனுமானமாக இருக்கலாம். ஆனாலும் அதுகுறித்து ஏராளமான சந்தேகம் இருந்து வருவதாகவே நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது குறித்து இந்தியர்கள் மத்தியிலும், உண்மையில் இந்தியாவிற்கு அப்பாலும் கூட ஏராளமான தயக்கம் நிலவி வருகிறது.

பாஜக ஆட்சியைப் பிடித்த நேரத்தில் சுமித் கங்குலி எழுதிய ‘இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்’ என்ற கட்டுரை 2014 ஏப்ரலில் ஜேர்னல் ஆஃப் டெமாக்ரசி என்ற இதழில் வெளியானது. அவர் அந்தக் கட்டுரையில் அனைவரையும் ஈர்க்கின்ற மேற்கோள் ஒன்றைக் கையாண்டிருந்தார். ‘உண்மையான கருத்தியல் அர்ப்பணிப்புடன் எந்தவொரு கட்சியும் இப்போது இருக்கவில்லை. பதவி, அதன் மூலம் கிடைக்கின்ற பரந்த பலன்களை வென்றெடுப்பதைத் தவிர வேறு எது குறித்தும் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அக்கறை கொள்வதில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் (INC), பாரதிய ஜனதா கட்சி (BJP) என்ற இரண்டு மேலாதிக்கக் கட்சிகளும் வெளித்தோற்றத்தில் வெவ்வேறு அரசியல் திட்டங்களைக் கொண்டிருப்பதாக நம் கண்ணில் முதலில் படுவதைத் தாண்டி அவை இரண்டுக்குமிடையே பல பொதுவான தன்மைகள் இருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது​​ பின்னோக்கிப் பார்க்கும் போது, பாஜகவிற்கென்று தெளிவான சித்தாந்தம் உள்ளது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனாலும் இந்திய தேசிய காங்கிரஸிடம் இருக்கின்ற தெளிவான திட்டம் என்னவென்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸின் இன்றைய நிலைப்பாடு என்ன?

இது அருமையான கேள்வி. நீங்கள் யாரை கவனத்தில் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்தக் கேள்விக்கான பதில் நிச்சயம் மாறுபடும். காங்கிரஸின் உயர்மட்டத் தலைமையில் இருக்கின்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மதச்சார்பின்மை, கூட்டாட்சி, அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றின் மீதுள்ள மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஜவகர்லால் நேருவின் சித்தாந்தத்திற்கு விசுவாசமானவர்களாகவே இருந்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைமை தாங்கிய முந்தைய கூட்டணி அரசாங்கத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக ஜனநாயகம் போன்றவை கடைப்பிடிக்கப்பட்டதை நாம் பார்த்தோம். மிகவும் சுவாரசியமான, மிக முக்கியமான திட்டத்தின் மூலம் அவர்களால் அமல்படுத்தப்பட்ட இலவச விநியோகம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருந்த கிராமப்புறக் குடும்பங்களுக்கு நூறு நாள் சம்பளத்தை, குறைந்தபட்ச ஊதியத்தை அவர்கள் கொண்டு வந்த தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வழங்கியது. அவர்களுடைய மற்ற தாராளவாத முடிவுகளின் கட்டமைப்பிற்குள் இதுபோன்ற மக்கள்நலன் சார்ந்த நடவடிக்கைகளும் இடம் பெற்றிருந்தன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஅடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம். பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர் தாக்குதலுக்கு உள்ளான முக்கிய சட்டமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்து வருகிறது. இன்றைக்கு அது முற்றிலும் நீர்த்துப் போயிருக்கிறது. கல்வி உரிமை, உணவு உரிமை போன்றவை காங்கிரஸின் உயர்மட்டத் தலைமையின் அடிப்படை நோக்கமாக இருந்தன. அதைத்தான் அவர்கள் 2004 மற்றும் 2014க்கு இடையில் பதவியில் இருந்தபோது செய்து வந்தார்கள். அவற்றை இன்னும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் காங்கிரஸில் அந்த உயர்மட்டத் தலைவர்களுக்கு கீழே – அவ்வாறாக இருக்கின்ற மிகச் சிலருக்கு கீழே – சந்தர்ப்பவாதிகளும் இருக்கின்றனர். இன்றைய காலகட்டம் ஹிந்துத்துவாவிற்கானது என்றும் ஹிந்து தேசியவாதமே ஆதிக்கம் செலுத்தும் கொள்கை என்பதாகவும் உணர்ந்திருக்கும் அவர்கள் அதற்குள் வீழத் தயாராகி, கட்சியை விட்டு வெளியேறத் தயாராக இருந்த அவர்கள் அதைச் செய்தும் காட்டியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கட்சி மாறுவது என்பது உண்மையில் ஒரு நோயாகவே மாறிவிட்டது. ஆனால் அதுபோன்ற விலகல்கள் திட்டமிட்டும் நடத்தப்படுகின்றன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருகாங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவிலான அழுத்தத்தை பாஜகவால் கொடுக்க முடிகிறது. பெருமளவில் பணத்தை வைத்துக் கொண்டு தவறிழைப்பவர்களை நோக்கி வருமான வரித்துறைச் சோதனைகள் படையெடுக்கின்றன. நெருக்கடிநிலை காலகட்டத்தில் இதைத்தான் இந்திரா காந்தியும் செய்தார். எழுபதுகளில் திருமதி காந்தி தொடங்கி வைத்த மிரட்டல் உத்திகளை பாஜகவினர் இப்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். தரப்படும் அழுத்தங்களுக்கு கொள்கை அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் அடிபணிந்து போவதும் அதற்கான காரணியாக இருக்கலாம்.

