மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல் – சீத்தாராம் யெச்சூரி
அதானி குழுமம் தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கிறது என்பதையும், 2014இல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் எப்படி கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறி சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. மோடி அரசாங்கம் எப்படி பிபிசி ஆவணப்படமானது “காலனிய மனோபாவத்தின் உற்பத்தி” (“products of a colonial mindset”) என்று முத்திரை குத்தியதோ அதேபோன்று அதானியும், தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டுள்ள விதம் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, “இந்திய தேசத்திற்கு எதிரான தாக்குதல்” என்று கூறிக் கொண்டிருக்கிறார். இவர்களின் தில்லுமுல்லுகள் ஏதாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டால் உடனே அதை “இந்தியாவின் மீதான தாக்குதல்” (“attack on the ‘Indian Nation) என்று வகைப்படுத்துகின்றனர். கூட்டுக் களவாணி முதலாளித்துவம்தான் (crony capitalism) இவ்வாறு இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றது என்று இவர்களால் நியாயப்படுத்தப்படுகிறது. மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாகவுள்ள கூட்டுக் களவாணிகள் நாட்டின் சொத்துக்களை எப்படியெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் நலத் திட்டங்களுக்கு அளித்துவந்த செலவினங்களையெல்லாம் வெட்டிச் சுருக்கி தங்களின் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட மடைமாற்றம் செய்யப்படுவதன் மூலம் தாங்க முடியாத சுமைகளை சாமானிய மக்கள் மீது ஏற்றியிருக்கிறார்கள், எனக் கூறும் அனைவரும் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்தி முழு அளவிலான எதேச்சாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நடைபெற்றுள்ள வெட்கங்கெட்ட துற்செயல்கள் குறித்து எந்தவிதமான விசாரணையும் தேவையில்லை என்று மோடி அரசு கருதுகிறது. கூட்டுக் களவாணி முதலாளித்துவத்துடன் உள்ள இந்தப் பிணைப்பு எவ்வாறு தகாத வகைகளில் செயல்பட்டிருக்கிறது, பொதுத்துறை நிதி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசி ஆகியவற்றிலிருந்து மக்களின் கடின உழைப்பில் சேமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று விசாரணை மேற்கொள்ள, ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைப்பதற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஓர் உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து இந்த முறைகேடுகளை விசாரிக்கவோ மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தின் தாராள உதவிகள் இக்குழுமத்திற்கு கிடைத்துள்ளன. அரசு நிலங்கள் சொற்ப விலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றால் ஏற்படும் காலநிலை சீற்றங்களை கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் சொத்துக்களை இக்குழுமம் வாங்க அரசு உதவி செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களையும், துறைமுகங்களையும் வாங்குவதற்கு அரசின் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியங்கள் மூலம் செயல்பட்டது மட்டுமல்லாமல், உள்பேர வர்த்தகம் (Insider trading) ஒரு நிறுவனத்தின் கூருணர்வு மிக்க ரகசியத் தகவல்களை தனது சுயலாபத்திற்காக வெளியிட்டு தவறாக செயல்பட்டு வர்த்தகம் புரிதல்), ‘ரௌண்ட் டிரிப்பிங்’ (round tripping) எனப்படும் சுற்றிவளைத்த வர்த்தகம் (அதாவது, தனது சொத்துக்களின் மூலம் வரும் வருமானத்தை சட்டவிரோத முறையில் ஊதிப்பெரிதாக்கிக் காட்டுவது), சூழ்ச்சி முறையில் பங்குகளை கையாள்வது போன்ற நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டபோதிலும், இவற்றை சந்தை ஒழுங்குமுறை அமைப்புகள் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துள்ளன.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகு, அதானியின் சாம்ராஜ்ய மதிப்பானது 200 பில்லியன் டாலர்களிலிருந்து சரிபாதியாகக் குறைந்துள்ளது. அதானி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள்.
இந்தப் பின்னணியில்தான் இவர்களின் கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கூட்டணி எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும், அது இந்திய அரசு எந்திரத்தை முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்து கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாகும். இந்தத் திசை வழியில் ஒரு முயற்சியே இச்சிறு புத்தகமாகும்.
மோடி- அதானி சாம்ராஜ்ய ஊழல் இன் நூல் முன்னுரையில் இருந்து
சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலர் சிபிஐ(எம்)
விலை : ரூ.₹30/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]