நூல் அறிமுகம் : மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம் தமிழில் : கவிஞர் புவியரசு – புவனா
தத்துவ புத்தகங்கள் படித்து எழுதுவது என்பது நட்சத்திரங்களை, கடலலைகளை எண்ணி முடித்தே தீருவேன் என்று சவால் விட்டுத் திரிவதைப் போன்றது.
இதயத்தால் பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய புத்தகம் என ஓஷோ பரிந்துரை செய்திருக்கிறார். எல்லா நூற்றாண்டுகளின் மாபெரும் எழுத்தாளர் மிகெய்ல் நைமி என்று கொண்டாடியிருக்கிறார்.
இனி புத்தகம் குறித்து:
கதை வடிவில் சொல்லப்பட்ட தத்துவ பெட்டகம். கிடைத்தற்கரிய இப்புத்தகம் தனக்கு வந்து சேர்ந்ததையும், அதை மொழி பெயர்த்த விதம் குறித்தும் சிலாகித்து எழுதியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் புவியரசு.
வாழ்வென்பது ஒருவருக்குக் கலை.வாழ்வென்பது ஒருவருக்கு மோன நிலை.வாழ்வென்பது ஒருவருக்குக் கொண்டாட்டம்.வாழ்வென்பது ஒருவருக்குப் போராட்டம்.
வாழ்வென்பது ஒருவருக்குப் பெருவெள்ளம். வாழ்வென்பது ஒருவருக்கு கொடும் பாலைநிலம்.
பொதுவாக வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் ஒரு கோணத்திலேயே பயணித்து வருகிறோம். பயணத்தில் சற்று மாறுதலோ,தடங்கலோ ஏற்பட்டால் அதை கடப்பதற்குள் தவித்தே நிற்கிறோம்.சுகம்,துக்கம்,சோகம்,மன அழுத்தம், விருப்பு,வெறுப்பு என கடந்து வரும் பாதைக்குள் எத்தனை தடங்கல்கள். அத்துணையிலும் ஆசுவாசமாக பயணப்படுகிறோமா என்ன? இல்லை என்று பதில் தருவோருக்கான புத்தாக்க தத்துவம் #மிர்தாதின்_புத்தகம்
ஆதி வெள்ளத்தில் பேழைக்குள் தப்பிய நோவாவும்,குடும்பத்தினரும் இறுதியில் பால்மலை தொடரின் பலிபீட சிகரத்தில் பேழையுடன் ஒதுங்குகின்றனர்.கப்பல் என்றழைக்கப்படும் வீட்டில் உள்ள ஒன்பது பேரைப் பாத்திரங்களாகவும்,
அதில் ஒருவர் இறந்த பின் வந்து சேரும் புதிய நபராக மிர்தாத்தும் ,பின்பு அவரின் சொற்களால் நிரம்பிய அத்தியாயங்களுமாகப் பக்கங்கள் நகர்கின்றன.
* உங்கள் கண்கள் எண்ணற்ற திரைகளால் மூடப்பட்டுள்ளன.ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் திரைகளையே பார்க்கிறீர்கள்.
* உமது உதடுகள் எண்ணற்ற முத்திரைகளால் மூடி மறக்கப்பட்டுக் கிடக்கின்றன.நீங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு முத்திரைதான்.
* உலகம் தனது பணியைச் செய்வது மூலம் உங்கள் பணியை செய்து விடுகிறது. உங்கள் பணியை செய்வது மூலம் உலகின் பணியை செய்து விடுகிறீர்கள்.
* உங்கள் சொற்கள் மாயவலையாகவும்,முட்களாகவும் இருப்பதை விட நாக்கே இல்லாளிருப்பது மேல். புனித புரிதலால் நாக்கை சுத்தப்படுத்தாதவரை உமது சொற்கள் காயம்பட்டவையாக,மாய வலைகளாகவே இருக்கும்.
* எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திர காற்றைப் போலத் திகழுங்கள்.
* அன்பெனும் திராட்சை கனி உண்ணாமல்,புரிதலெனும் மதுவால் நிரப்பப்பட மாட்டீர்கள்.
* புரிதலினும் மது பருகாதவரை,நீங்கள் சுதந்திரத்தின் முத்தங்களால் அமைதி பெற முடியாது.
