சுத்தம் சிறுகதை – நிரஞ்சனன்

சுத்தம் சிறுகதை – நிரஞ்சனன்




ரவியின் வீட்டில் சுத்தம் சுகாதாரம் பேணுவதில் மிக கண்டிப்பு. யாராக இருந்தாலும் குடும்பத் தலைவன் முதல் கடைக்குட்டி வரை ஒழுக்கம், சுத்தம் என இருக்க வேண்டும், இல்லையென்றால் அன்று வீடே பாத்திரக் கடையில் யானை புகுந்தது போல சச்சரவும் சஞ்சலமும் இருக்கும்.

ரவி வீட்டின் மூத்த பேரன், அவனுக்கு 2 சித்தப்பா – சித்தி, தாத்தா- பாட்டி, உடன்பிறந்த தம்பி, 2 தம்பிகள், 2 தங்கச்சிகள்.

அன்று வீட்டில் இருப்பவர்களுக்கு மதிய உணவு கடையில் வாங்க வேண்டிய சூழல், பொறுப்பு இவன் கையில் வர கிளம்பி விட்டான் பெரிய பட்டியலுடன்.

ஞாயிறு வேற, விடுமுறை நாள் மக்கள் கூட்டம் மதிய உணவிற்கு, இது போக சுவிக்கு, ஜோமடோ வேற …. அப்புறம் இவர்களுடன் போட்டி போட்டு எப்படியோ வாங்கி வர 1.30 மணி நேரம், நல்ல வேளையாக அவன் தந்தை அறிவுரையின் பேரில் சீக்கிரமே சென்று விட்டான்….

ரவி வர அனைவரும் அனைத்தும் எடுத்து வைக்க சரியா இருந்தது….. ரவியின் கடைசி தம்பி எதையோ எடுக்க, மேஜையில் இருந்த ரசம் கொட்ட, மற்ற குழம்பில் கலக்க, அந்த சிறுவனின் சட்டை லேசாகக் கொஞ்சம் குழம்பில் பட……

ரவியின் சித்திகளில் ஒருவர் ஆரம்பித்து விட்டார், இப்படி செய்தால் மற்றவர்கள் எப்படி சாப்பிடுவது, கூட சேர்த்து ரவியின் அம்மா, பாட்டி வேறு….

எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு ரவியின் சிந்தனை உணவகத்தில் பார்சல் கட்டியதை எண்ணியது.

மதிய வெயிலில் பார்சல் கட்டும் ஆட்கள், வெறும் பனியனுடன் வியர்வை சுரக்க, கையில் கையுறை இல்லை, தன் கையை முட்டி வரை இலையில் ஊன்றி, வியர்வை இலையில் பட, பார்சல் கட்டியதும், அனைத்து குழம்பிற்கும் ஒரே கரண்டி, ரசம் முதற் கொண்டு, கூட்டுக்கும், கரண்டி மாற்றக் கூட நேரமில்லை அத்தனை கூட்டம்… நடுவே அரிக்கும்போதெல்லாம் தலையைச் சொரிந்தபடியும்…கை கழுவி வரக் கூட நேரமில்லை, அவ்ளோ பிஸி.

இதை விட கல்லில் பரோட்டா போடுபவர்கள், கல் சுட்டு விட்டதா என பார்க்க நெற்றி வியர்வை விட்டு, துடைப்பம் கொண்டு அதை சுத்தம் செய்த விதம், இறுதிய பார்சல் கட்டி டப்பாவில் செல்லோ டேப் ஒட்டும் போது அனைவர் கைகளும் ஒரே டேப்பில் தான்,…… அசைவம் எடுத்தவரும் சைவம் எடுத்தவரும் சேர்ந்தே….

ரவியின் அப்பா, “என்னடா யோசனை, இவளோ செலவு பண்ணுறோம் சுத்தம் சுகாதாரம் வேணும் டா….” என்று சொல்லவும், இவனுக்கு சிரிக்கவா, இல்லை என்ன சொல்ல என்று தோன்றவில்லை. அப்புறம் எங்க சாப்பிட … எண்ணங்கள் இப்படியா வரணும்……

எழுந்து போய் தண்ணீர் குடித்து வயிறு நிறைந்தது போல எண்ணிக்கொண்டு, எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தான். ரசத்தைக் கொட்டியவன் பாவம் போல பார்க்க, ‘விடுறா தம்பி’ என கண்களினால் சமாதானம் சொன்னான் ரவி.

-நிரஞ்சனன்