வங்கதேச திரைப்படத் தயாரிப்பாளர் தன்வீர் மொகம்மெல் உடன் ஓர் உரையாடல் (2020) – ஜீனத் கான்
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் தன்வீர் மொகம்மெலுடனான எனது நேர்காணல் சமீபத்தில் வெளியான அவரது ‘ருப்சா நொதிர் பாங்கே” (அமைதியாகப் பாயும் ருப்சா நதி) திரைப்படம் குறித்ததாக அமைந்தது. வங்கதேசக் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான ஏகுஷே படக் விருதை 2017ஆம் ஆண்டு பெற்றுள்ள தன்வீர் மொகம்மெலுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. நம் காலத்தில் நன்கு அறியப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளராக அவர் இருக்கிறார். நொதிர் நாம் மதுமதி (1995), சித்ரா நொதிர் பாரே (1999), லால்சலு (2001) போன்ற படங்களுக்காக பத்து முறை வங்கதேச தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். டாக்காவில் உள்ள வங்கதேச திரைப்பட நிறுவனத்தின் தற்போதைய இயக்குனராக உள்ள மொகம்மெல், ஏஎஃப்எம்.மொகம்மெல் – பேகம் சாயிதா மொகம்மெல் தம்பதியருக்குப் பிறந்தவர். உயர்கல்வி பெற்றிருந்த அவரது பெற்றோர் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக இருந்து வந்தனர். அவரது தந்தை மாஜிஸ்திரேட் ஆகவும், தாய் கல்லூரிப் பேராசிரியராகவும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தனர். பிரிவினைக்கு முன்பாக கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் பகுதியில் அவர்கள் வசித்து வந்தனர். குல்னா நகரத்தில் (வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தொழில்துறை நகரம்) உள்ள அவரது குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டிலே மொகம்மெல் வளர்ந்தார்.
மொகம்மெல் முன்பொருமுறை அளித்த நேர்காணலில் ‘வழக்கத்திற்கு மாறாக நவீனமான, பண்பட்ட நபர்கள்’ என்று தனது பெற்றோரை வரையறுத்திருந்தார். தனது உயர்நிலை, பல்கலைக்கழகக் கல்வியை டாக்காவில் பெற்ற மொகம்மெல். டாக்கா பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் மாணவராக இருந்தபோது இடதுசாரி மாணவர் அரசியலில் ஈடுபட்டு வந்தார். இளமையில் ஏகோட்டா என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படத் தயாரிப்பில் அவருக்கு மிகுந்த திறமை இருந்தது. சில நண்பர்களுடன் சேர்ந்து திரைப்பட சங்கத்தை உருவாக்கி அதற்கு ‘டாக்கா பல்கலைக்கழக சினி வட்டம்’ என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் மொகம்மெலின் தாயார்தான் தனது மகனின் உணர்வுரீதியான, ஆக்கப்பூர்வமான பக்கத்தை அங்கீகரித்தவராக இருந்தார். மொகம்மெல் தனது திரைப்பட வாழ்க்கையை தாயாருடைய ஆசீர்வாதம் மற்றும் அவர் தந்த பத்தாயிரம் ரூபாய் பரிசுடன் தொடங்கினார். அப்போதிருந்து அவர் தான் சென்ற பாதையில் திரும்பிப் பார்க்கவே இல்லை.
அவரிடமிருந்த திறமை, ஆக்கபூர்வமான நோக்கங்கள் அவரது படைப்பு வடிவங்களின் அனைத்து வகைகளிலும் பரவிக் கிடக்கின்றன. சொந்தமாகவே கதைகள், திரைக்கதைகளை எழுதி வந்த மொகம்மெல் மிக அரிதாகவே மற்ற எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்டு திரைப்படங்களை இயக்கினார். வங்கதேசத்தில் திரைப்படத் துறை காலாவதியான கதைகளுடன், குறைவான திறனுடன் இயங்கி வருகின்ற நேரத்தில் மொகம்மெலின் படங்கள் ‘கலைக்காகவே கலை’ என்று தனித்து நிற்கின்றன. மிகவும் திறமையான ஆவணப்பட, திரைப்படத் தயாரிப்பாளராக மொகம்மெலின் புகழ் எல்லைகள், இனம், மதங்களைக் கடந்து நிலைத்து நிற்கிறது.
இதுவரையிலும் பதினைந்து ஆவணப்படங்கள், ஏழு திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். ‘ருப்சா நொதிர் பாங்கே’ அவரது ஏழாவது திரைப்படமாகும். எந்தவொரு அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காத அவர் உண்மையிலேயே தனக்குத் தகுதியான குறிப்பிடத்தக்க அனைத்து விருதுகளைப் பெறுவதில் கூட அலட்சியத்துடனே இருக்கிறார். சிறந்த தொலைநோக்குப்பார்வை கொண்ட மொகம்மெல் தனது படங்களின் மூலம் கலையை உருவாக்குகிறார். தங்களுடைய நிலத்தைப் பற்றி அர்த்தமுள்ள கதைகளை உருவாக்கும் அர்ப்பணிப்புள்ள அவர் குரலற்றவர்களுக்கான குரலாக இருக்கிறார். அவரது ஆரம்பகால ஆவணப்படங்களில் ஒன்றான ‘பஸ்ட்ரா பலிகரா’ தங்கள் குடும்பத்திற்கென்று சம்பாதிப்பதற்காக மௌனமாகத் தவித்து வருகின்ற ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களின் அவலநிலையைப் பற்றியது.
