மரகதப்புறா சிறுகதை – தங்கேஸ்
தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக அமர்ந்திருந்தன. தலையுச்சியில் முளைத்திருந்த அழகு கருங்கொண்டையை அவைகள் இடமும் வலமும் ஆட்டியபடியே அபிநயிக்கும் போது கண்களுக்கு மிகச் செல்லங்களாக மாறி காட்சி தந்தன. உச்சிக் கருங் கொண்டையைப் பார்த்தால் பிளவுபட்ட அலகு போல் விரிந்திருக்கும்..
சாதாரணமாகப் பார்த்தால் குருவி வாயைத் திறந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரியும். சற்று கூர்ந்து கவனித்தால் தான் அது அலகு அல்ல அதன் ஸ்பெசல் கொண்டை என்று கண்டுபிடிக்க முடியும். கழுத்துக்கும் கீழே பக்கவாட்டில் புசுபுசுவென்று வளர்ந்திருக்கும் தாடைமுடிகளுக்கருகில் காதோரம் ஒரு முழு ரூபாய் நாணயத்தை மதுரை மீனாட்சி குங்குமத்தில் குழைத்து பொட்டிட்டது போல அப்பியிருக்கும் அடர் குங்குமச் சிவப்பு. அதற்கு பவளத் தோடு மாட்டி விட்டது போல அப்படி பாந்தமாக பொருந்திப்போனது. நாளெல்லாம் குழந்தையை வேடிக்கை பார்ப்பதைப்போல இந்தக் குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாமே என்று தோன்றிய போது பள்ளியின் முதல் மணி ஒலித்தது.
யோவான் எப்பொழுதும் காலை மணியடிக்கும் நேரத்தைத் தவற விடமாட்டார் என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரியும் . முதலில் மாணவிகள் ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்தனர். சீருடை அணிந்து அதற்கும் மேலே வெம்மையுடை தரித்து தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கொண்டு மெல்லிய குரலில் காட்டுக் கிளிகளைப் போலபேசியபடியே உள்ளே வந்து கொண்டிருந்தது இந்த மேகமலையின் காலை நேரத்தை. மேலும் இனிமையாக்கியது.
மாணவர்கள் வழக்கம் போல செந்தில் கடையின் வாசலிருந்து முதலில் தலையை வெளியே எட்டிப்பார்த்து வாசலில் ஆசிரியர்கள் யாரும் இல்லையென்று உறுதி செய்த பின்னர் ஒவ்வொருவராக நத்தை ஊர்வது போல உள்ளே ஊர்ந்து வரத் தொடங்கினர்கள்.
சசிக்கு முன்பும் பின்பும் இரண்டு மாணவர்கள் தோளோடு உரசிய வண்ணம் வந்து கொண்டிருந்தனர்.. அவனின் சொற்ப புத்தகங்களும் நோட்டுக்களும் நிறைந்த அழுக்கடைந்த புத்தகப் பையை வரும் போதே அவன் கவுதம் தோளில் மாட்டிவிட்டு ஹாயாக கைகளை வீசியபடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
சட்டென்று நான் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தன் உள்ளுணர்வில் கவனித்தவன் பதட்டப்படாமல் வண்ண வண்ணக் கயிறுகள் கட்டியிருந்த தனது வலது முழங்கையை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டான். காதில் மாட்டியிருந்த தோடு மட்டும் தனியாக ஆடிக்கொண்டிருந்தது.
‘ டேய் ஹெச் எம் நிக்கிறாருடா ‘
‘’குட் மார்னிங் சார் ‘’
‘’ குட் மார்னிங் ‘’ என்றபடி தலையசைத்தேன்
வேகமாக நடந்து சென்றவன் வகுப்பறைக்குள் நுழையும் போதே தன் சேட்டையை ஆரம்பித்து விட்டான். வாசலில் நின்று கொண்டிருந்த ஆறாம் வகுப்பு மாணவி ரேஷ்மாவின் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு அவசரமாக உள்ளே சென்றான்
அச் சிறு பெண் ‘’ அம்மா ‘ என்று அலறினாள்
பி.டி சார் திரும்பி, ‘’ என்னம்மா ? ‘ என்று கேட்டார் .
அவள் சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தாள். ம்ஹ்ம் … அவன் ஆள் அங்கே இருந்தால் தானே ?
‘’ இது அந்தப்பயலோட வேலையாத்தான் இருக்கும் ‘’ என்றபடியே பிசிக்ஸ் சார் என் அருகில் வந்து நின்றார். அவர் தான் பள்ளியின் உதவி தலைமையாசிரியர்.
