திரைவிமர்சனம்: பகாசுரன் – ரமணன்
பிப்ரவரி 2023இல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம். மோகன்.ஜி. சத்திரியன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். அவரே படத்தை தயாரித்துமுள்ளார். ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி எனும் நடராஜன், ராதா ரவி, தயாரிப்பாளர் ராஜன், தாராக்ஷி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
பெண்களை ஆபாசப் படம் எடுத்து பாலியல் பலவந்தம் செய்வது மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என்பதே கதையின் மையக்கரு. இதில் ஒரு வலைப்பின்னல் போல் புரோக்கர்கள், வசதி படைத்தவர்கள் ஒரு புறம். இன்னொரு புறம் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஏன் வாட்ச்மேன் உட்பட பெண்களை மிரட்டி தங்கள் இச்சைக்கு அடிபணிய வைக்கிறார்கள். வழக்கம் போல காவல்துறையும் அரசியல் தலையீடுகளும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்காமல் செய்கின்றனர். அதில் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ வீரன் ஒருவன் குற்ற நிகழ்வுகள் குறித்த காணொளி மூலம் மக்களிடையே விழிப்புணர்வு கொள்ள வைக்கிறான். அவனுடைய சொந்த குடும்பத்திலேயே நடைபெற்ற தற்கொலையை துப்பு துலக்கும்போது இந்த வலைப்பின்னல்களை காண்கிறான். இன்னொருபுறம் அரசு இயந்திரத்திடமிருந்து நியாயம் கிடைக்காத பாதிக்கப்பட்ட ஒருவன் திரைப்பட பாணியில் குற்றம் செய்தவர்களை பழி வாங்குகிறான். அதற்கு மகாபாரதக் கதையை துணைக்கு அழைக்கிறார் இயக்குனர். இதெல்லாம் சரி. ஆனால் கடைசியில் செல்போன் வைத்திருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று அறிவுரையோடு படம் முடிகிறதே அங்கே இயக்குனர் சறுக்கி விழுந்து விடுகிறார். பகாசுரன் யார் என்றால் சமூக விரோத கனவான்கள் அல்லவாம்; செல்போன்கள்தான் பகாசுரனாம்.
செல்போன் மூலம் சில பெண்கள் ஏமாற்றப்படுவது உண்மைதான். ஆனால் அரசும் நியாயத்திற்குப் போராடும் அமைப்புகளும் வலுவாக இருந்தால் கயவர்களை தண்டிக்க முடியும். அதைதான் சமூக அக்கறையுள்ள ஒரு படம் பேச வேண்டும். மீண்டும் தனி நபர் சாகசம் மூலம் நடக்க முடியாத விசயங்களை காட்டி ஒரு அவதார புருஷனுக்காக மக்கள் காத்துக் கிடக்கும் மனோநிலையை தான் இப்படிப்பட்ட படங்கள் உருவாக்குகின்றன.
அதோடு பெண்கள் நிலை தடுமாறுவதுதான் காரணம் என்றும் படம் கூறுகிறது. அரசியல் ஆதிக்கத்திலிருப்பவர்கள், காவல்துறை, பெண்களின் கல்விக் கனவை நாசமாக்கும் கல்லூரி கனவான்கள் இவர்களெல்லாம் தவறு செய்வதாகக் காட்டிவிட்டு அவர்களை தனி மனிதன் தண்டிப்பதாகவும் காட்டிவிட்டு ஆனால் பெண்கள்தான் காரணம் என்று முடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சட்ட ரீதியாக போராட முயற்சிக்கும் இன்னொரு தனிமனிதனின் போராட்டத்தையும் அழுத்தமாக காட்டவில்லை.
கதையின் முக்கிய பாத்திரம் கூத்து கட்டும் கலைஞன். ஓரிரு இடங்களில் மட்டுமே அவன் கூத்து கட்டுவது லேசாக காட்டப்படுகிறது. சிவன் குறித்த ஒரு முழு பாடல் காட்சியும் ஐட்டம் சாங் எனப்படும் நடனமும் படத்தில் இடம் பெற்றிருக்கும்போது ஏன் கூத்தை இன்னும் சிறிது அழுத்தமாகக் காட்டியிருக்கக் கூடாது?
தன் பெண் தவறு செய்யவில்லை என்பதை அழுத்தமாக ஏற்றுக்கொள்ளும் தந்தை, அவளை ஆறுதல் படுத்தி தைரியம் கொடுப்பது, பெண்ணும் தந்தையிடம் மனம் திறந்து பேசுவது, தாத்தா,தந்தை,பெண் என ஒரு பாசமான குடும்பம் இவையெல்லாம் சற்றே ஆறுதலான விஷயங்கள்.
பல ஆங்கில நாளேடுகள் மற்றும் தினமணி ஆகிய விமர்சகர்கள் கதையின் கருவை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். செல்வராகவனின் நடிப்பை பாராட்டியுள்ளார்கள்.
– ரமணன்