வங்கதேசம் விடுதலை பெற்றதிலிருந்து இதுபோன்ற ஆவணப்படங்களின் முன்னோடிகளில் ஒருவராக மொகம்மெல் இருந்து வருகிறார். அவருடைய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மூலம் அநீதி, முற்சார்புகள், தியாகம், சக குடிமக்களின் துயரம் பற்றி இதுவரையிலும் சொல்லப்படாத பல கதைகளை நாம் அறிந்திருக்கிறோம். அவருடைய எந்தவொரு படத்தையும் பார்த்த பிறகு, மக்கள் சுதந்திரமாக இருக்கும் சமூகத்தை உருவாக்க அவர் விரும்புகிறார், மனிதர்களின் கௌரவத்தையே அவர்களுடைய உள்ளார்ந்த உரிமைகளாக அவர் உணர்கிறார் என்ற உணர்வுடனே நான் வெளிவருகிறேன்.
தற்போது வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை ‘மதுமதி பரேர் மனுஷ்டி’ என்ற பெயரில் மொகம்மெல் எடுத்து வருகிறார். திரைப்படங்களை உருவாக்குவது குறித்து மொகம்மெல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘இளைஞனாக இருந்தபோது விருதுகளைப் பெறுவது குறித்து மிகுந்த உற்சாகத்துடன் இருப்பேன். ஆனால் இப்போது உண்மையைச் சொல்வதானால் விருதுகளைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. எனது படங்களை எந்தவொரு போட்டி விழாக்களுக்கும் சமர்ப்பிப்பதைக்கூட நிறுத்தி விட்டேன். இனிமேலும் போட்டிகளில் ஒருவனாக கலந்து கொள்ள நான் விரும்பவில்லை. என் படங்களை நிலைநிறுத்துவதற்கு எந்தவொரு விருதும் உதவாது என்பது எனக்கு நன்கு தெரியும். உண்மையான கலையை உருவாக்க முடிந்தால் மட்டுமே என் படங்கள் நிலைத்து நிற்கும். எனவே அர்த்தமுள்ள கலையை திரையில் உருவாக்க நானும் எனது படக்குழுவினரும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். மற்றவையெல்லாம் எனக்குத் தேவையற்றவை. ‘உங்கள் கடமையைச் செய்யுங்கள், பலன்களை எதிர்பார்க்காதீர்கள் – ஏனென்றால், அவற்றை உங்களால் அனுபவிக்க முடியாது’ என்று குருசேத்திரப் போரில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியதை நான் உறுதியாக நம்புகிறேன்’. (நியூ ஏஜ் நேர்காணல்)
இந்த நேர்காணல் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டது.
நல்வரவு தன்வீர் மொகம்மெல். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நீங்கள் எழுதி இயக்கியுள்ள ருப்சா நொதிர் பாங்கே (அமைதியாகப் பாயும் நதி ருப்சா) திரைப்படத்தின் வெளியீடு வங்கதேசத்தின் பிஜாய் திபோஸ் (வெற்றி நாள்) உடன் பொருந்திப் போகின்ற வகையில் வெளியாகி இருக்கிறது. அதனை உருவாக்கியவர், இயக்குநர் என்ற முறையில் உங்களுடைய புதிய திரைப்படத்தின் வெளியீடு பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்?
இந்த ஆண்டு பிப்ரவரியில் ருப்சா நொதிர் பாங்கே திரைப்படம் நிறைவடைந்தது. கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியது பின்னர் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் அந்தப் படத்துடன் நாங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. வங்கதேச வெற்றி கொண்டாடப்படும் வாரத்தில், அதாவது டிசம்பர் நடுவில் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி அதை வெளியிட்டு முடித்திருப்பதில் மகிழ்ச்சி. திரைப்படத்தின் முதல் வெளியீடு டிசம்பர் 10 அன்று நடைபெற்றுள்ளது. டிசம்பர் 11 முதல் ஷாபாக் பொது நூலக ஆடிட்டோரியம், ஸ்டார் சினிப்ளெக்ஸ் மற்றும் பிற இடங்களில் படம் திரையிடப்படுகிறது. படத்தை இணையவெளியிலும் வெளியிட இப்போது தயாராகி வருகிறோம். நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். படம் வெளியானது சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் இரண்டு ஆண்டு கால உழைப்பின் இறுதியில் ருப்சா நொதிர் பாங்கே என்ற இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த வரலாற்றுப் படத்தில் கதாநாயகனான மனோப்ரதன் முகுபதாய் கதாபாத்திரத்தின் மூலம் குல்னாவின் நிஜவாழ்க்கை இடதுசாரித் தலைவரான பிஷ்ணு சட்டர்ஜியை உயிருடன் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவரது வாழ்க்கைப் பயணத்தையே படத்தின் கதை மையமாகக் கொண்டுள்ளது. பிஷ்ணுவின் கதையை எடுத்துக் கொண்டு அவரை உங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சித்தரிப்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொண்டிருந்தது? இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம், துணை கதாபாத்திரங்களை உருவாக்கிட எந்த அளவிற்கு புனைகதை சேர்க்கப்பட்டது?
