வலியிலிருந்து லாபம் கட்டுரை – அ.பாக்கியம்
(தமிழ் மார்க்ஸ் ஸ்பேஸில் 27.01.23. அன்று ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)
ஆக்ஸ்பாம் ஒரு தன்னார்வ அமைப்பாகும். பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் சுதந்திரமான, நியாயமான சமுதாயத்தை நிலை நாட்டவும் பாடுபடுவதாக அந்த அமைப்பில் நோக்கங்கள் தெரிவிக்கிறது.
இந்த அமைப்பு உலகம் முழுவதும், இந்தியாவிலும் ஆய்வுகளை நடத்தி அவ்வப்போது வெளியிடுவது பல தாக்கங்களை உருவாக்கி இருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக உள்ளடக்கி ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. சமத்துவமின்மையின் பலி, வலியிலிருந்து லாபம் என்ற அறிக்கைகள் ஏராளமான விவரங்களை தெரிவிப்பதுடன் இந்தியா சந்திக்கக்கூடிய நெருக்கடிகளை அம்பலப்படுத்தியும் உள்ளது.
பொதுவான ஏற்றத்தாழ்வுகள், ஏற்றத்தாழ்வுக்கான காரணிகள், நிதி ஒதுக்கீடுகள், கோவிட் கால ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள், வரி விகிதங்கள் ஏற்படுத்தும் தாக்கம், ஆகியவற்றை ஆய்வு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைப்புக்கும் உடனடி தீர்வுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதிலும் குறிப்பாக முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடிக்கக்கூடிய நாடுகளிலும் இந்தியாவிலும் அதிகரித்து உள்ளது. உலகின் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 300 கோடி மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களை விட அதிகமாக உள்ளது. ஏழை நாடுகளில் மருத்துவ வசதி இல்லாமல் வருடத்திற்கு 56 லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள்.
21 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் 10 சதவீத பணக்காரர்களிடம் 60 சதவீதமான சொத்துக்கள் உள்ளதது. 2021-ம் ஆண்டின் கணக்கின்படி 1% பணக்காரர்களிடம் 40.5% சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடித்தட்டில் உள்ள 50 சதவீதமான மக்கள் 3 சதவீதம் சொத்துக்களை மட்டுமே வைத்துள்ளனர். ஏற்றத்தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்குமாக அதிகரித்துள்ளது.
சமத்துவமின்மையின் வகைகள்.
ஏற்கனவே வர்க்கம், பாலினம், சாதி, மதம், பிரதேசம் ஆகிய வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அறிவியல் வளர்ச்சி சமத்துவமின்மையை குறைப்பதற்கு பதிலாக லாபத்தை குறிக்கோளாக கொண்டிருக்க கூடிய அமைப்பில் டிஜிட்டல் டிவைட்(Digital Divide)என்ற புதிய வகையும் சேர்ந்துள்ளது. இவையெல்லாம் சமத்துவமின்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படும் களமாகும்.
வலியிலிருந்து லாபம்:
அரசாட்சி உட்பட அனைத்தும் செல்வந்தர்களின் கையில் இருப்பதால் அவர்களுக்கான உலகமாகவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோய் காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு பில்லியனர் உருவாகிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் ஒவ்வொரு 33 மணி நேரத்தில் 10 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டார்கள். 2022 ஆம் ஆண்டு மற்றும் 263 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்றார்கள்.
இந்தியாவில் 21 பில்லியனர்கள் கையில் 70 கோடி மக்களின் சொத்துக்கள் அளவு குவிந்திருக்கிறது. கடந்த 23 ஆண்டுகள் பெற்ற லாபத்தை விட பெருந்தொற்று நோய் காலத்தில் அதாவது 24 மாதத்தில் அதிக லாபத்தை பெரும் முதலாளிகள் சுரண்டியுள்ளார்கள்.
2020 மார்ச் 20 ஆம் தேதி முதல் 2021 நவம்பர் 30 வரை பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு ,23.14லட்சம் கோடியிலிருந்து 53. 16 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது என்றால் தொற்று நோயை விட இவர்களின் லாபவெறிதான் மக்களை சாகடித்தது. இந்தியாவில் இக்காலத்தில் டாலர் பணக்காரர்கள் 102 இருந்து 142 ஆக உயர்ந்துள்ளார்கள் அதாவது 39 சதவீதம் பணக்காரர்கள் அதிகமாகியுளானர் .
84 சதவீதம் குடும்பங்கள் இந்தியாவில் தொற்று நோய் காலத்தில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறார்கள். 4 வினாடிக்கு (நிமிடத்திற்கு அல்ல) ஒருவர் இந்த சமத்துவமின்மையால் மரணம் அடைந்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டில் மட்டும் 4.6 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டில் விழுந்தனர். இது பெருந்தொற்று நோய் காலத்தில் உலகில் உருவான ஏழைகளில் சரிபாதியாகும்.
பாலின அசமத்துவம்:
தொற்று நோய் இல்லாத காலத்தில் சமூக வளர்ச்சிப் போக்கில் பாலின சமத்துவத்தை அடைய 99 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று பொதுவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று நோயின் தாக்கத்தால் பாலின சமத்துவம் அடைவதற்கு 135 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. இவை ஒரு மேலோட்டமான மதிப்பீடு என்றாலும் தொற்று நோய் காலத்தில் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
2020 ஆம் ஆண்டு மட்டும் பெண்கள் 59.11 லட்சம் கோடி வருவாய் இழப்புகளை சந்தித்து உள்ளனர். 2019 ஆம் ஆண்டு பெண்கள் உழைப்பாளிகளை விட தற்போது 1.3 கோடி பெண்கள் உழைப்பாளிகள் குறைவாக இருக்கிறார்கள்.
டிஜிட்டல் அசமத்துவம்:
நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், கருவிகளும் வசதியானவர்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் செல்போன்கள் ஆண்களிடம் 61% இருந்தது. பெண்களிடம் 31% இருந்தது. இன்டர்நெட்களை ஆண்கள் பயன்படுத்துவதை விட பெண்கள் 33 சதவீதம் குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
பழங்குடி பட்டியல்யினத்தினர் கணினியை ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், பட்டியலின சாதியினர் 2 சதவீதம் குறைவாகத்தான் கணினியை பயன்படுத்துகிறார்கள்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மற்றும் தேசிய மாதிரி ஆய்வு மையத்தின் விபரப்படி 2021 இல் நிரந்தர வருமானம் உள்ளவர்கள் 95 சதவீதம் செல்போன்களை பயன்படுத்துகிற பொழுது, வேலை கிடைக்காதவர்கள் 50 சதவீதம் மட்டும்தான் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.
