பாங்கைத் தமிழனின் கவிதைகள்
நட்பு பெரிது? !
******************
தேடும்
அத்தனைப்
பொருத்தங்ளும்
கொண்ட நண்பர்கள்
குடும்பம்,
எங்கள் இருவருக்குமான
குடும்பம்!
அவர் வீட்டு விசேஷங்களில்
எங்கள் குடும்பமும்,
என் வீட்டு விசேஷங்களில்
நண்பர் வீட்டுக் குடும்பமும்,
முதல் மரியாதை அளவிற்கு
மற்றவர்,
முகம் சுளிக்கவும்
மூக்கின் மேல் விரலை
வைக்கவும்….
எங்களுக்கான நெருக்கம்!
நயத்தகு நனி நாகரிக நட்பு
எங்களுடையது!
கொடுக்கல் வாங்கலில்
குறையாத அன்பு!
துயரத்தில் தோள் கொடுக்கும் முதன்மை!
மாமா, அத்தை
என்கின்ற
பிள்ளைகளின் உறவு!
கல்யாணப் பருவத்தில்
காத்து நிற்கும்
நண்பரின் மகள்!
கால் மிதி தேய
மாப்பிள்ளைத் தேடல்;
உறவாக இல்லையெனினும்
உடன் செல்லாமல்
நானோ, நண்பரோ
எதில் ஒன்றும் பிரிந்ததில்லை!
நாட்கள் கடந்தும்
நல்ல
வரன் அமையவில்லை!
நல்ல
வரன் உள்ள இடம்
எனக்குத் தெரிகிறது….
குறுக்கே
சுவரின் பிம்பம்
சாதி!
நட்பையும் கொல்லும் நஞ்சு;
பிள்ளைகள் வாழ்வா
பெரிது?
நண்பருக்கும், எனக்கும்
நட்பொன்றே பெரிது!
என்
தகுதி வாய்ந்தப் பிள்ளைக்கு,
பெண் பார்க்க…
நானும் நண்பரை அழைத்துச் செல்கிறேன்….
நீண்ட தூரத்தில் உள்ள
ஊர் ஒன்றுக்கு.
மனிதமே..மனிதன்…
************************
மனிதனை மனிதனாய்
மனதிலே நிறுத்தியே
மதிப்பினை அளித்திடும்
மாண்பினைக் காத்திட்டால்;
மாநிலம் நலனுறும்
மகிழ்ச்சியால் பயனுறும்!
சாதியும் சமயமும்
சதியென உணர்ந்திடும்
சத்திய சீலரே
சமுதாயச் சிற்பிகள்!
உயர்வெனத் தாழ்வென
உள்ளத்தில் கள்ளத்தை
உடையவர் மடையரே
உணர்ந்திடு மானுடா!
அழுதிடும் அன்பரை
அணைத்திடும் கரங்களே
அகிலத்தில் உயர்ந்தவை
அறிந்திடும் தோழரே!
பெண்மையைச் சூழ்ந்திடும்
பேரிடர் துடைத்திட
பெருந்தகை வானர்கள்
பெருகிடல் வேண்டுமே;
எண்ணத்தால் உயர்ந்திடு
ஏற்றமோ பெருகிடும்;
எளியரை இதயத்துள்
ஏற்றியேப் போற்றிடு!
வன்மங்கள் பெருகிட
வாழ்பவர் வீழ்வரே;
வளமுடை நெஞ்சினர்
வாழ்வரே வையத்தில்!
பிறப்பிலே உயர்ந்தது
பெருமைகள் நிறைந்தது
மானுடப் பிறவிதான்
மதியினில் தேக்கிடு!
கடலுக்கு மரணமாமே
*************************
கடலுக்கு மரணமாமே
காற்று வந்து சொன்னதுவே
தமிழ்க் கடலே மறைந்தாயோ!
காண்பதுதான் எந்நாளோ?
நெல்லையிலே பிறந்தக் கடல்
நெஞ்சமெலாம் பரந்தக் கடல்
நெடிய ஆழம் கொண்டக்கடல்
நம்மை இன்றுப் பிரிந்தக்கடல்!
அலைகளென இலக்கியமாம்
அத்தனையும் அறிந்தக் கடல்
தமிழ்க்கடலே மீண்டும் வந்து
தரணியிலே பிறப்பாயோ?
கொந்தளிக்கும் சில நேரம்
கோபம் கொள்ளும் சில நேரம்
தாலாட்டுப் பாடி நம்மை
தமிழ் வளர்த்தப் பெருங்கடல்தான்!
