நம்பிக்கைத் தரும் உரைகளின் தொகுப்பு
பினராயி விஜயனாகிய நான் ஒரே நாளில் முதலமைச்சர் பதவியில் வந்து குதித்துவிடவில்லை . ஆர்.எஸ்.எஸ் ஆகிய உங்களைப்பற்றி அறியாதவனுமல்ல. நேரடியாகவே தெரிந்தவன். உங்களைப் பார்ப்பது, உங்களை அறிவதன் மூலமே எப்போதும் எனது அரசியல் செயல்பாடு இருந்துள்ளது”.
2017ல் மங்களூரில் நடைபெற்ற வகுப்புவாத எதிர்ப்பு, மக்கள் ஒற்றுமைக்கான பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் ஆற்றிய உரையின் சாராம்சமே மேலே குறிப்பிடப்பட்டது. கேரளத்தின் கண்ணூர் மாவட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தீவிரமாக இருக்கும் ஒரு – பகுதி. அங்கு சங் பரிவாரிகளின் வகுப்புவாத . நடவடிக்கைகளும் தீவிரமாக இருக்கும். அப்படியான பகுதியில் இருந்து தான் பினராயி விஜயன் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை களத்திலும், கருத்தியலாகவும் சங் பரிவார்களை நேரடியாக எதிர்க்கொண்டவர் பினராயி விஜயன். பல்வேறு பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்களில் சங் பரிவார்களுக்கு எதிராக அவர் பேசிய ஆழமான அரசியல், கருத்தியல் சார்ந்த உரைகள் தொகுக்கப்பட்டு “ஆர்.எஸ். எஸ்-க்கு எதிராக இந்தியா” என்னும் தலைப்பில் நூலாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
பிஜேபியை தேர்தல் அரசியல் ரீதியில் எதிர்கொண்டாலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் அதன் தத்துவார்த்த அடித்தளமான ஆர்.எஸ்.எஸ்ஐ கண்டுகொள்வதில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் தெளிவாக RSS மற்றும் அதன் மதவாத தத்துவார்த்தம் குறித்து கூர்மையாக பேசுவதென்பது மிக அவசியமானது. சங்கின் வகுப்புவாத நடவடிக்கைகள் குறித்து மட்டும் பேசாமல் அதன் கருத்தியலுக்கு முழுமுதற் காரணமான பார்ப்பனியம் குறித்தும், மனுஸ்ருமிதி குறித்தும் பேசுவது தான் அவரது உரைகளில் சிறப்பம்சம். தனது ஒவ்வொரு உரைகளிலும் வகுப்புவாதம் எல்லா தரப்பு மக்களையும், நாட்டின் மதச்சார்பின்மையும் எங்கனம் பாதிப்பிற்குள்ளாக்குகிறது என்பதை விரிவாக பினராயி விஜயன் விவரிக்கிறார்.
அதே நேரம் பல்வேறு தரப்பு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளையும் மிகத் தெளிவாக ஆழமாக அறிந்து வைத்துகொண்டு தனது உரைகளில் வெளிப்படுத்துகிறார்.
டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க கருத்தரங்கில் கேரளா குறித்து பத்திரிகையில் பரப்பப்படும் பொய் பிரச்சாரங்கள் குறித்து விரிவாகப் பேசி, உண்மையான கேரளத்தின் வளர்ச்சி, மதச்சார்பின்மை குறித்து புள்ளி விவரங்களோடு புதிவு செய்கிறார். பத்திரிகையாளர்களின் முக்கியத்துவம் குறித்தும், தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளுக்கு எங்ஙனம் துணை நிற்கின்றன என்பது குறித்தான நீண்ட உரை இது. மங்களூர் “வகுப்புவாத ஒற்றுமை பேரணியில்” அவர் ஆற்றிய உரை சிறப்புமிக்க ஒன்று. சங்கின் அச்சுறுத்துலுக்கு மீறி மேடை ஏறி அவர்களின் திமிரினை பிடித்து உலுக்கியது அன்றைய உரை. அந்த கூட்டத்தில் தான் RSS தான் மகாத்மா காந்தியை கொன்றது என மிக வெளிப்படையாக புதிவு செய்தார். இப்படி பேசிய ஒரே மாநில முதல்வர் பினராயி விஜயன் மட்டுமே.
பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் மீது சங் பரிவார கும்பலினால் நடத்தப்படும் வன்முறைகள், கொலைகள் குறித்தும் தனது உரையில் விரிவாக குறிப்பிடுகிறார். “கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்” என்னும் தலைப்பில் பேசியுள்ள உரை மிக முக்கியமான ஒன்று. கேரளமென்றாலே அரசியல் படுகொலைகள் என்று தேசிய ஊடகங்கள் மையப்படுத்தி வரும் இந்நேரங்களில் அதற்கு முழுமுதற் காரணகர்த்தாவாக இருப்பது யார்? என்பது கேரள முதல்வரின் இந்த உரை வெளிக்காட்டுகிறது. 2016ல் இடதுசாரி அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் கூட கம்யூனிஸ்ட் கட்சியினர் சங் பரிவாரத்தினாரால் கொல்லப்படுவது தொடர்கிறது. இதுவரை நடந்த அரசியல் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இடது முன்னணியினர் என தோழர் பினராயி விஜயன் குறிப்பிடுகிறார். புதிய தாராளமய – கொள்கைகளும், வகுப்புவாதமும் அடித்தட்டு விளிம்பு நிலை மக்களை எந்தளவு பாதிக்கிறது என்பதை மிக விரிவாக பல்வேறு கட்சி – வெகுஜன அரங்க மாநாடுகளில் பேசியுள்ளார்.
அவை ஒவ்வொன்றும் ஆழமான விவரங்கள் – அடங்கிய உரைகள். ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக இடதுசாரி வெகுஜன அரங்குகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஸ்தானப் நடவடிக்கைகள் குறித்தும் தனது ஒவ்வொரு உரைகளிலும் தவறாமல் குறிப்பிடுகிறார்.
வரலாறு சார்ந்து அவர் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் உண்மையில் வியக்க வைக்கிறது.. அவை, அவர் சிறந்த களச் செயற்பாட்டாளர் மட்டுமல்ல, நல்ல வாசிப்பாளர் என்பதை காட்டுவதாக உள்ளது. கேரளத்தின் வரலாற்றை மட்டும் அல்ல தான் பேசப் போகும் நாட்டின் பிற பகுதிகளின் – வரலாற்றையும் தனது உரைகளில் விரிவாகப் பேசுகிறார். தமிழகத்தில் விசிக நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் பேசியபோது சமூகநீதி களத்திலும், மாநில சுயாட்சிக்கான நடவடிக்கைகளிலும் தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் வரலாற்றை நினைவு கூர்ந்தது சிறப்பு.
இந்நூலில் மிக முக்கியமான அவரது கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. கேரளத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமான ‘மாப்ளா கிளிர்ச்சி’ என்னும் விவசாயிகள் போராட்டம் குறித்த கட்டுரை அது. நிலப்பிரபுக்களுக்கு ஏதிராகவும், அவர்களுக்கு ஆதரவாக இருந்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்தும் போராடிய விவசாயிகளில் முஸ்லிம்கள் . பெரும்பான்மையினராக இருந்த காரணத்தினால் அதை வகுப்புவாத கலவரத்திற்குள் அடைக்க முற்படும் சங் பரிவார சதிக்கு எதிரான முக்கியான கட்டுரை தோழர் பினராயி விஜயன் எழுதியது. மேலும் மாப்ளா போராட்டத்தை நினைவு கூறுவதில் மற்ற எல்லாவரையும் விட இடதுசாரிகளே முன்நிற்கின்றனர் என அக்கட்டுரையில் விளக்கியுள்ளார். நாட்டின் பன்மைத்தன்மை தான் இந்திய ஜனநாயகத்தின் அடிநாதம். சிறுபான்மையினரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதன் மூலம் ஜனநாயக, மதச்சார்பற்ற மாண்புகளை படுகுழியில் ஆர்.எஸ்.எஸ் தள்ளுகிறது என மத சிறுபான்மையினரின் மீது நடக்கும் வகுப்புவாத அத்துமீறல்களை தனது உரைகளில் குறிப்பிடுகிறார்.
தாராளமயக் கொள்கைகள் நாட்டின் அனைத்துத் தரப்பட்ட மக்களின் வளர்ச்சியை எங்ஙனம் பாதித்துள்ளது என்பதை புள்ளி விவரங்களோடு தனது உரைகளில் பதிவு செய்கிறார். அதை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸுக்கும், பிஜேபிக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். மேலும் பிஜேட ஒருபடி மேலே சென்று எவ்வாறு தாராளமயக் கொள்கைகளை அதிவேகமாக அமலாக்குகிறது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை .
பழங்குடியினர் வாழும் பகுதிகளில் தனியார் நிறுவனங்களுக்காக அவர்களை அப்புறப் படுத்தும் நடவடிக்கைகளையும் தனது உரையில் குறிப்பிடுகிறார். பெண்கள் சுதந்திரம், தேர்வு செய்யும் உரிமை குறித்தும், வகுப்புவாதம் பெண்களின் மீது செலுத்தும் தாக்குதல் குறித்தும் மாதர் சங்க மாநாட்டில் நீண்ட உரையாற்றி இருக்கிறார். நாட்டின் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும், அனைத்து தரப்பட்ட மக்களின் நலன்களையும் பாதுகாப்பதில் இடதுசாரி இயக்கம் மட்டுமே வெளிப்படையாக, உண்மையாக இயங்குகிறது என்பதை தனது உரைகள் அனைத்திலும் உதாரணங்களோடு குறிப்பிடுகிறார். மேலும், மற்ற அரசியல் கட்சிகள் போல் அல்லாமல் வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் சமரசமின்றி போராடுபவர்கள் இடதுசாரிகள் என்பதனையும் பினராயி விஜயன் பெருமையோடு கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்ஐ பொறுத்தவரை அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து நன்கு அறிந்தவர்கள் தான். மற்ற எந்தக் கட்சிகளையும் அவர்களால் ஏதோவொரு வகையில் சரிகட்ட முடியும். ஆனால், அது இடதுசாரிகள் விசயத்தில் நடக்காது: ஏனெனில் அவர்களின் அனைத்துவகை நடவடிக்கைகள், தத்துவார்த்த கருத்தியல்களில் இருந்து முரண்பட்டு எதிர்நிலையில் நிற்பவர்கள் கம்யூனிஸ்ட்க ளும், அவர்களது தத்துவமும். அந்த சிறப்புமிக்க தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே கேரள முதல்வரின் உரைகள் எழுந்துள்ளன.
இந்தியாவின் அனைத்துத் தரப்புக்கும் பொதுவான சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், மதவாத – நடவடிக்கைகளை எதிர்ப்பதிலும் இடதுசாரிகள் பின்வாங்க மாட்டார்கள் என்பது சங்கிற்கு நன்றாகத் தெரியும். எனவே சிறுபான்மையினர், தலித்துகள் வரிசையில் கம்யூனிஸ்ட்டுகளையும் தனது எதிரி பட்டியலில் அவர்கள்
வைத்துள்ளனர். அந்த வெறியாட்டத்தை திரிபுராவில் கண்டோம். மேலும் தோழர் – பினராயி விஜயன் உயிருக்கு ஒரு கோடி பரிசு அறிவித்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சினையும் கண்டோம். அந்தளவுக்கு இடதுசாரிகளின் நடவடிக்கைகள் அவர்களை எரிச்சலூட்டுகிறது.
வலதுசாரிகளுக்கு எதிராக யார் பேசினாலும் இடதுசாரிகள் என முத்திரை குத்தப்படுவது வழக்கமாக அவர்கள் செய்துவரும் தந்திரம். ஆனால், உண்மையில் அனைவருமே இடதுசாரிகள் அல்ல. தேர்தல், சுய நலனுக்காக வலதுசாரிகளை அப்போது எதிர்ப்பவர்கள் பின்னாளில் அவர்களுடனேயே சேர்ந்துகொள்ளும் சம்பவங்களை நிகழ்காலத்திலேயே கண்டோம்.உண்மையிலேயே இடதுசாரிகள் என்பவர்கள் யார் என்பதற்கான பதிலை பினராயி விஜயன் உரைகளே தெளிவாக்குகின்றன. வகுப்புவாத மேகம் மத்தியில் சூழ்ந்து நாட்டை துண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு மாநில முதல்வராக பினராயி விஜயனின் இப்படியான உரைகள் நம்பிக்கைத் தருகிறது. தோற்கடிக்க முடியாத சக்தி என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ் எஸ்க்கு எதிராக அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட தனது உரைகளின் வழியே தோழர் பினராயி விஜயன் அழைப்பு விடுக்கிறார்.
நன்றி: இளைஞர் முழக்கம்
நூல்: ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக இந்தியா
ஆசிரியர்: பினராயி விஜயன்
தமிழில்: கி.ரா.சு
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
நூல் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் : thamizhbook.com