மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“இதற்குத்தானே ஆசைப்பட்டேன்”
*************************************
பிறக்கையில் கொங்கையமுது
தவழ்கையில் மண்ணமுது
நின்றபின் பிஸ்கட் சாக்லேட்டமுது
வளர்ந்த்பின் இன்னபிற இனிப்பமுது
வாலிப வயதில் விளையாட்டு
பருவம் வந்ததும் காதல்களியாட்டம்
மணந்தபின் கவின்மிகு கலவி
நடுத்தர வயதில் பணம் பொருள் செல்வம்
முதிர்ந்தபின் நோயற்ற வாழ்வு
இறுதியில் வலியற்ற இறப்பு,
இதற்குத்தானே ஆசைப்பட்டான்!
ஆனால் எதுவுமே ஏகமாய்
கிட்டுவதில்லை!!
துன்பத்தின் தூறல்கள் தூவானமாகி
துரத்தும் கவலைகள் கானல் நீரென
துடிக்கும் கனவுகள் துவண்டு போக!
துடிப்பும் ஒருநாள் நின்றுபோகும்,
தூயவனின் தாள்சேரும் சுகமான இறுதி நாளுக்கு….
ஏங்கிஏங்கி தவித்து நின்றான் மானிடன்!

திக்குத் தெரியாத காட்டில்”
********************************
தத்தித் தத்தி
தாயவளை கரம்பற்றி
சுத்திச் சுத்தி வந்து!
பற்றிப் பற்றிப்
பள்ளிப்புத்தகம் தனைக்
கற்று கற்று தேறி
சுற்றி சுற்றி
சுழல் விழியாள் காதலை
தேற்றி தேற்றி தொலைத்து
ஓடி ஓடி
வேலைதனைத்
தேடித் தேடி அலைந்து பெற்று!
பாத்துப் பாத்துப்
பெண்ணவள மனைவியாக்கி
பொத்திப் பொத்திப் பாதுகாத்து
சேத்துச் சேத்து
வைத்த பொருள்தனை
காத்துக் காத்து வைத்துத்
தூக்கித் தூக்கி
வளர்த்த வாரிசுகளோ
தாக்கித் தாக்கிப் பேச
தொங்கித் தொங்கி
முதுமையால் உடல்
மங்கி மங்கிப் போக
சுட்டுச் சுட்டுத்
திக்குத் தெரியாத (இடு)காட்டில்!
மண்ணொடு மண்ணாகிப் போனானே போக்கத்த மனிதன்!

“எழுத்தறிவித்தோனே ஏகன்!”
**********************************
ஆசிரியர்கள்!
அரும்பெரும் பட்டங்கள்!
ஆதாயம் தரும் பதவிகள் !
அனைத்தும் மாணவர்கட்கு
அறிவால் போதித்து!
கற்றுத்தரும் பெற்றுத்தரும்!!
ஆரவாரம் இல்லா
அணையா சுடர்கள்!

ஆசிரியர்கள்!
ஆயிரம் ஆயிரம் இளவல்களை
அலுங்காமல் நலுங்காமல்
ஆங்கே உயரத்தில் அமர்த்திடும்
அரிய பணி ஆற்றிடும் இவர்கள்!
ஏனோ ஏணியை போல்
“ஏறல்” முடிந்ததும்
எங்கோ புறந்தள்ளப்படுவர்!

ஆசிரியர்கள்…
ஆக சிறந்த சமுதாயம்
ஆக்க பிறந்த ஆசான்கள்!
அவர்கள் இல்லையேல்..
ஆவிபிரிந்த உடல்போல்
ஆகிவிடும் அழிந்துவிடும்!

ஆசிரியர்கள்
அவமதிக்கும் நாடும் அரசும்!
அமைதி விலகி
ஆக்கம் விலகி
அவ்வியம் தழுவி
அழிவது உறுதி!

அனைவர்க்கும்,
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
குருவே சரணம்!!