கணினியை பயன்படுத்துவதிலும் கிராமத்திற்கும் நகரத்திற்குமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளது. தொற்றுநோய் காலத்திற்கு முன்பு கிராமப்புறத்தில் கணினியை 3% பயன்படுத்தினர். நோய் காலத்திற்குப் பிறகு இது 1% குறைந்துவிட்டது.
ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வது 82 சதவீதமான பெற்றோர்கள் சிக்னல் கிடைக்காமல், இன்டர்நெட்டின் வேகம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். 84 சதவீதம் அரசு பள்ளி ஆசிரியர்கள் இணையம் இல்லாமல் கல்வி போதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
சமத்துவமின்மையின் குறைப்பதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுவதை விட லாப நோக்கம் அசமத்துவமின்மையை அதிகப்படுத்தியது.
தீமையின் வடிவம் தனியார்மயம்:
முதல்முறையாக இந்த அறிக்கையில் சமத்துவமின்மை அதிகம் ஆவதற்கு தனியார் மையம் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர். கல்வியில் தனியார் மையம் ஆதிக்கம் செலுத்துவது சமமான கல்வி கிடைக்காமல் இருக்க காரணமாகியது. தனியார் பள்ளிகளில் 52% பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர். 35 சதமான குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். 57 சதமான மக்கள் அதிக கட்டணத்தை செலுத்தி படிக்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதேபோன்று மருத்துவ செலவுகள் உள்நோயாளிகளுக்கு ஆறு மடங்கு அதிகமாகவும், புறநோயாளிகளுக்கு மூன்று மடங்கு அதிகமாகவும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. மக்களின் அடிப்படை வசதிகளை தனியார்மயமானால் அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
அரசும் நிதி ஒதுக்கீடை வெட்டியது:
இந்தியாவில் 21- 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 10% நிதியை பொது சுகாதாரத்தில் குறைத்தார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) பொது சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படக்கூடிய நிதியின் அளவு 1.2 முதல் 1.6 மட்டும்.
கடந்த 22 ஆண்டுகளில் பொது சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டில் 0.09% மட்டும்தான் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று கல்வித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளில் 0.07% மட்டும்தான் நிதி உயர்வு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட செலவு, தேசிய சமூக உதவித் திட்டம் ஆகியவற்றிற்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு ஒட்டு மொத்த செலவில் 0.6 சதவீதம் மட்டும்தான் ஒதுக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகள் 1.5% ஒதுக்கப்பட்டதிலிருந்து சரிபாதியாக வெட்டப்பட்டுள்ளது.
தொற்று நோய் காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு பக்கம் கொள்ளை அடிக்க,ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கீட்டை வெட்டி மக்களை மரணப் குழிக்கு தள்ளியது.
அண்டை நாடுகளுடன் ஒப்பீடு:
சமத்துவமின்மை குறியீட்டை குறைப்பதற்கான அர்ப்பணிப்பு (commitment to two reduce inquality index) என்ற திட்டத்தின் அடிப்படையில் பல நாடுகள் தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட மத்துவத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் இந்தியாவில் இந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. சுகாதார செலவினத்தில் இந்தியா இரண்டு இடம் பின்னுக்குப் போய் கடைசி ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறியது.
இந்தியா மொத்த செலவில் சுகாதாரத்திற்காக ஒதுக்குவது 3.64% மட்டுமே. ஆனால் பிரிக்ஸ் நாடுகளான சீனா, ரஷ்யா 10 சதவிகிதம் பிரேசில் 7.7 சதவீதம், தென் ஆப்பிரிக்கா அதிகபட்சமாக 12 9% செலவழிக்கிறது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான 4.3, வங்கதேசம் 5.19, இலங்கை 5.88, நேபாளம் 7.8 சதவீதங்கள் செலவழிக்கிற பொழுது இந்தியாவின் நிலைமை படுமோசமாக இருக்கிறது.
வரி சுமை ஏழை மக்களுக்கு:
தொற்று நோய் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30% வரியிலிருந்து 22 சதவீத வரியாக ஒன்றிய அரசு குறைத்தது. தொழில் வளர்வதற்காக ஊக்கப்படுத்தக்கூடிய முறையில் இது குறைக்கப்படுவதாக மோடி அரசு அறிவித்தது. தொழில் வளரவில்லை மாறாக 1.5 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டது.
இந்தியாவில் 50 சதவீத ஏழை மக்கள் தான் அதிகமான ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள். கீழ்த்தட்டில் உள்ள 50 சதவீதமான இந்தியர்கள் 64. 3 ஜிஎஸ்டி வரியை செலுத்துகிறார்கள் பணக்காரர்கள் 3 முதல் 4 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். தொற்று நோய் காலத்தில் பல லத்தின் அமெரிக்க நாடுகளில் பணக்காரர்களுக்கு செல்வ வரி போடப்பட்டது. இந்தியாவில் மட்டும் சலுகை கொடுக்கப்பட்டது.
எனவே ஆக்ஸ்ஃபார்ம் அறிக்கை உலகில் ஏற்பட்டுள்ள அசமத்துவம் இன்மையை பளிச்சென படம் பிடித்து காட்டியுள்ளது தொற்றுநோய் காலத்தில் இந்த அசமத்துவமின்மை மிகப் பெரும் அளவுக்கு அதிகரித்து உள்ளது என்பதே அபாயகரமான முறையில் இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
செல்வ வரியை விதிப்பது உடனடி தீர்வு. இந்தியாவில் 98 பில்லியனர்களுக்கு 4% வரி விதித்தால் 17 ஆண்டுகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை நிதி பற்றாக்குறை இன்றி நடக்கலாம். பள்ளிக் கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஈடு கட்டலாம். ஆண்டுக்கு பத்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இரண்டு சதவீதம் வரி விதித்தால் பட்ஜெட் வரவில் 121% அதிகரிக்கும்.
செல்வந்தர்களுக்கான அரசு இவற்றையெல்லாம் செய்யாது. அறிக்கைகள் அரசுக்கு ஆலோசனை சொன்னாலும் அது மக்களுக்கான அறைகூவலாக எடுத்துக் கொண்டு செல்வந்தர்களுக்கான ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி உழைப்பாளி மக்களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவது மூலமாகத்தான் சமத்துவமின்மையை போக்க முடியும் இவைதான் சோசலிச நாடுகளிலும் நடந்து வருகிறது. தற்போது முற்போர்காளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தென்னமெரிக்க நாடுகளில் இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் நடந்து வருகிறது.
அசமத்துவத்தை தகர்த்து சமத்துவம் நோக்கி முன்னேறுவதற்கு உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம்.
