தொடர் 12: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
சினிமா பார்க்க சீசன் டிக்கட்
மின்சார ரயில் பயணத்துக்கு, நகரப் பேருந்துப் பயணத்துக்கு சீசன் டிக்கட் வழங்கப்படுகிறது. சினிமா பார்ப்பதற்கு ஒரு தியேட்டர் சீசன் டிக்கட் வழங்கிய தென்பதை கேள்விப்பட்டிருப்பீர்களா? சேலத்து நியூ இம்பீரியல் தியேட்டர் அதில் திரையிடப்படும் படங்களுக்கு சீசன் டிக்கட்டுகளை ஒரு காலத்தில் வழங்கிப் பார்த்து கொஞ்ச மாதங்களில் நிறுத்திக் கொண்டது. இந்தத் தகவலை எனக்குச் சொன்னவரும் துரை பழநி வேலன்தான். அந்த சமயம் நான் நாலாவது படிவத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) வந்துவிட்டேன்.
இந்த சினிமாவுக்கான சீசன் டிக்கட் ஏற்பாடு எப்படியென்பதைப் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஆங்கில சினிமா ரசிகர்களுக்கு பரவலாக அறியப்பட்டவராய், அவரது படங்கள் பிரபலமானவையாக ஓடியிருக்கும் பட்சத்தில், பளிச்சிட்டவராய் பதிந்திருப்பார். பெயரைச் சொன்ன மாத்திரத்தில் சட்டென்று நினைவுக்கு வருவதோடு அவரது திரைப்படங்களும் கூடவே நினைவுக்கு வந்துவிடும். இப்படிப்பட்ட சில டைரக்டர்களின் படங்களை வாரம் இரு படங்கள் போல ஓரிரு மாதங்களுக்கு திரையிடப்பட்டன. பிரதி மாதம் சீசன் டிக்கட் வழங்கப்பட்டது. சீசன் டிக்கட்டுக்கான கட்டணம் மிகவும் குறைவு. இயக்குனர்கள் வரிசையில் ஜான் ஃபோர்டு, வின்செண்ட் மின்னெல்லி ஜார்ஜ் கூக்கர், ஆல்ஃபர்டு ஹிட்ச்காக் ஆகியோரின் படங்கள் சீசன் டிக்கட்டில் போடப்பட்டன. ஓர் இயக்குனரின் இரு படங்கள் வாரத்தில் இரண்டு என, ஒவ்வொன்றும் மும்மூன்று நாட்கள் திரையிடப்பட்டன. ஒரு சீசன் டிக்கட்டில் இரு படங்களையும் வாரம் முழுக்கவும் பார்க்கலாம். ஒரு டிக்கட்டை இருவர் பகிர்ந்து கொண்டும் பார்க்கலாம். சீசன் டிக்கட்டின் சொந்தக் காரருக்கு எவ்வித ஐ.டி. யும் அந்த காலத்தில் வேண்டப்படவில்லையாதலால், Aயின் சீசன் டிக்கட்டில் Bயும் பார்க்கலாம். எனவே இருவர் சேர்ந்து கூட்டாக ஒரு மாதாந்திர சீசன் டிக்கட் எடுத்து ஒரு படத்தை இருவரும் பார்க்கலாம். நானும் என் நண்பனும் சேர்ந்து எடுத்த சீசன் டிக்கெட்டில் நிறைய படம் பார்த்தோம். இயக்குனர் வரிசையில் Howard Hawksன் ஃபாரோக்களின் தேசம் (Land of the Pharaohs) குறிப்பிடத்தக்க படம். எகிப்திய நாகரிகம், பண்பாடு, பிரமிடுகள் கட்டப்பட்ட விதம், நோக்கம் என்று சுவாரசியமான கதையைக் கொண்ட படம். 1955-ல் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஜாக் ஹாக்கின்சும், ஜேம்ஸ் ராபர்ட்சன் ஜஸ்டிஸ் என்பவர்கள் நடித்திருந்தனர். ஹோவார்டு ஹாக்ஸ் Red River, Rio Bravo Hatari என்ற ஆக்சன் படங்களை ஜான் வைனை நடிக்க வைத்து சிறப்பாக எடுத்தவர்.
