தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர். இவர் மேடையில் நின்றால் மேடை கம்பீரம் கொள்ளும். இவரின் கண்கள் பார்வையை வீசி நம்மை அளக்கிற போது மொத்த கவனமும் அவரின் கையுக்குள் அடங்கிவிடும். பிறகு சிரிப்பது அழுவது கொந்தளிப்பதென நம்மின் வெவ்வேறு உணர்வுகளை அவரின் பேச்சு வெளிக்கொணரச் செய்யும். இராமய்யாவின் குடிசை, உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி, என்று தணியும் போன்ற காத்திரமான நுட்பம் மிகுந்த சமரசமற்ற ஆவணப் படங்களை இயக்கியவர். இவரின் கட்டுரைத் தொகுப்புகளும் சிறுகதைத் தொகுப்புகளும் முக்கியமானவை. பாரதியார் மீது தீராத காதல் கொண்டவர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் நண்பராகவும் அசோசியேட் டைரக்டராகவும் பணிபுரிந்தவர். “என்று தணியும்” என்கிற திரைப்படத்தை இயக்கியவர். இவருக்கு இவ்வளவு பெரிய அறிமுகம் தேவைப்பட்டிருக்காது, முதல் வாக்கியமே அவரின் முகம் சொல்லியிருக்கும். இருப்பினும் இப்படி கடைசியில் பெயர் சொன்னால் கவிதை போன்றோர் அழகிருக்கும் அதனால். அவர் தான் தோழர் பாரதி கிருஷ்ணகுமார். இவரை பி.கே என தோழர்கள் அழைப்பர்.

Paadal Enbathu Punaipeyar Webseries 14 Written by Lyricist Yegathasi தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

இவர் மேடையில் என் தனி இசைப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசும்போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு தெலுங்குப் படம் ஒன்றை ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்தது. நான் படத்தின் மொத்தப் பாடல்களையும் எழுதுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியைத் தொடங்கினோம். இசை பிரபாகர். நகர வாழ்வின் சீர்கேடுகளைச் சித்தரிப்பது படத்தின் சூழல்.

பல்லவி:
நகரா இது நரகம் தானா
புதிதாய் ஒரு கிரகம் தானா
மனிதா நீ மனிதன் தானா
புதிதாய் வந்த மிருகம் தானா

இதயம் அதை மூடிவிட்டு
எதை நீ இங்கு தேடுகின்றாய்
கடனை வாங்கி வீடு கட்டி
கதவைச் சாத்தி ஓடுகின்றாய்

பெருமூச்சுதான் தெரு கேட்குதே
வழி தேடியே வயதாகுதே

சரணம் – 1
அழகாய் ஒரு வாழ்க்கை இல்லை
அடிமைத்தனம் மீளவில்லை
உறைந்தோம் சொட்டு ஈரமில்லை
உணவை உண்ண நேரமில்லை

எதைத்தான் நீ தேடுகின்றாய்
எறும்பாய் தினம் ஓடுகின்றாய்
உறக்கம் ஒரு விருந்தானதே
உணவும் இங்கே மருந்தானதே

சரணம் – 2
பாசம் விற்கும் பாக்கெட்டிலே
உறவும் வந்தால் படிக்கட்டிலே
மரணம் நடக்கும் எதிர்வீட்டிலே
இதயம் கிடக்கும் கிரிக்கெட்டிலே

இதயம் மிஷின் ஆனதடா
சிரிப்பும் மறந்து போனடா
கரவை செய்யும் மாடுமிங்கே
காகிதம் தின்று வாழுதடா

இந்தப் பாடலைப் பார்த்த பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். வாசிப்பும் ஆராய்ச்சியும் மிகுந்த ஓர் இடதுசாரி ஆளுமை என் வரிகளை ஒவ்வொன்றாய்ச் சொல்லி சொல்லி சிலாகித்தபோது என் கால் பாதம் தரையில் இல்லை. அந்தப் படம் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருந்தால் நகர வாழ்வில் சிக்குண்டு கிடக்கும் மனித வாழ்வின் வெக்கை அசலாக வெளிப்பட்டிருக்கும். அந்தப் படத்திற்கு “நண்பர்கள்” என்று பெயர் சூட்டியிருந்தார். நடிகர் விஜயின் “நண்பன்” படம் அதற்குப் பிறகு வந்தது. இந்தக் கதை பத்து நகரவாசிகளைப் பற்றியது. நகர வாழ்வு தந்த நெருக்கடி தாங்காமல் மரணத்தைத் தேடிச் செல்லும் மனிதர்கள் தாம் இந்த பத்துப் பேரும்.

தற்கொலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள் ஒன்று கூடுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, ஆனால் ஒவ்வொருவரும் சாக முடிவெடுக்கும் அளவிற்குப் பிரச்சனை என்பது அவர்களின் கணக்கு. நூறு நூறு விசயங்கள் பேசி. தற்கொலைகளுக்கான காரணங்கள் விவாதிக்கப் பட்டு இறுதியில் பேருந்து ஒன்றில் அந்த பத்து நண்பர்களும் ஏறிய பின்னர் படத்தின் இன்னோர் பாடல் தொடங்குகிறது.

பல்லவி:
அடடா இது சவப்பெட்டியா
நகரும் ஒரு பூந்தொட்டியா … (2)

இரையும் தேடிப் போகவில்லை
இதமாய் கொஞ்சம் வாழவில்லை
அடையும் நோக்கம் எதுவுமில்லை
உடைய செல்லும் பானைகளோ

நிறைவேறுமா – இது
பிழையாகுமா

சரணம் – 1
சருகாய் மனம் இளைத்தாரோ
சாவை வேண்டி அழைத்தாரோ
நரம்பே இல்லா வீணைகளோ
மதில்மேல் பத்துப் பூனைகளோ

முருகா வழி போகவிடு
முக்தி அடைந் தாகவிடு
கடனை கட்டு ஆளவிடு
கருணை கொண்டு சாகவிடு

தன்னை தூக்கியே – அட
தானே ஊர்வலமோ

சரணம் – 2
கடவுள் விரல் நீட்டவில்லை
பணமும் தலை காட்டவில்லை
உடலும் உயிர் தாங்கவில்லை
உலகம் விட்டுப்போக வந்தாரோ

பயணம் இங்கு போறோரை
மரணம் தடுத்தல் நியாயமில்லை
உலகம் கிழித்துப் போட்டிடுமோ
இவர்கள் ஒரே ஜாதகமோ

ஒத்த தேரிலே – அட
பத்து பேர் தானடா

இந்தப் பாடலை நான் வாசிக்கக் கேட்டுவிட்டு சில விநாடிகள் அமைதியாக இருந்தார் பி.கே. எப்படி இருக்கு தோழர் பாடல் என்றேன், அதற்கு அவர் தன் இரு முழங்கைகளையும் விரித்துக் காட்டினார். இரண்டு முழங்கைகளும் புல்லரித்திருந்தன.

நாகமலையின் அடிவாரத்தில் எங்கள் பணியான் கிராமம். கிழக்கும் மேற்கும் வீடுகள். வடக்கும தெற்குமே எங்களுக்கு விளையாடக் கிடைத்த திசைகள். வடக்கே மலை. தெற்கே காடு. அதற்காக பாம்புக்கும் தேளுக்கும் இவ்விரு திசையே வாழ்விடமெனக் கருதிவிடக் கூடாது. அவை திசையெட்டும் வாழும். வேறும் பாம்பும் தேளும் மட்டும் தானா என்று குறைபட்டுக் கொள்கிறீர்கள் தானே.. இருங்கள் வருகிறேன். என் சொக்கர் சியான் வீட்டுத் தாழ்வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முள்ளம் பன்றி முட்கள் இருந்தன. அதன் கதை பெரிது. அந்தக் கதையை நான் சொல்லப் போவதில்லை ஏனெனில் இது கதைத் தொடரல்ல. உடும்புகள் செல்லமாய் ஓடித்திரியுங்கள் சுவர்களில், என் மாமன்மார்களின் கண்களில் சிக்கிவிட்டால் தான் பிரச்சனை அவற்றுக்கு.

மற்றபடி இன்று நாகமலையில் மான்கள் அதிகமாகிவிட்டதால் ஒத்தையில் பைக் ஓட்டி வருகிற பயல்கள் சாலைகளில் அவை குறுக்கும் மறுக்குமாக பாய்கையில் சிக்கி விழுந்துவிடுகிறார்களாம். நரி அண்ணன்கள் எப்போதும் பிரபலம் தான், காவல்கார்களின் கண்களைக்கட்டி மலையில் ஆடுகளை மேய்த்து விடலாம் ஆனால் ஆடுகளை துவம்சம் செய்திடும் நரிகளே இங்கு ராஜா. அப்பறம் ‘கடைசி விவசாயி’ படத்தில் மாயாண்டி பெரியவர் மயிலை ரசிக்கிறார் அவ்வளதான். அந்நாளில் டேப் ரெக்கார்டரில் பாட்டைப் போட்டுவிட்டு நானும் மயிலும் நடன நிகழ்ச்சியே நடத்தியிருக்கிறோம்.(இதை நீங்கள் அப்படியே நம்பினால் நான் பொறுப்பல்ல).

எல்லாவற்றையும் விட உடைசாளி முட்களே என் பால்யத்தின் வில்லன்கள். உள்ளூர் பள்ளி முடித்து ஆறாம் வகுப்பிற்கு பெரிய பள்ளிக்கூடம் சேர்க்கும்போதுதான் செருப்பு வாங்கித் தருவேன் என்பது என் ஏழை ராஜ மாதாவின் கட்டளை. அதுவரைக்கும் உடை முள்ளுக்கு என் பாதங்களை ஒப்புக் கொடுத்துத்தானே ஆகவேண்டும். ஒரு நாள் என் உள்ளங்காலில் உடை முள் குத்தி ஒரு அங்குலம் இறங்கிவிட்டது.

உக்கார்ந்து பிடிங்கிப் பார்க்கிறேன், உயிர் போகிறது ஆனால் முள் வரவில்லை. எத்தனை குல தெய்வங்களைக் கூப்பிட்டிருப்பேனோ. பதினொரு வயதில் செருப்பு வந்துவிட்டது எனக்கு, ஆனால் இப்போதும் நாகமலை உச்சியிலிருந்து அடிவாரம் வரை என்னால் வெறும் பாதத்தோடு ஓடியபடி இறங்கிவர முடியும். ( குறிப்பு: நான் வேகமாக இறங்குவேன் என்றுதான் சொன்னேன், ஏறுவதில் வெறும் பாதம் என்பது சரி. வேகம் என்பதெல்லாம் நினைத்து மட்டுமே பார்க்கலாம்.)