அ.பாக்கியம்
அமெரிக்கா: கைதிகளின் கூடாரமா? – அ.பாக்கியம்
உலகத்தின் ஒட்டுமொத்த சுதந்திரத்தின், மனித உரிமையின் சொந்தக்காரன் நான்தான் என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பிரச்சாரங்கள் போலியானது என்பது அனைவரும் அறிந்ததே.
ராணுவ மேலாதிக்கத்தை வைத்துக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதாகத் தலையிட்டு பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
உலகத்தில் தனது ராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் நாடு அமெரிக்கா தான். 2022 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவின் ஆறு பாதுகாப்பு துறை அமைப்புகளுக்கு (departments of defence) ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி 1.64 ட்ரில்லியன் டாலர் ஆகும்.
அமெரிக்காவின் காவல்துறை மட்டுமே பெறக்கூடிய நிதி ஒதுக்கீடு உலக ராணுவத்தில் அதாவது அமெரிக்கா சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடிக்கிறது .
நியூயார்க் நகர காவல் துறை (NPYD) 8.4(80லட்சம்) மில்லியன் மக்களுக்கு சேவை செய்கிறது. இதற்காக ஒதுக்கப்படும் நிதி 5.5 பில்லியன் டாலர் ஆகும். 98.17(சுமார் 10 கோடி) மில்லியன் மக்கள் தொகை கொண்ட வியட்நாம் நாடு இதே அளவுக்கான தொகையைதான் ஒட்டுமொத்த ராணுவத்திற்கும் செலவு செய்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பார்வையில் வடகொரியா ராணுவ மயமாக்கப்பட்ட ஒரு சர்வாதிகார நாடாகும். சுமார் 26(2 கோடி 60 லட்சம்) மில்லியன் மக்கள் வாழும் வடகொரியாவின் மொத்த ராணுவ பட்ஜெட் சுமார் 1. 6 டாலர் ஆகும். ஆனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) 3.85 (38 லட்சம்) மில்லியன் மக்கள் தொகை வசிக்கும் நகரத்திற்கான காவல்துறை ஆகும். இந்த காவல்துறைக்கு ஆண்டு பட்ஜெட் 1. 9 பில்லியன் டாலர் ஆகும். வடகொரிய நாட்டில் ஒட்டு மொத்த ராணுவ செலவைவிட அதிகமானது.
ஒட்டுமொத்தமான சமூகத்தையே கட்டுப்படுத்த கூடிய அளவுக்கு காவல்துறை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக கருப்பின மக்களுக்கு எதிராக செயல்படும் முறைகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களை ஆகும்.
உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே. ஆனால் கைதிகளில் 20 முதல் 25 சதம் வரை அமெரிக்காவின் பங்காக இருக்கிறது. ஒப்பீட்டு அளவில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சீனாவை சர்வாதிகார நாடு என்றும், மனித உரிமைகளை மீறும் நாடு என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் உலக மக்கள் தொகையில் 18.5% பங்கு உள்ள சீனாவின் கைதிகள் 15 சதவீதம் மட்டுமே. 194 நாடுகள் உள்ள கைதிகளை ஒப்பிட்டால் அமெரிக்காவின் சிறை கைதிகள் அதைவிட அதிகமாக இருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடந்த உச்சகட்ட காலத்தில் சோவியத் யூனியனில் போர் கைதிகளையும் சேர்த்து 2.5 மில்லியன் கைதிகள் இருந்துள்ளார்கள். அமெரிக்காவின் கைதிகள் இதை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் வன்முறை காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்த கைதிகளில் 67% பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். ஜாமின் பெறுவதற்கான தொகை என்பது ஒரு ஏழையின் 8 மாத ஊதியமாக இருப்பதால் வசதியற்றவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத நிலைமை உள்ளது.
முதலாளித்து வர்க்கத்தின் சிறந்த நலன்களுக்காக, பொருளாதார சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அமெரிக்க அரசு, காவல் துறையையும் சிறைவாசத்தையும் நம்பி இருக்கிறது.
அமெரிக்க தனியார் சிறைகளில் உள்ள கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டுள்ள தனியார் தடுப்பு சிறைகள் நிலைமை மோசமாக உள்ளது.
2019 ஆம் ஆண்டில், 1,16,000 ( பிப். 4, 2021 அன்றைய ஐக்கிய நாடுகள் செய்திகள்) அமெரிக்கக் கைதிகள் தனியாரால் இயக்கப்படும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது மொத்த கைதிகளில் 16 சதவிகிதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. 2021 ஆண்டு செப்டம்பர் வரை மெக்ஸிகோ எல்லையில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை அமெரிக்க அதிகாரிகள் தடுப்புச் காவலில் வைத்துள்ளனர். அவர்களில், 45,000 குழந்தைகள் உட்பட, 80 சதவீதம் பேர் தனியார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தடுப்பு சிறைகள் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டு இயக்கப்படுகின்றன. செலவுகளைக் குறைப்பதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும், தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு குறைந்தபட்ச தரங்கள் இல்லாமல் கட்டமைக்கின்றன. இதன் விளைவாக மோசமான, கடுமையான உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது.
அரசின் கண்காணிப்பு குறைபாடுகளால் தடுப்பு சிறைகளில் வசதிகள் குறைவாகவும், குழப்பமான நிர்வாகம் நடப்பதற்கும்,மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறுவதற்கும் வழிவகுக்கிறது.
சிறைச்சாலை உணவு மற்றும் சுகாதார சேவைகளை நடத்துவதற்கான ஒப்பந்தங்களை தனியார் பெருநிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள். இந்தத் தொழில்களில் சிறைத் தொழிலாளர்களைச் குறைந்த கூலிக்கு சுரண்டுவது மூலம் அதிக லாபத்தை தனியார் நிறுவனங்கள் அடைகிறது.
2017 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, சிறைத் தொழிலில் பெரும்பாலான நிறுவனங்கள் கைதிகளுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 86 சென்ட் முதல் $3.45 வரை ஊதியம் வழங்குகிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து அமெரிக்க மாநிலங்களில் இது போன்ற சிறைத் தொழில்கள் உள்ளன. இங்கு உள்ள சிறைக்கைதிகள் தனியார் நிறுவனங்களால் அடிமைகளைப் போன்றே நடத்தப்படுகிறார்கள்.
பல பன்னாட்டு நிறுவனங்களும் இலாபத்தை அதிகரிக்க, அமெரிக்க சிறைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி பெரும் லாபத்தை ஈட்டுகின்றனர். தொற்றுநோயின் உச்சத்தில் COVID-19 ஐ எதிர்த்துப் போராட, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் முககவசம் மற்றும் கைசுத்திகரிப்பு பொருட்களை தயாரித்தனர்.
