நூல் அறிமுகம்: க.வீரமணியின் ‘அப்பாவின் காதலி’ (சிறுகதை) – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: க.வீரமணியின் ‘அப்பாவின் காதலி’ (சிறுகதை) – பாரதிசந்திரன்



”அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்”

“படைப்பாற்ற உளவியல்” (CREATIVE PSYCHOLOGY) வெளிப்பாடுகள், தொடர் சமூக வரலாற்றில் மிகுந்த கவனத்துடன் அவதானிக்கப்படுகையில், படைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல், காலம், சமூக ஒழுங்கு, குழுவாழ்க்கை, அறம் சார்ந்த நடைமுறைகள் ஆகியவை ஒருங்கே சேர்ந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.

சமூகத்திற்குப் படைப்பு எதையோ நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன் நம்பிக்கை முழுமையுமான நிகழ்வுப் பதிவுகளின் உணர்வுப் பரிமாறுதலையே மையம் கொண்டு சுழல்கின்றன.

தனிமனித கவனித்தலும், ரசித்தலும், மேம்பட்ட தீவிர உள்வாங்குதலுக்குப் பிரதானமான காரணமாக இருந்தாலும், பிரிது ஒருவருக்குக் கடத்தி விட உணர்வு துடிப்பதே பெரும் பகுதி நியாயமாயும் இருக்கிறது. இயல்பாகவும் இருக்கிறது.

மாபெரும் உளவியல் அறிஞர் ’ஆல்பிரட் ஆட்லர்’ (Alfred Adler) கூறிய படைப்பு வெளிப்பாடு தாழ்வு மனப்போக்கை ஈடு செய்ய வெளிவந்த அற்புதமான உத்தி என்பதை உற்று நோக்குகிறபொழுது, படைப்பாளரின் தேவைக்கான விருந்தாகவும், அவன் படைக்க விரும்பிய மாற்றாருக்கான விருந்தாகவும் படைப்பு மிகுந்து மிளிர்கிறது.

இவ்வாறான படைப்புத்திறனைச் சிறுகதை இலக்கிய வகையில் தெளிவு படுத்திக் காண முடியும். பிற துறைகளைவிட இத்துறை அதிகமாய் இக்கருத்தைப் புகுத்திக் கொண்டது எனலாம்.

படைப்பின் உணர்வுகள் அப்படியே வாசகனுக்கு சென்றடையும் சிறந்த கட்டமைப்பைச் சிறுகதை இலக்கியம் பெற்றிருக்கின்றன. இங்கு ‘சிக்மண்ட் பிராய்ட்’(Sigmund Freud) படைப்புத்திறன் குறித்தான கருத்தானது ஒப்புமைக் கருத்தாகிச் சரியாகப் பொருந்துவதைப் அறிந்து கொள்ளலாம். அதாவது சிக்மன்ட் பிராய்ட் படைப்பின் அடிப்படையில் குறித்து கூறும்பொழுது, “ ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கோளத்திற்கு பாலியல் ஆசையின் பதங்கமாதல் (SUBLIMATION) (மாற்றம்) விளைவாகவும், பாலியல் கற்பனையானது சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வடிவத்தில் ஒரு படைப்பு தயாரிப்பில் புறநிலைப் படுகின்றது” என்பார். படைப்புக்கு அடிப்படை இயற்கையின் எதிரி எதிர் விருப்பே காரணமென்கின்றார்.

மேற்கண்ட படைப்பு மற்றும் படைப்புத்திறன் குறித்த விளக்கம் எல்லாம் எழுத்தாளர் க.வீரமணி அவர்கள் எழுதிய ”அப்பாவின் காதலி” சிறுகதை படித்து முடிக்கும்பொழுது, ஒப்புமையோடு மனதில் எழுகின்றன.