காங்கிரஸுக்கு அப்பால் பிராந்தியக் கட்சிகளைப் பார்க்கும் போது, அங்கேயும் அதேபோன்ற நிலைமை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் முக்கியமான சில சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு பாஜகவிற்குத் தேவைப்பட்ட போது, சில எதிர்க்கட்சிகளின் ஆதரவாலேயே அது சாத்தியமாகியிருக்கிறது.

ஜம்மு, காஷ்மீருக்கு தன்னாட்சியை வழங்கிய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை நீக்கியதை அதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மாநிலக் கட்சிகளின் ஆதரவின் முலமே அந்தச் சட்டம் சாத்தியமானது. அது ஒரு சட்டமாக மாற முடிந்தது. இதற்கு முன்பு குறிப்பிட்ட குடியுரிமை திருத்தச் சட்டமும் அப்படித்தான்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் உள்ளன. மத்தியில் நடத்தப்படுகின்ற ஒரு வகையான கொடுக்கல்-வாங்கல் பேச்சுவார்த்தையில் தங்களுடைய மதச்சார்பற்ற கடமைகளை விட்டுக் கொடுப்பதில் இதுபோன்ற மாநிலக் கட்சிகளிடம், முக்கியமாக கிராமப்புறக் கட்சிகளிடம் எந்தவொரு தடையும் இருப்பதில்லை. மேலும் இந்த கட்சிகளிடையேயும் மேலிருந்து தரப்படுகின்ற அழுத்தங்கள் நன்றாகவே வேலை செய்கின்றன.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஎதிர்கட்சியைச் சார்ந்த X அல்லது Y அரசியல்வாதி தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் ஏதேனும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென விரும்பினால், அவர் சரியான வழியில் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்து விட்டால் அவர் அழுத்தத்திற்கு உள்ளாக மாட்டார். வருமான வரித்துறையின் சோதனைகளைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால், அவர் அதைச் செய்துதான் ஆக வேண்டும். மதச்சார்பின்மை குறித்த அர்ப்பணிப்பு இல்லாமை, வெளிப்புற அழுத்தங்கள் ஆகியவற்றின் பாதிப்புடனே இன்றைக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இருந்து வருகின்றனர்.

