து.பா.பரமேஸ்வரியின் கவிதைகள்
பிள்ளை செல்வம்
••••••••••••••••••••••••••
மங்கையவள் ஜெனனம் உன்னதம் பெற
மனிதகுலம் வாழ்வாங்கு வாழ்ந்துய்க்க
மன்னவர் தம் வம்சம் தழைத்தோங்க
மழலையொன்று மடியில் தவழ்ந்திருக்க
வேறென்ன பேறு வேண்டும் அகண்ட இம்மாநிலத்தே..
இருள் சூழ்ந்த இப்பேரண்டம் கூட
மழலை முறுவலின் வெளிச்சம் பாய்ச்ச
வானவில்லாய் வண்ணமயம் சூடுமே..
தேவாதி தேவரும் தேவகுல மங்கையரும்
மழலை விழி வீச்சில் வீழ்ச்சி பெறப் போவாரே
இத்தகு செல்வம் ஒன்று காணப் பெற்றால்
மீண்டும் வேண்டும் பிறவியொன்று இம்மாநிலத்தே.
புத்தம் புது பூமி வேண்டும்
******************************
புத்தம் புதுபூமி பிறந்திட வேண்டும்..
அழகிய நீல வானம் விரிந்திட வேண்டும்..
மின்னும் மழைத்துளிகள் உரசிடவேண்டும்..
பசுமைப் பூத்து நிலமெங்கும் செழித்திட வேண்டும்..
மனிதர் மனம் மகத்துவம் சமைத்திட வேண்டும்.
மெய்மை தாங்கிய சொல் உதிர்த்திட வேண்டும்.
பொய்யே இல்லா உலகு படைத்திட வேண்டும்..
கள்ளமில்லா நெஞ்சு வாய்த்திட வேண்டும்
மானுட நேயம் போற்றும் வாழ்க்கை வேண்டும்..
மங்காத வாய்மை ஒலித்திட வேண்டும்..
சாதி மதமற்ற சமூகம் வேண்டும்
சண்டைகள் இல்லா உலகம் வேண்டும்
உயிரனைத்தையும் அன்பு செய்திட வேண்டும் .
உயர் கல்வி ஞானம் பெருகிட வேண்டும்
தன்னிகரில்லா தனித்துவம் தழைத்திட வேண்டும்
தரணியில் தமிழ் என்றும் முழங்கிட வேண்டும்..
வேண்டும் வேண்டும் இவையாவும்
இந்த விடியல் கொண்டு வர வேண்டும்..
தனித்துவம் தன்னிகரில்லா பலம்
***************************************
பரந்துபட்ட வானம்
ஒற்றை ஆதவன்
அதே இடம்
மிளிரும் கதிர்கள்..
அதே மொழி..
ஒளிரும் வானம்..
அதுவும் அழகு….
அசைந்திராது அழியாத பாதையை.
உயிர் தாங்கும் உன்னத பூமி கூட
வலம் வரும் ஆயிரங்கால் ஆதவனை…
ஒற்றை அம்புலி..
அதே தடம்..
அசையாது திடம்
ஒளிரும் நீல வானம்…
வான் சிறப்பு ..
தேய்வதும் வளருவதும் அங்ஙனமே..
மதியின் மாண்பு..
விட்டகலாது உறைவிடமதை.
விண்மீன் கூட வியந்தே வட்டமிடும்
ஒளிபொருந்திய மதிதமை..
கற்றை நட்சத்திரம்..
எப்போதும் கசகசத்தே கிடக்கும்..
மினுக்கும் மின்மினிப் பூச்சுகள்..
தனித்து சிறப்பது தன்னிகரில்லாதது.
தனித்துவம் எப்போதும் அனைத்திற்கும் தலையாயது…
ஒரு சிறந்த ஆசான்…
**************************
வகுப்பறைக்குள் தேர்ந்த சோர்ந்த என…
பிள்ளைகளைப் பாரபட்சம் பாராது
பாராட்டுவதும் கண்டிப்பதும்..
ஒரு சிறந்த ஆசான்…
எப்போதும் வாய்மைக்காக மட்டுமே குரலெடுப்பது..
ஒரு சிறந்த ஆசான்..
சமநிலை தேசப்பற்றை கல்வியுடன் சேர்த்து
பிள்ளைகட்குப் புகட்டுவது..
ஒரு சிறந்த ஆசான்..
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெஞ்சகத்துடன் உதாரணபுருஷனாக வாழ்ந்து சிறப்பது
ஒரு சிறந்த ஆசான்..
சீலத்திலும் சுயத்திலும் கவனம் கொள்வது..
ஒரு சிறந்த ஆசான்..
பாரபட்சமின்றி அனைத்து பிள்ளைகளின் மெனக்கிடலைப் வாய்விட்டுப் பாராட்டி மகிழ்வது..
ஒரு சிறந்த ஆசான்..
திருத்த முயலாது தான் திருந்தி வாழ்வது..
ஒரு சிறந்த ஆசான்
போதனையாக இல்லாது போதி மரமாக விரிந்து கிடப்பது..
ஒரு சிறந்த ஆசான்…
கல்விக் கேள்விகளில் தம்மை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது..
ஒரு சிறந்த ஆசான்..
கல்வியாளராக இராது கலையுடன் கூடிய கல்விக்கூடமாகவே வாழ்ந்து சிறப்பது..
-து.பா.பரமேஸ்வரி
சென்னை.