இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு
கரண் தாப்பர் பிரதாப் பானு மேத்தாவுடன் நடத்திய வீடியோ நேர்காணலை 2021 டிசம்பர் 17 அன்று தி வயர் இணைய இதழ் வெளியிட்டது. கடந்த ஏழாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் அரசியல், சமூகம், பொருளாதார ரீதியாக இந்தியா எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்கான பரந்த தலைப்புகளை உள்ளடக்கியதாக அந்த நேர்காணல் அமைந்திருந்தது.
தேர்தலில் பலன்களை ஆளும் கட்சி அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டில் மதம் மற்றும் சமூக குழுக்களிடையே இருந்து வருகின்ற நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதில் தற்போதைய ஆட்சி எந்த அளவிற்குத் தீவிரமாகப் பங்கேற்று வகுப்புவாத சக்திகளுக்கு உதவி வருகின்றது என்பதை நேர்காணலின் போது விளக்கிச் சொல்ல மேத்தா சற்றும் தயங்கவில்லை. அரசு நிர்வாகத்தைப் பொறுப்பேற்க வைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் தருகின்ற அழுத்தங்களுக்கு ஊடகங்களும், நீதித்துறையும் கூட எவ்வாறு வளைந்து கொடுத்துள்ளன என்பதையும் வருத்தத்துடன் அந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
நேர்காணலின் எழுத்தாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. நேர்காணைலை இங்கே காணலாம்.
கரண் தாப்பர்: மேத்தா! பிரதமராக நரேந்திர மோடி இருந்த இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா சமூகரீதியாக குறுகிய நோக்குடைய, பெரும்பான்மைவாதம் கொண்ட, சகிப்புத்தன்மையற்ற நாடாக, அரசியல்ரீதியாக எதேச்சதிகார நாடாக மாறியுள்ளது என்று சிலர் கூறி வருகின்றார்கள். ஏறக்குறைய பிரதமர் தெய்வமாக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிறுவனங்கள் பலவீனமடைந்து வருகின்றன. கண்காணிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன அல்லது கொத்தடிமைகளாக மாறியுள்ளன. இவற்றையெல்லாம் உண்மையல்ல என்று மறுக்கின்றவர்கள் அதுபோன்ற கருத்துகள் பிரதமரை, அரசாங்கத்தை, ஏன் நாட்டையே இழிவுபடுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டவை என்று கூறுகின்றார்கள். இதுகுறித்து உங்கள் பார்வை எவ்வாறு இருக்கிறது?
பிரதாப் பானு மேத்தா: உங்களுடைய விளக்கம் சரியானது என்றே நினைக்கிறேன். மிகுந்த வகுப்புவாதம் கொண்ட நாடாக இந்தியா மாறி விட்டது; அதிக எதேச்சாதிகாரம் கொண்டதாகவும் அது மாறியிருக்கிறது – உண்மையில் இதுபோன்ற விளக்கங்களை யாரும் இப்போது எதிர்த்துப் பேச முடியாது என்றே நினைக்கிறேன். பிரதமரின் நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன என்பது குறித்து பேச வேண்டியதில்லை என்றாலும் – உச்ச நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுவைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுக்கும் போது; பெரும்பாலான ஊடகங்கள் குறைந்தபட்சம் தொலைக்காட்சி ஊடகங்கள் (அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்… ஒரு வகையில் பார்க்கும் போது வேறு யாரைக் காட்டிலும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்…) நான்காவது தூண் என்ற தங்களுடைய பங்கைத் தவிர்த்திருக்கும் நிலையில் – நிறுவனங்களின் நடத்தை குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சமீபத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் பார்த்ததைப் போல் ஒரு வகையில் சங்கராச்சாரியார், சிவாஜியின் கலவையாக பிரதமர் முன்னிறுத்தப்பட்டார். ஒட்டுமொத்த வழிபாட்டு முறையும் இன்று அவரைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை மறுவடிவமைப்பதாக மட்டுமல்லாமல், ஹிந்து மதத்தின் மதம் சார்ந்த மற்றும் மத வடிவங்களை மிகவும் தீவிரமான முறையில் மறுவடிவமைப்பதாகவும் அது உள்ளது. தேர்வு செய்து கொள்கின்ற எந்தவொரு பண்பும் இந்தியா மிகவும் வகுப்புவாதம் கொண்டதாக, எதேச்சாதிகாரம் கொண்டதாக மாறிவிட்டது என்ற எண்ணத்திற்கு எதிராக இருப்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.
நான் அதற்குத் தருகின்ற ஒரே காரணத்தை பாஜக ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இப்போதுள்ள எதேச்சாதிகாரத்திடம் உண்மையான ஜனநாயக ஆற்றல் உள்ளது. அதாவது ஜனரஞ்சகத்தின் வேர்களைக் கொண்டதாக அது இருக்கிறது. சில வழிகளில் அதுவே நமக்கு மிகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது. மோடி ஒரு ஜனரஞ்சகமான நபராக இருக்கிறார். தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு வகையில் இந்தியாவின் நிறுவன களத்தை அவர் முழுமையாக மாற்றியமைத்திருக்கிறார். இந்த தருணத்தை அதுவே மிகவும் சிக்கல் மிகுந்ததாக்கி வைத்திருப்பது நன்கு தெரிய வருகிறது.
கரண் தாப்பர்: இப்போதுள்ள வகுப்புவாதமும், எதேச்சாதிகாரமும் ஜனநாயக வேர்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்று கூறுகின்ற போது, உண்மையில் பெரும்பான்மைவாதம் உள்ளிட்ட இந்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் கூற வருகிறீர்களா? மோடி ஆட்சி செய்து வருகின்ற எதேச்சாதிகார வழியானது மக்கள் தாங்கள் அந்த வகையில் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்புவதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறதா?
பிரதாப் பானு மேத்தா: அது மூன்று விஷயங்களைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். நிச்சயமாக, மேல்தட்டில் இருப்பவர்களின் கருத்து மட்டத்தில், மோடிக்கும், அவரது வகுப்புவாத, எதேச்சாதிகார திட்டங்களுக்கும் மிகப் பரவலான பெரும் ஆதரவு இருக்கிறது. இந்திய மூலதனத்தின் ஆதரவு, தகவல் ஒழுங்கை உருவாக்கி கட்டுப்படுத்துகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட முறையான வழிகள் போன்றவை இல்லாமல் உண்மையில் அது சாத்தியப்படாது.
இந்தியாவில் உள்ள தொழில்முறை சார்ந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் போன்றவர்களின் உடந்தையில்லாமல் அதற்கான சாத்தியமில்லை. வாக்காளர்களைப் பொறுத்தவரை நிச்சயமாக அதற்காக அவர்கள் அவரைத் தண்டிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன். இவ்வாறாக அதைச் சொல்லிப் பார்க்கலாம். குடிமைச் சமூகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது, எடுத்துக்காட்டாக குர்கான் போன்றதொரு நகரத்திலே வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற தொழுகையைச் சிலரால் சீர்குலைக்க முடிந்திருக்கும் நிலைமையில் அதுகுறித்து தீவிரமான குடிமைச் சமூக எதிர்ப்பு என்று எதுவும் எழவில்லை என்ற உண்மை நாம் அதுபோன்ற செயலில் பங்கேற்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அதற்கு உடந்தையாக இருக்கிறொம் என்பதையே காட்டுகிறது.
கரண் தாப்பர்: அது குறித்த விவரங்களுக்கு சிறிது நேரத்தில் மீண்டும் வருகிறேன். முதலில் இன்னுமொரு பொதுவான கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இவையனைத்தும் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்செயலாக நடந்திருக்கின்றனவா அல்லது அரசாங்கமும், மோடியுமே ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளனரா?
பிரதாப் பானு மேத்தா: இந்தக் கேள்வியை இரண்டு நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒரு நிலையில் பார்க்கும் போது இந்த மாற்றங்கள் நீண்ட வரலாற்றின் விளைபொருளாக இருக்கின்றன. ஹிந்து தேசியம் பற்றி புரிந்து கொள்ள விரும்பினால், இந்திய நாகரிகத்தின் தன்மை, அடையாளம் குறித்து நடைபெற்றிருக்கும் கடந்த நூறு ஆண்டுகால உரையாடலை – குறிப்பாக. முஸ்லீம்களுக்கான இடம் குறித்து நடந்திருக்கும் உரையாடலை – பார்க்க வேண்டும். ஆக ஒரு நிலையில், அது மிக ஆழமாக அடியாழத்திற்குச் செல்கிறது. காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், ஒருவேளை 1950களிலேயே இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்த்திருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்குமா என்ற அனுமானத்திலான கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
மோடியும், பாஜகவுமே பொறுப்பு என்று சொல்லும் வகையில் அவர்கள் அவற்றைச் சட்டப்பூர்வமாக்கவில்லை என்றாலும் சில வகைகளில் ஒவ்வொரு அரங்கிலும் அவற்றை அவர்கள் விளம்பரப்படுத்தி வந்திருப்பது காரணமாகலாம். ‘மறைந்திருக்கும் போக்குகள்’ என்று சொல்லப்படக் கூடிய வகையிலே அதுபோன்ற விஷயங்களை நம்பி, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தை குலைக்கின்ற செயல்களில் ஈடுபடத் தயாராக இருப்பவர்கள் எப்போதுமே சமூகத்தில் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் பேர் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களே அவற்றைச் சட்டப்பூர்வமாக்குவது, குறிப்பிட்டவர்களிடம் அதற்கான ஆதரவை பெற்றுக் கொள்வது, மக்களை ஏமாற்றுவது என்று தொடர்ந்து இருந்து வருவதும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.