இந்த உரையாடல் முழுவதும், மோடி ஆட்சியைப் பிடித்த பிறகு அதிகாரத்தை மையப்படுத்த முயன்றதால் இந்திய நிறுவனங்கள் எந்த அளவிற்குத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதைப் பற்றியே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை நீதித்துறைக்குள்ளும் காண முடிகிறது. கட்சிக்குள் மோடிக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத்திலும் நம்மால் காண முடிகிறது. முடிவெடுக்கும் போது மோடி தனது கட்சி உறுப்பினர்களை மிகவும் அரிதாகவே கலந்து கொள்கிறார். கண்காணிப்பு மூலம் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், அவை நிகழ்ந்த விதம் என்று இதைப் பற்றி பேசுவதற்கு பல வழிகள் உள்ளன. சட்டத்தின் ஆட்சிக்கு அத்தியாவசியமாக இருக்கின்ற அரசு நிறுவனங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற நடத்தைகள் எதிர்ப்புகளின்றி வெறுமனே அனுமதிக்கப்படுகின்றன. இறுதியாக இந்திய ஜனநாயகத்திற்கு மீள முடியாத சேதத்தை மோடி இப்போது இழைத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஏதாவதொரு கட்டத்தில் மோடியை நிராகரித்து இந்திய ஜனநாயகத்தால் தானாக மீண்டு வர முடியுமா?

மோடி அதிகாரம் மிக்கவராக இருப்பது அவர் ஆட்சி செய்யும் விதத்தாலா அல்லது அவர் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாலா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வது மிகவும் முக்கியமாகிறது. ஹிந்து வாக்காளர்கள் அதை விரும்பியதாலேயே அவர் இவ்வாறு இருக்கிறாரா என்ற கேள்விக்கான விடை மூலமாகவே உங்களுடைய கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். கருத்துக் கணிப்புகள், கள ஆய்வுகளைப் பார்க்கும்போது, ​​ அநேகமாக ஹிந்து சமுதாயம் உண்மையில் மோடி இல்லை என்றால் அவ்வாறு ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும் எனும் அளவிற்கு அடியோடு மாறியிருப்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவராகவே மோடி இருக்கிறார். பாதுகாப்பு தேவை என்ற உணர்வு பெரும்பாலும் இருந்து வருகிறது. பாதுகாப்பின்மை மற்றும் தொடர் அச்சுறுத்தலின் கீழ் இருப்பது போன்ற உணர்வு இப்போது மிகவும் பரவலாக இருக்கிறது. அதுபோன்ற உணர்வு முந்தைய காலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், இஸ்லாமியர்களின் தாக்குதல்களின் விளைவாகவே உருவாகியிருக்கிறது. 2008 மும்பை குண்டுவெடிப்பு மிகப் பெரிய அளவிலான அதிர்ச்சியை உருவாக்கியது. அதுபோன்ற இன்னும் பல தாக்குதல்கள் அதைப் போன்ற அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளன.

பின்னர் அங்கீகாரத்திற்கான – சர்வதேச அங்கீகாரம் – தேவையும் இருக்கிறது. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் உள்ள பெருமிதம் என்பது மிகவும் பரவலான உணர்வாக கருத்துக்கணிப்புகளில் காணக் கிடைக்கிறது. அவை ‘நாம் பாதுகாப்பற்றவர்கள், ஆனால் மரியாதைக்குரியவர்கள்’ என்று சொல்கின்றன. அவை தேசியவாதத்தின் இரண்டு முகங்கள். நடுத்தர வர்க்கத்திலும், நடுத்தர வர்க்கத்திற்கு அப்பாலும் தேசியவாதம் மிகமிக முக்கியமானதாகி இருக்கிறது.

