நூல் அறிமுகம்: பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார் -இ.பா. சிந்தன்
மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறை மாறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் பகத்சிங் – பேரா எ. பாவலன்
இதுவரை உலகில் எண்ணற்ற பல மனிதர்கள் வாழ்ந்து இறந்துள்ளனர். ஆனால் ஒரு மரணம் மட்டும் உலக மக்களின் தூக்கத்தை தொலைத்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலைநடுங்க செய்தது. ஒரு மரணம் இந்திய விடுதலைக்கு அடிகோலியது. ஒரு மரணம் எல்லோரையும் ஒரே மையப்புள்ளியில் சங்கமிக்க செய்தது. ஒரு மரணம் சாவையும் வாழவைத்தது. ஒரு மரணம் சூரியனை சுட்டெரித்தது. ஒரு மரணம் மரணத்தைக் கொன்று புதைத்தது. ஒரு மரணம் பிறிதொரு மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியது. ஒரு மரணம் முழு பௌர்ணமி நாளை இருளாக்கியது. தன் மரணத்தை, மரணத்தாலே வாழவைத்தவர்தான் தோழர் பகத்சிங். பகத்சிங் மறைந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாகப் போகிறது. இன்றும் மார்ச் 23ஆம் நாள் அன்று அவர் குறித்த வரலாறு நம் சிந்தனையை தழுவுகிறது. இந்தியர்கள் நாடு விடுதலை அடைந்ததை எந்த அளவிற்கு கொண்டாடுகிறோமோ? அதே அளவிற்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் மரணத்தை நினைக்கும் பொழுது சோகம் நம்முள் குடிகொள்கிறது.
தோழர் பகத்சிங், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தன் உயிரைக் கொடுத்ததை போன்றே உள்நாட்டு பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தியவர். ஆனால் அவரை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லியே நம் மூளையை சலவை செய்யப்பட்டுள்ளது.
அவர் இந்தியாவில் நிலவிய சாதி கொடுமையை எதிர்த்துள்ளார். சாதிக் கொடுமைக்கு காரணமாக இருந்த இந்து மதக்கொடுங்கோன்மையை எதிர்த்து களமாடினார். விடுதலைப் போராட்டங்களை இந்துத்துவ மற்றும் முஸ்லிம் மதவாத கிரிமினல் கும்பல்கள் பிளவுபடுத்துவதை கவனித்து அவற்றை கடுமையாக சாடியவர். நாட்டில் வெடித்த மத கலவரத்தின் காரணமாக மத நம்பிக்கையை மறுக்கத் தொடங்கினார். ஒரே நேரத்தில் இந்திய விடுதலைப் போராட்ட களம் சாதி மத எதிர்ப்பு என்று தன்னுடைய இலக்கை தீர்மானித்து சனாதன சக்திகளை எதிர்த்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை போராடினார். இந்தியாவில் மதவாத பிரச்சனைகளின் அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதையும் சாதிய தீண்டாமை எவ்வளவு இழிவானது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் விரிவாக விளக்கினார். நாட்டில் வெடித்த மதக்கலவரத்தின் காரணமாக மத நம்பிக்கையை மறுக்கத் தொடங்கினார். இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல இந்திய முதலாளிகளிடமிருந்தும், உழைக்கும் மக்களுக்கும் விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது மதவாத போக்குகள் அற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களை அரசியல் படுத்த நினைத்த நினைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் அவரின் தெளிந்த அரசியல் பார்வை.
அப்பொழுது மார்க்சியம் அவருக்கு வர்க பார்வையை ஊட்டியது. மதவாத பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரே வழி வர்க போராட்டங்களை என தனது இருபதாவது வயதில் பிரகடனப்படுத்திக் கொண்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்தியா உழைக்கும் மக்கள் அவர்தான் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்த போர் தொடரும், தொடர வேண்டும். கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள், இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம். அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம் என்று தெளிந்த சிந்தனை கொண்டவர்.
அதன் அடிப்படையில் சிறையில் இருந்தபோது நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற நூலையும் படைத்தார்.
கடவுள் நம்பிக்கையும், மதக் கோட்பாடும் அவரிடம் எள்ளளவும் இருந்ததில்லை. தூக்கு கயிற்றின் முன்னாள் நின்ற பகத்சிங்கிடம் சிறை வார்டன் சரத் சிங் கடவுளை போற்றி துதிக்கும் சீக்கியர்களின் புனித வார்த்தையை நினைவில் கொள்ள வலியுறுத்தினார். அதற்கு பகத்சிங் அதை மறுத்து வாழ்க்கையில் நான் ஒருபோதும் கடவுளை வணங்கவும் இல்லை, போற்றவும் இல்லை. உண்மையில் ஏழைகளின் துயரம் கண்டு கடவுளை விமர்சித்துள்ளேன். அதற்காக இப்பொழுது மன்னிப்பு கேட்டால் என்னைவிட கோழை யாரும் இருக்க முடியாது. இறுதி காலம் வந்து விட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் என மக்கள் தூற்றுவர் என்று மறுத்துவிட்டார்.
தன் கொள்கையில் இத்தனை உறுதிப்பாடு மிக்க காரணமாக இருந்தது அவருடைய குடும்பம் என்று சொல்ல முடியும். அவருடைய குடும்பம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை கம்பிகளுக்கு பின்னால் நின்றவர்கள். அதனால் அவருக்கு, இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்ட உணர்வும், உறுதியான கொள்கையும் பசுமரத்த அணியில் போல் ஆழமாக பதிந்தது. பகத்சிங் பிறந்தநாளில் தாத்தா மற்றும் அஜித் சிங், ச்வரவன் சிங் ஆகிய இரண்டு மாமாக்களும் சிறையில் இருந்து வெளியான நாளாகவே அமைந்தது.
ஆயுதம் தான் பிரிட்டிஷ் ஆட்சியை நாட்டை விட்டு துரத்தும் என்ற கொள்கை இளம் வயதிலேயே இருந்துள்ளது. பகத்சிங் சிறுவனாக இருந்தபோது தந்தை கிஷன் சிங்சந்துடன் வயலுக்கு சென்றார். அப்பொழுது இந்த தானியங்கள் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, தந்தை ஒரு விதையிலிருந்து இத்தனை மகசூல் கிடைத்தது என்றார். எல்லாவற்றையும் கவனமாக கேட்டு வந்த அந்தச் சிறுவன், சற்று நேரத்தில் அவனுடைய குரல் கேட்கவில்லை. அவருடைய தந்தை திரும்பி பார்த்தார். அப்பொழுது கொஞ்சம் தூரத்தில் அந்த சிறுவன் வயலில் குழிதோண்டி எதையோ நட்டு கொண்டு இருந்தான். அவனுடைய அப்பா என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு, அச்சிறுவன் நான் ஒரு துப்பாக்கியை நடுகிறேன். அது இன்னும் சில நாட்களுக்குப் பிறகு மரமாகி எல்லா கிளைகளிலும் துப்பாக்கிகள் காய்த்து தொங்கும் என்று கூறினான். அப்படி சொல்லும் பொழுது பகத்சிங்குக்கு வயது ஐந்து.
எண்ணம் தான் ஒரு மனிதனை உருவாக்கும். எண்ணம் தான், தான்யார் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தும். எண்ணம் தான் மாற்றத்தை உண்டாக்கும். எண்ணம் தான் போராடும் எண்ணத்தை உருவாக்கும். போராடும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பகத்சிங் வரலாற்றை எளிதாக கடக்க முடியாது. இந்திய விடுதலைக் கனவு பகத்சிங் கண்களில் மின்னியது. எப்படியாவது தன் காலத்திலேயே இந்தியா சுதந்திரம் பெற்று விட வேண்டும் என்று உறுதியாக இருந்தவர். அதன் தாக்கம் தான் புரட்சி என்பது மனித சமுதாயத்தில் பிரிக்க முடியாத ஓர் அங்கம். சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை அதை யாரும் தடுக்க முடியாது என்ற கொள்கைக் கோட்பாட்டுடன் செயலாற்றியவர்.
தன்னுடைய 14 வது வயதில் நெஞ்சு உறுதியுடன் நாட்டு விடுதலைக்காக காந்தியடிகளுடன் இணைந்து பணியாற்றியவர். ஆனால் அவருடைய ஒத்துழையாமை இயக்கம் காந்தியை விட்டு விலகுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதன்பிறகு இளம் புரட்சியாளர்கள் இயக்கத்தில் இணைந்து மக்கள் விடுதலைக்காக பணியாற்றியவர்.
பகத்சிங்கின் திசைவழி பயணத்தை மாற்றியது ஜாலியன் வாலாபாக் படுகொலை. 1919 ஏப்ரல் 13 இல் நடந்த அந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் அவர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படுகொலைக்குப் பிறகு அவர் நிம்மதி இன்றி இருந்தார். அன்று அவருக்கு வயது பனிரெண்டு. பனிரெண்டு வயது சிறுவனாக இருந்த பகத்சிங் அந்தப் படுகொலை நடந்த சில மணித்துளிகளிலேயே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைப் போல் மனித சடலங்கள் மிதந்துக் கிடந்தன. மனித சடலங்களின் இருந்து ஒழுகிய ரத்தம் மண்ணில் கலந்து உறைவதற்கு முன்பாகவே அந்த ரத்தம் கலந்த மண்ணை ஒரு பிடி எடுத்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டார். இந்த மண் தான் அவரை உறங்கவிடாமல் செய்தது. இந்த மண்தான் அவரை விடுதலைக்கான பாதையை சமைக்கச் சொல்லி கற்றுத்தந்தது. இந்த மண்தான் அவர் கண்களை சிவப்பாக்கியது. இந்த மண்தான் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த வெள்ளைப் பரங்கியர்களின் துப்பாக்கிகளிலிருந்து வெளியேறிய ரவைகளுக்கு பதில் சொல்லத் தூண்டியது.
ஒரு பக்கம் ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றொரு பக்கம் லாலா லஜபதிராயின் மரணம். லாலா லஜபதி ராய் சைமன் கமிஷனை எதிர்த்து போராடிய காரணத்திற்காக அன்றைய பிரிட்டிஷ் ஏவலர்கள் அவரை அடித்து கொலை செய்தனர். இந்த கோர சம்பவம் இன்னும் கோபத்தின் உச்சாணிக்கையே அவரை கொண்டு சென்றது. அல்லது அவரை மரணத்துடன் இணைத்தது என்று சொல்ல முடியும்.
லாலா லஜபதிராயை அடித்து கொன்ற காட் என்ற வெள்ளையனை சுட்டுக் கொள்வதற்கு நாள் குறிக்கப்பட்டது. லாலா லஜபதிராயை கொலை செய்யப்பட்டது நவம்பர் 17. லாலா லஜபதி ராய்டிசம்பர் 17 ஸ்காட்டுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால் விதி அவனை வேறு திசையில் அழைத்துச் சென்றது. ஸ்காட்டுக்கு விரித்த வலையில் சாண்டர்சன் விழுகிறான். அவன் கொலை செய்யப்படுகிறான்.
இந்தக் கொலையை ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் அமைப்பு முன்னெடுத்தது. அதை முன் நின்று நடத்தியவர் இருவர் ஒருவர் பகத்சிங் மற்றொருவர் சுகதேவ். இந்தக் கொலையை அந்த அமைப்பும் நியாயப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சாண்டர்சன் ஒரு துருப்பாக இருந்தான் அதனால் அவனை கொலை செய்தோம். இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்களோடு முடியப்போவதுமில்லை மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறை மாறும் வரை இந்த போராட்டம் தொடரும் நாளைய இளைஞர்கள் தொடர்வார்கள் என்று எழுதி ஆங்காங்கே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டு இருந்தது. இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல இந்திய முதலாளிகளிடமிருந்து உழைக்கும் மக்களும் விடுதலைப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.
ஒரு மனிதனை கொலை செய்வது எந்த அளவுக்கு தவறானதோ அதே அளவிற்கு இந்திய சுதந்திர கனல் அவர் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் குண்டு வீசுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு பகத்சிங்கே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். சுகதேவ் பகத்சிங்கடம் பாராளுமன்ற குண்டு வீசற்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த பின்பும் பகத்சிங் மற்றும் டெட் இருவரும் பாராளுமன்ற குண்டு வீச்சில் தேர்வாகினர்.
1929 ஏப்ரல் 8ஆம் நாள் காலை 11.00 மணி அளவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீச்சு காட்சியைப் பார்த்தவர்கள் சிதறி ஓடினர். பகத்சிங் கையில் வைத்திருந்த துப்பாக்கியும் அவர் எரிந்த குண்டும் அவருக்கு மரண தண்டனைக்கு ஆளானது.
அவரை குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டாலும் சிறைச்சாலையை கூட ஒரு போராட்டக் களமாக மாற்றியவர். சிறையில் மற்ற கைதிகளுக்கு இருக்கும் நெருக்கடியை கண்டு அவர்களுக்காகவும் போராடினார்.
அவர் சிறையில் இருந்த பொழுது 151 புத்தகங்களை வாசித்துள்ளார். நானூறு பக்கங்களுக்கு மேலாக குறிப்புகளை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். கனவுலகத்திற்கு ஓர் அறிமுகம் நான் ஏன் நாத்திக நானே இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு சோசியலிச கோட்பாடு சுயமரியாதை மரண வாசலில் உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருந்தாலும் இன்று நமக்கு கனவுலகத்திற்கு ஓர் அறிமுகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற இரண்டு புத்தகங்கள் தான் நம் கரங்களில் தவழ்கிறது. இதில் why am I atheist என்று ஆங்கிலத்தில் எழுதிய நூலை தோழர் ஜீவானந்தம் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அதை நூலாக வெளியிட்டவர் பெரியார்.
பெரிய அளவிற்கு பள்ளிக்கூடம் செல்லாதவர் என்றாலும் அவர் பஞ்சாபி உருது இந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராக இருந்தார். புத்தகம் வாசிப்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார்.
பகத்சிங் இடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் அவரின் உதவியாள்தான் லாகூரின் துவாரகா தாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கத்திற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தன. புத்தகப் பிரியரான பகத்சிங் தன்னுடைய பள்ளி தோழர் ஜெயதேவ் கப்ருக்கு எழுதிய கடிதத்தில் கார்ல் லிப்னேக்கின் மிலிட்டரி எஸ் எம் லெனின் இடதுசாரி கம்யூனிசம் அப்ஸன் சின்க்லேயரின் தி ஸ்பை ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
முனைவர் எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி,
சென்னை – 600 034.
நூல் அறிமுகம்: ஆ.கோபண்ணாவின் ‘மாமனிதர் நேரு’ – பாவண்ணன்
ஆவணப்பெட்டகம்
பாவண்ணன்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தொழிற்சங்கத் தோழரான ஆர். பட்டபிராமன் தமிழில் எழுதி வெளிவந்த ’நேருவின் மரபு’ என்னும் புத்தகம் ஒரு போராளியாக சுதந்திரப்போராட்டத்தில் நேரு ஆற்றிய பங்களிப்பையும் ஒரு பிரதமராக சுதந்திரமடைந்த தாய்நாட்டை உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயர்த்துவதற்காக ஆற்றிய பங்களிப்பையும் பற்றிய தெளிவை அளித்தது. நேருவின் சாதனைகளை இளையோர் அறிந்துகொள்ள அன்று அது ஒரு கைவிளக்காக இருந்தது. அதையடுத்து 1940-1964 கால இடைவெளியில் நேருவும் இந்திராகாந்தியும் எழுதிப் பகிர்ந்துகொண்ட கடிதங்களின் தொகைநூலாக ஆங்கிலத்தில் வெளிவந்த TWO ALONE TWO TOGETHER என்னும் நூல் நேருவுக்கு இருந்த பற்பல துறைகள் சார்ந்த அக்கறைகளையும் ஈடுபாடுகளையும் கனவுகளையும் வெளிப்படுத்தியது. கசப்பும் வெறுப்பும் மண்டிய இன்றைய சூழலில் கசப்புகளுக்கு அப்பால் கடந்து சென்று மானுடத்தை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே வாழ்க்கை முவழுதும் உழைத்து மறைந்த அன்றைய மகத்தான ஆளுமைகளை நினைத்துக்கொள்வதும் அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதும் படிப்பதும் மிகவும் அவசியமாகின்றன.
மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பைக் கொண்டவர் காந்தியடிகள். அதை ஒருபோதும் அவர் மறைத்துக்கொண்டதில்லை. அவர் தன் ஆர்வங்களை வெளிப்படையாகவே வைத்துக்கொண்டார். ஆனால் பொதுவாழ்வில் மதச்சார்பின்மையே இந்தியா நடக்கவேண்டிய வழி என்று தெரிவித்தார். மதத்தின் மீது எள்ளளவும் ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவராகவே வாழ்ந்தவர் நேரு. அவரும் பொதுவாழ்வில் மதச்சார்பின்மையே இந்தியாவின் வழி என்பதில் உறுதியாக இருந்தார். எத்தனையோ அழுத்தங்களுக்கு அவர் இலக்கானபோதும், அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். நடுங்கியிருந்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி அனைவரையும் சமமென உணரவைத்தார். மதச்சார்பின்மை என்னும் பாதையின் மதிப்பை இருவருமே உணர்ந்திருந்தனர்.
இன்று சூழல் பெரிதும் மாறிவருகிறது. மதம் சார்ந்த விவாதம் மீண்டும் மேலெழுந்து வருகிறது. ஒரு சமூகத்தில் மதத்தின் இடம் என்ன, மதச்சார்பின்மையின் இடம் என்ன என்று இன்றைய தலைமுறையிடம் உரையாடி வழிநடத்திச் செல்ல தகுதியான ஆளுமைகள் இல்லை. குழப்பம் மட்டுமே எஞ்சியிருக்கும் இன்றைய சூழலில் நேரு போன்ற மகத்தான மனிதர்களின் பங்களிப்பைப்பற்றிய அறிதல் முக்கியமானதொரு சமூகத்தேவையாக இருக்கிறது. ஆ.கோபண்ணா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த நூலின் தமிழ் வடிவமான மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு என்னும் புத்தகத்தை காலம் வழங்கியிருக்கிற கையேடு என்றே சொல்லவேண்டும். ஏற்கனவே காமராஜர் பற்றி விரிவான நூலை எழுதி அறிமுகப்படுத்தியிருக்கும் கோபண்ணா, அதற்கு இணையான விரிவோடும் ஆழத்தோடும் தகவல் செறிவோடும் நேரு பற்றிய நூலை எழுதியிருக்கிறார்.
செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு. பிரம்மஞான சபையைச் சேர்ந்த ப்ரூக்ஸ் என்பவர் அவருடைய வீட்டுக்கே வந்து கல்வியைக் கற்பித்தார். பதினாறு வயது வரை அவருடைய கல்வி வீட்டிலேயே தொடர்ந்தது. பிறகு முறையான கல்வியைப் பெறும்பொருட்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பள்ளிக்கல்வியையும் கல்லூரிக்கல்வியையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலேயே அவர் கற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து 1912இல் இந்தியாவுக்குத் திரும்பிய நேரு தன் தந்தையின் வழியில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஆனால் காலமோ தேசசேவை என்னும் திசையில் அவரைச் செலுத்தியது.