உண்மையாகச் சொல்வதென்றால் படத்தின் கதையில் கற்பனைக்கு அதிகம் இடமில்லை. பிரிட்டிஷ் எதிர்ப்பு சுதேசி இயக்கம், ஆயிரக்கணக்கான விவசாயிகளால் அணை கட்டப்பட்டது, 1943 பஞ்சம், 1946 கலவரம், 1947இல் பாகிஸ்தான் உருவாக்கம், 1952 மொழி இயக்கம், 1954இல் ஐக்கிய முன்னணி தேர்தல், இறுதியாக 1971 வங்கதேச விடுதலைப் போர் என்று அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் படம் நேர்மையுடன் சித்தரிக்க முயன்றுள்ளது என்பதே உண்மை.
குல்னாவைச் சேர்ந்த தோழர் பிஷ்ணு சட்டர்ஜியின் வாழ்க்கையை ஓரளவிற்கு வடிவமைத்தே படத்தின் முக்கிய கதாநாயகனான தோழர் மனோப் முகர்ஜி கதாபாத்திரம் இருக்கிறது. ஆயினும் மற்றவர்களும் படத்தில் இடம் பெற்றுள்ளனர். வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் முகமது ஃபர்ஹாத் ‘வங்கதேசம் முழுவதிலிருந்தும் நூற்று முப்பத்தாறு இடதுசாரித் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டு அந்தமான் மற்றும் வேறு சிறைகளில் இருந்திருக்கிறார்கள். சில நேரங்களில் பத்து, பதினைந்து, இருபது ஆண்டுகள்கூட அவர்கள் சிறைகளில் இருந்துள்ளனர்’ என்று ஒருமுறை என்னிடம் சொன்னார். இதுபோன்ற நான்கு மூத்த தோழர்களின் அனுபவங்களை முக்கியமாகக் கொண்டே திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. தோழர் பிஷ்ணு சட்டர்ஜியின் வாழ்க்கை திரைப்படத்தில் மிக முக்கியமானதாகத் தோன்றினாலும், பிக்ராம்பூர் பகுதியின் தோழர் ஜித்தன் கோஷ், டாக்காவைச் சேர்ந்த தோழர் கியான் சக்கரவர்த்தி, குல்னாவைச் சேர்ந்த விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ரத்தன் சென் ஆகியோரின் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட துணுக்குகளும் படத்தின் கதைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
படம் முக்கியமான முற்போக்கான வரலாற்று இயக்கங்களை உள்ளடக்கி உள்ளது. வயதான மனோப் முகர்ஜியை 1971 விடுதலைப் போரின் போது ரசாகார்கள் (போர்க் குற்றவாளிகள்) எப்படி கொன்றார்கள் என்பதைப் படம் பிடிப்பதற்குப் பதிலாக, படத்தின் முக்கிய நோக்கத்தைச் சுட்டிக்காட்ட்டுவதற்கு மற்ற இயக்கங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஏன் உணர்ந்தீர்கள்?
அரசியல் ஆர்வலராக இருந்த தோழர் மனோப் முகர்ஜியின் இருப்பின் ஒரு பகுதியாக அரசியல் இயக்கங்கள் இருந்து வந்தன. தவிர அந்தக் கதாபாத்திரத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் காட்டுவதே எங்கள் நோக்கமாக இருந்தது. எனவே பிரிட்டிஷ் எதிர்ப்பு சுதேசி இயக்கம், 1943 பஞ்சம், 1946 கலவரம், 1947இல் பாகிஸ்தான் உருவாக்கம், 1952 மொழி இயக்கம், இறுதியாக 1971இல் வங்கதேச விடுதலைப் போர் போன்று கடந்த காலங்களில் இந்த நிலத்தில் நிகழ்ந்துள்ள அனைத்து இயக்கங்களும் படத்தில் இடம் பெற்றன. முக்கிய அரசியல் நிகழ்வுகள், அவர் தீவிரமாகப் பங்கேற்ற வரலாற்றில் முக்கியமான இயக்கங்களின் பின்னணியில் தோழர் மனோப் முகர்ஜியின் பாத்திரத்தைச் சித்தரிக்க நாங்கள் முயன்றோம். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு கிரேக்க சோகக் கதாபாத்திரத்தைப் போலவே இருந்தார். சிறந்த குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்த அவர் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராகத் தைரியத்துடன் போராடினார். ஆனால் காலத்தின் வடிவத்தில் விதி அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை. அது உண்மையான சோக கதாபாத்திரம்!
வங்கதேசம் முழுவதும் கோவிட்-19 தீவிரமாகப் பரவி வரும் நேரத்தில் படத்தை திரையிடுவது என்பது பாதுகாப்பு குறித்த சவால்களைத் தெளிவாக முன்வைத்திருக்கிறது. தினமும் மூன்று முறை டாக்காவில் உள்ள பொது நூலக அரங்கத்தில் படம் காண்பிக்கப்படுகிறது என்ற செய்தியை வாசித்தேன். அது சில சினிப்ளெக்ஸ்களிலும் காட்டப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வரவில்லை என்ற கவலை இருக்கிறதா? ஒரு திரையரங்கிற்குள்ளாக மக்களால் உண்மையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியுமா?