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படைப்பு வெளிப்பாடு. ஜி ஆல்போர்ட் தன் திறனோடு சில கதைகளில் நிற்கின்றார். ஏ.மாஸ்லோ சில கதைகளில் சிரிக்கின்றார். யுங் சில கதைகளில் அவரே வெளிப்படுகின்றார். அறிவியலும் தொழில்நுட்பமும் இப்பிரபஞ்சத்தையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவஞானி பிரான்சிஸ் பேக்கன் சில கதைகளில் நின்று தத்துவம் கூறுகின்றார். இவ்வாறு படைப்புத்திறனைக் கோட்பாடுகளாகக் கூறிய பல அறிஞர்கள் இந்த நூலைப் படித்து முடிக்கும்பொழுது, இயல்பாகவே நம் நினைவுக்கு வருகிறார்கள் என்பது இச்சிறுகதை தொகுப்பின் மிகப்பெரும் பெருமையாகும்.

எழுத்தாளர் க.வீரமணி அனுபவங்களை அனுபவங்களாகப் பார்க்காமல் சமூகத்தின் அறமாகப் பார்க்கின்றார். எவ்வகை அனுபவமும் ஒவ்வொரு அறக்கருத்தை உலகத்திற்கு சொல்லுகிறது எனும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றார். மொத்தம் 22 அனுபவங்கள் 22 சிறுகதைகளாக 22 அறக்கருத்துக்களாகச் சமூகத்திற்குப் பாடம் நடத்தப்பட்டிருக்கின்றன.

காலத்தால் அழிவு பெறாத சிறுகதைகள் தமிழில் பல நூறு உண்டு என்னும் வரிசையில் இக்கதைகள் வருங்காலத்தில் சேர்க்கப்படலாம்.

கதாபாத்திரங்களாக, இச்சிறுகதைகளுக்குள் உலா வருகிறவர்கள் சாதாரணமானவர்களாக நாம் அவர்களைக் கருதி விட முடியாது. கதை படித்து முடித்தவுடன் பசை போடாமல், பிரித்து விட முடியாதபடி நம்மோடு நாமாக ஒட்டிக் கொள்ளக் கூடியவர்கள்.

பெண் கதாபாத்திரங்களை ரசித்தலின் உச்சத்தில் வைத்தும், அடி ஆழத்தின் வலிகளைத் தேடிப் பிடித்து, அந்த ரணத்தை ஆற்றியும் தலைமேல் தூக்கிக் கொண்டு அவர்களின் பண்பை நினைந்து நினைந்து பேசுதலும் தெய்வமெனப் பாவித்து ஆராதனை செய்தும் பெண் கதாபாத்திரங்களைப் பதிவு செய்திருக்கிறார். ஆசிரியர் க. விரமணி.

எல்லோரும் புரிந்து வைத்திருக்க வேண்டிய சரியான பெண் உலகம், இவரின் பொன் உலகமாகும்.

நியாயம் தேடி முள் சங்கிலியைச் சாட்டையாய் உயர்த்தும் குரலும் சில இடங்களில் ரத்தக்கரை கொண்டிருக்கின்றன. படைப்பாளன் இதனைக் கூடச் செய்யாமல் விட்டிருந்தால், கொஞ்சம் கூட நிறமற்றவராக அல்லவா இருந்திருப்பார்? எனவே எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சில கதைகளில் புரட்சி வண்ணங்களைப் பூசிக்கொண்டு களமாடுகிறார். இதற்குச் சில கதைகள் உதாரணமாக இருக்கின்றன.

உள்ள அன்பை, நேசத்துடன் காதல் செய்யும் நேர்த்தியும், உடன் கலந்து ஒன்றாகி மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடையும் காதல் இல்லறம் எனும் சொர்க்கலோகத்தை அடையாளப்படுத்திக் கதையாக்கி இருக்கிறார்.

இந்தக் கதைகள் வருங்கால இளைஞர்களுக்கு மெய் சிலிர்க்கும் முத்த தேசத்தை அடையாளம் காட்டும். உணர்வுகள் மிக நெருக்கமானவை. மனித மனங்கள் இந்தச் சொர்க்கபுரியில் முழுமையுமாகத் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளை அதன் இன்பம் குறைந்து விடாமல் அப்படியே கதையாக்கி தந்திருப்பது மிகச் சிறப்பானதாக இருக்கின்றது

இலக்கியத்தில் உணர்வுகள் எப்படிப்பட்டதாயினும் ரசனைக்கானது எனில் மொழி கடந்தும், நாடு கடந்தும் பயணிக்கும். தொட்டால் சுண்டும் மின்சாரம் போன்றது இலக்கியமெனின் எவ்விடமெனினும் அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும். அதை நோக்கிய பயணம், ஆசிரியர் க.வீரமணி அவர்களால் தொடங்கப்பட்டு விட்டது இச்சிறுகதைகளால்.

– பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: ’ஏம்மா’ சிறுகதை – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: ’ஏம்மா’ சிறுகதை – பாரதிசந்திரன்




அன்பரசு என்னும் இயற்பெயர் கொண்ட புதியவன் எழுதியிருக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல்.

இச்சிறுகதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு தளத்தை மையமாகக் கொண்டு உணர்வுகளின் வெளிப்பாடாகப் படிக்கின்ற வாசகனின் மனதை அந்தத் தளத்திலேயே கொண்டு போய் விடும் ஆற்றல் உடையதாக இருக்கின்றன.

ஒரு இலக்கியம் அது காட்டும் உலகம் என்பது அலாதியானது. தனித்துவமும் ஆனது. ஒவ்வொரு படைப்பாளரின் அனுபவக் கருத்துக்களுடன் அவன் கண்டு இருக்கிற உலகமும் காண விளைகிற உலகம், வாசகனிடத்தில் அனுப்பப் படுகிறது. அதை அவன் அனுபவித்த அனுபவக் கருத்துக்களுடன் தான் கண்டு கொண்டிருக்கிற உலகத்தையும், காண இருக்கின்ற உலகத்தையும் படைப்பாளியிடத்தில் எதிர் நோக்கியும், அவன் காட்டுகிற உலகத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடனும், சிறுகதைத் தொகுப்பை அணுகுகிற பொழுது இவை இரண்டும் ஒருமித்த பாதையில் செல்லுகிற பொழுது, இந்த வெற்றிப் பயணம் உலக இலக்கியத்தின் மிகப்பெரும் வெற்றிப் புள்ளியாகிறது அல்லது இலக்கியம் ஜெயித்து விட்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

உள்ளம் எழுப்பும் சப்தங்களைக் கண்டுணர்ந்தவன் அதன் அதிர்வுகளைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல் தன் எழுத்தின் வழி கடத்துவதற்கு முயற்சி செய்கிறான். அதே போல வாசகனுக்கு இந்த அதிர்வுகள் முன்பின் தெரிந்தவையாகவும் இருக்கலாம். அதன் வலிகளை உணர்ந்தவனாகவும் இருக்கலாம். இது தெரியாமல் புதிதாக அறிந்தவனாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் வலியின் அல்லது மிகுந்த சந்தோஷத்தின் உணர்வுப் பரிமாற்றம் அந்தச் சிறுகதையின் வெளிப்பாடாகும்பொழுது படைப்பு உச்சத்தைப் பெறுகிறது.

ஏம்மா” என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு மேற்காணும் வெளிப்பாட்டு உத்தியில் மதுரைக்கு அருகாமையில் இருக்கும் சிற்றூர்களில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஏழை, எளிய, படிப்பறிவாற்ற வாழ்க்கையை, அடிமையாய் வாழும் மனநிலையை இக்கதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன

முதல் கதையாக அமைந்திருக்கிற ஏம்மா எனும் சிறுகதை, இச்சமூகத்தில் காணப்படும் பழமைக்கும், புதுமைக்குமான போட்டியை அல்லது வாழ்வாதார மாற்றங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. ஏழ்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பும் ஏழ்மைவாதியின் வாழ்வாதாரச் சிக்கலை எடுத்து விளக்குகிறது. உளவியல் சார்பான பயம், இயலாமை, மேல்தட்டு வர்க்கங்களின் உதாசீனம், இவை அனைத்தும் இக்கதையின் ஊடாகப் பயணிக்கின்றன.