அவர் சைக்கிள் போட்டி!!
*****************************
அம்மாவின் அஞ்சரை பெட்டியில்
அஞ்சி நடுங்கி அரண்டு புரண்டு! ஐம்பது பைசா ஆட்டைய போட்டு!
அண்ணாச்சி சைக்கிள்கடையில்
அரைமணி நேரம் வாடகை எடுத்து!
அரைடஜன் நட்புகள் ஒன்றுகூடி,
போட்டாப்போட்டி பந்தயத்தில்!
மிதித்து மிதித்து பறந்தேன்!
மிதந்து மிதந்து மகிழ்ந்தேன்!
மின்னலென வெற்றி பெற்று!
கிரிக்கெட் மட்டை பரிசு பெற்று!
அம்மாவிடம் வெற்றியை பகிர!
அஞ்சறைபெட்டி ஆட்டையை மன்னித்து
அன்பு அம்மா! வாரியணைத்து
ஆசைதீர உச்சிமோர்ந்து ஆசிதந்தாள்!

– மரு உடலியங்கியல் பாலா

அப்பாவின் கனவுக்குள்  மகனின் ஆசை……!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

அப்பாவின் கனவுக்குள் மகனின் ஆசை……!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




பை நிறைய
கொண்டு போன
பலூன்களையெல்லாம்
விற்று தீர்த்துக்
கொண்டிருந்தார் அப்பா

அவ்வப்போது
மகன் சொல்லி
அனுப்பிய சைக்கிள்
மனதின் கண்ணெதிரே
வந்து நின்று
ஞாபகபடுத்தியது ,

கடைசி பலூனை
விற்பனை செய்த போது
கண்ணுக்குள்
வந்து ஓடிக்கொண்டிருந்தது
அந்த சைக்கிள் ,

“பாக்கெட்டைத் தடவிப்

பார்க்கும்பொழுது
காற்றில்லாத பலூனாக
தரையில்
வீழ்ந்து கிடக்கிறது
மகன் சொல்லியனுப்பிய
கனவு சைக்கிளின்
சக்கரத்தில் ஆணி
குத்தியது போல்

கடல் காற்றோடு
தன் மூச்சுக்காற்றும்
கலந்திருந்தது
கையிலிருந்த
கடைசி பலூன்
வெடித்து சிதறியதால் ….!!!

கவிஞர் ச. சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

சக்தியின் கவிதைகள்

சக்தியின் கவிதைகள்




எல்லோருக்குமான இசை
பறையிசை …….!!!!
*******************************
வெட்டப்பட்டு சிதறிக் கிடக்கின்றது
பறையை வாசித்த கட்டை விரல்,

தரையில் சிதறிய கட்டை விரல் துடிக்கிறது
மீண்டும் ஓரு முறை
பறையை வாசிப்பதற்கு,

தோட்டியின்
தோலில் மாட்டிய பறை
அறுந்து கீழே விழுந்து ஓடுகிறது,
சாலையின் தரையில் வெட்டப்பட்டு கிடக்கும் கட்டை விரலைத் தேடி,

காலில் கட்டிய
சலங்கைகளின்
முத்துக்கள்
சிதறிச் சாலைகளில்
தெறித்து ஓடுகின்றன
துடித்துக்கொண்டிருக்கிற கட்டை விரலின் நாடித்துடிப்பை நிறுத்துவதற்காக,

சாவுக்கு ஆடிய கால்கள்,
அந்த கண் திறக்காத சாமிக்கும் அடித்த கைகள்
கண் கலங்கி நிற்கிறது
வெட்டப்பட்ட விரல்களால்
பறையை வாசிக்க முடியாததால்,

மீண்டும் முளைத்துக் கொள்கிறன்
கட்டை விரலும் பறையும்
மகனின் கைகளில்,

அதிர்ந்து ஓங்கி
ஒலிக்கிறது சேரியெங்கும்
மகனின் தோளில்
மாட்டிய மாட்டுத்தோல் பறை,
சங்கப்பறையாக,
சமத்துவப் பறையாக
சாதிக்கெதிரான பறையாக…..!!!!!

