கல்வியை காவிமயமாக்குவதை நோக்கி (தமிழில்: ச.வீரமணி)

கல்வியை காவிமயமாக்குவதை நோக்கி (தமிழில்: ச.வீரமணி)




தமிழில்: ச.வீரமணி

ஒன்றிய ஆட்சியாளர்கள் மதவெறி அடிப்படையில் சமூகத்தை எப்படியெல்லாம் காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது இந்தூரில் அரசினர் புது சட்டக் கல்லூரி மற்றும் சில இடங்களில் நடந்துள்ள விஷயங்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றன. இவை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்தூர் புது சட்டக் கல்லுரியில் ஆசிரியர் பணியிடங்களில் முஸ்லீம்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற விதத்தில் மதவெறியர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமான நிகழ்வாகும். ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கிவரும் ஏபிவிபி என்னும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் இக்கல்லூரிப் பிரிவானது அங்கே பணிபுரிந்துவரும் முஸ்லீம் ஆசிரியர்களுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்தக் கல்லுரியில், முஸ்லீம் ஆசிரியர்கள், “மத அடிப்படைவாத சிந்தனைகளைப்” பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறி அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இக்கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம் ஆசிரியர்கள் இருப்பதாகவும் கூறி இதனை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். உண்மையில் அக்கல்லூரியில் மொத்தம் பணியாற்றும் 28 ஆசிரியர்களில், நான்கு பேர் மட்டுமே முஸ்லீம்களாகும்.

ஏபிவிபி-யின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில், முஸ்லீம் ஆசிரியர்கள், வளாகத்திற்குள் “முஸ்லீம் மற்றும் இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் முஸ்லீம் ஆசிரியர்கள், மாணவிகளை உணவுவிடுதிகளுக்கும் (restaurants), சிற்றுண்டி விடுதிகளுக்கும் (pub) அழைத்துச் சென்று, “ஜிகாத் காதலையும்” (“Love Jihad”) தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அபத்தமான முறையில் கூறியிருக்கிறார்.

கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் இனமூர் ரஹ்மான், (இவரும் ஒரு முஸ்லீம்தான்), இந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ள நான்கு முஸ்லீம் ஆசிரியர்கள் மீதும் மற்றும் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களை ஐந்து நாட்களுக்கு ஆசிரியப் பணிக்கு வர வேண்டாம் என்று கூறியிருப்பதுடன், புகாரின்மீது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

இந்த நடவடிக்கையுடன் இவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. இப்போது புதிய குற்றச்சாட்டுகளை ஏபிவிபி மாணவர்கள் வீசி எறிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்த முஸ்லீம் முதல்வர்மீதும் இப்போது குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இவர், டாக்டர் ஃபர்கட் கான் (Dr. Farhat Khan) என்பவர் எழுதிய “வன்முறையின் தொகுப்பு மற்றும் கிரிமினல் நீதிபரிபாலன அமைப்புமுறை” (“Collective Violence and Criminal Justice System”) என்னும் புத்தகத்தை வைத்திருக்கிறார் என்று கூறி குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இந்தப் புத்தகமானது ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறியிருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். தான் கல்லூரியில் முதல்வர் பொறுப்பை 2019இல் ஏற்பதற்கு முன்பே, 2014இலேயே இந்தப் புத்தகமானது கல்லூரியின் நூலகத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறது என்று அவர் விளக்கம் அளித்தபோதிலும்கூட, கிளர்ச்சியாளர்கள் அதனையெல்லாம் கண்டுகொள்ள விரும்பவில்லை. அவர் தன் பதவியை ராஜினாமா செய்வது வரையிலும் கிளர்ச்சிகளைத் தொடர இருக்கிறார்கள்.