ஆயுதமேந்தி எதிர்ப்பதைவிட புறக்கணிக்கும் எதிர்ப்புக்கு வலிமை அதிகம் என்பதை அக்காலத்தில் அயர்லாந்தில் செயல்பட்ட சின்ஃபெயின் இயக்கம் வழியாக தெரிந்துவைத்திருந்த நேருவுக்கு இளம்பருவத்திலேயே சமூகப்போராட்டத்தின் வடிவத்தைப்பற்றிய ஒரு தெளிவு இருந்தது. 1916இல் லக்னோ மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த காந்தியடிகளை நேரில் சந்தித்து உரையாடினார். 1917இல் சம்ப்ராணில் அவுரி விவசாயிகளுக்காக காந்தியடிகள் மேற்கொண்ட போராட்ட வழிமுறையும் அதில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியும் நேருவை ஈர்த்தன. 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரகத்தை அறிவித்ததும் நேரு அதற்கு உடனடியாக ஆதரவைத் தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு நேருவுக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை கிடைத்தது. அதே சமயத்தில் அவருடைய தந்தையாருக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது. தந்தையும் மகனும் ஒரே சமயத்தில் சிறையில் தண்டனைக்காலத்தைக் கழித்தனர்.
பகத்சிங் பற்றி கோபண்ணா எழுதியிருக்கும் குறிப்புகள் பலரும் அறியாத சில உண்மைகளை முன்வைத்துள்ளன. சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய லாலா லஜபதிராய் என்னும் மூத்த தலைவரை 30.08.1928 அன்று ஜே.ஏ.ஸ்காட் என்பவர் தலைமையிலான போலீஸ் படை கடுமையாகத் தாக்கியது. இத்தாக்குதலுக்கு இலக்கான லஜபதிராய் 17.11.1928 அன்று மறைந்தார். அவருடைய மரணத்துக்குப் பழிவாங்குவதற்காக, அப்போது இளைஞர்களாக இருந்த பகத்சிங்கும் அவருடைய நண்பர் இராஜகுருவும் திட்டமிட்டனர். துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த நாளும் குறித்துவிட்டனர். ஆனால் ஸ்காட் என நினைத்து தவறுதலாக சான்டர்ஸ் என்பவரைச் சுட்டு விட்டனர். தம் தவறு உறைத்ததுமே அந்த இடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு, 08.04.1929 அன்று எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்து மைய சட்ட மேலரங்கில் குண்டுவீசினர். யாரையும் கொலை செய்வது அவர்களுடைய நோக்கமாக இருக்கவில்லை. மாறாக பொதுமக்களுக்கு எதிராக, அவசரமாக பாதுகாப்பு மசோதாவையும் வர்த்தகத்தகராறுகள் மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான் அந்தத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. காவல்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மூவரையும் சிறைக்குச் சென்று சந்தித்தார் நேரு. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இர்வினைச் சந்தித்து முறையீடு செய்தார் காந்தியடிகள். அதேபோன்ற கோரிக்கைகள் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் இர்வினை வந்தடைந்தன. இர்வினால் தனிப்பட்ட விதத்தில் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை. இன்னொரு பக்கத்தில் அரசு அதிகாரிகளின் அழுத்தமும் அவருக்கு இருந்தது. குறிப்பிட்ட தேதிக்கு ஆறு நாட்கள் முன்பாகவே மூவரும் தூக்கிலிடப்பட்டுவிட்டனர். அவர்கள் மறைவுக்குப் பின்னர் 29.08.1931 அன்று நடைபெற்ற மாநாட்டில் பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். ”கவலைப்படவேண்டாம் என்று பக்த்சிங் என்னிடம் கூறியிருக்கிறான். என்னைத் தூக்கிலிடட்டும். நீங்கள் உங்கள் படைத்தலைவரை நிச்சயம் ஆதரித்தாக வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஆதரித்தாக வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார். ”நான் தீவிரவாதியல்ல. நீண்டகால திட்டங்களுக்கு உறுதியான கோட்பாடுகளை வைத்திருக்கும் நான் ஒரு புரட்சியாளன்” என்று பகத்சிங் எழுதிய கடைசிக்கடிதத்தில் காணும் குறிப்பு மிகமுக்கியமானது. பக்த்சிங் தொடர்பாக பலருடைய மனத்தில் தெளிவில்லாத வகையில் நிறைந்திருக்கும் குழப்பங்கள் தீரும் வகையில் கோபண்ணாவின் குறிப்புகள் தெளிவைக் கொடுக்கின்றன.
29.12.1929 அன்று லாகூர் நகரில் ரவி நதிக்கரையில் காங்கிரஸ் மாநாடு கூடியது. சைமன் கமிஷன் எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது காவலர்களின் தடியடிக்கு இலக்காகி மறைந்த தலைவர் லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவைப்போற்றும் விதமாக அத்திடலுக்கு லாலா லஜபதிராய் நகர் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நேரு 01.01.1930 அன்று ரவி நதிக்கரையில் இந்தியாவின் தேசியக்கொடியை முதன்முதலாக ஏற்றினார். வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களுக்கு நடுவில் கொடி பறந்தது. கொடியை ஏற்றிவைத்த நேரு உணர்ச்சிவசப்பட்ட குரலில் “இந்தக் கொடி இந்திய சுதந்திரத்தின் அடையாளம், இந்தக் கொடி நம் ஒற்றுமையின் அடையாளம். ஒரே ஒரு இந்தியன் உயிரோடு இருக்கும் வரை, இந்தக் கொடியை ஒருவராலும் இறக்கமுடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கொடியைக் காக்கும் போராட்டத்தில் என் உயிரையும் கொடுத்து சுதந்திரத்தைக் காப்பேன். நீங்கள் அணிவகுத்து நின்று மரியாதை செய்யும் இந்தக் . கொடி எந்த இனத்தவருக்கும் சொந்தமானதல்ல. இந்தக் கொடியின் கீழ் நிற்பவர்கள் அனைவரும் இந்தியர்கள். இந்துக்கள் அல்ல, முஸ்லிம்கள் அல்ல, சீக்கியர்கள் அல்ல, இந்தியர்கள் மட்டுமே. திரும்பவும் நினைவில் நிறுத்துங்கள். இப்போது ஏற்றிய இந்தக் கொடியை கடைசி இந்தியன் இருக்கும் வரைக்கும் கீழே இறக்கமுடியாது” என்று உரையாற்றினார். அடுத்த நாள் கூடிய செயற்குழு ஜனவரி 26 ஆம் தேதியை நாடெங்கும் பூரண சுதந்திர நாளாக கொண்டாடப்படும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நேரு கைது செய்யப்பட்டார். அவருக்கு மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.
1916 முதல் 1946 வரையிலான முப்பதாண்டு காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக நேரு பலமுறை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ பத்தாண்டு காலம் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். தன் மகள் இந்திராவுக்குப் பிறந்த முதல் குழந்தையை நேரு பார்த்த தருணத்தை கோபண்ணா சித்தரித்திருக்கும் விதம் மனத்தைத் தொடுகிறது. 20.08.1944 அன்று இந்திராவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது நேரு அகமது நகர் கோட்டை சிறையில் இருந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்த செய்தி கடிதம் வழியாக அவரை வந்தடைந்தது. மகளையும் குழந்தையையும் பார்க்கும் ஆவல் நெஞ்சில் நிறைந்திருந்தாலும் பாசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சிறையில் இருந்தார் அவர். ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஏதோ ஒரு காரணத்தால் ஒரு குறிப்பிட்ட நாளில் அகமது நகர் கோட்டை சிறையிலிருந்து அவர் பரேலி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்தச் செய்தி மட்டுமே இந்திராவுக்குக் கிடைத்தது. நீண்ட பயணம் என்பதால் வழியில் நைனி சிறையில் இரவுப்பொழுதைக் கழிக்க தங்கிச் செல்லக்கூடும் என்று ஊகித்தார். ஒருவேளை ரயில்மாறி அப்படியே சென்றாலும் வியப்படைவதற்கில்லை என்றும் அவருக்குத் தோன்றியது. ஒருவேளை நைனி சிறைக்கு வந்தால் தந்தையைப் பார்க்கமுடியும் என மகள் நினைத்தாள். பொழுது சாய்ந்ததும் கணவரோடும் குழந்தையோடும் புறப்பட்டுச் சென்று காவலர்கள் பார்வையில் பட்டுவிடாமல் சிறைச்சாலைக்குச் செல்லும் சாலையில் தெருவிளக்குக் கம்பத்தின் கீழே மங்கிய வெளிச்சத்தில் நின்றிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே போலீஸ் வாகனத்தில் நேரு அச்சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார். அவர்களைக் கண்டதும் வாகனம் ஒரு கணம் தயங்கி நின்றது. கையிலிருந்த குழந்தை மீது வெளிச்சம் படும் வகையில் உயர்த்திக் காட்டினார் இந்திரா. முதலில் குழம்பினாலும் மறுகணமே அவர்களை அடையாளம் கண்டுகொண்ட நேரு அக்குழந்தையை வாகனத்திலிருந்தபடியே ஆவலுடன் உற்றுப் பார்த்து புன்னகைத்தார். அடுத்த கணமே அவ்வாகனம் சிறைச்சாலைக்குள் சென்றுவிட்டது. ஒரு குடும்பத்தில் சாதாரணமாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியான தருணங்கள்கூட தேச விடுதலைக்காகப் போராடிய ஆளுமைகளின் வாழ்வில் அமையவில்லை என்பதைப் படிக்கும்போது, அவர்களுடைய தியாக உள்ளத்தை வணங்கத் தோன்றுகிறது.
தேசப்பிரிவினையின்போது உடைமைகளை இழந்து அடைக்கலம் தேடி வந்த மக்களைக் கண்டு ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினார் நேரு. தனக்குச் சொந்தமான அலகாபாத் இல்லமான ஆனந்த பவனத்தை ஆதரவற்றோர்களுக்கான இல்லமாக மாற்றினார். அனைவருக்கும் உறுதியான இருப்பிடமும் வருமானமீட்டும் தொழிலும் கிட்டும் வரை அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கியிருந்தனர். பிறகு, அது ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கான இல்லமாக தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து அது ஜவஹர் பாலபவனாக மாறியது.
மதச்சார்பின்மை பற்றி இந்திய மக்களுக்கு நேரு மீண்டும் மீண்டும் நினைவூட்டியபடியே இருந்ததை அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து அறியலாம். மதச்சார்பின்மை ஓர் உயர்ந்த நோக்காகும். அதில் சமரசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை. இதில் செய்துகொள்ளும் சமரசம் நம் கொள்கைகளிலிருந்து நம்மை பின்வாங்கவைத்துவிடும் என்று எல்லா மேடைகளிலும் முழங்கினார் நேரு. தன் வாழ்நாள் முழுதும் நாட்டுமக்களின் சிந்தனைகளை மதவன்முறைக்கு அப்பாற்பட்டதாகவே நேரு வைத்திருந்தார். மதப்பிரச்சினை தோன்றிய இடங்களிலெல்லாம் அதிலிருந்து மக்களை மீட்க அவர் சென்று நின்றார். அவர் எங்கு சென்றாலும் வகுப்புவாதத்துக்கு எதிராகவே பேசினார்.
நேரு நூற்றாண்டு விழா மலரில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்ருதீன் தயாப்ஜி எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை கோபண்ணா அளித்திருக்கிறார். முஸ்லிம்களால் துன்புறுத்தபட்டு பஞ்சாபிலிருந்து கூட்டமாக வந்த அகதிகள் தில்லி நகரில் தங்கியிருந்த நேரம். அவர்களுக்கு தில்லியில் வசிக்கும் முஸ்லிம்களை அழித்து வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு வேகம் எழுந்தது. உளவுத்துறை வழியாக அச்செய்தி காதில் விழுந்ததும் தயாப்ஜியை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு விரைந்து சென்றார். பழிவாங்கும் எண்ணத்தோடு ஆயுதங்களுடன் அகதிகளில் ஒரு பிரிவினர் அங்கே இருந்தனர். உடனே அவர்களுக்கு அருகே நின்ற வாகனத்தின் மீது ஏறி நின்று அவர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். முதலில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் உடமையிழப்புகளுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்தார். பிறகு, பழிவாங்க நினைக்கும் எண்ணத்தை கடுமையாகக் கண்டித்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என வாக்குறுதி அளித்த பிறகே நேரு அங்கிருந்து புறப்பட்டார். நிகழவிருந்த ஒரு பேரழிவை அன்று இரவு நிகழாமல் தடுத்ததை நடுக்கமும் பெருமிதமும் மண்டிய நெஞ்சுடன் பார்த்துக்கொண்டிருந்ததாக அக்கட்டுரையில் தயாப்ஜி எழுதியிருக்கிறார்.
நேருவுடன் உரையாடல் என்னும் புத்தகத்தின் ஆசிரியரான நார்மன் கசின்ஸ் என்பவர் தன் நினைவிலிருந்து விவரித்த மற்றொரு நிகழ்ச்சியையும் கோபண்ணா இணைத்துக்கொண்டிருக்கிறார். ஆயுதமேந்திய கூட்டத்தின் முன் நேரு ஆற்றிய உரையின் காரணமாக உருவான மனமாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட அவருடைய அனுபவம் அந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மதம் மிக முக்கியமான இடத்தைவகிக்கும் இந்தியாவில் மதச்சார்பின்மையை ஒரு கொள்கையாகக் கொண்டு செயல்படுவதற்கு நேரு செய்த முயற்சிகள் மிகமுக்கியமானவை. பசுவதையை சட்டத்தின் மூலம் தடுப்பது பற்றி ஒரு பேச்சு தொடங்கியதுமே, அதைக் கடுமையாக எதிர்த்தார் நேரு. அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது என்பது ஒரு மதம் சார்ந்த சர்வாதிகார நாடாக இந்தியாவை மெல்ல மெல்ல மாற்றிவிடும் என்பது அவர் அச்சமாக இருந்தது. ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முக்கியத்துவம் உருவானது. பசுவதைத்தடைச் சட்டத்தை உருவாக்குவது பற்றி பல மாநிலங்கள் பரிசீலித்தபோது, அதற்கு கடுமையான முறையில் எதிர்வினை புரிந்தார் நேரு. அப்படி ஒரு சட்டத்தை உருவாக்க நினைப்பதை விவேகமும் அனும்பவமும் அற்ற செயலாக தான் கருதுவதாக ஒரு கடிதமெழுதி 13.02.1955 அன்று எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பிவைத்தார். ஒரு கட்டத்தில் கோவிந்த் தாஸ் என்பவர் அப்படி ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முயற்சி செய்தபோது, அதற்கு கடுமையான வகையில் எதிர்வினையாற்றினார். தேச ஒற்றுமை என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதே தவிர, ஒரே கலாச்சாரத்தின் மூலம் ஒற்றுமை என்பதை அடிப்படையாகக் கொள்ளவில்ல என அழுத்தம் திருத்தமாகக் கூறினார் நேரு.
ஐம்பதுகளின் தொடக்கத்தில் நாட்டில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் நலனுக்காக முன்னெடுத்த சில போராட்டங்களால் வன்முறை வெடித்தது. உயிரிழப்பும் பொருட்சேதமும் நேர்ந்தன. அப்போது ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் “எது மிகப்பெரிய ஆபத்து? கம்யூனிசமா, வகுப்புவாதமா?” என்று ஒருவர் கேட்டார். மறுகணமே அவரிடம் நேரு “இது முட்டாள்தனமான கேள்வி. ஒரு மனிதனை நீரில் மூழ்கி சாகிறாயா, அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து சாகிறாயா என்று கேட்பதுபோல இருக்கிறது” என்று பதிலளித்தார். ஆனால் வேறுவேறு சொற்கள் வழியாக மீண்டும் மீண்டும் இதே கேள்வி கேட்கப்பட்டபோது “வகுப்புவாதம்தான் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து. கம்யூனிஸ்டுகள் வன்முறையைக் கொள்கையாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில பொருளாதாரக் கொள்கைகளை வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய வழிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லையே தவிர, அத்தகைய கொள்கைகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் வகுப்புவாதத்துக்கு அப்படிப்பட்ட எந்த அடிப்படையும் இல்ல்லை. அது அழிவைமட்டுமே கொண்டுவரும்” என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
ஜனநாயகம் என்பதை தேர்தல் காலத்தில் வாக்களிக்கிற ஒரு சடங்காக மட்டும் நேரு பார்க்கவில்லை. அவர் அதை ஒரு சிந்தனைமுறையாகவும் நடத்தை முறையாகவும் பார்த்தார். ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை. நம் கருத்தை ஏற்றுக்கொள்பவர்களிடம் மட்டுமல்ல. ஏற்க மறுப்பவர்களிடமும் சகிப்புத்தன்மையைக் காட்டவேண்டும். ஜனநாயகத்துக்கு பாராட்டும் பற்றும் தெரிவிக்கும் அதே வேளையில் பெரும்பாலான மக்களின் கருத்துகள் எப்போதுமே சரியாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை என்னும் நேருவின் சொற்கள் கூர்மையானவை.
அரசியல் நிர்ணய சபையில் வாக்காளர்கள் யார் என்பதை வரையறுக்கும் ஒரு விவாதத்தில் ஒவ்வொருவரும் ஒரு வரையறையை முன்வைத்து உரையாற்றினர். சிலர் குறைந்தபட்ச கல்வித்தகுதியை முன்வைத்தனர். சிலர் குறைந்தபட்ச செல்வவசதியை முன்வைத்தனர். ஆனால் நேரு அந்த வரையறைகளை கடுமையாக எதிர்த்தார். வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கவேண்டும் என்று வாதாடினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், நிலமற்றோர், சிறு குறு விவசாயிகள், பண்ணைத்தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், பெண்கள் என பல பிரிவினரும் ஒரே சமயத்தில் தம் வாக்குகள் மூலம் அதிகாரத்தில் பங்கெடுக்கமுடியும் என்று எடுத்துரைத்தார். கடுமையான வாதவிவாதங்களுக்குப் பிறகே நேருவின் கருத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.
