கலையரசியின் – கவிதைகள்
குழந்தை வேண்டும்
***********************
நகராத நாற்காலியின்
கர்வம் உடைய,
தள்ளி விட்டு விளையாட
குழந்தை வேண்டும்.
சரியாக அடுக்கபட்ட
புத்தகங்கள்
காற்றையும் விடுவதில்லை.
அவற்றின் நடுவில்
இரு கண்கள் நுழைய
குழந்தை வேண்டும்.
வட்டில் சோற்றை
வாரி இறைத்து
பின்னல் கோலமிட
குழந்தை வேண்டும்.
கன்னத்தில் அறைந்து
சிரிக்கும் விஷமப் புன்னகை
வழிந்தோடும் இதழ்களை
பார்த்து ரசிக்க
குழந்தை வேண்டும்.
பால் நிலாவின்
அழகைக் காட்டி
பால் சோறு சாப்பிட
குழந்தை வேண்டும்.
நாளெல்லாம் கவனித்தும்,
தந்தையைப் பார்த்து
தாவி ஓடிடும்
செல்லக் குட்டி
குழந்தை வேண்டும்.
கரண்டியும் தட்டும்
இசை கருவிகளாக
மாறி நடனமிடும்
அழகைப் பார்க்கக்
குழந்தை வேண்டும்.
மதில் சுவர்களை
வண்ணமியற்றும் கைகளை
வண்ணத்துப் பூச்சிகள்
நிறத்தைக் கடனாக
பெறக் காத்திருக்கும்
காலத்தைப் பார்க்கக்
குழந்தை வேண்டும்.
வெற்றுக் காகிதங்களில்
கிறுக்கி எறியும்
பிஞ்சுக் கைகளை
அழுத்தமாய் வருடிட
குழந்தை வேண்டும்.
உடைந்த வளையல்
**********************
அடுக்கி வைத்த
கண்ணாடி வளையல்கள்
பார்த்து கண்ணடிக்க,
குட்டி கரங்களில்
நுழைந்துக் கொண்டன.
அவள் சிறுமியாய்
இருந்த போது!
தாய்மாமன் சீரில்
பல வண்ண நிறங்களில்
அடுக்கடுக்காய் அடுக்கி
வரிசை கட்டி இருந்தன!
அவள் பெரிய மனுஷியான
போது!
மஞ்சள் தாலி
கழுத்தில் ஏற
வெட்கத்தில் சிணுங்கியபடி
கைகளில் குலுங்கின
அவள் திருமணத்தின்
போது!
ஒவ்வொருவராய் கை பிடித்து
கன்னம் தடவி
வளையல்களை
அடுக்கினர்!
அவள் வயிற்றில்
குழந்தை இருந்த
போது!
கணவன் கட்டிலில்
கிடத்தி இருக்க!
முகத்தில் மஞ்சள்
வகிட்டில் குங்குமம்
கரைந்து ஓடி வர!
பல வண்ண வளையல்களை
உடைத்தனர் பெண்கள்.
அவள் கணவனை
இழந்த போது!
வெயிலோடு
***************
சுட்டெரிக்கும் வெயிலில்
இருளாய் தொடரும்
நிழலை அணைக்கிறேன்
வெயிலோடு!
ஒற்றை பெஞ்சில்
ஓராயிரம் கதைகள்
பேசுகிறேன் வெயிலோடு.!
முகத்தில் துளிர்க்கும்
வியர்வை துளிகளுடன்
அயர்ச்சி சேரும்
வேளையில்
வெயிலோடு!.
கீற்றாக அறுபட்ட
வெள்ளரிபிஞ்சுகள்
அரிசி விதைகளை காட்டி
சிரிக்கும் போது
வெயிலோடு.!
தெளிந்த நீல வானில்
சட்டென பறக்கின்ற
சிட்டுக்குருவி
கண்களை அள்ளி
செல்லும் நேரங்களில்
வெயிலோடு.!
கருப்பு தார் சாலையில்
பறக்கும் மகிழுந்துகளின்
அடைத்த சன்னலை
வெறித்து பார்க்கும்
சிறுவர்கள் வெயிலோடு.!
குட்டையில் குளிக்கும்
எருமைமாடுகள்
நோகாமல் அசை போடும்
வாய்களில் ஊறும்
ஈக்களை அன்போடு
படரவிட்டு வெயிலோடு.!
தகிக்கும் சூட்டினை
ஏந்திக் கொண்டு
உருளும் டயர்களை
வீரட்டும் மழலைகள்
வெயிலோடு.!
பூத்து குலுங்கும்
நூறு வயது பனை
விண்மீன்கள் சிதறலாய்
கண்களை களவாடியபடி
வெயிலோடு.!
கரைத்து வைத்த
கஞ்சி குளுமையாய்
சட்டியின் விளிம்பை
எட்டிப் பார்க்க
நாக்குகள் குத்தாட்டமிட்டு
வெயிலோடு.!
– இரா.கலையரசி