நூல் அறிமுகம்: உபாசகர் E. அன்பன்னின் ’புத்தம் சரணம் கச்சாமி’ – பேரா. எ. பாவலன்
மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் நிலவும் உறவை சரியாக பேணுகிறது
எல்லா நதிகளும் கடலை நோக்கி பாய்வதைப் போன்று 19ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட பௌத்த மறுமலர்ச்சி 21 ஆம் நூற்றாண்டில் பல்கிப் பெருகியது. பெரும்பாலான மக்களும் பௌத்தத்தின் பால் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் பௌத்த தத்துவங்களைப் பின்தொடர்கின்றனர்.
புத்தம் சரணம் கச்சாமி உபாசகர் E. அன்பன் அவர்கள் எழுதிய இந்நூலில் அன்பை மட்டுமே போதிக்கச் சொன்ன புத்த பெருமானின் தத்துவங்களை மிக இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நூலுக்கு ஏன் புத்தம் சரணம் கச்சாமி என்று பெயர் சூட்டினார் என்ற கேள்வி எழுகிறது. புத்தம் சரணம் கச்சாமி என்பது முன்மணிகளை குறிக்கும். மும்மணிக்கு மற்றொரு பெயர் திரி சரணம். இந்த திரிசரங்களில் சரணடைதலை பற்றி புத்தம் சரணம் கச்சாமி என்பதற்கு நான் புத்தரை சரணடைகிறேன் என்று பொருள்.
புத்தர் ஒருபோதும் யாரையும் தன்னிடமோ, பிறரிடமோ, ஏன் கடவுளிடமும் கூட சரணடையச் சொல்லவில்லை. காரணம் அவர் கடவுள் கோட்பாட்டை எங்கும் வலியுறுத்தியதும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அதன் காரணமாகத்தான் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவை போதிக்கும் தன்மையில் பௌத்தம் இருப்பதால் தெளிவு ஏற்பட்டவர்கள் பௌத்தத்தின்பால் ஈடுபாடு கொண்டு திரும்புகின்றனர்.
அயோத்திதாசர் பண்டிதர், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, பேராசிரியர் லட்சுமி நரசு, டாக்டர் அம்பேத்கர் என்று பலரும் பௌத்தத்தை அதன் இயல்பு தன்மையுடன் அணுகினார்கள். இதன் காரணமாகப் பண்பாட்டு அளவில் பௌத்த புரட்சியும் ஏற்பட்டு வருவதைக் காண முடியும்.
இங்கு புத்தம் சரணம் கச்சாமி என்னும் நூல் ஒரு மாற்றத்தைத் தொடங்கி வந்துள்ளது. குறிப்பாகப் புத்தர் அன்பு ஒன்றே அனைவருக்கும் நன் மருந்து. அன்பும், கருணையும் மட்டும்தான் இவ்வுலகிற்குத் தேவை. அதனால் அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
இந்த நூலிலும் புத்தரின் வாழ்க்கை முதல் மகாமங்கள சுத்தம் ஈராக மொத்தம் 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒவ்வொரு தலைப்பில் அமைந்த கட்டுரையும் அத்துனை முக்கியத்துவம் வாய்ந்தவை. பௌத்தத்தை விரும்பி கற்போருக்கும், பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி. அந்த வகையில் பௌத்தம் என்பது என்ன? எனும் பத்தாவது தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை மிக செய் நேர்த்தியாக இப்படைப்பை ஆசிரியர் ஆக்கியுள்ளார். அதில் பௌத்தம் என்பதற்குச் சரியான பொருளை எடுத்துக் கூறி பௌத்தத்தின் புனித நூலான திர்ப்பிடத்தை பற்றி எளிமையான மொழியில் எல்லோரும் அறியும் வகையில் விவரிக்கிறார்.
அதேபோன்று அத்தியாயம் ஆறில் அமைந்த கட்டுரை உயர்வெய்திய புத்தர் தம்மத்தை எடுத்துரைக்கிறார். அதில் புத்தர் வருகை கபிலவஸ்து நகர் முழுவதும் செய்தியாக பரவியது. இல்லறத்தை துறந்து துறவறமேற்று பூரண மெய்ஞானமுற்று தனது இலக்கை அடைந்து விட்ட கபில வஸ்து நாட்டின் முன்னாள் இளவரசர் சித்தார்த்த புத்தராக அரண்மனைக்கு வருகிறார். ஒவ்வொரு இல்லத்திலும் இச்செய்தி பேசப்பட்டது. சுத்தோதனாரும், மகா பிரஜாபதியும், அவர்களின் உற்றார் உறவினர்களுடன், அமைச்சர்களுடன் செல்லும் வழியெல்லாம் புத்தராய் தர்மத்தைப் போதித்த படி கபில வஸ்துவில் உள்ள அரண்மனை அருகே வருவதை அரசர் கண்டபோது புத்தரின் பெருமைமிக்க தோற்றத்தாலும் அழகான ஈர்க்கப்பட்டு மனம் மகிழ்ந்து பேசவியலாமல் நிலையுற்றார்கள் (பக்.54) இந்த பதிவுவை படிக்கும்பொழுது நம் மனம் பரசும் அடைவதைக் காண முடியும்.
இப்படி ஒவ்வொரு பக்கங்களிலும் ஆனந்தத்தையும், பேரானந்தத்தையும் அனுபவிப்பதைப் போன்றே அதை கட்டுப்படுத்தும் விதிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறார். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்நாளும் இன்புற்று இருக்க இது போன்ற நூல்கள் பல்கி பெருக வேண்டும்.
இந்நூலை ஆக்கி தந்த பௌத்த பேரறிஞர் ஐயா அன்பன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.
நூல் : புத்தம் சரணம் கச்சாமி
ஆசிரியர் : உபாசகர் E.அன்பன்
விலை : ரூ. ₹100
வெளியீடு : திரபீடக தமிழ் நிறுவனம்
89,மூன்றாவது தெரு,
மல்லீசுவரி நகர்,
மாடம்பாக்கம்,
சென்னை – 126
பேசி: 9445369542.