நூல் அறிமுகம்: தனஞ்செழியனின் “ஹைக்கூ என்றும் சொல்லலாம்” – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: தனஞ்செழியனின் “ஹைக்கூ என்றும் சொல்லலாம்” – பாரதிசந்திரன்



உண்மையில்லா நிதர்சனங்கள்

எழுத்தாளர் மு. தனஞ்செழியன் அவர்கள் ‘ஹைக்கூ என்றும் சொல்லலாம்’ எனும் கவிதைத் தொகுப்பைத் தற்பொழுது வெளியிட்டுள்ளார். நூறு ஹைக்கூ கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. கு அழகிரிசாமிக்கும், கி ராஜா நாராயணன் அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் கோவில்பட்டி ஊரைச் சார்ந்தவர் என்பதால் தனது ஊர் முன்னோடிகளுக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

மு. தனஞ்செழியனின் ஹைக்கூ உலகம் இரு வேறு வடிவமைப்புகளின் மேல் கட்டுமானம் பெற்றவைகளாக இருக்கின்றன. படைப்புக்கு அடித்தளமாய் சமூகமும், மனமும் காணப்படுகின்றன. அகவய நோக்கம் பெரும் பகுதியாகவும், சிறிய அளவில் புறவய நோக்குமாகவும் கவிதைகள் இருக்கின்றன. படைப்பின் வெளிப்பாடு முழுமையும் மாற்றம் எனும் புதுமைக் கருத்து ஒன்றை மையம் கொண்டுள்ளன. சிந்தனை மாற்றத்தை எதிர்கால சமூகம் பெறுவதற்கான வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன.

படைப்பு உருவாக்கம் குறித்து பேரறிஞர் அ.கா. மணவாளன் கூறும்பொழுது ”ஒரு மானுட வினை நிகழ்ச்சி, இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாகிறது. அதாவது, உலக இயற்கை நிகழ்ச்சி இலக்கிய நிகழ்ச்சியாக மாறுகிறது. பின்னர், இலக்கிய நிகழ்ச்சி இயற்கை நிகழ்ச்சியோடு தொடர்பு கொள்கிறது. தோற்றத்திற்கு அடிப்படையான இயற்கை நிகழ்ச்சியும் படைப்புடன் தொடர்பு கொள்ளும். இயற்கை நிகழ்ச்சியும் ஒரே தன்மை உடையனவாக இருப்பதில்லை. தோற்றத்திற்கு ஆதாரமான இயற்கை நிகழ்ச்சிக்கு உலகம் மானுட வாழ்க்கை முறைகள் அறிவு துறைகள் இலக்கியம் படைக்கும் படைப்பாளி என்னும் பல கூறுகளை உடையது” என்று கூறுவார். அதை அடிப்படையாகக் கொண்டுதான் மு தனஞ்செழியன் அவர்களின் கவிதைத் தொகுப்பை நம்மால் அணுக முடிகிறது

எழுத்தாளர் மு தனஞ்செழியன் தன் கவிதையில், கவிதையின் மொழி நவீனம் நோக்கிய பாடுபொருள் கொண்ட புது வடிவத்தை ஹைக்கூவில் முயற்சி செய்து பார்த்திருக்கிறார், நிகழ் முரண் எனும் நிலையில் பொருள் முரணாகவோ, சொல் முரணாகவோ காட்சிகள் விளக்கப்படுகின்றன. கவிதையின் வடிவமும் பொருள் வெளிப்பாடும், வாசகனை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இவற்றைச் சாதாரணமாய் மு.தனஞ்செழியன் இந்தக் கவிதைத் தொகுப்பில் செய்து பார்த்திருக்கிறார்.

”சுலபமாக இறந்து விட்டான்
சுடுகாட்டிற்கு தான்
வழி கிடைக்கவில்லை”

தமிழகச் சூழலில், நடைபெறும் நிகழ்வுகளில் தலித் இன மக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்காகவும், எரிப்பதற்காகவும் கொண்டு செல்ல அடைகின்ற இன்னல்களைச் செய்தித்தாள்கள் தினம் தினம் தந்து கொண்டே தான் இருக்கின்றன. இறந்த மனைவியின் உடலைத் தோளிலே சுமந்து கொண்டு நெடும் தொலைவு சென்ற கணவனின் வரலாற்றைக் கொண்டது தான் நம் நாடு. ”தலித் மக்களின் பிணம் எங்கள் வீதிக்குள் வரக் கூடாது” என்கின்ற மேல் தட்டு மக்களின் ஒதுக்குதலால் பிணத்தை ஆற்றின் நடுவிலும் கண்மாய் நடுவிலும் தலையில் தூக்கிச் செல்லும் அவலத்தை இக்கவிதை தோலுரித்துக் காட்டுகிறது.

இறந்து விட்டான், ஆனால் சுடுகாட்டிற்குப் போவதற்கு தான் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்ய? என்று ஏங்கும் தலித் இன மக்களின் துன்பத்தை இக்கவிதை வெளிப்படுத்தி விடுகிறது.

இக்கவிதையில் முதல் வரி ஒரு செய்தியாகவும், அதற்கு முரணான மற்றொரு செய்தி அடுத்த இரு வரிகளிலும் காணப்படுகின்றன. சுலபம் * சுலபமற்று என்கிற முறையில் பொருள் முரணை இக்கவிதை விளக்கி நிற்கிறது. அதேபோல்,

”கேட்காத காதுகளிடம்
கேட்டுக்கொண்டிருந்தான்
வேண்டுதல்”

எனும் கவிதையில், சமூகத்தின் அறிவு தளத்தில் உள்ள குறைபாடுகளைத் தன் கவிதைக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றார். இறை நம்பிக்கை இருக்க வேண்டியது தான். அதற்காக மூடத்தனமான பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பது மானிட சமூகத்திற்கு எவ்வளவு கெடுதல் ஆனது என்பதை இக்கவிதை விளக்குகிறது.