தனியார் நிறுவனங்கள் கைதிகளைக் கொண்டு நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளிலும், தீயணைப்பு பணிகளிலும், ஏராளமான கட்டுமான பணிகளிலும், பண்ணைகளிலும் வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். ஏலம் எடுப்பதன் மூலமாக இந்த செய்திகளை பயன்படுத்தி குறைந்த கூலி கொடுத்து அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். என்னதான் வேலை செய்தாலும் விடுதலையான பிறகு கைதிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.
மனித உரிமைகளை பற்றியும், உலக சுதந்திரத்தை பற்றியும் பேசிக்கொண்டே நாட்டோ அமைப்புகள் மூலமாக உலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர யுத்தங்களை கொடுத்தும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தும் உலக மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறது அமெரிக்கா.
அதே நேரத்தில் உள்நாட்டில் மக்களை காவல்துறையின் கட்டுப்பாட்டுகுள்ளும், சிறைத் தொழில்கள் மூலமும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் நலன்களை பேணி காத்து வருகிறது.
– அ. பாக்கியம்
டிச:19 அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்ட நாள் – அ.பாக்கியம்
“மனித கொலையால் என் கைகள் அழுக்காக்கப்படவில்லை. என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது” – அஷ்பகுல்லா கான்
(ஆங்கிலேய காவல்துறையால் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு கூறிய கடைசி வார்த்தைகள்)
டிசம்பர் 19, 1927 பைசாபாத் சிறையில் தனது 27 வது வயதில் அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். காக்கோரி சதி வழக்கில் (Kakori Conspiracy) தண்டிக்கப்பட்டவர்களில் நான்கு பேர், அக்டோபர் 17 முதல் 19 வரை தூக்கிலிடப்பட்டார்கள். இந்த நாட்கள் காக்கோரி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
22, அக்டோபர் 1900-ல் அஷ்பகுல்லா கான், ஐக்கிய மாகாணத்தில் உள்ள ஷாஜஹான்பூர் (உ.பி.) மாவட்டத்தில் நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஷபிக் உல்லா கான், தாய் மஜருனிசா. ஐந்து உடன்பிறப்புகளில் அஷ்பகுல்லா கான் இளையவர்.
இந்தியாவில் 1918ஆம் ஆண்டில், காலனித்துவ எதிர்ப்பு இலக்கியங்களை வெளியிடுவதற்கு நிதி திரட்டுவதற்காக கிராமங்களில் இருந்த பணக்காரர்களிடம் கொள்ளையடிப்பது (Money Action) என்று முடிவு செய்து மெயின்புரி கிராமத்தில் சுதந்திரப் போராளிகள் செயலில் இறங்கினர். இதையடுத்து மெயின்புரி சதி வழக்கை தொடுத்த பிரிட்டீஷ் போலீசார், சுதந்திரப் போராளிகளை தேட ஆரம்பித்தனர்.
அஷ்பகுல்லா கான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பள்ளியில், பிரிட்டீஷ் போலீசார் திடீர் சோதனை நடத்தி மெயின்புரி சதி வழக்கில் தொடர்புடைய ராஜாராம் பாரதியாவைக் கைது செய்தனர். இந்த சம்பவம்தான், அஷ்பகுல்லா கான், புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.
சோட்டா உல்லா கான் என்பவர் அஷ்பகுல்லா கானின் மூத்த சகோதரர்களில் ஒருவர். அவர், பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மிலின் வகுப்புத் தோழர். 1918ல் மெயின்புரி சதி வழக்குக்குப் பிறகு, ராம் பிரசாத் பிஸ்மில் பிரிட்டிஷ் போலீசில் சிக்காமல் தலைமறைவானார். பிரசாத் பிஸ்மிலின் துணிச்சலான நடவடிக்கைகளை தேசபக்தியைப் பற்றி, அஷ்பகுல்லா கானிடம் விவரித்து சொல்வார் அவருடைய அண்ணன். சோட்டா உல்லா கான்.
பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மிலின் தேசபக்த நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட அஷ்பகுல்லா கான், அவர் 1920ல் உ.பி. ஷாஜஹான்பூருக்கு வந்தபோது அவரைச் சந்தித்தார். அப்போது பிஸ்மிலுடன் கான் தன் கவிதைகள் மற்றும் கஜல்களைப் பரிமாறிக் கொள்வது மட்டுமே சாத்தியமானது.
ராம் பிரசாத் பிஸ்மில் இந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர். அஷ்பகுல்லா கான் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். மதம், ஜாதி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சுதந்திரப் போராட்டத்தில் பலரும் இணைந்து ஈடுபட்டனர். பிஸ்மிலும், கானும் அப்படி இணைந்து செயல்பட்டனர். பொதுவான சித்தாந்தம், லட்சியங்கள் தேசபக்தி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் நட்பு நெருக்கமாக இருந்தது.
1922 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரி சௌரா என்ற சிறிய நகரத்தில் நடந்த படுகொலைக்குப் பிறகு மகாத்மா காந்தி அவர்களால் திரும்ப பெறப்பட்டது.
இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்களும் புரட்சியாளர்களும் இணைந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது இந்த இளம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர்களில் அஷ்பகுல்லா கானும் ஒருவர்.
1924 ஆம் ஆண்டில், ராம் பிரசாத் பிஸ்மிலின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், அஷ்பகுல்லா கான் மற்றும் அவரது தோழர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட தனி புரட்சிகர அமைப்பை நிறுவ முடிவு செய்தனர். இந்துஸ்தான் குடியரசுக் கழகம் (HRA- Hindustan Republican Association) 1924ல் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான ஆயுதப் புரட்சிகளை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்தது.
1925 ஆம் ஆண்டில், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் ஹெச்ஆர்ஏ அமைப்பின் பிற புரட்சியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் செலவுகளை சமாளிக்க காக்கோரிக்கு ரயிலில் கொண்டு வரப்படும் அரசாங்கப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டனர்.
ரயில் கொள்ளைக்கு எதிராக கான் இருந்தார்.மேலும் அவர், தனது குழு உறுப்பினர்களிடம் இந்தக் கொள்ளையினால் பல அப்பாவி பயணிகளுக்கு மரணம் ஏற்படலாம் என்றும் அதனால் ரயில் கொள்ளை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தன் கருத்தை தெரிவித்தார். அவரின் அறிவுரையை குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மேலும், இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற லட்சியவேட்கை அவர்களை 1925ல் காக்கோரி ரயிலைக் கொள்ளையடிக்கத் தூண்டியது. இந்தக் கொள்ளை இந்தியாவில் இந்துஸ்தான் குடியரசுக் கழகம் (HRA) என்ற அமைப்பின் மூலம் ஆயுதப் புரட்சியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது.
ஆகஸ்ட் 8, 1925 அன்று, ஹெச்ஆர்ஏ அமைப்பைச் சேர்ந்த புரட்சிகர உறுப்பினர்களால் காக்கோரி ரயிலைக் கொள்ளையடிக்க ஷாஜஹான்பூரில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. காக்கோரி-லக்னோ ரயிலில் அரசு கருவூலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதை ராம் பிரசாத் பிஸ்மில் ஏற்கனவே தனது பயணத்தின்போது நோட்டமிட்டிருந்தார். அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி, தாக்கூர் ரோஷன் சிங், சசீந்திர பக்ஷி, சந்திரசேகர் ஆசாத், கேசப் சக்ரவர்த்தி, பன்வாரி லால், முராரி லால் குப்தா, முகுந்தி லால், மன்மத்நாத் குப்தா ஆகியோருக்கு காக்கோரி ரயில் பண நடவடிக்கைக்கான பொறுப்பு வழங்கப்பட்டது.
9 ஆகஸ்ட் 1925 அன்று, ரயில் ஷாஜஹான்பூரில் இருந்து லக்னோவிற்கு புறப்பட்டது, புரட்சியாளர்கள் ஏற்கனவே ரயிலில் ஏறியிருந்தனர். பயணத்தின் நடுவே ரயிலின் சங்கிலியை யாரோ இழுத்து விட்டார்கள். இதனால் ரயிலை நிறுத்திய காவலாளி திடீரென சங்கிலி இழுத்ததற்கான காரணத்தை சோதிப்பதற்காக ரயிலில் இருந்து வெளியே வந்தார். அஷ்பகுல்லா கான், சசீந்திர பக்ஷி மற்றும் ராஜேந்திர லஹிரி ஆகியோர் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து வெளியே வந்தனர். முதலில் சிலர் காவலரை சிறைப் பிடித்தனர், வேறு சிலர் இன்ஜின் டிரைவரை ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டு சிறைப்பிடித்தனர். புரட்சியாளர்களில் இருவர் ரயிலின் இரு முனைகளிலும் துப்பாக்கி முனையில் காவலுக்கு நின்றனர்.
இந்த நடவடிக்கையின்போது புரட்சியாளர்கள் ரயில் பயணிகளை எச்சரித்தனர். ‘‘ பயணிகளே, பயப்பட வேண்டாம். நாங்கள் விடுதலைக்காகப் போராடும் புரட்சியாளர்கள். உங்கள் உயிரும், பணமும், கௌரவமும் பாதுகாப்பாக உள்ளன. நீங்கள் ரயிலில் இருந்து வெளியே எட்டிப்பார்க்காமல் இருங்கள்” என்றனர்.
ரயில் காவலாளியின் கேபினில் கருவூலப் பணப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதைப் புரட்சியாளர்கள் ரயிலைவிட்டு இறக்கி வெளியே கொண்டு சென்றனர்.
பிரிட்டாஷாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு, அரசாங்கம் தீவிர விசாரணையில் இறங்கியது. ரயில் கொள்ளையில் ஈடுபட்ட புரட்சியாளர்களின் இருப்பிடம் பற்றி ஒரு மாதமாக பிரிட்டீஷ் காவல்துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.
ஹெச்ஆர்ஏ (HRA) அமைப்பின் தலைவர் ‘ராம் பிரசாத் பிஸ்மில்’ 26 அக்டோபர் 1925 அன்று காவல்துறையிடம் பிடிபட்டார். அஷ்பகுல்லா கானை அவரது வீட்டில் போலீஸார் கைது செய்ய முயன்றனர், ஆனால் அவர் தனது வீட்டிலிருந்து அடர்ந்த கரும்பு வயல்கள். இடையே ஓடி தப்பித்தார். மறுபுறம், பிரிட்டிஷ் காவல்துறையின் தேடுதல் நடவடிக்கையில், புரட்சியாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
பிரிட்டிஷ் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்த அஷ்பகுல்லா கான், புகழ்பெற்ற இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கணேஷ் சங்கர் வித்யார்த்தியைச் சந்திக்க நேபாளம் வழியாக கான்பூருக்கு சென்றார். பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்த தனது நண்பர்களை சந்திக்க காசிக்கு சென்றார்.
அங்கு, பலமாவ் மாவட்டத்தில் உள்ள டால்டோங்கஞ்சில் பத்துமாதம் பணிபுரிந்தார். அதன்பிறகு, லாலா ஹர் தயாலிடம் சுதந்திரப் போராட்டத்திற்காக உதவியைப் பெற அஷ்பகுல்லா கான் வெளிநாடு செல்ல திட்டமிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, அவர் டெல்லிக்குச் சென்று தனது பால்ய நண்பன் பதான் என்பவர் வீட்டில் தங்கினார். ஷாஜஹான்பூரில் கானின் பள்ளி வகுப்புத் தோழனாக இருந்த பதான், டெல்லியில் காட்டிக் கொடுக்கும் துரோகியாக மாறிவிட்டான்.
பதானை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்த கான், இரவு உணவை பதானுடன் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு வரை தங்கள் பால்ய வயது நினைவுகளை பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன்னதாகவே பதான், கான் இருக்குமிடம் குறித்து போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டான்.
அடுத்த நாள் காலை 17 ஜூலை 1926 அன்று, காவலர்கள் கதவை பலமாகத் தட்டினர். தூக்கக் கலக்கத்துடன் கதவைத்திறந்த கானை காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். உடனே அவரை பரிதாபாத் சிறையில் அடைத்தனர். அங்கு கானின் அண்ணன்களில் ஒருவரான ரியாசதுல்லா கான் சட்ட ஆலோசகராக இருந்தார்.
டிசம்பர் 19, 1928 அன்று, காக்கோரி ரயில் கொள்ளையை நடத்தியதற்காக ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான், ராஜேந்திர லஹிரி மற்றும் தாக்கூர் ரோஷன் சிங் ஆகியோர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டனர். கைதான மற்ற புரட்சியாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சுதந்திரப் போராளி அஷ்பகுல்லா கான் ஒரு சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர். நிறைய தேச பக்தி கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருக்கிறது.
வார்சி மற்றும் ஹஸ்ரத் ஆகியவை அஷ்பகுல்லா கான் உருது மொழியில் கவிதைகள்,கஜல்களை எழுதும் போது பயன்படுத்திய புனைப்பெயர்களாகும்.
சுதந்திரம் அடைவதற்கான தெளிவான சிந்தனை, தைரியம் மற்றும் தேசபக்தி கொண்ட ஒரு போராளிதான் அஷ்பகுல்லா கான். இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்ட உறுதி பூண்டிருந்தார்.