ஏபிவிபி-யின் முறையீடுகளும், கிளர்ச்சியும் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர், நரோத்தம் மிஷ்ரா, அவர்களால் ஆதரிக்கப்பட்டுவருகிறது என்பதும், அவர்தான் காவல்துறையினரை அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இதனை அடுத்து உள்ளூர் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் மீதும், மற்றொரு ஆசிரியரான மிர்சா மொஜி மற்றும் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ (இரு மதத்தினருக்கு எதிராக பகைமையை வளர்த்தல்), 295-ஏ (மத நம்பிக்கைகளை துவேஷத்துடன் நிந்தித்தல்) உட்பட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், மேற்படி புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் ஃபர்ஹட் கான் மற்றும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உட்பட மூவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க மறுத்ததால் அவர்களைக் கைது செய்திடக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இவ்வாறு, ஒருசில நாட்களிலேயே, முதல்வர் உட்பட அனைத்து முஸ்லீம் ஆசிரியர்களும், தாங்கள் வகித்தப் பொறுப்புகளிலிருந்து வலுவான முறையில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கத்தின் மறைமுக ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏபிவிபி-யினர் அளித்திடும் புகார்களின் அடிப்படையில் மதத் தீவிரவாதம் மற்றும் அதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக என்றே உயர் கல்வி இயக்குநரகத்தில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மதச்சிறுபான்மை ஆசிரியர்கள் குறி வைத்து நீக்கப்படும் வேறு சில நிகழ்வுகளும் உண்டு. பஜ்ரங் தள உறுப்பினர்கள் அளித்த எண்ணற்ற புகார்களை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடிசா (Vidisha) என்னுமிடத்தில் உள்ள ஒரு பள்ளியில் முஸ்லீம் முதல்வராக இருந்த திருமதி ஷைனா ஃபிர்டுவாஸ் (Shaina Firdous) என்பவர் நீக்கப்பட்டார். குணா மாவட்டத்தில் கிறித்தவ மிஷனரி பள்ளிக்கூடம் ஒன்றில் ஜஸ்டின் மற்றும் ஜாஸ்மினா காட்டூன் (Justin and Jasmina Khatoon) என்கிற இரு ஆசிரியர்கள், ஒரு மாணவர் அளித்திட்ட புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லீம் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எதிரோக மதவெறி நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முஸ்லீம் மாணவர் ஒருவரின் பெயர் “கசாப் போன்று இருப்பதாகக்” கூறி அவருடைய ஆசிரியரால் அந்த மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு, கேலி செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் பார்னர் என்னும் ஊரில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் ஓர் ஆசிரியர், வகுப்பில் பயின்ற ஒரேயொரு முஸ்லீம் மாணவியைச் சுற்றி வளைத்துக்கொண்டு, நச்சு முஸ்லீம் எதிர்ப்பு கருத்துக்களை வீசியிருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்களுக்கு புராதன பாரம்பர்யப் பெருமைகளைப் பறைசாற்றுகிறோம் என்ற பெயரில் கல்வியை காவிமயப்படுத்துவது என்பதும் மோடி அரசாங்கத்தின் இலக்குகளில் ஒன்றாகும். இவ்வாறு காவிமயப்படுத்துவதன் நடவடிக்கைகளில் உடனடியாக இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது சிறுபான்மை முஸ்லீம் ஆசிரியர்களும் மாணவர்களுமாவார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரபூர்வமாகவே இவை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பனவற்றை, கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்துவரும் முஸ்லீம் மாணவிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்லூரிகளுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டதிலிருந்தும், மத்தியப் பிரதேசத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிகளில் முஸ்லீம் ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதிலிருந்தும், அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதிலிருந்தும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு நாட்டின் பொதுக் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகத் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா, 2023இல் ஜி.20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம்’ என்னும் முழக்கத்துடன் அதிகாரபூர்வமாக ஏற்க இருக்கிறது. “மனிதகுலம் முழுமையும் ஒரே குடும்பமாக நல்லிணக்கத்துடன் மேம்பாடு அடைந்திடும் விதத்தில் இந்தியா இருந்திடும்” (“India stands for promoting harmony within the human family”) என்று மோடி படாடோபமாகப் பறைசாற்றியிருக்கிறார். ஆனால், இந்தியாவிற்குள் உள்ள பல்வேறு மதத்தினருக்கிடையேயும் மதவெறி அடிப்படையில் பிரித்தாளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒன்றிய அரசாங்கம் ஜி.20ஐ ஒட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் எண்ணற்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. இதில் ஒரு நிகழ்வு இந்தூரிலும் நடைபெறவிருக்கிறது. இதே இந்தூரில்தான் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் முனவர் ஃபரூக்கி, அவருடைய நிகழ்ச்சிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக ஓர் இந்துத்துவா சங்கி கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். இதே இந்தூரில்தான் சென்ற ஆண்டு வளையல் வியாபாரி ஒருவரான தஸ்லீம் அலி என்பவர் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வளையல் விற்றார் என்று கூறி மிகவும் மோசமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு 107 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த இந்தூர் நகரில்தான் இப்போது கண்ணியம் மிக்க சட்ட வல்லுநர்களும், ஆசிரியர்களும் அவர்கள் முஸ்லீம் என்ற காரணத்தாலேயே வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி.20 நிகழ்வு இந்தூரில் நடைபெறும் சமயத்தில், இந்துத்துவா ஆட்சியாளர்களின் உண்மை சொரூபமும், ‘அனைவரும் ஒரே குடும்பம்’ (‘வாசுதைவ குடும்பகம்’) என்னும் பாசாங்குத்தனமான பிரகடனமும் தோலுரித்துக் காட்டப்படும்.

