Seenavin Theevira Varumai Ozhippu Bookreview By G. Ramakrishnan நூல் மதிப்புரை: சீனாவின் தீவிர வறுமை ஒழிப்பு | தமிழில்: செ. நடேசன் - ஜி.ராமகிருஷ்ணன்

நூல் மதிப்புரை: சீனாவின் தீவிர வறுமை ஒழிப்பு | தமிழில்: செ. நடேசன் – ஜி.ராமகிருஷ்ணன்

நூல்: சீனாவின் தீவிர வறுமை ஒழிப்பு
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 70
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. 2021 பிப்ரவரி மாதத்தில், அந்த நாட்டில் தீவிர வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதென, சீனக் குடியரசின் தலைவர் ஜின்பிங் அறிவிப்பு செய்தார். சீனாவுடைய பல கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் நேரில் சென்ற முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தினர் (Tricontinental: Institute for Social Research) தீவிர வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்கள். அந்த முடிவுகள் அடங்கிய நூலினை செ.நடேசன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

வறுமை ஒழிப்பிற்காக மக்கள் சீன அரசாங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் வகுத்த திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பற்றிய துல்லியமான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் உருவாக்கிய கட்டமைப்புகள் காரணமாக ஒரு பகுதியினர் தாங்களாகவே வறுமையில் இருந்து மீண்டுள்ளார்கள். அது அல்லாமல், 85 கோடி சீன குடிமக்கள், அரசின் குறிவைத்த திட்டங்களால் தீவிர வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள்.

“சீன பண்புகளுக்கு ஏற்ற சோசலிசத்தை கட்டமைப்பது சீன அரசின் இலக்கு. கடந்த நூற்றாண்டில் ஓரளவிற்கு முன்னேறிய ஒரு சமூகத்தை கட்டமைத்துள்ளோம் (சியாகங்) என்று கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம் செய்திருக்கிறது.  2050 ஆம் ஆண்டில் ஒரு வளமான, வலுவான, மக்களாட்சி நிலவும், நவீன, அழகிய சோசலிச நாட்டை கட்டமைப்பது தங்களுடைய அடுத்த இலக்கு என்பதையும் அவர்கள் உலகிற்கு அறிவித்திருக்கிறார்கள்.

இது எவ்வாறு நடந்தது?
புரட்சியின் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949இல் அதிகாரத்திற்கு வந்தது. 1949 முதல் 76 வரையில் மாவோவின் தலைமையின் கீழ் கட்சியும், அரசும் செயல்பட்டன. அன்றைய அரசு வகுத்த திட்டத்தின் அடிப்படையில் நிலக்குவியல் தகர்க்கப்பட்டு, நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டதால் 90 சதவிகித விவசாயிகள் உழுவதற்கு நிலம் பெற்றார்கள். 10 கோடி விவசாயிகள், விவசாயக் கூட்டுறவுகளில் அணி திரட்டப்பட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை அரசு உருவாக்கியது. 1949இல் 54 கோடியாக இருந்த சீன மக்கள்தொகை 1976இல் 93 கோடியாக அதிகரித்தது.

ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட விவசாய மற்றும் தொழில்வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு 1978க்கு பின்னர் சீன அரசு அடுத்தகட்ட திட்டங்களை முன்னெடுத்தது. சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை திறந்து விடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இவ்வகையில் அந்த நாட்டுக்குள் உள்நாட்டு தனியார் துறைக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் தரப்பட்டன. இருப்பினும் பொதுத்துறைதான் சீன பொருளாதாரத்தில் மேலாதிக்கம் வகித்து வந்தது. தங்களுடைய அணுகுமுறையை சரியாக திட்டமிட்டு வகுத்துக்கொண்ட காரணத்தால் சீனப் பொருளாதாரம் விரைவான வளர்ச்சியை  சாதித்தது. இப்போது அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. அடுத்து சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு ஈடாகவும், அதையும் மிஞ்சக்கூடிய வேகத்திலும்கூட அதன் வளர்ச்சி தென்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஆராய்ச்சியிலும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை சீனா மேற்கொண்டிருக்கிறது. இந்த அடித்தளம் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.

1978இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 57.38 பில்லியன் (5,700 கோடி) டாலராக இருந்தது. இதுவே 2020இல் 14.7 ட்ரில்லியன் (14.70 லட்சம்கோடி) டாலராக உயர்ந்திருக்கிறது. இது உலகப் பொருளாதாரத்தில் 17 சதவிகிதமாகும். இத்தகைய வளர்ச்சியை சீனா எட்டினாலும் அந்த நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வு இருப்பதையும், அதன் இடைவெளி அதிகரிப்பதையும் மக்கள் சீன அரசு கவனத்தில் கொண்டு சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

ஒரே பாய்ச்சல் வேகத்தில் சோசலிசத்தை உருவாக்கிவிட முடியாது. இதனால்தான், சோசலிசத்தை நோக்கி ‘மாறிச்செல்லும் காலம்’என்பதை (Transition Period) என்று லெனின் குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய காலத்தில் தனியார் மூலதனமும், பன்னாட்டு மூலதனமும் பயன்படுத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதையும் லெனின் சுட்டிக்காட்டுகிறார். இந்த புரிதலின் அடிப்படையில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் செயல்படுகிறது.

