தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி
இசைமேதை இளையராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து வந்திருக்கிறேன். அவரின் குரல் சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. எனக்கு அவர் பாடிய பாடலென்றால் உயிர். அந்தக் குரல் அத்தனை இதமானதாகத் தோன்றும் எனக்கு. வைரமுத்து அவர்களின் கட்டுரை வழியாகவோ பாரதிராஜா அவர்களின் வாழ்க்கை சரிதத்திலிருந்தோ இளையராஜா பற்றிய செய்தி வரும்போது லயித்து விடுவேன். அதற்காக எனக்கு பாரதிராஜா வைரமுத்து இருவரையும் பிடிக்காதென்று அர்த்தமில்லை இந்த இருவரையுமே எனக்கு இளையராஜா அளவுக்குப் பிடிக்கும்.
இளையராஜா போல் தமிழை மிக சரியாக உச்சரித்துப் பாட வேறு ஒருவரைத் தேடுவது கடினம். மொழி இலக்கணத்திலும் அவருக்கு ஞானம் அதிகம். “மயிலு” எனும் படத்தில் தான் அவர் இசையில் முதன்முதலாக பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தில்,
“நம்மலோட பாட்டுத்தான்டா
ஒலகம்பூரா மக்கா
கண்ட பாட்ட நாங்க கேக்க
காணப் பயறுத் தொக்கா”
என்றொரு பாடல் எழுதியிருப்பேன். அதில் முதலில் ‘காணப் பயிரு’ என்று தான் எழுதியிருந்தேன், அவர் தான் எனக்கு “காணப் பயறு” என்பதுதான் சரியென்று கற்றுத் தந்தார். அதே போல் அவர் கொடுக்கும் தத்தகாரம் மிக எளிமையாக இருக்கும். அவரின் தத்தகாரத்திற்கு யார் வேண்டுமானாலும் பாடல் எழுதிவிடலாம். பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் தத்தகாரத்தை தரும்போதே எழுபது சதவீத வேலையை முடித்து விடுவார்கள் ஆனால் இளையராஜா அவர்கள் மெட்டைத தருகிபோது மிக மிக ராவாக இருக்கும், ஆனால் அதன் பின் அந்தப் பாடலை “அவனா இவன்” என்பதுபோல் அசத்திவிடுவார். அவர் படத்தில் ஒரு பாடல் எழுதிவிட்டால் போதும் ஒருவன் எப்படி மெட்டுக்கு பாடல் எழுதுவது என்பதை கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம் அவர் மெட்டுப் போடுகிற பெரும்பாலான பாடல்களின் பல்லவியை அவரே எழுதிவிடுகிறார் என்பது அவர் மேலுள்ள குற்றச்சாட்டு எனினும் அவர் எழுதியதற்கு மேலான பல்லவி வரிகளை கவிஞர்கள் எழுதிவிட்டால் அதை ஏற்க மறுப்பவரும் இல்லை.
அவர் இசையில் கடைசியாக நான் எழுதிய பாடல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் “விடுதலை” எனும் படத்திற்கு. அவர்மேல் திரைப்படத்துறையில் ஒரு பார்வை இருக்கிறது அவர் ரொம்பவும் கண்டிப்பானவர் என்பார்கள். ஆனால் நான் பணிசெய்த குறைந்த படங்களின் அனுபவத்தில் அவரைப்போல் ஒரு எளிமையான இலகுவான மனிதரைப் பார்க்க முடியாது என்பதுபோல் இருந்தது. அவரருகே அமர்ந்துவிட்டால் அத்தனை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவ்வளவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படித்தான் இயக்குநர் பாலா அவர்கள் மீதும் ஒரு பார்வை உண்டு மற்றவர்களுக்கு ஆனால் நான் அவரோடு இரண்டொரு பட வேலைகளில் பாட்டுக்காக உரையாடிக்கொண்டிருக்கும் போது நான் அதுவரை அவர்மேல் வைத்திருந்த அத்தனை தப்பிதமான பிம்பங்களும் உடைந்துபோயின. இயக்குநர் பாலா மிகவும் மென்மையானவர். நேர்மையானவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பிறரை மரியாதையோடு நடத்துகிற மாண்பு மிகப் பெரியது.