தேசப்பிரிவினையைத் தொடர்ந்து உருவான பாகிஸ்தான் நாட்டில் பெரும்பான்மையினரின் மொழியான உருதுமொழியை உடனடியாக அலுவலக மொழியாக அறிவித்துவிட்டார்கள். அதேபோல இந்தியாவிலும் பெரும்பான்மையினரின் மொழியான இந்தி மொழியை அலுவல்மொழியாக அறிவிக்கவேண்டும் என வடமாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தத் தொடங்கினர். ஆனால் இந்தியை அறியாத தென்மாநில உறுப்பினர்கள் ஆங்கிலமே அலுவல்மொழியாக தொடரவேண்டும் என்று வலியுறுத்தினர். மொழி தொடர்பான பிரச்சினையில் நெகிழ்வும் இணக்கமும் கூடிய ஒரு முடிவையே நாம் எடுக்கவேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தார். இது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் பல மணி நேரங்கள் நடைபெற்றன. இறுதியில் இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை அலுவல் இணைமொழியாக ஆங்கிலமே தொடரும் என்று தெரிவித்தார் நேரு. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மொழி என்பது இயற்கையாக வளரும் மென்மையான மலரைப்போன்றது. ஒரு மலரை இழுத்தோ, திருப்பிபோ, அசைத்தோ உங்களால் வளர்க்கமுடியாது என்று உறுதியான குரலில் பதில் சொன்னார் நேரு. ஐநூறு உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து பேசிய ஈ.வெ.கி.சம்பத் குரலை மதித்து, அவரை அமைதிப்படுத்தும் விதமாக கடிதமெழுதி, தமிழகத்தில் நடக்கவிருந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தைத் தவிர்த்தார்.
இந்து ஆண்களுக்கு ஒருதாரத் திருமணத்தை வலியுறுத்தி, விவாகரத்து உரிமையும் மூதாதையர் சொத்தை மரபுரிமையாகப் பெறும் உரிமையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அம்பேத்கர் இந்து சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நேருவுக்கும் அச்சட்டத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் கடுமையான வகையில் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் அந்தத் தருணத்தில் அந்த மசோதா கைவிடப்பட்டது. அதனால் மனவருத்தம் கொண்ட அம்பேத்கர் 1951இல் அவசரமாக தன் பதவியிலிருந்து விலகினார். எனினும் அச்சட்டத்தின் முக்கியத்துவம் கருதி அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த நேரு, ஒரே தொகுதியாக இருந்த அச்சட்டக் கூறுகளை ஐந்து தனித்தனி பிரிவுகளாக பிரித்து வெவ்வேறு சட்டங்களாக நிறைவேற்றினார். 1954இல் உருவான சிறப்புத்திருமணச்சட்டமும் 1955இல் உருவான இந்து திருமணச்சட்டமும் இந்து வாரிசுரிமைச்சட்டமும் 1956இல் உருவான இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டமும் இந்து தத்தெடுப்பு பராமரிப்புச் சட்டமும் அப்படி உருவானவையே. 1961இல் உருவான வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் பெண்களின் திருமணத்துக்கு தடையாக இருந்த ஒரு பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நேருவின் சொற்கள் அவருடைய நெஞ்சின் ஆழத்திலிருந்து தன்னிச்சையாக பிறந்து வருவதை அவருடைய பல்வேறு உரைகள் வழியாக உணர்ந்துகொள்ள முடியும். சுதந்திரத்திருநாள் அன்று வானொலியில் மக்களுக்காக அவர் ஆற்றிய உரை, காந்தியடிகளின் மறைவையொட்டி அவர் ஆற்றிய உரை, நங்கல் கால்வாயைத் திறந்து வைத்து ஆற்றிய உரை என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த உரைகளின் சாரமான பகுதிகளை கோபண்ணா பொருத்தமான இடங்களில் எடுத்தாண்டிருக்கிறார். 23.05.196 அன்று மக்களவையில் நேரு ஆற்றிய உரையில் பொதுத்துறைகள், தனியார் துறைகள் பற்றி தன் கருத்துகளைத் எடுத்துரைத்திருக்கும் பகுதி மிகமுக்கியமானது. “பொதுத்துறை வெளிப்படையாக வளரவேண்டும். நம் பொருளாதாரத்தில் பொதுத்துறை முக்கியமான பங்காற்றவேண்டும். தொழிற்துறைக் கொள்கைப்புரட்சியில் தனியார் துறைக்கும் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு களம் அமைத்துத் தரப்படும். தனியார் துறையைக் கையாளும் விதங்களைப் பற்றி அந்தந்த தருணங்களுக்கேற்ப முடிவு செய்யவேண்டும்” என்னும் சொற்கள் அவருடைய உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. கலப்புப்பொருளாதாரமே நேருவின் நோக்கமாக இருந்தது. சிற்சில பகுதிகளில் தனியார் துறையினர் செயல்பட அனுமதிக்கலாம். ஆனால் அரசின் வழிகழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு அது செயல்படவேண்டும். முடிவில் பொதுத்துறையே சந்தையில் ஆதிக்கம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது நேருவின் பார்வையாக இருந்தது.
நேருவின் மற்றொரு முக்கியமான சாதனை அவருடைய ஐந்தாண்டுத்திட்டங்கள். முதலில் விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள். நாட்டின் முக்கியமான ஆறுகளின் குறுக்கே அணைகள் எழுப்பப்படுகின்றன. நீர்த்தேவையையும் மின்சாரத்தேவையையும் இந்த அணைகள் தீர்த்துவைக்கின்றன. மின்சாரம் நீர்ப்பாசனத்துக்குரிய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க உதவுகிறது. அதனால் விளைச்சல் பெருகுகிறது. கட்டுமான வேலைகள் பெருகப்பெருக இரும்பின் தேவை அதிகரிக்கிறது. அதனால் முக்கியமான பகுதிகளில் இரும்பாலைகள் உருவாக்கப்படுகின்றன. விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பை அதிகரிப்பதோடு, நிலத்தை வளமுடன் வைத்திருக்கத் தேவையான உரங்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் உருவாகின்றன. பெட்ரோல் கிணறுகள் தோண்டப்படுகின்றன. முதல் கிணற்றிலிருந்து பெட்ரோல் பீறிட்டெழும் காட்சியைக் கண்டு அகமகிழ்கின்றார் நேரு. அவர் அணிந்திருந்த ஆடையில் கன்னங்கரிய பெட்ரோல் துளிகள் தெறித்து கறை படிகிறது. அந்தக் கறையை சந்தோஷமாக தொட்டுப் பார்க்கிறார் நேரு. மக்களவையில் அந்த உடையுடன் பேசப்போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இந்திய எண்ணெய் எரிவாயுக்கழகம் உருவாகி மெல்ல மெல்ல விரிவடைகிறது. ஒவ்வொன்றும் அவருடைய கனவு. தேசத்தை தலைநிமிர்ந்து நிற்கவைக்கும் கனவு.
இந்தியாவை ஒரு தனித்துவம் மிக்க நாடாக உலக அரங்கில் வளர்த்தெடுத்து நிற்கவைப்பது அவருடைய மாபெரும் கனவாக இருந்தது. அவருடைய வாழ்க்கை வரலாறும் இந்தியாவின் வளர்ச்சி வரலாறும் வேறுவேறல்ல. ஒன்றே. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாகும். பிரிக்க முடியாத அந்தக் காட்சிகளை வரலாற்றுச் சாட்சிகளாக நிற்கும் நிகழ்ச்சிகளோடும் பல்வேறு ஆளுமைகள் எழுதிய நூல் குறிப்புகளோடும் இணைத்து கோபண்ணா உருவாக்கியிருக்கும் இந்த நூலை காலத்தின் தேவை கருதி உருவான முக்கியமானதொரு ஆவணப்பெட்டகம் என்று சொல்லலாம்.
(மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு. ஆ.கோபண்ணா. நவ இந்தியா பதிப்பகம். காமராஜ் பவன், 573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600006. விலை. ரூ.2500)
பகத்சிங்கின் முக்கியமான பங்களிப்புகள் கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்:ச.வீரமணி
சீத்தாராம் யெச்சூரி
தமிழில்: ச.வீரமணி
அனைவருக்குமான நவீன இந்தியாவை உருவாக்குவதில் பகத்சிங்கின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவைகளாகும். 1920-21 ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திடீரென்று கைவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேசிய இயக்கத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இந்த இயக்கத்தின்போது நடைபெற்ற சௌரி சௌரா நிகழ்வு காந்திஜியையும், எதிர்கால ஆளும் வர்க்கங்களையும் அலற வைத்தது. மக்கள் மத்தியில் புரட்சிகர உணர்வு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்தாக முடியும் என்று அவர்கள் கருதினார்கள். மக்களிடையே எழுந்துவரும் புரட்சி அலை, நாட்டை பிரிட்டிஷ் காலனிய கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்குள்ளேயே இருந்துவரும் சுரண்டல்பேர்வழிகளையும் விழுங்கிவிடும் என்று கருதினார்கள். இதனால்தான் காந்திஜி, தான் ஒரு பெரிய “இமாலயத் தவறு” (“Himalayan blunder”) செய்துவிட்டேன் என்று கூறி இந்த இயக்கதை விலக்கிக் கொண்டார். காந்திஜி, இவ்வாறு இயக்கத்தை விலக்கிக்கொண்டது தொடர்பாக, அந்த சமயத்தில் செயல்பட்டு வந்த புரட்சியாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த முக்கியமான தலைவர்களே ஆச்சரியப்பட்டு, காந்திஜியிடம் இது குறித்துக் கேட்கவும் செய்தனர். ஜவஹர்லால் நேரு, சிறையிலிருந்து, இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்றும், அதனை விலக்கிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் எழுதினார்.
மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், இருந்த பொதுவான விரக்தி நிலை, பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மார்க்கத்தையும், திசைவழியையும் தேடியது. இந்தப் பின்னணியில்தான் பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்கள் ஒரு தெளிவான திசைவழியை அளித்திடும் விதத்தில் எழுந்தார்கள். அது மக்கள் மத்தியில் ஓர் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது. நாடு சுதந்திரம் பெற்றபின்னரும் கூட இன்று வரையிலும் அது தொடர்கிறது.
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும் அவருக்கு 24 வயது ஆவதற்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்கள். இவ்வாறு அவர் வாழ்ந்தகாலம் மிகவும் குறுகியதே என்றாலும், அதற்குள்ளாகவே அவர் எண்ணற்ற வீரதீரச் செயல்களைப் புரிந்துள்ளார். லாலா லஜபதி ராய் மீது கொடூரமானமுறையில் குண்டாந்தடி நடத்திய சாண்டர்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டது, தில்லி பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியது (தில்லி வெடிகுண்டு வழக்கு) முதலியவை, எப்படி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் பகத்சிங்கிற்கு இருந்த சிந்தனைத் தெளிவையும், அதன் அடிப்படையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் காட்டின. மார்க்சியம் குறித்தும், இந்திய மக்களை விடுவிப்பதற்கான புரட்சியின் குறிக்கோள் குறித்தும் அவர் கொண்டிருந்த தெளிவான பார்வையுடன் இவற்றை அவர் மேற்கொண்டார்.
சிந்தனைகளுக்கு இடையேயான போராட்டம்
சுதந்திரப் போராட்டக் காலத்தில், சுதந்திர இந்தியாவின் குணாம்சம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து, பல்வேறு சிந்தனைகளுக்கு இடையேயும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட சிந்தனையோட்டம் என்பது, தேசிய இயக்கத்தின் குறிக்கோள் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதாக இருந்தது. இடதுசாரிகள் இதனை மறுக்காத அதே சமயத்தில் இத்துடன், மேலும் ஓரடி முன்னே சென்று, இவ்வாறு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க வேண்டுமானால், அவ்வாறு நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை ஒவ்வோர் இந்தியனின் பொருளாதார சுதந்திரமாகவும் மாற்றுவதில் நாம் எய்துகிற வெற்றியைச் சார்ந்திருக்கிறது, அதாவது, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை, சோசலிச சமூகத்தை, அமைப்பதில் அடங்கி இருக்கிறது என்றார்கள்.
இவ்விருவிதமான சிந்தனையோட்டங்களுடனும் நேரடியாகவே முரண்படக்கூடிய விதத்தில் ஒரு சிந்தனையோட்டமும் இருந்தது. அதாவது, சுதந்திர இந்தியாவின் குணாம்சம் மக்களின் மத அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அந்தச் சிந்தனையாகும். இது மேலும் இருவிதமான சிந்தனைகளுக்கு வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ்-ஆல் முன்னெடுக்கப்பட்ட “இந்து ராஷ்ட்ரா” என்கிற சிந்தனைக்கும், முஸ்லீம் லீக்கால் முன்னெடுக்கப்பட்ட “இஸ்லாமிய அரசு” என்கிற சிந்தனைக்கும் வழிவகுத்தது. வி-டி. சாவர்க்கரால் முன்னெடுக்கப்பட்ட இந்த இரு தேசக் கோட்பாட்டை, பின்னர் முகமது அலி ஜின்னாவும் பின்பற்றினார்.
தேசிய இயக்கத்தின் பிந்தைய நடவடிக்கைகள், துரதிர்ஷ்டவசமான முறையில் நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கும், பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தியாவின் இதர பகுதி, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு கருத்தாக்கத்தையே தேர்வு செய்தது. அப்போது இந்து ராஷ்ட்ரம் என்னும் சிந்தனையை நிராகரித்ததுதான், அவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி, காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. ஆயினும், ஆர்எஸ்எஸ்-இன் சிந்தனையோட்டமான “இந்து(த்துவா) ராஷ்ட்ரத்தை” அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. இந்த முயற்சிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களுடைய “இந்துத்துவா ராஷ்ட்ரமாக” மாற்றுவதற்கான முயற்சிகளில் பிரதிபலிக்கிறது.
இதன் தொடர்ச்சிதான் இன்று நாம் ஈடுபட்டுள்ள போர்க்களமாகும். சுதந்திரத்திற்குப் பின் கடந்த எழுபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள அனுபவம், இடதுசாரிகள் அன்றைய தினம் கூறிய கருத்துக்களை, அதாவது, மக்கள் போராட்டம் சோசலிசத்தை நோக்கி முன்னேறவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க முடியாது என்று கூறியதை, மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பகத்சிங் உயர்த்திப்பிடித்து, நடைமுறைப்படுத்தி வந்தார்.
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு தொடர்கிறது
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு, இன்றும் நம் போராட்டங்களில் செல்வாக்கு செலுத்துவது தொடர்கிறது. பகத்சிங்கின் நவஜவான் பாரத் சபையின் ஆறு விதிகளில், இரண்டு பின்வருமாறு: “1. வகுப்புவாத அமைப்புகளுடன் அல்லது வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்புகின்ற அமைப்புகளுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. 2. மதம் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை என்று கருதும் விதத்தில் மக்கள் மத்தியில் பொது சகிப்புத்தன்மையை உருவாக்குவது, அதன் அடிப்படையில் முழுமையாகச் செயல்படுவது.”
பகத்சிங், தங்களுடைய இந்துஸ்தான் குடியரசு சேனை என்னும் பெயரை, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனை
(HSRA-Hindustan Socialist Republican Army) என்று மாற்றியமைத்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரிலேயே, அனைத்துவிதமான மத வகுப்புவாதங்களுக்கும், சமயச் சடங்குகளுக்கும் தடையைப் பிறப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, (பிறப்பால் சர்தார் ஆக விளங்கிய) பகத்சிங், தன் தலைமுடிக்கும், தாடிக்கும் விடை கொடுத்தார். இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் அறிக்கை (manifesto), “இளைஞர்களைப் பீடித்திருக்கக்கூடிய, கொத்தடிமை சிந்தனைகளிலிருந்தும், மத மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபடுவதற்கான விருப்பத்தில், இளைஞர்களின் அமைதியின்மையில் புரட்சியின் வருகையைப் பார்த்தது.”
பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடையேயான தொடர்பினை அறிந்திருந்தார்கள். இவ்வாறு அவர்கள், சுதந்திரத்தை மனிதனுக்கு மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இணைத்தார்கள். பகத்சிங், சிறையிலிருந்து எழுதிய செய்தியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்: “விவசாயிகள் தங்களை, அந்நிய நுகத்தடியிலிருந்து மட்டுமல்ல, நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் நுகத்தடிகளிலிருந்தும் விடுவித்தக் கொள்ள வேண்டியிருக்கிறது.”
தில்லி வெடிகுண்டு வழக்கு
தில்லி வெடிகுண்டு வழக்கு விசாரணையின்போது, பகத்சிங்கும், படுகேஸ்வர் தத்தும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் போதும், நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போதும், “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டார்கள். இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று நீதித்துறை நடுவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் எழுத்துபூர்வமான பதிலை அவருக்குச் சமர்ப்பித்தார்கள். 7 மற்றும் 8 என்று எண்ணிடப்பட்ட, அதன் கடைசி இரண்டு பத்திகளை, இங்கே கீழே இணைத்திருக்கிறோம். இதில் அவர்கள், சுதந்திரத்திற்கான போராட்டத்தையும், சோசலிசத்திற்கான போராட்டத்தையும் அற்புதமான தெளிவுடன் இணைத்திருக்கிறார்கள். இவை, அனைவருக்குமான நவீன இந்தியா குறித்து பகத்சிங்கிற்கும் அவருடைய புரட்சித் தோழர்களுக்கும் இருந்த தொலைநோக்குப் பார்வையை உயர்த்திப்பிடிக்கிறது. (இந்தப் பதில், 1929 ஜுன் 9 அன்று மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவின்படி பதிவுருக்களிலிருந்து நீக்கப்பட்டது. அவர்கள் தியாகிகளான பின் ஐம்பதாண்டுகள் கழித்து, 1981 மார்ச்சில் தேசிய ஆவணக் காப்பகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.)
(7) பகத்சிங் ஆகிய என்னிடம், ‘புரட்சி’ (இன்குலாப்) என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கீழமை நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், புரட்சி என்பது ரத்தம் சிந்தும் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அங்கே தனிநபர் பழிதீர்க்கும் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சி என்பதற்கு ‘வெளிப்படையான அநீதியின் அடிப்படையில் இப்போது இருக்கிற அமைப்பு மாற்றப்பட வேண்டும்’ என்றே நாங்கள் பொருள் கொள்கிறோம். உற்பத்தி செய்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமூகத்தின் அடிப்படை மூலக்கூறாக இருந்த போதிலும்கூட, அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன. அவர்களின் அடிப்படை உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஒரு பக்கத்தில் அனைவருக்கும் உணவை உற்பத்தி செய்து அளித்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறார், உலகத்தில் உள்ள அனைவருக்கம் நவீன ஆடைகளை அணிவதற்கு உலகச் சந்தைக்கு துணிகளை விநியோகித்திடும் நெசவாளர் தன்னையோ, தன் குழந்தைகளையோ முழுமையாகப் போர்த்திக்கொள்ளும் அளவிற்கு ஆடைகளின்றி இருக்கிறார். அற்புதமான அரண்மனைகளைக் கட்டி எழுப்புகின்ற கொத்தனார்கள், கருமான்கள்(smiths), ஆசாரிகள் (carpenters), சேரிகளில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில், சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக விளங்கும் முதலாளித்துவ சுரண்டல்காரர்கள், தங்கள் விருப்பத்திற்கிணங்க லட்சக்கணக்கில் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பயங்கரமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில் வலிந்துதிணிக்கப்படும் பாரபட்சம், பெருங்குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமை என்றென்றும் நீடித்திருக்க முடியாது. எரிமலையின் விளிம்பின்மீது சுரண்டல்காரர்களின் அப்பாவிக் குழந்தைகளும், சுரண்டப்படுபவர்களின் பல லட்சக்கணக்கான குழந்தைகளும் ஓர் ஆபத்தான செங்குத்துச் சரிவில் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் இன்றைய சமூக அமைப்பு சந்தோஷமாக ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகும். இந்த நாகரிகத்தின் (civilization) ஒட்டுமொத்த கம்பீரமான கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், நொறுங்கி வீழ்ந்துவிடும். எனவே, ஒரு புரட்சிகர மாற்றம் அவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டியது, இதனை உணர்ந்த ஒவ்வொருவரின் கடமையுமாகும். இதனைச் செய்யாவிட்டால், மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும், ஏகாதிபத்தியமாக முகமூடி அணிந்துகொண்டு தேசங்களை தேசங்கள் சுரண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மனிதகுலம் இன்றையதினம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் மற்றும் படுகொலைகள் தடுக்கப்பட முடியாவிட்டால், யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் உலகளாவிய அமைதிக்குக் கட்டியங்கூற வேண்டும் என்றும் கூறுவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் பாசாங்குத்தனமாகும். புரட்சி என்பதன் மூலம் நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதும், இது எவராலும் அச்சுறுத்தப்பட முடியாத அளவிற்கு அமைந்திடும் என்பதுமாகும். இதன் விளைவாக அமைந்திடும் உலக சம்மேளனம் மனித குலத்தை முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்களின் துன்ப துயரங்களிலிருந்தும் மீட்டிடும்.