ஜார்ஜ் கூக்கர் என்றதுமே அழகிய பெண்களும் நிறைவேறாத காதலும் நினைவுக்கு வரும் ஹாலிவுட் இயக்குனர்களில் பெண்களில் பெண்களை மிகவும் ரசிக்கும் வகையிலும் பெண்கள் ஸ்பெஷலிஸ்ட்டென்றும் அழைக்கப்பட்டவர். கூக்கரின் சில சிறந்த படங்கள் நியூ இம்பீரியலில் சீசன் டிக்கட் வரிசையில் திரையிடப்பட்டன. அவற்றில் காமில்லி (Camille) பவானி ஜங்ஷன் என்பவை. காமில்லி மிகவும் பேசப்படவேண்டிய படம். எம்.ஜி.எம். நிறுவனத்தால் 1936-ல் எடுக்கப்பட்ட இக் கருப்பு வெள்ளை திரைப்பட ஜார்ஜ் கூக்கரால் (George Cukor) ஒரு கவிதையைப் படிப்பது போன்ற காட்சி நகர்வில் படைக்கப்பட்ட அரிய படம். கூக்கர் தம் படங்களில் பெண்களை மிக நளினமாகவும் அவர்களின் உடல் வடிவமைப்பின் ஒரு சில பகுதிகளை விரசமற்று கலைத் தன்மையான இலை மறைவுக்காய் மறைவுத் தோற்றங்களாக காட்டுபவர் அறுபதுகளில் ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் நாடகம் பிக் மேலியனை (My Fairlady என்று ரெக்ஸ் ஹாரிசன், ஆட்றீ ஹெப்பர்ன் முக்கிய பாத்திரங்களில் மிக சிறப்பாக நடிக்க இசையும் நாடகமுமாய் கூக்கரின் அற்புத இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட படம் சென்னை சஃபையர் அரங்கில் முப்பது வாரங்களுக்கு ஓடியது. இப்படத்தைத் தம் இறுதி காலத்திலளித்த பேட்டியொன்றில், மிரினாள் சென் மிக உயர்வாகப் பாராட்டியிருக்கிறார்.
ஜார்ஜ் கூக்கர் 1956-ல் இயக்கிய முக்கிய படம் Bhowani Junction இம்பீரியலில் வெளியானது பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் போராட்டச் சூழலில் இந்தியா கலவரத்திலிருக்கையில் விக்டோரியா ஜோன்ஸ் எனும் ஆங்கிலோ இந்தியப் பெண் லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருகிறாள். இந்த சமயம் வடமேற்கு பகுதியில் கிளர்ச்சியில் நுழைந்த இடது சாரிகள் ரெயில்வே இருப்புப் பாதைகளை முக்கிய இடங்களில் நாசவேலை செய்ய விருப்பதாய் ஆங்கில அரசு அறிந்து அதை சமாளிக்க ராணுவத்தை உஷார் படுத்திய இடங்களில் முக்கியமான ரெயில்வே சந்திப்பு, பவானி ஜங்ஷன் அது தற்போது பாகிஸ்தான் பகுதிக்குள் இருக்கிறது. ராணுவ தளபதி கர்னல் ராட்னி சாவேஜ் என்ற ஆங்கிலேயர் இடது சாரி போராளிகள் இருப்புப் பாதை, புகை வண்டி ஸ்டேசன்களில் நாசவேலை செய்ய விருப்பதைத் தடுக்கும் பொருட்டு பவானி ஜங்ஷனில் தம் துருப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார். அவருக்கும் விக்டோரியாவுக்கும் மெல்லிய உறவு மலர்கின்ற சமயம் போராட்டம் வலுக்கிறது.