இலக்கியங்கள் அறிந்தக் கடல்
இலக்கணத்தில் பெரியக் கடல்
சமுதாயச் சீரழிவை
சாடிநின்றத் தமிழ்க் கடல்தான்!
வங்கக் கடல் நிகராக
தமிழ்க்கடலாய் வாழ்ந்தக் கடல்
நீர்நிறைந்தக் கடல் தந்த
நிகரான செல்வமதை;
தமிழ்மக்கள் மனம் குளிர
தந்த திந்தத் தமிழ்க்கடலே;
பேச்சாலே பெருமை செய்தாய்
எழுத்தாலே எழுச்சி தந்தாய்;
சிந்தனையால் ஒளியேற்றி
சிரிப்பினிலும் பொருள் கொடுத்தாய்;
இறைவனையும் துதித்தக் கடல்
இல்லை என்று சொன்னவரை
இறைநிகராய்ப் பார்த்தக் கடல்!
நேர்மைதனை உப்பெனவும்
நியாயமதை முத்தெனவும்
மகிழ்ச்சிதனை மீனாக
ஒளிவீசும் பவழமென
சமுதாயம் விழிப்படைய
சங்காக ஒலித்தக் கடல்!
மறைந்தாயோ தமிழ்க் கடலே
மறப்போமோ உம் நினைவை?
அலையாக எம் நெஞ்சில்
அனுதினமும் வாழ் வாயே.
எங்கள் நிலம்
****************
பெருநிலங்கள் தெலுங்கர் வசம்
பெருவணிகம் ஹிந்தி வசம்
விலையுயர்ந்த நகைக் கடைகள்
வியர்வை சிந்தா மார்வாடி;
இனிப்பகமோ சேட்டு வசம்
தேநீர்க்கடை மலையாளி!
காசுகையில் இல்லாமல்
கடைவீதி கண்டு வந்தால்
மூட்டைத் தூக்கும் தொழிலாளி
முழம் போடும் பூக்காரி
கூறு கட்டும் காய்காரி
கூவி விற்போர் தெருவோரம்;
குப்பையள்ளும் தொழிலாளி
குடித்து சுற்றும் ஊதாரி
அழுக்குப் படிந்து பழுதுபார்க்கும் அனைவருமே தமிழாளே!
ஏரோட்டும் எட்டியானும்
களையெடுக்கும் காளியம்மா
சாலையோரம் கூழ் விற்கும்
கன்னியம்மா தமிழாளே!
நுங்கு விற்கும் தங்கசாமி
கீரை விற்கும் கிளியம்மா
கிழிஞ்ச ரவிக்கை குப்பம்மா
கோவணான்டி குப்புசாமி
இவரெல்லாம் தமிழ்க்காரர்!
தமிழ்நாடுப் பெயர் மட்டும்
தமிழரெலாம் கூலி யாளே;
பலநூறு மைல் கடந்து
பலனெல்லாம் அனுப விக்கும்
பிற மொழியார் வசமான
தமிழர் நிலம் மீட்டெடுக்க
தமிழரெலாம் ஒன் றிணைந்து
தம் வசமாய்த் தமிழ்நாட்டை
மீட்டெடுத்து தமிழர் தமை
வாழ்விக்க வழி சமைப்போம்
வாழ்விக்க வழி சமைப்போம்!
நாற்றங்கால்
**************
தயாராகிக்கொண்டே
இருக்கின்றன…
நாற்றங்கால்கள்;
மந்திரங்களிலிருந்து
ஆரம்பிப்போம்!
வேத மந்திரங்களாம்;
பிறருக்கு
வேதனையெனத் தெரிந்தும்
பாடசாலை வைத்து
நாற்றங்கால்களாக
பயிற்றுவிக்கிறார்கள்!
தொழுகையாளரும்,
ஸ்தோத்திரக்காரரும்
அவரவர் வாரிசுகளுக்கான
நாற்றங்கால்களை
தயார் செய்து கொண்டே….
இசை, நடனம், நாட்டியம்
நாடகம், நடிப்பு, விளையாட்டு….
கலைகள் எனும் பெயரில்
காசு பணம் உள்ளவர்கள்
கட்டமைத்துக் கொள்கிறார்கள்;
நாற்றங்கால்களை!
தாய்மொழி தவிர்த்து
பிறமொழி வளர
நாற்றங்கால்கள்!
திட்டமிட்டுக்
கொள்கிறார்கள்;
அவரவர்
வாரிசுகளுக்கான
நாற்றங்கால்களை!
உழவன் மட்டும்
உயிரினம் வாழ
நாற்றங்கால்களை
தயார்படுத்துகிறான்!
அவனுடைய விதைகள்
வீதிகளில்!
பாங்கைத் தமிழன்