‘’ சார் இது பரவாயில்லை நேத்து லஞ்ச் இண்டர்வெல்ல வகுப்புக்குள்ள என்ன பண்ணான் தெரியுமா ?
‘’ சொல்லுங்க சார் ‘’என்றேன்
லெவன்த் சி மஹிதாவை அப்படியே காதைப் பிடிச்சு முயல்குட்டியை இழுத்துட்டுப்போற மாதிரி உள்ளே இழுத்துட்டுப் போறான் ‘’
‘’ ஏன் அப்பவே முதுகுல ரெண்டு போடு போடவேண்டியதுதான ‘’ என்றபடி பி.டி சார் எங்கள் அருகில் வந்து நின்றார்.
‘’ பி டி சார்! விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு. இன்னும் தூக்க கலக்கத்துல பேசுறமாதிரியே பேசிக்கிட்டிருக்க கூடாது. போன மாசம் இந்த விவகாரத்துல என்ன நடந்தது தெரியும்ல உங்களுக்கு ? என்றபடியே எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார் அழகு சார். கணித ஆசிரியர்.
‘’ சரி கதையைச் சொல்லுங்க ‘’
“கரப்பான் பூச்சி கணக்கா தலைமுடிய வெட்டிக்கிட்டு கை கால் எல்லாம் கலர் கலர் கயிறா கட்டிக்கிட்டு இவன் ஒரு நாள் காலையில வந்து நிக்கிறான்”
“ சரி “
“ஆனா அன்னிக்கு திடீர்னு பிசிக்ஸ் சார்க்கு என்னாச்சுன்னு தெரியலை. கடமையுணர்ச்சியில அவனக் கூப்பிட்டு முதுகுல ரெண்டு தட்டு தட்டிட்டாரு. பெறகு தான் மேட்டரே” என்றார் .
“பெறகு ?”
‘’ மறு நாள் காலையில நாங்க பள்ளிக்கூடத்துக்கு வாறோம். எங்களை மிரட்டுறதுக்கு ரவுடியை கூப்பிட்டுகிட்டு வந்துட்டு வாசல்ல நிக்கிறான் சார்.
” ம்ம் ‘’
‘ அதுவும் யாரைன்னு நெனக்கிறீங்க ? மேல மெட்டுலயிருந்து மேற்படி சாராய வியாபாரியை ‘’
‘’ அய்யய்யோ, இது எனக்குத் தெரியாதே ‘’ என்றார் பி.டி சார் பதறிப்போய்.
‘’ அன்னிக்கு பெரிய கூத்து போங்க! நாம அவனைப் பள்ளிக் கூடத்துக்குள்ள நுழையாதடான்னா சொன்னா அவன் நம்மள உள்ள நுழைய விடாம நின்னுகிட்டுருக்கான்‘’
“அய்யய்யோ”
‘’ என்னடா இது குரங்கெல்லாம் நம்ம பள்ளிக்கூடத்துப் பக்கம் கெடையாதே, எல்லாம் கர்ட்டனா எஸ்டேட்டுக்கு கீழ தான இருக்குன்னு நான் நெனெச்சேன்”
‘’அதுக்குப் பெறகு ‘’
‘’ பெறகென்னஅந்த ரவுடி நம்ம சாருக்கு அட்வைஸ் மழையாப் பொழியுறான்‘’
“எப்பிடி ?”