தாய்நாட்டிற்காக அஷ்பகுல்லா கானின் உயிர் தியாகம் குறித்து பல இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வந்துள்ளன. இந்திய அஞ்சல் சேவைகள் 19 டிசம்பர் 1997 அன்று அஷ்பகுல்லா கான் மற்றும் ராம் பிரசாத் பிஸ்மிலின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்ட முத்திரையை ( Stamp) வெளியிட்டது.
ஹெச்ஆர்ஏ அமைப்பில் உள்ள மற்றவர்களைப் போலவே, கானும் லெனின்,போல்ஷிவிக் புரட்சியால் வலுவாக ஈர்க்கப்பட்டார். அவர் ஏழைகளின் விடுதலை, முதலாளித்துவ நலன்களை நிராகரிப்பதில் நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார். அவர் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் வலுவான கருத்துக்களை கொண்டிருந்தார்.
அஷ்பகுல்லா கான் மற்றும் ராம் பிரசாத் பிஸ்மில் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்திருந்தும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது ஒன்றாக இணைந்து பணியாற்றினர். ஒருமுறை, ஊடக நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில், பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மிலின் பேரன் ராஜ் பகதூர் தோமர், கானுக்கும் பிஸ்மிலுக்கும் இடையிலான நட்பு, தோழமை என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.
இருவரும் நெருக்கமான நண்பர்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள்; வேலை செய்தார்கள். கான் தொழுகை நடத்தும் போது அதே அறையில்தான் பிஸ்மில் பூஜை நடத்தினார் என்று கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் மத மாச்சரியங்கள் எதுவுமே இல்லை. சுதந்திரம் அடைந்தே தீருவது என்ற லட்சியம்தான் இருந்தது. சுதந்திரப் போராட்ட வரலாறு வகுப்பு ஒற்றுமைக்கான பல பாடங்களை சொல்லித் தந்திருக்கிறது. ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத சங்கிகள் அவற்றை சிறிதும் சட்டை செய்வதாக இல்லை. வகுப்பு துவேஷ தீ மூட்டி இன்னமும் அதில் குளிர்காய்வதில்தான் குறியாய் இருக்கிறார்கள். இவர்களை முறியடிப்பதில்தான் நாமும் குறியாய் இருக்க வேண்டும்.
அ.பாக்கியம்.
ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டமும் கட்டுரை – அ.பாக்கியம்
ஆன்லைன் சூதாட்டம் பல இளைஞர்களின் வாழ்வை பலி கொல்கிறது என்பதினால் அவற்றை தடை செய்வதற்கு தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
அக்டோபர் 1ஆம் தேதி அவசர சட்டதில் கையெழுத்திட்ட ஆளுநர் அந்த சட்டத்தை அமல்படுத்த விடாமல் சூழ்ச்சியில் இறங்கிவிட்டார்.
இத்தனை நாட்கள் கடந்த பிறகு சட்டம் காலாவதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆளுநர் சந்தேகங்களை கேட்டு திருப்பி அனுப்புகிறார். இவ்வளவு நாள் ஏன் அனுப்பவில்லை? என்ற கேள்வி எழுவது நியாயம் தானே.
சென்னை உயர்நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை செய்யும் முந்தைய சட்டத்தை ரத்து செய்தது.
உயர் நீதிமன்றத்தின் அவதானிப்புக்கு ஏற்ற வகையில் இந்த மசோதா இல்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா விளையாட்டு மற்றும் திறன் விளையாட்டு ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடுகளை சரியான முறையில் வரையறுக்க வில்லை எனவே இது விதி 19 (1)(ஜி)க்கு எதிரானது.
தடை என்பது விகிதாச்சாரமாக மட்டுமே இருக்க முடியுமே தவிர முழுமையாக இருக்க முடியாது என்று வினா எழுப்பி உள்ளார்.
அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் திறன் அடிப்படையிலான விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் ஆகியவை வராது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை ஆளுநர் மேற்கோள் காட்டியுள்ளார்.
எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் ஆளுநர் கேட்கலாம். ஆனால் மசோதா காலாவதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்பியது ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவான நிலையோ என்று கருத தோன்றுகிறது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து EGaming Federation (EGF) தொடர்ந்து இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த வியாழக்கிழமை கவர்னர் மசோதாவின் சந்தேகங்களை கிளப்பி அனுப்பியிருந்தாலும் 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை 11:00 மணிக்கு இதற்கான விளக்கம் எழுத்துப்பூர்வமாக மாநில அரசு கொடுத்துள்ளது.
இந்த மசோதா திறன் விளையாட்டு மற்றும் வாய்ப்பு விளையாட்டு ஆகியவற்றை வேறுபடுத்தி விகிதாச்சார கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை மட்டுமே தடை செய்கிறது என்றும் மொத்தமாக தடை செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் கேம் டெவலப்பர் எழுதிய கணினி குறியீட்டிற்கு எதிராக நபர் விளையாடுவதால் பந்தயம் மற்றும் சூதாட்டம் என்ற அம்சத்தில் ஒரு நபர் ஏமாற்றப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற முறையில் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
பந்தயம், பொது சுகாதாரம், திரையரங்குகள், நாடக நிகழ்ச்சிகள் ஆகியவை அரசியல் சட்ட ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இந்திய அரசியல் அமைப்பிற்கு இணங்கிய முறையில் தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் மாநில அரசு தெளிவு படுத்தி உள்ளது.
எத்தனை விளக்கம் கொடுத்தாலும் பாஜகவின் பிரச்சாரகராக செயல்படக்கூடிய ஆளுநர் அண்ணாமலைக்கு எப்போதும் கதவை திறந்து வைத்துக் கொண்டிருக்கும் ஆளுநர் மாளிகை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சருக்கு சந்திக்க நேரம் ஒதுக்காத மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மொத்தத்தில் தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் தடைக்கு எதிராக செயல்பட்டு தமிழக மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.
அ.பாக்கியம்
யார் இந்த லச்சித் போர்புகான்? கட்டுரை – அ.பாக்கியம்
நவம்பர் 24 அன்று, புகழ்பெற்ற அசாமிய தளபதி லச்சித் போர்புகான் 400 வயதை எட்டுகிறார்.
ஆண்டு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அஸ்ஸாம் அரசு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாட்டங்களை நடத்தியது.
பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்த நிலையில், நவம்பர் 23 முதல் 25 வரை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அசாம் மாநில பாஜக அரசு தேசம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் லச்சித் போர்புகானின் முழு பக்க விளம்பரத்தை கொடுத்துள்ளது.
லச்சித் போர்புகான் முகலாயர்களை வீழ்த்திய இந்து மன்னன் என்ற சாயத்தை பூசித்தான் இந்த விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள்.
பாஜகவினர் மதத்தை பயன்படுத்தி தரம் தாழ்ந்த அரசியலுக்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழகத்தின் திருவள்ளுவரையே காவி சாயத்துக்குள் கவிழ்த்தவர்கள்.