(8) இதுவே எங்கள் சித்தாந்தம். எங்கள் உத்வேகத்திற்கான இந்த சித்தாந்தத்துடன், நாங்கள் ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கை விடுக்கிறோம். எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால் மற்றும் இப்போதைய அரசமைப்பு முட்டுக்கட்டையாக இருப்பது தொடருமானால், அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியும் விதத்தில், நன்றாக இருக்கின்ற இயற்கையான சக்திகள், ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தி, புரட்சியின் லட்சியங்களை நிறைவேற்றும் விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவிடும்.
புரட்சி, மனிதகுலத்தின் தவிர்க்கமுடியாத உரிமை. சுதந்திரம் அனைவரின் விவரிக்கமுடியாத பிறப்புரிமை. தொழிலாளர்கள்தான் சமூகத்தின் உண்மையான பராமரிப்பாளர்கள். மக்களின் இறையாண்மை தொழிலாளர்களின் இறுதி விதியாக இருந்திடும்.
இந்த லட்சியங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக எவ்வளவு துன்பங்கள் எங்கள் மீது ஏவப்பட்டாலும் அவற்றை நாங்கள் வரவேற்போம். புரட்சியின் பலிபீடத்திற்கு நாங்கள் எங்கள் இளைஞர்களைத் தூபமாகக் கொண்டு வந்திருக்கிறோம். அற்புதமான லட்சியத்திற்காக அர்ப்பணித்துக்கொள்வதைவிட உயர்ந்த தியாகம் எதுவுமில்லை. நாங்கள் திருப்தி மனப்பான்மையுடனேயே இருக்கிறோம். புரட்சியின் வருகையை எதிர்பார்க்கிறோம்.
“புரட்சி நீடூழி வாழ்க.”
இன்றைய சூழல்
இவ்வாறு, இன்றைய சூழலில், குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம், ஆழமாகவும், அகலமாகவும் வளர்ந்திருக்கிற நிலையில், மோடி அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கும் விதத்தில் சுரண்டல் கொள்கைகளை அதீதமான முறையில் பின்பற்றி வருகிறது. பொருளாதார மந்தம் நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தை அந்நிய மற்றும் உள்ளூர் கார்ப்பரேட்டுகளின் ஆதாயத்திற்குத் திருப்பிவிடும் விதத்திலும் சூறையாடுவதுடன் இணைத்திருக்கிறது.
இவை அனைத்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றும்விதத்தில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் மூலமாக உழைக்கும் மக்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கூறும் அனைவரையும் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள்மீது தாக்குதல் தொடுப்பதுடனும், பகுத்தறிவாளர்கள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும் இணைந்திருக்கிறது. இன்றைய தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை வலுப்படுத்த அனுமதிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாத்திட, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுடன், இந்தப் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட, மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதகாத்திட, நாட்டிலுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் மத்தியில் நிலவும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்திட, இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதகாப்பது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு, பகத்சிங், தூக்கிலிடப்பட்ட தியாக தினம் 90 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவருடைய வாழ்வும் பணியும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தச் செல்லவும், வலுப்படுத்தவும் நமக்கு உத்வேகம் அளித்து, வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பது தொடர்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)
பகத்சிங் ஒரு புரட்சிகர அமைப்பாளன் கட்டுரை – அ.பாக்கியம்
1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 பஞ்சாப் மாநிலம் லாகூருக்கு அருகில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா என்ற கிராமத்தில் பகத்சிங் பிறந்தார்.
பகத்சிங்கை ஒரு வன்முறையாளன் என்று சிலரும், புரட்சிக்காரன் என்று பலரும் கூறுகின்றனர்.
பகத்சிங்கின் நடைமுறை செயல்களில் வேண்டுமானால் சில குறைகள் இருக்கலாம். அவரின் நோக்கத்தை – விடுதலை தாகத்தை – இலட்சிய வேகத்தை யாராலும் குறை கூற முடியாது. பகத்சிங் இந்தியாவின் மாபெரும் புரட்சிக்காரன் மட்டுமல்ல.. புரட்சிகரமான அமைப்புகளையும் உருவாக்கியவர்.
சுதந்திர போராட்டக் காலத்தில் 1925 – 31க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளை பரிசீலித்தால் பகத்சிங்கைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களும், அவரின் செயல்பாடுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக இந்தக்கட்டுரையில் பகத்சிங்கால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் பற்றியும் அதன் செயல்பாட்டு முறைகளையும் மட்டும் இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பகத்சிங் என்ற இளைஞனைப் பற்றி இந்த தேசம் அறிந்திருக்கும். அறியாமலும் அனேகம் பேர் இருக்கக்கூடும். ஆனால், பகத்சிங்கை அறிந்திருக்கும் சிலர்கூட அவர் ஒரு வெடிகுண்டு வீச்சாளர் என்ற தவறான கருத்தோடு நின்றுவிடுகின்றனர். அவர் ஒரு வீர புருஷன் மட்டுமல்ல; விடுதலை வேட்கையை வேகமாக வெளிப்படுத்தியவர்.
விரைவில் சுதந்திர தாயகத்தை தரிசிக்க புதிய பாதையை தேடியவர். அதற்காக அவர் செய்தது தீவிரமான செயல்கள் மட்டுமல்ல.. இந்திய இளைஞர்களை அணிதிரட்ட அமைப்புகளை உருவாக்கி, அதற்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர் பகத்சிங்.
அவர் முயற்சி எடுத்து உருவாக்கிய அமைப்புகளில் ‘‘நவ ஜவான் பாரத் சபா’’ என்ற அமைப்பு பிரதானமானது. இந்த சங்கம் பகிரங்மாக செயல்படக்கூடிய வெகுமக்கள் அமைப்பாக இருந்தது.
இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் அமைக்கவும் பகத்சிங் காரணமாக இருந்தார்.
1920ம் ஆண்டுகளில் முதல் உலக யுத்தம் முடிந்தவுடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவில் அதுவரை கண்டிராத அளவில் மக்கள் எழுச்சியை எதிர்கொண்டனர். கிலாபத் இயக்கம், ஜாலியன்வாலாபாக், ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா சம்பவம் என மக்கள் எழுச்சி தொடர்ந்தது. அதோடு ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து ஏற்பட்ட நம்பிக்கையின் தாக்கமும் இருந்தது. இந்தச் சூழலில் காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை திடீரென திரும்பப் பெற்றதால் வெகுண்டெழுந்த மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விரக்தியுற்றனர்.
காங்கிரஸ் தலைமை ஒத்துழைப்பு – ஒத்துழையாமை, சுயராஜ்யம் – டொமினியன் அந்தஸ்து என இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு இருந்தது. இக்காலத்தில் 1922ம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடம் சோர்விம் அவநம்பிக்கையும் மேலோங்கி இருந்தது. மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன், தீவிரவாத தேச பக்தர்கள் பலர், பல்வேறு அமைப்புகளை பல இடங்களில் உருவாக்கி மாற்றுப் பாதையை தேடினார்கள். இச்சூழலில்தான் நவ ஜவான் பாரத் சபாவும் உருவானது.
1926 மார்ச் மாதம் நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை தனது 19-வது வயதில் பகத்சிங் உருவாக்கினார். அந்த அமைப்பு சுதந்திர போராட்ட வீரர் சத்தியபால் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது என்ற தகவல் இருந்தாலும் வரலாற்று ஆதாரப்படி பகத்சிங் சொந்த முயற்சியால் இது தொடங்கப்பட்டது என்றே தெரியவருகிறது. பகவதி சரண் வோரா, தன்வந்தி மற்றும் பலர் இதை உருவாக்க பகத்சிங்கிற்கு உதவி புரிந்தனர். இதன் முதல் செயலாளர் பகத்சிங், தலைவர் ராமகிருஷ்ணா, கொள்கை பரப்பு பிரச்சார செயலாளர் பகவதி சரண் வோரா என நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அன்றைய சூழலில் இடதுசாரி மனோபாவம் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் சைபுதீன் கிச்சுலு, சத்தியபால், கேதர்நாத் சேகல், லாலா பிண்டி தாஸ் போன்றவர்கள் இந்த அமைப்பை உருவாக்க ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கினர்.
அமைப்பின் நோக்கம்:
சமூக மேம்பாடு மற்றும் அரசியல் நிலைகளை அந்த அமைப்பின் நோக்கமாக வரையறுத்தனர்.
சுதேசி பொருட்களை வாங்குவது; தேக ஆரோக்கியத்தை காப்பது; சகோதரத்துவம் வளர்ப்பது; இந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படச் செய்வது.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தலைமையில் முழுமையான விடுதலை பெறுவது.
இந்திய இளைஞர்களின் இதயத்தில் தேசபக்தி மற்றும் இந்திய ஒற்றுமை உணர்வை உருவாக்குவது.
வகுப்புவாத சக்திகளின் கருத்துக்களுக்கு மாற்றாக, தொழிலாளர் விவசாயி தலைமையில் பூரண விடுதலை என்ற கருத்தை நோக்கி மக்களை அணிதிரட்டுவது.
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணி திரட்டுவது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமல்ல.. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தும் நாட்டை விடுவிப்பது என்ற வகையில் தங்கள் அமைப்பின் கொள்கை பாதையை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர்.
வகுப்புவாதத்திற்கு எதிராக பகத்சிங் கடுமையாக போராடினார். நவ ஜவான் பாரத் சபாவில் உறுப்பினர் ஆவதற்கு முன்னால், ‘‘என் சமூக நலனை விட இந்த நாட்டின் நலனை முன்னிறுத்தி செயல்படுவேன்’’ என உறுதிமொழி ஏற்க வேண்டும். பெரும் தலைவர்களாக இருந்தால் கூட அவர்கள் வகுப்புவாத செயல்பாட்டில் ஈடுபட்டால் நவ ஜவான் பாரத் சபா கடுமையாக விமர்சனம் செய்தது. தீவிர தேசியவாதியான லாலா லஜபதிராய், பின்னாட்களில் இந்து மகாசபையுடன் நெருங்கி செயல்பட்ட போது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக, பகத்சிங் அதிகமாக மதித்த தலைவர் லாலா லஜபதிராய் ஆவார். ஆனால் அவரின் வகுப்புவாத அணுகுமுறையை பகத்சிங் கடுமையாக சாடினார். மக்களிடையே சமபந்தி இயக்கம் நடத்தி பல தரப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் வேலையை நவ ஜவான் பாரத் சபா செய்தது. காங்கிரஸின் சர்வ மதத்தையும் தாஜா செய்யும் போக்கை நவ ஜவான் பாரத் சபா எதிர்த்தது. சுதந்திரம், மதச்சார்பின்மை, சோசலிசம் அல்லது மக்கள் பங்குபெறும் பொருளாதாரம் என்ற கோஷத்தை நவ ஜவான் பாரத் சபா முழங்கியது.
களப்பணியில் :
நவ ஜவான் பாரத் சபா தனது கொள்கைகளை வரையறுத்த பின்பு நடவடிக்கையிலும் இறங்கியது. லாகூரில் புரட்சியாளர் கத்தார்சிங் சராபா நினைவு தினத்தை அனுஷ்டித்தனர். லாகூர் பிராட்லக் மண்டபத்தில் அவரின் படத்தை திறந்து வைத்து பகத்சிங் மற்றும் பகவதி சரண் வோரா ஆகியோர் பேசினார்கள். அதேபோல் லாகூரில் இளைஞர்களை அணிதிரட்டி வங்க புரட்சியாளர் பூபேந்திரநாத்தை அழைத்து, ‘‘மேற்கில் இளைஞர்கள் இயக்கம்’’ என்ற தலைப்பில் பேச வைத்தனர்.
முதல் தாக்குதலும் முடிவற்ற போராட்டமும்:
1926 மார்ச் முதல் 1927 மார்ச் வரை சபாவின் செயல்பாடுகள் லாகூர் நகரையும் அதைச் சுற்றியுமே இருந்தது. ஆனாலும் இதன் செயல்பாடும் இதற்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கும் பிரிட்டிஷ் அரசின் கண்ணை உறுத்தியது. தீவிர அரசியல் போராட்டத்தையும், கம்யூனிச கருத்துக்களையும் உள்ளடக்கி யதாக இந்த அமைப்பு இருக்கிறது என்று வெள்ளை அரசாங்கம் பார்த்தது. 1927 ஜூலையில் தசராவிழாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பை பயன்படுத்தி நவ ஜவான் பாரத் சபாவை ஒழித்துக் கட்ட வெள்ளை அரசு திட்டம் தீட்டியது. நவ ஜவான் பாரத் சபாவின் அமைப்பாளரும் இளைஞர்களை கவர்ந்தி ழுத்துக் கொண்டிருந்தவருமான பகத்சிங் மீது பழியை போட்டு அவரைக் கைது செய்தது. இதன்மூலம் மக்களிடம் நவ ஜவான் பாரத் சபாவுக்கு இருந்த செல்வாக்கை சீர்குலைத்து விடலாம் என்று வெள்ளை அரசாங்கம் நினைத்தது. சபா, கடுமையான பின்னடைவை சந்தித்தது என்றாலும், பிரிட்டிஷ் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை. பகத்சிங் மிக உயர்ந்த அளவு ஜாமீன் தொகை செலுத்தி (ரூ.80000) விடுதலை பெற்றார்.
1928 மார்ச் மாதம் லாகூரில் ‘தேசியவாரம்’ சபாவால் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஃபிலிப் பிராட், எஸ். ஏ. டாங்கே இருவரும் பங்குபெற்று இந்திய விடுதலை பற்றி எழுச்சிமிகு உரையாற்றினார்கள். அடுத்து கிருதி கிசான் கட்சியின் சார்பில் 1928 ஏப்ரல் 11 முதல் 13 வரை ஜாலியன் வாலாபாக்கில் இளைஞர்கள் மாநாடு நடத்த விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. மாநாடு நடக்கும் சில தினங்கள் முன் பகத்சிங், சோகன்சிங் ஜோஷை சந்தித்து இந்த மாநாட்டில் நவ ஜவான் பாரத் சபாவும் பங்கெடுப்பது பற்றி விவாதித்து, சபாவும் பங்கெடுப்பது என்று முடிவாயிற்று. இந்த மாநாட்டிற்கு லாகூரில் சபா உறுப்பினராக இருந்த கேதர்நாத் சேகல் தலைமையில் இளைஞர்கள் மாநாடு கூடியது. மாநாட்டில் அமைப்பு பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அமைப்பு இனிமேல் ‘‘பஞ்சாப் மாநில நவ ஜவான் பாரத் சபா’’ என்று அழைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதன் தலைமையகம் லாகூரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு மாற்றப்பட்டது. புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது; பல வழிகளிலும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளை திரட்டுவது என கொள்கையில் சில ஷரத்துக்களை சேர்த்தனர். அமைப்பை மாவட்ட, வட்ட, கிராம அளவில் விரிவுபடுத்த திட்டங்களைத் தீட்டினார்கள்.
ஜாலியன் வாலாபாக் மாநாட்டிற்கு பின்பு விவசாயிகள் மத்தியில் நவ ஜவான் பாரத் சபா தனது வேலைகளை தீவிரப்படுத்தியது. பஞ்சாபில் கோதுமை சாகுபடி நடக்காததை கண்டித்து விவசாயிகளை அணிதிரட்டி போராடியது. 1928 மே 23 லாகூரில் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் காங்கிரசில் இருந்த தீவிரவாத தலைவர்கள் சத்தியபால், மஜீத், கேதர்நாத் சேகல் போன்றவர்கள் பங்கு கொண்டு பேசினார்கள். விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தாலும் மக்களை அணிதிரட்டக் கூடிய வேலையையும் கூலி விவசாயிகளை இதில் பங்கு பெறச் செய்ததும் நவ ஜவான் பாரத் சபாதான் செய்தது.
1928 செப்டம்பரில் லியால்பூரில், விவசாயிகள் தொழிலாளர்கள் மாநாட்டை சபா நடத்தியது. இதில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஸ்பார்ட், பிராட்லி மற்றும் டாங்கே நவ ஜவான் பாரத் சபாவின் தலைவர் கேதர்நாத் சேகல், சோசலிச சிந்தனையாளர் ஷபில்தாஸ் ஆகியோர் பேசினார்கள். வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அறைகூவல் விடுத்தனர்.
1928 நவ ஜவான் பாரத் சபாவால் ‘‘ருஷ்ய வாரம்’’ கொண்டாடப்பட்டது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சோவியத்தை ஆதரித்தும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். இந்தியாவில் முதலாளித்துவத்தை அழித்து விவசாய தொழிலாளர் தலைமையில் அரசை அமைப்போம் என்று சபதம் ஏற்றனர்.
இதே காலத்தில் இளைஞர்களுக்கு அரசியல் கல்வி போதிக்கும் பிரசுரங்களை வெளியிட்டனர். இந்த கல்வி குழுவிற்கு லாகூர் தேசிய கல்லூரி முதல்வராக இருந்த ஷபில் தாஸ் பொறுப்பாக இருந்தார். லாகூரில் நவ ஜவான் பாரத் சபா செயல்படுவதற்கும், இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்று, சோசலிச கருத்துக்கள் பரவுவதற்கும் முக்கிய காரணமாக அவர் இருந்தார்.
1928 ஜூன் மாதம் பகத்சிங் மற்றும் சுகதேவ் முயற்சியால் அமைந்த லாகூர் மாணவர் சங்கம் சார்பில் ‘‘மாணவர் வாரம்’’ கொண்டாடப்பட்டது. இதில் ‘‘இளைஞர்களுடன் சில வார்த்தை’’ என்ற பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட்ட சபா, தேச விடுதலைப் போராட்டத்தில் மற்ற பல நாடுகளை போல் இங்கும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று அறை கூவி அழைத்தது.
இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம்:
சபாவின் செயல்பாடுகள் வளர்ந்து வருகிற சூழலில் பகத்சிங், சோசலிச கருத்துக்களை அறியவும் புரிந்துகொள்ளவும் தொடங்கினார். அதே நேரத்தில் இந்தியாவின் இதர பகுதியிலும் இளைஞர்களை அணிதிரட்ட சிந்தித்து உத்தரபிரதேசம் நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார் அங்கு ஏற்கனவே சில குழுக்கள் செயல்பட்டு வந்தன.
ராம் பிரசாத் பிஸ்மில், ஜோகோஷ் சட்டர்ஜி, சசீந்திரநாத் சன்யால் ஆகியோர் கான்பூரில் 1924ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்து இந்துஸ்தான் குடியரசு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். ஆயுதப் புரட்சியின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, இந்திய ஐக்கிய குடியரசை அமைப்பது போன்றவற்றை லட்சியமாக அறிவித்தனர். இச்சங்கத்தின் முதல் நடவடிக்கையாக சந்திரசேகர் ஆசாத் தலைமையில் லக்னோவிற்கு அருகிலுள்ள காகோரி கிராமத்தில் ரயில் மீது தாக்குதல் சம்பவம் நடந்தது. அரசின் பணம் ரயிலில் செல்வதை எடுத்து தங்களது ஆயுதகொள்முதலுக்கு பயன்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கு பணநடவடிக்கை ( ) என்று பெயரிட்டனர். இதைத்தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு சுமார் 25 பேரை கைது செய்தது. சந்திரசேகர் ஆசாத், குண்டன் லால் இருவரும் தப்பிச்சென்றனர். அஸ்வக்ஹுல்லாகான், ராம் பிரசாத்பிஸ்மில், ரோஷன்சிங், ராஜேந்திரலகிரி தூக்கிலிடப் பட்டனர். 4 பேர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 17 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் செயல்பாடு பலவீனம் அடைந்தது.
இந்த அமைப்பை புதியமுறையில் புனரமைக்கவும் அகில இந்திய அமைப்பாக உருவாக்கவும் பகத்சிங் முயற்சித்தார். உத்தரப் பிரதேசத்திலிருந்து பிஜய் குமார் சின்கா, சிவவர்மா, ஜெய்தேவ் பஞ்சாபிலிருந்து பகத்சிங், பகவதி சரண் வோரா, சுகதேவ் ஆகியோர் முயற்சி செய்து 1928 செப்டம்பர் 8, 9 தேதிகளில் இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் என்ற அமைப்பை டெல்லி கோட்லா மைதானத்தில் உருவாக்கினார்கள். இதன் கொள்கையாக சோஷலிசத்தை ஏற்றுக் கொள்வது என்பதை பகிரங்கமாக அறிவிக்க முடிவு செய்தனர். வங்கம் தவிர இதர பிரதேசத்தில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தலைமறைவாக இருந்த சந்திரசேகர் ஆசாத் குண்டன் லால் உட்பட பலரும், இந்த அமைப்பின் உருவாக்கத்திலும், கொள்கை உருவாக்கத்திலும் பங்குகொண்டனர். அமைப்பின் மத்திய கமிட்டியில் கூட்டு செயல்பாடு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த அமைப்பை உருவாக்குவதற்கு பகத்சிங் எடுத்த முயற்சி மிக முக்கிய பங்காக இருந்தது. பகத்சிங்கின் செயல் தளம் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு இதை நோக்கி கூடுதலாக நகர்ந்தது.
1928-ம் ஆண்டில் சைமன் கமிஷன் வருகையையொட்டி நாடு தழுவிய அளவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. சைமன் கமிஷனில் ஒரு காங்கிரஸ்காரர் கூட இல்லை என காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. இந்திய மக்கள் தகுதியை அளப்பதற்கு பிரிட்டிஷ் அரசுக்கு எந்த அருகதையும் இல்லை என அறிவித்து நவ ஜவான் பாரத் சபா எதிர்த்தது.
1928 அக்டோபர் 26 அன்று முடிவெடுத்து 30ம் தேதி லாகூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்தது. 29ம் தேதி, காவல்துறை அதிகாரி மக்கள் கூடுவதற்கு தடை விதித்தார். இதையும் மீறி மக்கள் கூடினார்கள். மக்கள் எழுச்சி கண்டு காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கு கொண்டது. கூடியிருந்த கூட்டத்தின் மீது காவல்துறை கொடூரமாக தடியடி நடத்தியது. இதில் பலர் படுகாயமடைந்தனர். லாலா லஜபதிராய் தலையில் படுகாயம் அடைந்து அடுத்த பதினைந்தாவது நாளில் மரணமடைந்தார். இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் சபா, பொதுக் கூட்டங்களை நடத்தியது. டிசம்பர் 16 1928 அன்று லாகூரிலும், அமிர்தசரஸிலும், ‘காகோரி’ தினத்தை சபா அனுஷ்டித்து புரட்சியாளர்களை கௌரவித்தது.
அடுத்த நாள் காலை டிசம்பர் 17ம் தேதி அன்று லாலா லஜபதிராய் மரணத்திற்கு காரணமான அதிகாரி சௌந்தர் மற்றும் ஒரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். லஜபதிராய் மீதுள்ள மதிப்பாலும், தேசத்தின் மீதுள்ள பற்றாலும் பகத்சிங் இதை செய்தார். இதையொட்டி 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நவ ஜவான் பாரத் சபா தனது தொடர் நடவடிக்கையால் விரிவாகிக் கொண்டே வந்தது. 1928-ல் உத்தரபிரதேசத்தில் மீரட், கராச்சி, சிந்து போன்ற இடத்திலும் மற்றும் ஜலந்தரிலும் சபாவின் அமைப்புகள் உருவாகி எழுச்சியுடன் செயல்பட ஆரம்பித்தது. இந்த சூழலில்தான் பிரிட்டிஷ் அரசு, சுதந்திரப் போரை நசுக்கும் வகையிலும், தொழிற்சங்க உரிமைகளை முடக்கவும் இரு மசோதாக்களை 1929 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டது. ஆக்ராவில் இருந்த பகத்சிங் உடனடியாக லாகூர் சென்று சுகதேவுடன் ஆலோசனை நடத்தி இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்க மத்திய கமிட்டி கூட்டத்தை கூட்டி தனது ஆலோசனையை கூறினார்.
மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உயிர்ச்சேதமற்ற முறையில் வெடிகுண்டை நாடாளுமன்றத்தில் வீசுவது; இதை செய்து முடித்து தப்பிக்காமல் கைதாகி நீதிமன்றத்தில் நமது கருத்தை வெளிப்படுத்துவது; இருவர் செல்வது என முடிவாகியது.
இரண்டு நாள் விவாதித்து முடிவெடுத்தனர். 1929 ஏப்ரல் 8ம் தேதி இரு மசோதாவும் நிறைவேறுகிறது என கவர்னர் ஜெனரல் அறிவிக்கிற போது பகத்சிங்கும், பட்டுகேஸ்வரதத்தும் குண்டு வீசினார்கள். இதையொட்டி கைது செய்யப்பட்டனர்.
லாகூர் சிறைச்சாலையில் ஏராளமான புரட்சியாளர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். பகத்சிங் சிறைக்கு சென்றபிறகு அரசியல் கைதிகளுக்கான உரிமைகோரி பகத்சிங் தலைமையில் அரசியல் கைதிகள் அணிதிரட்டப்பட்டு உண்ணாவிரதம் நடைபெற்றது. 1929 ஜூனில் நவ ஜவான் பாரத் சபா சார்பில் லாகூரில், அமிர்தசரஸில் உண்ணாவிரதத்தின் வெற்றிக்காக பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன் சிங் கலந்து கொண்டு பேசினார்.
நவ ஜவான் பாரத் சபா அகில இந்திய அளவில் பகத்சிங் மற்றும் பட்டு கேஸ்வர தத் தினத்தை அனுஷ்டிக்க அறைகூவல் விட்டது. உண்ணாவிரதம் ஊர்வலம் பொதுக்கூட்டம் என மக்கள், இளைஞர்கள் திரளாக பங்குபெற்றனர். 1929 டிசம்பர் 29ல் லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை சுகாசினி நம்பியார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதம் இருந்து மறைந்த ஜதீன் தாசுக்கு வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சமரச போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
1930-ல் காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அதில் சபா, இளைஞர்களை ஈடுபடச் செய்தது. பஞ்சாப் காங்கிரஸ் கட்சி 1930 பிப்ரவரியில் உண்ணாவிரதம் அனுஷ்டித்தது. இதில் சபாவும் கலந்துகொண்டு லாகூர் சதி வழக்கு நிதி திரட்டியது; காங்கிரஸ் இதை எதிர்த்தது.
1930 மார்ச் 20 நவ ஜவான் பாரத் சபா ‘மீரட் தினம்’ அனுஷ்டித்தது. பிரிட்டிஷ் அரசு, கம்யூனிஸ்டுகள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்ததை கண்டித்து இந்த தினத்தை கடைபிடித்தனர். ஊர்வலம், பொதுக்கூட்டம், நிதி வசூலும் நடத்தினர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நவ ஜவான் பாரத் சபாவிற்கு மக்கள் செல்வாக்கு பெருகியது. காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுத்தாலும் பஞ்சாபிலும் மற்றும் உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதியிலும் மக்கள் சபாவின் பின்னால் அணி திரண்டனர். இது பிரிட்டிஷ் அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பிரிட்டிஷ் அரசு 1930 ஜூன் 23 அன்று நவ ஜவான் பாரத் சபாவை தடை செய்தது. அதன் அலுவலகங்களை சோதனையிட்டு தலைவர்களை கைது செய்தது.
இதைத்தொடர்ந்து 1930ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்கள் போராடினார்கள். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நவ ஜவான் பாரத் சபா சார்பில் ‘மனு கமிட்டிகள்’ அமைக்கப்பட்டன. அந்த கமிட்டிகள் சார்பில் சுமார் 15 மாவட்டங்களுக்கும் மேல் மக்களிடம் 3 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் மனுக்களை பெற்று வெள்ளை அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தனர். 1931 பிப்ரவரி 17ம் தேதி பகத்சிங் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பஞ்சாப் குறிப்பாக லாகூரில் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. ஏராளமான மக்கள் திரண்ட, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடிய கூட்டங்களில் தலைவர்கள் பேசினார்கள். பகத்சிங் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்ய அவர்கள் வலியுறுத்தினார்கள். நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் அதிகமாகியது. ஆனாலும் வெள்ளை அரசு புரட்சியாளர்களை தீவிரமாக அடக்கியது. அதற்கு காங்கிரஸ் தலைமையும் ஆதரவாக இருந்தது. கடைசியில் 1931 மார்ச் 23 அன்று பகத் சிங் உட்பட மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இக்காலத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, பகத்சிங் உள்ளிட்ட மூன்று பேரையும் தூக்கிலிடக் கூடாது என காந்தி கோரிக்கை வைத்திருந்தால், மூன்று பேரையும் மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால், காந்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சட்ட மறுப்பு இயக்கத்தை ஒத்தி வைப்பது; அரசியல் கைதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்களை விடுவிப்பது என்று ஒப்பந்தம் போட்டார். இதை நவ ஜவான் பாரத் சபா மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைவர்களே கடுமையாக விமர்சித்தனர். இதனால் 1931 மார்ச் 25 காங்கிரஸ் மகா சபைக்கு வந்த காந்திக்கு நவ ஜவான் பாரத் சபா கருப்புக் கொடி காட்டியது. அதேநேரத்தில் நவ ஜவான் பாரத் சபா மாநாடு நேதாஜி தலைமையில் கூடியது; காங்கிரஸ் தலைமையை இந்த மாநாடு கண்டித்தது.
1931 ஏப்ரல் 28-ல் நவ ஜவான் பாரத் சபாவின் பஞ்சாப் தலைவர்கள் லாகூரில் சந்தித்தனர். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு கமிட்டி அமைத்தனர். அது உழைப்பாளிகள் இல்லம், கூட்ட அரங்கம், நூலகம் கட்டவும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யவும் திட்டமிட்டது. இந்த திட்டத்தை கூட காந்தி ஏற்கவில்லை.
இதன்பிறகு நவ ஜவான் பாரத் சபாவின் செயல்பாட்டு தளம் சுருங்கியது; சூழல்களும் மாறிவிட்டன. மாற்றுக் கொள்கையில் தெளிவின்மை; நடுத்தர வர்க்க இளைஞர்களின் குணாம்சம்; தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு ஆகியவை சபாவின் பலவீனத்திற்கு காரணமாக அமைந்தது.
மகாத்மா காந்திக்கு சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பேரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு பகத்சிங் இருக்கும்போது அவருக்கு பேரும் புகழும் இருந்தது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமையா குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட பகத்சிங், சிறை வாழ்க்கை காலத்தில் தனிநபர் வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என உணர்ந்து மக்களை திரட்டி போராட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நோக்கத்துடனே சிறையில் இருந்தபடி நவ ஜவான் பாரத் சபாவை இயக்க ஆரம்பித்து வழிகாட்டினார். ஜனங்களுக்காக நடத்தப்படும் புரட்சி பொதுஜனங்களை திரட்டி நடத்தப்படவேண்டும் என்று அறைகூவி அழைத்தார்.
பகத்சிங் ஒரு சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல.. புரட்சியை நடத்துவதற்கு அமைப்பு அவசியமானது; அந்த அமைப்பிற்கு கொள்கை மிக அவசியமானது; அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்தியை வென்றெடுப்பது மிக மிக அவசியமானது என்பதை உணர்ந்து தனது குறுகிய கால வாழ்க்கையில் மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தி சென்றிருக்கிறார்.
– அ.பாக்கியம்
புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல – ஆதவன் தீட்சண்யா
“இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை” சிறுகதையை முன்வைத்து ஆதவன் தீட்சண்யாவுடன் உரையாடல்
நேர்காணல் : கே. பாலமுருகன்
கேள்வி: தங்களின் இந்தக் கதையின் மூலம் சுதந்திரத்திற்கு முன்பான ஒரு வரலாற்றுச் சூழலையும் அக்காலத்து ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களையும் விடுதலைக்கு முன்பாகவே மரணித்த ஒரு போராளியின் இலட்சியவாதத்தைப் பற்றியும் சொல்வதாக நான் உணர்கிறேன். உங்களைப் பொருத்தவரையில் இந்தச் சிறுகதைக் குறித்தான புரிதலும் அனுபவமும் எங்கிருந்து தொடங்கி வளர்கிறது? அந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
பதில்: சென்னைக்கு சென்றிருந்தபோது பாரதி புத்தகாலயம் நாகராஜனும் சிராஜூம் “விடுதலைப்பாதையில் பகத்சிங்” என்கிற புத்தகத்தைக் கொடுத்தார்கள். அந்நூலுக்கு சிவவர்மா எழுதியிருந்த முன்னுரையைப் பேருந்தில் வரும்போது படித்துக்கொண்டு வந்தேன். “சிறையில் பகத்சிங் எழுதிய நான்கு முக்கியப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் அழிக்கப்பட்டுவிட்டன என்பது மிகவும் துரதிருஷ்டவசமாகும்.
(1) சோசலிசத் தத்துவம் (The Ideal of Socialism),
(2) சுயசரிதை,
(3) இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு மற்றும்
(4) மரணத்தின் நழைவாயிலில் (At the Door of Death)
என்பவையே அந்நான்கு புத்தகங்களுமாகும். அவை நான்கும் சிறையிலிருந்து வெளியே கடத்தப்பட்டு ஜலந்தரிலிருந்து குமாரி லஜ்ஜாவதி என்பவரிடம் அனுப்பப் பட்டிருந்தது. அவர் அவற்றை 1938இல் விஜய்குமார் சின்ஹா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார்.
1939இல் உலகயுத்தம் வெடித்தப் பின்பு, சின்ஹா தான் கைது செய்யப்படலாம், தன் வீடு சோதனைக்குள்ளாக்கப்படலாம் என்று பயந்தார். அவ்வாறு சோதனைக்கு உள்ளானால் கையெழுத்துப் பிரதிகள் காவல்துறையினரின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன் நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்படிக் கூறி அவற்றை ஒப்படைத்திருந்தார். 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியபோது, அரசாங்கத்தின் அடக்குமுறை எந்திரம் முழு வீச்சிலிருந்த சமயத்தில் அந்த நண்பர் மிகவும் பயந்துபோய் அக்கையெழுத்துப் பிரதிகளை அழித்துவிட்டார்…” என்று சிவவர்மா எழுதியிருந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மிகுந்த மனத் தொந்தரவுக்கு ஆளாகி வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்தேன்.
அந்நேரத்திற்கு நாகராஜன் கைப்பேசியில் அழைத்தார்.”பகத்சிங் எழுதியப் புத்தகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்கிற செய்தியை என்மனம் ஏற்க மறுக்கிறது தோழரே… அந்த வரிகளுக்கு மேல் படிக்கமுடியாமல் திணறுகிறேன். அந்தப் புத்தகங்களில் பகத்சிங் எதையெல்லாம் எழுதியிருப்பார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று மனம் தவிக்கிறது” என்று அவரிடம் சொன்னேன். படிக்கும்போது தனக்கும் இதே உணர்வுதான் ஏற்பட்டது என்று அவரும் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். சமாதானமடையாத என்மனம் பலவாறாக குழம்பிப் புரட்டியது. அழிக்கப்பட்டு விட்டதாய் சொல்லப்படுகிற அந்தப் புத்தகங்கள் இதோ என்னிடமிருக்கின்றன என்று திடுமென யாரேனும் வந்து சொல்லமாட்டார்களா என்றெல்லாம் அர்த்தமற்று யோசித்தேன். யாரேனும் வரக்கூடும் என்று கற்பிதமான ஒரு விருந்தாளியின் நற்செய்திக்காக காத்திருப்பதைவிடவும் அந்தப் புத்தகங்களை வைத்திருக்கிற ஒருவரை நாமே உருவாக்கினால் என்னவென்று தோன்றியது. அப்படி உருவானவள்தான் நந்தினி. புத்தகங்களை வைத்திருப்பவராக ஒரு நந்தினியை உருவாக்கிவிட முடியுமானால் புத்தகங்களையும் நானே உருவாக்க முடியும்தானே? வாசிக்கப்படாமலே அழிந்துவிட்ட அப்புத்தகங்களை பகத்சிங்கின் இடத்திலிருந்து நானே எழுதுவதெனத் தீர்மானித்தக்கொண்டேன். இன்னின்னதையெல்லாம் பகத்சிங் எழுதியிருந்தார் என்று நானாக எழுதிக் கொள்வதற்கான எல்லையற்ற சுதந்திரம் இருப்பதை உணர்ந்துகொண்டேன். புனைவின் சாத்தியமும் அதுதான். எனவே அடிப்படையான இந்த செய்தியை உட்பொருளாக வைத்துக்கொண்டு அதைச் சுற்றிவரப் புனைந்தேன்.
