நிரல்களின் நிழல்கள்: தொடர் 1 – நவநீதன்
இராஜீவ் காந்தி சாலை….
“ராஜீவ்காந்தி சாலை” நாவலை வாசிக்க ஆரம்பித்து அடுத்த நாள் காலை ஆபிஸ்க்கு திருவான்மியூர் இரயில் நிலையத்திலிருந்து காரப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அது விவரித்த இன்றைய ராஜீவ் காந்தி சாலை இருந்த இடத்தின் பழைய படிமத்தை நினைவில் மீட்டு கொண்டு வர முயற்சித்தேன். எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. அடர் பசுமை வயல் வெளிகளும், தோப்புகளும், முந்திரி காடுகளும் என எப்படி யோசித்தாலும் கற்பனை கட்டத்துக்குள் அடங்க மறுக்கிறது. ஏனெனில் இராஜீவ்காந்தி சாலையின் பரிணாமம் அந்த மாதிரி பிரமாண்டமானது. மலை போன்று எழுந்து நிற்கும் பெருங் கட்டிடங்களின் கண்ணாடிகளில் தன் வாழ்வாதாரத்தினை தொலைத்த பழைய கிராமவாசிகளும், புதிய வாழ்வியலை பெற்ற நவ நாகரீக மனிதர்களும் தான் ஒளிப்படமாக ஓடுவது போல் தெரிகிறது. அதிவிரைவாக நடந்தேறி மிகப் பெரிய சமூக பரிமாணத்தின் காலத்தையும், அந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கு மனிதர்களின் வாழ்வியலையும் மிக நேர்த்தியாக விநாயக முருகன் எழுதியுள்ளார்.
ஒவ்வொரு சமூக மாற்றமும் பழைய உற்பத்தி முறையை அழித்து புதியதை நிறுவுவதின் வழியே தான் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இது வெறும் உற்பத்தி முறையோடு மட்டும் பாதிக்காமல் அந்த உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் சேர்த்தே மாற்றத்திற்கு உள்ளாக்குகிறது. நாவல் விவரிக்கும் கதை மாந்தர்களும், அவர்கள் வாழ்ந்த சூழலியலும் இந்த பொருளாதார, கலாச்சார மாற்றத்தின் சூழலில் பெற்ற ஏற்ற, இறக்கங்களை மிக தெளிவான அரசியல் பார்வையோடு முன்வைப்பதே இதன் மிகப்பெரிய பலம். ஐடி நிறுவன ஊழியர்கள் மட்டும் அல்ல, பூர்வீகமாக அப்பகுதியில் இருந்தவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், ரோட்டோர மனநிலை பாதிப்பிற்குள்ளானவர்கள் என பலதரப்பட்ட மாந்தர்களை வாசகர்களுக்கு அறிமுகம் ஆகிறார்கள்.
“இந்த நகரத்தில் பைத்தியகார விடுதிகள் உள்ளனவா, மிகப்பெரிய பைத்தியக்கார விடுதிக்குள் இருந்து நாம் இயங்குகிறோமா?” என்று ஆசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். வாசிக்கும்போது வாசகனுக்கும் அப்படியே உணரமுடிகிறது. தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள எந்த எல்லைக்கும் போகும் பைத்தியகாரத்தனமான நபர்களும் வருகிறார்கள். தனது கடின வாழ்விலும் அன்பினை அள்ளித்தரும் நபர்களும் வருகிறார்கள். பணத்தை சம்பாத்திக்க உருவான குரோதத்திலும், மனிதர்களிடையே நம்பிக்கையின்மையற்ற வாழ்வின் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய மனிதர்களை இருளின் ஒளிக்கீற்றாக இருக்கின்றனர்.
வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்களின் உள்ளே நவநாகரீகமாக வேலையில் உள்ளோம் என கூறிக்கொள்ளும் மனிதர்களின் இருள்வெளிகளை ஆசிரியர் வெளிச்சமிட்டு காட்டுகிறார். மித மிஞ்சிய ஊதியம் என்றாலும் அதன் பின்னணியில் உள்ள அளவுக்கதிகமான வேலைப்பளுவும், மன அழுத்தங்களும் இந்த நவநாகரீக மாந்தர்களின் வாழ்நாளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிதைத்து கொண்டுள்ளது. தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள, சக ஊழியரின் இருப்பை காலி செய்யும் மனப்பான்மை மிகுந்த மனிதர்களிலும் இந்த நாகரீக வளாகத்தில் உலவுகின்றனர்.
ஐடி உலகம் தந்த மன உளைச்சல்களால் தற்கொலைக்கு உள்ளாகும் மனிதர்களின் கதைகள் நெஞ்சை பதறசெய்கிறது. நாவலில் குறிப்பிடப்படும் தற்கொலைகள் வேலைப்பழுவினால் மட்டுமல்ல இந்த ஐடி கலாச்சாரம் உருவாக்கியுள்ள சமூக நெருக்கடியினாலும் தான். ஐடி நிறுவனங்கள் வந்த பின்னர் திடீர் ஏற்றம் பெற்ற தனிநபர் வருமான வளர்ச்சி தேவைக்கு அதிகமான நுகர்வுகலாச்சாரத்தையும், வித விதமான கடன்களையும் சேர்த்தே கொண்டு வந்தது. அதன் வேகத்தில் அடித்துச்செல்லபட்ட பலரின் வாழ்வு விவரிக்கிறப்படுகிறது. மேலும் மனித உறவுகளையும், உறவுகளின் மீதான நம்பிக்கையையும் இந்த கலாச்சாரம் உடைத்திருப்பதையும் வாசிப்பின் வழியே உணர முடிகிறது. உறவினை மீறிய காமம் குறித்து அதிகமாக நாவல் பேசுவதுபோல தோன்றினாலும் அதற்கான சூழலை ஐடி உலகம் வழங்கியது குறித்தும் தெளிவாக பேசுகிறது.
மாபெரும் பொருளாதார பேரெழுச்சியின் பின்னால் தங்கள் வாழ்வினை தொலைத்த இந்த நிலப்பரப்பின் பூர்வக்குடிகள் குறித்தும், வலுக்கட்டாயமாக்க இடப்பெயர்வு செய்யப்பட்ட உழைப்பாளி மக்கள. குறித்தும் இதில் பேச தவறவில்லை. இன்று உருவாகியுள்ள கண்ணகி நவர், செம்மஞ்சேரி எல்லாம் ஐடி நிறுவனங்களின் கடைநிலை வேலையை செய்வதற்கென்றே செயற்கையாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகளாகவே வாசிக்கும்போது உணர முடிகிறது. நிலப்புலன்கள் வைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் பொருளாதாரம் பறிக்கப்பட்டு தினக்கூலிகளாக, ரோட்டுக்கடை நடத்துபவர்களாக மாறியுள்ள அவலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் திரிபவர்கள் குறித்த பதிவு மனிதம் குறித்து கேள்வி எழுப்புகிறது.
இந்த நாவலை ஒரு சாரம்சத்தில் எழுதுவதென்பது கடினம். ஏனெனில் அத்தனை கதைகள், அத்தனை கதை மாந்தர்கள் சமகால மனிதர்களின் பிரதிபலிப்பாக அனைத்து பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றனர். நான்-லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு கதை மாந்தர்களும் அந்த குறுக்கு கோடுகளில் ஏதோவொரு புள்ளியில் சந்தித்து கொள்கின்றனர் என்பது எழுத்தாளர் விநாயக முருகன் எழுத்தின் சிறப்பம்சம்.
-நவநீதன்
நூல் : இராஜீவ் காந்தி சாலை நாவல்
ஆசிரியர் : விநாயக முருகன்
விலை : ரூ.₹320/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]