Paadal Enbathu Punaipeyar Webseries 14 Written by Lyricist Yegathasi தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, நான் விளையாடித் திரிந்த காடும் மலையும் என் திரைப்படப் பாடலுக்கான சூழலாக அமையுமென்று. தம்பி பிரசாத் முருகேசன் ஒரு திரைச் சித்திரம் இயக்கினார். சசிக்குமார் நாயகன் வேல ராமமூர்த்தி வில்லன். மற்றும் நிகிதா விமல், நெப்போலியன். S.R.கதிர் ஒளிப்பதிவு. தர்புகா சிவா இசை. படம் “கிடாரி”. படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன் அவற்றுள். இன்று ஒன்று.

பல்லவி:
வெட்டருவா வீச்சருவா
போற இடம் வெட்டவெளி
எட்டு திக்கும் கள்ளிச் செடி
பதுங்குதடா ரெட்டப் புலி

வலசாருக் கூட்டம்
வழி சொல்லும் போடா
உட முள்ளு பாஞ்சா
உயிர் போகும் தான்டா

சரணம்:
யாராரோ காடு பாத்தாக
சாமி பூதம் எல்லாம்
கிடையாடு போட்ட பாதையில்
நீயும் நானும் போறோம்

ஊருக்குள் பல வேஷந்தான்
ஒரு நேரம் வன வாசந்தான்
சூதாட்டம் அட ஆடாம
சூரியனும் இங்கு முளைக்காதா

எளியது விடும் மூச்சில்
வலியது உலை காய்ச்சும்
உண்மையில் அரிசியில – அட
எவனுக்கும் பேர் இல்ல

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

₹2000 Tamil Movie Direction View Of Director Ruthran. அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை - இயக்குநர் ருத்ரன்

திரைப்பட அனுபவம்: அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை – இயக்குநர் ருத்ரன்



பின்கதைச் சுருக்கம் :

ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக, ஒன்றிய தணிக்கை வாரியத்தின் பார்வைக்குத் திரையிடப் படுகிறது. சென்னை மண்டலத் தணிக்கை வாரியத்தின் தலைமை அலுவலர் லீனா மீனாட்சி உள்ளிட்ட ஐவர், படத்தைப் பார்க்கின்றனர். பிறகு, படத்தின் இயக்குனரை அழைத்து, “படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியாது. தடை விதிக்கப் படுகிறது “என சொல்லப்படுகிறது. கருத்துப் பரிமாற்றம் செய்வதற்குக் காத்திருந்த இயக்குனர், “பேசுவோம்” என்கிறார். “பேசுவதற்கு எதுவும் இல்லை. நீங்கள் போகலாம்.” என்கிறார், லீனா மீனாட்சி.

அறைக்குள் சென்று, உடனே வெளியே வந்த இயக்குனரைப் பார்த்த சகாக்களுக்கு குழப்பம். ‘இவர் ஒரு கோபக்காரர். உள்ளே ஏடாகூடமாக நடந்திருக்குமோ ‘ என்னும் அச்சம். இந்த நிலையில், “படத்திற்குத் தடை” என இயக்குனர் சொல்லியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரே பேசினார்:”சிக்கல் வரும்னு எதிர்பார்த்தேன்.தடை வரும்னு நினைக்கல. பரவாயில்ல, பாத்துக்கலாம். ”

ஓரிரு நாட்களில், திரைப்படம், மறுஆய்வுக் குழுவுக்கு (ரிவைசிங் கமிட்டி) அனுப்பப்படுகிறது. பல நாட்களாகியும், மறுஆய்வுக்கழு படத்தைப் பார்ப்பதற்கான நாளும் நேரமும் குறிக்கப்படவில்லை. தணிக்கை வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “மறுஆய்வுக் குழுவின் தலைவர், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்காக, பாஜக-வுக்கு ஆதரவுப் பரப்புரையில் இருப்பதால், வாக்குப் பதிவுக்குப் பிறகுதான் படத்தைப் பார்ப்பார் ” என தெரிவிக்கப்பட்டது. இத்தகைய காரணம், ஏற்புடையதல்ல என்பது மட்டுமல்ல, நியாயமானதுமல்ல. கோடிக்கணக்கானப் பணத்தை செலவழித்து, வருடக் கணக்கில் உழைத்து உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு, ஒரு சராசரி அரசியல்வாதியின் பார்வைக்காக காத்திருக்க வேண்டும் என்பது அவலத்திற்குரியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

ஏப்ரல் 6, 2021-ல், வாக்குப்பதிவு முடிந்தது. அதற்கடுத்த இரண்டாவது நாளில், நடிகை கவுதமி தலைமையிலான பத்துப் பேர் அடங்கிய குழுவினர் படத்தைப் பார்த்தனர். இரண்டரை மணி நேரம் நீளம் கொண்ட படத்தைப் பார்த்துவிட்டு, மூன்றரை மணி நேரம் உள்விவாதம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, இயக்குனரை அழைத்து, நீக்கப்படவேண்டிய காட்சிகள், காட்சித் துண்டுகள்(ஷாட்ஸ்), உரையாடல்கள் மற்றும் மவுனிக்கப்பட வேண்டிய சொற்கள் ஆகியவைப் பற்றிய பட்டியல் சொல்லப்படுகிறது. நூற்றுக்கும் மேலான வெட்டுகளை லீனா மீனாட்சி முன்மொழிய, அவைகளை, எந்தச் சலனமும் இன்றி, நடிகை கவுதமி வழிமொழிகிறார்.

₹2000 Tamil Movie Direction View Of Director Ruthran. அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை - இயக்குநர் ருத்ரன்

“கடவுளை ஏற்கமுடியாது “, “சனாதனத்தை நீக்கவேண்டும் “, “பார்ப்பனியத்தை அனுமதிக்க மாட்டோம் “, “பாரத் மாதா கீ ஜே என சொல்லக்கூடாது ” என பட்டியல் போடுகிறார், லீனா மீனாட்சி. அதனை ஆமோதித்து தலையசைக்கிறார், நடிகை கவுதமி. படத்தின் ஜீவனான உரையாடல்கள் நறுக்கப்படுகிறதே என்னும் வருத்தம் இருந்தாலும், அவர்களை அவ்வாறெல்லாம், ‘முழங்க ‘ வைத்ததற்காக மனதிற்குள் மகிழ்ச்சியடைகிறார், இயக்குனர்.

அரசின் லஞ்சக் கலாச்சாரத்தை அம்பலப்படுத்தக் கூடாது, கார்ப்பரேட்டுகளை விமர்சிக்கக் கூடாது, மதவெறியைக் கண்டிக்கக் கூடாது, ரிசர்வ் வங்கியைக் குற்றவாளியாக்கக் கூடாது, ஒன்றிய அரசைக் குற்றவாளியென அறிவித்து தண்டிக்கக் கூடாது என்பன போன்ற, ‘கூடாதுகளால் ‘ பட்டியல் நிரம்பி வழிந்தது.

ஏறத்தாழ ஒருமணி நேர விவாதத்திற்குப் பிறகு, ஒரு முன்முடிவோடுதான் குழு செயற்படுகிறது என்பதை உணர்ந்து கொண்ட இயக்குனர், ‘பேசிப் பயனில்லை ‘ என்னும் முடிவுக்கு வருகிறார். ‘மக்கள் விரோத அரசியல் ‘, அதன் முகத்தைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொண்ட இயக்குனர், அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தைக் காட்டக்கூடாது எனவும், திருக்குறளை உச்சரிக்கக் கூடாது எனவும், சாட்சியம் சொல்வதற்காக ஒரு அமைச்சரை நேரில் அழைக்கும் அதிகாரம் வழக்காடு மன்றத்திற்கு இல்லை எனவும் சொல்லப்பட்டபோது அதிர்ச்சியடைகிறார். தணிக்கைக் குழுவின் ஆணவத்தை எதிர்த்து, ஆவேசமாக, கேள்விகளை எழுப்புகிறார். ஆனாலும், அவர்கள், அவர்களின் நிலையிலிருந்து மாறவில்லை.

ஒருவழியாக, படம், குதறப்பட்டு விட்டது. முன்பு, வெளிப்படையாகத் தடை விதிக்கப்பட்டது. இப்போது, மறைமுகமாகத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அதாவது, வெளியிட இயலாத நிலைக்கு படம் சீரழிக்கப்பட்டு விட்டது.

ஒருசில நாட்களுக்கு முன்புதான், டெல்லியில் இயங்கி வந்த திரைப்படத் தணிக்கைத் தீர்ப்பாயத்தைக் (ட்ரிபூனல்) கலைத்திருந்தது, மோடி அரசு. அதன்மூலம், படைப்பாளிகளின் இறுதி நம்பிக்கை அழிக்கப்பட்டது. மறுஆய்வுக் குழுவின் முடிவினை ஏற்கவில்லையெனில், வழக்காடு மன்றத்திற்குப் போவதுதான், இப்போதைய சூழலில் இருக்கும் ஒரே வாய்ப்பு. வழக்கு நடத்தினால் வெற்றி உறுதி என்றாலும், காலக்கெடு ஏதுமற்ற இந்த வழியில் பயணிப்பதற்கான வலிமை, திரைப்பட நிறுவனத்திற்கு இல்லை. எனவே, வெட்டுகளைக் குறைப்பதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் கொடுப்பதாக சொல்லிவிட்டு, ‘கலந்தாய்வு ‘ அறையிலிருந்து வெளியேறுகிறார், இயக்குனர்.

பிறகு, முப்பத்து ஐந்து பக்கங்களில் காட்சிகளுக்கான ஆதாரங்களும் ஆவணங்களும் கொடுக்கப்படுகிறது. சில, ஏற்கப்படுகின்றன. சில, நிராகரிக்கப் படுகின்றன. இறுதியாக, நூற்றுக்கும் அதிகமான வெட்டுகள், இருபத்து நான்கு வெட்டுகளாகக் குறைக்கப்படுகிறது. பதினைந்து நிமிடங்களுக்கான படத்தின் நீளத்தை, விழுங்கி ஏப்பம் விடுகிறது, தணிக்கை முதலை.

