மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள் – எஸ்.வி.ராஜதுரை
அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை
சம்சுதீன் ஹீராவின் “மயானக்கரையின் வெளிச்சம்”
நூல் அறிமுகம்: வீடும் வாசலும் ரயிலும் மழையும் – விக்ரம் சதீஷ்
நூல் அறிமுகம் : இயற்கையோடு இயைந்த அறிவியல் – முனைவர் சு.பலராமன்
நூல் மதிப்புரை : ஒங்கூட்டு டூணா – தேனிசீருடையான்
ஒங்கூட்டு டூணா.
(வகுப்பறைக் குறிப்புகள்)
தேனிசுந்தர்.
பாரதி புத்தகாலயம்.
முதல் பதிப்பு ஜனவரி 2023
பக்கம் 88 விலை90/
குழந்தைகளே நடித்து குழந்தைகளே இயக்கும் கலைக்காவியம்.
“உனக்குத் தெரியும்; ஒரு குழந்தை ஒரு வார்த்தையைச் சொல்லும்போது அது உனக்குத் தெரியும் என்ற உண்மை உனக்குப் புரியும்.”
நான் ஆறாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் வெளிவந்த பிரைல் வடிவப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவற்றில் குழந்தைகளுக்கான பருவ ஏடு ”சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட்” முகப்பு அட்டையில் மேற்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். (you know that truth when a child says it in her language.)
ஒரு குழந்தை அனுதினமும் பேசும் மொழிதான் என்றாலும் அது புதிய திசையில் இருந்து புறப்பட்டு புதிய இலக்கு நோக்கிப் பயணிப்பதை உணரமுடிகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக் கொள்வதுபோல நமக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. அனுதினமும் கண்டு கேட்டவை என்றாலும் ஓர் குழந்தைநல விரும்பியால்தான் அதை ஆவணப் படுத்த முடிகிறது.. தேனிசுந்தர் அதைச் செய்திருக்கிறார். “குழந்தை இயலின் ஆவணக் காப்பகம் தேனிசுந்தர்” என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதி அதை நிரூபித்திருக்கிறார். அவற்றின் பரிணாமக் கோடாய் இந்த மூன்றாவது நூல் வந்திருக்கிறது.
இந்த ஆண்டு (2023) தேனியில் நடந்த முதல் புத்தகத் திருவிழாவின்போது வெளிவந்தன முக்கியமான இரண்டு சிறார் இலக்கிய நூல்கள். ஒன்று ச க முத்துக்கண்ணனும் ச. முத்துக்குமாரியும் இணைந்து எழுதிய “கேள்விகேட்டுப் பழகு.” இன்னொன்று தேனிசுந்தர் எழுதிய ”ஒங்கூட்டு டூணா.” இது இவரின் மூன்றாவது நூல் என்பதைத் தமிழ்நிலம் நன்கு அறியும்.
நாம் அனைவரும் வாசித்து அறிந்து வைத்திருக்கிற கதை சிங்கம்-மாடு கதை. நான்கு மாடுகள் ஒன்றாக ஒற்றுமையோடு மேய்ந்துகொண்டிருக்கும்போது சிங்கத்தால் அவற்றை வேட்டையாட முடியவில்லை. அவற்றுடன் ;பேசி அவற்றைப் பிரித்து, அவை தனித்தனியாய் மேயும்போது ஒவ்வொன்றாய் வேட்டையாடுகிறது. காலங்காலமாய்ச் சொல்லப்பட்டு வரும் இந்தக் கதை ஒரு குழந்தையின் மன அரங்கத்துக்குள் புகுந்து வேறொரு வடிவமெடுத்து வெளிவரும்போது அது ஒரு புதுக்கதை ஆகிறது. வாசிப்பின் வழியே இன்னொன்றைப் படைக்க முடியும் என்பது இலக்கிய எழுத்தாளர்களின் அனுபவம். அப்படி ஓர் அனுபவத்தின் வழியே அனிச்சையாய் ஒரு குழந்தை உருவாக்குகிறது என்றால் அது எத்தனை பெரிய படைப்பாற்றல்.
