Poet M. Murugesh has been selected to receive the Central Government's Bala Sahitya Puraskar Award for the year 2021 2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற கவிஞர் மு.முருகேஷ் தேர்வு

2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற கவிஞர் மு.முருகேஷ் தேர்வு




புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இவர் 10 புதுக்கவிதை, 9 ஹைக்கூ கவிதை, 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் உட்பட 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.

மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேஷ், தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஒரு இயக்கம் போல் பரவலாக கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.

கவிஞர் மு.முருகேஷ் தனது படைப்புகளுக்காக 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்றவர். இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர். இவரது ஹைக்கூ கவிதைகள் எல்.பி.சாமி மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் ’நிலா முத்தம்’ எனும் நூலாகவும், தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுபெற்ற நூல் பள்ளி மாணவி வி.சைதன்யா மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ’The first story told by a daughter to her mother’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.

2009-இல் பெங்களூருவில் நடைபெற்ற 9-ஆவது உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில் பங்கேற்று, உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு வென்றதும், தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்ட நூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றதும், ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் ‘குறுங்கவிச் செல்வன்’ விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.

பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேஷ் கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
விருதாளர் செல்பேசி : 94443 60421

Writer S Balabharathi’s Marappaachchi Sonna Ragasiyam Book Review By K. Ramesh. Book Day is Branch of Bharathi Puthakalayam. யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* - கி. ரமேஷ்

யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* – கி. ரமேஷ்



யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை.  ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது என்பதை அறிந்ததும் அதைப் படித்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

அட, இதென்ன அதிசயம்.  நான் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நினைத்தது அந்த மரப்பாச்சிக்கு எப்படியோ தெரிந்து விட்டது போல் இருக்கிறதே!  மந்திர மரப்பாச்சி அதற்கேயுரிய மந்திரங்களைப் போட்டு அறிவியல் இயக்கத் தோழர் பிரபாகர் மூலமாக என்னிடம் வந்து சேர்ந்து விட்டது.  

முதலில் மரப்பாச்சி என்றால் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமோ தெரியாதோ?  இன்றுதான் விதவிதமாக  பொம்மைகள் வந்து விட்டனவே.  சிறிது காலத்துக்கு முன் ரப்பர் பொம்மைகள், பிறகு பிளாஸ்டிக், பிறகு இன்றைய தொழில்நுட்பத்துக்கேற்ப தானே இயங்கும் பொம்மைகள், ரிமோட் பொம்மைகள்.  அதையெல்லாம் தாண்டி ப்ளே ஸ்டேஷன், இப்போது செல்பேசியிலேயே மூழ்கும் நிலை வந்து விட்டது.

ஆனாலும், அந்தக் கால மரப்பாச்சியையும், தாமே செய்யும் பொம்மைகளையும் வைத்து கற்பனையுலகில் விளையாடியபோது கிடைக்கும் சந்தோஷம் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இருக்கட்டும்.  குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடாதபடி மூலிகை மரங்களாக் செய்யப்பட்ட இந்த மரப்பாச்சி ஒன்று நமது கதாநாயகி குழந்தை ஷாலினியிடம் கிடைத்து விடுகிறது.  காலகாலமாக குடும்பத்தில் ‘ஆகி’ வந்த மரப்பாச்சி அல்லவா, அது குழந்தையிடம் ஒட்டிக் கொண்டு விடுகிறது.  அதற்கு உயிரும் வந்து விடுகிறது.  பிறகு அது குழந்தையின் பிரச்சனையை எப்படித் தீர்த்து வைக்கிறது.  பள்ளியில் அவளிடம் வம்பு செய்யும் மற்ற குழந்தைகளை எப்படி ஆட்டி வைக்கிறது என்று கற்பனை விரிந்து கொண்டே செல்கிறது.  இந்தக் கதை கற்பனையென்றாலும், அதில் மரப்பாச்சி கையில் எடுக்கும் பிரச்சனைகள் உண்மை.  நுட்பமாகக் கையாண்டிருக்கிறார் பாலபாரதி.  மேலோட்டமாக குட் டச், பேட் டச் பிரச்சனையை சொல்லிச் செல்கிறார்.  இதைப் படிக்கும் குழந்தைகள் அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணுகிறார்.  