(டிசம்பர் 7, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

நூல் அறிமுகம்: தமிழில்: கே. நல்லதம்பியின் ’யாத்வஷேம்’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: தமிழில்: கே. நல்லதம்பியின் ’யாத்வஷேம்’ – து.பா.பரமேஸ்வரி




‘யாத்வஷேம்’ – யூதர்களின் மரண ஓலங்கள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய கொடூரத்தை, இனக் குழுவின் பெரும் கூட்டத்தை பெரும்பகுதி மக்களைக் கொன்று குவித்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை, ஈடுசெய்ய முடியாத கொடும் செயல்களை வாசிக்க வாசிக்க அடிவயிற்றிலிருந்து தீக்கனல் பரவிய உணர்வை ஏற்படுத்திய சம்பவங்களை, காலத்தாலும் வரலாற்றுப் பக்கங்களாலும் அழிக்கவே முடியாத மறக்கவே முடியாதக் கொடுஞ் செயல்களை சற்றும் பதற்றமின்றிக் காய்ந்த சருகுகளாய் தூள் தூளாக்கிய யூத இனத்தை நசுக்கி நாசப்படுத்திய ஹிட்லரின் நாஜிய அட்டூழியங்களைக் காட்சி பிம்பங்களாக,, ஹிட்லரின் யூத இனத்திற்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியைச் சுட்டெரிக்கும் சூரியனின் தீக்கதிர்களைப் போல தமது கூர்மையான ஆழமான எழுத்துக்களின் வழியே உலக வரலாற்றை தம் கூரிய பேனாவால் திறந்து உறங்கும் மக்களை தட்டி எழுப்பிய ஆசிரியரின் சாதனை பாராட்டுதலுக்குரியது..