“சார்!
ஒரு ஊருல
ஒரு பெரிய மலை இருந்துச்சாம்.
அங்க ஒரு பெரிய சிங்கம் இருந்துச்சாம்;
நாலு மாடு இருந்துச்சாம்.”
“மாடு பெரிசா சிறிசா?
சொல்லவே இல்ல.”
”பெருசுதான் சார்.”
“எவ்வளவு பெரிசு?”
“ரெம்பப் பெரிசுசார்;
அதோட கொம்பு
வா………..னத்து வரைக்கும் இருக்கும்.”
“ம்ம்.”
“அப்ப ஒருநாஃ
அந்த மாடு
சிங்கத்த ஒரே முட்டு முட்டுச்சாம்.
அப்படியே சிங்கம் போயி
வானத்துல விழுந்துச்சாம்.”
“அப்பறம்?”
”மாடு செத்துப் போயிருச்சு.”
இந்தக் கடைசிவரிதான் குழந்தை மொழியிலான கதையின் மையம். வானம்வரை நீண்ட கொம்புகளால் முட்டும்போது முட்டு வாங்கிய சிங்கம்தான் செத்திருக்க வேண்டும். ஆனால் “மாடு செத்துப் போயிருச்சு” என்ற மொழி அற்புதமானது.
மாடு முட்டி சிங்கம் வானத்தில் விழுந்துவிட்டது என்பது புதுக்கதை. மாடு செத்துப் போச்சு என்பது பழைய கதை. பழமையின் சாரத்தில் புதுமை கட்டப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் குழந்தைக் கதையைவிட குழந்தைகளே சொல்லும் மழலைக் கதைதான் இன்றைய குழந்தை இலக்கியத்தின் அச்சாக இருக்க முடியும். கேட்டு உள்வாங்கிச் சேமித்த பாலில் இருந்து புதிய நெய் உருவாக்கப்படுகிறது.
ஆசிரியருக்குப் புலனாகாத ஒரு கேள்வியை ரெண்டாப்பு மாணவன் கேட்கிறான். மலைகளின் அரசி உதகமண்டலம்; இளவரசி கொடைக்கானல்; அப்படியானால் அரசன் எங்கே?
அரசி இருந்தால் அரசன் இருக்க வேண்டும்தானே? தமிழ் நிலத்தின் சகல மனிதர்களும் அரசி, இளவரசி என்ற சொல்லாடல்களைக் கேட்டுத்தான் வந்திருக்கிறோம். நம் சிந்தைக்கு எட்டாத கேள்வி குழந்தைகளுக்கு எப்படி எட்டுகிறது? சாம்பல் மூடாத நெருப்பு குழந்தையின் மனசில் கனன்றுகொண்டிருக்கிறது. அந்த வெளிச்சத்தின் வழியே குழந்தைகளுக்கு ஏராளமான சங்கதிகள் புலனாகின்றன. குழந்தை வாழ்வியல் யதார்த்தத்தின் ஒரு பகுதி அது. அவற்றைக் கேள்வியாக்கி வெளியிடும்போது ஆசிரியர் திணறுகிறார்.
“ரெண்டாம் வகுப்பு
அனிருத் கேட்டான்;
அப்போ மலைகளின் ராஜா
எது சார்?”
அந்தக் கேள்விக்கு விடைசொல்லத் தெரியாமல் ஆசிரியர் திணறுகிறார்.
”புத்தகத்துல அதுபற்றி இல்லியே;
என்ன செய்வேன்?”
இன்றைய நிலையில் புத்தக வாசிப்பு இல்லாத ஆசிரியர்கள்தான் அதிகம். வாசிக்கும் ஆசிரியர்களுக்கே விடைதெரியாத போது வாசிப்பறிவில்லாத ஆசிரியர்கள் என்ன செய்வார்கள். புத்தகப் புழுவாய் இயங்கும் ஆசிரியர்களுக்கும் வாசிப்பறிவில்லாத ஆசிரியர்களுக்கும் ஒரு குட்டு வைக்கிறார் சுந்தர்.