கவிஞன் காலத்தைத் தன் திருஷ்டியால் திருஷ்டிக்கிறான். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் உத்தமம் என உறுதிப்பட கூறுகிறான். அது நடைபெறாமல் இருக்கும்பொழுது நகைச்சுவையும் கிண்டலுமாகத் தன் கவிதையின் பாடுபொருளாய் ஆக்குகின்றான். கடவுள் சிலையாக இருக்கிறார் துன்பங்களைச் சொல்ல வந்த மனிதன், அச்சிலையிடம் தனக்கான வரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவு அபத்தம் என்று இக்கவிதை கூறுகிறது.

தன்னிடம் இருக்கும் கிழிந்து போன ரூபாய்களைக் கொடுத்துச் செருப்புத் தைத்துக் கொள்ளும் மேல்தட்டுச் சமூகம் நிறைந்த நாடு இது. நல்ல நோட்டுக்குக் கூட லாயக்கற்றவர்களாகத் தூரமாய் தள்ளி வைத்திருக்கும் நிலையைச்

”செருப்பு தைத்தவர்
மடித்து வைக்கிறார்
கிழிந்த ரூபாய் நோட்டை”

இக்கவிதை விளக்குகிறது. தொழிலாளியின் வாழ்க்கைச்சூழல் மிகக் கொடுமையானது. எல்லாருடைய செருப்பையும் கிழிந்து போனதைத் தைக்கும் தன்னிடம் கிழிந்த நோட்டுகளே வருமானால் அவன் என்ன செய்வான்? கிழிதல்* தைத்தல் எனும் பொருள் முரண் இக்கவிதையிலும் காணப்படுகிறது.

சொல் முரண் எனும் உத்தியில் முரண் சொல் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் கவிதைகளில் கையாளப் பெறுகின்றதை அறிய முடிகிறது. இக்கவிதை வடிவம் ஹைக்கூ கவிதைகள் வெளிப்பாட்டு உத்தியில் மிக முக்கியமானதாகிறது. கேட்கவில்லை கேட்கிறது எனும் சொல்லாட்சி கீழ்காணும் கவிதையை வடிவமைக்கிறது பாட்டோசை கேட்கவில்லை அதனால் நிசப்தம் எனும் ஒன்று கேட்கிறது என்கிறார் கவிஞர். நிசப்தம் எப்படிக் கேட்கும். வாசகரிடம் ஒரு கேள்வி எழுகிறது. கேட்பதற்கும் கேட்காமல் இருப்பதற்கும் காதுகள் தானே உணர்கின்றன? கேட்காமல் இருக்கிறது என்பதை உணர்வதும் கேட்பதால் தானே? என நுட்பமாக இந்தக் கவிதை ஒரு பொருளைத் தருகிறது இல்லாமையை இருப்பதைக் கொண்டு உணர்தல் தானே அறிவு. இதை,

”பாட்டோசை
நின்ற இடத்தில்
நிசப்தம் கேட்கிறது”

நமது சடங்குச் சம்பிரதாயங்கள் போன்றவை உண்மையைச் சில நேரம் காணாமல் செய்து சடங்குகளாகவே ஆக்கி விடுகிறது. மனம் உள்ளார்ந்த உண்மைகளை யோசிக்க மறுக்கிறது. இது போன்று உண்மை உணராது மானிடச் சமூகத்தை நாம் வதைக்கும் வதைப்புக்களை என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்புகிறார் கவிஞர் அவ்வாறு கேள்வி எழுப்பும் கவிதையாக,

”தாலி
கட்டியதால்
விதவையானாள்”

இக்கவிதையைக் கூறலாம். தாலியெனும் சடங்கு முறை இருப்பதால் தான் விதவை என்கிற மாற்றுக் கோலம் உருவாகிறது. தாலி கட்டாமல் இயல்பான பெண்ணாக இருந்தால் இப்பொழுதும் அப்படியே இருக்கலாமே? ஆனால் விதவை என்று ஒரு தாலி அறுத்துச் சடங்கு எனும் பெயரில் பெண்ணைத் துன்பப்படுத்துகிறோம் எனும் சமூகச் சிந்தனை கவிஞரின் தொலைநோக்கு சிந்தனையாக இங்கு வெளிப்படுகிறது. மற்றொரு கவிதையில் இதே போன்று மதம் சார்ந்த சிந்தனையை முன் வைக்கிறார். அக்கவிதை,

”கடவுளுக்கும்
காணிக்கைக்கும் இடையில்
கோயில்”

என்பதாகும். கடவுள், மனிதன் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால், கோயில், கோயில் சடங்குகள், காணிக்கை, உண்டியல், ஐயர், தீண்டாமை, வேதம் இவையெல்லாம் ஏன்? பணம் சம்பாதிப்பதற்கான ஏற்பாடாகவே சமூகத்தில் கோயில் உள்ளது அதை ஏன் மானிட சமூகம் புரிந்து கொள்ள மறுக்கிறது என்பதான முற்போக்குச் சிந்தனையை இந்தக் கவிதை தருகிறது. இக்கருத்தினைப் போன்று ஒரு கவிதையைக் கவிஞர் அறிவுமதி எழுதும்பொழுது,

”நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி”

என்கின்றார். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எனும்பொழுது தீயில் இறந்து இறங்கிக் கடவுளை ஏன் பார்க்க வேண்டும்? என்ற பெரும் கேள்வி இக்கவிதையின் ஊடாகக் கேட்கப்பட்டிருக்கிறது.

ஹைக்கூ கவிதைகளில் அழகியல் சேர்ந்த சமூகவியல் கவிதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. இயற்கைக்கு வேறொரு கற்ப்பிதம் அளிப்பது அழகியலின் சில வெளிப்பாடாகிறது. இதனை,

”தயங்கி விழும்
பனி
போர்வை இல்லா கிழவர்”

எனும் கவிதையினூடாகக் காணலாம். பனி இயற்கையின் ஒரு செயல். அது யாருக்காகவும் தன் செயலை மாற்றிக் கொள்ளாது ஆனால் கவிஞன் வீட்டின் வெளியே வயதான கிழவர் கட்டிலில் படுத்துத் தூங்குகிறார் எனவே, பனி அவரைத் துன்பப்படுத்த விடாமல் மெதுவாக அவர்மேல் விழுகிறதா? என்கிறார். வயதானவருக்குப் போர்வை இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் அவரிடம் இல்லை என்பதால் தானே பனியே நீ மெல்ல விழுகிறாய் என்று பனியைப் பார்த்துக் கேட்கிறான். இதேபோல் கவிஞர் அறிவுமதி தன் கவிதை ஒன்றில்,

”விடிந்து விடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்கா”

என்கின்றார். இரவு முழுவதும் விழித்திருக்கும் கூர்க்கா மேலான அன்பு இது இவ்வாறு கவிஞர்களின் சமூகப் பார்வை இரக்கக் குணம் உடையது.