தலைமறைவுக்காலத்தில் பகத்சிங் ரஞ்சித் என்ற பெயராலேயே விளிக்கப்பட்டார். அந்தப்பெயரே ஒரு புனைவாய் இருக்கும்போது அதிலிருந்து புனைவின் வெவ்வேறு நிறங்களை வடிவங்களை சுவையை உருவாக்கமுடியும் என்றே தோன்றியது. அதற்குப்பிறகு நான் தாமதிக்கவில்லை. வாசிப்புகளினூடாக பகத்சிங் குறித்து எனக்கிருந்த மனப்பதிவுகளின் சித்திரமாக முதல்வரைவை ஒரேமூச்சில் எழுதிமுடித்தேன். பிறகான வேலைப்பாடுகளுக்குதான் சற்றே கூடுதலாக உழைப்பு தேவைப்பட்டது. கதையில் இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்களும் புனைந்து எழுதப்பட்டவையும் ஒன்றுக்கொன்று இசைமையோடு இழையும் வண்ணமாக எழுதுவதன் மூலம்தான் வரலாற்றை ஒரு புனைவாகவும் புனைவை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் நிலை மாற்றம் செய்யவைக்கமுடியும் என்பதை இக்கதையை எழுதியதனூடாக விளங்கிக் கொண்டேன் என்றே சொல்லவேண்டும்.
தவிரவும் ஒரு தொழில்முறை பட்டாளத்தானைப்போல காட்டப்படுகிற பகத்சிங்கின் உருவத்தை நான் எப்போதும் ரசித்ததேயில்லை. சிவகாசியில் காலண்டர் அச்சிடுபவர்கள் கண்டுபிடித்த அந்த பொம்மை முகத்தில் எவ்வித மனவோட்டத்தையும் நீங்கள் அறிய முடியாது. பகத்சிங்கின் அசலான புகைப்படங்களைப் பாருங்கள், அவனை நீங்கள் இதற்குமுன் எங்கோ சந்தித்திருப்பதைப்போன்ற உணர்வு வரும். நம்மில் ஒருவன் என்று அவனை நம்பத்தொடங்கிவிடுவீர்கள். புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல, அவர்கள் இந்தச் சமூகத்தின் அழுத்தத்திலிருந்தும் தேவையிலிருந்தும் உருவாகி வருகிற நமது சொந்தப்பிள்ளைகள் என்பதனை விளங்கப்படுத்துகிற குறியீடாகவும்கூட நான் பகத்சிங்கை உருவகித்துக் கொள்வது இதனால்தான். வெகுசாமான்யனான ஒரு பஞ்சாபி இளைஞன்தான் பகத்சிங் என்ற மகத்தான வெல்லற்கரிய புரட்சியாளனாக உருவானான் என்று காட்டுவதன் மூலம்தான், நம்மாலும் முடியுமென்று எளியமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அப்படியானதொரு பகத்சிங்கைத்தான் ரஞ்சித்தாக எழுத முயன்றிருக்கிறேன்.
கேள்வி: ஆக்க்ஷன் (Action) மூலம் சிறைப்போராளிகளை விடுவிப்பதும் கொடூர அதிகாரிகளைக் கொல்வதும் என நடந்த வேட்டையில் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டார்களா?
உண்மையில் அன்று பயங்கரவாதிகள், அமிதவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் வன்முறை என்பதை மிகக்கடைசியான வழிமுறையாகவே நம்பினார்கள் – பயன்படுத்தினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் காயம் அல்லது உயிர்ச்சேதம் விளைவிக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டினை பாராளுமன்றத்திற்குள் வீசியிருக்க முடியும். அவர்களது நோக்கம் அதுவல்ல. அந்த சபையினுடைய – அதன் வழியே உலகினுடைய கவனத்தை ஈர்ப்பது மட்டுமே அவர்களது நோக்கமாயிருந்த படியால் வெறுமனே சத்தம் எழுப்புமளவிலான குண்டையே வெடிக்கச் செய்தார்கள்.
இன்றைய ஆட்சியாளர்களே தம்மை எதிர்க்கும் சொந்தமக்களை கறுப்புச் சட்டங்களைக் கொண்டு விசாரணைகூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்தி வைக்கும் ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள். தமக்கு தொல்லையென்று கருதக்கூடியவர்கள்மீது தேசவிரோத முத்திரைகுத்தி உள்ளே தள்ளவோ அல்லது என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவோ இந்தத் தேசிய அரசுகள் தயங்குவதேயில்லை. இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்யாத அட்டூழியங்கள் என்று ஏதாவதுண்டா உலகத்தில்? கொன்ற பின்பு நுரையீரலை ஓட்டையாக்கி கடலுக்குள் வீசிவிட்டால் பிணம் மேலே வராது என்கிற கொடிய உத்திகளையெல்லாம் அவர்கள் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்டிருக்கிறார்கள். சானல் 4 வெளியிட்டிருக்கிற வீடியோக்களைப் பார்த்தால் நடந்திருக்கும் கொடுமைகளின் உண்மைநிலவரம் பற்றிய சிறுபகுதியையாவது உணரமுடியும். இதற்கு சற்றும் குறையாதவர்கள்தான் இந்திய ஆட்சியாளர்களும். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திவரும் கொடூரங்கள் மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டவை. கனிமவளங்களை கொள்ளையடிக்க வருகிற பன்னாட்டு நிறுவனங்களுக்காக சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸா போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் நரவேட்டையாடப்படுகின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நடைபெறுகிற நிலப் பறிமுதல், அந்த மண்டலங்களுக்குள் பணியாற்றும் தொழிலாளர்கள்மீதான உழைப்புச்சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பவர்களை ஈவிரக்கமற்று சுட்டுத்தள்ளி தமது இரும்புக்கரத்தின் பலத்தை சொந்த மக்கள்மீதே சோதித்துப்பார்க்கிற ஆட்சியாளர்களை பல திக்கிலும் கண்டுவருகிறோம்.
சொந்த மக்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களது உயிரையும் உடைமையையும் சுயமரியாதையையும் அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களே பறிக்கிற கொடுங்கோலர்களாய் இருக்கிறபோது பகத்சிங் காலத்து அந்நிய – பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாய் இருந்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
உலகம் முழுதுமிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட தங்களது காலனிநாடுகளில் காப்பி தேயிலை ரப்பர் போன்ற பெருந்தோட்டத் தொழில்களுக்கும் சுரங்கம் வெட்டவும் ரயில் பாதை அமைக்கவும் துறைமுகம் உருவாக்கவும் இந்தியாவிலிருந்து பிடித்துச் செல்லப் பட்ட தொழிலாளர்களை பிரிட்டிஷார் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை வரலாற்றுப்பிரக்ஞையுள்ள எந்தவொரு மனிதரும் மறந்துவிடவோ மன்னிக்கவோ முடியாது. ‘‘மலேயாவில் ஒரு தொழிலாளி மனிதக்கழிவை (பீ தான் சார்) உண்ணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானான். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்றுநோய்க் கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை எனத் தீர்ப்புக் கூறினார்… இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு தொழிலாளி பட்டினி போடப்பட்டதால் தனது எஜமானனின் குதிரை லாயத்தில் மரணமடைந்தான்…’’ (மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் பக்-12). ஐந்து ஆண்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் பிடித்துப்போகப்பட்ட பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? எஸ்டேட்டுகளுக்கு செல்லும் மலைப்பாதையெங்கும் அழுகியப் பிணங்களும் எலும்புக்கூடுகளும் பெருகிக் கிடந்ததென்ற அச்சமூட்டும் தகவலை இலங்கையின் மலையகத்திற்கு சென்றவர்கள் பதிவுசெய்துள்ளனர். இதே கொடிய அனுபவம் தமிழகத்தின் ஆனைமலைப்பகுதிக்குச் சென்றவர்களுக்கும் இருந்ததை எரியும் பனிக்காடு நாவல் காட்டித்தருகிறது.
பெண்களை சாக்குப்பைக்குள் நிறுத்தி அதன் உள்ளுக்குள் ஒரு பூனைக்குட்டியையும் போட்டு இடுப்பில் கட்டிவிட, தப்பிக்கும் மூர்க்கத்தில் அந்தப் பூனைக்குட்டி அந்தப் பெண்ணின் அடிவயிறுவரை தன் கூரிய நகங்களால் பிராண்டிக் குதறிவிடுவதாக சிங்கப்பூர் இளங்கோவனின் நாடகம் ஒன்றில் காட்டப்படுவதைப் போன்ற சித்திரவதைகளை பிரிட்டிஷார் உலகெங்கிலும் அரங்கேற்றியிருக்கிறார்கள். சித்திரவதைகளின் கொட்டடியாகத்தான் அவர்கள் சிறைச்சாலைகளை வைத்திருந்தனர் என்பதற்கு அந்தமானின் செல்லுலார் சிறை இன்றைக்கும் சாட்சியமாய் இருக்கிறது. கைது செய்யப்பட்ட மாப்ளா போராட்டக்காரர்களை கூட்ஸ் வண்டிக்குள் அடைத்து மூச்சித் திணறி சாகவைத்து அவ்வளவு பேரையும் பிணமாகக் கொண்டுவந்து கொட்டியதை கேரளத்தின் திரூர் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. இப்படி இந்தியப் பரப்பில் பிரிட்டிசார் நிகழ்த்திய அட்டூழியங்களின் பட்டியல் மிகநீண்டது. (அப்பேர்ப்பட்ட கொடுமைக்கார பிரிட்டனை இன்று மாபெரும் மனிதவுரிமைக் காவல்நாடென நம்பி சிலர் முறையிடும் அவலத்தை என்னென்று சொல்ல?)
ஆகவே, இப்படியான கொடுமைகளை நிகழ்த்திவந்த அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட அன்றைக்கு வேறுமார்க்கங்கள் இல்லாத நிலையில் ‘கணக்குத் தீர்க்கும்’ வழிமுறையை மேற்கொள்ள வேண்டிய தவிர்க்கமுடியாத நிலை போராளிகளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். அப்படியான நடவடிக்கைகளை அன்றைய காலப் பின்னணிக்குள் பொருத்திப் பார்க்காமல் போனால் அது வெறுமனே கொலை என்பதாக குறுக்கிப் புரிந்து கொள்ளும் அபத்தத்திற்கு இட்டுச்சென்றுவிடும். மற்றபடி பொதுமக்களது உயிருக்கும் உடைமைக்கும் சேதத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சியாளர்களை நிர்ப்பந்திப்பது அல்லது சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தூண்டுவது என்ற இழிவான உத்தியை பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் செய்தாரில்லை. ‘‘…அதிகாரப்பூர்வமான பயங்கரவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? புரட்சியாளர்களின் எதிர் பயங்கரவாதத்தால் மட்டுமே இந்த அதிகாரத்துவ அச்சுறுத்தலுக்கு உண்மையான தோல்வியைக் கொடுக்க முடியும்…’’ என்கிற புரிதலுடன்தான் அவர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள்.
‘‘ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகின்றோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த இவன், மிகக் கொடூரமானவன், கீழ்த்தரமானவன், கேவலமானவன், ஒழிக்கப்பட வேண்டியவனாவான். உலகில் உள்ள அரசாங்கங்களிலேயே மிகக்கொடுங்கோன்மை அரசாக விளங்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்ட்டாகச் செயல்பட்ட இவன் இறந்துவிட்டான். ஒரு மனித உயிரின் ரத்தம் சிந்தப்பட்டதற்கு வருந்துகின்றோம். ஆனால் அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாகக் கூடியதமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலி தவிர்க்க இயலாதவையே….’’ சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டது குறித்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் 1928 டிசம்பர் 18ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படுகிற இந்த வாசகங்கள் நமக்குப் போதுமான விளக்கங்களைத் தந்துவிடுகின்றன.
கேள்வி: “சனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?” இந்த வார்த்தையை நீங்கள் யாரை நோக்கி முன் வைக்கிறீர்கள்?
பதில்: புரட்சிகரத்தன்மைக்கு உரிமைகோருகிற பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் கூட ஆண்களின் சபைகளாக தேங்கிக் கிடப்பது குறித்த எனது அதிருப்தியை நான் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். மொழியால் செயலால் இது ஆண்களின் அமைப்பு என்கிற கருத்து தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது. அவை ஆண்மையவாத சிந்தனைகளால் அழுகிப் போயிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே பெண்கள் அமைப்புகளுக்கு வெளியே இருக்கிறார்கள்.
கட்சிகளால் அணிதிரட்டப்பட்டிருக்கிற பெண்கள், கட்சியின்/ இயக்கத்தின் பொத்தாம் பொதுவான முடிவுகளை பெண்களிடம் கொண்டு செல்வதற்காகத் தான் பயன்படுத்தப் படுகின்றரே தவிர, பெண்களின் தனித்துவமான நிலைமைகளையும் தேவைகளையும் கட்சிக்குத் தெரிவித்து அவை குறித்து முழுகட்சியின் கவனத்தையும் செயல்பாட்டையும் கோருகிறவர்களாக செயல்படுவதற்கான சாத்தியங்கள் அரிதாகவே தென்படுகின்றன. இந்த ஒருவழிப்பாதை அணுகுமுறையால் பெண்களின் கருத்தியல் பங்களிப்பைப் பெறாமலே ஆண்வயப்பட்ட ஒற்றைத்தன்மையுடன் இயங்குகின்ற அமைப்புகளே பெரும்பான்மை. பெருவாரியான ஆண்களுக்கிடையில் பிரதிநிதித்துவ அடிப்படையில் போனால் போகிறதென்று அனுமதிக்கப்பட்டவர்களாக பெண்கள் நடத்தப் படுகின்றனர். இதனால் அவர்கள் மிகத் தாழ்ந்த ஸ்தாயியில் பேசுகின்றனர். அல்லது பெரும்பான்மைக்கு கீழ்ப்படிந்து / ஒத்துழைத்து பிரச்னையில்லாதவர்களாக சில மேடைகளை பகிர்ந்துகொள்கின்றனர்.
பெண்கள் பொதுவாழ்வில் பங்கெடுப்பதற்கரிய சாதகமான நிலைமைகளை உருவாக்குவதற்கான கருத்தியல் போராட்டத்தை ஆண்களிடம் நடத்துவதற்கோ பாலின சமத்துவத்துவம் என்பதில் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்வதற்கு தனது அணிகளை தயார்படுத்துவதற்கோ இங்குள்ள இடதுசாரி இயக்கங்களே வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்ற நிலையிருக்கும்போது மற்றக்கட்சிகளைப் பற்றி நான் சொல்வதற்கொன்றுமில்லை. மார்க்சீய சொற்றொடர்களையே பிரயோகித்து பாலின சமத்துவத்தை மறுக்கிற சில இடதுசாரிகளின் சாமர்த்தியம் குறித்து நான் அச்சம் கொண்டதுண்டு. ஆகவே பெண்கள் பங்கேற்காத எந்தப் புரட்சியும் முழுமையடையாது என்று லெனின் எச்சரித்திருப்பதை திரும்பத்திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது- நமக்கும் மற்றவர்களுக்கும். அதனால்தான் ‘‘பூமியின் மீதிலே அடிமையொருவன் இருக்கும் வரை/ நீங்கள் சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் என்று கூறு இயலுமா…’’ என்கிற ஜேம்ஸ் ரஸ்ஸல் லொவல் என்பவரின் கவிதைவரிகளை தன் குறிப்பேட்டில் கவனப்படுத்தும் பகத்சிங் நிச்சயம் பாலின அடிமைத்துவத்திற்கும் எதிரானவனாகத்தான் இருப்பான்- இருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினேன்.
பகத்சிங் தன் நண்பன் சகதேவுக்கு காதல் குறித்து எழுதிய கடிதத்தின் வாசகங்களும் கூட என்னை இம்முடிவுக்கு இட்டுச்சென்றதற்கு காரணமாய் இருக்கலாம். ஆகவே கதவுக்குப் பின்னிருந்து பேசும் பதுமைகளென பெண்களை உருவகப்படுத்தி ஒடுக்கிவந்தக் காலத்தில், அரசியல் போராட்டத்தில்- பொதுவாழ்வில் பங்கெடுக்க பெண்களும் முன்வரவேண்டும் என்ற பொருளில் “சனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?” என்று ரஞ்சித் சொல்வதாக எழுதினேன். இது பகத்சிங் மற்றும் அவனது தோழர்கள்மீது வலிந்து கூறப்பட்ட எனது விருப்பமல்ல. 6.4.1928 அன்று வெளியிடப்பட்ட அவர்களது வெகுசன அமைப்பான ‘நவஜவான் பாரத் சபா என்னும் இளைஞர் அமைப்பின் கொள்கையறிக்கை இவ்வாறு நிறைவுபெறுகிறது- ‘‘ஒரு தேசத்தின் உருவாக்கம், தங்களது சொந்த சுகங்களையும் நலன்களையும் காட்டிலும் தங்களது சொந்த உயிர்களையும் தாம் நேசிப்பவர்களின் உயிர்களைக் காட்டிலும் தங்களது நாட்டுநலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள் பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது…’’
கேள்வி: “யங் இந்தியாவில் வெளியான கட்டுரைகளின் வழியே புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கும் அரசின் அத்துமீறல்களுக்கு தனது ஒப்புதலை காந்தி பகிங்கரமாக வெளிப்படுத்தினார், இதன் மூலம் போலிஸின் அட்டூழியம் தொடங்கியது”. உங்களின் இந்தச் சிறுகதையின் ஒட்டுமொத்த பகுதியிலிருந்து காந்தி எவ்விதமான அடையாளத்தைப் பெறுகிறார்? அவரின் அரசியல் செயல்பாடுகள் மீதான தங்களின் மதிப்பீடு என்ன? மேற்கண்ட காந்தியின் ஒப்புதல் புரட்சிக்காரர்களை ஒடுக்கியதா?
பதில்: காந்தியின் அகிம்சாவழிக்கு முரணாக வெளிப்படும் வன்முறையைக் கையிலெடுத்ததால்தான் கடைசிவரை காந்தி பகவத் சிங் மீது எதிரான கொள்கையைக் கொண்டிருந்தார்? தாங்கள் கோரிய சீர்த்திருங்களும் ஏற்கப்படாத நிலையில் ‘‘ எரிச்சலடைந்தக் குழந்தை ஒன்றின் வீம்பான எதிர்ச்செயலைப்போலவே’’ காங்கிரஸ் பூரண விடுதலைக் கோரிக்கையை எழுப்பியது என்பதே புரட்சியாளர்களின் மதிப்பீடு. எனவே காங்கிரஸ் கோரிய விடுதலையின் எல்லைகள் மிக்குறுகியவை. இந்தியச் சுதந்திரம் எவ்வகைப்பட்டதாக இருக்கவேண்டும், அதற்கானப் போராட்டம் எத்தகைய வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும், போராட்டத்தின் தலைமை யார், நேசஅணிகள் எவை என்பவற்றின் மீதான நிலைப்பாடுகளில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்கள் காந்தியிடமிருந்து வேறுபடுகின்றனர். ‘‘நாம் தொழிலாளர்களை விடுதலைப் போராட்டத்தினுள் திருப்பிவிடக்கூடாது. ஆலைத்தொழிலாளர்களை அரசியல்ரீதியாகப் பயன்படுத்துவது அபாயகரமானது’’ என்கிற கருத்து காந்திக்கு தொடக்கம் முதலே இருந்தது. ‘‘உண்மையான புரட்சிகர ராணுவத்தினர் கிராமங்களிலும் தொழிற்சாலைகளிலுமே உள்ளனர். விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள்…’’ என்பது பகத்சிங்கின் கருத்தாக இருந்தது. ஆகவே காந்திக்கும் பகத்சிங்குக்கும் இடையே விரிகின்ற முரண் அரசியல்ரீதியானது.
