தன்முனைக் கவிதைகள் – கார்கவி
மனிதனும் மண்ணும்
**************************
நீர் குழைத்த சேற்றில்
ஈரமானது வாழ்க்கை
ஏற்றத்திற்கு ஐம்பதும்
இறக்கத்திற்கு ஐம்பதும் ஆனது
ஈரமான மண்ணில்
ஓங்கி நிற்கும் கட்டிடங்கள்
கூரை மேய்ந்தவன் அவனே
தாரை ஊற்றியவன் அவனே
களத்து மேட்டு நெல்லி்ல்
பசியும் பட்டினியும்
பசுமையோடு உலவி வரும்
பச்சையம் நிறைந்த காற்று
நீர் பாய்ச்சிய மண்ணில்
பரிணாமம் விளைகிறது
பட்டினிகளில் கரங்களுக்கு
பெய்கிறது பசுமை மழை
உடலோடு ஒட்டிய மண்ணில்
உழைப்பு படிகிறது
இரத்தம் வடிதலும்
யுத்தம் பிறப்பதும் இயல்பாகிறது.
நம்பிக்கை
*************
பரிகாரங்களை முடித்த
பாவமான ஆண்மகன்
பக்கத்தில் அமர்கிறாள்
ஒரே நட்சத்திர பெண்மணி
கழுத்தில் மாலையிட்டு
தொட்டு தொட்டு பார்க்கிறான்
நவக்கிரகங்கள் தான்
இடை மறித்து நிற்கின்றன
அவனும் அவளும்
அருகருகே அமர்வு
அந்த செவ்வாய்
திரும்பினால் திருமணம்
நெடுந்தூரம் வேண்டி
கால் கடுக்க பயணம்
காதலித்திருந்தாள் அந்த
மைல்கள் அருகிலோ
உறவுகள் நினைத்திருந்தால்
நீ உற்று உற்று
கும்பிட வேண்டாம்
ஊமைக் கல்லை
காதலிசம்
*************
உன்னை நினைத்த பின்
உலகமே மறக்கிறது
உண்மை தெரிந்த பிறகு
காதலே மறக்கப்படுகிறது
நிலவுக்கு பெயர் வைத்தேன்
நீ என்று
உண்மையில் கரைவது
நான் மட்டும் தான்
ஆற்றோர அமர்வில்
காதல் பயணிக்கிறது
எறிந்த கல்லில்
எத்தனை எண்ணங்களோ
வறண்ட
நிலத்தலும்
சாகுபடி செய்யும் காதல்
வயது என்பதையும்
மறக்கிறது ஒரு காதல்
வானமெல்லாம் எண்ண மழை
தேங்குகிறது மனதில்
விருப்பத்திலும் விருப்பமில்லாமலும்
தேங்கும் பெற்றக்குளம்