இலயோலா கல்லூரி – பாரதியார் பிறந்த நாள் விழா நினைவு கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா

இலயோலா கல்லூரி – பாரதியார் பிறந்த நாள் விழா நினைவு கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா




12.12.2022 அன்று சென்னை இலயோலா கல்லூரி தமிழ்த்துறையும், சென்னைப் பல்கலைக்கழகம் அழிநிலை மொழிகள் நடுவம் நிறுவனமும் இணைந்து, பாரதியார் பிறந்த நாள் விழா நினைவுக் கருத்தரங்கமும், தமிழின் தொன்மை : அகழ்வாய்வுகள் என்ற ஆய்வு நூல் வெளியீடும் இனிதே நடைபெற்றது.

இறை வணக்கத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்துமுடிந்த பின்பு, கல்லூரிச் செயலர் அருள்முனைவர் போனிபஸ் ஜெயராஜ் சே.,ச. அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் தொன்மை: அகழ்வாய்வுகள் நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். அப்பொழுது பாரதியாரின் பிறந்தநாள் குறித்தும், மொழிகளின் முக்கியத்துவம் குறித்தும் அதில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றிய தன் கருத்துக்களை எடுத்துவைத்தார். குறிப்பாக இவ்வுலகில் 7000 மொழிகளுக்குமேல், பேசப்பட்டாலும் தமிழ் உள்ளிட்ட எண்ணிக்கையில் குறைவான மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி தகுதிக் கிடைத்துள்ளன. தொல்காப்பியத்தால், தமிழ் மொழி சிறந்து விளங்குகிறது. எந்த இடங்களுக்குச் சென்றாலும் மாணவர்கள் தாய்மொழியில் பேசவேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் பாரதியார், தன்னுடைய கவிதைகளை இசை வடிவத்தில் எழுதிய அழகை வியந்து பேசினார். அப்பொழுது பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு என்ற கவிதையின் சிறப்பைப் பற்றி சிலாகித்துப் பேசியது உள்ளபடியே அத்தனை மகிழ்ச்சி அளித்தது. தமிழ்த்துறை எப்பொழுதும் தன் இலக்கை நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நூல் வெளியீடு, கருத்தரங்கம், இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்டவற்றை தமிழ்த்துறை மிக சிறப்பாக நடத்தி வருவதைக் கண்டு தமிழ்த்துறைத் தலைவர் சூ அமல்ராஜ் அவர்களையும், அவர்களுக்கு உற்ற துணையாக நிற்கும் மற்ற பேராசிரியர்களையும், மாணவர்களையும் இன்முகத்துடன் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

அடுத்து அழிநிலை மொழிகள் நடுவம் நிறுவனத்தலைவர் பேராசிரியர் முனைவர் ஏகாம்பரம் அவர்கள் பாரதியாரைப்பற்றி குறிப்பிடும்போது யாமறிந்த மொழிகளிலே…. யாமறிந்த புலவனிலே…. என்று சொல்லுவதற்கு பாரதிக்கு ஒரு தகுதி உண்டு. காரணம் அவன், பல மொழிகளைக் கற்றவன் மற்ற மொழிகளை விட தமிழ் மொழி உயர்ந்தது என்று சொல்லுவதற்கு அவனுக்கு ஒரு தார்மீக உரிமையும் உண்டு. இன்று வந்திருக்கக்கூடிய நூல்களில் மக்களிடம் அதிகமாக சென்றடைந்த நூல்கள் இரண்டு. ஒன்று திருக்குறள். மற்றொன்று பாரதி. இதில் எந்த கருத்து முரணும் இருக்காது என்று நம்புகிறேன். கிருத்துவத்திற்கும், பாரதிக்கும் தொடர்புகள் நிறைய இருக்கின்றன. பாரதியும் மக்களிடம் அதிகமாக சென்றடைந்தான். கிருத்துவமும் மக்களிடம் சென்றடைந்தது. இன்றைக்கு பாரதியின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னொட்டாகவும், பின்னொட்டாகவும் ஏன் வைக்கிறார்கள்? கவிதையை எழுதவரும் படைப்பாளிகள் பாரதியை முன்மாதிரியாகக் கொண்டிருக்கக் காரணம் என்ன? பாரதி ஏதோ ஒரு வகையில் அவர்களை பாதித்திருக்கிறான். அல்லது அவனுடைய கவிதை ஏதோ ஒரு வகையில் அவர்களை பாதித்திருக்கக்கூடும்.

