நூல் அறிமுகம்: என்.மாதவனின் புவியைச் சுற்றும் பூசணி (காய்கறிகளின் வரலாறு) – பானுரேகா
நூல் : புவியைச் சுற்றும் பூசணி (காய்கறிகளின் வரலாறு)
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ.₹120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
ஆசிரியரைப்பற்றி.. தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர். துளிர் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மொழிபெயர்ப்பாளர்… பள்ளி நூலகத்தில் (கிருஷ்ணகுமார் அவர்கள் எழுதியது) ஆசிரியரின் மொழிபெயர்ப்பு நூலைப் படித்திருக்கிறேன்.
நூலைப் பற்றி …
எந்த ஒரு பாடக் கருத்தையும் ஒரு பாடலாகவோ, ஒரு கதையாகவோ அல்லது ஒரு நாடகமாகவோ மாற்றி மாணவர்களிடம் கொண்டு செல்லும்போது புரிதலும், நீண்ட நாள் நினைவில் நிற்கவும் செய்யும் ..அந்த வகையில் காய்கறிகளின் வரலாறு ,அதன் சத்துகள், ஆகியவற்றைத்
தன் கற்பனையில் ஒரு அருமையான புனைவாக மாற்றி அமைத்திருக்கிறார் ஆசிரியர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு இடையே ஒரு தகராறு ஏற்படுகிறது. இதன் மூலம் பூசணியும், உருளைக்கிழங்கும் தங்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ள காய்கறி நடராஜன் உதவுகிறார்.
காய்கறிகள் பிறந்த நாடுகளைப் பட்டியலிட்டுத் தந்து அவற்றின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி, ஒரு பயணத் திட்டத்தையும் வகுத்து கொடுக்கிறார் மானுடவியல் பேராசிரியர் கண்ணன்.
பிறகென்ன.. விமானத்தில் தனி சீட்டு போடச்சொல்லி பூசணியும், உருளையும் இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியே தென் சீனா ,ஈரான் (கேரட்), எகிப்து(வெண்டைக்காய்), ஆப்பிரிக்கா (பச்சைப்பட்டாணி) , தென் அமெரிக்கா (தக்காளி), ஐரோப்பா (பீட்ரூட் ,கோஸ்) போன்ற நாடுகளில் வலம் வந்து தன் இனத்தாரைக் கண்டு பேசி வந்த தகவல்களை நமக்குத் தருகின்றன.
காய்கறிகளின் உரையாடல் சுவையோடு தகவல்களை நமக்குத் தருகிறது.
உதாரணத்திற்கு சங்க இலக்கியத்தில் வழுதுணங்கா என்று வழங்கப்படும் #சொலனும் _மெலொங்கெனா என அறிவியல் பெயர் கொண்டது. பல வடிவங்களில், பல வண்ணங்களில், பல நாடுகளில் கிடைக்கும். ஆங்கிலத்தில் நாம் ஒரு பெயர் வைத்திருக்கிறோம் .பல நாடுகளில் எக்பிளாண்ட் என்று சொல்கிறார்களாம். அறிவியல் பெயர வச்சு கண்டுபிடிச்சிட்டீங்க இல்ல !திராவிட மொழிகள் அனைத்திலும் சங்க இலக்கியப் பெயரை ஒட்டித்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். சுண்டைக்காய் உடன்பிறப்பாம் இவங்களுக்கு… இந்தியாவில் பிறந்த காயை ஜப்பான்ல போய் பாக்குறாங்க உருளையும் பூசணியும்..
தக்காளியும் உருளைக்கிழங்கும் கூட இவங்க குடும்பத்தை சேர்ந்தவங்க தான். ஆச்சரியமான தகவல் தானே! அது இல்லாம இதுல புரதம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் B சத்துகளும் நிறைந்து இருக்குதாம். கத்தரிக்காய் பற்றிய ஒரு கட்டுரையே எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது அல்லவா? இதே போலத்தான்
#எளிமையின் சின்னம் முருங்கை,
#பந்தலிலே பாவக்காய்,
#வள்ளலாய் வாழும் வாழை
#உயிர்ச்சத்து B யின் கருவூலம்(முள்ளங்கி)
#காயமில்லா காயம் எது?(வெங்காயம்)
#மலைச்சரிவுகளில் மலர்வோர்(பூண்டு)
#கேரட் வாக்கா? கேட் வாக்கா?
#வெண்டையுண்டு வாழ்வோம்!
#காயா? பழமா? ( தேங்காயைப் பற்றி இல்லை..பட்டாணியைப் பற்றி!)
#வாயுவா அது மெய்யடா
#விஷக்கனிகளா? விஷயம் உள்ள கனிகளா?
#கொடியாய்ப் படரும் இனிப்பு வேர்
#குடையுடை வேந்தரோ? என்று ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பும் படிக்கத் தூண்டுபவையாகவே உள்ளன.
ஒவ்வொரு காய்கறிகளின் வரலாறும் சுவாரசியம்.
பயணத்தின் இடையே வரும் கதாபாத்திரங்கள்..
இரவி சொக்கலிங்கம், ஷாஜகான், விஜய் ஷங்கர் ,மதுக்கூர் ராமலிங்கம் , வினோபா கார்த்தி,ஹேமப்பிரபா, வந்தனா வெங்கடேஸ்வரன்விஞ்ஞானிகள் தினகரன், சுகுமாரன் என அறிமுகமானவர்களுக்கு மகிழ்ச்சி.
சீனாவில் இருக்கும் பெய்ஜிங் விமான நிலையம், கசகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் விமான நிலையம், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் விமான நிலையம், ஈரான் நாட்டின் டெஹ்ரான் விமான நிலையம், ஜோர்டான் தலைநகர் அம்மான் விமான நிலையம் என ஒவ்வொரு நாட்டின் விமான நிலையங்களின் பெயர்களையும் கொடுத்து அறிவியலோடு வரலாறும் வலம் வருகிறது.
காய்கறிகளோட உரையாடல்களில் நகைச்சுவை சுவை தூக்கலாகவே இருப்பதால் இந்த காலக் குழந்தைகள் விரும்பி படிப்பார்கள்.
பூசணி,உருளையோடு உலகச் சுற்றுலா செல்ல வாசியுங்கள்.
– பானுரேகா