Writer S Balabharathi’s Marappaachchi Sonna Ragasiyam Book Review By K. Ramesh. Book Day is Branch of Bharathi Puthakalayam. யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* - கி. ரமேஷ்

மரப்பாச்சி கையில் இருந்தால், அதை வைத்திருப்பவர் பொய் சொல்லவே முடியாது!  ஆஹா மகாபாரதத்தில் இத்தகைய ஒரு காட்சியைப் பார்த்திருக்கலாம்.  சகுனியாக நடிக்கும் நம்பியார் பொய் சொல்ல முடியாமல் திணறும் திரைக் காட்சியைப் பார்த்த நினைவு சிரிக்க வைக்கிறது.  

அந்தக் காலத்தில் நான் சிறுவனாக இருந்த போது நிறைய பேய், பூதக் கதைகள் படித்திருக்கிறேன்.  அம்புலிமாமா, சம்பக் என்றும், பல காமிக்ஸ் புத்தகங்களையும் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன்.  மாண்ட்ரேக்-லொதார் இன்னும் மறக்காத ஒன்று.  அனைத்திலும் நன்மை வெற்றி பெறும், தீமை தோல்வியடையும்.  நான் இன்று படித்த மரப்பாச்சி மீண்டும் அந்த உணர்வைக் கொண்டு வந்தது என்றால் மிகையல்ல.

பாலபாரதி எழுதி முன்பு வெளிவந்த கதைகளிலும் எதோ ஒரு செய்தி இருந்து கோண்டுதான் இருந்திருக்கிறது.  இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கீழே ஒவ்வொரு செய்தியை எடுத்து அதைக் குழந்தைகளுக்குப் புரியும்படி விவரித்திருப்பது சிறப்பு.  அந்த விவரணை மரப்பாச்சி என்றால் என்ன என்று சொல்வதிலிருந்து தொடங்குகிறது.  இன்று நம் வீடுகளில் கொலுவில்தான் மரப்பாச்சியைப் பார்க்க முடிகிறது என்பது சோகம்.

இந்தக் கதையை நாம் சிறுவர், சிறுமியருக்கு அறிமுகம் செய்து படிக்கச் செய்ய வேண்டும்.  அதில் கூறியிருக்கும் விவரங்களை, செய்திகளை பொறுமையுடன் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.  கதை என்றால் வெறும் கதைகள் அல்ல, நற்சிந்தனையை, நற்செயல்களைத் தூண்டுபவையாக இருக்க வேண்டும்.  இந்த அனைத்தையும் இந்தச் சிறு கதைப்புத்தகம் செய்து முடித்திருக்கிறது.  அதற்குக் கிடைத்திருக்கும் விருதுக்கு அவர் பொருத்தமானவர்தான்.  அவருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரப்பாச்சி சொன்ன ரகசியம்
யெஸ்.பாலபாரதி
வெளியீடு:  வானம்
விலை: ரூ.60
பக்கம்: 87

-கி. ரமேஷ்

Writer S Bala bharathi (Marappaachchi Sonna Ragasiyam) Gets Bala Sahitya Puraskar Award For 2020. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி



எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வானம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பால சாகித்ய புரஸ்கார் தாமிர விருதும், 50 ஆயிரம் ரொக்கம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளது.

மரப்பாச்சி சொன்ன ரகசியம் » Fathima Booksஒவ்வொரு ஆண்டும் சிறார் இலக்கியத்திற்காக ஒன்றிய  அரசால் அளிக்கப்படும் சாகித்ய அகடாமி விருதுதான் பால சாகித்ய புரஸ்கார் விருது. இதில் 2020ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழ்மொழி பிரிவில் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து, பேசிய எழுத்தாளர் எஸ். பாலபாரதி, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலை தடுப்பதற்காக நான் எழுதிய மரப்பாச்சி பொம்மை நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும்.

பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்வதுடன், வெளியில் சொல்லி அவர்களை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை நூலில் கூறியுள்ளேன். இந்த நூல் முதல் பதிப்பு விற்று தீர்ந்து மீண்டும் மறுமதிப்பு வெளியிடப்பட்டது. மரப்பாச்சி பொம்மை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான அநீதி தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விருது பெற்ற எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அவர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பதிப்பகத்தார்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.