கரண் தாப்பர்: இப்போது நாம் விவரங்களுக்கு வருவோம். முதல் கேள்வியில் நான் குறிப்பிட்டிருந்த அனைத்து விவரங்களையும் பற்றி பேச முடியாது என்பதால் எனக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்ற நான்கை மட்டும் முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். தொடர்ந்து சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை இந்தியா நடத்தி வருவது குறித்தும், அரசாங்கங்கள் அடிக்கடி மாறுகின்றன என்பதிலும் எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. ஆனாலும் நாடாளுமன்றம், அமைச்சரவை, தேர்தல் ஆணையம் போன்ற முக்கியமான அமைப்புகள் நெருக்கடி நிலைக்குப் பிறகு இருந்ததைக் காட்டிலும் மிகவும் பலவீனமாக இப்போது இருக்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலைமையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பிரதாப் பானு மேத்தா: இந்திய ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. பெரும்பாலான மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டு வருவதால், நாடாளுமன்றம் ஏறக்குறைய ரப்பர் ஸ்டாம்ப் போன்றாகி விட்டது. உச்ச நீதிமன்றம் கை கழுவிக் கொண்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்த நீதித்துறையும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொண்டுள்ளதால் சில வகைகளில் இப்போது இருக்கின்ற நிலைமை நெருக்கடி நிலையைக் காட்டிலும் மிக மோசமானதாகவே இருக்கிறது. அரசியலமைப்பு அடிப்படை நோக்கங்களின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க உச்சநீதிமன்றம் விரும்புவதே இல்லை. பத்திரிகைகள் – நிச்சயமாக அது பற்றி நீங்கள் ஏற்கனவே பேசிவிட்டீர்கள் – தேர்தல் ஆணையம் போன்றவையும் வலுவிழந்து விட்டன. மக்கள் கேள்வியெழுப்பக் கூடிய நிலையை தேர்தலின் நியாயத்தன்மை இன்னும் எட்டவில்லை என்றாலும் அங்கேயும் கவலை தரக்கூடிய அறிகுறிகள் தென்படவே செய்கின்றன.
கரண் தாப்பர்: இன்னும் சிறிது நேரம் கழித்து உச்சநீதிமன்ற விஷயத்திற்கு வருகிறேன். அதற்கு முன்பாக நமது அரசியலின் நிலையை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க விரும்புகிறேன். கட்டுப்பாடுகள் குறைந்து கொண்டே வருகின்ற வேளையில் பிரதமரின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது அரசாங்கத்தின் மிகப் பெரிய அதிகாரமிக்க நிறுவனமாகியிருக்கும் பிரதமர் அலுவலகத்தின் ஆதிக்கம், நரேந்திர மோடியைச் சுற்றி வெளிப்படுகின்ற ஆளுமை வழிபாட்டு முறை பற்றி இப்போது பேச விரும்புகிறேன். இந்தக் கலவையானது அவரை, நமது பிரதமரை மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற நபராக மாற்றியிருப்பது எந்த அளவிற்கு கவலையளிக்கின்றது?
பிரதாப் பானு மேத்தா: கடந்த காலத்திலும் குறிப்பாக இந்திரா காந்தி போன்ற ஆளுமை வழிபாட்டு முறைகள் நம்மிடம் இருந்தன. உண்மையில் ஜனநாயக சுய வெளிப்பாட்டுடன் குறிப்பிட்ட அளவிற்கு கலாச்சாரம், ஆளுமை கொண்ட ஒரு வகையான நீண்ட பாரம்பரியம் நமக்கு இருக்கிறது.
நம்பமுடியாத அளவிற்கு இருக்கின்ற தன்னுடைய ஜனரஞ்சகத்தையும், அதிகாரத்தையும் அவர் [மோடி] ஒருவேளை நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துகிறார் என்றால், தன்னுடைய எந்தவொரு முன்னெடுப்பிலும் எந்த வகையிலும் அவர் இந்தியாவிற்கு நல்லதைச் செய்திருக்கவில்லை என்பது கவலைக்குரியதாகவே இருக்கிறது. மோடி ஓர் இயல்பான ஜனநாயகவாதி அல்ல. பெரும்பாலும் அவரது உள்ளுணர்வு ஊக்குவிப்பதைக் காட்டிலும் கருவறுப்பதாகவே இருக்கிறது. அவரது நோக்கம் வகுப்புவாதத்திற்கு ஆதரவாக குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறுவதாக மட்டுமே இருக்கிறது. நமது குடிமைச் சமூகத்தில் ஒரு வகையான நச்சு பரவியுள்ளது. சமீப காலங்களில் அது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமாக இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆளுமை வழிபாட்டு முறைகள் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்வது கடினம் என்று வரலாற்றிலிருந்து அறிந்திருக்கின்ற அதன் மறுபக்கத்தையும் இந்தக் கட்டத்தில் நாம் கவனிக்க வேண்டியதுள்ளது.
அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மூலமாக நடைபெற்று வந்த அரசியல் இப்போது விவசாயிகள் போராட்டத்தில் நாம் பார்த்ததைப் போல தெருக்களுக்கு வந்திருக்கிறது. நம்மால் இப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், விவசாயிகள் இயக்கம் என்று இந்திய குடிமைச் சமூகத்தில் காண முடிகிறது. ஜனநாயக ஆலோசனை போன்ற செயல்முறைகள் எதுவுமே இல்லாமல் தனது அலுவலகத்தை மட்டும் மையமாகக் கொண்ட அரசியலால் மக்களுக்குத் தேவையான நிர்வாகத்தை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதை பிரதமர் சில வழிகளில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி இருக்கிறது.
கரண் தாப்பர்: தனக்கிருந்த பிம்பத்தில் மோடி சரிவை சந்தித்திருக்கிறாரா? விவசாயிகளிடம் சரணடைந்த விதத்தைக் கொண்டு இதை விட வலுவாக அதை என்னால் எவ்வாறு சொல்ல முடியும்…
பிரதாப் பானு மேத்தா: தனக்கென்றுள்ள ஆதரவு தளத்தில் தன் பிம்பத்தின் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அவர் சந்தித்துள்ளார் என்றே நினைக்கிறேன். அவருடைய ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டங்களைத் துல்லியமாக அடக்குவதற்காகவே அவரைத் தேர்ந்தெடுத்ததாக நினைப்பவர்களாக இருப்பதால், அவரது ஆதரவுத் தளம் சற்று ஏமாற்றமடைந்திருப்பதாகவே கருதுகிறேன். அவ்வாறு நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் அதனாலேயே அவருடைய அடித்தளம் முற்றிலுமாகச் சிதைந்து விடப் போவதில்லை. எனவே அந்தப் பாதிப்பு நீண்ட கால அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கப் போவதில்லை என்றே கருதுகிறேன்.
கரண் தாப்பர்: அவரது ஆதரவாளர்களின் பார்வையில் வெல்ல முடியாதவர் என்பதாக அவருக்கென்றிருந்த பிம்பத்தின் ஒளி சற்றே மங்கியுள்ளதா?
பிரதாப் பானு மேத்தா: ஆமாம். மிகச் சரிதான். ஆனால் அவர் அதை எங்காவது ஈடுகட்ட முயற்சிப்பார் என்பதால் அது ஒரு ஆபத்தான தருணமாகவே மாறக் கூடும். ஆனால் அவரது உத்தி என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
கரண் தாப்பர்: ஜனநாயகத்தில் அரசாங்கம் மற்றும் பிரதமரின் அதிகாரம், செல்வாக்கை அடிப்படையாகக் கட்டுப்படுத்துகின்றவையாக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இரண்டாவதாக அவ்வாறு கட்டுப்படுத்துவது உண்மையில் ஆளும் கட்சியில் இருக்கும் எம்.பி.க்கள் தான்… ‘எங்களுக்கு உடன்பாடில்லை… இதைச் செய்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை’ என்று எதிர்த்து நின்று சொல்கின்ற திறன் அவர்களிடம் இருக்குமானால்… போரிஸ் ஜான்சனின் செயல்திறனை, பிரதமராக அவரது பதவியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அளவிற்கு எம்.பி.க்கள் கீர் ஸ்டார்மர், டோரி எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைப் பிரிட்டனில் இந்த வாரம் பார்த்தோம். இந்தியாவில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. எனவே மோடியால் தனது கட்சி, எதிர்க்கட்சி என்று அனைவரின் மீதும் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது.
பிரதாப் பானு மேத்தா: கரண் நான் அந்தக் கேள்வி கூடுதலாக சிந்திக்கத் தக்கது. நேர்மையாகச் சொல்வதென்றால், இந்தியாவில் கட்சித் தாவல் தடைச் சட்டம் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால் அது தனிப்பட்ட எம்.பி.க்கள் அல்லது சிறிய குழுக்களாக இருக்கின்ற எம்.பி.க்களின் அதிகாரத்தைக் குறைத்திருக்கிறது.
கரண் தாப்பர்: அது சர்வாதிகாரிகளாக கட்சித் தலைவர்களை மாற்றியிருக்கிறது.
பிரதாப் பானு மேத்தா: மிகச் சரியாகச் சொன்னீர்கள். போதுமான எண்ணிக்கையில் இருந்தாலொழிய அவர்களால் கிளர்ந்தெழ முடியாது. கிளர்ந்து எழுவதற்கு கட்சியில் பாதிப் பேர் வேண்டும் என்பதால் கூட்டு நடவடிக்கை உண்மையில் மிகவும் கடினமாகவே உள்ளது. அது ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாக உள்ளது.
இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. இந்திய ஜனநாயகம் இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று அனைவரும் நினைக்கும் நேரத்தில் – குறைந்தபட்சம் அது இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்வதாகச் சொல்கின்ற போது – எதிர்க்கட்சிகள் உண்மையில் போதுமான அளவிற்கு ஒன்றுபடவில்லை. இவ்வாறான தருணத்தில் குறுகிய காலக் கருத்து வேறுபாடுகளைப் புறக்கணித்து அவர்களால் ஒன்று சேர முடியாது என்றால், இந்திய ஜனநாயகத்திற்கான மாபெரும் போரில் எதிர்க்கட்சிகளுக்கான பங்கு கேள்விக்குறியாகவே இருக்கும்.
கரண் தாப்பர்: இதுவரையிலான நேர்காணலின் சுருக்கமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் மோடியின் கீழ் ஜனநாயகம் நலிவடைந்து விட்டது, பிரதமர் எதேச்சாதிகாரியாக மாறியுள்ளார், விவாதங்கள் நிறுத்தப்பட்டு விட்டன, பாராளுமன்றம் செயல்படவில்லை, தேர்வுக் குழுக்கள்கூட செயல்படவில்லை என்று சொல்லலாமா? இந்தியாவின் ஜனநாயகம் நலிவடைந்து, சுருங்கி விட்டதா?