இவ்வாறு சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் காலத்தில் தனியார் மூலதனமும், பன்னாட்டு மூலதனமும் தேவைப்படுகிறது என்றபோதிலும், பொதுத்துறையே மேலாதிக்கம் வகிக்கவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சீனநாட்டு பொருளாதாரக்கொள்கை அமைந்துள்ளது. இத்தகைய அணுகுமுறையைத்தான் சீனஅரசு  அந்நாட்டின் நிலைமைக்கேற்ப சோசலிச பாதை எனக் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதையில் செல்கிறபோது தனியார் மூலதனம் ஒட்டுமொத்த தேச பொருளாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைக்கு அனுமதித்துவிடக்கூடாது என்பதிலும் சீன அரசு எச்சரிக்கையாக இருக்கிறது.

2020ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலை ஃபார்சூன் இதழ் தொகுத்துள்ளது. இதில் 124 சீன நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 124 நிறுவனங்களில் 95 சீன அரசு நிறுவனங்கள் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. உலகின் 5 மிகப்பெரிய நிறுவனங்களில் 3 சீன பொதுத்துறை நிறுவனங்களாகும்.

சீனா விடுதலை அடைந்தபோது ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருந்தது. தற்போது உலக பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வளர்ச்சியின் பலன் சீன நாட்டினுடைய அனைத்துப் பகுதி மக்களுக்கும் கிடைக்கச் செய்ததில் முக்கியமான அம்சம் வறுமை ஒழிப்பு ஆகும். தீவிர வறுமை ஒழிப்பு, அதில் மிக முக்கியமான சாதனை. இது எப்படி சாத்தியமானது என்பதைத்தான் இந்த நூல் விளக்குகிறது.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிட்ட சீன அரசு குறிவைத்த தீவிர வறுமை ஒழிப்பிற்கும் திட்டத்தை உருவாக்கி அமலாக்கியது. குறிப்பாக, கல்வி அளித்தல், சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல், உணவு, உடை வழங்குதல், பாதுகாப்பான வீடுகளையும், சுத்தமான குடிநீரையும் உறுதி செய்தல் மற்றும் உத்திரவாதமான வருமானம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை இலக்குகளை பூர்த்தி செய்வதின் மூலமே தீவிர வறுமை நிலைமை ஒழிக்கப்பட்டுள்ளது.

“தொடர்ந்து அதிகரித்துவரும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான தேவைகளுக்கும் சமச்சீரற்ற வளர்ச்சிக்கும் இடையில் முரண்பாட்டை நாம் சந்தித்து வருகிறோம்” என சீன குடியரசின் தலைவர் ஜிஜின்பிங் தற்போது நிலவும் முரண்பாட்டினை சுட்டிக்காட்டுகிறார். மேலும் அவர் வறுமை நிலைமையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் கருத்தியல் வடிவில் விளக்கியிருக்கிறார். வேறுவிதத்தில் சொன்னால் வறுமை ஒழிப்பினை, வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக முடிவு செய்து சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கிறது.

வறுமை ஒழிக்கும் திட்டத்தை உருவாக்குவதிலும், அமலாக்குவதிலும் பங்குபெற்ற பீக்கிங் பல்கலைக்கழக பேராசிரியர் இரண்டு அணுகுமுறைகளை குறிப்பிடுகிறார். ஒன்று இரத்தம் செலுத்துதல், இரண்டாவது இரத்தத்தை உற்பத்திசெய்தல், இரத்தம் செலுத்துதல் என்பது மனிதாபிமான உதவி அல்லது மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றுவது ஆகும். இரத்தத்தை உற்பத்தி செய்வது என்பது வறுமை ஒழிப்பினை, நாட்டின் வளர்ச்சியோடு இணைப்பது. வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு ஏழை மக்களின் வருமானத்தை அதிகரிக்க செய்வது. இந்த இரண்டு முறைகளுக்கும் அப்பாற்பட்டு அமைந்த மலைப்பகுதி அல்லது வளம்குறைந்த பகுதிகளில் வளங்களையும், உற்பத்தியையும் உருவாக்கிட அரசே நிதிஒதுக்கீடு செய்து இலக்கு தீர்மானிக்கப்பட்டு வறுமை ஒழிப்பு திட்டத்தை அமலாக்கியிருக்கிறார்கள்.