மூன்றாவதாக, அவர் ஏழைகளுக்கு ஆறுதல் அளிப்பதில் மிகுந்த திறமை உள்ளவராக இருக்கிறார். மோடிக்கு வாக்களித்து தாங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் ஏழை மக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்ற கேள்வியை நான் சமீபத்தில் எதிர்கொண்டேன். மோடி விஷயத்தில் அது உண்மையாகவே இருக்கிறது. ஜனரஞ்சகவாதிகள் பலர் விஷயத்திலும் அது உண்மையாகவே இருந்திருக்கிறது. ட்ரம்ப், போல்சனாரோ போன்ற ஜனரஞ்சகவாதிகள் பதவியில் இருக்கின்ற போது, ​​ஏழைகளுக்காகப் பொருள் ரீதியாக எதையும் செய்யாமல், பொருளற்ற வகையில் எதையாவது செய்திருக்கும் போது மீண்டும் அவர்களுக்கே வாக்களித்து, இந்த ஏழைகள் பெற்றுக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது?Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருமீண்டும் மீண்டும் வாய்ச்சவடால், அங்கீகார உணர்வு, பெருமிதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் எதையாவது செய்கிறார்கள். இதுவரையிலும் ஏழைகளுக்காக யாரும் செய்யாததை மோடி இப்போது செய்திருக்கிறார் – அவர் ஒவ்வொரு மாதமும் வானொலியில் அந்த ஏழைகளுடன் பேசுகிறார். அவர்கள் சொல்வதை தான் கவனித்துக் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர்களிடம் கூறுகிறார். ‘மன் கி பாத்’ – இதயத்திலிருந்து வருகின்ற வார்த்தைகள் என்பது அந்த வானொலி நிகழ்ச்சியின் பெயர். அதுவொரு வானொலி நிகழ்ச்சியாகும். ஏழைகளிடம் ரேடியோக்கள் உள்ள போதிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சி நன்றாகச் சிந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாக இருக்கின்றது. அந்த வானொலி நிகழ்ச்சியை வழங்கியது மட்டுமன்றி, கழிவறைகளை உருவாக்குவதன் மூலம் மோடி ஏழைகளுக்கு மரியாதை செய்திருக்கிறார். திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கழிவறைகளைக் கட்டியுள்ளார்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஆக மன்மோகன் சிங் செய்த எதையும் மோடி செய்திருக்கவில்லை. ஏழைகளுக்கு பணம் எதையும் கொடுக்கவில்லை. ஏழைகளுக்குப் பணம் கொடுத்தால் பணம் வீணாகிவிடும் என்று நினைத்த மோடி அவர்களுக்கு மரியாதையை மட்டும் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு உதவ உண்மையில் அவர் விரும்பவில்லை. அந்த உணர்வில் அவர் மிகச்சரியாக இருக்கிறார் என்றாலும் உறுதியான ஒன்றை, அவர்கள் மிகவும் மதிக்கின்ற ஒன்றை – மரியாதை மற்றும் சில உறுதியான பொருள் விநியோகத்திற்கான முயற்சியை – அவர்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார்.

தங்களுடைய சுதந்திரத்தின் இழப்பில் பாதுகாப்பு தேவை என்று மக்களிடம் உள்ள உணர்வு மோடியைத் தாண்டியும் ஏதோவொரு வகையில் தொடரக்கூடும் என்பதால் சமூகம் அவரை எதிர்கொள்ளும் விதம் நம்மிடமிருக்கும் கேள்வியை மிகவும் கடினமாக்குகிறது. தேசப் பெருமை, அங்கீகாரம் போன்றவையும் அவரைத் தாண்டியும் தொடரலாம். அதே நேரத்தில் தலைவர்களிடம் பெரிய வேறுபாடுகள் இருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

வேறு வகையான தலைமையும் இல்லை என்பதையே காட்டலாம். அதுவொன்றும் மீள முடியாதது அல்ல என்பதால் நாம் வேறு வகையான ஆட்சிக்குத் திரும்பலாம். இந்தியா போன்ற நாட்டில் தலைவர்கள் அரசியல் தலைவர்களாக மட்டுமே இல்லாமல், மனசாட்சியின் தலைவர்களாகவே இருப்பதாகக் கூறலாம். இன்றைக்கு மோடியைப் போல குரு வகை ஆளுமையாகவே தலைவர்கள் இருக்கின்றனர். எனவே, அவர்கள் அரசை ஆளுபவர்களாக மட்டும் இருக்காமல் மக்களை வழிநடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மார்க்கதரிசிகளாகக் காணப்படுகிறார்கள். மார்க்கதரிசி என்றால் வழியைக் காட்டுபவர் என்று பொருள். எனவே வேறொரு வகையான தலைமை வேறொரு சுழற்சியை – பிந்தைய தேசியவாத ஜனரஞ்சக சுழற்சி என்ற வேறு பாதையை மக்களுக்குக் காட்டலாம். அதைத்தான் நாம் அமெரிக்காவில் பார்த்தோம். வேறொரு தலைவர் வேறொரு திசையைக் காட்டக்கூடும் என்பதையும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் சாத்தியமற்றதாகத் தோன்றியவை இப்போது மிகவும் சாதாரணமானவையாகி, வேறு பாதைக்கு நாம் திரும்பியுள்ளோம் என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