பாரதிக்கும், கிறித்துவத்துக்குமான தொடர்பு முதலில் கல்வியிலிருந்து தொடங்குகிறது. கல்வி எல்லோருக்குமானது. இந்த உணர்வு எப்பொழுது வந்ததென்றால்? ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்பு தான். கல்வி பரவலாக்கப்பட்டது. அதுவரை கல்வி ஒரு சாராருக்கு மட்டும்தான் என்றிருந்த நிலையில் பாரதி சொல்லுவான், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்…. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று கூறியுள்ளார். அதே போன்று தான் இலயோலா கல்லூரியும். ஏழை எளியோருக்கு தான் முதலில் கல்வி தர வேண்டும். மட்டுமல்ல அவர்களைதான் முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் அடிப்படையில் மனிதர்களை சமமாக பாவிக்கும் மனோபாவம். இந்த மனோபாவம் எங்கிருந்து வந்தது என்றால்? எல்லாம் இயேசு பெருமான் வழங்கிய கொடை. அதனால்தான் அவர்கள் கல்வியை பரவலாக்கினார்கள். பாரதிக்கும் – கிறித்துவ நிறுவனங்கள் வழங்கும் கல்விக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. ஏதாவது பள்ளிக்கூடம் இல்லாத ஊர் இருந்தால் அதை கொளுத்து என்கின்றார் பாரதி.

அடுத்து இந்தியாவில் நிலவும் சாதிக்கொடுமை. ஐரோப்பியர்களிடம் இங்கிருந்தவர்கள் பட்டியலின மக்களைப் பற்றி எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் அவர்களைத் தொடக்கூடாது தொட்டால் தீட்டு என்றனர். அப்பொழுது ஆங்கிலேயர்கள் எங்கள் ஊரில் கரண்டை தான் தொடக் கூடாது என்பார்கள். அதைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதால் இங்கு வினோதமாக இருக்கிறதே மனிதர்களுக்கு மனிதன் தொடக்கூடாது என்றால்…. ?

இங்கு பாரதியார் சாதி ஒழிப்பிற்காக குரல் கொடுத்தவர். அதனால் தான் பொதுவுடமைக் கட்சி இயக்க தோழர் தா. பாண்டியன் அவர்கள் பாரதியும் சாதி ஒழிப்பும் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் அனைவரும் படிக்க வேண்டும். படரும் சாதிக்கு மருந்தவன் என்று பாரதியைப் பற்றி பாரதிதாசன் கூறியிருக்கிறார். பாரதியார் சார்ந்த சொந்த சமூகத்தால் அடைந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவர் உயிருடன் இருந்தபோதே நான் இறந்தால் என்சவத்திற்குப் பின்பு இரண்டு பேர்க்கூட வரமாட்டார்கள் என்பதை, அந்த சமூகம் மெய்ப்பித்தது.

அதேபோன்று நந்தனைப் பற்றி பேசும் பொழுது, நந்தனைப் போன்ற ஒரு பார்ப்பான் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பிறப்பால், உடல் நிறத்தால் மட்டுமே உயர்ந்தவர்கள் இல்லை. மாறாக குணத்தால் உயர்ந்தவர்களே உயர்வானவர்கள் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவன். குறுகிய காலத்தில் வாழ்ந்தவன் பாரதி. வாழ்நாள் குறுகிய காலம் என்றாலும் அவன் இச்ச சமூகத்திற்கு நிறைவான செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றான். இப்படிப்பட்ட பாரதிக்கு இலயோலா கல்லூரியில் விழா எடுப்பது உள்ளபடியே அத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தன் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியர் ஏகாம்பரம் அவர்களைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவாளர் கடற்கரய் மத்த விலாச அங்கதம் அவர்கள் பாரதியாரை பற்றி கூறும் பொழுது, பாரதிக்கு இறுதியாக ஒரு கனவு இருந்தது. கிருத்துவத்தின்பால் ஈடுபாடு கொண்ட பாரதி பைபிளை மொழிபெயர்க்க வேண்டும் என்று எண்ணினார். பிறப்பால் ஒரு சமூகத்தில் பிறந்த அவர், முற்றிலும் வேறான ஒரு சமயத்தின் வேதநூலை மொழிபெயர்க்க விரும்பினார். ஒருவேளை இயற்கை அவருக்கு வாய்ப்பு அளித்திருந்தால் பாரதியின் மொழிபெயர்ப்பில் ஓர் அழகான பைபிள் கிடைத்திருக்கும். ஆனால் காலம் அவருக்கு கையளிக்கவில்லை.

நவீன யுகத்தின் அடையாளமாக கருதப்படுபவன் பாரதி. ஏன்…? வேறெந்தப் புலவனுக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால்? மற்றத் தமிழ் புலவர்கள் எல்லாம் அறத்தைப் பாடினார்கள், மறத்தைப் பாடினார்கள். இயற்கையை, பறவையை, விலங்குகளை, சுகத்தை, துக்கத்தை உள்ளிட்டவற்றைப் பாடினார்கள். இரண்டாயிரமாண்டு கவிதை பாரம்பரியம் கொண்ட பாரதி, விடுதலை வேட்கையைப் பாடினார். அதனால்தான் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளானப் பின்பும் பாரதியாரைப் பாடுகிறோம். அதுபோன்றே தான் நவீன கவிதையின் அடையாளமாக இருக்கக்கூடிய ஆத்திச்சூடி எல்லா கடவுளை வணங்குவதைப்போல, இயேசு பிரானை வணங்குகிறார். பாரதிக்கு சாதியின்பால், மதத்தின்பால் எந்த பற்றும் கிடையாது. ஆனால் மற்றவர்கள் பாரதியை ஒரு சாதிச் சிமிழுக்குள் அடக்க நினைக்கிறார்கள். அவரை எப்படியாவது ஒரு வலதுசாரி சிந்தனை மனநிலைக்குக் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்று பலரும் போராடுகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த புலவன் சாதியை மறுத்திருக்கிறான்.