கோவிட்-19 மிகவும் கவலைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தொற்றுநோயுடன் வாழ வேண்டும் என்ற உண்மையும் மக்கள் உணர்ந்துள்ளனர். வெறுமனே அதிலிருந்து தப்பித்துச் செல்ல வழி எதுவும் இல்லை. வங்கதேசம் கோவிட்-19ஆல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் பொதுமுடக்கம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரையறுக்கப்பட்டுள்ள வழிகளில் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. திரையரங்குகளும், அரங்கங்களும் திறந்தே இருக்கின்றன. நாங்கள் படத்துடன் பத்து மாதங்களாகக் காத்துக் கொண்டிருந்தோம். டிசம்பர் மாதம் நாடு வெற்றியடைந்து, விடுதலை பெற்ற மாதம் ஆகும். எங்களுடைய படத்திற்கும் வங்கதேச விடுதலைப் போருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், படத்தை வெளியிட அதுவே சரியான நேரம் என்று நாங்கள் கருதினோம். தொற்றுநோய் காரணமாக இந்த முறை சினிப்ளெக்ஸ்கள், பொது நூலக அரங்கங்களில் கூட பொதுவாக திருப்திகரமான அளவில் பார்வையாளர்கள் வருவது குறைவாகவே இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனாலும் அதை நாங்கள் எப்படியாவது தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. திரைப்பட நிகழ்ச்சிகளின் போது சமூக இடைவெளி, அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார விதிகள் குறித்து மிகவும் கவனத்துடன் இருக்க முயற்சிகலை மேற்கொண்டிருக்கிறோம். ஆனாலும் இந்த தொற்றுநோய் காரணமாக சமூகமாகக் கூடுவது இன்னும் சிக்கலாகவே இருந்து வருகிறது. எனவே படத்தை இணையவெளியிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம். டிசம்பர் 25 முதல் இணையத்தில் படத்தைப் பார்க்க முடியும்.
எனக்குத் தெரிந்தவரை திரைப்படங்களை நீங்கள் வணிக ரீதியான வெற்றிக்காக உருவாக்கிடவில்லை. மாற்றுத் திரைப்படத் தயாரிப்பாளராக, சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதே உங்கள் நோக்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. ஓரளவு அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பதால், அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற தொலைக்காட்சி சேனல்களில் இந்தப் படத்தை ஏன் காட்டக்கூடாது? இது ஒரு டெலிஃபிலிம் இல்லையென்றாலும், அவ்வாறு தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதன் மூலம் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் லட்சக்கணக்கானவர்கள் சினிமா அரங்குகளுக்குச் சென்றிடாமலே படத்தைப் பார்க்க முடியுமே?
தொலைக்காட்சி சேனல்களில் அரசுக்கு சொந்தமானவற்றில் மட்டுமல்லாது, வங்கதேசத்தில் இப்போதுள்ள சில தனியார் சேனல்களிலும் திரைப்படத்தைக் காண்பிக்கும் திட்டம் இருக்கின்றது. சில மாதங்களுக்குப் பிறகு அதை நாங்கள் நிச்சயமாக செய்யப் போகிறோம். அது தவிர வீட்டிலேயே அமர்ந்து படத்தை மக்கள் பார்க்கும் வகையில் இணையவழியில் காட்டவும் திட்டமிட்டுள்ளோம். ‘மலை முகமதுவிடம் போகவில்லை என்றால், முகமது மலையிடம் செல்வார்’ என்ற பழமொழி சொல்வது போல், தொற்றுநோய் காரணமாக மக்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறத் துணியவில்லை என்றால், நாங்கள் அவர்களின் வீடுகளுக்குப் படத்தைக் கொண்டு செல்வோம். அந்த வேலை டிசம்பர் 25 முதல் தொடங்கும்.
உங்கள் திரைப்பட கதாபாத்திரங்களின் உரத்த குரல்கள், தியாகங்கள் மூலமாக நேர்மறையான செய்தியை வழங்கி வருகிறீர்கள். இன்றைய சமூகத்தின் சூழலில் உங்கள் கதாநாயகன் தருகின்ற முக்கியமான செய்தி என்ன?
சில செய்திகளை நான் யூகிக்கிறேன். முதலில் எங்களுக்கான வங்க அடையாளம். பாகிஸ்தானியர்கள் எங்களுடைய தேசிய அடையாளத்தைச் சீர்குலைக்க முயன்றனர். அந்த வழி அவர்களுக்கு எளிதாகி அவர்கள் எங்களை ஆட்சி செய்யவும், சுரண்டவும் செய்தனர். 1971ஆம் ஆண்டு விடுதலைப் போர் ‘வங்காளத்தின் டெல்டா நதிக்கரையே எங்கள் தாய்நாடு, மணல் நிறைந்த அரபு தீபகற்பம் அல்ல’ என்று வங்காள முஸ்லீம்களை மீண்டும் தங்கள் வேருக்கு கொண்டு வந்து சேர்த்தது.
என்னுடைய விடுதலைப் போர் திரைப்படமான நொதிர் நாம் மதுமதியின் [நதியின் பெயர் மதுமதி] இறுதிக் காட்சியை நினைவில் வைத்திருந்தால், தன்னுடைய ரசகார் மாமாவைக் கொன்ற பிறகு மதுமதி ஆற்றை நோக்கி ஓடுகின்ற வங்க கொரில்லா இளைஞரான பச்சு தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றை நோக்கி குனியும் போது பின்னணியில் அந்தப் படத்தின் தீம் பாடலான ‘இந்த பத்மா, இந்த மேக்னா, இந்த ஜமுனா/ இது என்னுடைய நாடு/ இது என் காதல்’ ஒலிப்பது உங்களுக்கு இப்போது கேட்கும். அது இந்த நிலத்திற்கு வெளியே இஸ்லாமியத்துடனான கூட்டு நிச்சயமாக தேசபக்திக்கு எதிரானது என்ற செய்தியைத் தருவதாகவே நான் கருதுகிறேன். அந்தப் படத்தின் கதாநாயகன் மனோப் எங்களுடைய வங்காள அடையாளத்திற்காகப் போராடினார். அது தவிர தனது வாழ்நாள் முழுவதும் மனோப் போராடிய மற்றொரு பிரச்சனையாக சமூக நீதியும் இருந்தது.
