போர்க்களத்தின் திசைகாட்டிகள் கவிதை – நல்லு இரா. லிங்கம்
அவசரமாக நான் ஒரு
கவிதை எழுதியாக வேண்டும்
காலையிலேயே மழை பெய்கிறது
காதல் கவிதை எழுதவா?
மேகம் கவிழ்ந்து இருள் சூழ்கிறது
மோகக் கவிதை எழுதவா?
சிந்தனையைச் சுழலவிட்டு
இடியட் பாக்ஸை இயக்கினேன்
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
குடிசை இடிந்து குழந்தை பலி
மின்சாரம் தாக்கி மாடுகள் மரணம்
ஆற்றைக் கடந்தவர் அடித்துச் செல்லப்பட்டார்
இத்தகு செய்திகளுக்குப் பின்
எப்படி எழுதுவேன் மழைக்கொரு கவிதை?
மாடிப்படி வழிந்து வாசல் நிறைத்த
மழை கேட்டதொரு கேள்வி
இத்தனை இழப்புகளில்
எவையெல்லாம் என் பிழை?
உங்களில் யாரிடம் உள்ளது
இதற்கான விடை?
குற்றவுணர்வுடன் சேனல் தாவினேன்
மாணவிகள் தற்கொலை
ஆசிரியர்களின் சீண்டல்கள்
ஆசு + இரியர் = குற்றம் களைபவர்
ஆறாம் வகுப்பின் தமிழ் வகுப்பில்
பொருள் விளக்கம் சொன்ன
அரங்கன் வாத்தியாரின் விசும்பல்
மூளைக்குள் கேட்டது
உள்ளூர் செய்திகளை ஒதுக்கி
உள்நாட்டுக்குத் தாவினேன்
எரிபொருள் விலை உயர
ஏகாதிபத்தியமே காரணம் என்றார்
ஒன்றிய அமைச்சர்
நகைச்சுவைச் செய்திகளில்
நாட்டமின்றிக் கடந்தேன்
கோடிகளைக் குவிக்கும்
கோமான்களின் கட்டுப்பாட்டில்
உள்ளூர்ப் பெயர் சூட்டி
அயல் நாட்டவரை ஏலம் போடும் ஆட்டத்துக்கு
வரிவிலக்கு தந்தது வள்ளல் தீர்ப்பாயம்
விளையாட்டு வினையானது
மனம் நொந்து திரும்பினேன்
மாநிலச் செய்திகளுக்கு
குடிசைகள் பல கொளுத்தி
மரம் வெட்டி அறம் வளர்த்த
சாதிவெறி சான்றோர்கள்
பொதுவுடைமைத் தோழருக்கு
விலைபேசித் தோற்றபின்னர்
அம்பாசிடர் கார் ஒன்று
எழுதியது சுயசரிதை
முட்டாள் பெட்டியை மூடிவிட்டு
முகநூல் பக்கம் திரும்பினேன்
எவர்க்கும் தலைவணங்கா
தலைக்கனம் கொண்ட
56” மார்பு மாவீரனை
ஏர் முனையைத் தோள் சுமக்கும்
தாடி வைத்த உழுகுடியின்
தாளடி வீழ வைத்த முண்டாசு வீரர்களை
முண்டாசுக்கவி மண்ணின் மைந்தர்கள்
கொண்டாடிக் கொண்டிருந்தனர்
மனம் முழுக்க நிறைவோடு
தினசரியைத் திருப்பினேன்
முதல் பக்கச் செய்தியே
முகத்தில் அறைந்தது
ஓராண்டு தெருவில் விட்டு
எழுநூற்று சொச்சம் உயிர் குடித்து
இப்போது அரங்கேற்றும்
முகமோடி நாடகம் கண்டு
முடிவுரை எழுதாது எங்கள்
வீரம் செறிந்த விடுதலைப்போர்
சொல்வதெல்லாம் பொய்
வாக்குறுதி எல்லாம் வஞ்சம்
உணராதவர்கள் அல்ல உழுகுடியினர்
சொல்லெல்லாம் செயலாகும்வரை
நாடாளுமன்றத்தில் சட்டமாகும்வரை
திரும்ப மாட்டோம் இல்லம் நோக்கியென்று
களம் நிற்கும் தலைப்பாகைகள்
எதிர்காலத் தலைமுறையின்
உரிமைக்கான போர்க்களத்தின்
திசைகாட்டிகள்