“மதிய உணவு,” “சத்துணவு,” போன்ற சொல்லாடல்களும் நடவடிக்கைகளும் நடுத்தர மக்களுக்கு லேசான சங்கதியாய் இருக்கக் கூடும். கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை மட்டும் உண்டு படுக்கப் போகும் அவலம் இன்றும் இந்தியப் பெருநிலத்தில் இருப்பதைப் பலரும் உணர்வதில்லை. வெறும் கடுங்காஃபி குடித்துவிட்டு, முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் இன்றும் கிராமப் புறங்களில் ஏராளம். மதியம் அந்த ஒருவேளை உணவுக்காக ஏழைக் குழந்தைகள் ஏக்கத்தோடு காத்துக்கிடப்பதை தேனிசுந்தர் போன்ற ஒருசிலரால் மட்டுந்தான் உணர முடிகிறது.
“மணி பத்தாச்சு;
வருகைப் பதிவெல்லாம்
முடிச்சாச்சு.”
”அப்பத்தான்
ஆடி அசஞ்சு வந்தாங்க
யோகா.
ஒண்ணாம் வகுப்பு.”
“இவன்
பள்ளிக்கூடம் வார நேரமா;
ஒனக்கு ஆப்சென்ட் போட்டாச்சு
ஒக்காரு போயி.”
”எப்பவும்போல
அதே சிரிப்பு.”
“சமயல் பண்ற
செல்வியக்காதான் வந்து சொன்னாங்க.
இவுக தாத்தாவுக்கு
நேத்து ராத்திரி ஆக்சிடெண்டு;
அதப் பாக்கப் போன
இவுக அப்பாவுக்கும் ஆக்சிடெண்டு;
குடும்பமே ஆஸ்பத்திரியில கெடக்கு.”
”அதே சிரிப்போட வந்து நிக்கிறா
யோகா.
சார். இன்னும் சோறாக்கலையா?”
இந்த வார்த்தைகளில் இருந்து எழும் உணர்ச்சியலைகள் நமது இந்திய வறுமையின் பூதாகர உருவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. விபத்து நடந்த வீட்டில் சமயல் செய்யாத நிலையில் குழந்தையாவது சாப்பிடட்டும் என்று பெற்றோர் நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்புவது இருள்வெளிப் பரப்பின் நட்சத்திர ஒளிப்பரலாய் மின்னுகிறது.
பொதுவாக ஆசிரிய மாணவ உறவு என்பது அன்யோன்யமாய் இருப்பதில்லை. பிரம்பும் கையுமாய் அலையும் சிங்கம் போல ஆசிரியரும் பயந்து எங்குசென்று ஒளிவது என்ற பதட்டத்தோடு மாணவர்களும் வகுப்பறைகளை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரம்பு வீச்சின் வழியாகத்தான் பாடம் நடத்தப் படுகிறது. ஒருசில ஆசிரியர்களைப் பார்த்தாலே தொடை நடுக்கம் உண்டாகி படிப்பின்மீதான வெறுப்பு கூடுகிறது. ஞாபகசக்தி மெலிவடைந்து மூளை குழம்புகிறது.
ஆனால் சுந்தர் சார் மாணவர்களை வேறுமாதிரி கையாள்கிறார். அவரின் பெயர் சொல்லி அழைத்துவிட்டு ஓடி ஒளியும் அளவுக்கு மாணவர்களுக்கு சுதந்திரம் தருகிறார். கடைசியாக யோகாவும் பவுனியாவும்தான் அழைக்கிறார்கள் எனக் கண்டுபிடித்து, “நான் ஜெய்ச்சுட்டன்ல” எனப் பெருமிதம் கொள்கிறார். யார் தன் பேர் சொல்லி அழைக்கிறார்கள் எனக் கண்டுபிடிப்பதே இங்கு ஆசிரியப் பெருமிதமாய் மலர்கிறது. வாசக உதடு குறுநகை புரிகிறது. இப்படி ஒரு சுதந்திர வெளியை அனைத்து ஆசிரியர்களும் பின்பற்றினால் படிப்பு ஆணியைப் போல் அறையப்படாமல் விதையைப் போல் தூவப்படும் என்பதில் ஐயமில்லை.