தாய், தந்தை, மகள் இந்த மூவருக்குள் நடைபெறும் உணர்வுப் போராட்டங்கள்  இக்கதையின் சாராம்சமாக அமைந்திருக்கிறது. படித்த பெண்கள் கிராமப்புற வாழ்வை ஒதுக்கி தள்ளி நாகரீகம் எனும் போர்வையில் வேறு திசை சென்று விடுவர் என்கின்ற கிராமத்திய எண்ணப்போக்குகள், படிக்க வேண்டும் என்று எண்ணுகிற ஒரு பெண் குழந்தையின் வாழ்வை சிதைக்கிறது என்பதை இதைவிட ஆழமாகச் சொல்லிவிட முடியாது என்கிற அளவில் இக்கதை எடுத்து கூறி இருக்கிறது

”ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு” எனும் சொலவடை, ”ஊரார் வாய் எப்பொழுதும் புளிக்கும்” எனும் சொலவடை இக்கதையின் மூலம் உண்மையென்று உணர்த்தப்படுகிறன.

கதாசிரியர் நேரடியாகக் கிராமத்தின் முன் போய்நின்று, கிராமத்திலுள்ளோர் ஏழ்மையினால் கல்லுடைக்கும்  நிலையை வர்ணிக்கின்றார். பிறகு தொழிலாளியின் வீட்டை வர்ணிக்க ஆரம்பித்துக் கதை கூறுகிறார். காட்சிகள் அப்படியே கண் முன் விரிகிறது. அந்த அளவிற்கு எதார்த்தமாக இக்கதையை வசனங்களுக்கு நடுவே கூறிச் செல்கின்றார்.

கல்லூரிக்குப் படிப்பதற்குச் சென்று வரும் தன் மகள் மேல் சந்தேகப்படும் தாய், அதன் மூலமாகத் தந்தை  கோபப்பட்டு மகளைக் கொலை செய்யும் கொடூர எண்ணம், உணர்ச்சி வசப்பட்டுச் செய்த அந்தச் செயல், இவற்றை நேரே பார்ப்பதைப் போல விளக்கிக் கடைசியாகத் தாயும் தந்தையும் அந்தச் செயலுக்காக வருந்தி ஏங்கும் நிலையை அங்குலம் அங்குலமாக, அந்த வலியை உணர வைத்திருக்கிறார்.

ஊராரின் பேச்சு அல்லது பயம் தன் குழந்தையைக் கொல்லும் அளவிற்குச் சென்று இருக்கிறது என்னும் பொழுது தாய் தந்தை அடைந்த வேதனையைக் கதை படித்து முடிக்கும் பொழுது நம்மால் உணர முடிகிறது.

இதேபோல் ஏம்மா-2 எனும் இரண்டாவது கதை, ஒரு தாயின் தியாக உணர்வை மிக ஆழமாக எடுத்துக் கூறுகிறது. இக்கதையில் சமூகத்தின் கொடூரங்கள், கல்வி பெறவேண்டிய சூழ்நிலை, பாசம், குழந்தை வளர்ப்பு எனப் பல தளங்களில் சிறுகதை நம்மை வழி நடத்திச் செல்கிறது.

தன் மகன் படிப்பிற்காகத் தன் வீட்டையே பண்ணையாரிடம் ஏமார்ந்து கொடுக்கும் தாயின் துன்ப வலி, தன் உடலின் ரத்தத்தைக் கூடப் பணமாக்கி தன் மகனுக்காகப் படிக்க வைக்கும் தாயின் இளகிய உள்ளம், வாழ்க்கை வறுமைச் சூழ்நிலை, வயது முதிர்ந்த பெண் என்றும் பாராமல் அவளுடைய சிறுநீரகப் பையைக் களவாடிச் செல்லும் மருத்துவக் குழுக்கள், மகனின் தொடர் கவனிப்பை மறந்த தாய், மூன்றாண்டுகள் கழித்துத் தன் தாயைப் பார்க்க வேண்டிய கல்லூரிச் சூழல் எனப் பல வகைகளில் சமூகத்தில் இன்று நிலவுகின்ற சமூகச் சிக்கல்களை எல்லாம் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்து இருக்கிறார் படைப்பாளர்.