இப்படியாக, தணிக்கை வாரியம் பலிகொள்ளவிருந்த ஒரு திரைப்படம் உயிரோடு மீட்கப்பட்டது. ‘மீட்கப்பட்டது ‘ என்னும் ஒரு சொல்லுக்குள் அடங்கியிருக்கும் பாடுகள் ஏராளம். இந்திய மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்திருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமையை மறுக்கும் பாஜக அரசின் வன்முறைக்குப் பொருத்தமான சாட்சியம்தான், அந்தப் பாடுகள்.

₹2000 Tamil Movie Direction View Of Director Ruthran. அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை - இயக்குநர் ருத்ரன்

முன்கதைச் சுருக்கம் :

நவம்பர் 8, 2016, இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சிகளில் தோன்றிய இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடியின் வார்த்தைகளிலிருந்து பிறந்ததுதான், ‘₹2000’ திரைப்படம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புக்கு உள்ளாகும் ஒரு எளிய விவசாயிக்காக ஒரு வழக்குரைஞர், ஒன்றிய அரசுக்கு எதிராக பொதுநலன் வழக்குத் தொடுத்து, வாதாடி, ஒன்றிய அரசு ஒரு குற்றவாளி என்னும் தீர்ப்பினைப் பெறுவதுதான், படத்தின் கதை. கிளைக்கதையாக, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை – தனது இணையரை, ஆணவப் படுகொலை செய்த தனது தந்தைக்கும் அவரது கூட்டாளிகளுக்கும், வழக்காடு மன்றத்தின் மூலம் தண்டனையைப் பெற்றுத் தரும் இளைஞனின் கதையும் உண்டு. தணிக்கை வாரியத்தின் நெற்றிக் கண்களைத் திறப்பதற்கு, இந்தக் கதைக் கருக்கள் போதுமானவையல்லவா!

அதுமட்டுமல்ல. இந்தப் படத்தில், ஆபாசம் மற்றும் கவர்ச்சி இருக்காது, ரத்தம் தெறிக்காது, இரட்டை அர்த்த உரையாடல்கள் கிடையாது, மது இல்லை, புகை இல்லை, சமூகத்தைச் சீரழிக்கும் அம்சங்கள் எதுவுமே இல்லை. இத்தகைய, ‘ இல்லாமைகள் ‘ பாஜக-வினரின், அதாவது, தணிக்கையாளர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். பொழுதுபோக்குக்காக அல்லாமல், பொழுதின் மதிப்பினைக் கூட்டும் படம் என்பதால், மக்களுக்குத் திரையிடும் அனுமதியை அளிப்பதற்கு, ஆட்சியாளர்கள்- தணிக்கை வாரியத்தினர் தயங்கியிருக்க வேண்டும். இத்தகைய, கருத்துரிமை மீதான வன்முறைத் தாக்குதலை முறியடித்து, ஆதிக்கவாதிகளின் தடைகளைத் தகர்த்து மக்களிடம் விரைந்து வரவிருக்கிறது, ‘₹2000’.

ஃபீனிக்ஸ் திரைப்படைப்பகம் தயாரித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர், ருத்ரன்.

ஒரு முக்கிய குறிப்பு:

பொதுவாக, தணிக்கைச் சான்றிதழ்களின் இறுதியில், மண்டல அலுவலரின் கையொப்பம் இடப்படும். தமிழ் திரைப்பட வரலாற்றில், முதன்முறையாக, தணிக்கைச் சான்றிதழில் இரண்டு இடங்களில் மண்டல அலுவலரின் கையொப்பம் இடம்பெற்ற படம் என்னும் சிறப்பினை, ‘₹2000’ பெற்றிருக்கிறது. படத்தின் தலைப்பில் உள்ள, ‘ ரூபாய் ‘ என்பதைக் குறிக்கும், ‘ ₹ ‘ என்னும் குறியீட்டினை அச்சில் அமைக்க முடியவில்லை எனக் கூறிய தணிக்கை வாரியம், ‘தீவிர யோசனைக்குப்’ பிறகு, பேனாவில் எழுதியது. அதனால், அந்த இடத்திலும் மண்டல அலுவலரின் கையொப்பம் இடப்பட்டது. கூடவே, தணிக்கை அலுவலகத்தின் முத்திரையும் வைக்கப்பட்டது. இந்தக் கூடுதல் கையொப்பமும் முத்திரையும் இடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை, அநீதி இழைத்த தணிக்கை வாரியத்திற்கு, ‘₹2000’ திரைப்படம் வழங்கிய தண்டனையாகவே கருதவேண்டியிருக்கிறது.

கட்டுரையை எழுதியவர் படத்தின் இயக்குநர் ருத்ரன்

Bharathi Krishnakumar’s Appatha Short Story Collection Book Review By Vijayarani Meenakshi. பாரதி கிருஷ்ணகுமாரின் *அப்பத்தா* சிறுகதை தொகுப்பு - விஜயராணி மீனாட்சி

பாரதி கிருஷ்ணகுமாரின் *அப்பத்தா* சிறுகதை தொகுப்பு – விஜயராணி மீனாட்சி



அம்மாவும் அந்தோன் சேக்கவும் மற்றும் கிணறும்….:

அம்மா. அம்மா என்றாலே அழகுதான். பூவும் மஞ்சளும் குங்குமமுமாக அம்மாவின் அழகே தனி. ஒட்டுகிற பொட்டு வைக்காத குங்குமமே வைத்தும் வைத்த பொட்டு வைத்ததுபோலவே எழுகிற மகாலட்சுமி என்கிறார். எனக்கும்கூட அம்மாவை அப்படியே பார்த்துப் பழக்கம். குங்குமம் இல்லாமலோ கலைந்தோ அப்பாவை இழக்கும்வரை நாங்கள் பார்த்ததேயில்லை எங்கள் அம்மாவையும். அதிகாலை நாங்கள் எழும்முன்பே குளித்து நெற்றிக்கிட்டுவிட்டால் அப்படித்தானே பார்க்கயியலும். காலை எழுந்ததும் முதலில் பார்க்கவிரும்பும் முகமாக அக்கம்பக்கத்தாருக்குமான அன்பான ராசியான முகமாக இருந்தது அம்மாவின் முகம். அம்மா எனக்கு நல்ல தோழியாக இல்லையில்லை அம்மாவுக்கு நான் நல்ல தோழியாக இருந்ததற்குக்கூட அம்மா தான் காரணம்.

கொடுத்துச் சிவந்த கரங்கள் கர்ணனுக்கானவை என்றால் மற்றவர்களுக்கு எந்த உதவியானாலும் பிள்ளைப்பேறு உட்பட செய்தே சிவந்த கரங்கள் அம்மாவின் கரங்கள். சமையல் உட்பட அப்பா சொன்னதையே செய்கிற ஏன் ஒரு படி மேலே போய் நினைத்ததையே செய்கிற அம்மா மாதிரிப் பெண் கிடைப்பதெல்லாம் பெருந்தவம் செய்தவர்க்கே கிடைக்கும் கொடுப்பினை எல்லோருக்கும் வாய்த்துவிடாது. நம் அப்பாக்களுக்கு வாய்த்தது.

காவிரிக்கரையில் பிறந்த அம்மாவுக்கு காவிரியைப் பிரிந்த அம்மாவுக்கு ஆடிப்பெருக்கு திருவிழா தான். ஆனால் என் அம்மாவும் ஆடிப்பெருக்கைக் கொண்டாடுவாள். ஐந்துவகை அன்னம் படைத்து கிணறு குழாய் கழுவிப்பொட்டிட்டு பூவைத்து வணங்குவாள். அம்மாபொண்ணாக இன்றும் அதைக் கடைப்பிடிக்கிறேன்.

அங்கே கிணற்றை மூடிய இடத்தில் பூசிய சிமெண்ட் காயாமல் பதினைந்து நாள் வியர்த்துக் கசிந்து பதினாறாம் நாள் காலை கசிவு நின்று காய்ந்த சிமெண்டின் சாம்பல் பூத்த அதே காலையில் தன் தேவைகளுக்காக பிறர் உதவியை நாடாத அம்மா ரெம்பத் தாகமெடுப்பதாகச் சொல்லி, நான்கைந்து சொம்பு நிறையத் தண்ணீர் குடித்தும், தாகம் தணியாமல், ஈரம்விட்டுச் செத்துப்போனாள் அம்மா என்கிறார்.

எனக்கோ அம்மா நிறைவுத்தருணத்தை நெருங்குகிறாள் என்றதும் பத்துமணிநேரப் பயணம் முழுதும் பரிதவிப்பில் தொடர அக்காவை நானாக நிறுத்தி என்னைப்போல் ஆடையுடுத்தி இதோ வந்துவிட்டாள் உன் செல்லமகள் என்றபோது வேறுதிசைநோக்கி முகம் திருப்பிய அம்மா (இறுதிப்பொழுதென்றாலும் அவளுக்கா தெரியாது அவள் பார்க்கத் தவிக்கும் மகளின் உருவம்?) நான் சென்று பாலூற்றி என்கை ஈரம் வாங்கித்தான் என் மடிமீதுதான் உயிர்நீங்கிப் போனாள். பேருந்துப் பயணத்தில் அழுத நான் நேரில் துளிக்கூட அழவில்லை. அம்மா திரும்ப வரவேவராத பயணம் போனபிறகு வீடே காலியான பிறகு தான் உறைத்தது மனதுக்கு அப்போது வெடித்தழுத அழுகை.

இந்தக்கதைகளைப் படித்த மகள், ‘என்னம்மா அப்படியே ரெண்டுபேர் வீட்டுக்கதையும் கிட்டத்தட்ட ஒண்ணாயிருக்கு’ எப்பிடியிப்பிடின்னு கேட்கிறாள். பிறகேன் எனக்கு இந்த நூல் இத்தனை ஈர்ப்பாய் இருக்காது? சொல்லுங்க.

தெய்வநாயகம் சார்:

தெய்வநாயகம் சார் போலவே தான் என் அப்பா. மென்மையும் மேன்மையும் உண்மையுமானவர். இங்கே குடும்பமே எலிபிடிப்பதும் பிடித்த எலியைக் கொல்லாமல் காம்பவுண்டுக்கு வெளியே கொண்டுவிடுவதும், அங்கே எங்கள் வீட்டில் நானும் அப்பாவும் செய்த வேலை.

