உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா.சந்திரகுரு
இந்தியக் குடியரசு இப்போது சரிவைக் காணத் தொடங்கியிருக்கும் போதிலும், நாகரீகமான மற்றும் அவ்வளவாக நாகரீகமற்ற வட்டாரங்களின் உரையாடல்களில் இருந்து வெளிவருகின்ற ஒரேயொரு பல்லவி நலிந்து போயிருக்கின்ற ஜனநாயகத்திற்கான உறுதியான அறிகுறியாகவே இருக்கின்றது. அந்தப் பல்லவி பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடியின் எதிர்காலம் குறித்த பேச்சுகள் வரும் போதெல்லாம் அவர்களுக்கான ‘மாற்று எதுவுமில்லை’ என்பதாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. மோடியின் கவசத்தில் ஓட்டைகள் விழுந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்ற சிலர் மாநில அளவிலே ஒரு சில தேர்தல்களில் வெல்வதற்கு பாஜக நிச்சயம் போராடவே செய்யும் என்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவே உள்ளனர். ஆனாலும் அதைப் பின்தொடர்ந்து ‘ஆனாலும் தேசிய அளவில் அவருக்கு மாற்று என்று எதுவுமில்லை’ என்ற பல்லவி உடனடியாக வந்து விடுகிறது.
பிளவிற்கான விதைகளை விதைத்து, விஷம் தோய்ந்த வெறுப்பு பேச்சுகளுக்குப் பாதுகாப்பு அளித்து, குடிமைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்தி, வெறுப்பின் ஆவேசத்தை பிரதமர் கட்டவிழ்த்து விடுகிறார்’ என்பதாக அந்த உரையாடல் இருக்கின்றது. அதுவே அவரைத் தகுதி நீக்கம் செய்யப் போதுமானது. ஆனாலும் உடனடியாக அந்த உரையாடலை ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
பாராளுமன்றத்தின் தரையை முத்தமிட்ட பிரதமர் நம்மிடம் இருந்தார். அந்த முத்தம் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான மரண முத்தமாக மாறியது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
வலுவான தேசப் பாதுகாப்பிற்கான உறுதியை நமக்கு வழங்கிய பிரதமர் இருந்தார். ஆனால் அவரால் எல்லைப் பகுதியில் இழப்பு, நமது நில எல்லைக்குள்ளாகப் பிணைக்கப்பட்டது, இருமுனைப் போருக்கான வாய்ப்புகள் போன்றவையே விளைந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தில் சீனா குறித்து ஒரு கேள்வி கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று தேசம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
பலமான உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு உறுதியளித்த பிரதமர் இருந்தார். அந்த இலக்கு உண்மையில் எட்டப்பட்டுள்ளது. தொண்டு மிஷனரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இப்போது வேட்டையாடப்பட்டு வருவதால் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிந்திருப்பவர்கள் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்லக் கூடாதா?
எல்லை மாநிலங்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த பிரதமர் இருந்தார். பத்தாண்டுகளுக்கு அப்புறம் முதன்முறையாக பஞ்சாபில் வன்முறை தலைகாட்டியிருப்பதை அரசாங்கமே ஒப்புதல் அளித்துச் சொல்கிறது. வடகிழக்கில் அமைதிக்கான ஆதாயங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. காஷ்மீரில் அதிகரித்து வரும் அந்நியமும், அடக்குமுறையும் தொடர்கின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
பங்குச்சந்தைகளை உயரச் செய்த பிரதமர் இருந்தார். கடந்த இருபதாண்டுகளில் இருந்துள்ள மற்ற அரசாங்கங்களைப் போல அவரது அரசாங்கமும் ஓரிரு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. உண்மையாகச் சொல்வதென்றால் மக்கள்தொகையில் முதல் பத்து சதவிகிதம் பேர் இந்த ஆட்சியால் ஒருவேளை செழித்திருக்கலாம். ஆனால் நம்மிடம் 2003-2009 காலகட்டத்தில் இருந்த எட்டு சதவீத வளர்ச்சி விகிதம் இப்போது இல்லை. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வறுமை நிலைகளில் இருந்த வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமத்துவமின்மை, பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. சுமாரான அளவிலேயே ஏற்றுமதிகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த பணவீக்கம் 1991க்குப் பிறகு மிக அதிகபட்சமாக – இந்த நவம்பரில் 14.3 சதவிகிதம் என்று அதிகரித்துள்ளது. ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகும், அவையெல்லாம் முந்தைய அரசாங்கத்தின் அல்லது அமெரிக்க மத்திய வங்கியின் தவறுகள் என்றே சொல்லப்பட்டு வருகின்றன. ‘உண்மையில் மாற்று எதுவுமில்லைதானே!’