இலக்காக முடிவு செய்யப்பட்ட பகுதிகளில் வறுமை ஒழிப்பிற்கு 5 நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. 1)உள்ளூர் மட்டத்தில் விவசாயம் 2) தொழில் உற்பத்திக்கு ஏற்பாடு செய்வது. இதன் மூலம் வருவாய்க்கு வழிவகுப்பது. 3) வேறுவழியே இல்லாத பகுதிகளில் வேறு பகுதிகளில் சம்பந்தபட்ட மக்களை குடியமர்த்துவது. 4) கல்வி, சுகாதாரவசதிகள் ஏற்படுத்துவதோடு 5) நிதி உதவியும் அளிக்கும். இத்தகைய முறையில் 98 சதவிகித ஏழைக் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன. இத்தகைய மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் 3 லட்சம் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் துவங்கப்பட்டு விவசாயம், விவசாய விளைப்பொருளை பதப்படுத்துதல், கால்நடை உள்ளிட்ட தொழில்கள் துவங்கப்பட்டு சம்மந்தபட்ட மக்களுக்கு வேலை அளிப்பதோடு வருமானத்தையும் உத்திரவாதப்படுத்துவது.

மேலும், கிராமப்புற பகுதிகளில் மின்னணு வர்த்தகங்களை துவக்கி கிராமங்களை நகரங்களோடு இணைப்பதும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்படுகின்றன.

சீனாவில் 99.8 சதவிகித ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. 95.3 சதவிகித பள்ளிகளுக்கு இணையதள வசதியும், மல்டி மீடியா வசதி உள்ள வகுப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகளவில் தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் பெண்கள் அதிகமாக பயிலும் நாடாக சீனா உள்ளது.

மேலும், வறுமை ஒழிப்புதிட்டம் செயல்படுகிறதா என்பதை அரசு அவ்வப்போது மதிப்பீடு செய்து இலக்கை திருத்தியமைக்கிறது. இந்த நடைமுறைகளில் நிதிமுறைகேடு- ஊழல் தடுக்கப்படுகிறது. 2012லிருந்து 2020 வரையில் சுமார் முப்பது லட்சத்து இரண்டாயிரம் பேர் ஊழல் நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

வறுமை ஒழிப்பு திட்டம் அமலாக்கக்கூடிய பகுதிகளில் திட்டங்களை முறையாக அமலாக்கிடவும், அமலாக்கத்தை உத்திரவாதப்படுத்துவதற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டு சம்மந்தபட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

2021இல் ஜூன் வரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர்கள் 9.51 கோடி. இவர்களில் 30 லட்சம் கட்சி உறுப்பினர்கள் வறுமை ஒழிப்பு திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் அனுப்பப்பட்டார்கள். சீனாவில் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சீன அதிபர் சொல்கிறபோது கட்சி  உறுப்பினர்களுடைய பாத்திரத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“ஒவ்வொரு முறையும் சீனாவுக்கு வருகை தரும்போது,  சீனாவில் ஏற்பட்டு வரும் மாற்றம் மற்றும் முன்னேற்றங்களின் வேகத்தைக்கண்டு நான் அதிசயத்து நிற்கிறேன்” எனவும், “இந்த உலகத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பொருளாதார கட்டமைப்பை சீனா உருவாக்கியிருப்பதாக” ஐ.நா.வின் பொதுச் செயலாளர் கூறியிருக்கிறார்.

மக்களின் நல்வாழ்வை அரசின் இலக்காக முன்நிறுத்தி, அதில் வெற்றியும் பெறக்கூடிய நாடாக சீனா இருக்கிறது. இதனாலேயே சீன வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது. சீனாவின் நிலைத்த பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தால், அது தங்களுடைய உலக மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாகிவிடுமோ என அஞ்சுகிறது அமெரிக்கா. எனவே சீனாவைக் கட்டுப்படுத்திடவும், தனிமைப்படுத்திடவும் முயற்சிக்கிறது. ஆனால், இந்த முயற்சிகள் பலன் தரவில்லை. இந்தியா உள்ளிட்ட எல்லா முதலாளித்துவ நாடுகளும் கொரோனா பாதிப்பால் பொருளாதார வளர்ச்சி சரிந்து நெருக்கடிகளை சந்திக்கின்ற போது சீனா தனது நாட்டில் கொரோனா பரவாமல் தடுத்து நிறுத்தியது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அதிபர் ஜிஜிங்பிங் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:
“உலகத்தில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஆளும்கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்களும் அரும்பெரும் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளனர். வளமான, நவீன, சோசலிச சமூகத்தை உருவாக்கும் லட்சியத்தை நோக்கி சீனா நடைபோட்டு வருகிறது.”

விஜய்பிரசாத் தலைமையில் இயங்கிவரும் முக்கண்ட ஆய்வு மையம் உலகளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், இடதுசாரி இயக்கம், ஜனநாயக இயக்கம் பற்றி பாராட்டுக்குரிய முறையில் ஏராளமான ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சீனாவுக்கு நேரில் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, தமிழ் வாசகர்களின் கைகளில் கிடைத்திருப்பது பயனுள்ள ஒன்றாகும். ஆங்கில நூலை தோழர் நடேசன் நல்ல முறையில் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று.