பிரதாப் பானு மேத்தா: மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஆம். நிலைமை முற்றிலும் அப்படியாகத்தான் இருக்கிறது.
கரண் தாப்பர்: இது அவரது [மோடி] அரசியல் நாட்காட்டியில் உள்ள ஒரு மைனஸ் ஆகும்.
பிரதாப் பானு மேத்தா: சரிதான்.
கரண் தாப்பர்: உங்களிடம் கொண்டு வர விரும்பும் இரண்டாவது விஷயம் கருத்து வேறுபாடு. முதலில் ஊடகங்களின் மீது கவனம் செலுத்தலாம். பிரதமருக்கு சவால் விடும் வகையில் கேள்வி எழுப்புவதற்கு ஊடகங்கள் ஏதாவது செய்கின்றன என்று நினைக்கிறீர்களா? இந்தியாவில் புலனாய்வுப் பத்திரிகைகள் நடைமுறையில் இல்லாமலே போய் விட்டன என்று கூறிய தலைமை நீதிபதி ‘நமது தோட்டத்தில் உள்ள அனைத்தும் ரோஜாக்களாக இருப்பதாகத் தெரிகிறது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பிரதாப் பானு மேத்தா: உச்சநீதிமன்றம் போதுமான சட்டப் பாதுகாப்பை பேச்சுரிமைக்கு வழங்காததால், அந்த உரிமை ஓரளவிற்கு இல்லாமலே போயிருக்கிறது. நீதிமன்றம் என்ற அந்த நிறுவனம் அதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்றே நான் சொல்வேன். ஆனால் இந்திய ஊடகங்களுக்கான சவால் என்ற பிரச்சனை உண்மையில் மிக மோசமான நிலையில் இருப்பதாகவே நினைக்கிறேன். பல்வேறு காரணங்களால் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை எதிர்த்து பத்திரிகைகள் நின்றிருக்காத வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்ற பொருளில் பார்த்தாலும் அது இன்றைக்கு மிகவும் மோசமாகவே உள்ளது. தங்களுடைய வருமானத்திற்காக ஓரளவிற்கு ஊடகங்கள் அரசாங்கத்தையே சார்ந்திருக்கின்றன. இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை அந்த நிலைமை எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இந்திய ஊடகங்கள் இப்போது வெறுப்பை, பாரபட்சத்தை வெளிப்படையாகப் பரப்பி வருவதுதான் கூடுதல் கவலையளிப்பதாக இருக்கிறது.
ஹிந்தி செய்தித்தாள்களை வாசித்தால் – ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான ஹிந்தி செய்தித்தாள்கள் – அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட்டவர்களின் ஆதரவைத் திரட்டுகின்ற வகையிலான செய்திகள் நிறைந்திருப்பதைக் காண முடியும். அதிகாரப்பூர்வமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்ற தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கும் போது, அவற்றில் பெரும்பாலானவை சிறுபான்மையினருக்கு எதிராக மறைமுகமாக அல்லது வெளிப்படையாகவே வெறுப்பைப் பரப்பி வருவது தெரியும். ஒருவகையில் ஊடகங்கள் தங்களுடைய கடமையைக் கை கழுவி விடுவது அல்லது குறைந்த பட்சம் அரசாங்கத்தை எதிர்த்து நிற்காமல் இருப்பது என்று வித்தியாசமான வழியில் இந்திய ஜனநாயகத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்ற பாத்திரத்தை வகித்து வருகின்றன.
கரண் தாப்பர்: ஆக மோடியை ஆதரிக்கின்ற ஊடகங்கள் மோடியை விமர்சிக்காமல் இருப்பது மட்டுமல்லாது, அவர் அடையாளப்படுத்தி வருகின்ற வகுப்புவாதம், எதேச்சாதிகாரத்தையும் அவை முன்னெடுத்து வளர்த்து வருகின்றன.
பிரதாப் பானு மேத்தா: நிச்சயமாக. ஒரு கட்டத்தில் தனது பதவியை விட்டு மோடி விலகிச் சென்று விடலாம். ஆனாலும் இப்போது நடந்திருக்கும் வகுப்புவாத ஊடுருவலும், ஊடகங்கள் அதனை வெளிப்படையாக சட்டப்பூர்வமாக்கி இருப்பதும்தான் இந்திய ஜனநாயகத்திற்கும், இந்திய குடிமைச் சமூகத்திற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற மிகப் பெரிய சேதமாக இருக்கப் போகிறது. அது முன்னெப்போதுமில்லாத ஒன்றாக இருக்கின்றது.
கரண் தாப்பர்: நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஊடகங்கள் நம்புவதன் பிரதிபலிப்பாக அது இருக்கின்றதா? ஒருவகையில் மோடி விரும்புவதைப் போல மறைவான வகுப்புவாதத்திற்காக அவை அலைக்கழிகின்றனவா?
பிரதாப் பானு மேத்தா: உண்மையில் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடினமானது. அதாவது அதை எவ்வாறு கண்டறிகிறோம் என்பதில் தெளிவிருப்பதில்லை. உங்களுடைய இரண்டு முன்மொழிவுகளுமே உண்மை என்றே கூறுவேன். அதாவது ஒரு மறைவான போக்கு இருந்து வருகிறது. ஒரு வகையில் தகவல் ஒழுங்கு மற்றும் ஊடக நிறுவனங்கள் அதைப் பெரிதாக்கும் போது, அது தன்னிறைவு கொண்ட தீர்க்கதரிசனமாக மாறுகின்றது. ஓரளவிற்குப் போதுமான மக்கள் இவ்வாறு நினைக்கிறார்கள் என்று நினைக்கின்ற போது, அதிக அளவிலான மக்கள் அவ்வாறு நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.
கரண் தாப்பர்: பெரிதாக்குகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு ஊடகங்கள் உள்ளாகின்றனவா?
பிரதாப் பானு மேத்தா: ஆமாம்.
கரண் தாப்பர்: அரசை இன்னும் விமர்சித்து வருகின்ற சிறிய எண்ணிக்கையிலான ஊடகங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு கணம் நீங்கள் பாருங்கள். மோடியை மட்டும் விமர்சிக்காமல் அரசையும் சேர்த்து விமர்சிப்பவர்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே இறங்கி விடுகிறது. மாநில அரசுகளும் 2016 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தங்களால் சுமத்தப்பட்டுள்ள தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை 165% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளன. அத்தகைய குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், வரலாற்றாசிரியர்கள், மாணவர்கள், நடிகர்கள், சில நேரங்களில் இயக்குனர்கள், சிறு குழந்தைகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
நகைச்சுவையாக இவ்வாறு சொல்லப்படுவதுண்டு – இந்தியாவில் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது பேசுவதற்கான சுதந்திரம் அல்ல; நீங்கள் ஏதாவது விமர்சித்துக் கூறும் போது, உங்களைக் கைது செய்வார்கள். நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்பதால் பேசி முடித்த பிறகு இருக்கின்ற சுதந்திரமே மிகவும் முக்கியம் என்று மக்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிரதாப் பானு மேத்தா: முறையாக நெருக்கடி நிலையை அறிவிக்கவில்லை என்பது போன்ற சில வழிகளில் இந்த அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாகவே இருந்திருக்கிறது. அதனால் பெரிய அளவில் கைதுகள் இருக்கவில்லை. ஆயினும் உங்கள் அனைவராலும் சுட்டிக் காட்டப்படுபவை அனைத்துமே மிகச் சரியாக அரசாங்கத்தை மிகவும் திறனுள்ளதாக்குகின்ற வகையிலேயே இருக்கின்றன. அவ்வப்போது பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், குடிமைச் சமூகம், நடிகர்கள் போன்றோரை மிரட்டக்கூடிய வகையில் அரசாங்கம் சரியான சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
மீண்டும் நான் உச்சநீதிமன்றப் பிரச்சனைக்குச் செல்கிறேன். அது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு கட்டத்தில் தாங்கள் எதிர்பார்க்கக்கூடிய அளவிற்கு நியாயம், நீதியை வழங்கக்கூடிய வேறு நிறுவனங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளும் போது ஊடகங்கள், தனியார் துணிவுடன் முடிவெடுக்கக் கூடும்.
கரண் தாப்பர்: உச்சநீதிமன்றத்தின் தோல்வி, அது ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக நிற்க மறுப்பது போன்றவற்றால் ஊடகவியலாளர்கள் எதேச்சாதிகாரம் கொண்ட தலைவர்களால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகி விடுகிறார்கள்.
பிரதாப் பானு மேத்தா: பிணை கட்டாயம் கிடைத்து விடும் என உங்களால் எதிர்பார்க்க முடியாது. ஆட்கொணர்வு மனுவில் நீங்கள் மிகவும் சாதாரணமாக விசாரணையை எதிர்பார்க்க முடியாது. இந்திய அரசியலில், காஷ்மீரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முறையில் பத்திரிகையாளர்கள் மீது ஊபா வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. அந்த முறை நாடு முழுவதும் அதிக அளவிலே பிரதிபலிக்கப் போகிறது. அந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து உச்சநீதிமன்றம் விரைவில் – ஒருவேளை ஓரிரண்டு ஆண்டுகளுக்கு அது வலியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றாலும் குறைந்தபட்சம் ஒரு கட்டத்தில் நீதி வழங்கபப்டுவதை எதிர்பார்க்கலாம் – அவற்றை முடித்து வைத்து இந்தியாவில் நீதித்துறை இன்னும் இயங்கி வருகிறது என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் காட்ட முடியும்.
கரண் தாப்பர்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்றவர்கள் போரின் புதிய எல்லையாக இப்போது குடிமைச் சமூகம் இருக்கிறது என்று காவல்துறையினரிடம் பகிரங்கமாகச் சொல்ல முடிந்திருப்பது உச்சநீதிமன்றத் தலையீடு இல்லாததன் விளைவுகளில் ஒன்றாகவே இருக்கிறது. அதுபோன்ற அணுகுமுறை குடிமைச் சமூகம், எதிராளிகள், கருத்து வேறுபாடு கொண்டவர்களை எதிரிகளாக அரசாங்கம் அல்லது அதன் சிந்தனையாளர்கள் வித்தியாசமாகச் சிந்தித்துப் பார்க்கத் தொடங்கியிருப்பதைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.