மாட்டுக்கறி எலும்புகள்
****************************
சைக்கிள் பெட்டியில்
ஏற்றப்பட்ட மாட்டுக்கறி
தெரு முழுவதும் வலம் வருகிறது அதிகாலை வேளையில்,

தெருவில்
வலம் வரும் சைக்கிளை மறைத்து நிற்கின்றனர் பெண்களும்
குழந்தைகளும் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு,

“கறி கறி” என்று கூவிக்கொண்டே
சைக்கிளை நகர்த்துகிறான்,
இரத்த கரையை உடல் முழுவதும் பூசிய அப்பாசாமி,

அரை கிலோ, ஓரு கிலோ
என கறியை வாங்கிக்கொண்டு
நகருகின்றனர் பெண்கள் வீட்டின் அடுப்பாங்கரையை நோக்கி,

பெட்டியின் ஓட்டை
வழியாக சாலையில் ஓழுகும்
மாட்டுக்கறி இரத்தத்தை
நக்கிக்கொண்டே பின்தொடர்கிறது கருப்பு நிற நாய் ஒன்று,

வாங்கிய கறியை
அருவாமனையால் செருவாக அறிகிறார் அப்பா திண்ணையில்
அமர்ந்து கொண்டு,

காக்கைகள் காலையிலிருந்தே
தலையைச் சுற்றியே வட்ட மடித்துக்
கொண்டிருக்கின்றன
அப்பா எலும்புத் துண்டுகளை
அறுத்துத் தூக்கி வீசுவதால்,

அடுப்புச் சட்டியில்
வெந்து கொண்டிருக்கின்றன
மாட்டுக்கறி எலும்புகள்,
வேகாத முட்டி எலும்புகளை
தட்டில் போட்டுக் கடித்து இழுக்கிறார்கள்
பல்லு போன தாத்தாவும் பாட்டியும்,

அடுப்பிலிருந்து இறக்கிய
சட்டியைச் சுற்றியே
அமர்ந்து கொண்டு மாட்டுக்கறியை போட்டிப் போட்டு சாப்பிடுகின்றனர் மாட்டுக்கறியின் வாசத்தையே
அறியாத அண்ணனும் தம்பியும்,

தெருவு முழுவதிலும்
தோட்டம் முழுவதிலும் கிடக்கின்றன
எலும்பு துண்டுகள் ,
எலும்பு துண்டுகளைப் பொறுக்கி
சாக்கு பையில் போட்டு கொண்டு
நடக்கிறார் அடையாளம்
தெரியாத முதியவர் ஒருவன்…….!!!!!

கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,

சிறுகதைச் சுருக்கம் 99 : மேலாண்மை பொன்னுசாமியின் ’தள்ளி நில்லு’  சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 99 : மேலாண்மை பொன்னுசாமியின் ’தள்ளி நில்லு’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்



இந்த ஜனநாயக சமூகம் எப்படி தன் சாதிய ஒடுக்கு முறையை நிறுவனமாக்கி வருகிறது  என்பதற்கு  சாட்சி சொல்பவை இவரது படைப்புகள்

தள்ளி நில்லு
மேலாண்மை பொன்னுசாமி

அவக் தொவக்கென்று அவசர அவசரமாகக் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப்பாண்டியின் மனசெல்லாம் பெருமிதத் ததும்பல்

“அம்மே, தூக்கச் சட்டியிலே சோறு வைச்சுட்டீயா?”

“வைச்சுட்டேன்ப்பா..”

“அஞ்சு லிட்டர் கேன்ல தண்ணி புடிச்சுட்டீயா?”