உண்மை பொய் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டு. அறிந்தது அறியாதது என்பது மட்டுமே தெய்வநாயகம் சார் அறிந்தது.

ஆனால் என் அப்பா எங்களுக்குச் சொன்னது, “பொய் சொல்வதற்கு மிகுந்த நினைவாற்றல் வேண்டும்.ஒரு பொய் மறைக்க பல பொய்யுரைக்க வேண்டிவரும்” அவ்ளோ தான் அறிவுரையாகவெல்லாம் சொல்லவேமாட்டார். இது செய்தால் இது நிகழும் என்பதே அவர் உரை.

ஊத்து:

அத்தியூர் கூட்டுரோட்டுக்கு வடக்குப்புற புஞ்சைக்காட்டின் சீரும்சிறப்பும் செழிப்பும் கண்ணுக்குள் பச்சை போர்த்துகிறது. “பாப்பாக்குடி அண்ணாச்சி”யால் கெட்டழிந்து போன நிலத்தடிநீர் ஊத்துக்கண் வழி வந்த வெப்பக்காற்றாய் வெறுமையை சூடேற்றுகிறது.

லுங்கி :

அப்பாவின் சட்டை போடாத மகன்களோ அம்மாவின் சேலைகட்டாத மகள்களோ குழந்தைமைத்தன்மை இல்லாத ரசனையற்ற வளர்ப்பென்றே சொல்லலாம். ஆனால் இங்கே நாயகனுக்கு வேட்டி கட்டுவது அதுவும் நாலுமுழ வேட்டி கட்டுவது பெரிய தொல்லை. இரவு படுக்கைக்கான உடையாக இருந்து அலைக்கழிப்பது அவஸ்த்தையான அவஸ்த்தை.

வீட்டில் அண்ணன் தம்பி வேட்டிக்குப் பழகியிருக்கிறார்கள். இவர் மட்டும் இரவெல்லாம் கவனமாய் இருந்தும் காலையில் அது ஒருபுறமும் இவர் ஒரு புறமுமாக இருந்ததும் நகைச்சுவை.

எனக்கோ வேறுவிதமான அனுபவம். படுக்கையில் படுத்தாலும் விடியும்போது எங்கேயோ எதிர்புறம் கிடப்பதைப் பார்த்து அப்பா என்னிடம், “படுக்கைக்கு எதிர்ப்பக்கம் படுத்துக்கொள்ளேன், விடியலில் சரியாக உருண்டு படுக்கைக்கு வந்துவிடுவாய் என்பார். இப்போது அம்மாவாகிவிட்டேன் ஆகையால் அம்மா போல படுத்தால் படுத்தபடியே கலையாமல் இருக்கும் கலை கைவந்துவிட்டது.

நண்பர்கள் பற்றிய ஆய்வு எனது அப்பாவிடமும் உண்டு. தெருவைக்கேட்டு ஜாதி தெரிந்து கொள்வார் போல. எனது அக்கா ஒருமுறை தன் தோழி (நாயக்கர் இனமாம்) வீட்டில் உணவருந்திவிட்டு வந்தாள். அன்றைய தினம் ஆகஸ்ட் 15. அப்பாவின் கோபம் கட்டுக்கடங்காமல் அடித்தேவிட்டார். எனக்குச் சிறுவயதென்பதால் அப்போது அப்பா அவளை அடித்ததும் அடிவாங்கியதும் ஆகஸ்ட் 15ம் தான் நினைவு. ஆனால் ஜாதி மறுத்து மணம்செய்தபிறகு நானொருமுறை கேட்டேன். அக்கா வேறு ஜாதிப்பொண்ணு வீட்ல சாப்பிட்டதுக்கே அடிச்சீங்க. அதுக்குத்தான் இப்படி ஆகிடுச்சோ என்று கேட்டேன். அன்று தான் விளக்கினார் அப்பா. அது அவர்கள் வீட்டில் உணவருந்தியதற்காக அடிக்கவில்லை. வீட்டில் சொல்லாமல் சென்றதற்கும் மிகமிக நீண்ட நேரமாக அவளைக் காணாமல் நாங்கள் தேடியலைந்ததற்குமான கோபத்தில் விழுந்த அடி என்று சொன்னார். எத்தனையோ பேர் உங்க தோழிகளெல்லாம் நம்வீட்டில் உணவருந்துவது சரியென்றால் இதைத் தவறென்று எப்படிச் சொல்வேன் என்றும் சொன்னார்.

பெண்களின் கற்புக்குக் காட்டிய தீவிரத்தைத் தமிழர்கள் ஆண்களின் கற்புக்குத் தரவில்லை என்பதால் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினைப் பொதுவில் வைப்போம் என்றாரோ பாரதி…!

பெரியப்பா (அப்பாவின் அண்ணன்) சாப்பிடும்போது கூட்டோ பொரியலோ சோற்றுக்குள் புதைத்துவைத்துச் சாப்பிடுகையில் அண்ணன் என்ன நினைக்கிறார்னோ பிடிச்சிருக்கு பிடிக்கலன்ற முகபாவனை தெரியக்கூடாதுன்னோ அப்படிச் சாப்பிடுவதாகச் சொல்வார் அப்பா.

முதல்மாதச் சம்பளத்தின் வேண்டுதலாய் விரும்பி வாங்கிய லுங்கி, விலகுமென்ற கவலை நீக்கிய லுங்கி, விரும்பிய திசைக்கு உருண்டுபடுக்க உதவிய லுங்கி வசீகர மணம் கொண்ட லுங்கி….அடடா… அப்படியான லுங்கி காணாமல் போனது வாசகர்களுக்குள்ளும் பதைப்பை உண்டாக்குகிறது. எதையும் ஆழமாக அறிவார்த்தமாக அலசும் பெருமாள் வாத்தியாருடன் பயணிக்கத்துவங்கியதாலேயே, காணாமல் போன லுங்கியைத் துப்பறிந்து தேடிய மனது மாற்றம் பெறும் கணம் மெல்ல பூக்கத்தொடங்கி மணம்பரப்ப ஆயத்தமான கணமாகிறது. அதுவே ஊற்றாய்ச் சுரக்கிறது வாழ்நாளெல்லாம்.

பெண்களுக்கு இரவு உடையாக நைட்டியும் தற்போது நைட் சூட்டும் சகஜமாக ஆகிவிட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எல்லாப் பெண்களும் நைட்டி அணிவதில்லை. அப்பா வாங்கித்தந்த நைட்டி டேட்டியானதெல்லாம் அப்பா எங்களுக்கு முக்கியமாக எனக்குத் தந்த சுதந்திரம்.

கோடி:

ஒரு மனுஷன்மேல ஒரு மனுஷி ஆசைப்பட்டதற்கான வாழ்நாள் துயரம் சொல்லும் கதை. கதையல்ல தற்போதும் நிஜம். வருடங்கள் பலகடந்தும் தன் ஒரே மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தவளை அப்பாவும் அண்ணனும் ஏற்காத துயரமும் மௌனமும் மனதை ரம்பமாய் அறுக்கிறது. வளர்ந்து ஆளான பிள்ளைகளுக்கு அதுவரையிலும் அப்படியொரு அழகான அத்தை இருப்பதே தெரியாமல் தலைமுழுகிய உண்மை வருடங்கள் கடந்து வெளிப்படுகிறது. அதன்பிறகு ஒரு ஒன்பது வருடம் கழித்து மாமா இறந்த செய்தியை தங்கை சொல்லி யாருமே போகாவிட்டாலும் தான் போகணுமென்ற மனிதத்தன்மை அபாரம். பொறந்தவீட்டுக் கோடி வாங்கிக் கொள்ள அன்பை யாசிப்பது போன்ற கரங்களும் “யண்ணே…..” என்ற பெருங்கதறலும் கண்முன்னே நிழலாடுகிறது.

Bharathi Krishnakumar’s Appatha Short Story Collection Book Review By Vijayarani Meenakshi. பாரதி கிருஷ்ணகுமாரின் *அப்பத்தா* சிறுகதை தொகுப்பு - விஜயராணி மீனாட்சி

அப்பத்தா:

தாத்தாவுக்கும் அப்பத்தாவுக்குமான நெருக்கமும் ஆத்மார்த்த அன்பின் பெருஞ்சுடரும் இந்தக் கதையில் வரிக்கு வரி இல்லை எழுத்து எழுத்தாய் மின்னி ஒளிர்கிறது.

கல்யாணமான நாளிலிருந்து கடைசி வரை இணக்கமும் நெருக்கமுமான தம்பதியை இன்றெல்லாம் பார்ப்பது கடினம். கடைசிவரை இருவரும் ஒன்றாய்ச் சேர்ந்து குளிப்பதெல்லாம் இந்த அவசரயுகத்தில் நடக்கிற காரியமா? பேரன்பேத்தி வந்தபிறகும் தனியறையில் தனித்துப் படுப்பது ஆச்சர்யம். ஒற்றைப் பிள்ளை அதுவும் இன்றைய நாளில் இருவருக்கு நடுவில் வந்துவிடுகிற காலம் இது. தாத்தாவை கண்ணின்மணியாய்க் காத்து நிற்பவளாய் அப்பத்தா. சாப்பாடுகூட எதைச் சாப்பிடலாம் எதைச் சாப்பிடக்கூடாதெனத் தீர்மானிக்கிற தாய்மை. பின்னிரவிலும் அப்பத்தாவும் தாத்தாவும் பல்லாங்குழி தாயமென விளையாடிச் சிரித்து மகிழ்ந்த சத்தமாய் வீடே கேட்ட ஊரே பார்த்த அதிசயங்கள்.

காய்ச்சல் தலைவலின்னு ஒருநாளும் படுக்காத அப்பத்தாவை,
எப்போதும் கலகல சிரிப்பும் கதம்ப வாசனையுமான அப்பத்தாவை,
ஊறுகாயைக்கூட கையால் தொட்டாலும் கெடாத, காலையில் அம்மியில் அரைத்த தேங்காய்ச் சட்னி இரவுவரை கெடாத ராசிக்கைக்காரி அப்பத்தாவை,
கல்யாணமான மூணாம்நாள் தாத்தாவோடு வாழவந்த பிறகு ஒருமுறைகூட பொறந்தவீட்டுக்குப் போகாத அப்பத்தாவை
அனுப்பிவைக்க எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்….