என் சிறு பிராயத்தில் இளையராஜா அவர்களின் பேட்டி ஒன்றை தூர்தர்ஷனில் பார்த்தேன். அப்போது நிருபர் கேட்ட கேள்வியும் பதிலும் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. நீங்கள் எப்படி இசையை உருவாக்குகிறீர்கள்? நான் எதையும் உருவாக்குவதில்லை இந்த பூமி இசையால் நிரம்பியிருக்கிறது. பெய்யும் மழைத் தூறலிலும் ஒரு ரிதம் இருக்கிறது அதை எப்படி இசையாக்குவது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். கிராமத்திலிருந்து வந்த நீங்கள் எப்படி நகரத்து வாழ்வோடு ஒத்துப் போனீர்கள் என்பது போன்ற ஒரு கேள்வியை நிருபர் எழுப்புமுன் இடை நிறுத்தி, 100 வருடங்களுக்கு முன் சென்னையும் கிராமம் தான் என்று சின்னதாகச் சினந்தார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு எனக்கு அப்படி ஒன்று இல்லை, நான் இப்போது உங்களோடு பேசும் நேரத்தே வேண்டுமானால் எனது ஓய்வு நேரமென்று சொல்லலாம் என்றார். இப்படியாக அப்போதைய இளையராஜா அவர்களின் தீர்க்கமான எண்ணத்திற்கும் செயல்பாட்டிற்கும் இப்போதிருக்கும் இளையராஜாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவரின் முடிவும் செயல்பாடுகளும் அவரது உரிமை என்றாலும் அவரை விமர்சனம் செய்யும் நண்பர்கள் அனைவரும் அவரின் இசை ரசிகர்களே. அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் காதலை அவர் உணரவேண்டும் என்பதே என் கருத்து.
நான் இரண்டாவதாக இயக்கிய “அருவா” எனும் திரைப்படத்திற்கு நண்பர் ஜெய கே தாஸ் தான் இசை. ஆறு பாடல்களை இழைத்துத் தந்துள்ளார். அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளராக உலகம் அறிந்து கொள்ள இந்தப் படம் வெளியாவது அவருக்குத் துணையாக இருக்குமென நம்புகிறேன். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு காதல் பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்கள் பாடினார்கள். அப்போது இசையையும் பாடல் வரிகளையும் வெகுவாகப் பாராட்டினார். அதில் தந்தையின் அன்பைச் சொல்லுகிற ஒரு பாடல். இந்தப் பாடலை இசைமேதை இளையராஜா அவர்கள் பாடினால் நன்றாக இருக்குமென யோசித்தோம் ஆனால் பிறர் இசைக்கும் இசையில் பாடமாட்டார் எனவும் விதிவிலக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மட்டும் ஒரு படத்தில் பாடியிருப்பதாகவும் கூறினார்கள். ஆனாலும் எனக்கு அவர் குரல் வேண்டும் என்பதால் அவர் குரலையொத்த கங்கை அமரன் அவர்களை அழைந்துப் பாடவைத்தோம் மனம் நிறைவடைந்தது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் தோழர் வேல ராமமூர்த்தி அவர்கள். இந்தப் படத்தின் டப்பிங் பேச வந்த அவருக்கு அந்தப் பாடலை காட்சியோடு பார்த்தவர், நான் எத்தனை படம் பண்ணியிருந்தாலும் எனக்கு இது வேற ஒரு படம் எனச்சொல்லி என்னைக் கட்டியணைத்தார். காரணம் எல்லா படங்களிலும் வேல ராமமூர்த்தி கடுங் கோபக்காரர் என் படத்தில் கனிவான அப்பா.
பல்வவி:
காசு பணமெல்லாம் சும்மா – இவர்
கர்ப்பப் பை இல்லாத அம்மா (2)
எத்தனை முகங்கள்
யாருமற்று அலைய
தண்ணீர் துளிகள் இங்கு
காற்றடித்துத் தொலைய
பிடித்து நடந்து செல்ல
விரல் தரும் மனிதருண்டோ
இவர் போல் அன்பு கொள்ள
கடவுள் உண்டோ
சரணம் – 1
செம்மறி ஆட்டுக்கெல்லாம்
மேய்ப்பவனே அப்பா
பார்வையற்ற மனிதனுக்கு
ஊன்றுகோல் அப்பா
நிலவு அம்மா என்றால்
சூரியன் தான் அப்பா
அன்பை நட்டு வைத்தால்
சொல்லுங்களேன் தப்பா
பாருங்களேன் மாலைக்குள்ள
பல பூவிருக்கும் – அவை
அத்தனையும் கட்டிக்கொண்டு
ஒரு நூலிருக்கும்
சரணம் – 2
பூக்கள் வாசனையை
பூட்டி வைப்பதில்லை
வேர்களை பூமியிங்கு
விட்டுப் போவதில்லை
சொந்த பந்தம் எல்லாம்
சொல்லில் மட்டும் இல்லை
விழுதாடும் அத்தனையும்
ஆலமரப் பிள்ளை
கத்துகிற பறவைக்கெல்லாம்
ஒரு பேர் இருக்கும்
ஒத்தையடிப் பாதைக்கெல்லாம்
ஓர் ஊர் இருக்கும்