‘ விண் பறவை’
********************
திரு திருவென
முழிக்கின்றன விண்மீன்கள்!
நீந்தவும் தெரியாமல்
பறக்கவும் தெரியாமல்
ஒரே இடத்தில்
ஒய்யார ஒளியில்
ஜொலித்துக் கொண்டு!
எத்தனை பேர்…
வெளிறிக்கிடக்கும்
விரிந்த வானத்தை
விழிகளுக்கு விருந்து
படைத்திருக்கிறோம்?
ஆகாயத்தை
எப்போது நோக்கின
மனிதக் கண்கள்?
வானம் பார்ப்பதாக….
மழையையும், விடியலையும்
தேடியே…..
பார்த்ததுதான்
மனிதனின்
சுயநல நோக்கு!
மனிதரின்
கண்களெல்லாம்
மினுக் மினுக்கெனத்
தெரியுமோ?
வானத்துக் கண்களுக்கு!
இந்த பூமியின் புரட்டுகளை
இலட்சோப லட்சம்
கண்களென…..
நட்சத்திரங்களைக் கொண்டு
கண்காணிக்கின்றதோ வானம்!
நீந்துவதுதான்
மீனின் பாஷை;
நீந்தத் தெரியாத
நட்சத்திரங்களை….
மீனென … விண்மீனென
அழைப்பதிலிருந்தே
இந்த மனிதன்
எவ்வளவு விவரம் புரியாதவனென
நினைக்கத் தோன்றுகிறது!
பறவைகள்
சுயநலமற்றவையென்பது
அவற்றின் வாழ்க்கை
உணர்த்தும் பாடம்;
மனிதருக்கும், மற்றவைக்கும்!
இப்படி…. அப்படிப்
பறக்க வேண்டுமென
நட்சத்திரங்களுக்குப்
பரம்பரை பரம்பரையாக
கற்றுக்கொடுக்கத்தான்
மேலே பறக்கின்றன பறவைகள்!
ஒரு நட்சத்திரமும்
பறத்தலைக் கற்றுக்கொண்டதாகத்
தெரியவில்லை!
பறவைகளும் விடுவதாக இல்லை;
போதித்தல் என்பது
தொடர் நிகழ்வு என்பதை
பறவைகள் சொல்லிக்கொடுத்துக்
கொண்டேதான் இருக்கின்றன!
எப்படி இருக்கும் என
நினைத்துப் பார்க்கின்றேன்;
நட்சத்திரங்கள்
பறந்து வந்தால்
இந்த….
இருண்ட பரந்த வானத்தின்
வனப்பை!
தூண்டில்
**********
உயிர் துறக்க
உசுப்பேற்றி, ஆசைகாட்டி
சுவையூட்டும்…..
தூக்குமரமே தூண்டில்!
எத்தனை எத்தனையோ
உயிர்களை வதைத்து…
மீண்டும் மீண்டும்
அதே அவதாரம்!
மடிந்த உயிர்களின்
கவுச்சியும்,
சிக்கித் தப்பியதுகளின்
சதை நாற்றமும்
ஆழமான தண்ணீரில்
வீசினாலும்,
எப்படிக் கழுவப்படும்?
இறந்துபோன உயிரின் நாற்றம்
அந்தத் தூண்டிலில்!
அறிவற்ற மீன்கள்,
பரம்பரை பரம்பரையாக
தூண்டிலில் தொங்கும்
எச்சில் சில்லுகளுக்கு
ஆசைப்பட்டு……
மடியும் சோகம்!
அடிபட்டு, விடுபட்ட
அறிவற்ற மீன்கள்
தம் அனுபவத்தை
பகிர்ந்து…..
தம் இனம் காக்க
அறிவு பெற்றால்;
தூண்டில்கள் இந்நேரம்
தொலைந்தே போயிருக்கும்!
ஆசை
யாரை விட்டது;
அடிபட்ட மீனும்
ஆசைக்கு ஆட்படுவது
இயற்கையன்று;
அறியாமை!
ஆசையென்பது
அறியாமையின் வெளிப்பாடே!
-பாங்கைத் தமிழன்