“வாசல்ல எட்டி எட்டிப் பாக்க வேண்டியது;
சுந்தர் சார்; சுந்தர் சார்ன்னு சத்தம் போடுறது;
திரும்பிப் பாத்தா மறஞ்சுக்கிறது!”
“நாலு தடவ தப்பிச்சுட்டாய்ங்க.”
”இந்த முறை
நான் திரும்பவே இல்ல;
பாத்துக்கிட்டே இருந்தேன்;
சிக்கிட்டாய்ங்க.”
ஒரு தடவ
நானும் ஜெயிச்சுட்டேன்.”
இவரல்லவா உண்மையான ஆசிரியர்! குழந்தைகளின் வெகுளித்தனமான நடவடிக்கையில் தன்னை ஐக்கியப்படுத்தி தோற்றுப் போவது மாணவர்களைப் பாடங்களை நோக்கி ஈர்க்கும் மிகச்சிறந்த உத்தி. சுந்தருக்கு அது கைவந்திருக்கிறது.
ஆசிரிய மாணவ உறவின் சுதந்திர நெருக்கம் இன்னோர் அத்தியாயத்திலும் பிரிதிபலிக்கிறது.
“ஏய்
வாங்க; எல்லாரும்
சார சுத்தி நின்னு
மொறச்சுப்பாப்பம்.
–இது பால்வாடி கேப்டன்
ரஞ்சித் உத்தரவு.”
உடனே
குட்டீஸ் எல்லாம்
டேபிள சுத்தி நின்னு
மொறச்சுப் பாப்பாய்ங்க
நம்மள………
“டேய்
வேணாம்டா ரஞ்சித்து;
பயம்மா இருக்குடா.”
“நாங்க அப்படித்தான்
பாத்துக்கே இருப்பம்.”
“ப்ளீஸ்டா;
சாருக்கு பயமா இருக்குடா.”
“எம்மே ஹர்சிகா!
சாரு இதுக்குப் போயி
பயந்துட்டாரும்மே.”
ஆசிரியர் பிரம்புடன் அமர்ந்திருந்தால் இந்தக் குழந்தை மனம் வெளிப்ப்ட்டிருக்குமா? குழந்தைக் குறும்பு உள் அமுங்கி அவிந்து போனால் காய்க்காமல் உதிரும் பூவைப்போல் ஆகிவிடும். குழந்தைகளின் வளர்ச்சி அவர்களின் சுதந்திரச் சொல்லாடலில் இருக்கிறது. அன்னியத் தன்மையற்ற அன்யோன்யம் மனசில் படியும்போது படிப்பு இயல்பானதாய் மாறிவிடுகிறது.
பால்வாடியில் இருந்து மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களே இந்த நூலின் கதா நாயகர்கள். அவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான உறவுமுறைதான் பாடுபொருள். குழந்தைகள் தங்கள் சொல்லாடல்மூலம் அலாதியானதோர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறார்கள். “ஒங்கூட்டு டூணா” குழந்தைகளால் படைக்கப்பட்டுள்ள மகத்தான இலக்கியப் பனுவல். இந்நூலில் ”நகையே உவகை, இளிவரல், மருட்கை” எனத் தொல்காப்பியம் வரையறை செய்திருக்கிற நவரசங்களும் வருகின்றன. பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய குழந்தை உளவியல் வருகிறது. மூட நம்பிக்கைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது.
தேனிசுந்தர் இயக்கத்தில் குழந்தைகள் நடிக்கும் அற்புத இலக்கிய…….திரைக் காவியம் இந்த நூல். குழந்தைகளுக்கான அறிவுரையாக இல்லாமல் குழந்தைகளே அறிந்தும் புரிந்தும் வாசிக்கக் கூடிய குழந்தைகளுக்கான கலைக் களஞ்சியம் “ஒங்கூட்டு டூணா.”
