Kaviyoviyathodar-Kollaikarargal 22 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-கொள்ளைக்காரர்கள் 22

கவியோவியத் தொடர்: கொள்ளைக்காரர்கள் 22 – நா.வே.அருள்




கொள்ளைக்காரர்கள்
******************************

கொள்ளையர்களின் நாற்காலிகள்
சவாரிகளால் ஆனவை.

சிறகுகளில்
வானத்தைத் திருடும் திட்டத்துடன்தான்
இப்பறவைகள்
தங்கள் வலசையைத் தொடங்குகின்றன.

அலகின் முணுமுணுப்பில்
தேசத்தின் தசைத் துணுக்குகள்.

பறக்கும் மரங்களை
அவர்கள்
அறிந்து வைத்திருக்கிறார்கள்.

கடிவாளத்தைச் சொடுக்கித்
தவளைகளில் சவாரி செய்யும் அவர்கள்
பறவைகள் குளிக்கும் படித்துறையில்
முதலைகளை மேயவிடுகிறார்கள்.

அவர்களின் கூடுகள்
குகையை விட இருண்டதும்
அபாயகரமானதாகவும் இருக்கின்றன

அவற்றிற்குள்
ஒரு தலைப்பாகை
ஒரு கோவணம்
ஒரு தனுகு மரத்தாலான நுகத்தடி
ஒரு பூட்டாங்கயிறு
ஒரு தார்க்குச்சி
ஒரு ஏர்க்கலப்பை
ஒரு துண்டு நிலம்

இவற்றையெல்லாம் வைத்துத்தான்
வயல்வெளிகளை
அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக
வதந்தி நிலவுகிறது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்