பிரதாப் பானு மேத்தா: அது வெறுமனே தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது போன்றதொரு அறிக்கை அவர்களுடைய சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருப்பதாகவே நினைக்கிறேன். அந்த சித்தாந்தத்தின் முக்கிய கூறுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது – ஒற்றைச் சிந்தனையுடனே மக்கள் பேச வேண்டும். அந்த ஒற்றைச் சிந்தனையிலிருந்து யாராவது விலகிச் செல்லும் போது, ‘மக்களிடம் நியாயமான கருத்து வேறுபாடுகள் உள்ளன; பலவிதமான கண்ணோட்டங்களுடன் இருப்பது சிக்கலானது அல்ல’ என்பதாக இல்லாமல் மக்களுக்கு எதிரிகளாக அவர்கள் இருக்கிறார்கள் என்றே அவர்களுடைய விளக்கம் இருக்கிறது.
அது ஒரு வகையில் கண்காணிப்பைச் சட்டப்பூர்வமாக்கித் தருவதாகவே உள்ளது. பெகாசஸ் ஊழலையும் மிக விரைவாகக் கையாண்டிருக்கலாம் என்றாலும் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைப்பது என்று பெரும் நேரத்தை வீணடித்தது. ஆனால் இப்போது இந்திய குடிமைச் சமூகத்தின் மீதான போர் – பலவீனப்படுத்துகின்ற போரே ஆளும் கட்சியின் மேலாதிக்கச் சித்தாந்தமாக உள்ளது.
கரண் தாப்பர்: இந்த ஆட்சி உண்மையில் எதிராளிகளை, மாற்றுக் கருத்து கொண்டவர்களை, வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட மக்களை எதிரிகளாகவே பார்க்கிறது என்று சொல்ல வருகிறீர்கள்.
பிரதாப் பானு மேத்தா: ஆமாம். தங்களுடன் உடன்படாதவர்களைக்கூட நாட்டுக்கு நல்லது என்ன என்பதைக் கண்டறிய முயற்சி செய்கிற குடிமக்களாகக் கருதுவதன் மூலமே பொதுவான நிறுவனத்தில் ஜனநாயகம் தழைக்கும் என்பதால் இதுபோன்ற செயல்கள் அவர்களை ஜனநாயகமற்றவர்களாகவே காட்டுகின்றன.
கரண் தாப்பர்: ஆனால் அதுபோன்றவர்களை கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமை கொண்ட குடிமக்களாக மோடி ஆட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. நம்மிடையே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இல்லை என்றும் எதிர்ப்பு காட்டுபவர்களை எதிரிகளாகக் கருதி தரமற்ற வகையில் அவர்களை நடத்துகின்ற நயவஞ்சகமாகத் திணிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை நம்மிடையே உள்ளது என்றும் கூறிய போது இதைத்தான் நினைத்தீர்கள் என்று நினைக்கிறேன்.
பிரதாப் பானு மேத்தா: இன்னும் ஒரு பொருளிலும் அது நயவஞ்சகமாகத் திணிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலையாக இருக்கிறது. அதாவது நிறுவன அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அது எவ்வித தயக்கமும் காட்டவில்லை. அந்த அதிகாரம் நெருக்கடி நிலைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்று பயன்படுத்தப்படவில்லை. நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து விட்டு தேவைப்படுகின்ற போதெல்லாம் அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை மறுத்து விடலாம். அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டுவதில் எவ்வித தயக்கமும் இல்லாமல் மக்களைக் கைது செய்யலாம் என்பதாக இருக்கிறது.
கரண் தாப்பர்: இச்சூழலில் பெகாசஸ் வெளிப்பாடுகள் எந்த அளவிற்கு கவலையளிக்கின்றன? அரசாங்கம் தன்னுடைய பதிலில் அதைத் தெளிவாகத் தவிர்த்திருக்கின்றது – உண்மையாகச் சொல்வதென்றால் அது நேர்மையற்று இருந்திருக்கிறது என்றே கூறுவேன். அது குறித்து நீங்கள் எந்த அளவிற்கு கவலைப்படுகிறீர்கள்?
பிரதாப் பானு மேத்தா: பெகாசஸ் வெளிப்பாடுகள் கவலையளிக்கின்றன என்றாலும் அது குறித்து நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை என்றே சொல்வேன். வெளிப்படையாக நேர்மையாகச் சொல்வதென்றால், இந்த அரசாங்கம் மட்டுமல்லாது, கண்காணிப்புக்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் உருவாகியுள்ள பதட்டத்தில் உண்மையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜனநாயகங்களும் தோற்றே இருக்கின்றன. அதாவது பிரிட்டன், அமெரிக்காவில் உள்ள அரசாங்கங்களும் தங்கள் குடிமக்கள் மீதே உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளன என்று சொன்னாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
கரண் தாப்பர்: நான் இந்த அரசாங்கம் மாட்டிக் கொண்டிருப்பதாகவே சொல்ல வருகிறேன். அரசியல் எதிரியாக இருக்கக்கூடிய ராகுல் காந்தியின் நண்பர்களில் இருந்து பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண்மணிகள் மற்றும் சாதாரண மக்கள் என்று அரசுக்கு எதிராகப் பல்வேறு வகையில் பலரும் பரவியிருப்பது குறித்து நீங்கள் கவலைப்படவில்லையா?
பிரதாப் பானு மேத்தா: கண்காணிப்பு மிகுந்த கவலையளிப்பதாகவே இருந்தது. அது உள்ளார்ந்த கவலையை ஏற்படுத்தியதாக, சில வழிகளில் வெளிப்படையாக இடைஞ்சல் செய்வதாகவும் இருந்தது. ஏனெனில் குடிமக்கள் என்ற நமக்கான தகுதியைக் குறைப்பதாக அது இருந்தது. தனியுரிமை என்பது என்னிடமுள்ளதை மறைத்துக் கொள்வதாக மட்டுமே இருக்கவில்லை. அது அடிப்படை உரிமை சார்ந்ததாக இருக்கிறது. அரசு அதனுள் ஊடுருவது ஆச்சரியமளிக்கவே செய்கிறது. ஜனநாயகத்தின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால் – எடுத்துக்காட்டாக, 1960களில் நடைபெற்ற குடிமை உரிமைகள் இயக்கத்தில் எஃப்.பி.ஐயின் பங்கு ஒருவகையில் இது போன்றே இருந்தது. ஜனநாயக அரசுகள் விரிவான கண்காணிப்புக்குத் தயங்குவதில்லை என்பதற்கான எச்சரிக்கையாகவே அது இருந்திருக்க வேண்டும். எந்த அளவிற்கு அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே எழுகின்ற கேள்வியாக உள்ளது.
கரண் தாப்பர்: கண்காணிப்பு நடக்கிறதென்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர இந்தியாவில் அது நடப்பதற்கான வாய்ப்பில்லை என்று நினைத்ததாலேயே அதுகுறித்து நாம் அதிர்ச்சியடைந்தோம் இல்லையா?
பிரதாப் பானு மேத்தா: உண்மையில் நான் ஆச்சரியப்படவில்லை. அதாவது அவ்வாறு நடக்கிறது என்பது குறித்து யாராவது ஆச்சரியப்பட்டிருப்பார்களா என்பது குறித்தே நான் ஆச்சரியப்படுகிறேன். உண்மையாகச் சொல்வதென்றால் அவர்கள் பிடிபட்டதுதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
கரண் தாப்பர்: முன்னர் நிறுத்திக் கொண்ட விஷயத்திற்கு இப்போது வருகிறேன். அடிக்கடி நீங்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் கவலைக்குரிய மூன்றாவது பகுதியான நீதித்துறை – குறிப்பாக உச்சநீதிமன்றம். அதை இவ்வாறு சொல்லலாம் என்று நினைக்கிறேன். 1970களின் நடுவில் ஜபல்பூர் மாவட்ட துணை நீதிபதி வழக்கிற்குப் பிறகு, இந்திய மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு ஆதரவாக மிகப் பெரிய அரணாக உச்சநீதிமன்றம் இருக்கும் என்றே அனைவரும் கருதினர். ஆனால் சமீப காலங்களில் அடிப்படை அரசியலமைப்பு முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகள், காஷ்மீர் பிரச்சனை, தேர்தல் பத்திரங்கள், ஆட்கொணர்வு, இன்னும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் வேண்டுமென்றே வழக்குகளை விசாரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் பிரச்சனைகளைத் தள்ளிப் போட்டிருக்கிறது. அந்த வழக்குகளின் விளைவுகள் அரசாங்கத்தைச் சங்கடப்படுத்தக்கூடும் என்று கருதியதால் அவ்வாறு செய்திருக்கலாம். அரசியலமைப்பு தொடர்பான சட்டப் பிரச்சனைகளில் நீதிமன்றம் தன்னுடைய கடமையைத் தட்டிக் கழித்திருப்பது எந்த அளவிற்கு கவலையளிப்பதாக இருக்கிறது?
பிரதாப் பானு மேத்தா: அது கவலையளிப்பதாகவே இருந்தாலும் அதைப் பற்றிய சற்று நுணுக்கமான வரலாற்றுப் பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. இந்திய நீதித்துறை பற்றிய எனக்கிருக்கும் அறிவார்ந்த பார்வையைக் கொண்டு அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கும், அரசாங்கத்தைப் பொறுப்பாக்குவதற்கும் இந்திய நீதித்துறையிடம் உள்ள திறன் மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே நான் கூறுவேன். நீதித்துறையின் செயல்திறன் மிக மோசமாக இருக்கிறது. நடைமுறையில் அது அரசியல் ஸ்தாபனத்தை எதிர்த்து ஒருபோதும் நின்றிருந்திருக்கவில்லை.
எடுத்துக்காட்டாக ஜபல்பூர் மாவட்ட துணை நீதிபதி வழக்கில் ஏற்பட்ட அதன் தோல்விக்கான செயல்திறன் இழப்பீடாகவே பொதுநல வழக்கு குறித்த புரட்சி இருந்தது. ஆனால் உண்மையில் அதிலும் கூட வழங்கப்பட்ட தீர்வுகளைக் காட்டிலும் அதன் அறிவிப்புகளே மிகவும் பிரமாண்டமாக இருந்திருக்கின்றன. அதுபோன்றதொரு வரலாறு நீதித்துறைக்கு இருக்கின்றது.