“ பய போலிசுக்குப் போகணும்னு சொன்னான் சார் நாந்தேன், வாடா சார்க எல்லாம் நம்ம சார்க தான் சொன்னா கேட்டுக்கிருவாங்கன்னு சொல்லி கில்லி இங்க கூப்பிட்டு வந்திருக்கேன், பார்த்து நடந்துக்கோங்கன்னு சொல்லிட்டுப் போறான்‘’
‘’ லச்சையை கெடுத்துட்டான் போல இருக்கே ’’
‘’ சார் இப்பிடித்தான் போனவாரம் எங்க பார்த்தாலும் பீடி வாடை அடிக்குதேன்னு திடீர்ன்னு பசங்களோட ஸ்கூல் பேக்கை செக் பண்ணோம் அப்ப இவன் பேக்குக்குள்ள என்ன இருந்ததுன்னு பிசிக்ஸ் சாரை கேளுங்க ‘’
பிசிக்ஸ் சார் தொடர்ந்தார்: ‘’ ம் என்ன இருக்கும் ? பீடி சிகரெட்டு தீப்பெட்டி … என்னடா இதுன்னு கேட்டோம் . சார் காலையில எங்கப்பா வாங்கிட்டு வரச் சொன்னாரு, மறந்து போயி அப்படியே பைக்குள்ள வச்சுட்டு வந்துட்டேன்னு சொல்றான். ‘’
‘’கர்மம் நல்ல அப்பன், நல்ல மகன் சார் ‘’
‘’ சார் இவனப் பொறுத்தவரைக்கும் அவுங்க அப்பா பீடி சிகரெட்டு வாங்கிட்டு வரச் சொல்லலைன்னாக் கூட இவன் வாங்கிட்டுத்தான் வருவான். இண்டர்வெல்ல லஞ்ச் டைம்லயெல்லாம் அத அப்படியே எடுத்துக்கிட்டு நைஸா தேயிலை காட்டுக்குள்ள ஒதுங்கிடுவான் ‘’
‘’ அது கூட பரவாயில்லை. வேற என்னென்ன பேக்குக்குளள்ள இருந்துச்சுன்னு கேளுங்க ‘’
‘’சொல்லுங்க சார் சொன்னாத்தான எங்களுக்குத் தெரியும். நீங்களா சிரிச்சா எப்பிடி? ‘’
‘’ ரெண்டு மெக்டோவல் பாட்டிலுக …ம்ம் பதறாதீங்க எம்ப்டி பாட்டிலுங்க தான். என்னடான்னு கேட்டோம் சார். வாட்டர் கேன் வாங்க காசில்லை. கஷ்டம் அதனால தான் இதுலயே தண்ணீர் கொண்டு வாரேன்னு, முகத்தை அப்பாவி மாதிரி வச்சிக்கிட்டு சொல்றான் ‘’
“அவ்வளவு தானா.. இல்ல வேற எதுவும் உள்ள இருந்ததா?”
“இல்லாம என்ன, சில குடும்ப கட்டுப்பாட்டு சாதனங்களை பைக்குள்ளயே தனியா ஒரு கேட்ரிஜ்ல போட்டு வெச்சிருந்தான். அது தான் ஹைலைட். சார் பயந்து போய் நடுங்கிட்டாரு.”
“ஏன் சார் பார்த்துட்டு நீங்க ஒண்ணுமே கேட்கலையா?”
“எனக்கெதுக்கு அது ?”
“சார் ! அவன் அத ஏன் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்தான்னு நீங்க எதுவுமே கேட்கலையா?”
“கேட்டேன் சார், அதுக்கு என்ன பதில் சொன்னான் தெரியுமா ?”
“சொல்லுங்க…”
“ஸ்கூலுக்கு வர்ற வழியில மரத்தடியில அது ஓரு பாக்கெட் மாதிரி கிடந்தது சார்… அது என்னன்னு தெரியாமலேயே எடுத்திட்டு வந்திட்டேன்னு அப்பாவி மாதிரி சொல்றான்..”
முதல் பாட வேளைக்கான மணி ஒலித்தது. அனைவரும் கலைந்து போக ஆரம்பித்தனர்
மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் ஓடினார்கள்.
யோவான் மாணவர்களின் வருகைப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று கொண்டிருந்தார்.
காலை வெய்யில் தூவானம் ஏரியில் பச்சைப் பட்டுத்துகிலை உதறி விரித்தது போல படர்ந்து பரந்து கொண்டிருந்தது. தூரத்தில் காலை சூரிய வெளிச்சத்தில் இரைச்சல் பாறைக்கருகில் வெள்ளி அலைகள் கெண்டை மீன்களைப் போலத் துள்ளி விளையாடி கொண்டிருந்தன. கம்பன் சொன்ன “அலகிலா விளையாட்டு ”இது தான் போலும்.
சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவராக சாலைக்கு வர ஆரம்பித்திருந்தனர். தடுப்புக்கம்பிகளின் மீது சாய்ந்து கொண்டு விதம் விதமாக சாயல்களில் புகைப்படங்களை மொபைல் போனில் அள்ளிக் கொண்டிருந்தனர்.