‘ருப்சா நொதிர் பாங்கே’ திரைப்படம், அந்தப் படத்தின் மையக் கதாபாத்திரமான மனோப் முகர்ஜி ஆகியோரிடமிருந்து நமக்குக் கிடைக்கின்ற நெஞ்சைத் தொடும் மற்றுமொரு செய்தியாக மதச்சார்பின்மையே இருக்கிறது. ‘சித்ரா நொதிர் பாரே’ [அமைதியாகப் பாயும் சித்ரா] அல்லது ‘ஜிபோந்துலி’ [தி டிரம்மர்], ‘லாலன்’ போன்ற எனது மற்ற படங்களும் வங்கதேசத்தில் மதச்சார்பற்ற சமுதாயம், அரசியல் குறித்த வகுப்புவாதமற்ற செய்திகளைத் தருபவையாகவே இருக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பாளராக எனது பெரும்பாலான படங்களில் மதச்சார்பற்ற வங்கக் கலாச்சாரமே முக்கிய செய்தியாக இருப்பதை உங்களால் காண முடியும். அந்த சிந்தனையின் வெளிப்பாடுகளாகவே ‘ருப்சா நொதிர் பாங்கே’ திரைப்படமும், அந்தப் படத்தின் மனோப் முகர்ஜி என்ற முக்கிய கதாநாயகனும் இருக்கிறார்கள்.
2021 ஜனவரியில் இந்தியாவில் கோவாவில் நடைபெறவிருக்கும் 51ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ருப்சா நொதிர் பாங்கே திரையிடப்பட உள்ளது. அந்த திரைப்படம் திரைப்பட விழாவின் உலக பனோரமா பிரிவில் விதிவிலக்கான, புகழ்பெற்ற மற்ற இயக்குனர்களின் படைப்புகளுடன் திரையிடப்படவிருக்கிறது. இந்த கோவிட்-19 சூழலில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன? இதை எழுதுகின்ற போது கோவா மாநிலத்தில் இதுவரையிலும் 29,343 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளர், 368 இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற நிலைமை இருக்கிறது. இந்த நிலைமையில் திரைப்பட விழாவை இப்போது நடத்துவது என்பது யதார்த்தமான யோசனைதானா? திரைப்படத் திருவிழா நடத்தப்படுகின்ற நேரம் குறித்த கவலை எதுவும் உங்களுக்கு இருக்கிறதா?
தொற்றுநோய் நிச்சயமாக கவலை தருவதாகவே இருக்கிறது. அந்தத் திரைப்பட விழாவிற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. ஆனால் கோவாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஜனவரி மாதம் திரைப்பட விழாவை நடத்துவது சரியான நேரமாக இருக்காது என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து நாம் தொடர வேண்டியுள்ளது. இளமைக் காலத்தில் “ஒப்-லா-டி, ஒப்-லா-டா/ வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது” என்ற பீட்டில் பாடலை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தொற்றுநோய் இருக்கிறதோ அல்லது இல்லையோ, வாழ்க்கை தொடர்ந்து செல்ல வேண்டும். இப்போது அந்த உணர்வுடனே வாழ்க்கையையும், என்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் நான் பார்க்கிறேன்.
ஓரளவிற்கு இளைய தலைமுறையினரை மனதில் வைத்து இந்தப் படத்தை நீங்கள் தயாரித்துள்ளீர்கள் என்று பரவலாக அறியப்பட்டுள்ளது. ஆக சுதேசி இயக்கம் முதல் 1971 விடுதலைப் போர் வரை நீளும் வரலாற்றுக் காலத்தை உருவாக்கி இருக்கிறிர்கள். அவர்களுக்கு இந்தப் படம் எந்த அளவிற்கு உத்வேகம் தருவதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்பதை விரிவாகக் கூற முடியுமா?
வங்கதேசத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றின் மீது ஆர்வம் என்பது இருக்கவில்லை. அந்த நிலைமை உலகளாவிய ஒன்றாகவே இருக்கிறது. வரலாற்றை தொடர்ந்து சிதைக்க முயற்சி செய்து வருகின்ற வங்கதேச ஆளும் மேல்தட்டினர் புகழ்பெற்ற நமது கடந்த காலம் குறித்து மக்களிடம் குறிப்பாக புதிய தலைமுறையினரிடம் அலட்சியத்தை உருவாக்குகிறார்கள் என்பதால் வங்கதேச இளைஞர்களைப் பொறுத்தவரையில் அது மிகவும் உண்மையாகவே இருக்கிறது. வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ‘அதிகாரத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமாகும்’ என்று செக் நாவலாசிரியர் மிலன் குந்தேரா ஒருமுறை கூறியிருந்தார். ஆட்சியாளர்கள் மக்கள் தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஏனெனில் அது மக்களை மிகவும் இரக்கமின்றி ஆளவும் சுரண்டவும் அவர்களுக்கு உதவுகின்றது. ஆனாலும் மக்கள் அந்த நினைவுகளைப் போற்றவே செய்கிறார்கள். அந்த நினைவுகளை மக்களிடம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய கடமை கலைஞர்களுக்கானதாகும். எனவே நான் வரலாற்று உள்ளடக்கத்துடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கிடவே விரும்புகிறேன்; என்னுடைய கதாபாத்திரங்களை சில வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியிலே வைத்திருக்கவே விரும்புகிறேன். ‘அமைதியாகப் பாயும் ருப்சா நதி’ திரைப்படத்திற்கான வரலாற்று பின்னணி 1930களின் சுதேசி இயக்கத்தில் தொடங்கி 1971இல் நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போர் வரை என்று மிகப் பெரிய அளவிலே இருந்தது. நாட்டின் இளைஞர்களுக்கு தங்களுடைய நிலத்தின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள அது மிகவும் அவசியம் என்றே நான் நம்புகிறேன். ‘அமைதியாகப் பாயும் ருப்சா நதி’ திரைப்படம் அந்த நோக்கத்திற்கு நிச்சயம் ஓரளவிற்கு உதவிடும் என்றும் நினைக்கிறேன்.