கரண் தாப்பர்: அப்படியென்றால் நாம் நீதிமன்றத்தை கூடுதலாகவே நம்பி பாராட்டியிருக்கிறோமா?
பிரதாப் பானு மேத்தா: ஆமாம். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு நீதித்துறையை நம்பியிருக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நீதித்துறையை நாடினால், ஏற்கனவே அந்தப் போரில் தோற்று விட்டீர்கள் என்றே அர்த்தம்.
அந்த அளவுகோல்களின்படி பார்த்தாலும்கூட, கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் ஒரு வகையில் அடிப்படை அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து விலகி நின்றிருப்பது முதலாவதாகத் தெரிகிறது. இரண்டாவதாக தன்னுடைய கொலீஜியம் அமைப்பு செயல்பாடு மூலமாக நீதிபதிகள் பதவி உயர்வு பெறும் விதம், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் விதம் போன்ற விவகாரங்களில் நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்திலிருந்து விலகி மிகவும் மோசமாக நடந்து கொண்டிருப்பது நீதிமன்றம் நியாயமாக நடந்து கொள்ளும் என்பதைக் கூற முடியாததாக்கி இருக்கிறது.
கரண் தாப்பர்: ஆட்கொணர்வு பற்றி இப்போது எடுத்துக் கொள்ளலாம். அது எந்தவொரு ஜனநாயகத்திலும் எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கின்ற மிக முக்கியமான அடிப்படை உரிமையாகும். சமீப காலங்களில் நீதித்துறையின் செயல்திறன் முரணுடனே இருந்து வருகிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அர்னாப் கோஸ்வாமிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், ஓராண்டிற்கும் மேலாக குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் சித்திக் கப்பன் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட காஷ்மீர் விஷயத்தில், நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு மனு மீதான வழக்குகள் விசாரிக்கப்படவே இல்லை. சில வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே காலாவதியாகியுள்ளன. கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானவர்களின் அவலத்தை உச்சநீதிமன்றம் கண்டு கொள்ளாதிருந்தது. இந்திய குடிமக்கள் மீது இந்த நீதிமன்றத்திற்கு எந்தவித அக்கறையும் இருக்கவில்லை என்றே தெரிய வந்திருக்கிறது.
பிரதாப் பானு மேத்தா: தாராளவாத அரசியலமைப்பு ஜனநாயகத்தின் தலைமை நீதிமன்றமாக இருக்கின்ற உச்சநீதிமன்றம் தனது கடமைகளைத் துறந்து விடக் கூடாது என்ற கருத்தை மீறியிருக்கிறது. நீங்கள் சொன்னதைப் போல எப்போதாவது அது பிறப்பிக்கின்ற உத்தரவுகளும்கூட ஒரே போன்றதாக இருப்பதில்லை. அர்னாப் கோஸ்வாமி விவகாரத்தில் நீதித்துறை வழங்கிய தீர்ப்பு உங்களுக்குத் தெரியும். வேறெதற்கும் முன்னுதாரணமாக அந்த தீர்ப்பு அமைந்திருக்கவில்லை. பிணை வழங்குவது, பிணையை நிறுத்தி வைப்பது போன்ற நடைமுறைகள் இப்போது மேலும் மோசமாகி இருக்கின்றன.
எனவே தரப்படுகின்ற அழுத்தத்தாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்ற கருத்தை உதறித் தள்ளி விட முடியாது. ஒருவேளை அரசாங்கத்திற்காக உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற உண்மையான விசுவாசிகள் அதன் சித்தாந்தத்திற்கு மாறியவர்களாக இருப்பதாலும் அவ்வாறு நடந்திருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும் தான் செய்ய வேண்டிய பணிகளை உச்சநீதிமன்றம் செய்திருக்கவில்லை என்பதே உண்மை.
கரண் தாப்பர்: உச்சநீதிமன்றம் நம்மை ஏமாற்றுகின்றதா?
பிரதாப் பானு மேத்தா: அவ்வாறு சொல்லலாம்.
கரண் தாப்பர்: சற்று முன்பு நீங்கள் விமர்சித்த கொலீஜியம் அமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையிலுள்ள உறவு பற்றி என்ன சொல்வீர்கள்? 2014 செப்டம்பரில் கோபால் சுப்ரமணியம் தொடங்கி, பலமுறை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களை இந்த அரசாங்கம் நிராகரித்துள்ளது அல்லது கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரங்கள் எதிலும் தன்னுடைய நியமனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உண்மையில் அந்த நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை நியாயம் என்று கருதியே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்துள்ளது. அதற்கு மாறாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் பலருக்கு அரசாங்கம் வேலைகளை வழங்கி வருகிறது. நீதிபதிகள் பலரும் பகிரங்கமாக பிரதமரைப் புகழ்ந்து பேசத் துவங்கியுள்ளனர். இருவருக்குமிடையே தங்களுக்குச் சாதகமாக இருந்து வருகின்ற நெருக்கமான உறவு கவலையளிக்கும் வகையில் இருக்கின்றதா?
பிரதாப் பானு மேத்தா: தனக்கான நீதிபதிகளை கொலிஜியம் தேர்வு செய்து வந்த போதிலும் – அதுகுறித்த வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொஞ்சம் சொல்கிறேன் – சற்றே தளர்வாகச் சொல்வதானால், அது எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை நோக்கி ஒரு கண்ணை வைத்துக் கொண்டேதான் இருந்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ‘தேசத்தின் மீட்பர்’ என்று புகழ்ந்து நீதிபதி பி.என்.பகவதி எழுதியிருந்த நம்ப முடியாத அந்த வெளிப்படையான கடிதம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆக இன்று நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பவற்றிற்கு ஏற்கனவே முன்மாதிரிகள் இருக்கின்றன. ஆனால் இப்போது அதன் அளவு, தீவிரம் மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. இப்போதைய அரசு நிர்வாகி அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்திய ஒருவரின் பெயரை உச்சநீதிமன்றம் கைவிடுகின்ற வரை நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் நியமனத்தை பதினாறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அது இதுவரையிலும் நாம் கண்டிராத அளவிலான செயலாகும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த கோகாயின் நடத்தையை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, நீதிபதியாக இருந்த ஒருவர் தன்னுடைய சொந்த காரணத்தை முன்னிறுத்தி செயல்பட்ட நிகழ்வை உலகில் உள்ள எந்தவொரு நீதித்துறையின் வரலாற்றிலும் காண்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். நீதி குறித்து இருக்கின்ற அடிப்படை அனுமானங்கள் அனைத்தும் முற்றிலுமாகப் புறந்தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
கரண் தாப்பர்: நீதிபதி கோகாய் பின்னர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக்கப்பட்டார். அவருக்கு முன்பாக நீதிபதி பி.சதாசிவம் கேரளாவின் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டிருந்தார்.
பிரதாப் பானு மேத்தா: ஆமாம். இதுபோன்ற நடைமுறை இன்னும் தொடரும் என்றே நினைக்கிறேன்.
கரண் தாப்பர்: இப்போது தங்கள் அமர்வுகளிலேயே நீதிபதிகள் வெளிப்படையாக பிரதமரைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே நெருக்கமின்மை இல்லாமல் போயிருக்கிறது இல்லையா?
பிரதாப் பானு மேத்தா: நெருக்கமின்மை இருக்கவில்லை என்பது மட்டுமல்லாது, அரசாங்கம் தன்னுடைய சித்தாந்தப்படி செய்வதை அவர்கள் இப்போது சட்டபூர்வமாக்குவதும் நடந்து கொண்டிருக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா வெளிப்படையாக, கருத்தியல் ரீதியாக அரசாங்கம் செய்வதைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கிறார்.
கரண் தாப்பர்: அரசாங்கத்தை சங்கடப்படுத்தக் கூடும் என்று உணருகின்ற அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. அதுபோன்று எழுகின்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்கான வழியாகவே அது இருக்கிறது.
பிரதாப் பானு மேத்தா: சங்கடத்தைத் தவிர்ப்பதற்கான வழியாக அது இருக்கின்ற அதே நேரத்தில் அதிகாரங்களை நிறைவேற்றுபவர்களைப் பொறுப்பேற்க வைக்க மறுப்பதாகவும் உள்ளது.
கரண் தாப்பர்: ஆக இவையனைத்தும் உச்சநீதிமன்றம் நம்மைக் கைவிட்டு விடுவதற்கான நிகழ்வுகளாகவே இருக்கின்றன என்று மீண்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கத் தவறுகின்ற போது உச்சநீதிமன்றம் குடிமக்களைக் கைவிட்டு விடுகிறது. காஷ்மீர், குடியுரிமை சட்டத் திருத்தம் அல்லது தேர்தல் பத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளை விரைந்து விசாரிக்கத் தவறுகின்ற போது அரசியலமைப்பை அது கைவிடுகிறது.
பிரதாப் பானு மேத்தா: ஆமாம். தான் வழங்குகின்ற தீர்ப்புகளில் முரணாக இருக்கும் போதும் அது அவ்வாறாகவே நடந்து கொள்கிறது.
கரண் தாப்பர்: அரசியலமைப்பு வழக்குகளை விசாரிக்காத போது, அரசியலமைப்பிற்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் நியாயமானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதே இங்கே மோசமான விளைவாக இருக்கிறது. சில நேரங்களில் அதை மாற்றுவதற்கு மிகவும் தாமதமாகி விடுகிறது.