கவிஞர் மு தனஞ்செழியன் கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தின் அவலத்தைப் பேசுவதாகவே இருக்கின்றன. புதுமையைப் பயன்படுத்தி இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. கவிதையின் கரு, வெளிப்பாட்டு உத்தி, சொல்லாடல் போன்றவற்றில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வர முயற்சித்து இருக்கிறார். இறப்பைப் பற்றிய கவிதைகள் அதிகமாக இருக்கின்றன. அவற்றில் சில தத்துவம் பேசுகின்றன. கவிஞரின் முதல் தொகுப்பு இது என்பதைப் போல் இல்லாமல், தரமான கவிதைகளின் தொகுப்பாகப் பண்பட்டு விளைந்து வெளிவந்திருக்கிறது இக்கவிதை தொகுப்பு.

பாரதிசந்திரன்
9283275782
[email protected]

குறும்பட விமர்சனம்: இந்திரனின் ராணி – பாரதிசந்திரன்

குறும்பட விமர்சனம்: இந்திரனின் ராணி – பாரதிசந்திரன்




தீராத பசியுடன் நிலைகொள்ள முடியாத வெறியுடன் ஓடித்தீரும் ஓட்டமிது. வசமான பாதையில், நீரோட்டங்கள் சுழன்று வெள்ளமெனப் புரண்டோடுகின்றன எல்லாவற்றையும் வாரிச் சுருட்டியபடி.

நெடிய வரலாற்றில், பதிவுகள் பதிவுகளாகவே இருந்து விடுவதில்லை, அவை திருப்பி வரலாற்றிற்கான பாதைகளை உருவாக்கி மலர்கின்றன.

அதைத்தான் இந்திரனின் ராணி குறும்படம் புராணப் பின்னணியுடன், நவீனகாலப் புனைவுகளை நிகராக்கி ஒரு புதுவிளையாட்டைப் பின்னிப் பிணைந்து விளையாட ஆரம்பத்திருக்கிறது.

மூன்று மணிநேரப் படத்திற்கான கதையை அரைமணி நேரத்திற்குள் அடைக்க முடிந்திருப்பது ஒரு பெரும் சாதனைதான். இரண்டு வெவ்வேறு தளங்களின் மையத்தைச் சுட்டும் ஒரு கோட்டின் நீள்பாதை அழகான திரைக்கதை மற்றும் காட்சிக் கோப்பு பிரமிக்க வைக்கிறது.

நெருடலற்ற புரிதலுக்கு உதவும் வசனங்கள். புராண வரலாற்றுப் பின்னணியையும், நிகழ்காலச் சித்திரிப்புக்களையும் கொஞ்சம் கூடச் சளிப்பில்லாமல் பார்ப்பவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

குறும்படத்தின் வெளித்தோற்றம் ஒன்று, ஆனால், மறைத்துக் கூறப்பட்ட உள்தோற்றம் வேறொன்று. இதைப் பார்ப்பவர்களால் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் இக்குறும்படத்தின் மாபெரும் வெற்றி.

வெளித்தோற்றக் கதை:- போதிமர் ரௌடிக் கும்பலின் தலைவன். ஆனால், தொழிலில் நீதி தவறாதவன். இவனின் மகள் இந்திராணி. போதிமரிடம் வேலை பார்ப்பவர்களில் முக்கியமானவர்கள் இந்திரனும். கிருஷ்ணனும் மற்றும் பாரியும், விநாயகமும் போதிமரின் கொள்கைகளுக்கு மாறாகக் கிருஷ்ணன் பல வேலைகளைச் செய்கின்றான். மேலும் போதிமரின் மகள், இந்திரனை விரும்புகிறாள் என்று தெரிந்தும், தனக்குத் திருமணம் ஆகிக் குழந்தை இருந்தும் பெண்போய்க் கேட்கிறான். போதிமரோ கிருஷ்ணன் தவறு மேல் தவறு செய்தாலும் அவனைக் கண்டித்து அனுப்பி விடுகிறார்.

இந்திரனுக்கும் இந்திராணிக்கும் தமிiழ் முறைப்படித் திருமணம் நடக்கிறது. கிருஷ்ணன் போதிமரைக் கொன்று ரௌடிக் கும்பலின் மாபெரும் தலைவனாகிப் பணக்காரனாகின்றான். இந்திரனின் நண்பர்களில் பிடித்து மறைத்து வைத்துத் தனக்கு அடிமையாகி வேலை செய்யும்படி நிர்பந்திக்கின்றான். ஆனால் இந்திரன் சாமார்த்தியமாய்க் கிருஷ்ணனை மாட்டி  விடுகின்றான். எப்படி இதைச் செய்தான் என்பது தான் அழகான முடிவு.

உள்தோற்றக் கதை:- நமது சமூகப் பின்னணியில் மதங்கள், பூர்வீகக் குடிகளோடு பெருகிப் பெரும் வீச்சைக் கொண்டிருக்கும் சமயத்தில், வேறொரு இடத்திலிருந்து வந்தவொன்று பழைமைக்குள் ஊடுருவி பழைமைகளை அழிப்பதும், தானே முன்னிலை பெற்றதும் வரலாறு.

 அதே போல் தான் பூர்வகுடிகளான இம்மண்ணின் மைந்தர்கள். அவர்கள் நிலையான கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்ந்தனர். அவர்களிடம் நீதியும் நேர்மையும் இருந்தன. ஆனால், இவர்களிடையே புகுந்து இவர்களுக்காக வேலை செய்வதாக நடித்து, நம்ப வைத்துத் தலைமையைக் கொன்று குவிக்கவும் செய்தவர்கள் தன்னை மேல்தட்டு எனக் கூறிக் கொண்டனர்.