“புடிச்சுட்டேன்டா, துரட்டியையும் ரெண்டு அரிவாள்களையும் பக்கத்துலே வைச்சுருக்கேன்ப்பா..”

“ஏம்ப்பா சைக்கிள்லே காத்து கீத்தெல்லாம் இருக்குதுல்லே? சரி பார்த்துட்டீயா?” என்று குறுக்குக் கேள்வி கேட்ட சின்னப் பாண்டியின் ரகசியப் பார்வை சங்காண்டி கண்ணில் உட்கார்ந்திருந்தது.

முருகையாவுக்குத் தன் மகளைக் கொடுக்கலாம் என்றொரு நினைவு ஓடிக் கொண்டிருக்கிறது. சங்காண்டி குடும்பத்தில் தண்ணி வெண்ணி கலக்கணும் என்று சின்னப் பாண்டிக்கு ரொம்ப ஆசை. விவசாயக் குடும்பம், நிலபுலம் ஜாஸ்தி.  வெள்ளாமை விளைச்சல் படு செழிப்பு. சங்காண்டியின் மகள் கறுப்பாக இருந்தாலும் களையான முக லட்சணம்.  முறுக்கிப் பிழிந்த ஈரக்கூந்தல் மாதிரி இறுகலான திரேகம்.  

“எம்பயலோட ஒம்ம பொண்ணை சேத்து வைச்சா சோடிப் பொருத்தம் கச்சிதமாயிருக்கும்.”

“ஏங்கிட்ட பொண்ணு கேக்கீரா?”

“கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்”

“நா ஒம்ம மகனைப் பாக்கணும். ஒம்ம ஊரைப் பாக்கணும். எம் பொண்ணு வந்து இருந்து வாழப்போற ஊரையும், ஊரோட சுத்து வட்டாரத்தையும் பாக்கணும்.”

“எப்ப வாரீரு?”

“ம் அம்மாசி முடியட்டும், வர்ற வளர்பிறையிலே வர்றேன்.”

சங்காண்டி வந்திருக்கிறார்,   முருகையாவையே கவனிக்கிறார்.  

“வெறகு வெட்டுறதுக்கு எங்க போறாக மருமகப்புள்ளை?”

“வலையபட்டிக் காட்டுக்கு.”

“சம்பளம்?”

“எரநூத்தைம்பது ரூவா.”

“வெறகு வெட்டு இல்லாட்டா?”

“ஆமர்நாட்டு சம்சாரிகளோட காடுகரைகளுக்குக் கூலி வேலைக்குக் போகணும்.”

“கடை கண்ணிகள்லே அரிசி பருப்பு வாங்கணும்னா..”

“ஆமர்நாடுதான் போகணும், அங்கதான் பெரிய பெரிய பலசரக்குக் கடைக இருக்கு. பெரிய ஊரு, நிறைய தலைக்கட்டுக. நாலா சாதிச் சனமும் கலந்துருக்குற ஊரு.”

“ம்.ம்.ம்.”

“நாடாக்கமாரு, தேவமாரு, நாயக்கமாரு, ஆசாரிமாரு, சக்கிலியச்சனம், சாம்பாக்கமாரு எல்லாரும் இருக்காக. சண்டை சத்தமில்லாம ஒத்துமையாயிருப்பாக.  நம்ம ஊர்ல?”

“நம்ம ஆளுக மட்டும்தான், நம்ம தனி ராஜ்ஜியம்.”

சங்காண்டிக்குள் நாலா திசைகளிலும் ஓடிப் பாய்கிற நினைவுகள்,  ஆயிரம் காலத்துப் பயிர். ஆற அமர யோசிக்க வேண்டும்.   யோசனைகளின் நீட்சியின் ஒரு நெருடல்.  ஆமர்நாட்டை நம்பிய பிழைப்பு.  நோய் நொடி என்றால் அங்குதான்.  கடை கண்ணிக்கும் அந்த ஊர்தான்.  பாடுசோலிகளுக்கும் அந்த ஊரையே நம்பின பாடு.  எல்லாவற்றுக்கும் அதுதான்.  ஊர் வழி போவதென்றாலும் அங்குதான் போய் பஸ் ஏற வேண்டிய நிலைமை.  சண்டை சத்தமில்லாம ஒத்துமையாயிருப்பாங்க இது ஒரு நல்ல அறிகுறி.