பிரதாப் பானு மேத்தா: தகாத செயல்கள் மட்டுமல்லாது, அவை உருவாக்குகின்ற அச்சம் கலந்த சூழலும் நம்பிக்கைக்குரியவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆபத்துக்களைச் சந்திப்பதற்கு மக்கள் தயாராகவே இருக்கின்றனர். ‘ஆளுபவர் என்னைத் தாக்குகின்ற போது, குறைந்தபட்சம் நீதித்துறையாவது எனக்கு நீதி வழங்கும்’ என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இப்போது மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆனாலும்கூட பிணை பெற என்னால் முடியாது என்பதை அறிந்தே இருக்கிறேன். சுதா பரத்வாஜ் வழக்கை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு பிணை கிடைத்துள்ளது. ஒரு குடிமைச் சமூகத்தில் அபாயங்கள் குறித்த கணக்கீடுகள் வியக்கத்தக்க முறையில் மாறியிருக்கின்றன. ஆக தகாதவற்றை சட்டப்பூர்வமாக்குவது மட்டுமல்லாமல், அச்சத்தை உருவாக்குகின்ற கருவியாகவும் அது உள்ளது.
கரண் தாப்பர்: பொறுப்பு – ‘உச்சநீதிமன்றத்தின் குற்றம்’ என்றே சொல்வேன் – மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் அவர்களிடம் அரசியலமைப்பு குறித்த எதிர்வினை எதுவும் இல்லாததால் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் அல்லது வழக்கறிஞர்கள் என்று நாம் அனைவரும் உணர்கின்ற அச்சம், மன அழுத்தம் உணர்வுகள் அதிகரிக்கின்றன. நீதிமன்றங்களின் மூலம் இறுதி மாற்று வழி, தீர்வு என்று எதுவும் கிடைக்காததாலேயே நாம் அனைவரும் அவ்வாறு உணர்கிறோம்.
பிரதாப் பானு மேத்தா: உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை குற்றம் இன்னும் மோசமாக உள்ளது. ஏனெனில் அது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மிகவும் சுதந்திரமான நிறுவனம். மற்ற நிறுவனங்கள் எல்லாம் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கின்றன. குறைந்தபட்சம் கொள்கையளவில் தன்னுடைய நியமனம் உள்ளிட்டு முற்றிலுமாக தனித்து சுயமாக நிலைத்திருந்த நிறுவனமாகவே உச்சநீதிமன்றம் இருந்தது. அந்த வகையில் பார்க்கும் போது, அரசாங்கத்துடன் இப்போது அது உடந்தையாக இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: அப்படியென்றால், உச்ச நீதிமன்றத்தின் சீரழிவு என்பது மற்ற எல்லா சீரழிவுகளைக் காட்டிலும் மிகவும் மோசமானதாக இருக்கிறதா?
பிரதாப் பானு மேத்தா: முற்றிலும் சுயமாக ஏற்படுத்திக் கொண்டதாக இருப்பதால், அது எல்லாவற்றிலும் மிக மோசமான சீரழிவாகவே இருக்கிறது. கரண் தாப்பர்: உங்களுடன் பேச விரும்புகின்ற கவலையளிக்கும் நான்காவது பகுதிக்கு வருவோம். அது முஸ்லீம்களை நடத்துவது குறித்தது. முதலில் முஸ்லீம்கள் மீது ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டினார்கள். பின்னர் அவர்களை ‘பசு படுகொலை’க்கு உள்ளாக்கினார்கள். இப்போது கண்காணிப்பாளர்களும், கும்பல்களும் முஸ்லீம்கள் குர்கானில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். அசைவ உணவுக் கடைகளை நடத்த குஜராத்தில் அனுமதிக்க மறுக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் வளையல் விற்பனையாளர்கள், உணவு விற்பனையாளர்கள், காய்கறி விற்பனையாளர்களைக் கூட அனுமதிப்பதில்லை. தன்னுடைய மௌனத்தாலும், செயல்படத் தவறியதாலும் அரசாங்கம் மட்டுமல்லாது நமது சமூகமும் முஸ்லீம்களை இந்தியாவில் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குகிறது என்று கருதுகிறீர்களா?
பிரதாப் பானு மேத்தா: ஆமாம். பாஜகவின் சித்தாந்தம் ஹிந்துக்கள் பலியாகின்றார்கள் என்பதையே கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ‘பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு மீள்வது?’ என்ற கேள்வியை எழுப்பினால் அவர்களிடமிருந்து ‘முஸ்லீம்களின் ஆதிக்கச் சின்னங்களை முறியடிப்பதன் மூலம் ஹிந்துக்கள் பலியாவதை முறியடிக்கலாம்’ என்றே அதற்கான பதில் நேரடியாக வரும். கோவில்கள் மீது வெறி, முஸ்லீம்கள் மீதான ஹிந்துக்களின் கலாச்சார மேலாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதாகவே அந்தப் பதில் இருக்கின்றது. அவர்களிடம் இந்த கருத்தியல் திட்டம் குறித்த மறுபேச்சுக்கான இடம் எதுவும் இருக்கவில்லை.
இதற்கு எதிராக பெரும்பாலான குடிமைச் சமூகம் போதுமான அளவு கோபம் கொண்டு எழவில்லை என்றே நான் நினைக்கிறேன். அது நம்மைப் பாதிக்காது என்றே ஓரளவிற்கு நம்மில் பலரும் நினைத்து வருகிறார்கள். தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக எண்பது சதவிகித இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மாயையாக விரைவிலே மாறக் கூடும். சர்வாதிகார அரசுகள் பெரும்பாலும் ஒரு சமூகத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. இதுபோன்று வெளிப்படையாகப் பரப்பப்படுகின்ற வகுப்புவாத நச்சு சட்டப்பூர்வமாக்கப்படுவதை நான் என்னுடைய வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று தான் சொல்வேன். அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாது நமது நண்பர்கள், குடும்பங்கள் என்று நமக்குத் தெரிந்தவர்களின் வட்டங்களிலும், இந்தியாவின் அதிகாரம் மிக்க மேல்தட்டினரிடமும் அந்த நச்சு நன்கு ஊடுருவியுள்ளது.
கரண் தாப்பர்: மோடி அரசுதான் இப்போது அதை வெளிக்கொண்டு வந்திருக்கிறதா? அது மறைவாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்றே நான் ஊகிக்கிறேன். முன்பெல்லாம் அது எப்படியோ அடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாக கருதப்படவில்லை. மக்கள் அதற்கான ஆதரவுக் குரலை எழுப்பவில்லை. இப்போது அவர்கள் அதைப் பற்றி பேசுவதை, சில சமயங்களில் பெருமையுடன் பேசிக் கொள்வதை எப்படியோ மோடி ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்.
பிரதாப் பானு மேத்தா: அதை மட்டுமே மோடி ஏற்றுக் கொள்ள வைக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் அது இப்போது அரசியல் வெற்றிக்கான பாதையாக மாறியிருக்கிறது. அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, சாத்வி பிரக்யா போன்றோரை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாகச் சொல்வதானால் பாஜகவிற்குள் யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் வரலாறும் இருக்கிறது. இவர்கள் அனைவரும் இந்த வகையான வகுப்புவாத நச்சை வெளிப்படுத்துவதன் மூலம் அதிகாரக் கட்டமைப்பில் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கும் அனுபவசாலிகள். எனவே மேல்நோக்கி நகர்வதற்கான ஊக்கத்தொகைகளை வழங்குவதாக இருந்தாலும் நமது அரசியல் வட்டாரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடாததாக இருந்தவை இப்போது வியத்தகு வகையில் பெருமளவிற்கு ஏதோவொரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக தொழில்முறை வட்டாரங்களிலும் மாறி விட்டன.
கரண் தாப்பர்: இந்தியாவில் கிட்டத்தட்ட சாதாரண விஷயமாக மாறியிருக்கும் வகுப்புவாத ஆதரவு திரட்டலே கடந்த ஏழு ஆண்டு கால ஆட்சியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. யோகி ஆதித்யநாத் அடிக்கடி ‘அப்பா ஜான்’ பற்றி பேசுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நமக்குத் தெரியும். பிரதமரோ அவுரங்கசீப்பைத் தோண்டி எடுக்கிறார். அவரது மனதிலும் அதே கவனம் இருக்கிறது. இப்போது விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் ‘இஸ்லாம் என்பது புற்றுநோய்’ என்றும் அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் பகிரங்கமாக அறிவித்திருப்பதைக் கவனிக்கின்றேன். இதுபோன்ற நடத்தைகள் நமது குழந்தைப் பருவத்திலோ அல்லது இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவோ ஏற்றுக் கொள்ள முடியாதவையாகவே இருந்திருக்கின்றன. பொதுவெளியில் யாரும் இதைச் சகித்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்தியா எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறதா?
பிரதாப் பானு மேத்தா: இந்தியா மாறியிருப்பதற்கான அடையாளமாகவே அது இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் மட்டும் நடந்திருக்கவில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற போது, தெற்காசியாவில் உள்ள அனைத்து குடியேற்றங்களிலும் அது நிகழ்ந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். பாகிஸ்தானில் நடந்திருப்பதைப் பாருங்கள். ஒருவகையில் பாகிஸ்தானின் இஸ்லாமியமயமாக்கல் குறைந்து விடும் என்றே நாம் அனைவரும் நினைத்திருந்தோம். அந்த சிந்தனை வலுவிழந்து விடும் என்றே நாம் நினைத்திருந்தோம். ஆயினும் அது வலுவுடன் தனது வேகத்தை அதிகரித்திருக்கிறது. எனவே நாம் அனைவரும் இதிலிருந்து பின்வாங்கி, ‘ஒட்டுமொத்த தெற்காசியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?’ என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். 1947ஆம் ஆண்டின் தீர்வாக மதச்சார்பற்ற குடியரசாக இந்தியா இருக்கும் என்றே நாம் நினைத்தோம். இஸ்லாமிய நாடாக – குறைந்தபட்சம் தொழில்முறை நவீன நிறுவனங்களைக் கொண்ட மிதவாத இஸ்லாமிய நாடாக – பாகிஸ்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ந்நமக்கு இருந்தது. வங்கதேசம் உட்பட தெற்காசியா முழுவதும் தன்னுடைய பொருளாதார வெற்றி குறித்த பெருமையில் மூழ்கிக் கொண்டிருந்தாலும், உள்நாட்டில் அது தற்போது கடுமையான கருத்தியல்ரீதியான அழுத்தத்திலே இருந்து வருகிறது.
கரண் தாப்பர்: இலங்கையைப் பொறுத்தவரையிலும் அது உண்மையாகவே இருக்கிறதா?