காந்தி என்றால் அகிம்சை என்கிற ஒரு சித்திரம் மட்டுமே திரும்பத்திரும்ப காட்டப்படுகிறது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு தோற்றம். இம்சை என்பது ஆயுதம் கொண்டு வதைப்பது மட்டுமல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் காந்தியின் அகிம்சை எந்தளவிற்கு மற்றவர்களுக்கு இம்சையாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். தன்னையே வருத்திக்கொள்ளும் மனவலிமையின் மூலம் ‘‘எத்தனை ஓ’டயர்களையும் ரீடிங்குகளையும் இர்வின்களையும் அவரால் இந்தியாவின் நண்பர்களாக மாற்ற முடிந்தது?’’ என்கிற கேள்வி முக்கியமானது. அஹிம்சை என்பதில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்காக இந்தநாட்டின் கோடானகோடிப் பேரின் போர்க்குணத்தையும் தியாகத்தையும் உயிர்ப்பலிகளையும் வீணடித்து பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தை நீட்டிக்க வைத்தக் குற்றத்தில் காந்திக்குள்ள பங்கை நாம் பரவலாக பேசுவது கிடையாது.
‘மீரட் சதி வழக்கு, லாகூர் மற்றும் பெஷாவர் அட்டூழியங்களின் சூத்ரதாரியான வைஸ்ராய்’ இர்வின் 1929 டிசம்பர் மாதத்தில் சென்ற சிறப்பு ரயிலின் அடியில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. ஆனால் அவர் தப்பித்துவிட்டார். வைஸ்ராய் தப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி சொன்ன காந்தி புரட்சியாளர்களைக் கண்டித்து வெடிகுண்டின் வழிபாடு என்று கட்டுரை எழுதினார். தொடர்ந்தும் அவர் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் புரட்சியாளர்களை தனிமைப்படுத்த முயற்சித்துக் கொண்டேயிருந்தார். புரட்சியாளர்கள் உள்ளிட்டவர்களாலும் இந்த நாட்டின் தலைவரென ஏற்கப்பட்ட அவரிடமிருந்து வெளியான இவ்வகையான கருத்துகள்தான் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிடப்படுவதை தடுப்பதில் காந்திக்கு மனத்தடையை ஏற்படுத்தியிருந்தது. அவர் தன்குரலை உரிய தொனியில் உரிய நேரத்தில் ஏன் எழுப்பவில்லை என்பதற்கான பதில் வெற்றிடமாக உள்ளது. ஆனால் அதில் மர்மமொன்றும் இல்லை. புரட்சியாளர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தீர்த்துக்கட்டியதன் மூலம் தனது அரசியலுக்கு எதிரான- கடக்கமுடியாத தடைகள் நீங்கிவிட்டன என்கிற தற்காலிக நிம்மதிகூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
கேள்வி: ஆனால், ரஞ்சித் இந்தக் கதையில், அவனுடைய நான்கு புத்தகங்களும் அச்சாகிய பிறகு, அதைக் காந்திக்கும் அனுப்பி கருத்து கேட்குமாறு சொல்லும் இடம் நெருடலை ஏற்படுத்துகிறது. ரஞ்சித்திற்கு முற்றிலும் முரணான ஒரு காந்தியிடம் ஏன் ரஞ்சித் தனது புத்தகங்களைக் காட்டி கருத்துக் கேட்க வேண்டும் என்கிற ஆவலைக் கொண்டிருக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன?
பதில்: “ச்சே.. அந்தாள் மூஞ்சில ஜென்மத்துக்கும் முழிக்கமாட்டேன்..” என்கிற இன்றைய தலைவர்களின் வறட்டுகௌரவமும் வெற்றுவீம்பும் காந்திக்கும் பகத்சிங்குக்கும் இருந்திருக்க வேண்டுமா என்ன? தனிநபர்கள் என்ற வகையில் அவர்களுக்கிடையே எவ்விதப் பகைமையோ காழ்ப்போ இல்லைதானே? மாற்றுக் கருத்துள்ளவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுகிறவரல்ல பகத்சிங். அவர் மாற்றுக் கருத்துக் கொண்டோரிடம் தொடர்ச்சியாக உரையாடலை நடத்திக் கொண்டிருந்தார். ‘வெடிகுண்டின் வழிபாடு’ என்ற காந்தியின் கட்டுரைக்கு ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்று பகவதி சரண் வோரா எழுதிய மறுப்பாகட்டும் அல்லது காந்தி-இர்வின் ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவிருந்த நேரத்தில் சுகதேவ் காந்திஜிக்கு எழுதிய பகிரங்கக் கடிதமாகட்டும் – இவையெல்லாம் இந்த உரையாடலின் பகுதிகளே. புரட்சி என்பதன் பொருளை அதன் முழுஅர்த்தத்தில் வெகுமக்களும் இந்த சமூகத்தின் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய பகத்சிங் தன் நூல்கள் மீதான காந்தியின் அபிப்ராயத்தை எதிர்வினையை அறிந்துகொள்வதில் ஆர்வமுடயவராகவே இருந்திருப்பார் என்ற நம்பிக்கையிலேயே அவ்வாறு எழுதியிருக்கிறேன். எதிரும் புதிருமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த அதேவேளையில் பரஸ்பரம் மரியாதையுடன் இருக்கிற நல்லமரபுகள் இந்திய அரசியலில் இருந்திருக்கின்றன.
கேள்வி: “கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது” வரலாற்றில் நாம் எத்தனையோ போராளிகளை இழந்துவிட்டோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்கள் அரசியல்/அதிகாரப் பலத்தால் ஒடுக்கப்படும்போது ஒரு போராளி அந்தச் சமூகத்திலிருந்து பிறப்பான் எனச் சொல்லப்படுவதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? ஒரு போராளியின் கனவு ஏகாதிபத்தியங்களை எந்த வகையில் உடைக்க நினைக்கிறது? அவனது உயிரைப் பறிப்பதிலா அல்லது அவனது அதிகாரத்தைப் பலவீனமாக்குவதிலா? ஏதாவது ஒரு வரலாற்றை முன்வைத்தும் சொல்லலாம்.
பதில்: “கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது” என்ற வரிகளை நானாகத்தான் எழுதினேன். பகத்சிங் மற்றும் அவனது தோழர்களைப் பொறுத்தவரை இந்த வரிகள் பொய்யில்லைதானே? அந்த ஆளுமைகளின் குறுக்கீடும் செல்வாக்கும் வெவ்வேறு தளங்களில் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் இன்றளவும் நம்மை வழிநடத்தத்தானே செய்கின்றன? அவர்கள் உருவாக்கிய இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் உணர்வினில் கலந்துவிட்ட முழக்கமல்லவா?
“மாலைநேரத்தில் நெருப்புமூட்டிக் குளிர்காயும் விவசாயியுடன் வட்டமாய் அமர்ந்து அவ்விவசாயி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் முயற்சி செய்திருக்கிறாரா? ஒரு மாலைப் பொழுதையாவது ஒரு ஆலைத்தொழிலாளியுடன் கழித்ததுண்டா? தனது உறுதிமொழிகளை அத்தொழிலாளியுடன் அவர் பகிர்ந்து கொண்டதுண்டா?” என்ற கேள்விகளை காந்தியைப் பார்த்து கேட்பதற்கும் முன்பாக பகத்சிங்கும் அவரது தோழர்களும் முதலில் தங்களைத்தாங்களே கேட்டுக் கொண்டார்கள். போராளிகள் அந்தரத்திலிருந்து வருவதில்லை, அவர்கள் தங்களைப் போன்ற சாமான்யர்களிலும் சாமான்யர்களிலிருந்துதான் உருவாகிறார்கள் என்பதை அறிந்தேயிருந்தனர். குறிப்பாக, தாங்கள் மகாத்மாக்கள் அல்ல என்பதில் தெளிவாயிருந்தனர். அவர்கள் சாமான்ய மக்களுக்குள் தண்ணிக்குள் மீனாகத் தங்கி, அவர்களது நலனுக்காகப் போராடுவதையே நோக்காகக் கொண்டிருந்தார்கள். உள்ளூர் மட்டத்திலான உணர்வுகளை சர்வதேசப் போக்குகளுடன் இணைக்கவும் அவர்கள் தவறவில்லை.
தனியொரு மனிதனாய் இருந்து தனது மூளையிலிருந்து உதிக்கிற குழப்பங்களுகேற்றபடியெல்லாம் மக்களை மந்தைபோல நடத்துகிறவர்களை போராளி என்பதாக வரலாறு பதிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு வேறுபெயர் இருக்கிறது. கண்ணியமானதொரு வாழ்வு குறித்த வெகுமக்களது விருப்பார்வங்களை உணர்ந்து அவற்றை ஒருங்கிணைத்து, அடைவதற்கான வழிமுறைகளையும் அமையவிருக்கும் புதிய சமூக அமைப்பிற்கான வரைவையும் வளர்த்தெடுப்பவர்களாகிய போராளிகள் எல்லாக்காலத்திலும் உருவாகித்தான் வருகிறார்கள். அப்படியான போராளிகள் தங்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் பின்னாளில் தகுந்த வெகுமானம் கிடைக்கும் என்று ஒருபோதும் ‘கணக்குப்பண்ணி’ போராடுவதில்லை. களத்திலே நிற்பதென்று முடிவான பிறகு சமரசமோ சரணாகதியோ இன்றி போராடுகிறார்கள். அதிலே உயிர்த்தியாகம் உள்ளிட்ட எதையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ‘தியாகிகள் சிந்தும் செங்குருதி உணவிலேயே இளம் சுதந்திரப்பயிர் செழித்து வளரும்’’ என்று நம்புகிற – போராடுகிற- தியாகம் செய்கிற பரம்பரை ஒன்று எப்போதும் இயங்கும்.
‘ஒரு நிராதரவான மனநிலை சமூகத்தைப் பீடித்திருக்கும்போது, அழிவைத் தரக்கூடிய அந்த மனச்சோர்வை வெற்றிகொள்வதற்காக – ஓர் உண்மையான தியாக உணர்வை ஊட்டுவதற்காக’ புரட்சியாளர்கள் போராட்டங்களின் முன்வரிசையில் நிற்கிறார்கள். முன்வரிசையில் என்றால், மக்களைத் திரட்டிக்கொண்டுதான்.
புரட்சியாளர்களின் நடவடிக்கை என்னமாதிரியான விளைவுகளை உருவாக்குகின்றன என்றால், ‘‘ஒடுக்குவோரின் மனதில் பயபீதியை உண்டாக்குகிறது. ஆனால், ஒடுக்கப்படும் மக்களிடத்திலோ அது பழிவாங்குவதற்கும் மீட்சிக்குமான நம்பிக்கையை விதைக்கிறது. ஊசலாட்டத்தில் இருப்பவர்களுக்குத் துணிவையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. பயங்கரவாதமானது ஆளும் வர்க்கமே வலிமை வாய்ந்தது என்ற மாயையைத் தகர்த்தெறிந்து உலகத்தின் பார்வையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் அந்தஸ்தை உயர்த்துகிறது…’’ இந்த அடிப்படைக்குள் பொருந்தி வருகின்றதா என்று உலகத்தின் எந்தவொரு அமைப்பையும் நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.
கேள்வி: “ஏகாதிபத்தியத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ஒவ்வொரு இந்துவும் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை ஒடுக்குகிறான்” – சிறுகதையிலிருந்து. இதைப் பின்காலனிய மனோபாவம் எனச் சொல்லலாமா அல்லது காலனியக் காலக்கட்டத்தில் உக்கிரமாக உருவான சாதி அமைப்பு எனச் சொல்லலாமா? இந்து என்கிற அடையாளம் ஏகாதியபத்தின் இரண்டாம்தர அதிகார தரகர் என அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா? எது நீங்கள் கதையின் வழி முன்வைக்கும் இந்து?
பதில்: உண்மையில் இந்து என்று ஒருவர் எந்தகாலத்திலும் இருந்தது கிடையாது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு மாயை. எவரொருவர் பௌத்தவராகவோ சமணராகவோ பார்ஸியாகவோ இஸ்லாமியராகவோ கிறித்தவராகவோ இல்லையோ அவர்தான் இந்து. இப்படியொரு வெட்கங்கெட்ட விளக்கம் வேறு எந்த மதத்தவருக்காவது உண்டா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். புராதன இந்தியப்பரப்புக்குள் நிலவிய பன்முகப்பட்ட வழிபாட்டுமுறைகளின் தொகுப்பை ஒரு பூர்வீக மதம் என்று வகைப்படுத்துவதாயிருந்தால் ஆரியர்களது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதம்தான் இந்தியாவிற்கு முதல் அன்னிய மதம். இந்த வைதீக மதத்திற்கு வெளியே வேறு வழிபாட்டு மரபுகள் இருந்தன. வைதீக மதத்தின் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக அவைதீக மதங்கள் தோன்றின. இவை எல்லாவற்றிலிருந்தும் சாத்தியமானதையெல்லாம் உறிஞ்சிக் கொண்ட ஒரு கலவைதான் இன்றைக்கு இந்துமதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு மதம் என்பது ஒருவருக்கு முற்றுமுடிவான அடையாளமல்ல.
நான் ஒரு இந்து என்று ஒருவர் சொன்னால், நாங்களும் அந்த மசுருதான். உன் சாதியச் சொல்லு… என்பதுதான் அடுத்தக் கேள்வியாக இருக்கிறது. அதாவது சாதிதான் இந்துமதத்திற்கு அடிப்படை. அந்த சாதியடுக்கு அமைந்துள்ள விதமே ஏற்றத்தாழ்வானது, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. சாதியடுக்கின் உச்சியில் தம்மை இருத்திக்கொண்ட பார்ப்பனர்கள் எல்லாச்சாதிகளையும் சுரண்டுவதற்கான அதிகாரங்களும் உரிமைகளும் கொண்டிருந்தனர். அதாவது எவருடைய உழைப்பையும் உடைமையையும் அபகரித்துக்கொள்வதற்கான அதிகாரம். அவர்களுக்கு அடுத்த நிலையிலான சாதியினர் தமக்கு அடுத்த நிலையிலிருந்த சாதிகளைச் சுரண்டினர். இந்த சுரண்டல் அமைப்பின் மொத்தச்சுமையையும் இழிவையும் பூர்வகுடிகளாகிய தலித்துகள் ஏற்கவேண்டியுள்ளது.
சமூகவளங்களைப் பகிர்ந்துகொள்வதில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வை / சுரண்டலை நியாயப்படுத்தவும் போட்டியாளர்களை அப்புறப்படுத்தவும் தீட்டு புனிதம் என்கிற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு ஒரு கடவுளாம்சம் தருகின்ற புராணங்களும் கட்டுக்கதைகளும் தேவைப்பட்டன. அவற்றை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கான சட்டதிட்டங்கள் – உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து முதல் உச்ச நீதிமன்றம் வரை- நிறுவப்பட்டுள்ளன. எனவே இங்கு சுரண்டல் என்பதோ ஒடுக்கு முறை என்பதோ புதிதல்ல. அதிகாரப்பூர்வமான சிறைகள் உருவாகும் முன்பே இங்கு சேரிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இப்படி ஒருவரையொருவர் ஒடுக்குவதற்கான தத்துவப் பின்புலத்தை வழங்கக்கூடியதாய் இந்துமதம் இருப்பதை மிகச்சரியாய் அம்பலப்படுத்திய அம்பேத்கர் அந்த இந்தமதத்தை விட்டு வெளியேறுவதுதான் சுதந்திரமாக வாழ விரும்பும் ஒருவர் செய்ய வேண்டிய முதற்பணி என்றார்.
இந்திய ஆதிக்கச்சாதியினர் ஒருபக்கம் இந்தியவாதம் பேசிக்கொண்டே மறுபக்கத்தில் காலனியாட்சியாளர்களின் இளையபங்காளிகளாகவும் சேர்ந்து கொண்டனர். காலனியாதிக்கம் தன்தேவையிலிருந்து உருவாக்கிய கல்வி, தொழில், அரசுப்பதவிகள் போன்றவற்றை கையகப்படுத்தி அதிகாரத்தின் ஒருபகுதியாகி நாட்டுமக்களை தம்பங்குக்கு சுரண்டினர். மக்களது போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால் காலனியாட்சியாளர்கள் வெளியேற நேர்ந்தபோது அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட இவர்கள் சுதந்திர இந்தியாவின் வளங்களைத் தின்று இன்று கொழுத்திருக்கிறார்கள். உலகமயம் என்ற போர்வையில் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து சுரண்டலைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்தச் சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக கொடிய கறுப்புச்சட்டங்களை வகுக்கிறார்கள். முதலாளித்துவமும் பார்ப்பனீயமும் நமக்கு முதன்மை எதிரிகள் என்ற அம்பேத்கர் சொன்னதன் முழுப்பொருளை முன்னெடுத்துச் செல்வதற்கான இயக்கங்கள் இன்றையத் தேவை.
கேள்வி: “இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் மார்க்சின் பிரகடனத்தை மறுப்பவர்களாக இந்திய உழைப்பாளிகளை இந்துமதம் பிறப்பிலேயே வடிவமைத்து விடுகிறது”- சிறுகதையிலிருந்து மார்க்சின் இந்தப் பிரகடனத்தின் அர்த்தம் என்ன? (இழப்பதற்கு ஒன்றுமில்லை). இந்திய உழைப்பாளிகள் இதை மறுப்பதனால் என்ன ஆகுகிறார்கள்? இந்துமதம் பிறப்பிலேயே எப்படி இந்த மனநிலையைக் கட்டமைக்கிறது?