தூவானம் போகிற புதர் மேட்டில் ஓரு யானை குடும்பம், தம்பதி சம்மேதரராய் இரண்டு குட்டிகளுடன் ஈத்தை குருத்தை ஒடித்து ஒடித்து தின்று கொண்டிருப்பதை இங்கிருந்தே மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை விரட்டுகிற பாவனையில் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவர்களின் அருகில் சென்று தாங்களும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
சிரிப்பும் பேச்சும் கேலியும் கிண்டலும் வேடிக்கை பார்ப்பதுமாக காலை பாடவேளைகள் கரைந்து போயின சுற்றுலாப் பயணிகள் கேமரா செல்போன் சகிதமாக அங்கே குவிந்து விட்டார்கள். மதிய உணவு இடைவேளையில் அநேகமாக எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் சென்று யானையோடு செல்பி எடுத்துவிட்டு வந்துவிட்டார்கள்.
மதியம் இரண்டாவது பாடவேளை முடிந்ததும் லெவன்த் சி க்கு உடற்கல்வி பாடவேளை .மாணவர்கள் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்து விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து விட்டார்கள்.
கையில் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒவ்வொரு விளையாட்டாக விளையாட ஆரம்பித்து விட்டனர். கைப்பந்து ஒரு குழுவும் எறிபந்து மற்றொருகுழுவும் உற்சாகமாக விளையாண்டு கொண்டிருக்க இன்னொரு குழுவோ காய்ந்த தேங்காய் மட்டையில் ரப்பர் பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சசிதான் அதற்கு கேப்டன் போல வழி நடத்திக் கொண்டிருந்தான். நேரெதிரே கொடிக்கம்பத்திற்கு அருகே உள்ள மேடையில் மாணவிகள் கேரம்போர்டை வைத்து மென்மையாக பேசியபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அடுத்ததாக பந்து மாணவிகள் பக்கத்தில் தான் வந்து விழும் என்று நான் நினைத்து முடிப்பதற்குள் பந்து வந்து கேரம்போர்டின் நடுமையத்தில் திடுமென்று குதித்தது. கேரம் போர்டில் இருந்த காயின்ஸ் எல்லாம் சிட்டுக்குருவிகளாகக் காற்றில் பறக்க , சற்று முன் கொட்டி வைத்திருந்த கேரம் பவுடர் மாணவிகள் முகத்தில் வந்து மொத்தமாக அப்பிக் கொண்டது.
அவர்கள் தங்கள் முகத்தை துடைத்துக் கொண்டே “” இங்க பாருங்க சார்”” என்று என்னைப் பார்க்க , நான் சசியை அழைத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பதற்கும் முன்பே, லெவன்த் சி மருது பாண்டி நைசாக என் அருகில் வந்து என் முழங்கையை சுரண்டிக் கொண்டு நின்றான்.
“என்னடா?” என்றேன்
“சார் சசி ஸ்கூல் பேக்ல இருந்து குருவி சத்தம் கேட்குது என்றான் ”
“என்னடா சொல்ற ?”
“ஆமா சார் காலையில இருந்தே கேட்டுக்கிட்டே தான் இருக்கு என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறான் சார்” .
மருது சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ஏனென்றால் அவன் ஆசிரியர்களுக்கு நம்பகமான ஆள். மாணவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவனைப் போன்ற ஆட்களைத் தான் நாங்கள் கைக்குள் வைத்துக் கொள்வோம்.
அதற்குள் பி.டி சார் அருகில் வந்து “அவன் பேக்கை எடுத்துட்டு வாடா! உள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்” என்றார்.
சத்தமில்லாமல் அவன் பேக்கை எடுத்துக் கொண்டு வந்து தந்தான் மருது.
அதற்குள் பெண் ஆசிரியைகள் இரண்டு மூன்று பேர்கள் அங்கே வந்து சேர்ந்து கொண்டார்கள் .
“ எடுறா அதை வெளியே ” என்றார்
மருது பைக்குள் கையை விட்டு இழுக்க அந்த பச்சை உயிரி அவன் கையோடு வந்தது.
மரகத வண்ணச் சிறகுகள். செஞ்சாந்து கழுத்து. அதில் கோதுமை மாவை துவி விட்டது போல ஒரு ஆங்காங்கே ஒரு மினு மினுப்பு. அடியில் சிவந்து நுனியில் வெளுத்து சற்று மஞ்சள் பூசிய மிளகாய்ப்பழ அலகு.குறு குறுவென்று பார்க்கும் நீலமணிக்கண்கள்,
“ அழகு” என்றார்கள் யாரோ
மரகதச் சிறகுகளுக்கும் கீழே சிப்பிக் காளான் நிறத்தில் அடுக்கடுக்கான கீழடுக்கு சிறகுகள். அதே வண்ணத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் நீண்ட வால். கழுத்துக்கும் கீழே ஊதாப்பூவின் மீது இலேசாக செந்துருக்கம் பூசியது போல மினு மினுக்கும் தாடை . செல்லமாகக் குலுங்கும் தொப்பை வயிறு .
“வாடா குட்டி” என்று பார்த்தவுடன் முகத்தோடு எடுத்து ஒத்திக் கொண்டார்கள் பயாலஜி டீச்சர் .
“ குட்டி… குட்டிச் செல்லம் பயந்துட்டியாடா”என்று இறகை தடவிக் கொடுத்தார்கள். குளிரில் நடுங்கும் அப்பாவி சிசுவைப் போல அது அவர்களின் மார்போடு கதகதப்பாக ஒட்டிக் கொண்டது.
“இங்க குடுங்க டீச்சர் ” என்று பி.டி சார் அதை வாங்கி உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டார்.
“நல்ல வெயிட் இருக்குது” என்றார்
“ ரொம்ப குட்டியா இருக்கே ”
“இது தான் மரகதப் புறாவா ?”
“ சார் இதப் பஞ்சவர்ணக்கிளின்னும் இங்க சொல்லுவாங்க”
“அப்படியா ?”
எகனாமிக்ஸ் டீச்சர் அதன் சிறகுகளை தடவி விட்டுக் கொண்டே, “இதுதான் எமரால்டு டோவ், இது இணையைப் பிரிஞ்சா உயிர் வாழாதுன்னு சொல்வாங்க” என்றார்.
பயாலஜி டீச்சர் “ ஆமாப்பா இதோட பயலாஜிக்கல் பேர்கூட கால்கோபாப்ஸ் இண்டிகான்னு சொல்லுவாங்க ” என்றார்
அது சாரின் உள்ளங்கைகளில் பயந்து போய் நடுங்கிக் கொண்டேயிருந்தது பார்ப்பதற்கு அழுவது போல இருந்தது
“ அழுகுது சார் ”
“ காட்டுக்குள்ள திரியுறத இப்படி பைக்குள்ள போட்டு பூட்டி வச்சா, அழுகாம என்னடா செய்யும். ஃபாரஸ்ட்காரங்க பார்த்தாங்கன்னா பதினஞ்சு வருசம் உள்ள புடிச்சுப் போட்ருவாங்க ”
“சார் இத வித்தா நல்லா காசு கிடைக்கும்”
“இப்ப என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம். கூப்பிடுறா இதை புடிச்சிட்டு வந்தவனை” என்றார் பி.டி சார்.
துரத்தில் வரும் போதே சசிக்கு விசயம் தெரிந்து விட்டது.
முகத்தை ஒரு மாதிரி அப்பாவியாக வைத்துக் கொண்டு தயங்கி தயங்கி பக்கத்தில் வந்து நின்றான்.
“எங்கடா புடிச்ச இத ?”
“சார் வரும் போது தேயிலைக்காட்டுக்குள்ள நொண்டிகிட்டு கிடந்தது அதுதான் மருந்து போடலாம்னு எடுத்துட்டு வந்தேன்” என்றான்
அப்புறம் ஏண்டா எங்ககிட்ட சொல்லலை ?
“சார் பர்ஸ்ட் பீரியட் ஆரம்பிச்சது. அப்படியே படிக்கிற ஆர்வத்துல எல்லாம் மறந்துட்டேன் ”
“ ஓஹோ அப்பிடியா சார் நான் சொல்லலை பய நல்ல படிப்பாளின்னு”
“சரி ,இதை என்ன செய்யப்போற ?”
“சார், வளர்ப்பேன் சார்”
“சரி, எவ்வளவுக்கு விப்ப ?” என்றார் மிகவும் எதேச்சையாக கேட்பது போல.
“மரகதப்புறாவுக்கு நல்ல விலை கிடைக்கும் சார் ” வாய் தவறி சொல்லி விட்டு நாக்கை கடித்துக்கொண்டான்
“பாவம் இல்லையாடா ?” மூக்குக் கண்ணாடியை எடுத்து துடைத்தபடியே கேட்டார்கள் எகனாமிக்ஸ் டீச்சர்
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டிருந்த போதே நான் மரகதப்புறாவை கையில் வாங்கிக் கொண்டேன். கொக்கிக் ல்கள் அழுத்தமாக என் உள்ளங்கைகளில் பதிந்து குறு குறுப்பை உண்டு பண்ணின. எதிர்பார்த்ததை விட நல்ல எடையோடு இருந்தது பறவை . ஒரு முறை என் உள்ளங்கைகளைத் தன் அலகுகளால் நிமிண்டிப்பார்த்துவிட்டு கழுத்தை சுழற்றி சுழற்றி பிறாக்கு பார்த்துக் கொண்டு நின்றது.
ஆறாம் வகுப்பு ரேஷ்மா அங்கே அனிச்சையாக வந்து “ அய்யோ பாவம், குட்டி, விட்றலாம் ” என்று சிறகைத் தடவியபடி சொன்னாள்.
“ இதோட மூக்கில சின்ன காயம் இருக்குது சார் ”என்றான் ஜாபர்
உற்றுப் பார்த்தபோது அதன் மூக்கில் ஒரு சிறிய சிவப்புத் தீற்றல் தெரிந்தது.
திருவிழாவில் தொலைந்து போன பச்சைக்குழந்தை மாதிரி கண்ணீரும் கம்பலையுமாக மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றது எல்லோர் மனதையும் கரைத்தது. எல்லோரும் வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
“ இந்தாடா” என்றபடி அந்தக் கிளிப்பச்சையை நான் அவன் கையில் கொடுத்தேன்.
அதை எதிர்பார்க்கவேயில்லை அவன் . வாங்கும் போது அவன் கைகள் இலேசாக நடுங்கினதை உணர்ந்தேன். அவன் கைகளுக்குள் சென்றதும் அது இலகுவாகத் தன்னை அங்கே அமர்த்திக் கொண்டது. சிறிது நேர அமைதி தாங்கொண்ணாததாக இருந்தது.
“வாங்க எல்லோரும் போகலாம் அவன் அதை என்ன செய்யனுமோ செஞ்சிகிறட்டும்” என்றேன் நான்.
நாங்கள் எல்லோரும் கிளம்ப ஆயத்தமானபோதும் அவன் எதுவுமே பேசாமல் அந்தப் பறவையை கைகளில் வைத்து பார்த்தபடியே இருந்தான். நாங்கள் ஒரு எட்டு கூட வைத்திருக்கவில்லை. அதற்குள் என்ன நினைத்தானோ மெல்லப் படிக்கட்டுகளின் வழியாக இறங்கி விளையாட்டு மைதானத்திற்குள் சென்றான்.
பச்சை பசும் புற்கள் செழித்து வளர்ந்திருந்த அந்த மைதானமெங்கும் பச்சை மௌனம் பரவிக்கிடந்தது. எதிர்பாராத ஒரு கணத்தில் வலது கையை மேலே உயர்த்தி கீழே இறக்கி அதை வேகமாக தலைக்கு மேலாக உயர்த்தினான். அந்தப்பறவைக்கு முதலில் இந்த திடீர் சீர்குலைவைப் புரிந்து கொள்ள முடியவில்லை . பதட்டத்தில் தன் பிடிமானத்திற்காக அவனது உள்ளங்கைகளை தன் கொக்கிக் கால்களால் நன்றாக அழுத்தியபடியே விழுந்து விடாமல் இருக்க படபடவென்று அவன் உள்ளங்கைக்குள்ளேயே சிறகடித்தபடியே இருந்தது.
இப்போது மாணவர்கள் அவர்களை அறியாமலேயே ஹோவென்று பெருங்குரலெடுத்து கூச்சலிட்டபடி கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவன் இரண்டாவது முறையும் அது போலவே செய்த போது காற்றில் தத்தித் தத்தி சிறகடிக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் கூட பறந்திருக்காது .அதற்குள் காம்பவுண்ட் சுவருக்கருகில் நின்ற சிறிய கொய்யா மரத்தடியின் மடியில் பொத்தென்று விழுந்தது. மாணவர்கள் மறுபடியும் ஹோவென்று பெருங்குரல் எழுப்பினார்கள். அதற்குள் அது எழுந்து மெல்லச் சிறகடித்து சற்று தொய்வாகப் பறந்து பின்னர் சட்டென்று விரைவாகி சவுக்கு மரங்களின் ஊடாகப் பறந்து பறந்து ஒரு பச்சைப்புள்ளியாக தூவானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
சசி எதுவுமே பேசாமல் வெறும் உள்ளங்கையை ஏந்திய நிலையிலேயே அப்படியே அசைவற்று நின்று கொண்டிருந்தான். மாலை நேரப் பொன் மஞ்சள் புற்களின் மீது பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது.. ஒரு கணம் அவன் நெற்றியிலும் அந்த இளம் பச்சை வெய்யில் படர்ந்து போனது.