ஊழலைக் குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் இருந்தார். மூலதனச் செறிவு அதிகரித்திருந்தாலும், கட்சிகளின் தேர்தல் நிதியை நிர்வகிக்கும் விதிமுறைகள் பின்னடைவைக் கண்டுள்ள போதிலும், சரியான சித்தாந்தத்திற்கு முன்பாகத் தலை வணங்கி நிற்கும் வரை மற்றவர்களின் மூலதனத்தைக் காட்டிலும் ஒரு சில மூலதனம் மட்டுமே பெரிது என்ற சமிக்ஞையைத் தெரிவிக்க அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை உண்மையிலேயே ஊழல் குறைந்திருக்கலாம் என்றாலும், அதைக் காண்பதற்கோ அல்லது அதைப் பற்றி பேசுவதற்கோ நம்மை அனுமதிக்காத அளவிற்கு மிகத் திறமையாக அரசு செயல்பட்டு வருகிறது. அதனால்தான், ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்கிறது.
அந்தப் பல்லவி இவ்வாறாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற கருத்து தொடர்கிறது. தார்மீக, ஆன்மீக மறுமலர்ச்சிக்குப் பதிலாக இருண்ட, மோசமான வகுப்புவாத தூண்டுதல்களே ஹிந்து மதத்தின் பெயரால் வெளியேற்றப்படுகின்றன. ஆனாலும் ‘மாற்று எதுவுமில்லை’.
அதிகாரப்பூர்வ வட்டங்களை மறந்து விட்டுப் பாருங்கள். இந்திய ஜனநாயகத்தின் மிகப்பரந்த கௌரவம், அதன் கலாச்சாரம், அதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்று விட்டன. ஆனால் நிறுவனம் சார்ந்து இருக்கின்ற ரிப்பன்ட்ராப்களால் இந்த உலகை வேறுவிதமாக நம்ப வைக்க முடிகின்றது. உங்களுடைய மக்களை எந்த அளவிற்கு அதிகமாகத் தாக்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உலகளாவிய உங்கள் பங்கு அதிகமாக உயரும் என்று நமது தலைவரை அவர்கள் நம்ப வைத்திருக்கிறார்கள். உண்மையாகவே ‘மாற்று எதுவுமில்லை’.
அனைவரைப் பற்றியும் துப்பறிந்து, அனைவரையும் அச்சுறுத்தி, தகவல் ஒழுங்கைக் கட்டுப்படுத்தி மிகவும் பாதுகாப்பாக நாம் இருப்பதாக நம் அனைவரையும் அரசு உணர வைத்திருக்கிறது. ஆனால்… ஆனால்… ஆனால் ‘மாற்று எதுவுமில்லை’ என்ற பல்லவி பின்தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மற்ற பல்லவிகளைப் போலவே ‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவியும் கட்டுடைக்கப்பட வேண்டும். குடிமக்களில் சிலர் பலன்களைப் பெற்றிருக்கலாம் அல்லது திட்டங்களின் பயனாளிகளாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் இந்த அரசாங்கம் செயல்திறன் கொண்டது என்று கூறுவதை நம்புவதற்கு அதன் உண்மையான சாதனைகள் போதாமையுடனே இருக்கின்றன. சில பகுதிகளில் வெற்றிகளை அடைந்திருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் கூட, இந்தியக் குடியரசு எதிர்கொண்டிருக்கும் அடிப்படை நெருக்கடிகளுக்கு முன்பாக அந்த வெற்றி மங்கிப் போகிறது.