யூத குழுவைப் பற்றிய தகவல்கள் சில பக்கங்களாகவே வரலாற்றுச் சுவடிகளில் பதிவிடப் பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள மத குழுக்களில் சிறுபான்மை இனமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய யூத இனத்தைப் பற்றிய புதையுண்ட சரித்திரத்தை, ஹிட்லர் என்கிற மனித மிருகத்தின் மதவெறிக்குப் பலியாகிய உயிர்கள், மூடநம்பிக்கைகளால் கொலைவெறிக் கொண்ட கண்கள், மனிதநேயத்தை இழந்து இரத்த காவுகளையும் சதைப் பிண்டங்களையேம் உண்டு களைப்புற்ற கண்கள் கருணையிழந்து ஈரமின்றி மனிதனை மனிதன் சின்னாபின்னமாக்கி கொன்று குவிக்கும் கொடுமையை ரசித்து களியாட்டம் போடும் அசுர நெஞ்சின் ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்தை இழந்து தாய் தந்தையரை இழந்து பிஞ்சு குழந்தைகள் பசி பட்டினியால் அழுவதற்கு கூட திராணியின்றி செத்து மடிந்து, உயிர் பிழைக்க வேண்டுமானால் உழைக்க வேண்டும் என்கின்ற ஒரே ஒரு குறிக்கோளையே தாரக மந்திரமாக ஜெபித்துக் கொண்டு ‘என்புதோல் போர்த்திய உடல் போல’ தோலின் அடியில் உள்ள எலும்பில் ஒட்டியிருக்கும் உயிரை மட்டுமே பெரும் சொத்தாக நம்பி வாழ்ந்து, பிழைத்துத் தப்பிய சிலர், காமப்பசிக்கு ருசியாகி உயிரை மாய்த்துக் கொண்ட பலர் என யூதர்கள் எதிர்கொண்ட நாஜிய ஹிட்லரின் கொடுங் கோல் ஆட்சியின் முர்க்கங்களை இந்நாவலின் மூலம் ஆசிரியர் நேமி சந்திரா உலகத்தாரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாஜிகளின் யூதர்களுக்கு எதிரான வன்முறையின் விளைவால் பூந்தோட்டமாகப் பூத்துக்குலுங்கிய ஹ்யானாவின் நந்தவனத்தைச் சிதைத்து சின்னாபின்னமாகி நாஜிகளின் பிடியில் சிக்கிய அக்கா ரெபேகாவையேம் அம்மா ஹேலனாவையும் தம்பி ஐசாக்கையும் இழந்து தந்தை ஹாரன் மோசஸுடன் இந்தியாவிற்கு வந்த 12 வயது சிறுமி ஹ்யானாவின் ஏக்கச் செறிவையும் மீண்டும் தம் அம்மா அக்கா தம்பியை சந்திப்போம் என்கின்ற ஒற்றைக் குறிக்கோளின் எதிர்பார்ப்பில் ஏங்கி ஏங்கி மீண்டும் தம் தாயகம் திரும்ப வழி பிறக்காதா என்கிற அவளின் பரிதவிப்பும் எதிர்பார்ப்பும் அவளுக்குள் ஒரு நீண்டகாலத் தேடலை தோற்றுவித்தது.

பால்யகால பருவகால இளமையை ஒதுக்கி நிகழ்கால தனிமையில் சிக்கித் தம் கசப்பான இறந்த காலத்தை நினைத்து தினம் தினம் அவளுக்குள் ஒரு போராட்டம், கண்களில் நீர் சுரபிகள் வற்றி வறண்டு போய்விட்டன, ஆனாலும் தம் அன்பான குடும்பத்தை என்றாவது ஒரு நாள் சந்திப்பேன், தம்மினத்தவர்களிடம் தம் மக்களிடம் போய் சேருவேன் என்கின்ற ஹ்யானாவின் உறுதியான நிலைப்பாடு,அதற்கான தேடல் முயற்சி வயதிற்கு மீறிய பக்குவம் என நாவலின் கதாநாயகியான ஹ்யானாவின் பாத்திரத்தை செதுக்கி சித்தரித்துள்ளது இந்த ஒரு ஹ்யானா மட்டுமல்ல இந்த உலகில் எண்ணற்ற சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக அந்தந்த காலகட்டத்தில் ஓங்கி நிற்கும் மதத்தினர் நிகழ்த்தும் வன்முறைகளுக்கும் ஹிட்லர் போன்ற மதவெறி அரசுகள் நிகழ்த்தும் தீவிரவாதத்திற்குமான ஒரு சிறு துளியாக ஆங்காங்கே ஹ்யானாக்கள் தோன்றி ஒடுக்கிய மக்களுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டு தான் உள்ளனர்.

ஹ்யானாவைப் போன்ற எத்தனையோ சிறுமிகள் இன வேறுபாடுகளால் மதக் கலவரத்தால் தீவிரவாதத்தால் வன்மத்தால் சிக்கி சின்னாபின்னமாகிக் குடும்பத்தை இழந்து தன் சொந்த மண்ணை இழந்து வெவ்வேறு நாடுகளில் தஞ்சம்புகுந்து தன் அடையாளங்களை மறந்து மறைத்து இன்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

உயிருடனும் மானத்துடனும் ஏதோ ஒரு மூலையில் வாழ்க்கையிஙன விஸ்தாரத்தில் ஓட்டிக் கொண்டு தம் விதியை நினைத்து அழுதுக் கொண்டே பிடித்தும் பிடிக்காமலும் கடமையே என்று வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ ஹ்யானாக்களை நம் சரித்திரங்கள் தமக்குள் இடம் கொடுப்பதில்லை. மறைக்கப்பட்டப் பக்கங்களில் கிழித்தெறியப்பட்டக் தாள்களாக அவர்களின் அடையாளங்கள் அவர்களுடனேயே மண்ணோடு மண்ணாகக் கலந்துக் கரைந்து விட்ட சோகங்கள் எண்ணற்றவை.

ஹ்யானாவின் உணர்வுகளின் மூலம் ஆசிரியர் பல எண்ணற்ற கதறல்களை ஆழ் மனதின் குரல்களை, அழுத்தங்களை, ஏக்கங்களை, தேடல்களை, எதிர்பார்ப்புகளை, ஆதங்கங்களை கதாநாயகியின் உணர்ச்சிப் பெருக்குகளுடன் வெளிப்படுத்தியிருப்பது ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனங்களின் ஆத்மீக கதறுலுக்கான எதிரொலியாகவே ஒலிக்கிறது.

ஹிட்லரின் சதியால் அம்மா, அக்கா, தம்பியை இழந்த ஹ்யானா இந்தியாவில் பெங்களூருக்குக் இடம் பெயர்கிறாள் அங்கு விவேக்கின் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி வெளிப்புறத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் உதடுகளின் ஓரத்தில் தம் குடும்பத்தினரையும் தம் சொந்த மண்ணையும் மக்களையும் பந்துகளையும் பிரிந்தத் துயரங்களைச் சுமந்துக்கொண்டு அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என்கிற பயத்தை நெஞ்சுக் கூட்டில் அழுத்திக்கொண்டு ஒருவித வெறுமையை மௌனமான புன் சிரிப்புடன் வெளிப்படுத்துகிறாள். இந்த துயரங்களுக்காண முற்றுப்புள்ளி முடிவில்லா தொடர் புள்ளிகளாகத் தொடர்ந்துக் கொண்டிருந்த வேளையில் தந்தையையும் இழக்கிறாள் அந்த அபலைச் சிறுமி ஹயானா.

13 வயது பெண் பிள்ளையின் வாழ்க்கையில் விதியின் திருவிளையாடல் வெறி விளையாட்டாகவே ஆட்டம் காட்டுகிறது. விவேக்கின் தாயின் அரவணைப்பிலும் தங்கை சுமியின் களங்கமற்ற நட்பிலும் மற்ற பிள்ளைகளின் அன்பிலும் திளைத்திருந்தாலும் ஹ்யானா எப்போதும் தனிமையின் நிழலையும் மௌனத்தின் பிடியையும் வார்த்தைகளின் சிக்கனத்தையும் ஊன்றுகோலாகவே பற்றிக்கொண்டு என்றாவது தன் குடும்பத்தைச் சந்திக்கும் வாய்ப்பிற்காக ஏக்க விழிகளுடன் காலத்தின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

கோரிப்பாளையம் இடுகாட்டில் யூதர்களுக்கான இடத்தில் அமைதியாய் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிக்கொண்டிருக்கும் தந்தையின் சமாதியே ஹ்யானாவின் நிம்மதிக்கான நுழைவாயில். கண்களை மூடி தந்தையின் சமாதியின் முன் முட்டிப் போட்டுப் பிரார்த்தனைச் செய்யும் ஹ்யானாவைத் தம் கனவுக் கன்னியாக வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ளும் விவேக்கின் ஆத்மீக காதல்.

யூதர்களே ஜெர்மனியின் வீழ்ச்சிக்குக்கான காரணம் என்கிற கண்மூடித்தனமாக மூடநம்பிக்கையால் யூத சமூகத்தையே வெறுத்து ஒதுக்கும் நாஜிக் கூட்டம். ஆனால் எத்தனையோ மதங்களும் எண்ணிலடங்கா ஜாதிகளையும் கணக்கிட முடியா இனக் குழுக்களையும் சுமக்கும் நம் இந்திய நாட்டில் முற்றிலும் சம்பந்தமற்ற மதப் பிரிவிலிருந்து வந்தத் தனக்கு கேள்வியே இல்லாமல் பாரபட்சமின்றி ஒதுங்க இடம் கொடுத்த படிப்பறிவில்லாத விவேக்கின் அம்மாவின் பகுத்தறிவையும் களங்கமற்ற அன்பையும் கண்டு வியக்கிறாள் ஹ்யானா..ஏதாவது ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் தம் தாயகம் திரும்பும் ஏக்கத்தில் அதற்கான தேடலில் முழுவீச்சாக இறங்கி முயன்று கொண்டிருக்கும் ஹ்யானாகிய அனிதாவிற்கு காந்தி, புத்தர், மகாவீரர் பிறந்த இந்த இந்திய மண்ணின் மீது அளப்பரிய மதிப்பும், ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் வம்சம் குஞ்சிடிகர் வம்சம் என்று எப்போதும் தம் வம்சத்தை உயர்த்திப் பேசும் அம்மா, தம் நாட்டிற்கும் இனத்திற்கும் மதத்திற்கும் ஜாதிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வெளிநாட்டு பெண்ணின் மீது கொண்ட களங்கமற்ற நிரம்பிய அன்பைப் பொழியும் அம்மாவின் மீது கொண்ட எல்லையற்ற பாசம் அவளை இந்திய மண்ணிலேயே விவேக்கின் காதலிலேயே, மதத்திலும் இறை வழிப்பாட்டிலும் பேதமற்ற நோக்கைக் கொண்ட அம்மாவின் அன்பிலேயேக் கட்டிப்போட்டது.

எனினும் அவளின்ஆழ் மனதில் தன் இறுதிக்காலத்திற்குள் ஒருமுறையேனும் தன் தாயகத்தை தான் பிறந்த மண்ணைக் கண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளும்,, தன் குடும்பத்தினருக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும், தன் குடும்பத்தில் யாரேனும் உயிர்தப்பி பிழைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பும் ஹ்யானாவை உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்கான வாய்ப்பிற்காக காத்திருந்தாள்

தம் மகனின் மூலம் தம் குடும்பத்தை வெளிநாட்டில் தேடும் வாய்ப்பைப் பெற்ற ஹ்யானா.

*தம் குடும்பத்தினரை எவ்வாறு சந்தித்தாள்?
*முகாமில் ஹ்யானாவின் அம்மாவிற்கும் அக்காவிற்கும் தம்பிக்கும் நாஜி டகாவ் முகாமிற்கு அழைத்துச் சென்றபோது நடந்தது என்ன?
*இதில் யார் யார் தப்பி பிழைத்து மீண்டு வந்தார்கள் ?
*யூதர்களுக்கு நிகழ்ந்த வன்மம் என்ன ?
*இந்த முகாமில் அடைக்கப்பட்ட ரகசியங்கள் என்னென்ன? *யூதர்களை நாஜி விஞ்ஞானிகள் எவ்வாறெல்லாம் தம்முடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் மருத்துவ ஆய்வுகளுக்கும் இயந்திர பரிசோதனைகளுக்கும் பயன்படுத்திக் கொன்றுக் குவித்தார்கள்?….
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி ஹ்யானாவுடன் அடுத்தடுத்த அத்யாயங்களில் ஆர்வத்துடன் நானும் பயணித்தேன்.

நின்று கைகட்டி வேடிக்கைப் பார்த்த இந்த உலகத்தின் கையாலாகாதத் தனத்தையும் வரலாற்றில் மூடியப் பக்கங்களைச் சரித்திரத்தில் பதிவிட மறந்த கொடூரச் சம்பவங்களையும், உலக வரலாற்றையும், உலகப்போரின் சரித்திரத்தையும்
வாசித்த,
வாசித்துக் கொண்டிருக்கும், வாசிக்கப் போகும்
எதிர்காலத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய, நெஞ்சை நடுநடுங்க வைத்த நாஜி அட்டூழியங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதிவிட்டுள்ளார் ஆசிரியர்.

