வசந்ததீபன் கவிதைகள்
1
வண்ணத்துப்பூச்சிகள் வருகை
புறாவுக்கு
புலியின் நகங்கள் முளைத்ததோ?
பூக்களும்
ரத்தம் சிந்துதே.
அரிவாள்களும், தீவட்டிகளும்
ஆங்காரத்தோடும், ஆவேசத்தோடும்
தேசமெங்கும்
ஆர்ப்பரித்து அலைகின்றன.
மனிதக் குருதி ருசிக்க
நாக்கைச் சுழற்றியபடி
காலம்
கொக்கின் கவனத்தோடு
காத்திருக்கிறது.
அச்சுறுத்தும் வேதனையை
அறுத்துப் போடு..
துக்கம் விழுங்கித் தவிக்கும்
நரக வாழ்க்கை
வெடித்து நொறுங்கட்டும்…
பூ பூக்காத இருதயங்கள்
பொசுங்கிப் புகட்டும்…
காட்டு விலங்குகளின்
கண்களைப் போன்று
எரியும் ஆன்மாக்கள் யாவும்
பனி மழையில் நனையட்டும்.
வெட்டுக்கள் நிறைந்த முகங்கள் எல்லாம்
நிழல்களின் ஊஞ்சலில்
ஓய்வெடுத்து
ஆறுதலடையட்டும்.
அழகான
அமைதியான
ஆனந்த.
உலகை நிர்மாணிக்க…
வர்ணங்களற்ற
வண்ணத்துப்பூச்சிகள்
பறந்து வரும்..
மனசுகள் பூக்கும் நாள்
மிகு அருகில்.
2
பறவைகளின் சாலை
வானவில்லின் வண்ணங்கள் ஒருமித்திருந்தாலும்
அதனதன் நிலையில் வேறுபட்டிருக்கின்றன
பிரபஞ்சத்தின் பிணைப்பில்
வாழ்க்கை சிக்குண்டு திணறுகிறது
என்கிறது மெய் ஞானம்
கணக்கற்ற உலகங்கள் சுழல்கின்றன என்கிறது
நுட்ப அறிவின் அனுமானம்
அவற்றின் ரகசியங்கள்
இதுவரை எவர்க்கும் புலப்படாமல்
புகைந்து போய்க் கொண்டிருக்கின்றன
ஜனனம்_ மரணம் என்னும் கரைகளுக்கு ஊடாக
பெருக்கெடுத்தோடும் நதியின் துளிகளாய்
கணம் தோறும்
உயிர் உள்ளவைகளும் , உயிரற்றவைகளும் பயணித்தபடியே இருக்கின்றன
இறுதியின் முகவரி எங்குள்ளது ?
தோற்றத்தின் துவக்கப்புள்ளி
எப்பொழுது முகிழ்க்கிறது ?
காலத்தின் அணுக்களை வரையறுத்தது யார் ?
கடவுளின் சாத்தானின் படிமங்களின் உள்ளீடு என்ன ?
எத்தனையோ கேள்விகள்
காற்றின் கூறுகளில் பருண்மையாய்த் திரண்டு உலவினாலும்
மனிதனைத் தவிர்த்து வேறு எதனையும்
அணுக்கமாய் அணுகிட முடியாது என்பது பேருண்மை
வாழ்வின் அசைவுகள்
வெயிலின் தோற்றப்பிழையல்ல
நிழலின் உதிர்வில் உதித்தெழுபவை
தடயங்களையோ.. சுவடுகளையோ
நிரந்தரமாக நினைவுகளில்
வரலாறாய் விட்டுச் செல்பவை
அப்போது ஏற்படும் வெற்றிடம்
கனவின் அதிர்வுகளை
காலவெளிகளில் உற்பவித்துக் கொண்டேயிருக்கும்.