து.பா.பரமேஸ்வரி கவிதைகள்
அழுகையைக் கொண்டாடுங்கள்
*********************************************
விழிகளிலிருந்து வழியும் நீர் வரிகள் நீ….
நீ வார்க்கும் நீர் தான்
கவிதை நீர் வரிகளாகிறது.
உயிர் ஆக்கத்திலும் உனது வருகை
உயிர் தேகத்திலும் உனது இருக்கை
உயிர் நீக்கத்திலும் ஓங்கும்
உனது பெருங்கை
ஆதியிலும் நீயே
அந்தத்தை முடிவுறச்
செய்வதிலும் நீயே…
படைப்பின் முன் நிலையும் நீயே….
வாழ்தொகுப்பின் இடை நிலையும் நீயே
இப்பெரு வாழ்வின் கடை நிலையும் நீயே..
நீரின்றி அமையாது உலகம் போல ….
நீயின்றி அமையாது இந்த மீப்பெரும்வாழ்வு
இனி….
அழுகையை எண்ணி அழ வேண்டாம்…..
மதி கெட்ட மனிதன்
****************************
மதம் மீது மதம் பிடித்த மூடன்
சாதி சகதி சுமக்கும் சண்டியன்
மனிதம் உண்டு மனிதம் கொன்று
வாழும் மிருதன்
பிஞ்சை கசக்கவும் தயங்குவதில்லை
பச்சிளங் கன்றை நசுக்கவும் அசருவதில்லை..
நெஞ்சில் அரக்கம் சுமக்கும் அசுரன்
வாழும் நிலத்தை மலடாக்கி
நுகரும் காற்றை நஞ்சாக்கி
கொக்கரித்தான்..
நின்றதா அவன் பசியென்றால்.
இல்லை..
இல்லவே இல்லை..
தொடர்ந்தன வேட்டை…
பணவெறிக் கண்ட கண்கள்
சுற்றி முற்றி விட்டன நோட்டம்
கண்டான் நீரை..
கொன்றான் அதன் இயல்பை..
பல்லுயிர்க்கும் பொதுவான
இயற்கைப் படைப்பு..
உயிரனைத்தும் தேவைத் தேடிப் பயணிக்க..
பிறப்பின் பால் அகம் கொண்ட மனிதன்
அனைத்திற்கும் பொதுவானதை
தான் தேடிப் போகாமல்
தன்னகம் நுகர வைத்தான்…
அத்துடன் நின்றதா
அவனது பெரும்வேட்கை..
மண்ணைக் கண்டான்..
மதியை இழந்தான்..
மீண்டும் பிறந்தது
மற்றுமொரு மகாபாரதம்..
அன்றோ மண்ணை ஆள போர்தொடுத்தான்
இன்றோ ஆற்று மணலை கவர கொள்ளையிட்டான்
இரண்டிலுமே..
இழப்பென்பதோ
ஊமைவிழிகளுக்கே..
என்றுத் தணியும் இந்த
குருதியின் தாகம்..
என்று மடியும் இந்த மானிடர் மோகம்…