பிரதாப் பானு மேத்தா: இலங்கையைப் பொறுத்தவரை அது நீண்ட காலமாகவே உண்மையாகவே இருந்து வருகிறது. தெற்காசியாவில் உள்ள குடியேற்றங்களுக்கு என்னவாயிற்று? ஒவ்வொருவருக்கொருவரிடையே சுதந்திரம், தனிப்பட்ட கண்ணியத்தை மதிக்கின்ற நவீன, சமூக ஒப்பந்தம் இருந்து வந்த அனைத்து இடங்களும் இப்போது முற்றிலும் பிணைக் கைதியாக கூட்டு சுயமோகத்திற்கு ஆட்பட்டவையாக மாறியுள்ளன.
கரண் தாப்பர்: இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பெரும்பான்மைவாதம் உலகின் இந்தப் பகுதியில் இப்போது பரவி வருகிறது என்ற உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவை மட்டுமே கணக்கில் கொண்டு பார்க்கும் போது இதற்கு முன்பாக, பிரதமர் அல்லது உத்திரப்பிரதேச முதல்வர் போன்ற அரசியல்வாதிகள் முஸ்லீம்களை ‘அப்பா ஜான்’ என்று குறிப்பிட்டதாக அல்லது அவுரங்கசீப்பைக் குறிப்பிட்டு அவர்களைக் கேலி செய்ததாக உங்கள் நினைவில் இருக்கிறதா? விரல்கள் யாரை நோக்கி சுட்டிக் காட்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். சிறுவயதில் அது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகக் கருதப்படவில்லை என்றாலும் இப்போது அது வழக்கமான ஒன்றாகி விட்டது.
பிரதாப் பானு மேத்தா: சரிதான். எனக்குத் தெரிந்தவரை இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவை 1930கள் மற்றும் 1940களில் மிகவும் பரவலாக ஊடுருவியிருந்ததாக நினைக்கிறேன். குடிமைச் சமூகத்திடம் அது குறித்து எழுந்த விளைவு நமக்குத் தெரியும்.
கரண் தாப்பர்: நல்லவேளை அவை நாம் பிறப்பதற்கு முன்பே நடந்தவை…
பிரதாப் பானு மேத்தா: ஆம். அணிதிரட்டல் நமக்கான படிப்பினைகளைக் கொண்டுள்ளது. ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது அவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் – ஒருவகையில் அந்த ஒட்டுமொத்த இயக்கமும் குறிப்பிட்டவர்களின் ஆதரவைத் திரட்டுவதாகவே அமைந்திருந்தன. ஆனாலும் அந்த இயக்கம் அடைந்துள்ளதைப் போன்ற போன்ற தேர்தல் வெற்றியை, பரவலான அங்கீகாரத்தை அதன் மூலமாக அவர்களால் பெற முடியும் என்று நாம் நினைத்திருக்கவில்லை.
கரண் தாப்பர்: அதுதான் மோடி அதற்கு கொடுத்திருக்கும் பரிசு.
பிரதாப் பானு மேத்தா: ஆமாம் அதுதான் மோடி அதற்கு கொடுத்துள்ள பரிசு. மேலும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி இங்கே எழுகின்றது – அவர்களுடைய சித்தாந்தத்தைத் தழுவுவது, உண்மையான கருத்தியல் மாற்றம் என்று எந்த அளவிற்கு மக்கள் மோடியை, அவரது ஆளுமையை நம்புவதால் நிகழ்ந்திருக்கிறது?
கரண் தாப்பர்: என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் தொடங்கும் போது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களுடைய பிரச்சாரம் முஸ்லீம்களை மிகக் கொடியவர்களாகச் சித்தரிக்கும் வகையிலேயே இருக்கப் போகிறது. அந்த மாநிலத்தில் இருக்கின்ற எண்பது சதவிகித ஹிந்துக்களுக்கும், இருபது சதவிகித முஸ்லீம்களுக்கும் இடையே துருவப்படுத்துதல், பிளவுபடுத்துதல் நடக்கப் போகிறது. அவர்களுடைய பிரச்சாரத்தில் பொருளாதார செயல்திறன், திறமையான நிர்வாகம், கோவிட்-19ஐ அவர்கள் நிர்வகித்த விதம் போன்ற பொதுமக்களுக்கு முக்கியமானவை எதுவும் இருக்கப் போவதில்லை. மக்களுக்கு இடையே உள்ள வகுப்புவாத உறவின் மேற்பரப்பைச் சொறிந்து விட்டு பிரச்சனையை மோசமாக்குவதாகவே அவர்களுடைய பிரச்சாரம் இருக்கப் போகிறது.
பிரதாப் பானு மேத்தா: அத்தகைய வகுப்புவாத துருவமுனைப்பு முயற்சியில் ஏற்கனவே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மோடியை நாம் மிகவும் குறைத்து மதிப்பிடுவது இங்குதான் என்று நான் நம்புகிறேன் – ‘இது அல்லது அது’ என்பது போன்ற சூழ்நிலையாக இல்லாமல் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. பொருளாதாரப் பிரச்சனைகளை அல்லது வகுப்புவாதப் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதற்கு இடையில் இருக்கின்ற முரண்பாட்டைப் பலரும் காண்பதில்லை. எப்படியாவது பொருளாதாரப் பிரச்சனைகளை நோக்கி உரையாடல்களைத் திருப்பி விட முடியும் என்றால், மறைவாக இருக்கின்ற வகுப்புவாத துருவமுனைப்பு மறைந்து விடும் என்ற மாயையில் நாம் ஒருபோதும் இருந்து விடக் கூடாது.
கரண் தாப்பர்: இந்த ‘மறைவான, வகுப்புவாத துருவமுனைப்பு’ இப்போது வெளியே வந்திருக்கிறது. அது தொடர்ந்து இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது என்றே நினைக்கிறேன். அது அப்படியே மறைந்து போய் விடாது இல்லையா?
பிரதாப் பானு மேத்தா: அது பிரித்தெடுக்க மிகவும் கடினமான நச்சாக இருக்கிறது. ஏற்கனவே சொன்னதைப் போல முப்பதுகள் மற்றும் நாற்பதுகளைப் பற்றி, இந்தியப் பிரிவினை மட்டுமல்லாது, அதனுடன் இணைந்து நடந்த பயங்கரமான வன்முறைகளுக்கும் காரணமான செயல்முறைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
கரண் தாப்பர்: மீண்டும் அதுபோன்று ஏதாவது இப்போது நடக்குமா?
பிரதாப் பானு மேத்தா: மீண்டும் அதுபோன்று மட்டுமின்றி வேறு விஷயங்களும் நடக்கலாம். ஒருவேளை மகாத்மா காந்தியின் படுகொலை நடக்காமல் இருந்திருந்தாலும் இந்த வன்முறைகள் எதுவும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காது என்பதே உண்மையில் என்னுடைய கணிப்பாகும். குடிமைச் சமூகத்தில் நிறுவப்பட்டு விட்ட இந்த நச்சு எதையெல்லாம் கட்டவிழ்த்து விடும் என்பது குறித்து நாம் மிகவும் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்றே நினைக்கிறேன்.
கரண் தாப்பர்: அதன் மூலம் இந்தியா தன்னைத்தானே முறித்துக் கொள்கிறதா?
பிரதாப் பானு மேத்தா: தன்னை மிக ஆழமாகவே இந்தியா முறித்துக் கொண்டிருக்கிறது. நான் இந்தியா குறித்து அதிகமாக கவலைப்பட்டதில்லை என்றாலும் வகுப்புவாதத்தின் இந்த செயல்முறைகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதைப் பற்றி கொடுங்கனவுகள் இப்போது என்னிடம் இருக்கின்றன.
கரண் தாப்பர்: அந்த மோசமான கொடுங்கனவு என்னவாக இருக்கிறது? ஒருவிதத்தில் நாட்டைத் துண்டாடுவது? அல்லது உள்நாட்டுப் போர்?
பிரதாப் பானு மேத்தா: அரசியல் வடிவம் எடுத்தால் அது மிகப்பெரிய அளவிலான வன்முறையாக இருக்கப் போகிறது. இந்தியாவின் மக்கள்தொகைப் பரவலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பிரிவினை இயக்கங்கள் அல்லது மற்றொரு பிரிவினை போன்ற வழக்கமான வடிவங்களை அது எடுக்காது என்றே நினைக்கிறேன். அரசியல் ரீதியாக அது சாத்தியமாகாது. ஆயினும் அரசால் தூண்டி விடப்படும் வன்முறைகள் அதிகம் கொண்டதொரு நாட்டை நம்மால் பெற முடியும். நமது மக்கள்தொகையில் இருக்கின்ற கணிசமான பிரிவினர் இந்த நாட்டை தங்கள் சொந்த நாடு என்று நினைத்துக் கொள்ள ‘அனுமதிக்கப்படாது’ முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படலாம். அது மிகவும் முக்கியமான விஷயம்; அவர்கள் உண்மையில் இந்த நாட்டை தங்கள் சொந்த நாடு என்றே நினைத்து வருகிறார்கள் என்றாலும் அவ்வாறு இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட செயல்முறையில் அல்லது ஒரு வகையான வன்முறையில் சென்று அது முடியலாம்.
கரண் தாப்பர்: இருபது கோடி மக்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் – முஸ்லீம் மக்களைப் பற்றி.
பிரதாப் பானு மேத்தா: இந்த வகையான வன்முறை நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு அது நிச்சயம் குறிப்பிட்ட சமூகங்களை மட்டுமே குறிவைக்காது என்றே நினைக்கிறேன். சமூகக் கட்டமைப்பிற்குள் ஊடுருவி, மிகச் சாதாரண அறிவாக அது மாறி விடும்.
கரண் தாப்பர்: இதுதான் மோடி விட்டுச் செல்லப் போகின்ற மிகப்பெரிய ‘பாரம்பரியம்’ என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவை வெளிப்படையான வகுப்புவாதம் கொண்ட நாடாக மாற்றுவது.
பிரதாப் பானு மேத்தா: இப்போதைய போக்கு தொடர்ந்தால், அதுதான் நடக்கும்.