தமிழில் மிகவும் ஆழங்கால் பட்டவர், தமிழில் நவீன கவிதைகளைப் பாடியவர் பாரதிதாசன். மிக நுட்பமான கவிஞர் பாரதிதாசன் பாரதியின் புலமையை ஏற்றுக்கொண்டு, நெறிமுறைகளின் தன்மைகளாக புதிய வாசம் பெற்றதனால் தான் தன்னுடைய பெயரை பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டார். அவர், ஒருபோதும் படிக்காமல் தாசன் ஆகவில்லை. படித்து விட்டுதான் தாசன் ஆகியுள்ளார். பாரதிக்கு முற்றிலும் வேறான அரசியல் பின்புலம் கொண்ட பெரியாரை தன்னுடைய இலக்காகவும், இலட்சியமாகவும் கொண்ட பாரதிதாசன், பாரதியை ஏற்றுக் கொள்கிறானே என்று அவரைப் பற்றி படிக்கப் போனவன்தான் நான், பாரதியில் வீழ்ந்தேன்.

1914 பாரதி புதுச்சேரியில் இருந்த போது மாபெரும் புயல் காற்று வீசியது. அந்தப் புயல் காற்றில் வீட்டின் கூரைகள் பீய்த்துக்கொண்டு எங்கோ சென்று காணாமல் போய்விட்டன. ஆடு, மாடுகள் எல்லாம் சாலைகளில் இறந்து கிடந்தன. பறவைகள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்து கிடந்தன. பட்டியலின மக்கள் வாழும் இடம் (சேரிக்குச்) சென்று அந்த மக்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை உணர்ந்து முதலில் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுத்து சேவகம் /ஊழியம் செய்தார்.

நண்பர்களே…. கிருத்துவத்தின் மிக முக்கியமான வார்த்தை ஊழியம். பாரதி சொல்கிறார் ஊருக்கு உழைத்திடல் யோகம் என்கிறார். யோகம் என்பது வீட்டில் அமர்ந்து கொண்டு தியானம் பண்ணுவது அல்ல. ஊருக்கு உழைத்திடல் யோகம் அப்படி என்றால் யோகமும் / ஊழியமும் எங்கு இருக்கிறது என்றால்..? ஊருக்கு உழைப்பதில் தான்.

இப்படி அரிய ஒவ்வொரு நிகழ்வுகளை எல்லாம் அடுக்கிக் கொண்டே சென்றார். புயலுக்கு பின் அமைதி என்பதைப்போல மாணவர்களும் அத்தனை அழகாக, பொறுமைக் காத்து செவிமடுத்தனர். அந்த அளவிற்கு ஒரு ஆழமான உரை.

பொழிவாளர் கடற்கரை மத்த விலாசம் அவர்கள் உரை ஆழமான ஏறக்குறைய தியான மனநிலைக்கு அழைத்து சென்றார்.

பொழிவாளரின் உரைக்குப் பிறகு, நன்றி கூறுவதற்காக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள், அன்றைய முழு நாள் நிகழ்வையும், அத்துணை அழகாக தொகுத்துரைத்தார். குறிப்பாக நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து நிறைவு விழா வரைக்கும் யாருடைய பெயரும் விடுபட்டு விடாமல் அதே சமயத்தில் தன் கவனத்தை அன்றைய நாள் முழுதும் நடந்த நிகழ்வில் செலுத்தியதை எடுத்து இயம்பும் வண்ணம் தொகுத்துரைத்தார்கள்.

முனைவர் எல். சூசை சகாயராஜா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழ்த்துறைப் பேராசிரியர் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறக்க தங்கள் பங்களிப்பை நல்கினர்.

இது போன்ற நிகழ்வுகள் அறிஞர் பெருமக்களுக்கு மரியாதை அல்லது அவர்களை நினைத்துப் பார்ப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தி செல்வது முக்கிய காரணம் என்று சொல்ல முடியும். இவ்விழாவில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

அடுத்த தலைமுறையிடம் ஒரு நல்ல விதையைக் கொடுத்திருப்பதைப் போல, பாரதியை அவருடைய பிறந்த நாளில் கடத்தி இருக்கிறோம் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கி விட்டது.

– பேரா எ.பாவலன்