எனவே அந்த வகையில் நான் நம்பிக்கையை இழந்து விடவில்லை. அது மீள முடியாதது என்றும் நான் நினைக்கவில்லை. அது அவரால் மட்டுமே நடந்ததல்ல என்பதாக என்னுடைய பகுப்பாய்வை தனிமனிதரிடமிருந்து மாற்ற விரும்புகிறேன். சமூகத்தில் உள்ள எதிர்பார்ப்புகளின் காரணமாக புதிய ஆட்சி வருவதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும்.Narendra Modi and Hindu nationalism Conversation with Christophe Jaffrelot in tamil translated by Tha Chandraguru. நரேந்திர மோடியும், ஹிந்து தேசியவாதமும் | கிறிஸ்டாஃப் ஜாஃப்ரெலோட் உடன் உரையாடல் - தமிழில்: தா.சந்திரகுருஎன்னுடன் பேச நேரம் ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி. ஏராளமான உரையாடல்களில் நரேந்திர மோடியே வருவதைப் போல நான் உணர்கிறேன். சில சமயங்களில் இந்திய அரசியலில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற முழுச் சூழலையும் புரிந்து கொள்ளாமல் நாம் அவரை வளர்த்து விடும்போது தன்னைக் குறித்த கேலிச்சித்திரமாகவே அவர் மாறி விடக்கூடும். இந்தியாவில் நிலவுகின்ற மிகப்பெரிய சூழலைப் புரிந்துகொள்வதற்கான நேரத்தை அளித்ததற்கு நன்றி. மிக்க நன்றி.

நன்றி, ஜஸ்டின். உங்கள் அழைப்பிற்கு நன்றி.
https://democracyparadox.com/2021/07/13/christophe-jaffrelot-on-narendra-modi-and-hindu-nationalism/

நன்றி: டெமாக்ரசி பாரடாக்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

28 ஆண்டுகளுக்குப் பிறகு, பாபர் மசூதி மீண்டுமொருமுறை இடிக்கப்பட்டது – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)

28 ஆண்டுகளுக்குப் பிறகு, பாபர் மசூதி மீண்டுமொருமுறை இடிக்கப்பட்டது – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)

பாபர் மசூதியை இடிப்பதற்கென்று எந்தவொரு திட்டமும் இருக்கவில்லை என்ற புதிய உண்மை ஒன்று இறுதியாக நமக்குக் கிடைத்திருக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும், மசூதியை இடித்து வீழ்த்த சதி செய்ததாகக் கூறப்படுவதை நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற அடிப்படையிலே…
பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னால் எந்தவொரு சதியும் இல்லை என்பதை பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே நம்ப முடியும்  – சரத் பிரதான் (தமிழில்: தா.சந்திரகுரு)

பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னால் எந்தவொரு சதியும் இல்லை என்பதை பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே நம்ப முடியும்  – சரத் பிரதான் (தமிழில்: தா.சந்திரகுரு)

லக்னோவைச் சார்ந்த பத்திரிக்கையாளரான சரத் பிரதான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரடி சாட்சியாக இருந்தவர் 1980களின் முற்பகுதியில் இருந்தே அயோத்தியில் நடந்து வந்த நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், 1992 டிசம்பர் 6 அந்த இருண்ட ஞாயிற்றுக்கிழமையன்று அயோத்தியில்…
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது என்ன நடந்தது? – தி வயர் இணைய இதழ் (தமிழில்: தா.சந்திரகுரு)

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது என்ன நடந்தது? – தி வயர் இணைய இதழ் (தமிழில்: தா.சந்திரகுரு)

2017 டிசம்பர் 6 அன்று தி வயர் இணைய இதழ் நடத்திய கலந்துரையாடலின் போது, 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வேளையில், அங்கே செய்திகளைச் சேகரித்த தங்களுடைய அனுபவங்களை சில மூத்த பத்திரிக்கையாளர்கள் நினைவு கூர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில்…