திரைவிமர்சனம்: பை சைக்கிள் தீவ்ஸ் – பிரேமா கலியபெருமாள்
உலகப்புகழ் பெற்ற விக்டோரியோ டி சிகாவின், பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை புத்தகமாக சைமன் ஹெர்டோக் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநரும் எழுத்தாளருமான அஜயன் பாலா.
திரையில் டைட்டில்களுடன் துவங்கும் காட்சிகளின் பின்னணியில் தீம் மியூசிக், தாங்கவொண்ணா துக்கத்தையும், விரக்தி மற்றும் தனிமையையும் குறிக்கும் விதமாக படம் முழுவதும் கோர்க்கப்பட்டுள்ளது. 1948 ல் படம் வெளியாகி எழுபது ஆண்டுகள் கடந்த பின்னரும், உலகின் சிறந்த பத்து படங்களுள் ஒன்றாகப் கருதப்படுகிறது.
கேமராவின் பார்வை கோணம் படப்பிடிப்பின் காட்சிகள் நம் கண்முன்னே நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கதையின் நாயகன் அன்ட்டோனியோ ரிச்சி (மெக்சியோரனி) உண்மையில் ஒரு ஸ்டீல் பட்டறைத் தொழிலாளி்; இதுவரை சினிமா படப்பிடிப்பைக்கூட பார்த்திராதவர். இரண்டு மாத விடுமுறையில் இப்படத்தில் நடித்திருக்கிறார். மகனாக நடித்த குழந்தை ப்ரூனோ முதல் நாள் படப்பிடிப்பில் வேடிக்கைப் பார்க்க வந்த சிறுவன்; உண்மை பெயர் என்ஸோ ஸ்டையோலோ. இதுதான் இந்த படத்தின் நிஜ வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் இப்படம் இயக்குனர் விட்டோரியோ டி சிகாவின் ஒப்பற்ற படைப்பு பைசைக்கிள் தீவ்ஸ்.
வேலை தேடும் ஒரு தொழிலாளி; தனது தொழிலுக்கு தேவையான மிதிவண்டியை தன் வீட்டின் படுக்கை விரிப்புகளை விற்று வாங்கும் நிலைமை. அவருக்கு மனைவி மரியா உதவுகிறார். கீழ் நிலையில் உள்ள தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த அவரும், மகன் ப்ரூனோவும் சிறுவயதிலேயே வேலைக்கு செல்லும் அவலம். மிதிவண்டியை தன் கவனக்குறைவால் வேலைநேரத்தில் தொலைத்து விடுகின்றார். தன் மகன் ப்ரூனோவுடன் சேர்ந்து ரோம் நகரம் முழுதும் தேடுகிறார்.
நம் ஊர் புதுப்பேட்டை போல அக்கு அக்காக பிரித்து விற்கும் கடைகளில் சென்று உதிரி்பாகங்கள் விற்கும் கடைகள் மற்றும் சைக்கிள்களை திருடி விற்கும் திருடனைப் பிடிக்க நடுவில் செயல்படும் புரோக்கர் என தெருத் தெருவாக தேடி அலைகின்றனர்.
ஒரு கிருத்துவ சர்சில் கூட புரோக்கரை பார்த்து துரத்த அவனும் திருடன் இருக்குமிடம் தெரியும் என கூற அவனை நம்பி பின் தொடர்வதற்குள் அவனும் தப்பிவிட எவ்வித பலனுமின்றி ஓடி ஓடி களைத்துப் போகின்றனர். கடைசியில் ஒரு விளையாட்டு ஸ்டேடியத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மிதிவண்டியை திருட முயலும் நேரத்தில் மக்களால் துரத்தப்பட்டு உதையும் வாங்கி மகன் முன்பே மாட்டிக்கொண்டு, பின்னர் மக்களால் பரிதாபத்திற்கு உள்ளாகி மன்னித்து விடப்படுகிறார்.
1948 ல் வெளியான இந்தப்படம் வெறுமனே யதார்த்தம் என கொள்ளப்பட்டாலும், அரசியல் அறவியல் காரணங்களையும் சேர்த்து இரண்டாம் போருக்குப் பிறகான இத்தாலிய சமூகத்தின் மீதான விமர்சனமாக படம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கதைக்கும் அந்த படத்திற்கும் தொடர்பாக இருப்பது நியோ ரியலிஸம் என்றால் நம்வாழ்க்கைக்கும் வரலாற்றுக் கும் உண்மையானது ரியலிசம். இப்படம் தனது நூற்றாண்டு விழாவினைக் விரைவில் கொண்டாட இருக்கிறது.
இப்புத்தகத்தின் மிகப்பெரிய சிறப்பு படங்களுடன், உரையாடல் (கான்வர்சேசன்) வழியாக எழுதப்பட்டுள்ளது. நேரடியாக உணர்வுபூர்வமாகக் காட்சிகள் நம்முடன் பயணப்படுகின்றன.
இயக்குனர் டி சிகா இந்த கதையை படமாக்க பல தயாரிப்பாளர்களிடம் கேட்டும் யாரும் தயாரிக்க முன் வரவில்லை. திரைப்பட துறையின் சோசலிச யதார்த்தவாத திரைப்படம் என்று சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. உலகின் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாக பை சைக்கிள் தீவ்ஸ் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
நூல்: பை சைக்கிள் தீவ்ஸ்
ஆசிரியர்: விட்டோரியா டிசிகா
தமிழில்: அஜயன் பாலா
வெளியீடு: கோணம்
விலை: 70₹