“சத்ரபதி சிவாஜிக்கு நாடு வழங்கிய அதே கண்ணியத்தைப் பெறாத” அஹோம் ஜெனரலுக்கு “சரியான மரியாதைக்குரிய இடத்தை” உறுதி செய்வதற்காகக் கொண்டாட்டங்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார் .
1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் முகலாயப் படைகளைத் தோற்கடித்த போர்புகன் என்ற வீரராகவே அசாமில் எப்போதும் போற்றப்படுகிறார்.
அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. சர்மா, “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாராட்டியுள்ளார் .
“இது 2016 மாநிலத் தேர்தலை ‘சராய்காட்டின் கடைசிப் போர்’ என்று பாஜக முத்திரை குத்தியது. இதில் காங்கிரஸை முகலாயர்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தது. அசாமியர்கள் காவி கட்சியுடன் நெருக்கமாக இருக்குமாறு பாஜக வலியுறுத்தியது.
2021 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு முன்பு, BJP இன்னும் வெளிப்படையான இந்துத்துவாவைத் தூண்டியது. மேலும் காங்கிரஸும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சட்டவிரோத குடியேறிய முஸ்லீம்களை ஆதரிப்பதாக முதல்வர் சர்மா பிரச்சாரம் செய்தார்.
சமீபத்தில், அவர் முகலாயர்களை தோற்கடித்ததால் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் போர்புகானை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.
அஹோம் இராச்சியம்:
அஹோம் இராச்சியம் (1228–1826) அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வரலாற்றின் இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்தது. வடகிழக்கு இந்தியாவில் முகலாய விரிவாக்கத்தை வெற்றிகரமாக எதிர்த்து சண்டைபோட்டது.
சுமார் 600 ஆண்டுகள் அதன் இறையாண்மையை அது தக்கவைத்து ஆட்சிசெய்தது. மோங் மாவோவின் (இன்றைய யுன்னான் மாகாணம், சீனா) தை (TAI) இளவரசரான சுகபாவால் நிறுவப்பட்டது.
இது 16 ஆம் நூற்றாண்டில் சுஹுங்முங்கி ஆட்சியின் கீழ் விரிவடைந்து. முழு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது பல இனங்களின் தன்மைகளை கொண்ட அரசாக மாறியது. மோமோரியா கிளர்ச்சியின் எழுச்சியுடன்(அதிகார போட்டி) இராச்சியம் பலவீனமடைந்தது.
பின்னர் அஸ்ஸாம் மீது பர்மாவின் தொடர்ச்சியான படையெடுப்பைத் தொடரந்து தொ அஹோம் அரசு வீழ்ச்சியடைந்தது. முதல் ஆங்கிலோ-பர்மியப் போருக்குப் பிறகு பர்மியர்களின் தோல்வி அடைந்தனர்.
1826 ல் யாண்டபோ உடன்படிக்கையின் மூலம், இராச்சியத்தின் கட்டுப்பாடு கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்குச் சென்றது. இதுதான் இந்த அஹோம் ராஜ்ஜியத்தின் கதை.
லச்சித் போர்புகன்:
லச்சித் போர்புகன் (24 நவம்பர் 1622 – 25 ஏப்ரல் 1672) தற்போதைய அஸ்ஸாமில் அமைந்திருந்த அஹோம் இராச்சியத்தில் தளபதி மற்றும் போர்புகன் ஆவார். போர்புகான என்றால் அமைச்சர் என்று பொருள்படும்.
லச்சித் டெக்கா பின்னர் லச்சித் போர்புகானாக மாறினார். அஹோம் ராஜ்ஜியத்தில் 5 போர்புகன்களில் ஒருவராக இந்த லச்சித் போர்புகான் இருந்தார். இந்த முறையை அஹோம் மன்னர் பிரதாப் சிங்கவால் உருவாக்கப்பட்டது.
அஹோம் ராஜ்ஜியத்தின் அதிகார வரம்புடன், இந்த பதவி நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை உள்ளடக்கியது. போர்புகானின் தலைமையகம் கலியாபோரிலும்1681 இல் இட்டாகுலி போருக்குப் பிறகு குவஹாத்தியில் உள்ள இடகுலியிலும் அமைந்திருந்தது.
அஹோம் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்ததால் சக்தி வாய்ந்ததாகவும் சுதந்திர சாயலை கொண்டதாகவும் இருந்துசெயல்பட்டது.கலியாபோரின் கிழக்கே உள்ள பகுதி லச்சித் போர்புகனால் ஆளப்பட்டது.
அஹோம்கள் 1615-1682 வரை ஜஹாங்கீரின் ஆட்சியில் இருந்து அவுரங்கசீப்பின் ஆட்சி வரை தொடர்ச்சியான மோதல்களில் ஈடுபட்டனர்.
ஆரம்பகால இராணுவ மோதல் ஜனவரி 1662 ல் நடைபெற்றது. முகலாயர்கள் ஒரு பகுதியில் வெற்றிபெற்று அசாமின் சில பகுதிகளையும், அஹோம் தலைநகரான கர்கானின் சில பகுதிகளையும் கைப்பற்றினர்.
இழந்த அஹோம் பிரதேசங்களை மீட்பதற்கான எதிர்த்தாக்குதல் அஹோம் மன்னர் ஸ்வர்கதேயோ சக்ரத்வாஜ சிங்காவின் தலைமையில் தொடங்கியது. அஹோம்கள் சில ஆரம்ப வெற்றிகளை பெற்றனர்.
அவுரங்கசீப் 1669 ல் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஜெய்ப்பூரின் ராஜா ராம் சிங் தலைமையில் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அனுப்பினார். இறுதியில் 1671 ல் சராய்காட் என்ற இடத்தில போர் நடந்தது.
மொகலாயர்கள் தங்கள் பாரிய படைகளுடன் திறந்தவெளியில் போரிட வந்தனர். லச்சித் போர்புகன் கெரில்லா தந்திரங்களை பயன்படுத்தி யுத்தம் செய்தார். லச்சித் பெரிய முகலாய முகாம்களிலும், நிலையான நிலைகளிலும் சேதத்தை ஏற்படுத்தினார்.
சராய்காட் யுத்தத்தில் லச்சித் தலைமையிலான அகோம் படைகள் வெற்றி பெற்றது.
இதற்காக லச்சித் போர்புகன் அசாம் மக்களால் எப்போதும் போற்றப்படுகிறார்.