ஆனால் கதையின் இறுதியில் தன் தாயைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் அவள் உடல்நிலை மாறி அவளைப் பிச்சைக்காரி என்று நினைக்கும் மகனின் செயல்பாடுகளைச் சிறிது மாற்றி இருக்கலாம். பெற்ற தாயை அறிய முடியாத எந்தக் குழந்தையும் இவ்வுலகில் இல்லை. ஆனாலும் கூட இந்தக் காலகட்டத்தில் இப்படி நிகழும் என்று கதாசிரியர் கூறிச் செல்லுகிறார்.

மனதின் ஓரத்தில் கதைகள் மிகப் பெரும் வலியை ஏற்படுத்தி இருக்கின்றன. இக்கதைகளைப் படித்து விட்டுக் கண் கலங்கி, இப்படியும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று எண்ணி நாம் கதையோடு பயணிக்க வேண்டி உள்ளது. அந்த அளவிற்குச் சோகத்தின் நிழல் இக்கதைகளில் பரந்து கிடக்கிறது.

கதாசிரியர் புதியவன் சிறந்த சிறுகதை ஆசிரியராக வெளிவந்திருக்கிறார். இவரின் கதை கூறும் முறை சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிற பொழுது கடைசி எல்லையாகச் சிறுகதையின் உச்சத்தை அவர் மிக எளிதாகத் தொட்டு விடுவார். அத்தகைய வேட்கை அவரிடம் காணப்படுகிறது.

பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)

நூல்: ஏம்மா
நூலாசிரியர்: புதியவன்
விலை: 100

பக்கம்:  150
பதிப்பு: மே-2022
வெளீயீடு: அறிவை அறிவோம் பதிப்பகம்
முகவரி:   தெற்குத் தெரு ,
குலசேகரன்பேட்டை
தா. வாடிப்பட்டி,
மதுரை.

நூல் அறிமுகம்: தாழை. இரா.உதயநேசனின் ’செவத்த இலை’ – பாரதிசந்திரன்

நூல் அறிமுகம்: தாழை. இரா.உதயநேசனின் ’செவத்த இலை’ – பாரதிசந்திரன்




தாழை இரா உதயநேசன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு இந்நூல். இந்நூலில் 30 சிறுகதைகள் காணப்படுகின்றன. சிறுகதைக்கே உரித்தான அடித்தளக் கட்டமைப்பைப் பெற்று, மன உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் மற்றும் சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் சிறுகதைகள் இத்தொகுப்பில் காணப்படுகின்றன.

குறிப்பாகச் சிறுகதைகள், அந்த அந்தக் காலகட்டத்தின் சமூக நடப்புகளை வெளிப்படுத்துகின்றனவாக அமைய வேண்டும். தனிமனித உள்ளத்தின் உணர்வுச் சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும்.

சிறுகதைகளைப் படிப்பவர்கள், ஆசிரியர் கூற வந்திருக்கும் செய்தியை, கருத்தை, அறிவுரையை, நடப்பை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே சிறுகதை வெற்றி பெற்று விட்டதாகப் பொருளாகும். அந்த நிலையில் 30 சிறுகதைகளில் ஆசிரியர் என்ன கூற நினைத்தாரோ அந்தக் கருத்தும், நடத்தைகளும், அறிவுரைகளும் மிகத் தெளிவாக வாசகனுக்குப் போய்ச் சென்றடைந்து இருக்கிறது.

எந்தவிதமான மிகைச் சொல்லாடல்களும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் எங்கும் காணப்படவில்லை. வசன உரைநடைகள், ஆசிரியரின் உள்ளீடுகள், காட்சிப் பின்புல விளக்கம், இவைகள் அனைத்தும் வெற்றுச் சதைகளைச் செதுக்கி மிகச் சரியான உடல் அமைப்பில் ஒரு உருவத்தைச் சமைத்துத் தந்திருக்கிறது.

சிறுகதை படித்து முடித்தவுடன் அந்தச் சிறுகதை படித்தவரின் மனதில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இத்தொகுப்பிலுள்ள 30 கதைகளும் படித்து முடித்தவுடன் 30 விதமான எண்ணக் கிணறல்களை ஏற்படுத்துகின்றன.