பிள்ளைகளும் பேரன்பேத்திகளும் பாலூற்றியும் உயிர்பிரியல.
கட்டிலைவிட்டுத் தரையில் போட்டும் உயிர்பிரியல.
முட்டைக்கரண்டியில் மூணுகரண்டி நல்லெண்ணெய் கொடுத்தும் உயிர்பிரியல.
நல்லெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண சேர்த்துக் குளிப்பாட்டியும் உயிர்பிரியல.
செப்புக்கலக்காத பொன்னைத்தேய்த்து ஊற்றியும் உயிர்பிரியல.
காசித்தண்ணீர் கொடுத்தும், புறவாசல் முன்வாசல் வயக்காட்டு மண்ணெல்லாம் கரைத்து ஊற்றியும் உயிர்பிரியல.

தாத்தா யாருக்குமே சொல்லாத பெரும்ரகசியம். அப்பத்தாவுக்கு பதினைந்து வயதிலேயே சொந்தத்தில் படித்துக்கொண்டிருந்த கண்ணுச்சாமிக்குப் பேசிமுடித்து வசதியிழந்த ஒற்றைக்காரணத்தால் அவரை நிராகரித்து விட்டனர் அப்பத்தா வீட்டினர். பிறகு வசதியான தாத்தாவை மணமுடித்த அன்று கண்ணுச்சாமி ஊரறியச் செய்த சத்தியம் அப்பத்தாவை நிலைகுலைய வைத்து வாழ்நாளெல்லாம் வதைத்திருக்கிறது. தாய்தந்தை செய்த தவறால் ஒருவரின் வாழ்வே பாழானது பரிதாபம். அப்பத்தா மீது தவறில்லாத காரணத்தாலும் தேவையில்லாமல் மற்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்களோ என்பதாலும் தாத்தா கடைசிவரை இதுபற்றி வாய் திறக்காத பண்பாளராய் இருந்திருக்கிறார்.

உயிர்பிரியாத அப்பத்தாவைவிட்டு காணாமல்போன தாத்தா மீண்டும் தாத்தா வயதொத்த ஒருவரோடு வீடுவருகிறார். அவரைவிட்டு தண்ணீர் ஊற்றச்சொல்கிறார் தாத்தா. அவரும் விரல்படாமல் விட்ட தண்ணீர் உள்ளிறங்கி உயிர் வெளியேறுகிறது காற்றாய்… வணங்கிவிடைகொடுக்கிறார் தாத்தா தான் அழைத்துவந்த கண்ணுச்சாமிக்கு.

பெயரிடப்படாத தாத்தா கதாபாத்திரமாக இல்லாமல் அப்படியே மனதில் விஸ்வரூபமாய் வானளாவ உயர்ந்து நிற்கிறார். இப்படி ஒரு கணவனோடு வாழ்ந்த அப்பத்தா கொடுத்துவைத்தவள்.

கல்பனா:

பாட்டும் கூத்தும் கொண்டாட்டமுமாய் ஐந்தாம் வகுப்பு தொடங்கிய முதல் இரண்டு நாட்களை பிள்ளைகளுக்கு உற்சாகமாகத் தொடங்கி வைக்கிறார் ஜோசப் வாத்தியார். பிள்ளைகளை அழைத்து அவரவருக்கான பெயருக்கு வீட்டில் காரணம் கேட்டுவரச் சொல்கிறார். அதன்பிறகு ஒவ்வொருவரையும் பெயர்சொல்லி அழைக்கவைத்த பெருமை அவரையே சாரும். கதையின் நாயகன் சுபாஷ் சந்திரபோஸ் பெயரை கம்பீரமாகச் சொல்லி போஸ் பற்றி நிறைய சொல்கிறார். பொதுவாக நம்பெயரை யாரும் அழைக்காத

விதத்தில் அழைத்தாலே மனம் லயிக்கத்தானே செய்யும்?! அப்படியான தனித்த அழைப்பே காதலாகி கல்யாணமுமாகிறது சுபாஷுக்கு.

வேலை நிமித்தமாக ரயிவ்நிலையத்தில் டிக்கெட் எடுக்க நின்ற பொழுது கவனத்தை ஈர்த்த அழகிய பெண்ணொருத்தியை பின்னாலிருந்து ரசிக்கிறான். கவனத்தைத் திசைதிருப்பி கையிலிருந்த புத்தகத்தை வாசிக்கையில் அவளே “சுபாஷூ”என்றழைத்தபடி முன்னே நிற்பது கண்டு திகைக்கிறான். நம்மை எந்தவிதத்தில் எதைச்சொல்லி நினைவூட்டுகிறார்களோ அவர்களுடனான பயணத்தின் காலகட்டத்தை அடையாளம் காணமுடியும். அப்படி அந்தப் பெண் ஜோசப் வாத்தியார் என்றதுமே இவளை சுபாஷ் கல்பனா என்று அடையாளம் கண்டுகொள்கிறான். பெயர்சொன்ன மாத்திரத்தில் கைகளைப் பிடித்துக்கொள்கிறாள். தன் மகளை அறிமுகப்படுத்துகிறாள். குழந்தையும் கரங்குவித்து வணக்கம் சொல்ல இவனும் கரங்களைக்குவித்து வணக்கம் சொல்கிறான். பிறகு தன்னுடன் பயின்ற ரஹமத், மாணிக்கம், உஷா, நாகரத்தினம் மற்றும் சிலரை விசாரிக்கும்போதே மீண்டும் கைகளைப்பற்றியவாறே மிகமிக நெருக்கமாக நின்று பேசியதை சிறுது நேரம் கழித்தே கவனிக்கிறான். அந்தக் கரங்களின் மென்மையும் குளிர்மையும் ஸ்நேகம் கொண்டதாய் இருக்கிறது.

திடீரென கல்பனாவின் கணவன் வருவதாக குழந்தை, ‘அம்மா .. அப்பா வந்துட்டாரு’ என்று சொல்லக் கேட்டதும் முகம் இறுகி வாடிப்போய் விடுகிறது. சட்டென சுதாரித்து சுபாஷைப் பிடித்திருந்த கைகளை உதறி விடுவித்து “அவன் வந்துட்டான் நாம்போறேன்” என்றவாறு இரண்டடி பின் நகரும் நுட்பமே அவளும் கணவனும் வாழ்கின்ற வாழ்வின் நுட்பமும் அந்நியத்தனமும் நமக்கு வெளிச்சமாக்குகிறது.

விடுபட்ட கதைகளெல்லாம் புத்தகம் வாங்கி முழுமையாக லயித்து வாசியுங்கள்.

அப்பத்தா – சிறுகதைகள்
ஆசிரியர் – பாரதி கிருஷ்ணகுமார்
பதிப்பகம் : THE ROOTS
விலை : ரூ.100/-

Bharathi Krishnakumar's Kavisakkaravarthiyin Panivu Book Review By Peranamallur Sekaran. Book Day is Branch of Bharathi Puthakalayam. பாரதி கிருஷ்ணகுமாரின் 'கவிச்சக்கரவர்த்தியின் பணிவு' - பெரணமல்லூர் சேகரன்

பாரதி கிருஷ்ணகுமாரின் ‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’ – பெரணமல்லூர் சேகரன்



கவிச்சக்கரவர்த்தியின் பணிவு
பாரதி கிருஷ்ணகுமார்
பக்கங்கள் 144
விலை ரூ.200

இந்திய நாட்டின் இணையற்ற இரு இதிகாசங்களாகக் கருதப்படுபவை இராமாயணமும் மகாபாரதமும். இவ்விரு இதிகாசங்கள் குறித்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை இராமாயணம் என்றால் கம்ப ராமாயணம், மகாபாரதம் என்றால் வில்லிப்புத்தூராழ்வாரின் மகாபாரதம் என்பவையே பிரபலமானவை.

இராமாயணத்தை வான்மீகியின் மூல நூலிலிருந்து கம்பர் ராமாயணத்தை எழுதியிருந்தாலும் உள்ளது உள்ளபடி என மொழி பெயர்க்கவில்லை. மாறாக தன் மனதில் தோன்றிய எண்ணப்படி இராமனைப் புனித மனிதனாகப் படைத்து அழகியலுடன் காவியத்தலைவனாகப் படைத்தார். இக்காவியத்தின் பெருமைகளைக் ‘கம்பன் கழகங்கள்’ மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிறைந்த அரங்குகளில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம், நாடகங்கள் என காலங்காலமாக கம்பன் இயற்றிய பாடல்கள் வழி பரப்பப்பட்டே வருகின்றன.

மேலும் கம்ப ராமாயணம் குறித்த மேன்மைகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து பல வடிவங்களில் பல நூல்கள் வந்துவிட்டன. இவற்றுக்கு மத்தியில் மகாகவி பாரதியை ஞான குருவாக வரித்துக் கொண்ட பாரதி கிருஷ்ணகுமார் ‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’ என்னும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளது வித்தியாசமானது.

இந்நூல் கம்ப ராமாயணத்தில் காணப்படும் கவிதை மாண்புகளை, அழகியல் தன்மைகளை, சந்த நயங்களை, தமிழமுதின் இனிய சுவையை எடுத்துரைக்கவில்லை. மாறாக கம்ப ராமாயணம் குறித்த அறிமுகம் முதல் அத்தியாயமாகவும், இலக்கிய ஆளுமைகள் புகழ்ந்துரைத்த மேற்கோள்கள் இரண்டாம் அத்தியாயமாகவும், தனது காவியத்தை அரங்கேற்ற கம்பர் எதிர்கொண்ட சவால்களை மூன்றாவது அத்தியாயமாகவும், கம்பரின் ‘அவையடக்கம்’ குறித்து நான்காவது அத்தியாயமாகவும், அவையடக்கப் பாடல்களின் விளக்கங்களை ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து பதினோராவது அத்தியாயம் வரையிலும், கம்பரின் சிறப்புப் பாயிரம் குறித்து பதின்மூன்றாவது அத்தியாயமும், காவியத்தின் சிறப்பு குறித்து பதினான்கு மற்றும் பதினைந்தாவது அத்தியாயமும் விவரிக்கின்றன.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.” என மகாகவி பாரதியார் பாடிய பாடலில் முதலாவதாகக் குறிப்பிடுவது கம்பனைத்தான். பாரதியை ஞான குருவாக ஏற்றுக் கொண்டு, அவரது பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு பட்டி தொட்டியெல்லாம் உரை வீச்சு நிகழ்த்தும் பாரதி கிருஷ்ணகுமார் கம்பனைப் பற்றிப் பேசாமல், எழுதாமல் இருந்தால்தான் அது ஆச்சரியமானது. எனவே பாரதி கிருஷ்ணகுமாரைக் கம்பனுக்குக் கொண்டு சேர்த்த பெருமை மகாகவி பாரதிக்கே உண்டு என முன்னுரையில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது பொருத்தமானதே.