1930ம் ஆண்டிலிருந்து தளபதி லச்சித் பிறந்த நாள் விழா அசாம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் அசாமில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கௌஹாத்தியிலுள்ள பிரமபுத்திரா பகுதியில் 35 அடி உயரமுள்ள லச்சித் சிலையை அமைத்தது. 1999 ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு அகடமி தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு லச்சித் பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
1930ம் ஆண்டு கொண்டாடப்படுகிற விழாக்களில் லச்சித் ஒரு மதம்சார்ந்தவராக அடையாளப்படுத்தப்படவில்லை. சராய்காட் போரும் மதம் அடிப்படையில் பார்க்கப்படவில்லை. அவ்வாறு நடைபெறவும் இல்லை. மன்னராட்சி சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தை எதிர்த்த போராகவே அது இருந்தது.
லச்சித் போர்புகன் இந்து மதத்தைச்சேர்ந்தவர் அல்ல. தை(TAI ) மொழிபேசும் பழங்குடி மதத்தைசேர்ந்தவர். அஹோம் அரச பகுதிகள் இந்து மதம்சார்ந்த பகுதியும் இல்லை. மன்னர் சிப் சிங் [1714-1744] ஆட்சியின் போது மட்டுமே இந்து மதம் பிரதான மதமாக மாறியது.
லச்சித்தின் கீழ் இருந்த பல வீரர்கள் பழங்குடியின மதத்தைச் சேர்ந்தவர்கள்
அஹோம் ராணுவத்தில் முஸ்லிம்களும் முக்கியப் பதவிகளை வகித்தனர்.
உதாரணமாக, பாக் ஹசாரிகா என்றும் அழைக்கப்படும் கடற்படை ஜெனரல் பதவியை வகித்தவர் இஸ்மாயில் சித்திக் என்ற முஸ்லீம் ஆவார்.
லச்சித் போரிட்ட முகலாய தளபதி அம்பரைச் சேர்ந்த ராஜா ராம் சிங் கச்வாஹா [ஒரு ராஜபுத்திரர்] என்பதால் அதற்கு எந்த மதக் கோணமும் இல்லை. ஔரங்கசீப்பின் படையில், பல இந்து வீரர்கள் இருந்தனர்.
போர்புகானின் புராணக்கதை முதன்மையாக அவரது வீரம் மற்றும் கடமை உணர்வு பற்றி பாடப்பட்டது. போரின் போது அவர் போராடிய மிக உயர்ந்த கடமை உணர்வின் காரணமாக பாராட்டப்பட்டார் தவிர மதத்தின் சிறப்பால் அல்ல.
400வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வடகிழக்கின் வரலாற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு வழி என்ற அளவில் பாக்கப்பட வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
அஸ்ஸாமில் உள்ள வரலாற்றாசிரியர்கள் போர்புகானின் கதை வகுப்புவாதப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அஹோம் ராஜ்ஜியத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான போரை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான போராக மாற்றுகிற மத துவேஷ வேலை களை பாஜக செய்வதை கண்டிக்கின்றனர்.
அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாஜக தலைவர்கள் பாராட்டியுள்ளார் .
வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மதவெறி அரசியலை நிலை நாட்டுவதற்கு பழங்குடி போர் வீரர்களை இந்து என்ற சாயத்தை பூசி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களாக மாற்றி கலவரத்தை உருவாக்கி வருகிறது.
இந்திய நாடு முழுவதும் சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் சிங் போன்ற மன்னர்களை இந்து மன்னர்களாக கட்டமைத்து இஸ்லாமியரை எதிர்த்து போராடியவர்கள் என்ற மத வெறி உணர்வை ஊட்டியது. தற்போது அந்தப் பட்டியலில் அசாம் வீரர் லச்சித் போர்புகானை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது.
பாஜக நினைத்தபடி வரலாற்றை மாற்றி எழுதும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
– அ.பாக்கியம்
மோடியின் ஆட்சியில் மோர்பி மட்டுமல்ல…….! கட்டுரை – அ.பாக்கியம்
அக்டோபர் 30ஆம் தேதி குஜராத் மாநிலம் மோர்பி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்து 141 பேர்கள் மரணம் அடைந்தவர்கள்.
கடிகார கம்பெனியிடம் காண்ட்ராக்ட் கொடுத்ததும், கம்பெனியின் வேலைக்காரர்களை மட்டுமே கைது செய்ததும் ஆட்சியின் அலங்கோல காட்சிகள் ஆகும்.
ஏதோ குஜராத்தில் மட்டும்தான் இது நடந்து விட்டது என்று எண்ணி விடாதீர்கள் மோடி ஆட்சியில் இது தொடர்கதையாக இருக்கிறது.
அக்டோபர் மாதம் 9-ம்தேதி கிரேட்டர் மைதாவில் நொய்டாவில் சாலையில் திடீரென்று ஒரு பகுதி உள்ளே சென்றுவிட்டது. பெரும் போக்குவரத்து பாதிப்பாகி நாடு முழுவதும் வைரலாக மாறியது.
மேலும் இதே மாதம் முப்பதாம் தேதி பெங்களூர் பகுதியில் ஏலஹங்கா என்ற இடத்தில் பிரதான சாலை இடிந்து உள்ளே சென்று விட்டது அங்கு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 27 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்து 4 பேர் உள்ளே சிக்கிக் கொண்டார்கள்.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குர்கனில் உள்ள துவாரகா விரைவுச் சாலையில் 29 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய மேம்பாலம் ஒன்று கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த பொழுது பாலம் இடிந்து விழுந்தது. மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். மாநில முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் கட்டப்பட்டு வந்த முமத்புரா மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. 853 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இடிந்து விழுந்தது மாநில முழுவதும் தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.
இந்தப் பாலத்தை கட்டி வந்த நிறுவனம் ஏற்கனவே இரு பாலங்களை கட்டிய பொழுது இதே போன்று இடிந்து விழுந்து உள்ளது.
22 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரின் சுல்தான் கஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி, ஏப்ரல் 30ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது இடிந்து விழுந்தது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் தூண்கள் சரிந்து விழுந்து ஒரு முதியவர் பலியானதுடன் லாரி ஒன்றும் சிக்கிக்கொண்டது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள பைஷ்நாப் நகரில் பராக்கா தடுப்பணை மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் பொறியாளர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மூன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர்.
கடந்த மாதம் 29ஆம் தேதி காசர்கோடு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி காங்கிரீட் ஜல்லி போடுகிற பொழுது இடிந்து விழுந்தது தரமற்ற ஜல்லிகள் பயன்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இடிபாடுகளுக்கு காரணம் ஒன்றிய அரசின் ஊழல் நிறைந்த நிர்வாக நடவடிக்கைகளே காரணம் என்று அனைவரும் அப்பட்டமாக அறிந்த உண்மை.
– அ.பாக்கியம்.
படங்கள்
குஜராத் பாலம், நொய்டாசாலை
விரைவு சாலை,
பீகார் விபத்து.