அந்தக் கிளர்ச்சிகள் வாசகனை ஆசிரியரின் எல்லைக்கு அருகில் கொண்டு சென்று, ஆசிரியரையே தரிசிக்க வைக்கின்றன. உண்மையில் எல்லாச் சிறுகதைகளும் உணர்வு மேலிடல்களின் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றன.

உளவியல் பூர்வமான பல உள்ள வெளிப்பாடுகள், மனதின் அகோர எண்ணங்கள், பாச உணர்வுகள், குற்ற உணர்வுகள், தெளிவற்ற நிலை, பாசாங்கு, போலித்துவம் போன்ற பல உளவியல் தாக்கங்களை, இந்தச் சிறுகதைகள் விளக்கி நிற்கின்றன. ஒட்டுமொத்தமாய் உளவியல் சார்ந்து இருக்கின்ற மிக ஆழமான சிறுகதை தொகுப்பு இதுவாக இருக்கலாம்.

உளவியல் பூர்வமான படைப்புகளைக் குறித்து டாக்டர் தி.சு. நடராஜன் அவர்கள் கூறுகிற பொழுது,”சமூக ஒழுக்கம் முதலியவற்றின் காரணமாக மன உணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படாமல் அழுத்தப்படுகின்றன. இவ் உணர்வுகளும் அடி மனதில் ஆழமாய் மையம் கொண்டிருக்கும் பாலியல் உணர்வுகளும் நனவிலி மனத்தின் ஊடாக, அவனே அறியாத நிலையில், அவனுடைய சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. கலைஞனிடம் இத்தகைய உணர்வுகள் அவனுடைய அறிவார்ந்த விருப்பங்களையும், உணர்வுகளையும் மீறி அவனுடைய கலை படைப்பில் வெளிப்பட்டு விடுகின்றன.” என்று கூறுவார்.

இந்தக் கோட்பாடு முழுமையும் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஊடாக ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிகச் சரியாகப் பொருந்தி வரும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பர். அவனிடம் சமயத்திற்குத் தகுந்த பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அந்த உணர்வுகளை, அந்தக் கணம் எப்படி உணர்ந்ததோ அதே உணர்வோடு அந்தக் காட்சியை வெளிப்படுத்தச் சிறுகதைகள் முனைந்திருக்கின்றன. அந்த முனைப்பை தாழை.இரா.உதயநேசன் அவர்கள் செய்திருக்கின்றார்.

உதாரணத்திற்குச் ’செவத்த இலை’ என்று ஒரு கதை. இதில், ’பச்சம்மா’ எனும் கதாபாத்திரம். எதார்த்தமான வாழ்வியல் சூழலில், எளிமையான, ஏழ்மையான வாழ்க்கை வாழும் ஒரு கிராமத்துப் பெண்மணி. அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் வாழ்வாதாரச் சிக்கல்கள், அரசு அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள், இதை மீறிய பாலியல் உணர்வுகள் போன்ற அனைத்துக் காரணிகளையும் மையம் கொண்டு இச்சிறுகதைகள் நடை போடுகின்றன.

சிறிய கதை தான் இது. ஆனால், சமூகப் பிரச்சனைகள் முழுவதும் பேசப்படுகின்றன. ஒரே ஒரு வார்த்தை ஒரு பிரளயத்தின் வார்த்தையாகவும் இருக்கலாம். ஆயிரம் வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

இச்சிறுகதையினுடைய காலம் குறுகியது ஆனால், அடிமை வரலாறு நீண்டகாலமுடையது. ஒவ்வொரு வார்த்தைகளும் சமூகப் பிரச்சனைகளை வெகுண்டு பேசுகின்றன. பச்சம்மா, ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சார்ந்தவள். இவள் கணவன் ஆடு மேய்த்துத் திரும்பாமல் இருக்கிற பொழுது, அந்த ஊர் காரர் அவருக்கு நேர்ந்த கொடுமையைப் பச்சம்மாவிடம் கூறுகிறார்.