* சுயத்தை மறக்கும் நாளே,புனித திராட்சை மதுவின் திருநாள். அதுவே அன்பின் போதையில் மயங்கும் நாள்,அதுவே புரிதலின் ஒளியில் மூழ்கும் நாள். ஒன்றில் எல்லாமும், எல்லாவற்றிலும் ஒன்றும் ஒன்றாகக் கலந்து ஒன்றும் நாள்.
* “சமாதானம்” என்று எளிதாக எழுதும் எழுதுகோல், “போர்” என்று இன்னும் எளிதாக எழுதிவிடும்.
மேலே சொன்னவை மிர்தாத்தின் வார்த்தைகளில் ஒரு துளி. இன்னும்,இன்னுமாக வாழ்வின் மொத்த தேடல்களையும் வரிகளுக்குள் வடித்துள்ளார் மிகெய்ல் நைமி.
அதிகாரம்,பொறாமை, நம்பிக்கை,வஞ்சம், பொய்மை, ஏளனம், விருப்பம், புரிதல் எனும் எட்டு குணங்களை எட்டு துறவிகளாகப் படைத்து அவர்களின் வழியே வாழ்வின் மாயங்கள், தத்துவார்த்தங்களைக் கதையின் வழிப்போக்கில் விளக்கப்பட்டிருப்பது , புரிதலை எளிமைப்படுத்துகிறது. ஒவ்வொரு வார்த்தையும்,வரியும் வாழ்வின் உன்னதத்தை நோக்கிப் பயணிக்கின்றது என்பது மிகையான சொற்கள் இல்லை என்பதை வாசிக்கும்போது நிச்சயம் உணர்வீர்கள்.
என் புரிதலுக்கு எட்டிய வரையில்
நான் என்பது அன்பு
நான் என்பது புரிதல்
நான் என்பது துரோகம்
நான் என்பது வஞ்சம்
நான் என்பது துயரம்
நான் என்பது சலனம்
நான் என்பது நம்பிக்கை
நான் என்பது ஏமாற்றம்
நான் என்பது அனுபவம்
நான் என்பது கடுஞ்சினம்
நான் என்பது வேட்கை
நான் என்பது அமைதி
நான் என்பது உலகம்
நான் என்பது உணர்வு
நான் என்பது கவலை
நான் என்பது மகிழ்ச்சி
நான் என்பது நேசம்
நான் என்பது மௌனம்
நான் என்பது ஏக்கம்
நான் என்பது தெளிவு
நான் என்பது நீங்கள்
நான் என்பது சொற்கள்
இப்படியெல்லாம் உணர்ந்து வாழ்ந்துட்டு இருக்கீங்களா? அப்படின்னா இது உங்களுக்குத் தேவைப்படாது. அப்படியே வாழ்க்கையின் போக்கில் போயிட்டே மகிழ்வாக இருங்க.
நான் என்பது நானா, நீயா, உடலா, உயிரா, கடவுளா, மனிதனா என்று மட்டுமே நினைச்சு, குழம்பி, சிக்கல்களுக்குள் தவிச்சு, தெளிவை, தீர்வை தேடிட்டு இருக்கும் நபரா நீங்க? அப்படின்னா கட்டாயம் இந்த புத்தகம் உங்களுக்கு தேவைப்படும். இதை வழிகாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள். முழுசா படிச்சு புரிந்து கொள்ளும் மனநிலை வேண்டாம். தேவையின் போது பக்கங்களைச் சற்றே புரட்டிப் பாருங்க. தீர்வுகள் கிடைக்குமா தெரியாது. நிச்சயம் தெளிவு கிடைக்கும்.
தெளிவு, தீர்வை நோக்கிய பயணத்தை எளிதாக்கும்.
வாருங்கள்_அன்பெனும்_திராட்சை_கனியால்_செய்யப்பட்ட_புரிதலெனும்_மதுவை_உட்கொள்வோம்.
நூல் : மிர்தாத்தின் புத்தகம்
ஆசிரியர் : மிகெய்ல் நைமி
தமிழில் : கவிஞர் புவியரசு
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை : ₹250
தொடர்பு எண் : 914424332682