உலக வரலாற்றைத் திருப்பிப் போட்ட உற்றுநோக்கச் செய்த ஒரு சரித்திர நாவலான இந்த நாவலை ஒரு முழுமையான தரவுகளுடன் கூடிய உண்மைச் சம்பவங்களைக் கால பகுப்பின் துல்லியத்துடன், நமக்கு என்ன? இது நம் நாட்டையோ நம் இடத்தையோ நம் மாநிலத்தையோ நம் ஊரையோ சார்ந்த கொடுமைகள் அல்ல, நம் இன மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியோ அல்ல என்பதையெல்லாம் கடந்து உலகத்தின் மூலையில் ஏதோ ஒரு இனக் குழுவிற்கு ஏற்பட்ட வன்முறைக் கொலை பாதகங்களை உலகத்தாரின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற மனிதநேய அக்கறையுடன் அதற்கான கால விரயம், பொருள் விரயம், உடல் உழைப்பு, சிரத்தைகள், தியாகங்கள் என ஆசிரியரின் இந்த இலக்கியச் சேவை ஒரு மாபெரும் சரித்திரப் புரட்சி.

இந்த படைப்பின் மூலம் ஹிட்லரின் யூதர்களுககெதிரான வன்மத்தை மக்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்பதில் பெரிதும் மெனக்கெட்டு உள்ளார் ஆசிரியர் என்பது போற்றுதலுக்குரிய விஷயம்.

நாஜிகளின் முகாமில் நிகழ்த்தப்பட்டக் கொடுமைகள் ஆசிரியரின் வரிகளில் வாசிக்கும்போது காட்சிப் பிம்பங்களாகக் கண்முன் பிரதிபலித்தன.. பல நாட்கள் எனக்குள் அந்த சம்பவங்களின் தாக்கம் மனதை அலைக்கழித்தன. நிலைகுலையச் செய்தன. அன்று ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுங்கோலாட்சி யூதர்களுக்கு எதிரான வன்முறை.. நாளை நமக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம். ஹிட்லர் இறக்கவில்லை ஒவ்வொருவருக்குள்ளும் பிறந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதே இந்த கதையின் இந்த நாவலின் சாராம்சம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஹிட்லர் நாளை வெளியே வரலாம், இந்த யூத இனத்தை போல் வேறு ஒரு இனக் குழுவிற்கும் இதே போன்ற ஒரு வன்மங்கள் ஏற்படலாம் என்பதே ஆசிரியரின் பெரும் ஆதங்கம். அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்நாவல்.

ஒவ்வொரு சம்பவங்களையும் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று அவற்றைப் பற்றிய முழு விவரங்களைத் தரவுகளுடன் சேகரித்த ஆசிரியரின் அர்ப்பணிப்புக்கு என் உளமார்ந்த வணக்கங்கள்.

இறுதி அத்தியாயத்தில் ஆசிரியர் நேமி சந்திரா இந்த நாவலைப் படைக்க அவர் மேற்கொண்டச் சிரத்தைகளைப் பற்றி விவரித்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தையும் ஒரு பெண்ணாக இருந்து இப்படியொரு படைப்பிற்காக எடுத்துக்கொண்ட வியத்தகு முயற்சிகள், அளபரியா தியாகங்கள் அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கான ஒரு மிகப் பெரிய உந்துதல். செயற்கரிய செயல். தொடர்ந்து வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் போடும் பல படைப்புகள் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

D.P.Parameswari
து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
நூல்: யாத்வஷேம்
ஆசிரியர்: நேமிசந்த்ரா
மொழிபெயர்ப்பு: கே. நல்லதம்பி

விலை: ரூ. 399/-
வெளியீடு: எதிர் வெளியீடு
விற்பனை: 24332924 

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/
நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்

நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்




நமது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த மகாத்மா மண்ணில் மதவெறி நூல் வெளியீட்டு விழா ஜூலை 1 2022 அன்று திநகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர். தீ.சந்துரு தலைமை தாங்கினார் விழாவுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.

நூலை சி.பி.ஐ-எம்மின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார் கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் போரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது ‘மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்எட்டு மதவெறி பரவாது தடுத்திட இந்திய மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

நூலை வெளியிட்டுப் பேசிய கே.பாலகிருஷ்ணன் “எற்கனவே சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நக்கீரன் இதழில் தொடராக எழுதி அதன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட பெருமையும் நக்கீரன் கோபாலையே சேரும்.