சூதும் வாதும் செய்து பெரும் செல்வாக்கைப் பிடித்தவர்கள். நாட்டின் மைய முதுகெலும்பை ஒடித்து எறிய நினைத்தார்கள். அவர்களின் சூழ்ச்சியால், அடிபணிய வேண்டிய சூழ்நிலையில் பூர்வீகக் குடிகள் இருந்தார்கள்.

மதம், சாதி, நாடு. வேற்றினம் எனும் குறியீடுகள் தொன்மக் கதையான இந்திரனின் கதையோடு ஒத்து ஒப்புமையாக்கப்பட்டுள்ளன. அயோத்திதாச பண்டிதரின் இந்திரனின் கதை குறித்த ஆராய்ச்சிகளும் வெளிப்படுத்துதலும் இக்கதைக்கான அடித்தளமான ஒன்றாகத் திகழ்கிறது.

இந்திரன் மாபெரும் கடவுளாக மதிக்கப்பட்ட தமிழக மண்ணில் இன்று அக்கடவுளுக்குக் கோயிலே இல்லை. அக்கடவுளை வணங்கிப் பல நாட்கள் திருவிழா நடத்திய இம்மண்ணில் இந்திரனின் சிலைகளோ கோயில்களில் இல்லை. இதற்குப் பின்புலத்தில் நடந்தவைகள் தான் என்ன?

ஏன் இந்திரனைக் காமக்கடவுளாக மாற்றினார்கள்? ஆயிரம் கண்களையுடைய அசிங்கமான தோற்றமுடையவன் என அருவருக்கச் செய்தவர்கள் யார்? இந்திரவிழா எடுத்த செய்தியைச் சிலப்பதிகாரம் பேசுகிறது. காமன் திருவிழா என்று நாட்டர் வழக்காற்றியல் பாடல்கள் பழமை பாராட்டுகின்றன. ஆனால்? இந்திரனை மறைத்த மாபாதகன் யார்?

இவைதான் இக்குறும்படம் நமக்குள் விதைத்திருக்கும் கேள்விகள்.

இதற்கான வரலாற்றைத் தேடினால், நம்மை ஏமாற்றி வேறுதிசைகளுக்கெல்லாம் சென்றலைய வைத்துக் கிறுக்கு நிலைக்கு மாற்றியிருக்கிறார்கள் என்ற சூழ்ச்சி நமக்குத் தெரிய வரும். அதை நோக்கிப் பயணிக்க இக்குறும்படம் உதவுகின்றது.

மேலைநாட்டுக் குறுப்படங்களைத் தொட்டுத்தமிழிலும் நிறையக் குறும்படங்கள்  எடுக்க ஆரம்பித்து விட்டனர். அதில் இக்குறும்படமும் ஒன்று.

குறும்படச் சிறப்பு:
தமிழர் திருமணம் என்பதை ஆழமாக ஆய்வு செய்து 3000 ஆண்டுக்கு முந்தைய நமது பாரம்பரிய முறையிலான திருமண முறைகளைக் காட்டி இருப்பது மிக அருமையான காட்சியாகும். பெண் தனக்கு விருப்பமான ஆணிற்கு மாலையிட்டுத் தேர்வு செய்யும் முறை மற்றும் திருமண நிகழ்வுகள் அனைத்தும் தொன்மப் படிவ வெளிப்பாடுகளாகும்.

நான்கு வர்ணப் படை. வேத நூலைக் காட்டி மயக்குதல், சமூகநீதி, தொன்மை இவற்றை மறைத்து வைத்து வழிக்கு வர வைத்தல், ஒரே நாடு ஓரே தலைவன் என்பது, அடையாளக் குறிகளோடு வெளிப்படுவது, சின்னங்களைத் தரித்து மேம்பாட்டை உணர்த்துவது, கடல் எனும் நிற வெளிப்பாடு, தலைவனின் ஆடைக்குள் நிறக் குலக்குறி, நிலமற்ற உயரத்தில் விடுதலை வேள்விக்கான வட்ட இருப்பிடத்தில் ஆலோசனை, வெள்ளை யானை, போன்ற படிமக் குறியீடுகள் இயக்குநரின் ஆழமான வரலாற்று அறிவைப் பொதுவெளிச் சமூகத்துக்குக் காட்டுகின்றன.

ஒவ்வொரு காட்சியிலும் அடிமைத்துவத்தின் வடுக்களின் பிளிரல் சத்தங்கள்  ஓவென்று கதறுகின்றன.

இசை மிக நுணுக்கமாகப் படத்தில் கையாளப்பட்டுள்ளது. பின்னணி இசையின் உழைப்பால் பிரமாண்டத்தைத் தொட்டிருக்கிறது இக்குறும்படம். வானிலிருந்து எடுக்கப்பட்ட கேமராக் காட்சிகள் கன கச்சிதமாகப் பேசுகின்றன. வேறு வேறு கோணங்களில் புதிய வடிவில் காட்சிகள் மிளிர்கின்றன.

காட்சிகளுக்குள் நிறைந்திருக்கும் நிறங்கள் கூட, கதையில் கதாபாத்திரங்களாகும் நுணுக்கம் கையாளப்பட்டுள்ளன.

கடற்கரையில் கடைசியாக இரு நூல்களில் ஒன்று அதாவது நான்கு வருணம் நீருக்கடியில் அமிழ்ந்து கிடக்கும். இன்னொரு நூலைக் கடல் நிலத்திற்குள் கொண்டுவந்து தள்ளும். இதுதான் இயக்குநர் இவ்வுலகிற்குத் தரும் செய்தியாகும்.

நிலைத்து நிற்கப் போவது பூர்வ குடிகளின் நீதியும் தொன்மைப் பழக்கமும் தான் எனும் அச்செய்தி உண்மையில் நடக்குமா? கிளர்ச்சி வெடிக்குமா? பொய்கள் மறையுமா? நேர்மையின் கையில் நாடு கிட்டுமா? இத்தனை கேள்விகளுடன் படம் பார்ப்பவர் ஒவ்வொருவருடனும் இக்குறும்படம் ஒன்றிப் போய் விட்கிறது.