கற்பனையான மனோப் முகர்ஜி கதாபாத்திரம் தனது தனிப்பட்ட தியாகத்தின் மூலம் தனது முத்திரையைப் பதித்துள்ளது. இன்றைய இளைஞர்களிடம் அவர் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பலாமா? முகர்ஜியை முன்மாதிரியாகக் கொண்டு இன்றைய புதிய தலைமுறை முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருமா?
வங்கதேச அரசியலில் குறிப்பாக சமீபத்திய காலங்களில் நல்ல முன்மாதிரிகள் என்று யாருமில்லை. அரசியல் லட்சியவாதத்தையோ அல்லது நியாயமான காரணத்திற்காகப் போராடும் லட்சியவாதம் கொண்ட மனிதனையோ சமகால வங்கதேசத்தில் காண்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. ஆகவே மிக அண்மையில் இந்த நிலத்தில் வாழ்ந்து, உழைத்த தோழர் மனோப் முகர்ஜியின் கதையின் மூலம் இளைஞர்களுக்குத் தேவையான கதாபாத்திரத்தை அவர்களிடம் அறிமுகப்படுத்த விரும்பினேன்.
1905ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவில் சுதேசி இயக்கம் தேசியவாத நம்பிக்கைகளுக்கான சின்னமாக மாறியது. அந்த இயக்கம் இந்தப் படத்தில் எந்த அளவிற்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது?
சிறிதளவிற்கே என்று நான் நினைக்கிறேன். திரைப்படத்தின் கதாநாயகன் மனோப் முகர்ஜியிடம் இருந்த அரசியல் உணர்வு சுதேசி இயக்கத்திலிருந்து பெற்றுக் கொண்டது. தன்னுடைய இளமைப் பருவத்தில் தேசியவாதியாக இருந்த அவர் மார்க்சிஸ்ட் சர்வதேசவாதியாக மாறிய கட்டம் படத்தின் முதல் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. சித்தரஞ்சன் தாஸ் பற்றிய குறிப்பு மற்றும் அந்தக் காலத்து பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம் போன்றவையும் படத்தில் இடம் பெற்றுள்ளன. படத்தின் ‘ஏக்பார் பிடே தே மா குரே அசி’ என்ற தீம் பாடல் [தாயே திரும்பி வர என்னைப் போக விடுங்கள்] சுதேசிகள் வழக்கமாகப் பாடுகின்ற பாடலாகும். படத்தின் காட்சிகளிலும், ஒலிப்பதிவிலும் சுதேசி இயக்கத்தின் இருப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
துணைக்கண்டத்தில் சுய-ஆட்சி நிறுவப்படும் வரை இடதுசாரித் தலைவர்கள் தங்கள் இயக்கத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் மகத்தான போராட்டங்கள் மற்றும் தியாகங்களைச் செய்தனர் (அவர்களில் பலர் தாக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டு அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர்). சுதேசி இயக்கத்தால் இந்தியாவின் தொழில்துறை துறை ஏற்றம் பெற்றது. ஆயினும்கூட பிரிவினைக்குப் பிறகு இடதுசாரித் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். வங்கதேசம் சுதந்திர நாடாக மாறிய போதும் அதுபோன்றே நடந்தது. உங்கள் பார்வையில் துணைக்கண்டத்தில் இடதுசாரி சித்தாந்தம் ஏன் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது என்பதை விளக்குங்களேன்.
அது ஒரு வர்க்க நிகழ்வாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, அதேபோன்று வங்கதேசத்திலும் தொழிலாளர்கள்-விவசாயிகள் ஆட்சிக்கு வரவில்லை. அதிகாரம் தேசிய முதலாளித்துவ, நடுத்தர வர்க்கத் தலைவர்களின் கைகளுக்கே சென்று சேர்ந்தது. நாட்டின் விடுதலைக்காக இடதுசாரித் தலைவர்களும், ஆர்வலர்களும் செய்த தியாகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அல்லது அதிகாரப்பூர்வமற்று மரியாதை செலுத்தினார்கள் என்றாலும், அதிகாரத்தை இடதுசாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் அல்லது அத்தகைய மனப்பாங்குடன் அவர்கள் இருக்கவில்லை. இடதுசாரிகளும் தங்கள் தவறுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். 1947க்குப் பிறகு துணைக்கண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றிய தீவிர இடது ரணதிவே நிலைப்பாடு அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியது. தனிமைப்பட்ட அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ), வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிபி) தங்களை மீட்டெடுத்துக் கொண்டு நாட்டின் அதிகார அரசியலுக்குப் பொருத்தமானதாக மாற சிறிது காலம் ஆனது அல்லது போதுமானதாக இருக்கவில்லை.
