இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்
இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே
எஸ் வி வேணுகோபாலன்
பாடலாசிரியர் காமகோடியன் அவர்களுக்கான இரங்கல் குறிப்புகளோடு வெளியான கடந்த வாரக் கட்டுரை அதிகமானான வாசகர்களைச் சென்றடைந்தது. கட்டுரைகளைச் சேர்த்து வைத்துத் தான் வாசிக்கிறேன் என்று சொல்லும் சில அன்பர்கள் கூட அந்தக் கட்டுரையை உடனே வாசித்து விட்டு மறுமொழி அனுப்பி இருந்தனர். கவிஞருக்கான உளமார்ந்த இரங்கல் அது.
கட்டுரையை காமகோடியன் அவர்களது வாட்ஸ் அப் எண்ணுக்கும் அன்றே அனுப்பி இருந்தேன், குடும்பத்தில் யாரேனும் பார்க்கக் கூடும் என்ற நம்பிக்கையோடு! அண்மையில் அந்த எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்தது – மறைந்த கவிஞரது பதினாறாம் நாள் நினைவு நிகழ்வு விவரம். அவருக்கு நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் வரிசையில் அனுப்பி இருந்தனர் என்கிற விதத்தில் ஆறுதல் அடைய முடிந்தது.
நினைவுகளால் நகர்கிறது வாழ்க்கை என்பதுபோல் சில நேரம் தோன்றுவதுண்டு. படைப்பாளியின் வாழ்நாள் கடந்து அவரது நினைவைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் எழுத்து, இசை, கலை மூலம் அவர்கள் நிலை பெற்று விடுகின்றனர்.
அண்மையில் கதக் நாட்டியக் கலையின் மகத்தான ஆசான், கலைஞர் பிர்ஜு மகராஜ் மறைந்தார். அவரது வயது 83. அவரைப் பற்றிய கட்டுரை ஒன்று இப்படி தொடங்குகிறது:
சில ஆண்டுகளுக்குமுன், ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்றிருக்க, அவரை வரவேற்றுப் பூங்கொத்து கொடுக்க பள்ளிக்கூடச் சிறுவர்களை விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அவர் உள்ளே நுழைகையில் அவர்கள் ஆர்வத்தோடு அதை அவர் கைகளில் அளிக்கின்றனர்.
அந்தக் குழந்தைகளை ஆசையோடு பார்த்த மகராஜ், ‘கதக் என்றால் என்ன என்று அறிவாயா?’ என்று கேட்டிருக்கிறார், அதற்கு அவரை இன்னார் என்றே அறியாத ஒரு சிறுமி,”பண்டிட் பிர்ஜு மகராஜ் ஆடும் நாட்டியம் அது’ என்று விடையிறுத்திருக்கிறாள். சிரித்துக் கொண்டே பிர்ஜு சொன்னாராம்,’அவன் நாட்டியத்தை ஆடுவது இல்லை, நாட்டியத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறான்’ என்று!
நாட்டியம் வாழ்கிற வரை வாழ்கிறவரை நாம் எப்படி மறைந்தார் என்று எழுதி வைக்க!
https://www.thehindu.com/entertainment/dance/birju-maharaj-ruled-the-realm-of-kathak/article38298321.ece/amp/
விஸ்வரூபம் படத்தில் சங்கர மகாதேவன் – கமல் குரல்களில் உள்ளத்தைத் தொடும் ‘உன்னைக் காணாது நான்’ பாடலுக்கான நாட்டிய அடவுகள் பிர்ஜு மகராஜ் அவர்களிடம் கற்றார் கமல். அதன் படமாக்கக் காணொளிப் பதிவில் மகராஜ் கண்ணசைவு, உடல் மொழியின் நேர்த்தி இவற்றைப் பார்க்க முடியும்.
பிர்ஜு மகராஜ், ஓர் அருமையான இசைப் பாடகரும் கூட, சத்யஜித் ரே அவர்களது திரைப்படத்தில் இரண்டு நாட்டியக் காட்சிகளுக்கு இசையமைத்து, அவரே பாடி இருக்கிறார், அது மட்டுமல்ல, மிகச் சிறந்த தபலா இசைக்கலைஞர் அவர் என்பன போன்ற அரிய செய்திகளும் அண்மையில் வாசிக்கக் கிடைத்தன. தமது 13ம் வயதில் அவர், நாட்டியம் கற்பிக்கத் தொடங்கி விட்டாராம், பதின்மூன்று வயதில் ஆசிரியர், அதாவது எழுபதாண்டுகள் குருவாக வாழ்ந்தவர், நாட்டியத்தை வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்!