சிறு குறும்படம் பெரும் வரலாற்றைத் தூக்கி அலைகிறது. ஊதினால் தள்ளிப் போகும் காற்றுத் தான்,  மலை போல் மேகத்தைத் தூக்கிச் செல்கிறது. வானமும் தன்  நீலவெளிப்பாட்டால் உலகையே ஆள்கிறது.

இக்குறும்படத்தின் குழு:
இயக்குநர் : வினோத் மலைச்சாமி
இசை            : விக்கி
எடிட்டிங்   : ராம் குமார்
கேமரா     : ஹரிஹரன்.
நடிகர்கள்  :நரேன் பாலாஜி, முனியராஜ், ராகேஷ், சுகாசினி.

குறும்பட பெற்ற / பெறப்போகிற விருதுகள்:

  • இக்குறும்படம், இதுவரையிலும் 58 விருதுகளைப் பெற்றிருக்கின்றது.
  • பிரான்ஸ் இல் நடந்த கெய்ன்ஸ் உலக திரைப்பட திருவிழாவில் இப்படம் கலந்து கொண்டுள்ளது.
  • ஜப்பான் நாட்டில் நடக்கும் நிப்பான் திரைப்படத் திருவிழாவில் இப்படம் கலந்து கொண்டுள்ளது.
  • கொரியாவில் நடக்கும் திரைப்பட விழாவில் இப்படம் கலந்து கொண்டுள்ளது.
  • தேசிய அளவில் நடக்கும் தாதாசாகெப் பால்கே திரைப்பட விழா
  • Filmy sea international international film festival
  • Kerala international film festival
  • Bharath international film festival

Indhiranin Rani Shortfilm Review By Bharathi Chandran குறும்பட விமர்சனம் இந்திரனின் ராணி - பாரதிசந்திரன்

இக்குறும்படம் எந்தக் குறும்பட விழாவிற்குச் சென்றாலும், பரிசினைப் பெறாமல் வந்ததில்லை என்கிறார் இயக்குநர்  வினோத் மலைச்சாமி.

குறும்படம் இன்னும் ரீலீஸ் ஆகவேயில்லை. ஆனால் இப்போதே  பெரும் பூடகங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறும்படத்தைக்குறித்து மேலதிகச்  செய்திகளை கீழ்காணும் இந்தச் சொடுக்கியில், https://youtu.be/0YrLoWDtPrE  சொடுக்கிக் கண்டு களிக்கவும்.

Thamizh Sitrithazhkalin naveena padaippulakam by Bharathichandran Book review by Mu.Dhananchezhiyan பாரதிசந்திரனின் தமிழ் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம் நூல் அறிமுகம் - மு. தனஞ்செழியன்

நூல் அறிமுகம்: பாரதிசந்திரனின் தமிழ் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம் – மு. தனஞ்செழியன்



தமிழ் இலக்கிய உலகில் புதிய படைப்பாளியின் எழுத்துக்களின் திறவுகோலாகச் சிற்றிதழ்கள் அமைகின்றன. இதழ்கள், பெருமளவு விற்பனையைத் தனது நோக்கமாகக் கொள்ளாது. குறைந்த எண்ணிக்கையுள்ள தரமான வாசர்களைக் கொண்டிருக்கிற பத்திரிக்கைகள், வாசகர்களின் மனதையும் பண்பையும் பாழ் படுத்தாது, அவர்களது அறிவு, சிந்தனை, ரசனை ஆகியவற்றை வளம்பெறச் செய்யும் குறிக்கோளுடன் விசயங்களைச் சேகரம் செய்து தருகின்றன பத்திரிக்கைகள்.

“தங்களுடைய வியாபாரத்துக்கு வாணிபச் சந்தையை நம்பாது, தனிப்பட்ட வாசகர்களின் ஆதரவைத் தேடிப் பெற முயலும் பத்திரிக்கைகள். சிறு பத்திரிக்கைகள்” என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகின்றார். சிறந்த சிற்றிதழ்கள் பெரும்பான்மையான வாசகர்களைச் சென்றடையாமல் இருப்பது என்பது தமிழ் வாசகப் பரப்பின் சாபக்கேடு என்றே குறிப்பிடலாம். தமிழ் இலக்கிய உலகில் லாப நோக்கமில்லாமல் சிறந்த தரத்தில் வெளிவந்த பல சிற்றிதழ்களைப் பற்றியும் அதன் மறைவு காரணங்களைப் பற்றியும். தமிழ் வாசகர்கள் தொலைத்த சிற்றிதழ்களின் வரலாற்றுப் புத்தகத்தைப் பற்றியும். புத்தகத்தில் இடம் பெற்று இருந்த தரமான படைப்புகளை. இந்தப் புத்தகத்தின் மூலம் வரலாற்றுக் கோப்புகளாக மீட்டுத் தந்து இருக்கிறார் எழுத்தாளர், பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள்.
‘எதிர்காலத் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்’ என்கிறது தமிழ் இணைய ஊடகம்.

சிற்றிதழ்களின் கவிதைகளில் உலகம்
தமிழ்ச் சிற்றிதழ்கள் உலகத்தரத்திற்கு இணையான கவிதைகளைப் பரிசோதனை முயற்சியாகவும். பண்பாட்டு நிலையிலும் வருவதைச் சிற்றிதழ் வாசிப்பாளராக நான் உணர்கிறேன். இதைச் சிற்றிதழ் வாசிப்பாளர்கள் உணர்ந்திருக்கக் கூடும். சிற்றிதழ்களில் வெளிவந்த ஒரு கவிதையைப் பற்றி எழுத்தாளர் பாரதிசந்தரன் அவர்களின் ஆய்வுப் பார்வையில்.

அக உலகப்பயணங்களின் வழித்தோன்றும் கவிதைகள் அழகியல் தொனியிலும், உளவியல் பாங்கிலும், பின் நவீனத்துவ அடிப்படையிலும் பல்வேறு நிலைகளில் எழுதப்படுவதை உணர முடிகின்றது. எம். யுவன் எழுதிய இந்த உலகம் கவிதையில், இயற்கையினூடாய் தன்னை இணைத்துப் பார்த்துப் பின்விலகித் இறப்பினைக் கற்பனை செய்யும் கவிதையாக அமைகின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதுகளின் தன்மையும் கற்பனையோடு கலந்து எழுதப்பட்டிருக்கின்றது . இயற்கையோடு இணைந்து தன்னை வருணித்துத் தொடரச்சியாக,

நிலமும் நீரும் கொண்ட
சமரசத்தில் வாய்த்தது நான்.
வாசிக்கக் கிடைத்த தெரு, நானோ
கடவுளும் பிசாசும்
கயிறிழுக்கும் போட்டியில்
அறுபடாத கயிறானேன்.
என்னுடன் பிறந்து நான்
இல்லாது போக நானும்
அழியாக் காத்திருக்கிறது இவ்வுலகம்.
என்கின்றார். மனதளவில் நான் எனும் தன்மை மறைந்து போகும் முக்தியறிவு பெற்றிருந்தாலும் , என்னையும் அழிக்கக் காத்திருக்கிறது உலகம் என்ற எதிர்கால நிகழ்வுக் கற்பனை அழகாக்க கட்டமைக்கப் பெற்றிருக்கின்ற இக்கவிதையின் படைப்புத்திறன் கவிஞரின் அக உலகம் பிரதிபலிப்பாக இருக்கின்றது என்பதை இந்த நூல் அழகாக விரித்துரைக்கிறது.

சிற்றிதழ்களின் நவீன சிறுகதைகள்
சிறுகதைகள் தற்பொழுது. நவீன இலக்கியக் கோட்பாட்டுச் சிந்தனைகளோடு சிற்றிதழ்களில் எழுதப்பெறுவதைக் காண முடிகின்றது.
தமிழ்ச்சிற்றிதழ்கள் ஆண்டு தோறும் சுமார் இரண்டாயிரம் இதழ்கள் உலகில் வெளிவருவதாக அறிகிறோம். அந்தளவிற்கு இணையங்களும், வணிக இதழ்களும், சிற்றிதழ்ச் செய்திகளும் சிற்றிதழ்களின் வரவை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.

தமிழம், கீற்று, கூடு, நக்கீரன் (கனடா) , தமிழ் மணம், புக்டே, சொல்வனம், பதாகை, பதிவுகள், முத்துக்கமலம், இனிது, திண்ணை போன்ற இணைய தளங்களில் தொடர்ந்து சிற்றிதழ்களின் வரலாறு மற்றும் திறனாய்வுகள் வெளிவருகின்றன. அவற்றில் சிறுகதைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.

சுந்தரசுகள், தொடரும், முங்காரி, ஓடம், பயணம், நந்தவனம், நிழல், கனவு, சதங்கை, இலக்கு, கல்வெட்டு பேசுகிறது, காற்றுவெளி, போன்ற சிற்றிதழ்களில் நவீன கோட்பாட்டு அடிப்படையில் சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன.

வன்மி, இரா.நடராஜன், ஆதவன் தீட்சண்யா, நந்தவனம் சந்திரசேகரன், வா.மு.கோமு, கழனியூரன் விசும்பு, ஆ.சந்திரபோஸ், போன்ற எழுத்தாளர்கள் இவ்விதமான சிறுகதைகளை எழுதுகின்றனர் என்பதை இந்த நூல் மிக விரிவான நோக்கில் ஆய்ந்து பார்த்து, இலக்கிய உலகில் அவற்றைப் பதிவாக்கி வைத்திருக்கிறது. இவை காலத்தின் தேவையாகும். அதை இந்த நூல் நிறைவேற்றியிருப்பது பாராட்ட்த் தக்கதாகும்.
நனவோடை உக்தியைப் பயன்படுத்தி எழுதும் சிறுகதைகள் அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது. மொழிநடை, ஒவ்வொரு சிறுகதையிலும் வேறுபாட்டைக் கொண்டவையாகவும், வாசகரின் மனவோட்டத்தைச் சுண்டி இழுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளன.

தேவரசிகன் எழுதிய ‘நாங்கேட்டேல ஏகே’ எனும் சிறுகதை சுந்தரசுகன் இதழில் வெளிவந்தது. அக்கதை உளவியல்சார் கோட்பாட்டை உட்புகுத்திய கதையாகவும், மொழிநடை சிறக்க எழுதியதாகவும் இருக்கிறது. சமூக வெளிப்பாட்டை நவீனத்துடன் எடுத்துரைக்கும் சிறுகதைகள் அதிக அளவில் எழுதப்பெருகின்றன. உதாரணமாக விலங்குகள் வதைபடுவதை, ‘உறுப்பு’ எனும் கதை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. இக்கதையைப் பா. சத்தியமோகன் கனவு இதழில் எழுதியுள்ளார்.

பின்நவீனத்துவச் சிறுகதைகளாகவும், மாய எதார்த்தவாதச் சிறுகதைகளாகவும் பல கதைகள் சிற்றிதழ்களில் எழுதப் பெற்றமையைப் பாரதிசந்திரன் தெள்ளத் தெளிவாக வெளிப் படுத்தியுள்ளார். கவிதை, கதை, கட்டுரை, துணுக்குகள், எனப் படைப்பின் பல வடிவங்களையும், சிற்றிதழ்களில் வெளிவந்ததின் தன்மைகளையும் சாறாகப் பிழிந்து இந்த நூல் வடிவில் ஆசிரியர் ஊட்டுகிறார். படைப்புகளை இனம் காண்பதுடன், படைப்பாளிகளைப் பேரிதழ்கள் இனங்காணவும், சிற்றிதழ்கள் வந்த சிறிது காலத்திலேயே பாதியில் நின்று போன வரலாறுகளையும். இந்த ஆய்வு நூல் மூலம் நமக்கெல்லாம் மீட்டுத் தந்து இருக்கிறார் எழுத்தாளர் பாரதிசந்திரன்.

தொண்ணூறுகளில் தொடங்கி, இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு வரையிலும் வெளிவந்த பெரும்பான்மையான சிற்றிதழ்களைப் பற்றியும் அதன் படைப்புகளின் மீது ஒரு மீள் வாசிப்பையும், இந்த ஆய்வுக்கட்டுரை நூல் நமக்கு ஏற்படுத்துகிறது.

புத்தகத் தேவைக்கு:
பாரதிசந்திரன்
(முனைவர் செ. சு. நா. சந்திரசேகரன்)
திருநின்றவூர்
தொடர்புக்கு :- 92832 75782
சிவகுரு பதிப்பகம்
7/40 , கிழக்குச் செட்டி தெரு,
பரங்கிமலை, சென்னை – 600 016.
தொடர்புக்கு : 98403 42801

Poet Ameerjaan Poetry Collection Book *Kudaiyatravanin Mazhai* Book Review by Bharathi Chandran. கவிஞர் அமீர்ஜானின் ”குடையற்ற்றவனின் மழை” வெளிப்படுத்தும் உள்வெளி

கவிஞர் அமீர்ஜானின் ”குடையற்ற்றவனின் மழை” வெளிப்படுத்தும் உள்வெளி – பாரதிசந்திரன்



உருதிரண்ட நாட்களனைத்தின் வடிவமனைத்தும் மும்மன வீட்டினுள், அலமார்ந்து திரிய, கைவிட முடியா வலியோடு தூக்கிச் சென்றே பழகும் லாவகத்திலிருந்து, அனைத்து ரணங்களையும் ஒருசேரத் துடைத்துப் பாரம் குறைக்கும் முயற்சிகள் சில நேரம் படைப்புகளிலும் ஏற்படலாம்.

மேல் நோக்கிய மேகங்களோடுப் பேசித்திரியும் மாயம் இங்கில்லை. காலுரசும் நுரைகடலின்பப் பேதங்களைக் கண்டு வியக்கும் வியப்பில்லை. அது அதுபாட்டுக்கென வாழும், பூக்களோடு உடனமர்ந்து பேசுவதில்லை. இக்கவிதைத் தொகுப்பிலுள்ள இவைகள், வேறு மாதிரியான படைப்புச் செயல்பாடுகள்.

வசமானவைகள் சில பொழுதுகளில் வெளியேறத் துடிக்கலாம். பெற்றவைகள் விடுபடக் கேட்கலாம். நடந்தவைகள் மறக்கக் கூறலாம். யாதாயினும் உள்பாடுகள் காணமுடியாத வேதனைகளோடு உள்ளேயே சுற்றிச்சுற்றித் தன்னையும், தான் சேர்ந்தாரையும் சுகப் படுத்திக் கொள்ளும் வியாபகத்தன்மை கொண்டதென இக்கவிதைகளைப் படிக்கும்பொழுது உள்ளுணர்ந்து கொள்ள முடிகின்றது.

கவிஞர் அமீர்ஜானின், ”குடையற்றவனின் மழை” கவிதைத் தொகுப்பை மேற்காணும் வகைக்குள் தான் அடக்க முடியும். பாரம் முழுமையாகக் கொட்டப்பட்டிருக்கிறன. அழகுணர்ச்சியுடன் வேண்டுமானால், மடை மாற்றிக் கொள்ளலாம். அர்த்தச் செறிவும், உணர்வுப் பெருக்கும், சூழலின் நெருடல்களும், தெவிட்டாத பாசமும், எங்கும் விரவிக் கிடக்கின்றன.

ஒற்றைப் பேனாவின் வழி, ஓராயிரம் சுகவலிகள் இறக்கி வைக்கப்பட்ட மந்திர லேகியமுள்ள சீசா இந்நூல்.

இக்கவிதைகளுக்குள், வார்த்தைகளில்லை. நடந்தவைகள் நடந்தவை களாகவே சிலை வடிக்கப்பட்டுள்ளன. வசனமிலாத படங்கள் போல், கண்முன் காட்சிகள் விரிகின்றன. கவிஞர் என்ன நோக்கோடுக் காட்சியைக் கண்டாரோ, அதே கண்கள் அதைப் பார்க்கிற பொழுதுகளிலும், படிக்கிற பொழுதும் நம்மை வந்தடைகின்றன.

சமூகச் சீரழிவுகள், உள்மனப் போராட்டங்கள், பாசம், விரக்தி, கோபம், மாய உலகு எனப் பெரிய வட்டத்திற்குள் அனைத்துக் கவிதைகளும் இங்குமங்கும் அலைகின்றன. உயிரோடு அலையவிட்ட படியினால், தொட நாம் எத்தனித்த பொழுதே, நமக்குள் ஊடுருவி, நாமாகி விடுகின்றன.

பல கவிதைகள் அர்த்த முதுமையையும், பல கவிதைகள் கால முதுமையையும் அடையாளப்படுத்துகின்றன. விடுபடப் போகிறோம் என்கிற பயமேலிடல் கவிஞரின் வார்த்தைகளில் தீவிரத்துவம் அடைந்திருக்கிறது என்பதை(க்) [கவிஞரின் இறப்பின் பின்னேக் கவிதையைக் காணும் பொழுது, இதை] வார்த்தைகள் சொல்லி அழுகின்றன.

”திசை மாறி வந்த பட்டாம்பூச்சியொன்று
அமர்ந்து கொள்ள
அந்த இருளின் முதுகைத் தேடி
சிறகசைத்துக் கொண்டிருந்தது.”

சூபி ஞானத்தின் வழி, வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, இவ்வாழ்க்கை மிகச்சிறிதெனப் படுகிறது. இறப்பின் பின் ஏதெனத் தெரியாததாகலின் இருளென வியாபித்திருக்கும். அதைத் தேடிப் பட்டாம்பூச்சியாகிய உயிர் சிறகடித்துப் பறந்து செல்கிறது.

இறப்பின் நிலைப்பாட்டை ’அகிம்சையின் இம்சை’யைக் கவிதையில் அழகாகச் சிந்தித்து அழகுறக் கூறும்பொழுது,

”மவுனத்தைப்
பிய்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறது
பிரேத பேரமைதி”.

”நசுங்கினாலும்
அவஸ்தைப் படப் பிடிங்கி வெளிவர
மலரின் மரணத்தில்
நறுமணம்”

என்கிறார். அமைதியும், மவுனமும் ஒன்று தானே? இவருக்கு இல்லையாம். எப்படி இல்லை எனக் கேட்டால் ”பிரேதம் போல் எந்தவித அசைவின்றி உணர்வின்றி இருப்பது பேரமைதி, அசைவும், உணர்வும் மிகைப்படாமலிருப்பது மவுனம்” எனக் கவிதை மூலம் விளக்குகிறார். மலரெனத் தன்னுயிரை உருவகித்து மணம் வீசும் தன்மை கூறுகிறார்.

