ஒரு நாள் நான் இறந்திருந்தேன் கவிதை – பிச்சுமணி
கடந்த காலத்திற்கும்
இதுவரை நிகழா காலத்திற்கும்
என்னை அவ்வப்போது
அழைத்துச் செல்லும் கனவென்னும்
டைம் மெஷின்..
ஒருநாள்
நான் இறந்த தேதிக்கு
அழைத்து சென்றது
நேற்றும் இன்றும்
என் விருப்பப்படி நடக்காத
சம்பவங்களை மாற்றியமைக்க
தினசரி என்னை அழைத்து செல்லும்
டைம் மெஷின்.
இப்போது நான் எதிர்பார்க்காத
என் இறுதிநாளுக்கு
அழைத்துச் சென்றிருக்கிறது
நான் எப்போதாவது
ஆசைப்பட்டு வருங்கால நாள்களில்
எனக்கான நாள்கள் இதுவென்று
அகமகிழ்ந்து வாழ்ந்து
நிகழ்காலக் காயங்களை
டைம் மெஷின் மூலம்
மழுங்கடித்திருக்கிறேன்.
ஆனால்
இப்போது இறுதிநாளுக்கு வந்திருக்கிறது..
நான் இறந்தது
துக்கமாக கருதாமல்
எனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
நான் சிரித்துக்கொண்டிருந்தேன்.
நான் ஆடாமல்
அசையாமல் இருக்க
கை கால்களை கட்டி வைத்திருந்தார்கள் எதையும் பார்க்காமலிருக்க
எனது கண்களையும் மூடியிருந்தார்கள்.
நான் தோல்வியடையும் போதெல்லாம்
உனக்கெல்லாம் இது தேவையா யென்று
உதாசீனபடுத்தியவர்கள்
எனக்கான ஆறுதல் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருந்தார்கள்
என்னைத் தேடி வந்தவர்கள்
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
மௌனமாகினர்
சிலர் கண்களில் கண்ணீர்த் துளிகள்
சிலர் கண்களில் ஏமாற்றம்
சிலர் கண்களில் எதிர்பார்ப்பு
சிலர் கண்களில் ஏளனம்
சிலர் கண்களில் சம்பிரதாயம்
சிலர் கண்களில்
சாவுக்கு வந்த கடமையுணர்வு
சிலர் கண்களில் அடுத்த நிகழ்ச்சிக்குச் செல்லும் அட்டவணை
சிலர் கண்களில் அன்றைய தேவையின் ஊதியம்
நேரம் ஆக.. ஆக..
எனது பெயர்
எல்லோரும் மறந்தும் போய்
பூத உடலனாது.
நான் இறந்திருப்பது
எனக்கு தெரியுமென
அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.