காலனித்துவத்தின் கீழ் அனைவரும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். தங்கள் மீதான காலனித்துவத்தின் தாக்கம் மற்றவர்களுடையதைப் போல் இல்லை என்று இடதுசாரித் தலைவர்கள் ஏன் நினைத்தார்கள்? சுதந்திரம் குறித்து அவர்களுக்கிருந்த கருத்துகள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தனவா?
நிச்சயமாக அவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டே இருந்தனர். இடதுசாரிகள் தொழிலாளர்கள்-விவசாயிகளின் அரசுகளை, குறைந்தபட்சம் தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கத்தை உருவாக்கவே விரும்பினர். ஆனால் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட, புதிதாகச் சுதந்திரம் பெற்ற பெரும்பாலான நாடுகளின் தேசிய விடுதலைத் தலைவர்கள் பெரும்பாலும் தேசிய முதலாளித்துவர்களாக அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். எனவே மீண்டும் பாதிக்கப்பட்டவர்களாக, இந்த முறை வெளிநாட்டு காலனி ஆட்சியாளர்களுக்குப் பதிலாக தங்கள் சொந்த நாட்டின் ஆளும் வர்க்கங்களால் பாதிக்கப்பட்டவர்களாக, தொழிலாளர்களும் விவசாயிகளும் இருக்க நேர்ந்ததால் சுதந்திரம் பெற்றது குறித்து இடதுசாரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. எனவே மோதல் தவிர்க்க முடியாததாயிற்று.
மற்றொரு காரணமாக 1950கள், 60கள், 70களின் பனிப்போர் நிலைமை இருந்தது. சோவியத் யூனியன், சோசலிஸ்ட் கூட்டமைப்பு போன்றவையே முன்னாள் காலனித்துவ மேற்கத்திய சக்திகளின் முக்கிய எதிரிகளாக இருந்தன. எனவே காலனித்துவ சக்திகள் சோவியத் யூனியன் மீது அனுதாபம் கொண்டு காலனிகளில் இருந்த இடதுசாரிகளையும், சோவியத் தலைமையிலான சோசலிச முகாமால் பெரும்பாலும் ஆதரிக்கப்பட்டவர்களையும் எதிரிகளாகவே கருதின. தங்கள் காலனிகளில் இருந்த இடதுசாரிகளை மிகவும் மோசமாக, பெரும்பாலும் இரக்கமின்றியே காலனித்துவவாதிகள் நடத்தினர்.
கதை சொல்லலில் ஆற்றின் ஓட்டத்தைப் பயன்படுத்தி சித்ரா நொதிர் பாரே, நொதிர் நாம் மதுமதி போன்ற படங்களை இயக்கியுள்ளீர்கள். உங்கள் படங்களில் வருகின்ற நதி ஒரு உருவகமாக வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறதா அல்லது வாழ்க்கையின் மிகப்பெரிய ஓட்டத்தைக் குறிக்கிறதா? கதாநாயகன் தன்னுடைய பயணத்தை மேற்கொள்வதற்கான பாதையாக நதி பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இயற்கையின் சக்திவாய்ந்த கூறு என்பதால் அது பார்வையாளர்களின் மனதைக் கவர்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதா?
நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு படங்களைத் தவிர புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ருப்ஸா நொதிர் பாங்கே’ உள்ளிட்டு ‘ஓய் ஜமுனா’ [ஜமுனா நதியின் கதை], ‘கர்ணபுலிர் கண்ணா’ [கர்ணபுலியின் கண்ணீர்த்துளிகள்] போன்ற சில ஆவணப்படங்களும் நதிகளைக் கொண்டே பெயரிடப்பட்டுள்ளன. படங்களுக்கு இவ்வாறு நதியைக் கொண்டு பெயரிடுவது பெரும்பாலும் என் ஆழ்மனதில் நடைபெறுகிறது. ஒரு நதியானது ஓர் இடத்தைக் குறிக்கிறது, அந்தப் பகுதியின் மக்களைக் குறிக்கிறது. உண்மையில் வங்கதேசம் நதிகள் நிறைந்த நாடு. இங்கே ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து கிலோமீட்டர் தூரத்தில் ஏதாவதொரு நதியை உங்களால் காண முடியும். நதிகளே எங்களுடைய நனவிலும் ஆழ்மனதிலும் அதிகம் உள்ளன. நதிகள் எங்களின் மரபணுக்களில் கலந்திருக்கின்றன.