Poet Ameerjaan Poetry Collection Book *Kudaiyatravanin Mazhai* Book Review by Bharathi Chandran. கவிஞர் அமீர்ஜானின் ”குடையற்ற்றவனின் மழை” வெளிப்படுத்தும் உள்வெளி
கவிஞர் அமீர்ஜான்

உணர்வு இருந்தும், இல்லாதிருப்பதை ’இறந்தமைக்குச் சமம்’ என்கிறார். உணர்வோடு கூடிய மனித உயிரே மகத்தானது என்பதை ’நீ எப்படி?’ எனும் கவிதையில், விளக்கம் அளிக்கிறார். அதாவது,

”உறங்கிக் கொண்டிருப்பதைச்
சாக்காடென்றான்.
பாட்டனுக்குப் பாட்டன்
எக்காட்டில் இருக்கிறாய்?
நீ…
படுக்கையில் இருந்தால்
பிணம்.
நடந்தால்
நடைப்பிணம்.
உணர்வோங்க இருந்தால் தான்
உயிர்ப்பில் இருப்பதாகப்
பொருள்.”

என்பதாக அமைகிறது. வீடுகளில் சந்தோஷங்களும், மகிழ்ச்சியும் தழைத்தோங்க வேண்டும். அங்கு பாசமெனும் இசை ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாது, வெறுமையும் விரக்தியும் நிலவுமானால், அது வீடாயினும் வீடல்ல, அது மயானம் என்கிறார்.

”வாழ்ந்து கொண்டிருக்கும்
மயானத்தில் சூழப்பட்ட
யாருமற்ற வீடுகள்
கூரை வேய்ந்திருந்தாலும்
வீடெல்லாம் வீடல்ல”.

மனம் நிம்மதியற்ற பொழுதுகளில், குளம், மரம் யாவும் வெறுமையே போதிக்கின்றன. அதன் நடத்தைகளும் அவ்வாறே இருக்கின்றன.

”ஈரமற்றுப் போனாலும்
வாய் திறந்து கொரட்டையிடும்
குளங்கள்”.

”எங்கெங்கோ இருந்தாலும்
நிழலற்றுத்தான் இருக்கின்றன
மரங்கள்”

இந்த இரு இடங்களிலும், நிழலற்ற மரங்கள், நீரற்ற குளங்கள், என்பதெல்லாம், காணும் காட்சிகளில் இல்லை. அடி ஆழ மனவெளி வெறுமையின் வெளிப்பாடுகள் தான் இவைகள். எங்கோ, எதற்கோ, தேடித்தேடி அலைந்து திரிந்து, அது கிடைக்காமல் வாடும் நிலைப்பாட்டைக் கவிஞர் பல இடங்களில் விரக்தியுடன் எழுதி இருப்பதைத் தெளிவாக உணர முடிகின்றது. இதனை,

தென்னம்பாளையென
சிரித்துக் குலுங்கிய மனம் எல்லாம்
விடுவிக்க துணிய
உயிர்களில் எதிரொலிக்கும்
விரக்தியின் வேட்கை”.

எனும் கவிதை வரிகள் மூலமும், கீழ்காணும் கவிதை வரிகள் மூலமும் மெய்ப்பிக்கலாம்.

”ஆடையற்றவனுக்கு
ஆடைகளை
நெய்து கொடுத்தாலும்
நிர்வாணங்களோடு தான் திரிய
வேண்டி இருக்கிறது
நிர்பந்தங்கள்”.

”ஆணிவேர்” எனும் கவிதையை, மிக நுண்மையாக உருவகப்படுத்திப் புனைந்து இருக்கின்றார். அதில், மரங்களையும், மனிதர்களையும் உருவகிக்கின்றார். சோக உணர்வு மேலிடத் தம்மை, ஆணிவேராகக் கொண்டு, வாழ்வை இனம் காட்டுகிறார். அதில், வெறுமையையும், விரக்தியையும், எதிர்பார்ப்பும் உள்ளக் கிடங்கில் இருப்பதை, வலியுடனே வெளிப்படுத்தியுள்ளார்.

”முறிந்து விழும் பொழுதும்,
தொங்கும்போதும்,
விழுந்து விட்ட போதிலும்,
கைப்பிடித்து
அரவணைக்கவோ காப்பாற்றுவோ
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை”.

கவிஞர் அமீர்ஜானின் ’குடையற்றவனின் மழை’ எனும் இக்கவிதைகளில், சமகாலப் பிரச்சினைகள், அரசியல், உள்மனப் போராட்டங்கள், ஞானக் கவிதைகள், மாய உலகைக் காட்டும் மாய பிம்பங்கள், பாசம், காதல் போன்றவையுடன் இயற்கையின் மறுபக்கம் குறித்தும், அழகாகக் கவிதைகள் புனையப்பட்டுள்ளன, ஆனாலும், அதில் வெறுமையான வாழ்நாட்கள், யாருமற்ற வெளி, தனிமை, சோகம், வலிமிகுந்த நெருடல்கள் என உள்வெளியோடு பேசுவதான உணர்வுமிக்க கவிதைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அவை, இறப்பைத் தொட்டுப்பார்த்து நலம் விசாரிக்கின்றன. விரக்தியை இலைபோட்டுப் பரிமாறுகின்றனர்.

கவிஞரின் கவித்துவம் பல இடங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குத் தரமிக்கதான கவித்துவத்தை நிறைத்து வைத்து இருக்கின்றன.

மனதில் ஏதும் இல்லை எனும்படி, மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் கவிதைப் பேழைக்குள், பேனா மை வழியாக அனைத்தையும் அடைத்துத் தன் மனதை மென்மையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

கவிஞர் அமீர்ஜானின் கவிதைகள் இன்னும் பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய அற்புதமான கவிதைப் புத்தகம் ஆகும்.

பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
வேல்டெக் கல்லூரி, ஆவடி.