சிறுகதை, நாவல், கவிதை போன்ற நூல்களைப் படைப்பதில் எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் கட்டுரைகளை அவ்வாறு படைத்துவிட முடியாது. எடுத்துக் கொண்ட பொருள் குறித்த தரவுகளைச் சேகரிக்காமல், அப்பொருள் குறித்த நூல்களைப் படிக்காமல் எழுதிவிட முடியாது. ‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’ எனும் நூலை உருவாக்க பாரதி கிருஷ்ணகுமார் முப்பத்தேழு நூல்களைப் படித்துள்ளார் என்பது இந்நூலின் பின்னிணைப்பிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அவர் படித்ததால் தான் தலைப்புக்கேற்ற நூலைத் தெறிப்பாக எழுத முடிந்துள்ளது.

உலகெங்கிலும் சற்றேறக்குறைய முந்நூறு ராமாயணக் கதைகள் இருப்பதாகவும், பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த ராமாயணங்கள் மூன்று, தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட ராமாயணக் கதைகள் மூன்று என்பதையும் ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளிலும் தனித்தனி இராமாயணக் கதைகள் வழக்கில் உள்ள தகவல்களையும் நூலாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

Bharathi Krishnakumar's Kavisakkaravarthiyin Panivu Book Review By Peranamallur Sekaran. Book Day is Branch of Bharathi Puthakalayam. பாரதி கிருஷ்ணகுமாரின் 'கவிச்சக்கரவர்த்தியின் பணிவு' - பெரணமல்லூர் சேகரன்

‘இராமாயணத்தில் இராவணனின் மகளாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். இன்னொரு இராமாயணத்தில் இராமனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பதாகச் சொல்கிறது. மான் இறைச்சி மீது சீதைக்கு இருந்த பெரு விருப்பம் காரணமாகத்தான் மானைப் பிடித்துத் தருமாறு கேட்கிறாள் எனக் கூறுகிறது ஒரு பிரதி. ஒரு இராமாயணத்தில் சீதை என்னும் கதாபாத்திரமே இல்லை. பௌத்த இராமாயணப் பிரதிகள் இராமனைப் புத்த பகவானின் அவதாரங்களில் ஒன்றாகவே படைத்துக் காட்டுகின்றன.’ போன்ற பலருக்குத் தெரியாத புதிய தகவல்களைத் தருகிறார் நூலாசிரியர்.

கம்பரின் காவியத்தில் தான் உணர்ந்த பாத்திரங்களின் குணக்கேடுகளைக் கம்பர் நீக்குகிறார். பொருத்தமற்ற வெளிப்பாடுகளை நீக்குகிறார். காவியத் தலைவனின் தெய்வீகச் சிறப்புக்கு வழி வகுக்கிறார் என்பதிலிருந்தே இராமாயணம் தெய்வீகக் கற்பிதம் என்பதை உணரலாம். ஆனால் காவியத்தை உண்மையாகக் கருதி ராமன் ஏக பத்தினி விரதனாகவும், கடவுள் அவதாரமாகவும் மக்கள் வாழையடி வாழையாய் வணங்கி வருதல் கண்கூடு‌. இதை வாய்ப்பாக்கி அரசியலில் மதம் கலந்து நஞ்சாகி நாடு நாசமாகிக் கொண்டிருக்கும் இன்றைய யதார்த்த நிலையையும் புறந்தள்ளி விட முடியாது.

இருந்தாலும் ‘வான்மீகி காட்டாறு, கம்பன் பாசனத்திற்கான நீர்ப்பெருக்கு. வான்மீகி பூப்பொதி, கம்பன் வண்ண மலர் மாலை. வான்மீகி பலாப்பழம். கம்பன் தேனில் ஊறிய பலாச்சுளை. இருமொழிப் புலமை கொண்டு இரண்டு பிரதிகளையும் வாசித்து உணர்ந்து நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதியது தேர்ந்த ஒரு வாசகனின் தீர்மானம்’ எனும் பாரதி கிருஷ்ணகுமாரின் கூற்றை வழி மொழியலாம். ஏனெனில் நூலாசிரியர் கூறுவதைப் போல ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’, ‘கல்வியில் பெரியோர் கம்பர்’, ‘என்ன பெரிய கம்ப சூத்திரமோ?’ என எளிய மக்கள் இன்றளவும் உரையாடுவதைப் புறந்தள்ளி விட முடியாது.

அக்காலத்திலேயே கம்பர் தமது காவியத்தைத் தான் விரும்பிய ஆலயத்திலேயே அரங்கேற்ற அவர் பட்ட பாடுகளை நூலாசிரியர்
காட்சிப்படுத்தியுள்ளது அபாரம். அரசவையில் கம்பரது காவியத்திற்குப் புலவர்களும் அறிஞர்களும் மதிப்புத் தராதது, அக்காலத்திலேயே சாதி மதங்களால் புலவர்களும் அறிஞர்களும் அணி சேர்ந்தது, மூல காவியத்திலிருந்து வேறுபட்டு கம்பர் படைத்த காவியத்திற்கு எதிர்ப்பு, அரங்கேற்றத்துக்கு வைக்கப்பட்ட முன் நிபந்தனைகள் கற்பனைக்கெட்டாத கொடுமைகளாகக் கம்பர் சந்தித்தது என இவ்வளவுக்கு மத்தியில் தமது ‘இராமாவதாரம்’ எனும் காவியத்தை அரங்கேற்றியது கம்பரின் விடா முயற்சியால் விளைந்த இதிகாசம் எனும்போது அவரது உழைப்பும் தொடர் முயற்சியும் பாராட்டத் தக்கது. பின்பற்றத் தக்கது‌.

இத்தகைய கவிச்சக்கரவர்த்தி தமது இறுதிக் காலத்தில் உறவை இழந்து, ஊரை இழந்து, தன் அடையாளத்தைத் தானே மறைத்துத் தன் இறுதி நாட்களில் வாழ்ந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு வாசகர்களைக் கம்பர் மீதான இரக்கத்தில் இறக்கி விடுகிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

‘அவையடக்கம்’ குறித்த தொல்காப்பிய இலக்கணக் குறிப்பை விளக்கும் நூலாசிரியர் கம்பரின் வித்தியாசமான அவையடக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அவையடக்கத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களையும் விளக்கியுள்ளது சிறப்பு.

இறுதியாக, ‘வான்மீகி மெய்யுரைத்தான்; ‘கம்பன் பொய்யுரைத்தான்’ என்று இகழ்ந்து அவனது பிரதியை எரித்தவர்களே அவனுக்குச் சிலை வைத்தார்கள் என்பது அவர்களது சிறப்பும், கம்பனது தனிச் சிறப்புமாகும் என்பதும்,

இனப்பகைமை, மொழிப்பகைமை, சாதிப்பகைமை, கருத்துப்பகைமை, அதிகாரப்பகைமை என எதத்னையோ பகைமைகளை, எதிர்ப்புகளை எதிர்கொண்டு தனது காப்பியத்தைக் கம்பன் எழுதியதன் நோக்கம் ஒன்றுதான்‌. அனைத்துப் பகைமைகளும் அழிந்துவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே அன்றி, வேறு எந்த நோக்கமும் இல்லை’ எனக் கூறியிருக்கும் பாரதி கிருஷ்ணகுமாரின் கூற்று சரியானதே‌. எனவேதான் இன்றளவும் கம்ப ராமாயணம் நிலைத்து வாழ்கிறது.

ஏராளமான புதிய செய்திகளை புதிய கோணத்தில் வழங்கிய ‘சக்கரவர்த்தியின் பணிவு’ எனும் பாரதி கிருஷ்ணகுமாரின் ஆய்வு நூலை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டியது அவசியம்.

– பெரணமல்லூர் சேகரன்

Bharathi Krishnakumar's Kavisakkaravarthiyin Panivu Book Review By Ushadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam. நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – உஷாதீபன்

நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – உஷாதீபன்



நூல்: கவிச்சக்கரவர்த்தியின் பணிவு
ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார்
வெளியீடு: The Roots
பக்கம்: 144
விலை:ரூ.200/-

இந்தப் புத்தகத்தை எழுதியபோது கம்பன் என்னோடு இருந்தான். தன்னை உணர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்தான். என்று ஆத்மபூர்வமாய்த் தெரிவிக்கிறார் ஆசிரியர் திரு.பாரதி கிருஷ்ணகுமார்.

கம்பனின் சிறப்புகள்பற்றி இன்னும் மேன்மையாக, விரிவாக, பரந்து விரிந்து ஊர்கள் தோறும் பேசப்படாமல் இருக்கிறதோ என்கிற ஆதங்கம் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கம்பன் விழாக்கள் நடைபெறுகின்றன. காரைக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், புதுச்சேரி என்று இன்னும் பல இடங்களில் கம்பனின் பெருமைகள் சிறப்பாக அரங்கேறி புகழ்ந்துரைக்கப்பட்டு மக்களிடம் இடைவிடாது கொண்டு செல்லப்படுகின்றனதான்.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், தமிழருவி மணியன், சுகி.சிவம், ஜெயமோகன், சுதா சேஷய்யன், நெல்லை கண்ணன், இந்நூலின் ஆசிரியர் என்று இன்னும் பல்வேறு தமிழ்ப் பெருமக்கள் கம்பனின் புகழை இடைவிடாது மேலெடுத்துச் செல்கின்றனர்.

சிறியன சிந்தியான், கம்பனில் பிரமாணங்கள், கம்பனும் வான்மீகியும், தடந்தோள் வீரன், கம்பருக்குள் ஒரு கம்பர், கம்பனிடம் சில கேள்விகள் என்று பல்வேறு தலைப்புகளில் கம்பனின் பெருமைகள் பேசப்பட்டும், அலசப்பட்டும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றன. சொல்லரங்கம், வழக்காடு மன்றம் என்று நாம் ரசிப்பதற்குப் பல மேடைகள் காணக் கிடைக்கின்றன.