‘மாற்று எதுவுமில்லை’ என்ற இந்தப் பல்லவிக்கு எதிர்க்கட்சிகளின் நடத்தையே உதவி வருகிறது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை உதறி விட்டு காங்கிரஸால் வெளியே வர முடியவில்லை. எதிர்கட்சிகள் வசமிருக்கின்ற பல மாநில அரசுகளால் நிறுவன நன்னடத்தைக்கான மாதிரிகளாக அல்லது தாராளவாத, ஜனநாயக விழுமியங்களின் கொள்கைரீதியான பாதுகாவலர்களாக இருக்க முடியவில்லை. ஒருபுறம், இந்திய குடியரசு இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று சொல்ல விருப்பமுடையவையாக இருக்கின்ற எதிர்க்கட்சிகள் மறுபுறத்தில் குடியரசிற்கு இருத்தலியல் நெருக்கடி இருப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்பவையாக இருக்கவில்லை. அந்த இருமைதான் எதிர்கட்சிகளை அதிகம் காயப்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் குடியரசைப் பாதுகாக்கின்ற நோக்கத்திற்காக ஒன்றுபடவில்லை. அவற்றின் உணர்வுகள் அனைத்தும் அவர்களுக்குள்ளான சண்டைகளிலேயே செலவிடப்பட்டு விடுகின்றன. நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருபவர்கள் புதுமுகங்கள் வெளிவர அனுமதிப்பதில்லை.
இவையனைத்தையும் ஒப்புக் கொண்டாலும், ‘மாற்று எதுவுமில்லை’ என்கின்ற எண்ணம் உண்மையில் மிகவும் அபத்தமாகவே இருக்கிறது. கூட்டணி அரசியலுக்கான சாத்தியம், சீர்திருத்தங்களின் சிக்கல்கள், இந்த நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் நுட்பமான பின்னல் இழைகள் என்று சமீபகால வரலாறு குறித்து இருந்து வருகின்ற மகத்தான மறதியாலேயே இதுபோன்ற ‘மாற்று எதுவுமில்லை’ என்ற சிந்தனை முன்வருகிறது. மாற்றாக வேறொன்றுமில்லை என்றால் ஆழ்ந்த வகுப்புவாதம், அடக்குமுறை இரண்டையும் எதிர்கொண்டிருக்கிற ஒரு ஜனநாயகத்தில், அரசியல் போட்டியும், அதிகாரத்தைக் குறைப்பதும் தானே மாற்றாக இருக்க முடியும். குறைவான அதிகாரம், அதிக போட்டி போன்றவற்றின் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு எதிர்க்கட்சியும் முழுமையாக நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை.
ஆக ‘மாற்று எதுவுமில்லை’ என்று பரவலாக இருந்து வருகின்ற பல்லவியின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். அந்தப் பல்லவி மூன்று விஷயங்களின் அறிகுறியாக இருக்கலாம்: இந்திய மேல்தட்டினரை போலியான களத்திற்குள் சிக்க வைத்திருக்கின்ற அரசியல் அழகியலானது இருக்கின்ற ஆபத்துகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நாயக வழிபாட்டின் அடிப்படையில் சிந்தனைகளை இடைநிறுத்தி எதையும் எளிமைப்படுத்துவதற்கான விருப்பம் இருந்து வருகிறது. அல்லது ஒருவேளை இவ்வாறு ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது ‘வகுப்புவாத விஷம், எதேச்சாதிகார அடக்குமுறை குறித்து எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை’ என்று கூறுவதற்கான வித்தியாசமான வழியிலான உரையாடலாகக்கூட இருக்கலாம்.
தற்போதைய போக்கு பேரழிவை நோக்கிச் செல்வதாக இருந்து வருகின்ற நிலையிலே, ‘மாற்று எதுவுமில்லை’ என்று கூறுபவர்கள் அதன் மூலமாக இப்போது இருக்கின்ற யதார்த்தத்தை விவரிப்பவர்களாக இருக்கவில்லை. ஜனநாயகத்தில் ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்வது அந்த ஜனநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதையே குறிக்கும் என்பதால், ‘மாற்று எதுவுமில்லை’ என்று சொல்பவர்கள் ‘ஜனநாயகத்தை நாங்கள் வெறுக்கிறோம்’ என்றே நேரடியாகச் சொல்லிக் கொள்ளலாம்.
https://indianexpress.com/article/opinion/columns/narendra-modi-alternative-bjp-opposition-7695387/
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: தா.சந்திரகுரு