இந்நூலின் இன்னொரு நல்ல அம்சம் ஹைக்கூ மேதை மு முருகேஷ் எழுதியுள்ள அணிந்துரை.
வாங்கி வாசியுங்கள். புதிய அனுபவம் கிடைக்கு..
ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டு விழா சிறப்புரை-இரா.சண்முகசாமி
ஓங்கில் கூட்டத் திருவிழா!
அறிவியல் பூர்வமான சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் ஆதிவள்ளியப்பன், பஞ்சுமிட்டாய் பிரபு, இ.பா.சிந்தன், உதயசங்கர், நாராயணி சுப்பிரமணியன், ஹேமபிரபா, நா.பெரியசாமி, ராஜேஷ் கனகராஜன், திவ்யா பிரபு ஆகியோரின் 10 புத்தகங்களை 04.04.2023 அன்று ஓங்கில் கூட்டம், பாரதி புத்தகாலயம், சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டனர்.
தோழர் Udhaya Sankar அவர்கள் தலைமையேற்க, தோழர் Vishnupuram Saravanan அவர்கள் ஒருங்கிணைக்க, நூல்கள் பற்றி எழுத்தாளர்கள் நாராயணி சுப்பிரமணியன், சாந்த சீலா, ஜோசப் பிரபாகர், வெற்றிச்செழியன், விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் கருத்துரைகள் வழங்க தோழர் க.நாகராஜன் அவர்கள் நன்றி கூறினார்கள்.
யதார்த்தமாக தோழர் Chinthan Ep மற்றும் Prabhu Rajendran அவர்களின் முகநூல் பதிவை பார்க்க நேரிட்டது “சென்னை பாரதி புத்தகாலயம் அரும்பு நிலையத்தில் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா” என்று.
ஏதோ பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டு வரலாம் என்பது போல புதுவையிலிருந்து புறப்பட்டு மாலை சரியாக 6.15 மணிக்கு சென்னை சென்றேன். விழா சரியாக 6.30 மணிக்கு தொடங்கியது. ஆளுமைகளின் நூல்களை ஆளுமைகள் பலர் வெளியிட குழந்தைகள் அவர்களைக் குழந்தைகள் என்று சொல்லமுடியாது அவ்வளவு சிறப்பாகவும், பொறுமையாகவும் அமர்ந்து நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல்களை பெற்று நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். அவ்வப்போது திரும்பித் திரும்பி புன்னகைப் பூக்களை உதிர்த்துக்கொண்டே இருந்தனர்.
சரியாக இரவு 8.40 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது. மறுபடியும் டீ குடித்து வீட்டுக்குத் திரும்புவது போல் அவசரமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பாண்டியன் ரயிலைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன் இரவு 2.30 மணிக்கு.
வாசிப்பு மனிதனை பல தளங்களுக்கு பரந்து விரிந்து அழைத்துச் செல்லும் என்பதை புத்தகங்கள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. வாசிப்பு உலகில் நுழைந்தவர்களுக்கு அது நன்குத் தெரியும். பறவை கூட்டுக்குத் திரும்பும் நேரம் போக மற்ற நேரங்களில் வானில் சிறகை விரித்து பறப்பது போல புத்தகங்களின் பக்கங்களை புரட்டுபவர்களுக்கு வானம் வசப்படுவது நன்குத் தெரியும். அந்த வாசிப்பு வான்வெளியை தமிழக மக்களுக்கு நன்கு திறந்து காண்பிக்கும் பணியை #பாரதிபுத்தகாலயம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. அதில் ஒரு அடுத்தக்கட்ட நகர்வுதான் #ஓங்கில்கூட்டம் வழியாக சிறுவர், பதின்பருவ குழந்தைகளுக்கான நூல்களை வழங்கும் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் கொண்ட வெளியீடு தான் மேற்கண்ட நிகழ்வின் பாத்திரம்.
04.04.2023 நிகழ்வு மிகச்சிறப்பு. அதற்காக பாடுபட்ட அத்தனை தோழர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சம் நிறைந்த நன்றியினையும் உரித்தாக்ககிறேன்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!