‘மகாத்மா மண்ணில் மதவெறி என்னும் சிந்திக்கக் அடினமான தலைப்பில் புத்தகம் வெளியிடுவது மிகுந்த தைரியமான காரியம் இத்தகைய தொடரை எல்லோராலும் வெளியிட முடியாது கட்டுரை போராடித் தென்றால் பத்திரிகை நட்டம் ஏற்படுமே என்றுதான் பத்திரிகை உரிமையாளர்கள் நினைப்பார்கள் சமூகத்துக்கு பலனளிப்பதைப் பற்றி பெரிய கவலைப்படமாட்டார்கள்:

ஆனால் நக்கீரன் ஆசிரியர், இந்தத் தொடரை வியாபாரமாகப் பார்க்காமல் சித்தாந்தப் போராட்டமாகப் பார்த்து வெளியிட்டிருக்கிறார். அறிவை வியாபாரம் செய்வது வேறு. அறிவை விதைப்பது என்பது வேறு. நக்கீரன் கோபால் அறிவை விதைத்திருக்கிறார். நாடிருக்கும் குழ்நினையில் சமூகம் மகாத்மாவை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்” என்று குறிப்பிட்டார்.

இந்த நூல் குறித்த கருத்துரை வழங்கிய நமது நக்கீரன் ஆசிரியர். 2002 குஜராத் கலவரத்தில் 2000 பேர் இறந்ததாய் செய்தி. குஜராத் கலவரம் குறித்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த வலவரத்தில் இறந்தவர்களை எல்லாம் யாருமோ கொல்லலை, தங்ளைத் தாங்களே அழிச்சுக்கிட்டாங்க யாருமே குற்றம் செய்யாம கொலைகள் நடந்திருக்கு.

இத்தகைய மண்ணில்தான். தம் வாழ்கிறோம் இந்த மண்ணில்தான் வாழப்போகிறோம்” என்று மனம் கசந்தவர், “ஹிட்னர் பாதையில் ஒன்றிய ஆட்சி எப்படி நடைபோடுகிறது என்பதை தன் பாணியில் ஜி.ராமகிருஷ்ணன் நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறார்கள் இந்தக் குறிக்கோளுக்கு தடையாக அமைபவை இதுபோன்ற நூல்கள். எனவே இதுபோன்ற எத்தனை நூல்களை ஜி.ஆர். அவர்கள் எழுதினாலும் அதைக் கொண்டுவர நக்கீரன்’ தயாராக இருக்கிறது என உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதை நூலாக வாசித்தபோது எமக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்ன தெரியுமா? இடதுசாரிகள் மகாத்மா காந்தியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிதான் இதில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏன் காந்தி இன்று தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார் காந்திடமிருந்து நமக்குக்கிடைக்கவேண்டியது ஏதாவது இருக்குமென்றால், வெளிச்சத்தை நோக்கிய பயணம்தான் இப்போதிருக்கும் சூழலில் ஜி ஆரின் நூல் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியச் குழலுக்கே மிகவும் தேவையான நூலி என்று அடையாலம் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து போசவந்த காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் வாரலாற்று ஆசிரியர்களுடைய கடமை மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் அதனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் புத்தகங்கள் செய்ய வேண்டிய பணிகள் தீர்ந்து விடுவதில்லை என எமர்சன் (சொல்கிறார் மகாத்மா மண்ணில் மதவெறி தொடரை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியரைப் பாராட்டவேண்டும் என பேசியமார்ந்தார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன் இத்தகைய நூலொன்றை எழுதவேண்டும் என மறைந்த பத்திரிக்கையாளர் ஜவஹர் சொன்னார். என்னால் முடியாது என்று தயங்கினேன் உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார் பின் எழுத முடிவுசெய்தபோது, நாலைந்து தலைப்புகளை ஆலோசித்து ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்ற தலைப்பை முடிவு செய்தோம் பதிப்புரைக்கு நக்கீரன் ஆசிரியர், மதவாதத்தை வெடித்துச் சிதரவைக்கும் கந்தகம்’ என பொருத்தமாக தலைப்பிட்டிருந்தார். இன்றும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மகாத்மா காந்திதான் அதனால் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிநீத்த மகாத்மா உள்ளிட்ட தியாதிகளுக்கும் நூலை சமர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டார்.

தொகுப்பு: சுப்பிரமணியன்
நன்றி: நக்கீரன்