மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: ராஜகுருவின் தாடி – தமிழில் ச. சுப்பாராவ்
ஒரு ஊரில் ஒரு ராஜகுரு இருந்தார். அரசனுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை. அனைத்து அரசாங்க விஷயங்களிலும் அவரிடம் ஆலோசனை கேட்டு அதன் படியே நடப்பான். ராஜகுரு தனது தவவலிமையால் நாட்டிற்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாப்பார் என்று அவரை மிகவும் நம்பினான். அதனால் அந்த ராஜகுரு மிகவும் ஆணவத்தோடு இருந்தார். மற்றவர்களை மதிக்க மாட்டார்.
ராஜகுரு மீது அரசருக்கு இருந்த மரியாதையைப் பார்த்து மற்ற மந்திரி பிரதானிகள் பொறாமை கொண்டார்கள். அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு நாள் ஒரு பொறாமை பிடித்த மந்திரி அரசனிடம் சென்று, ‘அரசே ! இன்று ராஜகுருவின் தாடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கி வைத்துக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் உறுதியாக சொர்க்கத்தை அடைவீர்கள். அவரது தவவலிமை அத்தகையது,‘ என்றான்.
அரசன் உடனே சகல மரியாதைகளோடு ராஜகுருவை தன் அரண்மனைக்கு வரவழைத்தான். அவர் வந்ததும், ‘குருவே ! தாங்கள் எனக்கு ஒரு உதவி புரிய வேண்டும்,‘ என்றான். ராஜகுரு, ‘அரசே ! தாங்களுக்காக நான் உயிரையும் கொடுக்கத் தயார். என்ன செய்ய வேண்டும் ?‘ என்றார்.
‘உயிரையெல்லாம் தரவேண்டாம் குருவே. தாங்களது தாடியிலிருந்து ஒரு மயிரை பிடுங்கித் தந்தால் போதும்,‘ என்றான் அரசன். குரு மகிழ்ச்சியோடு தனது நீண்ட தாடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கித் தந்தார். அரசன் பணிவோடு வாங்கிக் கொண்டான்.
உடனே வரிசையாக மந்திரிகள், பிரதானிகள், தளபதிகள், போர்வீரர்கள், சேவகர்கள், பணிப்பெண்கள் என்று அரண்மனையில் இருந்த ஒவ்வொருவரும் தங்களுக்கும் ஒரு முடி வேண்டும் என்று கேட்டார்கள். ராஜகுருவும் ஒவ்வொருவருக்கும் ஒரு முடியைப் பிடுங்கித் தந்தார். தந்து விட்டு அரண்மனை வாசலுக்கு வந்தார்.
அதற்குள் ராஜகுருவின் தாடி முடி இருந்தால் சொர்க்கம் போகலாம் என்ற செய்தி பரவி விட, ஊர் மக்கள் அனைவரும் அரண்மனை முன் கூடிவிட்டார்கள். எல்லோரும் தங்களுக்கும் ஒரு முடியைப் பிடுங்கித் தருமாறு கேட்டார்கள். ராஜகுரு ஒவ்வொருவருக்கும் முடியைப் பிடுங்கித் தர ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கன்னங்கள் எரிய ஆரம்பித்தன. முகத்தலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. கூட்டத்தினருக்கோ காத்திருக்கப் பொறுமையில்லை. ஆளாளுக்கு அவர் மேல் பாய்ந்து அவரது தாடியைப் பிய்க்க ஆரம்பித்தார்கள். ராஜகுரு வலியில் அலறித் துடித்தார். ஆனால் யாரும் அவர் அலறுவதைக் கண்டு கொள்ளவில்லை.
அப்போது ஒரு சிறுவன் வயலுக்குச் சென்று மாட்டிற்குப் புல் அறுத்துக் கொண்டு தன் வீடு திரும்பினான். வீட்டில் அவனது பாட்டி உடல்நலம் இன்றி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். சிறுவன் வீட்டில் நுழைந்ததும் அவனது அம்மா, ‘ டேய், பாட்டி சாவதற்குள் ராஜகுருவின் தாடி முடி ஒன்றை எடுத்து வா. சீக்கிரம். அப்போதுதான் உன் பாட்டி சொர்க்கத்திற்குப் போக முடியும்,‘ என்றாள். சிறுவன் அரிவாளுடன் அரண்மனை வாயிலுக்கு ஓடினான்.
அவன் வந்த நேரம் ஊர் மக்கள் அனைவரும் அவரது தாடியைப் பிடுங்கி எடுத்துச் சென்றுவிட்டனர். முகம் முழுக்க ரத்தம் வழிய அரண்மனை வாசலில் அரைமயக்கத்தில் கிடந்தார் ராஜகுரு.. தாடி முழுக்க ஊர்காரர்கள் கைகளுக்குப் போய்விட்டது. ரத்தம் வடியும் கன்னத்தில் ஒரே ஒரு முடி மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது ! சிறுவனுக்கு அவசரம். அரிவாளால், சரட்டென்று அவரது கன்னச் சதையை அந்த முடியோடு அறுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினான்.
அவனது பாட்டி சொர்க்கத்திற்குப் போனாளா என்று தெரியவில்லை. ஆனால் அந்த சிறுவன் வீட்டிற்குப் போவதற்குள் ராஜகுரு சொர்க்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார் !