இது தவிர வங்கதேசத்தின் நதிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. காலையில் ஒரு வித அழகுடனும், பிற்பகலில் இன்னொரு வகை அழகுடனும் நதி இருக்கிறது. சில நேரங்களில் அதன் அழகு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. எனவே எந்தவொரு வங்க காட்சி கலைஞர், ஓவியர், புகைப்படக்காரர், திரைப்படத் தயாரிப்பாளரும் நதிகளை தங்களுடைய படைப்புகளில் சித்தரிக்கும் வகையில் நதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள். நானும் அந்த வங்காளக் கலைஞர்களில் ஒருவனாக இருக்கிறேன். எனக்கு வீடு, சொந்தமாக நிலம் என்று எதுவுமில்லை என்றாலும் என்னிடம் ஒரு படகு இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். நதிகள் குறித்து என்னிடம் அதிகம் ஈர்ப்பு இருப்பதால் அடிக்கடி படகில் எனது நேரத்தை நான் செலவிடுகிறேன். நீங்கள் சொல்ல முயன்ற மற்றொரு அம்சம் அதனுடன் ஏதாவதொரு வகையில் தொடர்புடையது. அது ஒரு நதியின் இருத்தலியல் அல்லது தத்துவ அம்சம். தன்னுடைய இரு கரைகளில் என்ன நடந்தாலும், ஒரு நதியானது ஓடிக்கொண்டேதான் இருக்கும். ஒரு கலைஞரின் வாழ்க்கையும் நதியைப் போன்றதே. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அவர் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
நதிகள் உங்கள் படைப்பாற்றலைத் தூண்டும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கின்றனவா?
ஆம், அது அவ்வாறாகவே இருக்கிறது. நான் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஒரு நதிக்கு அருகில் இருக்கும் போது ஒருபோதும் எனது சிந்தனைகள் ஓய்ந்து விடுவதில்லை. என்னைப் பொறுத்தவரை அனைத்து வகையான ஆக்கப்பூர்வமான தூண்டுதல்களும் நதிகளிடமிருந்தே வருகின்றன.
மனோப் முகர்ஜியின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்க மற்ற நதிகளைக் காட்டிலும் ருப்சா நதியை ஏன் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்?
ஒரு காரணம் இடம் சார்ந்ததாக உள்ளது. ஒரு நதியின் பெயர் ஒரு பகுதியைக் குறிக்கிறது, அந்த நதியை ஒட்டிய பகுதியில் வாழும் மக்களைக் குறிக்கின்றது. படத்தில் உள்ள ருப்சா நதி என்ற பெயரானது படத்தில் வருகின்ற நிகழ்வுகள் பெரும்பாலும் ருப்சா நதிக்கு அருகில் உள்ள பகுதியில் நடந்ததைக் குறிப்பிடுவதாகவே இருக்கிறது. ருப்சா நதியின் மறுபுறத்தில் வாழ்ந்து, பெரும்பாலும் குல்னாவின் தெற்கில் உள்ள துமூரியா, பைட்டகட்டா பகுதியில் தான் செயல்பட்டு வந்த பகுதிகளுக்கு ருப்சா நதியைக் கடந்து சென்று வந்த குல்னாவைச் சார்ந்த தோழர் பிஷ்ணு சாட்டர்ஜியின் வாழ்க்கை வரலாறே படத்தில் வருகின்ற தோழர் மனோப் முகர்ஜியின் வாழ்க்கையைச் சித்தரிப்பதற்காகப் பெரும்பாலும் பின்பற்றப்பட்டது.
‘ஏக்பார் பிடே தே மா குரே அசி’ என்ற தேசபக்திப் பாடல் ஆங்கிலேயர்கள் குதிராம் போஸை தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு முன்பாக தன்னுடைய தாய்க்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் பாடுவதாக உருவாக்கப்பட்டது. அந்த குறிப்பிட்ட பாடல் படத்தின் ஒட்டுமொத்த செய்தியைக் கொண்டு செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதா?
அதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது. ’‘ஏக்பர் பிடே தே மா குரே அசி’ என்ற பாடல், பிரிட்டிஷ் எதிர்ப்பு சுதேசி இயக்கத்தின் போது பாடப்பட்ட பாடலாகும். அந்தப் பாடல் குறிப்பிட்ட நேரம், காலம், இயக்கத்துடன் தொடர்புடையது. இன்றைக்கும் அது தேசபக்திப் பாடலாக மிகவும் பிரபலமாக இருக்கிறது. எங்கெல்லாம் போராட்டம், தாய்நாட்டிற்கான தியாகங்களின் குறிப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அந்தப் பாடல் பாடப்படுகிறது. பிரிட்டிஷ் எதிர்ப்பு சுதேசி இயக்கத்தின் போது தனது அரசியல் செயல்பாட்டைத் தொடங்கிய திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனான மனோப் முகர்ஜி 1971இல் வங்கதேச விடுதலைப் போரின் போது ரசாகார்களால் கொல்லப்படுகிறார். அந்தப் பாடலை தனது பள்ளி நாட்களில் நடைபெற்ற விழாவில் ஒரு சிறுவனாக மனோப் பாடுகின்றார். நாங்கள் அந்தப் பாடலை ஒரு வகையான தீம் பாடலாக படத்தில் பயன்படுத்துவது என்று முடிவு செய்தோம்.
அந்தப் பாடலின் வரிகள் படத்தின் கருப்பொருளுக்கும், காட்சிகளுக்கும் மிகவும் பொருத்தமாக அமைந்தன. அதை மிகவும் எளிதாக படத்தின் கதாநாயகன் தோழர் மனோப் முகர்ஜியின் வாழ்க்கை, தியாகங்களுடன் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.
நன்றி: கௌண்டர்கரண்ட்ஸ் 2020 டிசம்பர் 22
தமிழில்: தா.சந்திரகுரு
வங்கதேச திரைப்படத் தயாரிப்பாளர் தன்வீர் மொகம்மெல் உடன் ஓர் உரையாடல் ( 2017)
வங்கதேச திரைப்படத் தயாரிப்பாளர் தன்வீர் மொகம்மெல் உடன் ஓர் உரையாடல் (2019)