ஒரு சிற்பியின் உறக்கத்திலும் உளி சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கலாம், ஓர் ஓவியரின் மனத்திரையில் ஈரம் காயாத சித்திரம் ஒன்று எப்போதும் மின்னியபடி இருக்கக் கூடும். கவிஞர் தமக்குள் எங்கோ அமிழ்ந்து இருக்கும் சொற்களை உரிய இடத்தில் கைபட்டு எடுக்கும் போது கவிதை ஒளிர்வது நிகழலாம். இசையும் நாட்டியமும் உயிர்ப்பாக உள்ளத்தில், உடலில் கலந்து அதுவேயாக இந்தக் கலைஞர்கள் தங்களை உணரும் ஒரு கட்டத்தில் உன்னதமான இன்பம் மேலும் விளையத் தொடங்குகிறது. மகத்தான அஞ்சலி செலுத்துகிறோம் எளிமையாகவே வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கதக் ஆசானுக்கு!
இசை வாழ்க்கை 47வது கட்டுரையில், பின்னர் விரிவாகப் பேச வேண்டும் என்று ஒத்தி வைத்திருந்த பாடல் இப்போது கண் முன் வந்து நிற்கிறது. நாட்டிய இசை, இசையின் நாட்டத்தில் கவிதை, பாடலுக்கான ஆட்டத்தில் கதை என்று விரியும் ஓர் அற்புதமான திரை இசைப்பாடல் அது. வாணி ஜெயராம் அவர்களது தனித்துவமிக்க குரலினிமையும், உருக்கமான பாவங்களும், பன்முகத் திறனும் அசாத்திய முறையில் வெளிப்பட்ட ஓர் அரிய வகைப்பாடல்.
புன்னகை மன்னன் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வித ரசனையில் திளைக்க வைப்பவை. ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடலை இரவு நேரங்களில் கேட்கும் போது அதன் உணர்வலைகள் ரசிகரை வேறெங்கோ கொண்டு சேர்க்கும். ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’ இன்னொரு முத்து. பாடல்கள் எல்லாமே கவிஞர் வைரமுத்து.
‘கவிதை கேளுங்கள்’ பாடல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இயங்குவது. தாளக் கருவிகளும், தந்திக் கருவிகளும் அசுர கதியில் இயங்கவும், கேட்போர் உள்ளங்களையும் அதே வேகத்தில் செலுத்தவுமாக நிகழும் பரவசமிக்க ரீங்காரம் பாடல் நிறைவு பெற்று வெகு நேரம் எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கும் உணர்வுகளை விட்டுச் செல்கிறது.
பல்லவி தொடங்கும் கணத்திலேயே ஒரு தீக்குச்சி கிழிப்பது போல் பற்றவைக்கும் நெருப்பின் சுடரை மெல்ல மெல்ல வளர்த்து, அலை மோதவிட்டு, மேலும் கொழுந்துவிட்டு எரியவைத்துப் பெருஞ்சுவாலை போல் விண்ணோக்கி உயரச் செய்து நிறைவு செய்கிறார் வாணி ஜெயராம். அந்த நெருப்பை ஊதிவிடவும், அடுத்தடுத்த படிநிலைக்கு அதன் வெளிச்சம் பரவ வைக்கவுமாக பி ஜெயசந்திரன் உரிய இடங்களில் ஹம்மிங் செய்யவும், நடனத்திற்கான பதங்கள் சொல்லவுமாக இணைவது இருவேறு தன்மையுடைய குரல்களின் சங்கமமாகப் பாடலை மேலும் ஒளிரச் செய்கிறது.
நவீன நாட்டிய ஸ்டெப்களின் தாளத்தைத் தொடர்ந்து வயலின்கள், மிருதங்கத்தின் சிற்றுரை, வேகமான தாளக்கட்டு, இசைக்கருவிகள் வாசிப்பைத் தொடர்ந்து பல்லவியை எடுத்துக் கொள்ளும் வாணி ஜெயராம், மிக வேகமாகக் கடந்து செல்லும் அதே வேளையில் சொற்கள் அத்தனை தெளிவாகத் தெறிப்பது முக்கியமானது.
பல்லவி முடியும் இடத்தில் அழகான ஹம்மிங்கோடு இணைகிறார் ஜெயசந்திரன். பின்னர், கதக் நாட்டியத்திற்கான திசையில் பாடலை அவர் நகர்த்த, அந்த ரம்மியமான தாள கதியில், ‘நேற்று என் பாட்டில் …’ என்று சரணத்தை அபாரமாக எடுக்கிறார் வாணி. அதன் அசாத்திய சுழற்சிக்கு ஏற்ப உருள்கின்றன சொற்கள்.