அதே சமயம் மற்றொரு வெள்ளைக்காரன் விக்டோரியாவைக் கெடுக்க முற்படுகையில் விக்டோரியா அவனைக் கொன்று விடுகிறான். அவள் மீது குற்றம் பதிவாவதோடு பிரிட்டிஷ் அதிகாரியை பாதிக்கு இந்திய ரத்தம் ஓடும் ஆங்கிலோ இந்தியப் பெண் கொன்றாள் என்பதாக பார்க்கப்படுகிறது. தனது உறவு பிரிட்டனுடனா அல்லது இந்தியாவுடனா என்ற கேள்விக்கான போராட்டத்தில் விக்டோரியா இருக்கும் நிலையில் விடுதலை பெறுகிறாள் ஜான் மாஸ்டரின் அரிய நாவல் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
சாகச நிகழ்வுகளையும் வீரர்களையும் வைத்து பிரெஞ்சில் நிறைய நாவல்களை எழுதியவர் புகழ் பெற்ற அலெக்சாண்டர் டூமா (Alexandre Dumas) இவரது மூன்று கத்தி வீரர்கள் இரும்பு முகமூடி மனிதன் போன்றவை தமிழில் உட்பட மேல்நாடுகளில் (உத்தம புத்திரன், விஜயபுரி வீரன் என்பவை) திரைப்படமாகியிருக்கின்றன. டூமாவென்றால் கோட்டை, குதிரை, கத்திச் சண்டை சாகசம் காதல் என்றே அறியப்பட்டவரின் ஒரேயொரு நாவல் சண்டை, சாகசம் எதுவுமேயில்லாத காதல் கதையாக இருக்கிறது. அது தான் காமில்லி (camille) மார்க்ரெட் பாரிஸில் பெரிய நடனக்காரி, பேரழகி படித்த பெரிய இடத்து வாலிபன் ஆர்மண்டு துவால் என்பவன் பேரில் ஆழ்ந்த காதல் கொள்ளுகிறாள். ஆனால் ஆர்மண்டின் தந்தை மகனை வெளிநாட்டு தூதுவப் பணியில் அமர்த்த முயற்சிக்கும் வேளையில் மார்கரெட்டை சந்தித்து தன் மகனை விட்டு விடும்படியும் அவனுக்குத் தான் அமைத்துத் தரவிருக்கும் எதிர்காலத்தைக் கெடுக்க வேண்டாமென்றும் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறார். அவளுடைய மோசமான வாழ்வின் பின்னணியை அவர் அறிவார். எனவே மகன் வாழ்வை யோசித்து அப்படி செய்கிறார். அவள் யோசித்துவிட்டு அதற்கு சம்மதிக்கிறாள். ஆர்மண்டு அவளை சந்திக்கையில், அவன் மீது தனக்கு காதல் எதுவும் கிடையாதென்று கூறிவிடுகிறாள். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் காதலிப்பதைத் தவிர்க்க முடியாது தவிக்கின்றனர். மார்கரெட் மோசமான நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு படுத்துக் கிடக்கையில் ஆர்மண்டு சென்று பார்த்து அந்த நிலையிலும் அவள் பேரில் தனக்கிருக்கும் மாறாத ஆறாத காதலை தெரிவித்து அழுகிறான். தான் மறுதலித்தும் அவன் தன் மேல் மாறாக் காதல் வைத்திருப்பதையறிய வரும் மார்கரெட் நிம்மதியோடு உயிரை விடுகிறாள்.
காமில்லி என்பது குளிர் பிரதேசத்தில் வருட முழுக்க மலரும் ஒரு அழகிய மலராகும். மார்கரெட் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தவள். காமில்லியாக புகழ் பெற்ற நடிகை கிரேட்டா கார்போவும் (Greta Garbo) ஆர்மண்டாக ராபர்ட் டேலரும் Robert Taylor அற்புதமாக நடித்திருந்தார்கள். கிரேட்டா கார்போவை அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படத்தின் நடிப்புக்கென பரிந்துரைக்கப்பட்டார். மூன்று அகாடெமி பரிசுகளைப் பெற்ற காமில்லியில் மிகவும் சிறப்பான அம்சம் அதன் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு. காமிரா கலைஞர் வில்லியம்ஸ் டானியல் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவாக்கியிருந்தார்.
நியூ இம்பீரியல், சினிமாவுக்கு சீசன் டிக்கட் அறிமுகப்படுத்திய சமயம் சேலம் முனிசிபல் கல்லூரி பி.யூ.சி. வகுப்புக்கு ஆங்கில இலக்கியத்துணை பாடமாக ஷேக்ஸ்பியரின் ஜீலியஸ் சீசரை வைத்திருந்தது. மாணவர்கள் ஷேக்ஸ்பியரை மேலும் அறிந்துகொண்டு இலக்கிய அறிவு பெருகட்டுமென இம்பீரியல் தியேட்டர், ஷேக்ஸ்பியர் நாடகங்களை திரைப்படங்களாக ஆக்கிய அன்றைய புகழ் பெற்ற சில படங்களை சீசன் டிக்கட் வரிசையில் திரையிட்டபோது ஜீலியஸ் சீசர் வெளியானது. அது பள்ளி ஆண்டு விழா சமயமாதலால் கீழ் வகுப்பு, மேல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கில மொழிகளில் கட்டுரை, பேச்சு, நாடகப் போட்டிகளிருந்தன. மேல் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக ஆங்கிலத்தில் நாடகமொன்றிலிருந்து எதாவது பகுதியை மனனம் செய்து மேடையில் நடித்துக் காட்டும் ஆங்கில Elocution போட்டி பிரசித்தமானது. துரை பழனிவேலன் ஜீலியஸ் சீசரில், சீசர் கொலை செய்யப்பட்டவுடன் அவர் உடலை சுமந்து வந்து பொது மக்கள் முன்பு மார்க் ஆண்டனி ஆற்றும் புகழ் பெற்ற உரையை எடுத்துத் தந்து என்னை போட்டிக்கு தயார் செய்தார்.
காஷியஸ், காஸ்கா, புரூட்டஸ் ஆகியோரை முதலில் உயர்த்திப் பேசி பின் கொஞ்சம் கொஞ்சமாக ஜீலியஸ் சீசரை உயர்த்தி அவரைக் கொன்றவர்களைக் கொலைகாரர்களாக நிறுத்தி மக்கள் மனதைத் திருப்பும் கட்டம். ஆண்டனியின் அந்த உரை நாடகத்தில் மிகவும் முக்கியமானது. உணர்ச்சிகரமானது. ஆங்கில Elocution உயர் வகுப்புக்கான பரிசு எனக்குக் கிடைத்தது. பழனிவேலன் சார் அம்மாத சினிமா சீசன் டிக்கட்டை தன் செலவில் வாங்கித் தந்து அன்று வெளியான ஜீலியஸ் சீசர் படத்தைப் பார்க்க வைத்தார். ஜோசப் மான்கீவிக்ஸ் (Joseph Mankiewicz) என்பவரின் உயரிய இயக்கத்தில் புரூட்டசாக ஜேம்ஸ் மேசன், மார்க் ஆண்டனியாக மார்லன் பிராண்டோ காஷியஸாக சர் ஜான் கீல் கட், ஜீலியஸ் சீசராக லூயி கால் ஹெர்ன், ஆண்டனியின் மனைவியாக டெபர்ரா கேர், சீசரின் மனைவி கல்பூர்னியாவாக கிரீர் கார்சனும் மிக அருமையாக நடித்திருக்கும் படம். 1953-ல் தயாரிக்கப்பட்ட இப்படம் நாடகத் தோற்றத்திலிருந்து தப்பி சினிமா வடிவில் சலனிக்கும் விதமாய் முழுக்கவும் காமிராவின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. ஜீலியஸ் சீசர், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆங்கில இலக்கியம் படித்தவர்களால் அரங்கு நிறைந்து ஒரு வாரம் ஓடியது. அடுத்தடுத்து ஷேக்ஸ்பியரின் சில படங்கள் சீசன் டிக் டிக்கட் காலத்தில் காட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானவை நான்கு படங்கள். ஹாம்லெட், மாக்பெத், ரிச்சார்டு தி தார்டு மற்றும் ரோமியோ அண்டு ஜீலியட்.
ஹாம்லெட் (Hamlet) அதன் ஆங்கில வசன மேன்மைக்காக பல இயக்குனர்களால் பல முறை திரைப்படமாக்கப்பட்ட துன்பியல் நாடகம். நாடகத்தைக் கண்டு ரசித்து துய்த்துப் போனவர்களுக்கு அதன் திரைப்பட வடிவிலும் நாடக வடிவையே கண்டவர்களும் காண விழைந்தவர்களும் அதிகம். நாடகமாய் பல காலம் நடத்தி அனுபவம் ஏறிய பிரிட்டிஷ் ஷேக்ஸ்பியர் நாடக வல்லுனர் சர் லாரன்ஸ் அலிவியர் (Sir Lawrance Oliver) ஹாம்லெட்டை 1948-ல் திரைப்படமாய் இயக்கி நடித்தார். முக்கிய பாத்திரத்தில் அவரும் ஜீன்ஸ் சிம்மன்சும் நடித்த இப்படம் அவ்வாண்டின் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான பரிசுகள் உள்ளிட்ட நான்கு ஆஸ்கர் பரிசுகள் பெற்றது. ஆனாலும் படம் பார்க்கும்போது நாடகத்துக்கும் சினிமாவுக்குமாய் மாறி மாறி அலைக் கழிக்கப்பட்டு ஓர் அலுப்பு நம்மைத் துரத்தித் துரத்தி வருகிறது.
ஒளிப்பதிவு எங்கெங்கோ வெற்றிடத்திலெல்லாம் சிதறிப் பதிந்து நம் கவனத்தை எச்சரிக்கிறது. லாரன்ஸ் அலிவியர் ஷேக்ஸ்பியரின் மிகச் சிறந்த துன்பியல் நாடகமென கருதப்படும் ஹாம்லெட்டை கொஞ்சம் சுருக்கியே திரைப்படமாய் உருவாக்கியுள்ளார். பிறகு 1964-ல் சோவியத் ரஷ்யாவின் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டது. கிரிகோரி கோசின்ட்சேவ் (Grigori Kozintsev) வியக்கும்படி இயக்கி உருவான இந்த ஹாம்லெட் உலகில் எடுக்கப்பட்ட எல்லா ஹாம் லெட்களையும் மூலையில் உட்கார வைத்தது. இதன் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவும் கம்பீரமான இசைக் கோர்வையும் காட்சியமைப்பும் நடிப்பும் எடிடிங்கும் அசத்துகின்றன. ஷேக்ஸ்பியர் துன்பியல் நாடகங்களில் தலையானது என கொண்டாடப்படும் ஹாம்லெட் அதன் பிரதான அர்த்தப்படுத்தலுக்கும் மேலே கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்த கோசின்ட்சேவின் ஹாம்லெட். படத்தின் தொடக்கத்தில் இருளின் அடர்த்தியில் ஓசையோடு எழுந்து மோதும் பேரிரைச்சலோடான கடலலைகளின் காட்சி சட்டகம் பிரமிப்பூட்டுகிறது. தொடர்ந்து இதமான அடக்கமான ஒற்றை மணியோசைப் பின்னணியில் காற்றுக்கு அலைபாய்ந்தவாறு எரியும் தீப்பந்தம். பல்வேறு இசைக் கருவிகளின் ஒன்று சேர்ந்த பேரிடியோசை போன்ற ஒரேயொரு இசையிழுப்பையடுத்து குதிரைகள் பாய்ச்சல். பிரிதொரு காட்சியில் குதிரைகள் கட்டவிழித்துக் கொண்டு தாறு மாறாக ஓடும் திகில். கோட்டைச் சுவரின் இருளிலும் ஒளியிலும் தோன்றித் தோன்றி மறையும் குற்றம் புரிந்த கூட்டத்தினர் சிலரின் பார்வையில் காட்சி தந்து அச்சத்தைக் கிளப்பும் கொலையுண்ட மன்னனின் ஆவி. இந்தக் காட்சி லாரன்ஸ் அலிவியரின் ஹாம்லெட்டிலும் சிறப்பாகவே அமைந்திருந்தாலும் கோசின்ட்சேவின் ஹாம்லெட்டில் கூடுதல் பரிமாணத்தைக் கொண்டிருக்கிறது. நாடகத் தன்மையிலிருந்து விலகி சினிமாவாக முழு சுதந்திரத்தோடு படத்தை ஆக்கியிருக்கிறார் கிரிகோரி கோசின்ட்சேவ். அதே சமயம் நாடகம் படமெங்கும் அதற்கான சகல மரியாதையுடனும் ஜீவித்திருக்கிறது.
ஹாம்லெட் மீண்டும் மீண்டும் 1969ல் டோனி ரிச்சர்ட்ஸின் இயக்கத்திலும் 1976ல் வேறொருவராலும் எடுக்கப்பட்டாலும் முதலிரண்டு படங்களைப்போல அமையவில்லை. ஹாம்லெட்டின் முக்கிய பகுதியான அரசன் கொல்லப்பட்டு ஆவியாக தோன்றி பயமுறுத்தும் பகுதியை ஏ.எஸ்.ஏ.சாமியின் வசனத்தில் 1951-ல் கே.ராம்நாத்தின் இயக்கத்தில் வந்த மர்மயோகி (எம்.ஜி.ஆர்.) கொண்டிருக்கிறது. ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரோசாவா (Thrown of Blood) என்று ஹாம்லெட்டை எடுத்தார். குரோசாவா ஷேக்ஸ்பியரின் KingLear ஐ RAN என்ற படமாய் செய்திருக்கிறார். ஏ.எஸ்.ஏ.சாமியின் கதை வசன அமைப்பில் கே. ராம்நாத் 1949ல் இயக்கிய கன்னியின் காதலி ஷேக்ஸ்பியரின் Twelfth Night தழுவி எடுக்கப்பட்ட படம். எஸ்.ஏ. நடராஜன், மாதுரிதேவி, அஞ்சலிதேவி) 1957-ல் வெளிவந்த “பத்தினி தெய்வம்” ஷேக்ஸ்பியரின் Tempest ஐ தழுவியும், 1963-ல் வெளிவந்த அறிவாளி ஷேக்ஸ்பியரின் Taming of the Shrew வையும் தழுவியெடுக்கப்பட்டவை.
நியூ இம்பீரியலில் சீசன் டிக்கட்டில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் திரைப்படமாக்கிய வரிசையில், பார்த்த கடைசி இரு படங்கள் Romeo and Juliet மற்றும் Richard the III என்பவை வெவ்வேறு காரணங்களுக்காக முக்கியமானவை. அவற்றில் ரோமியோ அண்டு ஜீலியட் ஒரு வாரம் முழுக்க ஓடியது. 1954-ல் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் லாரன்ஸ் ஹார்வி ரோமியோ. மற்ற விவரங்கள் நினைவிலில்லை. ஆனால் 1968-ல் Franco Zaffirelli-யின் இயக்கத்தில் வெளிவந்த ரோமியோ சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. ஆண், பெண் நடிகர்கள் எல்லாருமே ஷேக்ஸ்பியரின் அசல் நாடகத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று 18, 20, 21 வயதினராகவே இருந்தார்கள். படம் ஒருவித கவித்துவத் தன்மையோடு கொண்டுபோகப் பட்டிருக்கிறது.
இவ்விரு படங்களுக்கும் இடையில் 1961-ல் ராபர்ட் வைஸ் இயக்கத்தில் ஒரு ரோமியோ ஜீலியட் படம் இன்றைய அமெரிக்க சேரிச் சூழலில் நடப்பதாக மிக அற்புதமாக எடுக்கப்பட்டு பத்து ஆஸ்கர் பரிசுகளைப் பெற்றது. ராபர்ட் வைஸ் இயக்கிய அப்படம் Westside story. சிறந்த இயக்குனருக்கான பரிசு பெற்ற ராபர்ட் வைஸ் இதைப் போன்ற மற்றொரு சிறந்த இசைப் படமான Soundof Music-யும் இயக்கியவர். வெஸ்ட் சைட் ஸ்டோரியில் மோட்டார் கார்கள் பராமரித்து செப்பனிடும் அமெரிக்க சேரிவாழ் குழுக்கள் (Shark, Jet) இரண்டின் தீரா பகைமையோடு குழுக்களிடையே அடிக்கடி கைகலப்பும் மோதலும் நிகழ்கிறது. அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான ஷார்க் சேரி இளைஞர்களுக்கும் தென்னமெரிக்காவிலிருந்து குடியேறிய புதிய சேரி (ஜெட்) இளைஞர்களுக்கும் இருக்கும் இந்த பகைமை போட்டியினிடையே ஷார்க்கைச் சேர்ந்த இளைஞனுக்கும் ஜெட்டைச் சேர்ந்த பெண்ணுக்குமான காதல் கடைசியில் இரு கொலைகளில் முடிகிறது. காதலிக்கும் இளைஞனை காதலியின் சகோதரன் கொல்ல விடுகிறான். இப்படத்தின் நவீன இசையும் நடனமும் அசத்துபவை. அசல் இசைக் கோர்வையை அமைத்தவர் உலகப் புகழ்பெற்ற Leonard Bernstein இப்படத்தின் பல அற்புத காட்சிகளில் ஆரம்ப காட்சியும் ஒன்று. நடாலிவுட், ஜார்ஜ் சாக்கரீஸ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நியூ இம்பீரியலில் சீசன் டிக்கட்டில் பார்த்த கடைசி ஷேக்ஸ்பியர் படம் Richard the III. படத்தை தயாரித்து இயக்கி மூன்றாம் ரிச்சர்டு பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கும் சர் லாரன்ஸ் அலிவியர் படத்தின் தொடக்கத்தில் முக்கியமான தகவல்களை பதித்திருக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் அசல் நாடகத்தில் சில இடைச்செருகல்களை David Gavrick Colley Cibber ஆகியோர் செய்திருக்கிறார்கள். அந்த வடிவில்தான் நாடகம் திரைப்படமாகியுள்ளது.” இது இயக்குனரின் நேர்மையைச் சொல்லுகிறது. இங்கிலாந்தின் கதையென்பது பிற நாட்டைப் போலவே அதன் வரலாற்றாலும் வரலாற்று நாயகர்களாலும் பின்னிப் பிணையப்பட்டது. கதை நிகழ்வு 15-ம் நூற்றாண்டின் பின் பாதியில் தொடங்குகிறது. இந்த காலக் கட்டத்தில் இங்கிலாந்து மகுடத்துக்கு இரு முக்கிய ராஜ வம்சங்கள் போட்டியிட்டு மோதல்கள், சூழ்ச்சி, சதிவேலைகளில் ஈடுபட்டதை வரலாறு, ஆங்கில மகுடத்துக்கான “ரோஜாக்களின் போர்” என அறியப்படுத்துகிறது.
லங்காஸ்டர் அகம் அல்லது வம்சத்துக்கான சிவப்பு ரோஜா. யார்க் அகம் அல்லது வம்சத்துக்கான வெள்ளை ரோஜா. மகுடத்தைப் பிடிக்க சூழ்ச்சி சதி, போர் யாவும் இவ்விரு ரோஜாக்களால் ஏற்பட்டு வரும் காலக் கட்டத்தில் யார்க்கின் வெள்ளை ரோஜா இக்கதையின் தொடக்கத்தில் தன் பூக்கும் இறுதி நிலையிலிருக்கையில் ஷேக்ஸ்பியரை ஈர்த்து நாடகமாக்க உந்து சக்தியானது. இப்படத்தில் அலிவியரையடுத்து முக்கிய நடிகர்கள் Sir John Gielgud, Clair Bloom, Ralph Richardson, Stanley Baker ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 1954-ல் உருவாக்கப்பட்ட இவ்வரிய திரைப்படத்துக்கான கம்பீரமான இசைக் கோர்வையை புரிந்தவர் சர் வில்லியம் வால்டன் (Sir William Walton) இவர் அலிவியரின் ஹாம்லெட் மற்றும் ஐந்தாம் ஹென்றி என்ற படங்களுக்கும் இசையமைத்தவர்.
இங்கிலாந்து மன்னர் இறந்ததும் மகுடத்துக்கு உரிமை கோருபவர்களில் இருவரை கொலை செய்துவிட்டு மகுடத்தைக் கைப்பற்றுகிறான் மூன்றாம் ரிச்சர்டு. இவன் பிறவிலேயே முதுகெலும்பில் ஒரு வளைவு காரணமாய் சிறு கூன் போட்டவனாய் தாங்கித் தாங்கி நடப்பவன். விரைவிலேயே டியூடர் வம்ச படையினரால் ரிச்சர்டு போர்களத்துக்கு பறக்கின்றான் ஹென்றி டியூடர் தலைமையிலான ராணுவம் 1485-ல் Bosworth போர்க் களத்தில் நடந்த ரோஜாக்களின் இறுதி யுத்தமென சொல்லப்படும் போரில் மூன்றாம் ரிச்சர்டின் குதிரை அடிபட்டு விழுகிறது. ரிச்சர்டு தாங்கித் தங்கி வளைந்த முதுகோடு குதிரை வேண்டி கத்துவதாக ஷேக்ஸ்பியர் எழுதுகிறார். “A Horse! A Horse! A Horse For My Kingdom!” ஒரு குதிரை! ஒரு குதிரை! என் ராஜியத்தையே ஒரு குதிரைக்கு தருகிறேன்.
ஷேக்ஸ்பியரின் இந்த நாடக வசனம் இலக்கியப் புகழ் பெற்றது. எல்லாரும் ரிச்சார்டை சூழ்ந்து நின்று கெளரவர்கள் அபிமன்யூவைக் கொன்றது மாதிரி கொன்று விடுகின்றனர். அவனது மகுடம் புதரில் போய் விழுகிறது. ஹென்றி டியூடர் அதைக் கத்தியால் நெம்பி எடுக்கிறான் இந்த ஹென்றி டியூடர் பின்னர் ஏழாம் ஹென்றியாகிறார்.
மூன்றாவது ரிச்சர்டு யுத்த பூமியில் போரிட்டு மடிந்த கடைசி ஆங்கிலேய அரசன். அவனது உடல் அருகிலுள்ள லீசெஸ்டர் நகரிலுள்ள தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று அவசர அவசரமாய்தோண்டிய சிறிய சவக்குழியில் அவனது சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் போன பின் அவனது உடலடக்கம் செய்யப்பட்ட இடம் மர்மமாகவே இருந்து வந்தது. ஊர் வளர்ந்து விரிவடையவும் மிகப் பழைய இடங்களை புதியவை ஆக்கிரமித்து நின்ற நிலையில் லீ செஸ்டர் நகரில் 2012-ல் ஒரு கார் பார்க் அடியில் அவனுடைய சவபெட்டி தோண்டியெடுக்கப்பட்டது. மூன்றாம் ரிச்சர்டின் எலும்புக்கூடு உள்ள சவப் பெட்டி 530 ஆண்டுகளுக்குப் பின் தோண்டியெடுக்கப்பட்டு அரசு மரியாதையோடு சவ அடக்கமானது.
…
– தொடரும்.
…
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்
தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்
தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்
தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்
தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்
தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்
தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்
தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்
தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்
தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்