பதில்: அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகுண்டு என்பது மார்க்சின் பிரகடனம். அடையப்போகிற பொன்னுலகில் எங்கள் சாதிக்கு தனித் தெருவுண்டா தனி சுடுகாடுண்டா தனி கோயிலுண்டா என்பதுதான் இந்தியர்களின் பிரச்னையாக இருக்கிறது. பூகம்பத்திலும் சுனாமியிலும் போரிலும் வீடுவாசல் சொத்துசுகம் குடும்பம் அவ்வளவையும் இழந்துவிட்டப் பின்னும் சாதியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிற வேதாளமனம் இந்தியருக்கு இருக்கிறது. சாதிப்பெருமை என்ற கற்பிதத்தை துறக்கமுடியாத இந்த மனநோயாளிகள் ஒவ்வொரும் மற்றவருக்கு அடிமைவிலங்கைப் பூட்டிவிட்டு தம்மையும் கூண்டுக்குள் அடைத்து பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். மொத்த பேருக்குமான சாவிக்கொத்து பார்ப்பனர் இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. எந்தச் சூழலிலும் இழக்கக்கூடாததென இவர்களுக்குள்ள சாதிப்பெருமிதம் இயல்பிலேயே மற்றவர்களோடு ஒரு வர்க்கமாக அணிதிரள முடியாமல் தடுத்துவிடுகிறது. சாதி அப்படியே இருக்கட்டும், இப்போதைக்கு வர்க்கமாக திரட்டிவிடுவோம் என்று எவரேனும் சொன்னால் அவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று அர்த்தம்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் என்று ஒரு இடதுசாரிக் கட்சி இருப்பதை தாங்களும் அறிவீர்கள். அதன் தமிழ்நாட்டுப் பிரிவில் பெரும்பாலும் தேவர் சாதியினர்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய நிர்வாகி ஒருவர் அங்கு குழுமியிருந்த தனது கட்சியினரைப் பார்த்து பழக்கதோஷத்தில் ‘டியர் காம்ரேட்ஸ்’ என்று விளித்திருக்கிறார். காம்ரேடாவது கத்திரிக்காயாவது, டியர் காம்ரேட்ஸ் என்பதை ‘தேவரினச் சிங்கங்களே…’ என்று தமிழில் மொழிபெயர்த்தார்களாம். மார்க்சீயத்திற்கும் அந்தநிலை வந்துவிடக்கூடாது என்று குறைந்தபட்சம் நாம் கூட்டாக கவலையாவது படுவோமே – ரஞ்சித்தைப்போல.
கேள்வி: காந்தி ஏன் தீண்டத்தகாதவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்? (20.09.1932)? அவருடைய அரசியல் புரிதல் சிறுபாண்மை இனத்தை ஒடுக்கியது என நினைக்கிறீர்களா?
பதில்: யார் சாகும்வரை அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்வியை சற்றே திருத்தினால் நமக்கு இதற்கான விடை மிகவும் எளிமையாகவே கிடைத்துவிடும். தலித்துகளை தொடர்ந்து இந்துக்களின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக – தலித்துகள் தமக்கான பிரதிநிதிகளைத் தாமே சுயமாக தேர்வு செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். இந்துக்களின் தயவைப் பெறுகிற ஒருவர்தான் தலித்துகளின் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். தலித்துகளின் அரசியல் உரிமைகளை இந்துக்களுக்கு கீழ்ப்பட்டதாக மாற்றியமைப்பதில் அவர் அடைந்த வெற்றி தேசத்தந்தை என்கிற முகமூடியை அணிந்துகொண்டிருந்த ஒரு இந்துசனாதனியின் நயவஞ்சகத்திற்கு கிடைத்த வெற்றி.
கேள்வி: உங்களின் இந்தச் சிறுகதை குறித்து எழுப்பப்பட்ட எதிர்வினைகள், வாசகப் பார்வையைப் பற்றி சொல்லுங்கள்.
பதில்: போதுமான கவனம் பெற்றிருக்கிறது அல்லது இல்லை என்று சொல்வதற்கு எந்த அளவுகோலும் இங்கு இல்லை. ஆனால் பல நண்பர்கள் கதையைப் பற்றி ஏதோவொரு வகையில் விவாதித்தார்கள். குறிப்பாக பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து கதையில் வரும் பகுதியை சுட்டிக்காட்டி அது உண்மையா என்று பலரும் கேட்டார்கள். கதையை எழுதிக் கொண்டிருக்கும் போதே பகத்சிங் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh- “Secrets unfurled by an Intelligence Bureau Agent of British-India” என்ற புத்தகத்தைப் பற்றிய அறிமுகக்குறிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜெண்ட்டாக இருந்த தலிப்சிங் அலகாபாதி என்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையும் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள ஆவணங்கள் சிலவற்றைத் தரவுகளாகக் கொண்டும் குல்வந்த் சிங் கூனூர் மற்றும் ஜி.எஸ்.சிந்த்ரா ஆகியோர் எழுதிய இப்புத்தகம் 2005 அக்டோபர் 28ல் வெளியாகியுள்ளது. ( தற்போது இப்புத்தகம் மறுபதிப்பு செய்யப் பட்டுள்ளது. Unistar Books Pvt. Ltd, S.C.O. 26-27, Sector 34 A, Chandigarh – 160022, ph: 0172 5077427, 5077428)
‘‘பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் தூக்கிலிடும் நடவடிக்கைக்கு ஆபரேசன் ட்ரோஜன் ஹார்ஸ் என்ற சங்கேதப் பெயரிடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மக்களிடமிருந்த பெரும் கொந்தளிப்பின் காரணமாக, காலை எட்டு
மணியளவில் தூக்கிலிடும் வழக்கத்திற்கு மாறாக 1931 மார்ச் 23 மாலை 7.15 மணிக்குதான் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்ட மூவரும் உயிர் பிரியும் முன்பே கழுத்தெலும்பு முறிக்கப்பட்ட நிலையில் கீழிறக்கப்பட்டு மரக்கட்டைகள் நிரம்பிய ஒருலாரியில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் ஒரு பிணமும் லாரிக்குள் ஏற்றப்பட்டது. அது அவர்களைத் தூக்கிலிட்ட தொழிலாளியினுடையது. தூக்கிலிடும் வேலையை முடித்ததற்கு சன்மானமாக அவரை பிரிட்டிஷார் கைது செய்த மிகக்கொடூரமான முறையில் கொன்றுவிட்டிருந்தார்கள். பிறகு லாரி லாகூர் கண்டோன்மென்ட்டுக்கு சென்றிருக்கிறது. அப்போதைய பஞ்சாப் கவர்னரின் தனிஉதவியாளராக இருந்த சாண்டர்சின் மாமனாரின் ஏற்பாட்டில் அங்கு காத்திருந்த சாண்டர்ஸ் குடும்பத்தார் மூவரையும் ஆத்திரத்துடன் சுட்டு பழிதீர்த்துக் கொண்டனர்… தூக்கிலிடப் பட்டவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியக்கூடாது என்பதனால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறொரு இடத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டன… ’’.
‘‘சாண்டர்ஸ் கொலை வழக்கு குறித்து தனது நினைவுக்குறிப்பில் எழுதிப்போகும் பஞ்சாப் குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் வி.என்.ஸ்மித் ‘‘மாலை 7 மணியளவில் சிறைக்குள்ளிருந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் கேட்கத் தொடங்கியதை வைத்தே உள்ளுக்குள் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து விட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நினைவுக்குறிப்பு பிரிட்டிஷ் நூலகத்தில் நுண்படச்சுருளாக இன்றும் இருக்கிறதென்கின்றனர் நூலாசிரியர்கள். இந்நூல் வெளியானதையடுத்து பகத்சிங்கின் சகோதரி பிரகாஷ் கவுர் தனது சகோதரர் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியிருந்தார்.
-இப்படியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்று விளக்க வேண்டியிருந்தது. ஓரிருவராவது அந்தப் புத்தகத்தை தேடிவாங்கிப் படித்திருக்கக்கூடும். இன்னும் சில நண்பர்கள் ‘‘கோபப்படும்போது அழகாய் தெரியவேண்டும் என்று அலங்காரம் பண்ணக் கிளம்பிகிறவனால் ஒருபோதும் கோபப்படவே முடியாது’’ என்ற பெட்டிச்செய்தியைக் காட்டி ‘‘இது எங்கள் தலைவரைக் கிண்டலடித்து எழுதியதுதானே?’’ என்று கோபப்பட்டார்கள். உங்கள் கண்ணுக்கு அப்படித் தெரிந்தால் நானென்ன செய்ய என்று நழுவிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி அலங்காரம் பண்ணிக்கொண்டிருப்பதிலேயே காலத்தையும் காசையும் வீணடிக்கிற தலைவர்கள் சிலர் எந்த இயக்கத்தில்தான் இல்லை என்று கேட்பதில் தவறொன்றும் இருப்பதாக நான் கருதவில்லை. போராளிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிற சிலர் விதவிதமான தோரணைகளில் தோன்றும் மெகாசைஸ் விளம்பரத்தட்டிகளைப் பார்த்து மனம் வெதும்பியே அவ்வாறு எழுதியிருந்தேன்.
தொண்டர்கள் கையில் இருக்கும் அற்பசொற்பத் தொகைகளையும் இப்படி தனது விளம்பரத்துக்காக செலவழிக்க வைக்கும் ஊதாரித்தலைவர்களை வேறு எப்படிதான் விமர்சிப்பது? சுவர் கண்ட இடமெல்லாம் இந்தத் தலைவர்களின் பெயரை ஆளுயரத்திற்கு எழுதிக்குவிக்கும் தொண்டர்கள் எத்தனை நாளைக்கு தங்களது சம்பாத்தியத்தை இதற்காக இழக்க முடியும்? எனவே அவர்கள் வேறுவழியின்றி நெறியற்றவகைகளில் இயக்கங்களின் பெயரைச் சொல்லி பணமீட்டும் நிலைக்குத் தாழ்கிறார்கள். அரசியலில் ஒருவரது இருப்பு ஆடம்பரத்தின் வழியாகத்தான் நிறுவப்பட முடியும் என்று ஒரு இயக்கம் நினைத்துவிடுமானால் அதற்குப்பிறகு அது தன் தொண்டர்களிடம் எப்படி தொண்டுள்ளத்தை எதிர்பார்க்க முடியும்? தலைவர்களின் இந்தச் சீரழிவு மனநோய்க்கு ஒத்துப்போகிறவர்களும் செலவழிக்கக்கூடியவர்களுமே பதவிக்கும் பொறுப்புக்கும் உயர்த்தப்படுவார்கள் என்றாகி விட்டால் பொதுவாழ்க்கை, அரசியல்பணி என்பதெல்லாம் மக்களுக்கானதல்ல என்றாகிவிடாதா? எனவே, போராளி தோற்றத்தில் இப்படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு உபயோகமாக வேறு எதுவும் செய்யலாமே என்று அந்தத் தலைவர்களைப் பார்த்து கேட்காமல் ஏன் எழுதினாய் என்று என்னைப் பார்த்து கோவித்துக் கொள்ள எந்தத் தார்மீகமும் கிடையாது என்று பொறுமையாக சொல்லத்தான் வேண்டியிருந்தது.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு விசயம், கதையில் வரக்கூடிய மெஹருன்னிசாவின் வயது குறித்த ஒரு காலக்குழப்பத்துடனேயே பிரசுரமாகிவிட்டது. கதையோட்டத்தில் நான் அதை கவனிக்கவேயில்லை. இதுவரை படித்த வேறுபலரும்கூட அதை கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளர் பிரியாதம்பி தான் நுணுக்கமாக வாசித்து அந்தப் பிழையை சுட்டிக்காட்டினார். சரிசெய்துகொள்வதற்கு உதவியாக இருந்தது. பகத்சிங்கை மையப்படுத்தி நாடகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் அப்பணசாமி சமீபத்தில் இந்தக் கதையைப் படித்துவிட்டு வெகுவாகப் பேசினார். அவருக்கு தோழர் ஜீவசுந்தரி பரிந்துரைத்திருக்கிறார். இதோ இப்போது நீங்கள்…. இப்படியாக இந்தக்கதை ஒருவர்பின் ஒருவராக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தின் பயனும் அதுதானே?
நன்றி: vallinam.com.my
தோழர் பகத்சிங் – சிவவர்மா | தமிழில்: ச. வீரமணி
(பகத்சிங்குடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் சிவவர்மா, ‘நாட்டில் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி – சபேகார் முதல் பகத்சிங் வரை’ என்னும் தன்னுடைய நூலில், மாபெரும் நவம்பர் புரட்சி எந்த அளவிற்கு தோழர் பகத்சிங்கையும், தங்கள் இயக்கத்தையும் உருக்குபோன்று மாற்றி அமைத்தது என்பதையும் விளக்குகிறார்.)
“மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
நவம்பர் சோசலிஸ்ட் புரட்சியானது மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். அது ரஷ்யாவிலிருந்த ஏகாதிபத்திய ஆட்சியை முற்றிலுமாக அழித்து ஒழித்ததோடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் திகிலூட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனிதனை மனிதன், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் முறைக்கு நவம்பர் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது.
சோவியத் மக்கள் தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளும் எஜமானர்களாக மாறினார்கள். அது உலகில் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பல்வேறு நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது, தங்களுடைய லட்சியப் போராட்டமும் வெல்லும் என்கிற நம்பிக்கையை விளைவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தியாவில் விடுதலைக்கான போராட்டமும், உலகத்தில் நடைபெற்று வந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதி என்ற அடிப்படையில், பாதிக்கப்படாமலிருக்க முடியவில்லை.
இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் உதயம்
பொதுவாக 1920களிலும், குறிப்பாக 1928 – 1930களிலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்தக் காலகட்டத்தில்தான், இடதுசாரி சக்திகள் அமைப்புரீதியாக வலுவான சக்தியாக உருவாகத் தொடங்கியிருந்தன. பெரிய அளவில் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.
அமைப்புரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் சிறந்த வேலை நிலைமைகளுக்காகவும், கூடுதல் ஊதியத்திற்காகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரிக்கத் தொடங்கியது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பு வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. முதன்முறையாக, அமைப்புரீதியாக விரிவான முறையில் இடதுசாரி அரசியல் இயக்கம் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது.
நாங்கள் சோசலிச சிந்தனையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட பின்னர்தான், எங்களுக்கு நிறைய நேரமும், புத்தகங்களும் கிடைத்தன. அவற்றைப் படித்தோம், விவாதித்தோம், கடந்த காலங்களில் நாங்கள் செய்தவற்றைத் தீர ஆய்வுசெய்து, சரியான முடிவுகளுக்கு வந்தோம். முதலாவதாக, நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், நாங்கள் மார்க்சியத்தை முறையாக ஆழ்ந்து கற்றதன் அடிப்படையில் அமைந்திடவில்லை.
நம் நாட்டில் அன்றைக்கு மேலோங்கியிருந்த சமூகச் சூழ்நிலைமையில், மார்க்சியத்தைக் கசடறக் கற்பது என்பது அப்படியொன்றும் அவ்வளவு எளிதல்ல.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கைகளில் மார்க்சியத்தை அதன் தத்துவமாகவும், சோசலித்தை அதன் இறுதி லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டதை மிகப்பெரிய முதல் நடவடிக்கை என்று கூற முடியும்.
விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தை நோக்கி …
பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். மார்க்சையும் லெனினையும் கற்க வேண்டும் என்றும், அவர்கள் போதனைகளை செயலுக்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் செல்லுங்கள், தொழிலாளர்கள் – விவசாயிகள் – படித்த மத்திய தர இளைஞர்கள் இடையே செயல்படுங்கள், அவர்களை அரசியல்ரீதியாகப் பயிற்றுவியுங்கள், அவர்களை வர்க்க உணர்வுள்ளவர்களாக மாற்றி, வர்க்க அடிப்படையிலான சங்கங்களின் கீழ் அவர்களை அணிதிரட்டுங்கள் என்று அறிவுறுத்தினார். மக்களின் கட்சி ஒன்று இல்லாமல் அது அனைத்தும் சாத்தியமல்ல என்றும் அவர் மேலும் கூறினார். கட்சி குறித்த அவரது சிந்தனையை மேலும் விளக்கும் வகையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
‘‘தோழர் லெனின் மிகவும் பிரியத்துடன் பயன்படுத்திய வார்த்தைகளில் சொல்வதானால் ‘புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்களே’ நமக்குத் தேவை. புரட்சியைத் தவிர வேறெந்த ஆசாபாசங்களும் வேலையும் இல்லாத முழுநேர ஊழியர்களே நமக்குத் தேவை. எந்த அளவிற்கு அத்தகைய ஊழியர்கள் ஒரு புரட்சிக் கட்சிக்குக் கிடைக்கிறார்களோ அந்த அளவிற்கு அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.’’ அவர் மேலும், ‘திட்டமிட்டமுறையில் செயலாற்றுவதற்கு உங்களுக்குத் தேவை, மேலே விவரித்ததுபோன்று மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் கூரிய அறிவும், முன்முயற்சி எடுப்பதற்கான திறமையும், விரைந்து செயல்படும் ஆற்றலும் கொண்டவர்கள் நிறைந்த ஒரு கட்சியாகும். கட்சி உருக்கு போன்ற கட்டுப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
அதற்காக அது ஒன்றும் தலைமறைவுக் கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு மாறான நிலையில் கூட இருக்கலாம். … கட்சி வெகுஜனப் பிரச்சாரப் பணியுடன் தொடங்கப்பட வேண்டும். … விவசாயிகள் – தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துவதும் அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதும் அவசியமாகும். கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்திடலாம். மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய அரசியல் ஊழியர்களைக் கொண்ட இக்கட்சியானது, அதன்கீழ் உள்ள அனைத்து இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும், இவ்வாறு பகத்சிங், மார்க்சிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் வெளிப்படையாகவே வந்து விட்டார்.
பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
பகத்சிங்கின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன – சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி
2021 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 114ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.
இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.
பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.
தில்லி வெடிகுண்டு வழக்கு
இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
“இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.”
இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:
“சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.”
புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: “எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் – மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மன அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.”
பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர், இவர்களைப் பார்த்து, “இந்த முழக்கத்தின் பொருள் என்ன?” என்று கேட்டார். “புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:
“ ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்போதைய சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான்.
உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமான முறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது. ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.”
“இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.”
“‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.”
“இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.
எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.”
சமூக அமைப்புக்கு எதிராகவே, எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல
தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …” “நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.”
“இந்திய மக்களாகிய நாம்,” என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.
வகுப்புவாதத்திற்கு (எதிராக) மதச்சார்பின்மை
1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.
விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து – முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.
“இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.”
இதற்கு மாற்றுமருந்து என்ன?
‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.
1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். “மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை,” என்று அவர்கள் நம்பினார்கள்.
“தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.”
“மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.”
எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:
“இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர். கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.”
ஊடகங்கள்
மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:
“நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.”
“இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில் வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.
“செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், “இந்துஸ்தான் என்னவாக மாறும்?” என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.”
இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.
சமூக நீதி
பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:
““… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் – தீண்டாமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது. அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?”
பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகன்’ கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!
இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.
பகத் சிங் பற்றிய புத்தகங்கள்:
‘பகத்சிங் சிறைக்குறிப்புகள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘விடுதலை பாதையில் பகத்சிங்: கட்டுரைகள், கடிதங்கள், ஆவணங்கள்’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com
‘நான் ஏன் நாத்திகன்?’ – இப்புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbooks.com