அதன் முடிவில் பல்லவிக்கு சமாதானமான மனம் போலும் இறங்கும் குரலை, மீண்டும் ஜெயசந்திரனின் நுழைவு, பரத நாட்டிய முத்திரைகளுக்கான பதங்களை எடுத்துவைக்க, அந்த ஆட்டத்திற்கான அடுக்குகளில் பறக்கின்றன சொற்கள். அதன் வெளிச்சத்திலிருந்து மேலும் ஒரு ஒளிப்பிழம்பாக ‘பாறை மீது பவழ மல்லியைப் பதியன் போட்டதாரு’ என்று நாட்டுப்புற மெட்டிற்கு அபாரமாக நழுவிச் சென்று மின்னுகிறது வாணியின் குரல்.
இதில் நடன அடவுகளுக்கான சொல் வீச்சுகளை ஏந்திச் செல்லும் தாளக்கட்டுகள் பாடல் நெடுக அசர வைக்கும். கடைசி சரணத்தின் ஒவ்வொரு வரி நிறைவிலும் அதிர வைக்கும். கதைக் களத்தின் உளவியல் பாடுகளை, போராட்டங்களை, தாபங்களை, ஏக்கங்களை எல்லாம் உருக்கி வார்க்கும் வயலின் இழைப்போடு இரண்டறக் கலந்து விடும் இடத்தில் மேலும் மிளிர்கிறது வாணி ஜெயராம் அவர்களது குரல் வளம்.
வலைப்பூக்கள் சிலவற்றில் (ரமேஷ் என்பவரது தளத்தில், எடுத்துக்காட்டிற்கு), பல்லவியில் இருந்து முதல் சரணத்திற்குச் செல்கையில் சுருதி மாற்றத்திற்கேற்ப, ‘நேற்று என் பாட்டில் சுதியும் விலகியதே’ என்ற வரியை வியந்து குறிப்பிட்டு, இதன் பெருமை ராஜாவுக்கா, கவிஞருக்கா….இருவரின் அருமையான பங்களிப்பு இது என்று குறிப்பிட்டிருப்பதை வாசிக்க முடிந்தது. அந்த சரணத்தில், தேர்ந்த டென்னிஸ் ஆட்டக்காரர் போல், பந்துகளை வாங்கி வாங்கிப் பதிலுக்கு அதே வேகத்தில் திருப்பி அடிக்கும் லாவகத்தில் சுழலும் வாணியின் குரல்.
நாம் மிகவும் விரும்பிக் கேட்கும் ஓர் உரையாளர் பேசும்போது ஏற்படும் மனவெழுச்சி, அவர் பேசப் பேச நமக்குள்ளும் உணர்வுகள் பொங்கவும், அவர் நிறைவு செய்கையில் கொஞ்சம் ஆசுவாசம் தேவை போன்ற உணர்வு நமக்கும் ஏற்படுவது போலவும், வாணி ஜெயராம் பாடி முடிக்கவும், இந்த மொத்தப் பாடலின் இசையோற்சவம் அமைதிக்கு வரவும், ரசிகரும் தம்மையறியாமல் ஒரு பெருமூச்சு விட்டு ஓர் ஆழ்ந்த துயர வெளியின் பயணம் முடித்த உளவியல் அனுபவத்தில் ஆழக் கூடும்.
ஒரு புத்தக வாசிப்பு போல் இசை, இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு! மென்மையான வாசிப்பு, ஆவேசம் கொள்ளவைக்கும் வாசிப்பு, பரவசம், சோகம், பரிதவிப்பு, தம்மையே தொலைத்துவிடுவது போன்ற அனுபவங்கள் இரண்டுக்கும் பொதுவானவை. சிந்தனைகளைத் தூண்டுகிறது இசை, புத்தகம் போலவே!
புத்தகக் காதலர்கள் பெரும்பாலும் இசை கொண்டாடிகளாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தங்கள் வாசிப்பைத் தன்னடக்கமாக வைத்துக் கொள்வோரைப் போலவே இசை ரசிகர்களில் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்போர் உண்டு. மறுபதிப்பில் எப்போதும் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களைச் சென்றடையும் புத்தகங்கள் போலவே, அற்புதமான பாடல்கள் காலம் கடந்து நிலைத்து விடுகின்றன. நாட்டியத்தை வாழ்தல் போலவே தான் இசை வாழ்க்கையும்!
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
முந்தைய தொடர்களை வாசிக்க:
இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்