ஒரு கிராமத்துப் பெண்மணி எதற்கும் துணிந்தவளாக அரசு அதிகாரியின் அலுவலகம் தேடிச் செல்லுகிறாள். அங்கு அவளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. லஞ்சம் கேட்கப்படுகிறது. இவளின் அழகிய மேனி கேட்கப்படுகிறது. வெகுண்டு எழுந்த அந்தக் கிராமத்து பெண்மணி, தன் ஆடுகளுக்கு இலை பறித்துப் போடும் துரட்டியால் அந்த அரசு அதிகாரியின் கழுத்தை அறுத்து கீழே போட்டு விடுகிறார்.

அதிகாரியிடமிருந்து வழிந்த ரத்தம் காய்ந்து சறுகாய் கிடந்த இலைகளைச் சிவப்பாக மாற்றுகிறது. இதுவே கதையின் தலைப்பாகவும் மாறுகிறது. இந்த இடம் உச்சகட்டமான சிறுகதையின் மையப் புள்ளியாகயிருக்கிறது.

இந்த இடத்தில் அரசு அதிகாரியின் அநீதி தண்டிக்கப்படுவது ஒரு பெண்ணால். தன்னை இழந்து விடாமல் காப்பாற்றிக்கொள்வது, தன் கணவனுக்கு நேர்ந்த அநீதியைத் தட்டிக் கேட்பது, போன்ற பல புரட்சிகரமான வெளிப்பாடுகள் இக்கதை மூலம் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏலகிரி மலையின் அடிவாரம் நம் கண் முன் விரிகின்றது. கிராமத்திய வாழ்வியலும், கிராமத்துப் பேச்சு நடையும், பச்சம்மாவின் ஏக்கமும், ஆடுகளின் தவிப்பும், இந்தக் கதையின் வழியாகப் படிப்பவர் மனதை வாட்டி வதைக்கின்றன.

குடியினால் வேதனைப்படும் ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூகச் சூழல், வாழ்வியலைப் பெண் கடத்திச் செல்லும் பாங்கும், திருமணமாகிக் குழந்தை இல்லாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மன வேதனையும், அதற்கான தீர்வுகளும், மண்பாண்டங்களை விற்று வரும் ஒரு பெண்ணின் இயலாமை, அந்த மண்பாண்டங்கள் அனைத்தும் விபத்தில் இழந்து விட அவள் தவிக்கும் தவிப்பு, விவசாயிகளின் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சனைகள் அரசு அதிகாரங்களும் நாட்டாமை போன்ற அதிகார வர்க்கங்களும் ஏழைகளையும் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்களையும் படுத்தும் பாடு. அதன் உக்கிரமான மன ஓட்டங்கள் இவை அனைத்தையும் அதன் மையப் புள்ளியைப் பிடித்துப் பார்த்தும் இக்கதைகளின் ஊடாக வெளிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். இதற்கான கதைக் கருவை அவர் எங்கெல்லாம் தேடினார், இதற்காக அவருடைய தேடல் மிகப்பெரியதாக இருக்கின்றது,

சமூகத்தில் பணக்காரர்களின் மகிழ்ச்சிகளையும், சந்தோசங்களையும் இலக்கியங்கள் பேசுவதை விடுத்து, பாமர மக்களின் இன்னல்களை என்று இலக்கியம் பேசுகிறதோ அன்று அந்தச் சமூகம் மேல்நிலை அடையும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அதன்படி இவ்விலக்கியம் தாழை இரா. உதயநேசன் அவர்களின் இந்தச் சிறுகதை இலக்கியம் முற்றிலுமாக மனம் சார்ந்த மன ஓட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூகம் முன்னேற்றமடையும்.

சிறந்த சமூகச் சிந்தனையுள்ள சிறுகதைகள்.

– பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
திருநின்றவூர்
9283275782
[email protected]

நூலின் பெயர்: செவத்த இலை.
நூல் ஆசிரியர்: தாழி இரா.உதயநேசன்
பக்கம்: 112
விலை:100
பதிப்பகம் : நூலேணி பதிப்பகம், சென்னை.