ராசம்மா சோறுவைத்து சாப்பிடச் சொன்னாள் “அண்ணே சாப்புட்டுக்கிறீகளா?”

சாப்பிட்டு முடித்தனர். சங்காண்டி ஒவ்வொன்றும் உரசிப் பார்த்தார். சந்தேகமான மனசோடு யோசித்தார்.  “சரி தங்கச்சி புஞ்சைக்குப் போய்ட்டு வரட்டும்.  நாம அப்படியே காலாற ஆமர்நாட்டுக்கு போய்ட்டு வந்துருவோம்”.

மாப்பிள்ளை பார்க்கிற மாதிரி, மாப்பிள்ளை வீடு, ஊர் பார்க்கிற மாதிரி அந்த ஊரையும் அளந்து பார்க்கவா? என்று யோசிக்கிற சின்னப் பாண்டி சங்காண்டியின் முன்யோசனையை நினைத்து வியந்தான்.

“ஆமநாடு தங்கமான ஊரு, தங்கமான மனுசங்க. நம்ம ஊரு ஆளுகளை தாயா புள்ளைகளா மதிச்சு பாசத்தோட பழகுவாக.  தள்ளி நில்லுன்னு ஒருத்தருகூட சொல்ல மாட்டாக”  சின்னப் பாண்டி சொல்லிக் கொண்டே வந்தார்.

டீக்கடைகளில் உட்காருகிற இடங்களில் வித்தியாசம் உண்டா டீக்கிளாஸ்களில் வேறுபாடு உண்டா என்றெல்லாம் கேட்டு விசாரிக்கிற ஆர்வத்தை அடக்கிக் கொண்ட சங்காண்டி அதான் போய் நேர்லேயே பார்க்கப்போறோம்லே?

ஊருக்குள் நுழைந்தவுடன் “வாயா சின்னப் பாண்டி, என்ன சௌக்யமா? கடைக்குப் போகவா பஸ்ஸுக்கா?”

“ஆமய்யா பஸ்ஸுக்கெல்லாம் போகல. சும்மா ஊருக்குள்ளேதான்.”

சாதி வித்தியாசம் வார்த்தைகளில் தோன்றவில்லை. அருஞ்சுனை பலசரக்குக் கடைக்குப் போனான். உற்சாகமாக வரவேற்கிற கடைக்காரர், அக்கறையான உபசரிப்புகள் இன்னின்ன சரக்குகள் வேணும் என்று சிட்டை சொல்லுகிறான்.

“போட்டு வையுங்க, நாங்க நடுத்தெரு போய்ட்டு வாரோம்.”

“சரி ஒரு கலரு குடிச்சுட்டுப் போகலாம்லே? ஓடைக்கட்டா?”

“வேண்டாம்யா..”

“விருந்தாளு கூட வந்துருக்கு. ஒடைக்கறேன்.”

ரெண்டு பேரும் கலர் குடித்து முடித்து ஏப்பம்  விட்டனர். எதிர்க்களித்த கலர் நுரைகள் நரம்பெல்லாம் சுறுசுறுத்து இனித்தன. சங்காண்டிக்குள் கலர் நுரைகளாக மொறு மொறுக்கிற நினைவுகளின் தித்திப்பு  டீக்கடையில் பெஞ்சில் உட்காரச் சொன்ன சமத்துவம், எல்லாருக்கும் போலவே கண்ணாடிக் கிளாஸில் டீ தந்த மரியாதை சங்காண்டிக்குள்  வியப்பாக இருந்தது.

