கோவை ஆனந்தனின் கவிதைகள்
உன் தூரிகை நானாக
**************************
நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன்
தூரிகை நானாகிறேன்…
போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…
புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….
வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும் வறுமையெனும் பிணிபோக்க….
உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….
பூவாசம்
**********
பூக்களின்வாசம் வீசும் வழித்தடத்தில்
தனிமையில் பயணிக்குமொரு நாளில்
கைகள் நிறைய பூக்கள் பறித்து
வாசத்தை நாசிவழியே நுகர்ந்து
நுரையீரலிலுள்ள அசுத்தங்களத்தனையும்
வெளியேற்றிச் சுத்தமாக்கி
அக்கம்பக்கம் சுற்றிலும் பார்த்து
காவலாளியில்லாத வேளையில்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
தன்னைத்தானே உலர்த்தி
துருப்பேறி நகரும்போதெல்லாம்
கிரீச்சிடும் கம்பிவலைக் கதவுகளை விலக்கி நுழைகிறேன்
முள்வேலிகளாலான பூந்தோட்டத்திற்குள்…
பூத்துக் குலுங்கும் சோலைவனத்துக்குள்
எனக்குமுன்னே முன்கதவுகளை திறக்காமல்
இரகசியமாய் நுழைந்து களவாடும் கூட்டமொன்றை
விழிகள் விரித்துக்கண்டேன்
கண்காணாத காட்சிகளாய்…
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பசுஞ்செடிகளின் பூக்களில் அமர்ந்தெழும் தேனீக்கள்
துளி துளிகளாய்ச் சேகரித்த பூந்தேனைச் சுமந்து
போர்விமானங்களைப்போல
சிறகுகளிலிருந்து வெளிப்படும் ரீங்காரஓசையுடன்
பறக்கின்றன திசையெங்கும்….
கொத்துக்கொலைகளாய்க் கைகளில் சேகரித்து வெளியேறி நுகர்கிறேன்
கையிலிருந்த பூக்களின் வாசத்தை…
பூக்களின்இதழ்களுக்குள் ஒளிந்திருந்த தேனீயொன்று
சிறகுகள் விரித்து பறந்தது வேறொரு சோலைவனத்தைத் தேடி…
கிணத்துக்கடவு