ஆனால் கம்பன் வாழ்ந்த காலத்தில் இந்தப் பெருமைகளுக்கெல்லாம் அவர் ஆட்பட்டாரா என்று ஆய்விடும்போது கடுமையான விமர்சனங்களுக்கும், கேலிக்கும், அலட்சியத்துக்கும், துரத்தலுக்கும் ஆட்பட்டிருக்கிறார் என்பதையும், அம்மாதிரி சமயங்களில் கவிச்சக்கரவர்த்தியின் பணிவும், பவ்யமும், தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்விக் கணைகளை அவர் எதிர்கொண்ட விதமும் ஆசிரியரால் பகிர்ந்தளிக்கப்படும்போது நமக்கு கம்பன் படைத்த ராமகாவியத்தின் மீது பன் மடங்கு மதிப்பு கூடுகிறது..



வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி ராமாயணத்தைப் பின்பற்றி எழுதப்பட்டதுதானே இது என்று சுலபமாக ஒதுக்கப்பட்டதும், அதிலுள்ளவைகள்தானே இதிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், மிகைப்பாடல்கள் அனைத்தும் செருகுகவிகள்தானே எனவும் அவைகள் கம்பனால் எழுதப்பட்டதல்லவே என்றும், எல்லாம் அமைந்திருந்தபோதிலும், வான்மீகி எழுதியதை ஒட்டியே கம்பரின் உரை அமைந்துள்ளதால் மாற்றங்கள் பொருந்தாமல்தான் உள்ளன என்றும் பேசப்பட்டிருக்கிறது.

அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் தனது ராமகாவியம் அரங்கேற்றப்பட வேண்டும் என்று கம்பர் முயன்றபோது அவருக்கு கோயில் வைணவர்களால் கிடைத்த கேலியும், அவமானமும், அலட்சியமும் எந்தவொரு தமிழ்ப் புலவனுக்கும் நிகழ்ந்திருக்காது என்றே தோன்றுகிறது.. எல்லாச் சூழ்நிலையிலும், பணிவோடும், மிகுந்த பொறுப்புணர்வோடும் தன் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார் கம்பநாட்டாழ்வார் என்பதை அறிந்து நம் மனம் அவருக்கு சார்பான ஆதரவை நல்குகிறது.

ஆறு காண்டங்களுடன், பத்தாயிரத்து ஐநூறு பாடல்களுடன், தொண்ணூற்று ஆறு வகையான விருத்தங்களுடன் தனது காப்பியத்தைப் படைத்து அளித்த கம்பன் அதனை சிறப்பான முறையில் அரங்கேற்றுவதற்கு என்னென்ன வகையிலான சோதனைகளுக்கெல்லாம் ஆட்பட்டிருக்கிறார் என்பதை ஆசிரியர் விரித்தளிக்கும்போது, ஒருவனின் கவித்துவமும், ஞானமும் இந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படும் மனநிலை கொண்ட கீழான மனிதர்களா அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள்? என்று எண்ணி அவர்கள்மேல் தாங்க முடியாத வெறுப்பும், விலகலும், ஆதங்கமும் நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஸ்ரீரங்கத்தில் கற்றறிந்த புலமையும், தெய்வ பக்தியும் உடைய சான்றோர்களிடம் படித்துக் காட்டுகிறார். ஆனால் அவர்களோ ஆழ்வார்களைத் தம் நூலில் போற்றாது இருந்ததைக் கண்டு, குற்றம் குறை சொன்னவண்ணமே இருக்கின்றனர். அதனால் கம்பர் நினைத்தபடி காவியம் அரங்கேறாமல் போய்விடுகிறது. தொடர்ந்து தன் பணிவான வார்த்தைகளால் கம்பர் வேண்டி நிற்கும்போது, பற்பல சோதனைகளுக்கு ஆளாக்குகிறார்கள்..அவ்வூர் அரங்கநாதனிடம் போய் இறைஞ்சி நிற்கிறார். இறைவனே தம் அடியார்க்கு ஆட்படுத்த எண்ணி, நம் சடகோபனைப் பாடு என்று விளித்து பிறகே அங்கீகரிப்போம் என்று அருள்கிறார். அதன் பின்னர்தான் சடகோபரந்தாதி என்னும் நூலைக் கம்பர் பாடி அருளினார் என்று தெரிகிறது.

கம்பராமாயணம் வைணவ சமயக் கதை என்ற ஒரு சாரார் கருத்தும் உலாவந்த காலம் அது. திருவரங்கத்தில் வைணவ ஆச்சார்யர்களை சந்தித்து வேண்டி நின்றபோது அவர்கள் நரஸ்துதி பாடும் காவியமாய் உள்ளது என்றும், நீச பாஷையான தென் மொழியில் உள்ளது என்றும் கூறி ஒதுக்கியிருக்கிறார்கள். சிதம்பரம் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேர் ஒப்புதல் வேண்டும் என்று கூற அதற்கும் போராடிப் பெறுகிறார். இறந்த குழந்தை ஒன்றை உயிர்ப்பித்த கதை ஒன்று அங்கே நிகழ, அதன் மூலம் அவரது காவியத்திற்கு ஒப்புதல் கிடைக்கிறது. ஆனால் அரங்க வைணவர்கள் சமாதானம் ஆகாமல் மேலும் அவரை அலைக்கழிக்கின்றனர். திருநறுங்குன்றம் சென்று அங்குள்ள தமிழறிந்த சமணப் புலவர்களிடம் போய்ப் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறுகிறார். மாமண்டூரில் மெத்தப் படித்த ஒரு கொல்லனிடம் போய் படித்து ஒப்புதல் பெறுகிறார். அஞ்சனாட்சி என்னும் ஒரு தாசியிடம் சென்று தம் காவியத்துக்கான ஒப்புதலைப் பெறுகிறார். எல்லா நிபந்தனைகளையும் நிறைவேற்றித் திரும்பிய பின்பும் இன்னும் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு அங்கும் ஒப்புதல் பெற வேணும் என்று தயங்காது திருப்பி அனுப்புகிறார்கள். இதில் வியப்பென்னவெனறால் அம்பிகாபதி என்னும் அறிவிற் சிறந்த புலவரது ஒப்புதலையும் தாங்கள் பெற வேண்டும் என்ற நிபந்தனை வைத்ததுதான். தன் மகனிடமே சென்று அந்த ஒப்புதலுக்கும் நிற்கிறார் கம்பநாட்டாழ்வார். சிரமேற்கொண்டு அம்பிகாபதி தன் ஒப்புதலை மனமுவந்து வழங்க, இனியேதும் தடையிருக்காது என்று போய் நிற்க, கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்டித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். அதையும் செய்து முடித்தபின்னர்தான் அரங்கேற்றம் நடைபெற்று முடிந்தது என்று அறிய முடிகிறது. அரங்கேற்றம் திருவரங்கத்தில் நடைபெறவேயில்லை என்று இன்றும் சொல்லும் தகவல்களும் உள்ளன என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.



ஒரு ஆய்வு நூலாக இந்தப் புத்தகத்தை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. கதம்ப மாலையாய்த் தகவல்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. எத்தனை எத்தனையோ புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து அத்தனையையும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தி, கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அறிவும் செறிவும், பணிவும் பண்பும் நிறைந்த நடவடிக்கைகளை ஆசிரியர் எடுத்துரைக்கும்போது நம் மெய் சிலிர்த்துப் போவதுடன், இந்த நேரத்திலிருந்தாவது அவர் சொல்லியிருக்கும் தமிழறிஞர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து, கம்பனின் ராமகாவியத்தை வாழ்வின் சில முறைகளாவது வாசித்து அனுபவித்து இந்தப் பிறவி எடுத்ததன் பலனை நாம் பெற்றே ஆக வேண்டும் என்கிற எழுச்சி நமக்கு ஏற்படுகிறது.

இராமாவதாரம் என்று கம்பர் பெயர் சூட்டிய கம்பராமாயணம் கி.பி.869 ம் ஆண்டு திருவரங்கத்தில் அரங்கேறியிருக்கிறது. ஆனாலும் நமக்குக் கிடைக்கும் வாய் மொழி வரலாறு, கர்ண பரம்பரைக் கதைகள் இவைகளை ஒப்பு நோக்கும்போது கீழ்க்கண்ட உண்மைகள் புலப்படுகின்றன என்று ஆய்ந்துணர்ந்து தெரிவிக்கிறார் ஆசிரியர்.

கம்பர் காலத்துக்கு முன்பிருந்தே நிலவிய சைவ, வைணவப் பகைமை வான்மீகி தெய்வப் புலவன், கம்பன் அப்படியல்ல வடமொழி தேவபாஷை, தமிழ் நீச பாஷை என்ற கருத்தியல் இறைவனைப் பாடிய காப்பியத்துள், நன்றிப் பெருக்கில் மனிதனான சடையப்ப வள்ளலையும் கம்பர் புகழ்ந்துரைத்தது ஆழ்வார்களைப் புகழ்ந்து காப்பியத்துள் பாடாமை மனிதனாக வந்த பரம்பொருள் இறுதிவரை காப்பியத்துள் மனிதனாகவே நடமாடுவது சோழ மன்னர்களோடு ஏற்பட்ட பகைமை, அவர்களை எதிர்த்து நின்ற ஞானச்செருக்கு வான்மீகி ராமாயணத்தின் பலபகுதிகளை நீக்கியது, தொகுத்தது, விரித்தது, சுருக்கியது வடமொழிப் பெயர்கள் அனைத்தையும் தமிழ்ப் பெயர்களாக்கியது. எதிர் மறைக் கதாபாத்திரங்களான இராவணனையும், வாலியையும், கைகேயியையும், புகழ்வதும் அவர்களது சிறப்புகளைப் பாடியதும் ராமனை விடவும் துணைக்கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடித்துப் பாடியது எளிய தமிழ் நடையில் காப்பியத்தை எழுதி முடித்தது…..
இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது பாரதி கிருஷ்ணகுமாரோடு கம்பர் உடனிருந்து தன்னை உணர்ந்து ஆழமாய் அழகுற எழுதப் பணித்து, ஆதார சுருதியாய் நின்று அவரை வெற்றியடையச் செய்திருக்கிறார் என்பதை நாம் மனப்பூர்வமாய் உணர முடிகிறது.

Bharathi Krishnakumar's Kavisakkaravarthiyin Panivu Book Review By K. Ramesh. Book Day is Branch of Bharathi Puthakalayam. நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* - கி.ரமேஷ்

நூல் அறிமுகம்: பாரதி கிருஷ்ணகுமாரின் *கவிச்சக்கரவர்த்தியின் பணிவு* – கி.ரமேஷ்



நூல்: கவிச்சக்கரவர்த்தியின் பணிவு
ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார்
வெளியீடு: The Roots
பக்கம்: 144
விலை:ரூ.200/-

நான் தமுஎசவில் நுழைந்த காலத்தில் நான் அண்ணாந்து பார்த்து வியந்த ஒரு பேச்சாளுமை பாரதி கிருஷ்ணகுமார். அவரது உரை தொடங்கினால் நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவரது அருகில் நெருங்கினாலே பாக்கியம் என்று நினைத்ததுண்டு. அந்த ’உயர்ந்த மனிதர்’ எனக்காகக் கொஞ்சம் குனிந்து எனது தோளை அணைத்துக் கொண்டிருக்கும் நாளும் வரவே செய்திருக்கிறது. போன மாதம் அவரை அழைத்து நான் மொழிபெயர்த்த ஒரு நாவலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது என்னிடம் எனது முகவரியைக் கேட்டார். அப்போது அவர் கம்பன் விழாவுக்காக ராஜபாளையம் செல்வதாகவும் திரும்பி வந்த பின் பேசலாம் என்றும் கூறினார். அடுத்த இரண்டாவது நாள் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் “கவிச்சக்கரவர்த்தியின் பணிவு” என்ற புத்தகம் அவரது பேரன்புடன் எனது முகவரிக்கு வந்து சேர்ந்து விட்டது.

அவரை பாரதி கிருஷ்ணகுமார் என்றுதானே அழைக்கிறோம். கம்பர் எங்கே வந்து சேர்ந்தார் என்ற கேள்விக்கு விடையுடன் தொடங்குகிறார் பா.கி.(!). பாரதியிடமிருந்துதான் நான் கம்பனை அறிந்தேன். கம்பனுக்குள் வந்தேன் என்று விளக்கி விடுகிறார்.

இராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் மிகப்பெரும் காப்பியங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இதில் இராமாயணம் இப்போது பல பிரச்சனைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் வருத்தத்துடன் காண வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த இராமாயணத்தில் எத்தனை இருக்கின்றன என்பதில் தொடங்குகிறார் பா.கி. உலகெங்கும் முன்னூறு வகை இராமாயணங்கள் இருக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார். அனைத்துக்கும் மூலகாவியமாக வால்மீகியின் இராமாயணம்தான் இருக்கிறது. அதிலிருந்து மூலத்தை எடுத்துக் கொண்டு பல வகையான இராமாயணங்கள் உருவாகி இருக்கின்றன. நாம் தமிழில் “விடிய விடிய இராமாயணம் கேட்டு விட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்கிறான்” என்று திட்டுவதுண்டு. ஆனால் அப்படியும் ஒரு இராமாயணம் இருக்கிறது!



ஆக, மூலகாப்பியமான வால்மீகி இராமாயணத்திலிருந்து மொழியாக்கம் செய்து கம்பராமாயணத்தை இயற்றி என் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலவராகிறார் கம்பர். கம்பர் வால்மீகியின் காப்பியத்தைப் பின்பற்றி எழுதியிருந்தாலும், அவர் இருந்த இடம், பொருள், ஏவல் ஆகியவற்றுக்கேற்ப அதனை தொகுத்து, விரித்து தமிழ் மண்ணுக்கேற்ப மாற்றி விட்டிருக்கிறார். தோழர். ஏ.பாலசுப்ரமணியன் அவர்களின் தகப்பனார் டி.பரமசிவ அய்யர் எழுதிய புத்தகத்தில் கம்பர் வாழ்ந்த காலத்தின் மன்னனான சோழனைப் புகழும் வகையில் மொழியாக்கத்தைப் படைத்ததாகக் குறிப்பிடுவார். ஆனால் சோழனுக்கும் மேலாக கம்பரைப் பாதுகாத்த சடையப்ப வள்ளலை உயர்த்தியிருப்பதாக பா.கி. சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தை ஒரு ஆய்வு நூலாகவே படைத்திருக்கிறார் பா.கி. கம்பன் இந்தப் பெரும் காப்பியத்தைத் தமிழில் படைத்தாலும், அதை ஏற்க வைப்பதற்காக, அதனை அரங்கேற்றுவதற்காக எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதை விளக்குகிறார். அதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம் என்கிறார். வடமொழியை உயர்வாகவும், தமிழை நீச மொழியாகவும் பார்த்ததாக இருக்கலாம்; வால்மீகி எழுதியதை அப்படியே மொழிபெயர்க்காமல் அதைத் தழுவியே எழுதிய காரணமாக இருக்கலாம்; இன்னும் அரசியல், வைணவ-சைவ மோதல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும் சளைக்காமல் போராடிய கம்பர் கடைசியில் அனைத்துத் தடைகளையும் தாண்டி தனது காப்பியத்தை அரங்கேற்றுகிறார்.

பிறகுதான் பா.கி. தலைப்புக்குள் நுழைகிறார். கவிச்சக்கரவர்த்தியின் பணிவு!. அடக்கமுடைமை என்ற ஒரு அதிகாரத்தைத் திருவள்ளுவர் படைத்திருந்தாலும், அவையடக்கம் என்கிற இந்த மரபு கம்பனுக்கு முன் தமிழில் கிடையாது. கம்பர்தான் அதைத் தொடங்கி வைக்கிறார். ஏன் இப்படி ஒரு தொடக்கம்? ஏனென்றால் அந்தக் காப்பியத்தை எழுதி அரங்கேற்ற கம்பர் சந்தித்த எதிர்ப்புகள் அதைச் செய்ய வைக்கின்றன. அதில் ஆறு பாடல்கள். அவையடக்கம், பணிவு ஏன் முதன் முதலில் வர வேண்டும்? அதுவும் காப்பியத்தின் நடுவில் இருக்கும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு ஏன் முன்னால் எழுத வேண்டும்? அந்த ஆறு பாடல்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் எடுத்துரைக்கிறார் பா.கி.



”ஒப்பற்ற படைப்புகளையும், படைப்பாற்றல் கொண்ட மனிதர்களையும், மனதாரக் கொண்டாடிப் போற்றி, அங்கீகரிப்பதற்குப் பதிலாக அதனை எதிர்ப்பதும் அல்லது கள்ளமௌனம் சாதித்துத் திரையிட்டு மறைக்க முயல்வதும் இன்றைக்கும் நாம் பார்க்கும் குணக்கேடுகளில் ஒன்று. இத்துணை வளர்ச்சியும், வாசிப்பும், நவீனத் தகவல் தொழில்நுட்பமும் இயங்குகிற காலத்திலேயே அத்தகைய எரிச்சல் கலந்த மனம் கொண்டவர்கள் வாழ்கிற போது, பத்து நூற்றாண்டுகளுக்கு முன் அத்தகைய மனிதர்கள் வாழ்ந்துதானே இருப்பார்கள் !”. (பக்கம் 79). இந்தச் சொற்கள் பலரின் வாழ்வில் உண்மையாகவே விளையாடியவை. கவிச்சக்கரவர்த்தி கம்பனே இதற்கு ஆட்பட்டானென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்!.

பா.கி. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு 37 புத்தகங்களை வழித்துணையாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு அறிஞரும் சொல்வதிலிருந்து பொருத்தமான விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறார். இதனை ஒரு ஆய்வேடாகவே கருத வேண்டும். இதற்கே ஒரு முனைவர் பட்டம் அவருக்குக் கொடுக்கலாம். இந்த நூலைப் படித்து விட்டுக் கம்பனைப் படிக்காமல் போய் விட்டோமே என்று நமக்கெல்லாம் (கம்பனைப் படிக்காதவர்களுக்கு) ஒரு குற்றவுணர்வு கூட ஏற்படலாம். கம்பனைப் படித்து விட வேண்டும் என்ற வேகமும் வரலாம்.

இந்தப் புத்தகத்தில் நான் காண்பது கம்பனின் பணிவை மட்டுமல்ல. இந்த உயர்ந்த மனிதர் பாரதி கிருஷ்ணகுமாரின் பணிவையும் சேர்த்துத்தான். அடக்கம் அமரருள் உய்க்கும்!.

அன்புடன்
கி.ரமேஷ்

நூல் அறிமுகம்: “அருந்தவப்பன்றி” – சுப்பிரமணிய பாரதி | பாரதிகிருஷ்ணகுமார் | உஷாதீபன்

நூல் அறிமுகம்: “அருந்தவப்பன்றி” – சுப்பிரமணிய பாரதி | பாரதிகிருஷ்ணகுமார் | உஷாதீபன்

நூல்: “அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி ஆசிரியர்:  பாரதி கிருஷ்ணகுமார் வெளியீடு: THE ROOTS விலை: ₹200.00 பாரதி குறித்த புத்தகங்கள் வரலாற்றாசிரியர்களாலும், பாரதி குறித்த நூலாசிரியர்களாலும் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கின்றன. பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்ளும் முயற்சியாக, இந்தத் தமிழ்ச் சமூகம்…
பேசும் புத்தகம் | பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதை *’கோடி’* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி

பேசும் புத்தகம் | பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதை *’கோடி’* | வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி

சிறுகதையின் பெயர்: 'கோடி' புத்தகம் : 2011 விகடனில் வெளியானது. 42வது இலக்கிய சிந்தனை தொகுதியில் சிறந்த சிறுகதை என தோழர் வெண்ணிலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆசிரியர் : பாரதி கிருஷ்ணகுமார் வாசித்தவர்: பா.கெஜலக்ஷ்மி இந்த சிறுகதை குறித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை…
கொரோனா காலம் | “சொல்லால் அழியும் துயர்” | பாரதி கிருஷ்ணகுமார்

கொரோனா காலம் | “சொல்லால் அழியும் துயர்” | பாரதி கிருஷ்ணகுமார்

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC #BharathiTv #Corona #BharathiKrishnakumar To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to…