கரண் தாப்பர்: முடிப்பதற்கு முன்பாக இன்னும் இரண்டு விஷயங்கள் பற்றி பேச வேண்டும். என்னைப் போலவே நாம் அனைவரும் பொது வாழ்வில் ஹிந்துமயமாக்கல் அதிகமாகி வருவதைக் காண்கின்றோம். நீங்கள் அன்றைய தினம் காசியில் என்ன நடந்தது என்று – பிரதமருக்கு ஹிந்து மத நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது பற்றி குறிப்பிட்டீர்கள். நகரங்களின் பெயர் மாற்றம், வரலாற்றைத் திருத்தி எழுதுவது, ராணுவ அணிவகுப்புகளில் ஆரத்தி எடுப்பது போன்றவற்றைப் பார்க்கும் போது அதேபோன்று வேறு விஷயங்கள் நடப்பதுவும் தெரிகிறது. மதச்சார்பின்மை குறித்த இந்தியாவின் அரசியலமைப்பு உறுதிப்பாடு தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டே வருகிறதா?
பிரதாப் பானு மேத்தா: சரிதான். நீங்கள் விவரித்தவாறு அனைத்து வழிகளிலும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பு குறித்து இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு நிச்சயமாகத் தோல்வியடைந்தே வருகிறது. இருப்பினும் இங்கே இரண்டு வகையான ஆபத்துகளை வேறுபடுத்துவது முக்கியம். இந்தியா பெரும்பான்மையாக ஹிந்துக்களைக் கொண்ட நாடு. ஜனநாயகம் ஆழ்ந்திருக்கும் போது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்கின்ற வட்டாரமயமான ஜனநாயகம் இருக்கும் போது ஏராளமான குழப்பங்கள் இருக்கும் என்றும் இந்தியாவின் கடந்த காலத்தை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது குறித்து ஏராளமான விவாதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். பெரும்பாலான விவாதங்கள் நியாயமானவையாகவே இருக்கும். பொதுக் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் விருப்பம் சில பிரிவினரிடம் இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். அவை அனைத்து சமூகங்களும் கடந்து செல்கின்ற செயல்முறைகளாகும். ஆனால் வெளிப்படையான குடிமைச் சமூக விவாதங்களாக இருந்திருக்க வேண்டியவற்றைத் திசைதிருப்புவதற்காக முறையான அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதே இந்த தருணத்தை மேலும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது.
இடைக்காலத்தைப் பற்றி விவாதிக்கலாம். தங்கள் மதங்களுக்கு இடையே நம்பிக்கை குறித்து குடிமக்கள் ரத்தம் சிந்த மாட்டார்கள் என்று உறுதியளிக்க முடியும் என்றால் நிச்சயமாக வரலாற்றாசிரியர்களின் உள்ளடக்கத்துடன் உள்ள பள்ளிகளை வைத்திருப்பது வேடிக்கையாகவே இருக்கும். சிறுபான்மையினரைத் தாக்கத் தொடங்கியதால் மட்டுமே அரசியல் மற்றும் கலாச்சார அதிகாரங்களின் ஒன்றிணைவை ஆபத்தானது என்று கூறி விட முடியாது. ‘உண்மையான ஹிந்துவாகக் கருதப்படுகின்ற எவரொருவருக்கும் நாங்கள் ஆதரவுடன் இருப்போம்’ என்று அரசியல் கட்சிகள் இப்போது கூறுவதே ஆபத்தானதாக இருக்கிறது.
கரண் தாப்பர்: அரசியல் கட்சிகள் என்று பன்மையில் சொன்னீர்கள். ஆனால் உண்மையில் அது ஒரேயொரு கட்சியாக – பாஜகவாக – மட்டுமே இருக்கிறது.
பிரதாப் பானு மேத்தா: மற்ற கட்சிகளும்கூட அதையே பின்பற்றுவதாக இருக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் தீர்த்த யாத்திரை ரயில்களை இயக்குவது பற்றி என்ன சொல்கிறீர்கள்? ராகுல் காந்தியின் எண்ணம் சரியாக இருந்தது என்றாலும், அவரும் ‘உண்மையான ஹிந்து என்று யாரைச் சொல்வது, யார் அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் வரையறுக்கப் போகிறோம்’ என்று கூறும் நிலைக்கு – ஓர் அரசியல் கட்சி சென்றிருப்பது அதான் நோக்கம் எதுவாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானதாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: ஆக இப்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மதத்தின் வெளிப்படையான அரசியல் ஈடுபாடுதான். அரசியல், மதம் ஆகியவற்றிற்கிடையே இருந்த வேறுபாடுகளும், பிரிவினையும் இப்போது குறைந்து கொண்டே இருக்கின்றன.
பிரதாப் பானு மேத்தா: பொதுவெளியில் அது கிட்டத்தட்ட குறைந்தே விட்டது.
கரண் தாப்பர்: இந்த இடத்தில்தான் மதச்சார்பின்மை சீரழிந்துள்ளதா?
பிரதாப் பானு மேத்தா: ஆமாம்.
கரண் தாப்பர்: நம்முடைய பொது வாழ்க்கை இன்னும் அதிக அளவிலே ஹிந்துமயமாகக் கூடுமா?
பிரதாப் பானு மேத்தா: முஸ்லீம்கள் தங்கள் மதத்தை பொதுக் கலாச்சாரத்தில் வெளிப்படுத்திக் கொள்வதைப் போல தன்னிச்சையான சுதந்திரத்துடன் அது இருக்கும் என்றால் அதனால் எந்தவொரு தவறுமில்லை. ஆனால் அரசியல் அதிகாரத்தை ஒழுங்கமைப்பதற்காக அது அரசாங்கத்தால் சீரமைக்கப்படுவதே அதை மிகவும் ஆபத்தானதாக்குகிறது.
கரண் தாப்பர்: மேத்தா! நரேந்திர மோடி பிரதமராக இருந்த ஏழு ஆண்டுகளில் நடந்திருப்பவை பற்றி இதுவரை பேசினோம். பாஜகவும் நரேந்திர மோடியும் 2024 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், பலரும் நம்புவதைப் போல், இந்தப் பத்தாண்டின் இறுதியில் இந்தியா என்ன மாதிரியான நிலைமையில் இருக்கும்?
பிரதாப் பானு மேத்தா: மனதில் கொள்ள வேண்டிய இரண்டு எச்சரிக்கை குறிப்புகள் நம்மிடையே உள்ளன. ஒன்று நாம் வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டது. ஆட்சி செய்யும் திறனைக் கொண்டு அது நிறைய மாறும் என்றே நினைக்கிறேன். இப்போதைய போக்கு தொடர்ந்தால், இந்தியா ஆளப்படக்கூடிய திறனற்றதாகி விடும் என்பதே என்னுடைய கணிப்பு. நம்மிடையே உள்ள பல முரண்பாடுகள் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வடிவங்களில் அப்போது வெளிப்படும்.
பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன் என்றாலும் மக்கள் பொருளாதாரத்திற்காக மட்டுமே வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. மிக அதிக அளவிலே பணவீக்கம், வேலையின்மை கொண்ட பொருளாதாரம் போன்றவை ஒரு கட்டத்தில் மோடிக்கான ஆதரவுதளத்தில் கூட சில அரசியல் எதிர்ப்புகள் அல்லது கோபம் என்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும். அரசியல் தீர்வுகள் இல்லை என்பதை நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த ஆட்சியைப் பற்றி சட்டப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்படக் கூடிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக பணவீக்கம் இருக்கிறது என்று நம்புகிறேன். பாஜகவை அது பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கருதுகிறேன்.
‘இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமான, நம்பகத்தன்மை வாய்ந்த எதிர்ப்பு உருவாகுமா?’ என்பதே இப்போது நம்மிடையே எழுகின்ற கேள்வியாக உள்ளது. மோடி முயற்சி செய்து கொண்டிருப்பதைப் போன்று இந்தியாவைப் போன்ற மிகப் பெரிய, சிக்கலான தேசத்தை முறையாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நம்புவது மிகவும் கடினம். எதிரணியினர் பலம் கொண்டிருக்கும் பகுதிகளும் இருக்கப் போகின்றன. ‘ஒளி எப்போதும் விரிசல் வழியாகவே உள்ளே வரும்’ என்று பிரபலமான பாடல் ஒன்று இருக்கிறது.
கரண் தாப்பர்: எதிர்க்கட்சிகள் சுதாரித்து எழுந்து கொள்ளா விட்டால் – தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளாவிட்டால் – தவறான நிர்வாகத்துடன் பணவீக்கம், பொருளாதாரம் போன்றவற்றை மிகவும் தவறுதலாகக் கையாண்ட போதிலும் மோடி எவ்விதத் தடையுமின்றி சுதந்திரமாகவே இயங்குவார் என்றே கருதலாம்.
பிரதாப் பானு மேத்தா: ஆமாம். பொருளாதாரத்தை அவர் கையாண்டிருக்கும் நிலை அவருக்கு பின்னடைவை உருவாக்கி பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது தற்போதைய செயல்பாடுகள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்ற விதத்தில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புடன் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
கரண் தாப்பர்: எதிர்க்கட்சிகளின் தோல்வி அல்லது இயலாமை மோடியைப் பொறுத்தவரை மற்றொரு பலமாகவே இருக்கிறது என்று கூறி நாம் முடித்துக் கொள்ளலாம்.
பிரதாப் பானு மேத்தா: ஆம். அவர்களே மோடிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு.
கரண் தாப்பர்: பிரதாப் பானு மேத்தா! இந்த நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி. இது எங்களுடைய பார்வையை அகலத் திறந்து வைத்திருக்கிறது. அற்புதமாக இருந்தது என்றாலும் ஆழ்ந்த மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முடிவுகள் எங்கே சென்று முடிவடையும் என்பது பற்றி உங்களிடம் கொடுங்கனவுகள் இருப்பதை நான் கவனித்துக் கொண்டேன்.
பிரதாப் பானு மேத்தா: அவ்வாறு வரக்கூடாது என்று விரும்பினாலும் உங்கள் நிகழ்ச்சியில் உண்மையையே பேசியாக வேண்டும்.
கரண் தாப்பர்: மிக்க நன்றி. கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
https://thewire.in/rights/full-text-damage-to-indian-democracy-under-modi-is-lasting-pratap-bhanu-mehta
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு