தொடர் 31: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
இங்கிலீஷ் சினிமா
விட்டல்ராவ்
ஆங்கில சினிமா என்று தமிழில் சொல்லுவதை தேவைப்படுமிடங்களில் “இங்கிலீஷ் சினிமா” என்று எழுதுகிறேன்.
“ஒரு இங்கிலீஷ் பிக்சருக்குப் போலாம்.”
“இம்பீரியல்லே இங்கிலீஷ் படம் ஆடுது.”
ஆங்கில மொழியில் பேசும் திரைப்படங்கள் எல்லாமே “இங்கிலீஷ்” படங்களாகவே பாமர மக்கள் முதல் ஓரளவுக்கே விவரம் தெரிந்த திரைப்பட ரசிகர்கள் வரை புரிந்தும் புரியாமலும் பார்த்த வந்த சினிமா. ஆங்கிலப் படமென்றாலே, “இங்கிலீஷ் படமா, சண்டைப்படம்” என்று சொல்லியும் அவைகளில் இடம்பெறும் ஆண்-பெண் நெருக்கமான காட்சிகளைக் கொண்டும் பாமர மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு திரையரங்கை முற்றுகையிடுவார்கள். அதே சமயம் தீவிர – சினிமா ஞானம் உடைய ரசிகர்களுக்கு ஆங்கிலம் பேசும் எல்லா திரைப்படங்களுமே அசல் “இங்கிலீஷ்” சினிமா அல்ல என்பது தெரியக்கூடும். பொதுவாக திரைஙரங்குகளில் திரையிடப்பட்டு பார்த்து வைக்கும் திரைப்படங்ள் அமெரிக்க திரைப்பட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டும், வேறெங்கெங்கோ எந்தெந்த மொழிகளிலோ தயாரிக்கப்பட்டு பிரபல அமெரிக்க திரைப்பட நிறுவனங்கள் வாயிலாக ஆங்கில மொழியாக்கம் பெற்று உலகெங்கும் விநிகோகிக்கப்பட்டு திரையிடல் கண்டு மக்கள் பார்த்து வைப்பவை, இவ்வகை படங்ளில் இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், சீனா, கொரியா, ஸ்பெயின், ரஷ்யா, பொலந்து மொழிப்படங்களும் ஆங்கிலம் பேசிக்கொண்டு பாமர மற்றும் சராசரி திரைப்பட ரசிகர்களால் “இங்கிலீஷ் படம்” என்று கருதப்பட்டும், சொல்லப்பட்டும் பார்த்து வைப்பவை.
எல்லாவகையான அமெரிக்கத் தயாரிப்புத் திரைபடப்படங்களும், அமெரிக்க நிறுவனங்ளால் வினியோகிக்கப்படும் திரைப்படங்களும் “இங்கிலீஷ் சினிமா” என்றெ நம்பப்பட்டு கருதப்பட்டு பார்க்கப்படுபவை. அசல் அமெரிக்க சினிமா என்பது “அமெரிக்க ஆங்கிலம்” பேசும் திரைப்படங்கள்.
அசல் ஆங்கிலம் – “QUEEN’S ENGLISH” என பெருமை கொள்ளும் ”பிரிட்டிஷ் ஆங்கிலம்” பேசும் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் “இங்கிலீஷ் சினிமா” என வைத்துக்கொள்ளலாம்.
அமெரிக்கா – இங்கிலாந்து இருநாடுகளும் பேசும் ஒரே மொழி ஆங்கிலம் – சற்றே வேறு விதமாய் பேசப்படுவது அமெரிக்க ஆங்கிலம். அன்றே அறிஞர் பெர்னார்டு ஷா [BERNARD SHAW] கூறினார்:-
“ENGLAN AND AMERICA ARE TWO COUNTRIES SEPARATED BY THE SAME LANGUAGE” என்று. இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே மொழியால் வெவ்வேறு நாடுகளாயிருக்கும் இரு நாடுகள்.
அதற்கேற்றாற்போல பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர்களும், பல்வேறு தொழில் நிபுணர்களும், நடிக, நடிகையரும் இங்கிலாந்தை விட்டு வெளிஙேறி அமெரிக்காவுக்குச் சென்று குடியேறி அங்கிருந்து திரைப்படங்கள் செய்து வந்தனர். மாபெரும் சினிமா கலைஞர்கள், சார்லி சாப்ளின், ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், டேவிட் லீன், ரிச்சர்டு அட்டென்பரோ முதலியோரை உதாரணப்படுத்த வெண்டும். இவர்களது இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அசல் அமெரிக்க தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவை. சாப்ளின் செய்த “தி கிட்” [THE KID], GOLD RUSH, MODERN TIMES, GREAT DICTATOR, CITY LIGHT, THE CIRCUS, LIME LIHG COUNTRESS FROM HONG KONG என்ற அமரத்துவம் பெற்ற திரைப்படங்களை பெரும்பாலும் எல்லா மட்டத்து ரசிகர்களும் பார்த்திருப்பார்கள். ஹிட்ச்காக்கின், 39 STEPS, SABOTEARS, STRANGERS ON TRAIN, SPELBOUND, NOTORIOUS, NORTH BY NORTH WEST, VERTIGO, PSYCHO, BIRDS, REARWINDOW, DIAL M FOR MURDER என்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் எல்லாவித படித்த படிக்காத சினிமா ரசிகர்களாலும் கண்டு ரசித்து காலத்துக்கும் பேசப்பட்டு வருபவை. டேவிட் லீன் உருவாகிய, கிரேட் எக்ஸ்பெக்டேஷன், டேவிட் காப்பர் ஃபீலடு, லாரன்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ ஆகிய அரிய திரைப்படங்ள் அமர காவியங்கள். அட்டென்பரோவின் YOUNG WINSTON, CRY FREEDOM, MY BELOVED COUNTRY, A BRIDGE TOO FAR, GHANDHI என்ற மாபெரும் படங்களை மறக்க முடியுமா? இந்த அசல் பிரிட்டிஷ் இயக்குனர்களால் அமெரிக்காவிலிருந்து இயக்கிய திரைப்படங்ளில் ஹாலிவுட் பகட்டும், இயல்பு மீறியயதார்த்த சித்தரிப்பும் காணப்படாதவை.
அமெரிக்காவின் முக்கியமான ஒரு பகுதியான கலிஃபோர்னியாவில் பரவலாகப் புழக்கத்திலுள்ள அமெரிக்க ஆங்கில கொச்சை மொழியைத் தம் வசனங்களில் முழுக்கக் கையாண்டு புகழ் பெற்ற “GRAPES OF WRATH” ‘OFMICE AND MEN”, ‘EAST OF EDEN” ஆகிய நாவல்களைப் படைத்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற JOHN STEINBECK-ன் நாவல்களைப் படித்ததிலோ, அவை முறையே JOHN FORD, ELIA KHZAN ஆகியோரின் உயரிய இயக்கத்தில் திரைப்படங்களாய் உருவானபோது பார்த்ததாலோ இந்திய மற்றும் பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசி- எழுதுபவர்கள் கலிபோர்னிய கொச்சை ஆங்கிலத்துக்கு மாறியிருக்க மாட்டார்கள்.
திரைப்பட ஆர்வலர்களுக்கு மொழி ஒரு தடையாக நிச்சயம் என்றும் இருப்பதில்லை.
ஆங்கில மொழியின் வசன அழகை-கமபீரத்தையெல்லாம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் கொண்டிருப்பவை. அவற்றை தம் காலமெல்லாம் மேடையேற்றி இயக்கி நடித்தும், அவற்றையே திரைப்படங்களாய் தயாரித்து இயக்கி நடித்தும் வந்தவர் SIR LAURENCE OLIVER. இவரது HAMLET, RICHRD – THE THIRD, HENRY FIFTH என்ற திரைப்படங்கள் அரிய அற்புத அசல் ஆங்கிலத் திரைப்படங்கள். இங்கிலாந்தின் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அமெரிக்காவிலும் [ORSAN WELSS] ஜப்பானிலும் [AKIRA KUROSAWA] ரஷ்யாவிலும் [GRIGORI KOZINTSEV] அவர்களுக்கேற்ற வடிவிலும் அவர்களின் மொழியிலும் சிறப்பாக திரைப்படமாக்கியுள்ளனர். திரைப்படங்கள் ரீதியாகவும் ஆங்கிலம் உலகமொழியாகிவிட்டது.
பிரிட்டிஷ் புதிய அலை சினிமா 1960-ல் தெரிய வருகிறது. கேரல் ரைஸ் [KAREL REISZ] அன்றைய செகோஸ்லோவாகியாவில் ஆஸ்ட்ராவலா [OSTRAVA] எனும் ஊரில் 1926ல் பிறந்து தன் பன்னிரெண்டாவது வயதில், செக் நாட்டை ஹிட்லரின் நாஜி படை சூழ்ந்து பிடித்துக்கொண்டபோது 1939-ல் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரது பெற்றோர்கள் ஹிட்லரின் போலந்து மரணமுகாமான ஆஸ்விட்ஸில் இறந்து போயினர். கெரல் ரைஸ் இரண்டாம் உலகப் போரில் சேர்ந்த போரிட்டபின் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரசாயனம் படித்தார். அதன்பின் சினிமா விமர்சகரானார். FREE CINEMA MOVEMNET என்ற இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார். இந்த இயக்கம் அரசியல் பிரக்ஞை மிக்க பிரிட்டிஷ் சினிமாவை வளர்த்தெடுத்தது. 1960-ல் இவர் SATURDAY NIGHT AND SUNDAY MORNING என்ற புதிய அலை திரைப்படத்தை செய்து முடித்தார். 1981ல் தமது THE FRENCH LIEUTENANT’S WOMAN என்ற சிறந்த படத்தையும் இயக்கினார்.
1950களின் இறுதியிலிருந்து 1960களின் தொடக்க காலம் வரை பிரிட்டிஷ் சினிமா, சமூக யதார்த்தத்தை நோக்கித் திரும்பியது. உழைக்கும் வர்க்க இளைஞர்களின் கனவுகளை மேம்படுத்தும் வகையிலான கதைகளைத் தேடிச் சென்றன. “கோபக்கார இளைஞர்கள்” என அழைக்கப்பட்ட நாடகாசிரியர்கள், நாவலாசிரியர்களின் படைப்புகளை திரைப்படமாக்கிப் பார்த்தனர், இவ்விதமாக பிரிட்டிஷ் புதிய அலை சினிமா 1958ல் ஜான் ஆஸ்பொர்ன் [JOHN OBSBORNE] என்பவர் எழுதிய LOOK BACK IN ANGER என்ற நாவலும் ஜான் ப்ரெய்ன் [JHON BRAINE] எழுதிய THE ROOM AT THE TOP என்ற நாவலும் 1959-ல் பிரிட்டிஷ் புதிய அலைத் திரைப்படமாக்கப்பட்டன. ஸ்டான் பார்ஸ்டோவின் [STAN BARSTOW] AKIND OF LOVING கதை 1962-ல் புதிய அலை இங்கிலீஷ் படமானது. இவற்றில் ஆலன் சிலிடோ என்பவர் [ALAN SILLITOE] எழுதிய நாவல் SATURDAY NIGHT AND SUNDAY MORNING என்பதை அவரே திரைக்கதையாக்கித்தர, கேரல் ரைஸ் நினைவில் நிற்கும்படியான திரைப்படமாக்கினார். இந்தப் படத்தின் மூலம் பிரிட்டனின் உழைக்கும் வர்க்கத்தை வெள்ளித் திரைக்கு அதுவரையில்லாத வகையில் கொண்டுவரச் செய்தனர். நாவல் ஓரளவுக்கு ஆசிரியரின் சுயவரலாறு என்பர். 70களில் நான் சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் நூலக உறுப்பினராயிருந்த காலத்தில், திரையிடப்பட்ட பல படங்களைப் பார்த்ததில் இந்தப் படமும் ஒன்று.
ஆர்தர் என்ற இளைஞன் தான் பணிபுரியும் தொழிற்சாலை வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக் காட்டிலும் தன் வாழ்க்கையிலிருந்து அதிகம் பெற்றுக்கொள்ள துடிப்பவன். ஓர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆர்தர், எவ்வகையிலும் பிறால், பிறவற்றால் பாதிக்கப்படாதவன். ஆனால் தன் சொந்த விருப்பு வெறுப்புகளாலும் மனக்கசப்புகளாலும் பாதிக்கப்படுபவன். கேரல் ரைஸ் பிரிட்டிஷ் புதிய லை சினிமாவின் தந்தையென கருதப்படுபவர். ஸ்டூடியோவுக்குள் செட்போட்ட படமெடுப்பதிலிருந்து விடுபட்டு வெளியேறி நிஜமான சூழ் நிலையில் – இடங்களில் யதார்த்தமாயிருக்குமாறு படமெடுத்த வகையில் இதுவும் பிரெஞ்சு புதிய அலையொடு கை கோர்த்த இயக்கம். ஆனால், பிரெஞ்சு புதிய லை சினிமாக்காரர்கள் கவனம் செலுத்தி புதிய கோணத்தில் ஒளிப்பதிவு செய்தது போன்ற வழியில் பிரிட்டிஷ் புதிய அலைக்காரர்கள் காமிரா புதுமையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. யதார்த்தம் என்று அவர்கள் அதிகம் கவனம் கொண்டது கதை உள்ளடக்கத்தில்தான். உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த வாழ்க்கை, சொந்த நலன்குள்ளே நுழைந்து படமெடுத்தனர். LOOK BACK IN ANGER [1959] திரைப்படம் நாடகத்தனமாக அமைந்திருந்தது. SATURDAY NIGHT… கிட்டதட்ட ஆவணத்தன்மை கூடியிருந்த திரைப்படம். கதையில் நிகழும் சோரம் போவது, கருக்கலைப்பு, குடிபோதை, தினசரி வன்முறைகளை படம் இடித்துக் காட்டாமலிருப்பது இருப்பதாகவே பார்க்கிறது. பிரெஞ்சு புதிய அலைப்படங்களில் தேர்ந்த பார்வையாளன் விளங்கிக்கொள்ளும் விதமாக அவனுக்கான புதிய பரிமாணமாக உள்ளார்ந்திருக்கும்.
ஆர்தர், இரு சக்கர வண்டிகள் தயாரிக்கும் நாட்டிங்ஹாம் தொழிற்சாலையில் லேத் இயக்குனராக பணிபுரிபவன். நாட்டிங்ஹாம் தொழிற்சாலையில்தான் புகழ்பெற்ற ராலி சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இறக்குமதியாகி விற்கப்பட்டன. என்னிடம் இன்னும் உயிரோடிருக்கும் ராலி ஸ்போர்ட்ஸ் சைக்கிள் அசல் இங்கிலாந்து நாட்டிங்ஹாம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்ட ஒன்றுதான். ஆர்தர் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்புரிகிறான். ஆனாலள் எந்த அரசியல் சார்பான கிளர்ச்சிக்காரனுமல்ல, குற்றவாளியுமல்ல. தனக்கு மூத்த வயதிலுள்ள சக தொழிலாளியின் மனைவியான பிரெண்டா என்பவனோடு உறவு வைத்துக்கொள்ளும் ஆர்தர்\ பேரின்டோரின் எனும் இளம் வளதுப் பெண்ணோடும் பழகுகிறான். இதையும்கூட தனக்கான தன் சொந்த போராட்டம் என்பதால் நினைக்கிறான். யதார்த்த வாழ்வில் அவனது போக்கு மட்டமானது என்பதை உணர்வதில்லை. பிரெண்டா இவனால் கருவுறுகிறாள். அவள் கருக்கலைப்பு செய்யும்போதும் இவன் வருத்தமடைவதில்லை. கடைசியில் பிரெண்டாவின் கணவனாலும் அவனது இராணவு நண்பர்களாலும் ஆர்தர் செம்மையாக தாக்கி உதைக்கப்படுகிறான். உடல் பாதிக்கப்படும் ஆர்தரின் மனசாட்சியோ மனோவலிமையோ நசுக்கப்படுவதில்லை. ALBERT FINNEY ஆர்தராக சிறப்பாக நடிக்கிறார். SHIRLEY ANNE FIELD, RACHEL ROBE3RTS இருவரும் டோரினாகவும் பிரெண்டாவாகவும் இயல்பாக நடித்திருக்கும் இப்படத்தின் சிறப்பான ஒளிப்பதிவு, வெகுஜன சினிமா வெளியிலும் நன்கு அறிமுகமான காமிராமேன் FREDDIE FRANCISஆல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் 1944-ல் லாரன்ஸ் அலிவியரைக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் ஆதரவோடு தயாரிக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் நாடகம் “ஐந்தாம் ஹென்றி” [HENRY-V] ஒரு முக்கியமான திரைப்படம். அந்த தருணத்தில் இப்படம் ஒரு மிகவும் ஏற்றயுத்தகால பிரச்சாரமாயும், தேசப்பற்றைஉசுப்பி உந்திவிடக்கூடிய திரைப்படமென்றும் பிரிட்டிஷ் அரசால் கருதப்பட்டது. இ3ச்சமயம் லாரன்ஸ் அலிவியர் பிரிட்டிஷ் விமானப்படையில் சேர்க்கப்பட்டு உலகப்போரில் ஈடுபட்டிருந்தார். உடனடியாக அரசின் கட்டளைபடி அவர் போரிலிருந்து விடுவிக்கப்பட்டு ஐந்தாம் ஹென்றி படத்தில் முக்கிய பாத்திரமான ஹென்றியாக நடிக்க அனுமதிக்கப்பட்டார். முதலில் படத்தை இயக்கும் பொறுப்பை மற்றொரு சிறந்த பிரிட்டிஷ் இயக்குனர் வில்லியம் வைலரிடம் [WILLIAM WYLER] ஒப்படைக்கப்பட்டபோது அவர் அந்தப் பொறுப்பை நிராகரித்து ஒதுங்கிக் கொண்டதால் லாரன்ஸ் அலிவியரே படத்தின் இயக்குனர் பொறுப்பையும் எற்றுக்கொண்டார்.
ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அரங்கேறுவதும் மேடையேற்றப்படுவதுமாய் புகழ்பெற்ற பிரிட்டிஷ நாடக அரங்காயிருப்பது “க்ளோப் தியேட்டர்” [GLOBE THEATRE]. லாரன்ஸ் அலிவியர், ஒரே சமயத்தில் ஷேக்ஸ்பியரின் நுணுக்கமான நாடகக் கலை அழகியவை போற்றி காக்கும் நோக்கத்தோடும், அக்கதையில் சினிமாவுக்கான சாத்தியக்கூறுகளைதம் தம் நாடக அனுபவங்கள் மேலிட்ட கற்பனை வளத்தோடும் புதிய வடிவில், ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் வேகத்தோடும் தயாரித்து இயக்கி நடித்தார். இதற்காக அவர் இந்தத் திரைப்படத்தை நாடக அரங்கான க்ளோப் தியேட்டரிலேயே, சில காட்சிகளை நாடக ரூபமாகவே படமாக்கினார். ஐந்தாம் ஹென்றி திரைப்படம் தொடக்கக் காட்சியில், அன்றைய காலக்கட்டத்து – அதாவது எலிஸபெத் காலத்திய லண்டன் நகர தோற்றத்தை தத்ரூபமாய் குறும் வடிவில் உருவாக்கப்பட்ட மாதிரியமைப்பை காமிரா அருகிருந்தும் விலகியும் ஒவ்வொரு பகுதியாக நமக்கு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. அடுத்து நடிகர்கள் – அலிவியர் உட்பட நாடகப் பாணியிலேயே மேடையில் தோன்றி நடித்துக் கொண்டு வர, சூழலும் காட்சிகளும் மாறிவந்து, பிரான்ஸை நோக்கி நகருகிறது. பிரான்ஸை நோக்கி இங்கிலாந்து அரச விஷயங்களை பயணிக்கையில், காமிரா இதுகாறும் நாடக வெளியாக இருந்து வந்ததை சினிமாவெளியாக மாற்றுகிறது. இதிலிருந்து ஐந்தாம் ஹென்றி திரைப்படமாகிறது. இந்தக் காட்சி மாறுதல்களுக்கு லாரன்ஸ் அலிவியரும், ஜாக்ஹில்டியார்டு [JACK HILDYARD], ராபர்ட் க்ராஸ்கர் [ROBERT KRASKER] எனும் இரு காமிரா கலைஞர்களும் காரணமானவர்கள். ரஷ்ய திரைப்பட மேதை செர்கை ஐனெ் ஸ்டீன் [SERGEI ELSENSTEIN] தமது “அலெக்சாண்டர் நெவ்ஸ்கி” [ALEXSANDR NEVSKY] எனும் ரஷ்ய மௌனப் படத்தில் 1938-ல் கையாண்ட அபார கலை நுணுக்கத்தைப் பின்பற்றி மேற்கூறிய ஒளிப்பதிவாளர்கள், அலிவியரின் வழிகாட்டலோடு செய்திருப்பது அறியப்படுகிறது. பிரிட்டன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு விதமாயும், பிரான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேறு விதமாயும் படமாக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு அரசவைக் காட்சிகளின்போது வலிந்து ஐரோப்பிய மத்தியகால குறும் ஓவியங்களில் [MEDIEVAL MINIATURE PAINTINGS] கையாளப்பட்டிருக்கும் வண்ணமுறை, அரசவை அலங்கரிப்பு, பாத்திரங்களின் உடை, பிற ஜோடனைகளுக்கு தேர்வாக்கப்பட்டது போன்ற அறையில் காமிரா படமாக்கியுள்ளது. இதற்கு மிகுந்த கலை ரசனை வேண்டியிருக்கிறது. அலிவியரின் நடிப்பு ஷேக்ஸ்பியரின் பாத்திரத்தையும் வசனங்களையும் உயிர்ப்பித்து காட்டுகிறது. போர் காட்சிகள் இடம்பெறுகையில் இசைக் கலைஞர் வில்லியம் வால்டன் [WILLIAM WALTON] புரிந்துள்ள இசைக்கோர்வை பிரம்மாண்ட எழுச்சியுணர்வை உண்டாக்குகிறது. முற்றிலும் ஒரு ஷேக்ஸ்பியர் காவியமான திரைப்படமாய் அமையப்பெற்ற முதல் திரைப்படம் ஐந்தாம் ஹென்றி.
சர் லாரன் அலிவியர் [SIR LAURENCE OLIVIER] ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள் உட்பட அறுபத்தாறு திரைப்படங்களை இயக்கியவர். ஏராளமான நாடகங்களை மேடைப்படங்களை இயக்கியவர். ஏராளமான நாடகங்களை மேடையேற்றி இயக்கி நடித்தவர். இவர் புகழ்பெற்ற லண்டன் தேசிய நாடக அரங்கான NATIONAL LONDON THEATRE-ன் தலைமை இயக்குனர் பதவியை 1962 முதல் 73 வகித்தவர். அலிவியர் தம் 82வது வயதில் 1989-ல் காலமானார்.
பிரிட்டிஷ் இயக்குனர் டேவிட் லீன் [DAVID LEAN] லண்டன் அருகில் க்ராய்டன் எனுமிடத்தில் 1908-ல் பிறந்தார். இவர் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் புகழ்பெற்ற திரைப்படங்கள், THE BRIDGE ON THE RIVER KWAI; LAWRENCE OF ARABIA; DR. ZHIVAGO; RYAN’S DAUGHTER; A PASSAGE TO INDIA என்பவை. ஆனால் டேவிட் லீன் இயக்கிய புகழ்பெற்ற பழைய திரைப்படங்கள் இன்னும் நினைவிலிருப்பவை. ஆங்கில நாவலாசிரியர்களில் மறக்கமுடியாத படைப்புகளைத் தலைவர் சார்லஸ் டிக்கன்ஸ். அவரது நாவல்களை வெவ்வேறு இயக்குனர்கள் படமெடுத்திருந்தாலும் டேவிட் லீன் 1946-ல் இயக்கிய கருப்பு வெள்ளைப்படம் GREAT EXPECTATIONS (மகத்தான எதிர்பார்ப்புகள் யாருக்கு இல்லை?) மிகச் சிறந்த ஆக்கம். 1948-ல் டிக்கன்ஸின் மற்றொரு முக்கிய நாவல் OLIVER TWIST-யும் டேவிட் லீன் சிறப்புற படமாக்கினார். அங்கில நாவலை திரைப்படமாக்கியதில் இவையிரண்டும் அற்புதமானதென்றும் தலை சிறந்த பிரிட்டிஷ் திரைப்படமென்றும் பாராட்டப்படுபவை.
படத்தின் தொடக்கக்காட்சி திகிலூட்டுவதாயிருக்கும் பரந்த சகதியான மைதானத்தை நீள-அகலமாய் காமிரா நம் கண்ணுக்கு விரித்துக் காட்டுகிறது. நம் கண்களை காமிரா, கேட்பாரற்ற இடுகாட்டுக்கு இட்டுச் செல்கிறது. இதுபோன்ற ஒளியமைப்புக்காக டேவிட்லீன் முதலில் நியமித்த ஒளிப்பதிவாளர் ROBERT KRASKER- என்பவரை தள்ளிவிட்டு GUY GREEN என்பவரை நியமித்துக் கொண்டார்.
மாக் விட்ச் [MAGWITCH] என்பவன் பயங்கர குற்றவாளி சிறையிலிருந்து தப்பித்து வந்துவிட்ட மாக் விட்ச் நாவலின் இனம் கதாநாயகன் PIP- என்பவனை பயமுறுத்தி தனக்கு உணவு வேண்டுமென்றும், தன் கை விலங்குச் சங்கிலியை அறுத்து அகற்ற ஆயுதம் வேண்டுமென்றும் துன்புறுத்துகிறான். இந்த ஆட்சி திரைப்படத்தில் பிரமாதமாயிருக்கும். பிப், அங்கிருந்து நழுவி பழைய மாளிகையொன்றை அடைகிறான். அங்கே வயதான ஒருத்தியையும் இளம்பெண் ஒருத்தியையும் பிப் சந்திக்கிறான். வயதான பெண்ணான ஹாவிஷம் [HAVISHAM] சில காலம் முன் தன் கல்யாணத்தில் நிகழ்ந்த கோர முடிவால் திருமணமே நின்றுவிட, மனமுடைந்த அவள் அழுக்காயும் விடாமல் தன் திருமணக்கோல உடையிலேயே சுற்றி வருவதோடு வளர்ப்புப் பெண்ணான இளம் எஸ்டெல்லோ [ESTELLA]வைக் கொண்டு தன்னிடம் சிக்கிய ஒவ்வொரு ஆண்மகனையும் ஆசைகாட்டி, தோல்வியுற்ற தன் திருமணத்துக்கு பழிவாங்க நினைக்கிறாள். பிப் எஸ்டெல்லாவை காதலிக்கிறான். இச்சமயம் நல்ல சமாதித்தர் ஒருவர் உதவியால் பிப் லண்டனுக்கு அனுப்பப்படுகிறான். சில வருடங்கள் கழிந்த பின், வளர்ந்தவனாக அவன் தன் காதலி எஸ்டெல்லாவை தனக்கு மனைவியென்றே முடிவு கட்டி தேடியலைகிறான். இந்தப்படம் அந்தக் காலத்தில் சிறந்த ஒளிப்பதிவுக்கு கை க்ரீனுக்கும் கலை-ஒப்பனைக்கு வில்ஃப்ரெட் ஹிங்கிலிடனுக்கும் ஆஸ்கர் விருதுகள் வாங்கித்தந்தது. தம் எல்லா திரைப்படங்களுக்குமே பல்வேறு அம்சங்களுக்கென டேவிட் லீன் ஆஸ்கர் விருதுகள் பெற்று வந்தவர். இந்தியாவுக்கு வந்து காந்தியைப் பற்றி திரைப்படம் தயாரிக்க அவர் முயன்று வெற்றிபெறவில்லை. அந்த வாய்ப்பும் புகழும் சர் ரிச்சர்டு அட்டன்பரோவுக்கு கிடைத்தது. அப்படியும் விடாமல், ஈ.எம்.ஃபார்ஸ்டரின் நாவலான ‘A PASSAGE TO INDIA”வை இந்தியாவுக்கு வந்து இயக்கி வெளியிட்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியதோடு, கர்னாடாகவில் மாண்டியா அருகிலுள்ள புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த ராமநகரம் மலையில் வெடி வைத்து செயற்கையாக குகைகளை உண்டாக்கியதற்காக இந்திய புவியியல் துறையால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்துக்கும் போனவர் டேவிட் லீன். டேவிட் லீன் 1991-ல் மரணமடைந்தார்.