“இங்க எல்லா சாதிக்கும் ஒரே மாதிரிதான்.”

“சாம்பாக்கமாரு, சக்கிலியருக..”

“அவுகளுக்கும் இப்படித்தான்.  பெஞ்சுலே உக்காந்து கண்ணாடிக் கிளாஸ்லே டீக்குடிச்சுட்டு சிகரெட்டை ஊதிட்டுப் போகலாம். சுடுகாடும் இடுகாடும் கூட இந்த ஊர்ல எல்லாருக்கும் ஒரே எடம்தான்.” 

“பரவாயில்லையே!  நம்ம பயக தண்ணியைப் போட்டுட்டு சலம்ப மாட்டாங்களா?”

“இப்பத்தான் டாஸ்மாக் வந்துருச்சு.  எல்லாச் சாதிகள்லேயும் குடிச்சிட்டு சலம்புறவுக சில பேரு இருக்காக.  அதனாலே அதெல்லாம் சகஜமாயிருச்சு.”

சங்காண்டிக்கு இந்த ஊர் ரொம்ப புதுமையாக இருந்தது. எளிய சாதியை தள்ளி நில்லு என்று சொல்லாத ஊர்.  முருகையாவுக்கு மகளைத் தரலாம்.  சின்னப்பாண்டியின் குடும்ப மருமகளாக மதிப்பு மரியாதையோடு வாழ்வாள்.  பஸ்ஸ்டாண்ட் பக்கம் போனார்கள். பால் பண்ணை வாசல்படியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். கதர் வேட்டி, கதர்ச்சட்டை, கதர்த்துண்டு, வலது கை விரலிடுக்கில் புகைகிற சிகரெட்.  முகத்தில் இனம்புரியாத சிடுசிடுப்பு.  

“அண்ணாச்சி ராசபாளையம் பஸ் எப்ப வரும்?”  அவரிடம் கேட்ட சங்காண்டி ஏற இறங்கப் பார்த்த பெரியவர்.  வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கைகளில் மோதிரம், கடியாரம், காலில் செருப்பு, மதிப்பு மரியாதைக்குரிய கண்ணியமான தோற்றம்.

“சின்னப்பாண்டி கூட வந்த ஆளா? உறவுக்காரவுகளா?”

“ஆமா …ண்ணாச்சி.”

“அண்ணாச்சின்னு என்னைக் கூப்புடுதீயே எப்படி?  என்ன மொறையிலே? நீ எங்க அம்மா வவுத்லே பெறந்தீயா? இல்லாட்டா உங்காத்தா ஒன்னை எங்கப்பனுக்குப் பெத்தாளா?”

சுரீரிடுகிற தீ வார்த்தைகள். தடிப்பான வார்த்தைகளுடன் சீறத் தயாராகிவிட்ட சங்காண்டி. நாலெட்டு பிந்தி வந்த சின்னப்பாண்டி  நிலவரக் கலவரத்தைச் சட்டென உணர்ந்து கொண்டு சங்காண்டியின் வலதுகை மணிக்கட்டைப் பற்றி அழுத்திய அழுத்தத்தில் ஓர் அர்த்தம் தொனித்தது. வாயைத் திறக்காமல் பேசாமலிரு என்று உணர்த்துகிற கைப்பாஷை.

“அய்யா அவரு வெளியூரு தப்பா எடுத்துக்கிடாதீக” என்று மிருதுவான குரலில் கூறிவிட்டு சற்றுத் தள்ளி சங்காண்டியை அழைத்துச் சென்ற சின்னப்பாண்டி.

அங்கு நீடித்த மௌனம் மனசுகளைக் கிழித்து உரித்து மிளகாய்த் தூளை அப்பியது.

சங்காண்டி மகள் சின்னப் பாண்டி மகனுக்கு வாழ்க்கைப் சரிபட்டு வரவில்லை.

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது